Episode 10

ஶ்ரீ துர்க்கா | 16 Dec 2025 | Share

அல்லி 10

ஏற்காடு 

சுற்றிலும் வியாபித்திருந்த மரங்களின் அழகை ரசித்தபடியே, கையிலிருந்த காஃபியை மிடறு மிடறாக அனுபவித்து அருந்திக் கொண்டிருந்தாள் இனியா. இத்தனை வருட சிபிசிஐடி வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்திருந்த அனுபவங்கள் தாராளம். ‘சுற்றி எங்கிலும் கட்டுமஸ்தாக நின்றிருக்கும் இந்த மரங்கள் கூட ஏதேனும் மர்மங்களை ஒளித்து வைத்திருக்கக் கூடும்…’ என அவள் தன்னிச்சையாக நினைத்த நேரத்தில் அவளை அழைத்தபடியே வந்து சேர்ந்தார் சுகிர்தா, இனியாவின் அன்னை.

“இங்க பாரு… எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன், எங்க போனாலும் ஃபோன கையோடவே வச்சிருன்னு… சொல்லறது எதையும் காதுல வாங்கிக்கிறதில்லை… எல்லாம் நான் பாத்து பண்ணணும் உனக்கு… பாக்கறது பொறுப்பான வேலை, ஆனா இப்பவும் அம்மா புத்தி சொல்ல வேண்டியதிருக்கு…” என நச்சரித்தபடியே அலைபேசியை அவளது கையில் திணித்தார் சுகிர்தா. இவ்வளவு பேசுகிறார் என்றால் நிச்சயம் யாரும் முக்கியமானவர்கள் அழைத்திருக்க வேண்டும் என சரியாக ஊகித்தபடியே ஃபோனை கையில் வாங்கிக் கொண்டாள் இனியா. 

அவள் நினைத்தபடியே கமிஷ்னர் ராகவேந்திராவிடமிருந்து நான்கு அழைப்புகள் தவற விடப்பட்டிருந்தன. பொதுவாக அவர் அப்படி தொடர்ந்து அழைக்கும் ரகமில்லை. மீறி அழைத்திருக்கிறார் என்றால் ஏதேனும் அவசரமான விடயமாகத் தான் இருக்கும் என்று உணர்ந்து சட்டென ப்ரொஃபெஷ்னல் மோடுக்கு தாவினாள் இனியா. அவருடைய எண்ணுக்கு அழைப்பு விடுக்க, முதல் ரிங்கிலேயே அழைப்பு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுமையாக ஒலித்தது ஆண் குரலொன்று. 

“‌ஹலோ…”

“ஹலோ சார்… குட் மார்னிங்… கால் பண்ணி இருக்கீங்க..?”

“குட் மார்னிங் மிஸஸ் இனியா… இன்ஸ்பெக்டர் வாசுதேவன் டீல் பண்ணிட்டிருந்த கடத்தல் கேஸ் பத்தின விபரங்கள் உங்க காதுக்கு வந்திருக்கும்னு நினைக்கிறேன்… ஆம் ஐ கரெக்ட்..?”

நேராகவே விடயத்திற்கு வந்திருந்தார் அவர்.

“யெஸ் சார்… கேள்விப்பட்டேன்…”

“தட்ஸ் குட்… அந்த கேஸ்ல சீரியல் கிட்னாப்பர்ஸ் யாராவது இன்வால்வ் ஆகி இருக்கலாம்னு ஒரு தாட் எங்க டிப்பார்ட்மென்ட்ல இருக்கு… அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குற்றவாளியை கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணி இருக்கோம்… அதுக்காக தான் நானும், மேலிடத்தில இருக்கற இன்னும் சில ஆஃபீஸர்ஸும் சேர்ந்து இந்த கேஸ சிபிசிஐடி கைக்கு மாத்தலாம்னு யோசிச்சிருக்கோம்…”

“ஓஓ ஓகே சார்…”

“இந்த கேஸ நீங்க டேக் ஓவர் பண்ணிக்கறீங்களா‌..?”

