Episode 1

ஶ்ரீ துர்க்கா | 25 Nov 2025 | Share

அத்திப்பட்டு
நேரம்- அதிகாலை 3.25

கண்கள் வெளியே தெறித்து விழுந்து விடுமளவிற்கு விரிந்திருந்தது அல்லிக்கு. இன்னும் முழுதாக விடிந்து கூட இராத இந்த வைகறையில், இப்படி ஒரு சம்பவத்தை அவள் எதிர்பார்த்திருக்கவே இல்லை. இன்னும் பயத்தில் உடல் உதறிக் கொண்டு தான் இருந்தது.

“பெரியாத்தா… இங்க ஓடியாந்து பாரு…”
துணியோடு துணியாய் மூட்டை கட்டப்பட்டிருந்த ‘அதை’ பார்த்து, உள்நோக்கி குரல் கொடுத்தபடி அலறினாள் அல்லி. இப்போது தான் கத்தவே சத்து கிடைத்தது போல் இருந்தது அவளுக்கு.

அவள் அவ்வளவு எளிதில் பயந்து விடுபவள் அல்ல. அப்படிப் பட்டவளே  அலறுகிறாள் என்றால், விடயம் நிச்சயம் பெரிதாகத் தான் இருக்க வேண்டும் எனத் தெரிந்திருந்ததால், அல்லியின் குரல் கேட்ட அடுத்த கணமே பாய்ந்து வெளியில் ஓடி வந்தார் பெரியாத்தா. ஏறத்தாழ எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்தவர், பார்வைக்கு என்னமோ அறுபது வயது மதிப்பிடத் தக்க தோற்றத்தில் தான் இருந்தார்.

அவர் வரும் வரைக்கும் பொறுமை காக்க முடியாததால், அல்லியே அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்.
“ஏன்டி அல்லி… என்னத்த பாத்துடி இந்தா ஓட்டம் ஓடியார..?”

“அங்..க வ..ந்து பாரு ஆத்தா…”  என்றவள் திக்கித் திணறித் தான் வார்த்தைகளையே உச்சரித்திருந்தாள்.

அவள் கை காட்டிய திசைக்கு விரைந்த பெரியாத்தாவின் கண்களுக்கு விருந்தாகக் காத்திருந்தது அந்த காட்சி. விரித்துப் போடப்பட்டிருந்த துணிகளுக்கு நடுவே மூட்டையாய் கட்டப்பட்டிருந்த ஒரு வெள்ளை துணி விரித்துப் போடப்பட்டிருக்க, அதில் இரத்த வெள்ளத்தில் மல்லாந்திருந்தாள் பெண்ணொருத்தி.

“டீ அல்லி… யாருடி இந்தப் பொண்ணு..?” என்ற பெரியாத்தாவிற்கு, பயத்தில் குரலே நடுநடுங்கி தான் வெளிவந்திருந்தது.

“என..க்குத் தெரியல ஆத்தா… நம்ம வீட்டு முன்னாடி துணி நிறைய சிதைச்சுப் போட்டிருக்கேன்னு தான் பாத்தேன்… இது மூட்டையா தான் கட்டி இருந்திச்சு… நான் தான் ஆத்தா, என்னனு கழட்டி பாத்தேன்…”

“என்னடி சொல்ற..? இப்ப நம்ம என்ன பண்ணப் போறோம்..?” என்ற பெரியாத்தாவின், வயதும் அனுபவமும் ஒரே நேரத்தில் மரித்துப் போய் இருந்தன.

“பேசாம போலீஸுக்கு சொல்லிடலாமா ஆத்தா..?”

“போலீ..ஸா..?” தயங்கினார் பெரியாத்தா.