“கண்டிப்பா சார்…”

“இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உங்களுக்கு முழு சப்போர்ட்டும் தருவார். கேஸ் டீடைல்ஸ் ஃபுல்லா அவர்கிட்ட இருக்கு… அந்தப் பொண்ணு காணாமப் போய் கிட்டத்தட்ட பத்து நாள் ஆச்சு. அவங்க எந்தளவுக்கு இன்வெஸ்டிகேட் பண்ணி இருக்காங்க, இப்போ எந்த இடத்துல நின்னுட்டிருக்காங்க எல்லாமே அவர் உங்க கூட ஷேர் பண்ணுவார்… இன்ஸ்பெக்டர் வாசுதேவனோட ஹார்ட் வர்க்கும் உங்களோட ஸ்மார்ட் வர்க்கும் சேர்ந்தா இந்த கேஸுக்கு சீக்கிரம் ஒரு என்ட்கார்ட் போட்டுடலாம் ங்கிறது எங்களோட எண்ணம்… ஹோப் யூ வில் கைன்ட்லி கோ-ஆப்பரேட் வித் அஸ்..”

“ஷ்யூர் சார்…”

“தாங்க் யூ மிஸஸ் இனியா…”

“தாங்க் யூ சார்…”

அழைப்பு துண்டிக்கப்பட்ட உடனேயே, இன்ஸ்பெக்டர் வாசுதேவனுக்கு கால் செய்தாள் இனியா.

“குட் மார்னிங் மேடம்… உங்களுக்கு கால் பண்ணறதுக்கு மொபைல் எடுக்கவும், நீங்களே கால் பண்ணிட்டீங்க…”

மறுமுனையில் உற்சாகமாகப் பேசினார் வாசுதேவன். 

“குட் மார்னிங் சார்… கமிஷ்னர் கூப்பிட்டிருந்தார். நீங்க ஹேண்டில் பண்ணிட்டிருக்கிற கேஸ உங்க கூட சேர்ந்து ஷார்ட் அவுட் பண்ண சொன்னார்… அதப் பத்தி பேசுறதுக்கு தான் கால் பண்ணேன்…”

“நானும் அதப் பத்தி பேச தான் கால் பண்ணலாம்னு வந்தேன் மேடம்… உங்களுக்கு ஃப்ரீ டைம் சொன்னீங்கன்னா நான் வீட்டுக்கு வந்தே டீடெய்ல்ஸ் ஷேர் பண்ணிக்கிறேன்… அதுக்கப்புறம் ஃபர்தரா நம்ம எப்படி மூவ் ஆகணும்ன்னு டிஸ்கஸ் பண்ணிக்கலாம்…”

“ஷ்யூர்… இன்னிக்கு நான் ஃப்ரீ தான்… எனி டைம் நீங்க வீட்டுக்கு வரலாம்… இந்த கேஸ் இன்னும் ஆஃபீஸியலா என் கைக்கு வரல… ஃபோன் கான்வர்சேஷன்ல தான் டேக் ஓவர் பண்ண சொல்லி இருக்காங்க கமிஷனர் சார்… பட் நாளைக்கு ஆஃபீஸியல் அனவுன்ஸ்மென்ட் வந்துடும்… சோ, இன்னிக்கு நம்ம அவுட் லைன் போட்டு வச்சுக்கிட்டா, நாளைக்கு ஃபர்தரா அந்த பாத் வே ல மூவ் ஆகலாம்…”

“ஷ்யூர் மேடம்… நான் இப்பவே கிளம்பிட்டேன்… பத்து நிமிஷத்துல உங்க வீட்டுல இருப்பேன்…”

“யூ ஆர் வெல்கம்…” என்று அழைப்பைத் துண்டித்தவள், இன்ஸ்பெக்டர் வாசுதேவனின் வருகைக்காகக் காத்திருக்கலானாள்.

                    ✯✯✯✯✯

“இப்ப எதுக்குடி நீலிக்கண்ணீர் வடிச்சுட்டு இருக்க..? ஆத்தாவ கொன்னதே நீ தான… அப்பறம் இந்த அழுகையைக் காட்டி யார ஏமாத்தாலாம்னு பாக்கற..?” 

பெரியாத்தாவின் ஃப்ரேம் செய்யப்பட்ட புகைப்படத்தின் முன் அமர்ந்து அழுது கொண்டிருந்த அல்லியிடம் காட்டமாய் கேட்டாள் ரத்னா.

“நா..ன் என்..ன…” என ஆரம்பித்த அல்லிக்கு அதற்கு மேல் பேச முடியாமல், துக்கம் தொண்டையை அடைத்தது.

“நீ என்ன பண்ணல..? ரொம்ப சந்தோஷமா துறுதுறுன்னு இருந்த மனுஷி அது… ஏதோ ஒரு அனாதைப் பொணத்தை கொண்டு வந்து நம்ம வீட்டுல பொதைச்சு, நம்ம ஆத்தாவ காவு வாங்கிட்டியேடி பாவி…”

“என்ன ரத்னா சொல்ற..? ஆத்தா அந்த விசயத்துல ரொம்ப பயந்து போய் இருந்தது உண்மை தான். ஆனா இந்த ஒரு வாரத்துக்கும் மேலா ஆத்தா கூடவே தங்கி இருந்து, அது ஓரளவு சரியானதும் தானே நான் என்னோட வீட்டுக்கு போனேன்… நான் போற அன்னைக்கே அதுக்கு ஹார்ட் அட்டாக் வரும்னு எனக்கு எப்படி தெரியும் ரத்னா..?” என்றவளது பாதிப் பேச்சு, அவளது அழுகையில் காணாமல் போயிருந்தது.

“ஆத்தா கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிடிச்சுங்கிறது உண்மை தான்… ஆனா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச காரியம்… நீங்க தொட்ட வினை இந்த வீட்டுல இன்னும் மிச்சம் இருக்கு அல்லி… ஒருத்தர் அடுத்து ஒருத்தரா நானும் நீயும் கூட சாகத் தான் போறோம். அது எனக்கு நல்லாவே தெரியும்…”

“கொஞ்சம் மெதுவா பேசு ரத்னா… வெளில இருக்கற ஆளுங்க காதுல விழுந்திடுச்சுன்னா நம்ம கதை அவ்ளோ தான்… நீ சொல்றது எதுவுமே எனக்கு புரியல… சொல்லறத கொஞ்சம் தெளிவா சொல்லு…” கனத்த வேதனையிலும், மற்றவர்களுக்கு எதுவும் தெரிந்து விடக் கூடாது என்று உஷாராக இருந்தாள் அல்லி.

“நேத்து ராத்திரி நான் அதை பாத்தேன் அல்லி…”

“எ..தை..?”

“நீயும் ஆத்தாவுமா சேர்ந்து நம்ம வீட்டுல ஒருத்திக்கு சமாதி கட்டினீங்களே..? அவளை நான் பாத்தேன்… பெரியாத்தா செத்தது ஹார்ட் அட்டாக்லன்னு எல்லாரும் சிம்பிளா விசயத்தை முடிச்சுட்டாங்க… ஆனா நேத்து நைட், ஆத்தா பக்கத்துல ‘அது’ உக்காந்திருந்தத என்னோட ரெண்டு கண்ணால நான் பாத்தேன்… இங்க வந்ததுல இருந்து பெரியாத்தாவோட சடங்குகள் போயிட்டு இருந்ததால நீயும் நானும் எதுவும் பேசிக்கல… போய்ப் பாரு… நீ எந்த பலா மரத்துக்கு அடியில அவளைப்‌ பொதைச்சியோ, அதுக்கு அடுத்து நின்னுட்டிருக்கிற தென்னை மரத்தோட கதியைப் பாரு… இதெல்லாம் தற்செயலா நடக்கல அல்லி…”

ரத்னா ஏதோ கதை சொல்வது போல் சொல்லிக் கொண்டே செல்ல, திக்பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தாள் அல்லி. ஆத்மாக்களைப் பற்றி எத்தனையோ கதைகள் கேள்விப் பட்டிருக்கிறாள் தான். ஆனால் அதை இந்தளவுக்கு நெருக்கமானவர்கள் யாரும் சொன்னதில்லை. ரத்னா சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் திணறிப் போனாள் அவள். சில நொடிகள் கலங்கிப் போய் நின்றிருந்தவள், ஒரு தீர்மானத்துடன் நிமிர்ந்தாள். 

“நீ இனி இந்த வீட்டுல இருக்க வேண்டாம் ரத்னா… கொஞ்ச நாளைக்கு நம்ம விவேகானந்தர் இல்லத்திலயே தங்கிக்கோ… இந்த வீட்டுக்கும், எனக்கு தாமரை அம்மா தந்த வீட்டுக்கும் முதல்ல சாந்தி செஞ்சுக்கலாம்… சாந்தி செய்ததுக்கப்புறம் நீ என்னோட அந்த வீட்டுல தங்கிக்கோ… உனக்கு துணையா இருக்கறதுக்கு நான் தீபா கிட்ட பேசுறேன்… உன்னோட உயிருக்கு எந்தப் பிரச்சினையும் வராது… அதுக்கு நான் கேரண்டி…”

“என்னன்னு சொல்லி சாந்தி செய்வ..? ஒரு அனாதைப் பொணம் நம்ம வீட்டுக்கு முன்னாடி கிடந்திச்சு… அதைத் தூக்கிப் போய் பெரிய மனசோட நாங்க நம்ம வீட்டுக்கு பின்னாடி பொதைச்சோம்… இப்ப அது திரும்ப எழுந்து வந்து நிக்குது… அதனால சாந்தி செய்யணும்னு சொல்லி கூப்பிடுவியா பூசாரி ஐயாவ..?”