“பின்னே, நீயும் நானும் என்ன பண்ண முடியும் ஆத்தா..? இது போலீஸ் கேஸ்… அவங்க வந்து முதல்ல இத அப்புறப் படுத்தினாலே போதும்…”

“எனக்..கு என்னமோ… அது சரியா படல அல்லி… அதுல உன்னோட கைரேகை இருக்குன்னு தெரிய வந்தா, நீதான் குற்றவாளின்னு உன்ன தூக்கி உள்ள போட்டு ஈசியா கேஸ முடிச்சுட்டு போய்டுவாங்கடி…”

“அப்படீன்னா.. இப்போ என்..ன‌ பண்றது ஆத்தா..?”

“ரத்தத்தோட பிசுபிசுப்பு கூட இன்னும் குறையல போலடி. அரை மணி நேரத்துக்குள்ள தான் புதுசா ப்ளீடான ரத்தத்துல நனைஞ்சிருக்கு, ஆனா முகம் வெளிறிப் போயிருக்கு.. இந்தப் பொண்ணு உயிரோட இருக்கா இல்லையான்னு கூட தெரியலையே…” என நடுங்கிய ஆத்தாவ பாத்து, பயத்துடன் தயங்கினாள் அல்லி.

“என்னடி முழுசுற..?”

“நான் கைல நாடி புடிச்சு பாத்தேன் ஆத்தா… பொண்ணு போய் சேர்ந்து, குறைஞ்சது ஆறுமணி நேரமாவது ஆகி இருக்கும்…”

“அடியே அரைக்கிறுக்கி… இன்னும் என்னலாம்டி பண்ணித் தொலைச்சிருக்க..? ஏன்டீ தேவை இல்லாம அவளைத் தொட்டுத் தொலைச்ச..? போலீஸுக்கு மட்டும் தகவல் தெரிஞ்சிச்சு… நம்ம ரெண்டு பேருக்குமே கைலாயம் தான்…”

“அப்போ இப்ப‌ என்ன பண்ணலாம்னு சொல்ற ஆத்தா..?”

“எனக்குமே தெரியலடி…”

“பேசாம… நம்ம வீட்டுத் தோட்டத்துல பெரிய பலா மரம் ஒண்ணு இருக்கு இல்ல..? அதுக்கடியில குழி தோண்டி இவளைப் புதைச்சிடலாமா..?” என்றவளை அதிர்ச்சியாய் திரும்பிப் பார்த்தார் அவர்.

அத்தனை நேரமாய் அமைதியாய் இருந்த சூழல், நொடி நேரத்தில் காணாமல் போய் சட்டென கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது அவ்விடத்தை. எங்கேயோ இரு முகில்கள், ஒன்றுடனொன்று உரோஞ்சியதில் படீரென வெட்டியது மின்னல் ஒன்று. அதைத் தொடர்ந்து கர்ஜனையாய் இடியும் முழங்க, எந்நேரமும் கொட்டித் தீர்க்க தயாராக இருந்தன மழை மேகங்கள். இதையெல்லாம் படத்தில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்டிருந்த, பெரியாத்தாவும் அல்லியும் பயமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“என்னடி…‌ அசால்..டா சொல்..ற..? வெளில தெரிஞ்சா ரெண்டு பேருக்கும் கைமா தான்…”

“பயமா இருக்கு ஆத்தா… சத்தியமா இப்படி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் தொட்டிருக்கவே மாட்டேன்..” என்ற அல்லிக்கு கண்கள் குளம் கட்டி இருந்தது.

சற்று நேரம் எதுவும் பேசாமல், அல்லியை வெறித்தவர், பலத்த யோசனையுடன் பேசினார்.
“நீ சொன்னது தான் சரி… வேற வழியே இல்லை அல்லி… விடியக்காலைல எங்கிறதால யாருமே சம்பவத்த பாத்திருக்க வாய்ப்பில்லை. மழை பெய்ய ஆரம்பிக்கிறதுக்குள்ள, சீக்கிரம் பொணத்த பின்னுக்கு கொண்டு போயிட்டோம்னா பிரச்சினை இல்லை. நீ சொன்ன மாதிரி, மரத்துக்கு கீழேயே இவளை புதைச்சிடலாம்… பொழுது விடிஞ்சிருச்சினா அக்கம் பக்கத்து ஆளுங்க எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க… அப்புறம் நமக்கு தான் சிக்கல்…”