“ஆமா… அப்படித்தான் கூப்பிடப் போறேன்… நான் போலீஸ் கிட்ட சரண்டர் ஆகிடலாம்னு இருக்கேன் ரத்னா… எப்படிப் பார்த்தாலும் நாங்க செஞ்சது தப்பு தானே..? அதுக்கான தண்டனையை நம்மளும் அனுபவிக்கறது தான் கரெக்ட்… அதுவுமில்லாம, நீ சொன்ன மாதிரி பெரியாத்தா சாவுக்கும் நான் தான் காரணம்… அவங்க மரணம் ஒரு ஆத்மாவால நடந்த பட்சத்தில, அந்த ஆத்மா இந்த வீட்டுக்குள்ள வர நான் தான் காரணமா இருந்திருக்கேன்… அதுக்கான பிரதிபலனும் ஒண்ணு இருக்கு தானே..? நான் ஜெயிலுக்கு போயிட்டேன்னா இதுல்லாம் முடிவுக்கு வந்திடும்னு நினைக்கறேன்… எல்லாம் சரி ஆகிடும் ரத்னா… நீ பயப்படாத… என்னோட உயிரக் குடுத்துன்னாலும் நான் உன்னை காப்பாத்துவேன்…”

“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..? போலீஸ் அது இதுன்னு பேசிட்டிருக்க… உனக்கு என்ன பிரச்சினைனாலும் உன் கூட சேர்ந்து நானும் அதை ஃபேஸ் பண்ணறேன் அல்லி… என்னை என்ன அவ்வளவு சுயநலவாதின்னு நினைச்சியா நீ..?”

“இல்ல ரத்னா… பெரியாத்தாவ கொன்னது நான் தான்னு உன்னால எப்ப சொல்ல முடிஞ்சுதோ, அப்பவே நம்மளுக்குள்ள இருந்த பந்தம் எல்லாம் முடிஞ்சு போச்சு… இனி நான் வேற, நீ வேற… எனக்காக எந்த விசயத்திலயும் நீ கஷ்டப்பட வேண்டாம்… இந்த டாப்பிக்க இதோட விட்டுடலாம்… பெரியாத்தாவோட நாள் காரியம்லாம் முடிஞ்சதுக்கப்புறம் நான் போலீஸ்ல சரண்டர் ஆகிடுவேன்… அதுக்கப்புறம் என்னால உனக்கு எந்தப் பிரச்சினையும் வராது…”

‘பளார்…’ என்றொரு சத்தத்தைத் தொடர்ந்து உள்ளே ஓடி வந்தார் கமலா. 

“என்னாச்சு… ஏதோ சத்தம் கேட்டுச்சு..?”

“ஒண்ணுமில்ல ஆன்டி… நான் தான் இந்த துணி மூட்டையை எடுக்கும் போது கை தவறி கீழ விழுந்திடிச்சு…” என சற்றுத் தள்ளி கலைத்துப் போடப்பட்டிருந்த துணிகளை கைகாட்டி சொன்ன ரத்னாவை ஒரு மாதிரி ஏறிட்டவர், “ஆ..ஆனா அது துணி விழுந்த சத்தம் மாதிரி கேக்கலயே… என்னமோ, நீங்க ரெண்டு பேரும் ஓகேவா இருந்தா சரி…” என்றவர் அதைத் தொடர்ந்து எதையும் தூண்டி துருவாமல் நாகரிகமாக வெளியேறி விட்டார்.

அவர் போனது தான் தாமதம் கன்னத்தைப் பொத்திக் கொண்டு, “ஆஆ… வலிக்குதுடி எருமை… எதுக்கு என்னை அடிச்ச..‌‌? வலிக்காத மாதிரி அவங்க முன்னாடி நடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..?” என்ற அல்லியை முறைத்தவள், “நீ பேசின பேச்சுக்கு இதுலாம் ஒண்ணுமே இல்ல… நல்ல வேளையா அந்த துணிலாம் கலைஞ்சு போய் இருந்ததால சமாளிச்சுட்டோம்… இல்லன்னா அவ்ளோதான்…”

“ம்ம்… ஆமா, இந்தத் துணிய இப்படிலாம் கலைச்சுப் போட்டது யாரு..?” என்ற அல்லி அதிலிருந்த ஒரு துணியைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்..!

                                    – அல்லி மலரும்…

    No comments yet.