“ஏன் த்தா, மழை பெஞ்சா இந்த பொணமும் நனையும்ல… அப்படின்னா என்னோட கைரேகையும் அதிலேயே அழிஞ்சிடும்… அதுக்கப்புறம் நாமளே போலீஸுக்கு தகவல் சொலிட்டா என்ன..? அவசரத்துல தப்பா முடிவெடுக்கிற மாதிரி ஃபீலாகுது எனக்கு…”

“அறைஞ்சேன்னா மொத்தப் பல்லும் கழண்டு போவும்டி உனக்கு. படிச்சவ மாதிரி பேசு… நீ எங்க வீட்டுல தங்கிறதில்ல, வெளில தான் தங்குறேன்னு ஊரு உலகத்துல எல்லாருக்குமே தெரியும். அதோட என்ன நேரத்துக்கு நம்ம வீட்டுக்கு வரேங்கிறதும் இங்க கூடுதலா எல்லாருக்கும் தெரியும். விசாரணைல, நீ எப்படியும் இதை பாத்திருப்பேன்னு போலீஸ்காரங்க கண்டுபிடிச்சுடுவாங்க அல்லி… எனக்குன்னு சொல்லிக்கிறதுக்கே நீயும், ரத்தினாவும் தான் இருக்கீங்க… உங்களையும் இழந்துட்டு நிக்க முடியாது என்னால… நீ முதல்ல சொன்னது தான் சரி… பேசாம இந்தப் பொணத்த தோட்டத்துக்குள்ளவே புதைச்சிடலாம்…”

“பின் தோட்டத்துக்குள்ள கொண்டு போறதுன்னா… நம்ம வீட்ட சுத்தி தானே கொண்டு போகணும்..? ஆனா பக்கத்துல, கலா அக்கா வீட்டுல சிசிடிவி வச்சிருக்காங்க இல்ல..? அதைத் தாண்டி எப்படி கொண்டு போறது..?”

“வேற வழியே இல்லை… வீட்டுக்கு உள்ளால தான் கொண்டு போகணும்…”

“என்னாத்தா சொல்ற..? ரெண்டு நாளைக்கு முன்னால தான ஹால்ல அனுமார் சாமியும், கண்ணகி அம்மனும் ரெண்டு சைடா பிரதிஷ்டை பண்ணினோம்… எந்தவொரு காரணத்துக்காகவும் பிழையான காரியங்களுக்கு துணை போயிடாதீங்கன்னும், அப்படியே ஏதாவது ஒரு தப்பு பண்ணிட்டா, வெளிய நின்னே தலைக்கு குளிச்சுட்டு வந்து பூஜை பண்ணுங்கன்னும் நம்ம நீலகண்டன் ஐயா சொல்லி இருக்காங்க இல்ல..? அப்படி இருக்கும் போது நம்ம எப்படி வீட்டுக்குள்ளாரவே பொணத்த கொண்டு போக முடியும்..?”

“இப்ப என்ன பண்ணறது அல்லி..?”

“எனக்கும் தெரியலையே ஆத்தா…” என கலக்கமாய் அல்லி பதிலளித்த நேரம், பக்கத்து வீட்டில் சுடர்விட்டது ஒரு குண்டு பல்ப்.

“ஆத்தா… மகேஷ் ஆங்கிள் எந்திரிச்சுட்டார் போல… டெய்லியும் வாக்கிங் போவார்னு கலா அக்கா சொல்லி இருக்காங்க இல்ல..?”

“ஆமாடி… அந்த மகேஷ் பயல் இப்போ வந்தான்னு வையேன், சத்தியமா இந்த கொலையை நானும் நீயும் தான் பண்ணோம்னு ஊருக்குள்ள புழுகி விட்டுருவான்… யோசிக்க நேரமில்லை அல்லி… நீ ஒரு கை பிடி… முன்ன மாதிரியே மூட்டையா கட்டிடுவோம்…”

பெரியாத்தா சொன்ன கையோடு, சட்டென்று மீண்டும் துணி மூட்டைக்குள் பதுங்கிக் கொண்டது அந்த பிணம். இழுத்து மூட்டையாகக் கட்டியதில், அல்லிக்கும் பெரியாத்தாவிற்கும் கைகளில் சற்று இரத்தம் படிந்து போயிற்று. துரித கதியில் அந்த துணி மூட்டையைக் கட்டி, கடினப்பட்டு தூக்கிக் கொண்டவர்கள் தூக்க முடியாமல் பொடீரென்று கீழே போட்டார்கள், அந்த கனம் கனத்தது அது.

“என்ன ஆத்தா இந்தக் கனம் கனக்குது..?”

“அதான்டி எனக்கும் தெரியல… வேற வழி இல்லை… இந்தப் பக்கம் வந்து சீக்கிரம் இழு…”

அல்லியும் பெரியாத்தாவும் சேர்ந்து இழுக்க, கொஞ்சம் கொஞ்சமாய் வழிக்கு வர ஆரம்பித்தது அது… ஒரு மாதிரி இழுத்து வீட்டு வாசல் வரைக்கும் கொண்டு வந்து விட்ட பின்னரும் கூட, வீட்டிற்குள்ளாக கொண்டு செல்வதற்கு அத்தனை விருப்பம் இல்லை அல்லிக்கு. வேறு வழி இல்லாமல், வராந்தாவை தாண்டி, முன் ஹாலில் இழுக்க ‘வருவேனா..?’ என்று சண்டித்தனம் செய்தது அது.

“என்னடி அல்லி வர மாட்டேங்குது..?” என அப்போது தான் நிமிர்ந்து பார்த்த பெரியாத்தா அதிர்ந்து, சட்டென்று ஈரடி பின்னோக்கி நகர்ந்தார்.

“என்னாச்சு ஆத்தா..? ஏன் என்னை பாத்து பயப்பட்ற நீ..?”

“இல்லடி… இப்ப… வந்து… ஒரு செக்கனுக்குள்ள…”

“செக்கனுக்குள்ள..?”

“இந்தப் பொண்ணோட முகம் உனக்கு வந்து போன மாதிரி இருந்திச்சுடி…”

பெரியாத்தா சொன்னதை கேட்ட மாத்திரத்தில் வெளிறிப் போனது அல்லியின் முகம். சட்டென சுதாரித்து கொண்டவள், “ப்ச்… உனக்கு பயத்தில என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு தெரியல ஆத்தா… நீ உன்னோட பிரம்மைய சொல்லி என்னையும் பயமுறுத்தாத…” என எரிந்து விழுந்தாள். இருந்தாலும், நொடி நேரத்தில் தன் உடலில் ஏதோ ஒரு மாற்றம் வந்து போன மாதிரித் தான் அவளுக்குமே தோன்றியது.

“சரி… மசமசன்னு நிக்காம இழு ஆத்தா…” என மீண்டும் இழுக்கவும், அது அசையாமல் அப்படியே தான் இருந்தது.

‘இவ்வளவு நேரமும் ஒழுங்கா தானே வந்திச்சு..?’ என நினைத்தபடியே நிமிர்ந்த அல்லியும் ஒருகணம் அதிர்ந்து தான் போனாள். அவர்கள் ஹாலில் பிரதிஷ்டை செய்த அனுமார் சிலை சட்டென இவர்களை முறைத்துப் பார்த்து, பின் நார்மலானது போல் இருந்தது. அப்படியே மறுபுறம் திரும்பி பார்த்தால், கண்ணகி அம்மன் சிலையில் எந்த வித்தியாசமும் தென்படவில்லை அல்லிக்கு.

“டீ… இங்க பாரு… மண்ணுக்குள்ள இருந்து இழுத்திட்டு வரோம் இல்ல..? அதான் ஏதோ ஆணியும் சேர்ந்து வந்திருக்கு போல… அது தான் நடுவுல கொழுவி அசைய விடாம வச்சிருந்திருக்கு… இப்போ இழு…” என பெரியாத்தா சொல்ல, இப்போது இழுத்துப் பார்த்தால் உண்மையில் அது அசைந்தது தான். ஆனால், அவ்வளவு பெரிய மூட்டையை அந்த ஒரு குட்டி ஆணி அசைய விடாமல் பிடித்து வைத்திருக்க முடியும் என்று நம்ப முடியவில்லை அல்லியால்.

ஒருமாதிரி இழுத்துக் கொண்டு தோட்டத்து பலா மரத்தின் கீழ் வந்தாயிற்று. தோட்டத்து ரூமில் வைத்திருந்த கடப்பாரையை எடுத்து குழியை விரிவாக்க ஆரம்பித்தாள் அல்லி. ஏற்கனவே கூட்டுப் பசளை தயாரிக்க கிடங்கு வெட்டி இருந்ததால், அதை விரிவாக்கினால் மாத்திரம் போதும் என்ற எண்ணமே இப்போது தான் வருகிறது அவளுக்கு.

நன்கு அகல குழியைத் தோண்டியவள், துணி மூட்டையையும் அதற்குள் அந்தப் பெண்ணையும் சேர்த்து குழிக்குள் தள்ளினாள். வெளியே தெரியாத வண்ணம் நன்கு குழியை மூடியவளுக்கு, வியர்வை நிற்காமல் வழிந்தோடியது. அத்தனையையும் கனகச்சிதமாக செய்து முடிக்கும் வரை, வேறெதிலும் கவனத்தை பதித்திராதவளுக்கு இப்போது தான், பெரியாத்தாவின் சத்தத்தையே காணோம் என்று உறைத்தது.

பதறியடித்து திரும்பிப் பார்த்தால், பெரு விருட்சமாய் வளர்ந்து, ஆறேழு பிஞ்சுக் காய்களுடன் பரந்து நின்றிருந்த பலா விருட்சத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

“ஆத்தா…” என‌ அவரை உலுக்கியவள்,  “அங்க என்னாத்தா பாத்திட்டிருக்க..?” என்றாள் தானும் மேல் நோக்கி பார்வையைப் பதித்தபடி.

“இல்லடி… அங்..க பாரு…” என்ற பெரியாத்தாவின் நடுநடுங்கிய சுட்டு விரலின் திசையில் பார்வையைக் கொண்டு சென்றவளுக்கும் அந்தக் காட்சி தெரிந்திருக்க வேண்டும், வெலவெலத்துப் போனாள் அல்லி.

“என்..ன ஆத்தா அ..து..?”

“யா..ரோ மரத்து மேல உக்காந்து நம்ம ரெண்டு பேரையும் பா..த்துட்டு இருக்க மா..திரியே இருக்கு அல்..லி…”

பெரியாத்தா சொன்ன அதே நேரம், மீண்டும் ஒரு மின்னல் பளீரென்று வெட்ட, காதைப் பிளக்கும் இடி முழக்கத்துடன், கடலையே கவிழ்த்து விட்டது போல் சோவென பொழிய ஆரம்பித்திருந்தது மழை.

இருவரும் மழைக்கு ஒதுங்க வேண்டி, வீட்டிற்குள்ளே ஓட, இங்கு கொட்டிய மழையுடன் அவர்கள் விட்டுச் சென்றிருந்த கடப்பாறை மேல் கோடாய் விழுந்து கரைந்து கொண்டிருந்தது இரத்தத் துளி ஒன்று..!

                                 – அல்லி மலரும்…

    No comments yet.