சிறை3
“டேய் மாப்ள…. டேய்…. சொன்னா கேளுடா…. இது தப்பு… சொன்னா புரிஞ்சிக்கோடா…. பாவம்டா விட்ருடா பொழச்சிப் போகட்டும்” என்று தன் நண்பன் மாதவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் சிவா.
“யாருடா பாவம் அவளா? நான் தான்டா பாவம். அவளை நம்பி ஏமாந்து போன நான் தான் பாவம். அப்படியெல்லாம் அவளை விட முடியாது” என்று தள்ளாடியபடி உலறிக் கொண்டிருந்தான் மாதவன்.
“ப்ச் புரிஞ்சிக்க மாப்ள” என்று சிவா அவனை சாந்தப்படுத்த முனைய.
“என்னத்தடா புரிஞ்சிக்கனும்… நான் எவ்வளவு சொன்னேன் அவகிட்ட… இந்த காதல் கண்றாவி எல்லாம் வேண்டாம் சரிபட்டு வராதுனு. கேட்டாளா அவ? கேட்டாள்? கட்டுனா உன்னைத் தான் கேட்டுவேன். வாழ்ந்தா உன்னோடு இல்லையேல் மண்ணோடுனு டயலாக் எல்லாம் பேசுன நாய் இன்னைக்கு எவன் கையிலையோ தாலி வாங்க ரெடியாகிட்டு இருக்கு. அவளை இன்னைக்கு நான் விடுறதா இல்லை” என்று பதிலுக்கு பதில் எகிறிக் கொண்டு வந்தான் மாதவன்.
“சரிடா அது தான் இப்போ அந்த புள்ளை நீ வேண்டாம்னு சொல்லிருச்சில நீ உன் வேலையைப் பார்த்துட்டு போக வேண்டியது தானே. வேண்டாம்னு சொன்ன பிறகு எதுக்குடா அந்த புள்ளையை வம்பு பண்ணிக்கிட்டு” என்று சிவா சலித்துக் கொள்ள…
“வான்னு சொன்னா வரதுக்கும் போன்னு சொன்னா போறதுக்கு நான் என்ன அவ வளர்க்குற நாயா? போடா டேய்” என்றான் மாதவன்.
“அவ தானே மச்சான் நான் இல்லைனா செத்துப் போவேன்னு சொன்னா? அவ வாழ்ந்தா இந்த மாதவன் பொண்டாட்டியா எத்தனை வருஷம்னாலும் வாழ்ந்துட்டு போட்டும்… இல்லைனு வச்சிக்க மவனே அவளுக்கு அது தான்டா கடைசி நாளு” என்றவன் வேட்டியை மடித்துக் கட்ட…
“குடிகார நாயே குடிச்சிட்டு ஏன்டா உயிரை வாங்குற….. மரியாதையையா வந்து வண்டியில ஏறு இல்லை நானே உன்னை கொன்னுறுவேன்” என்று சிவா அவனை குண்டுக் கட்டாக தூக்க.
“அடிங்க…. என்னடா அவளுக்கு சப்போர்ட்டா?” என்று திமிரி அவனிடமிருந்து மாதவன் திமிறி விடுபட்டவன் “இந்தாரு சிவா… நீ என் நண்பன் தான்… அதுக்காக என் பர்னெல்ல எல்லாம் உள்ள வரதே” என்றவன் அவனை தீயாக முறைத்தான்.
“நாயே இதை நீ மத்த நேரத்துல சொல்லிருந்தா நான் ஒதுங்கிப் போயிருப்பேன். இப்போ நீ முழு போதையில இருக்க போதைத் தெளிஞ்சா ஒரு மண்ணும் உனக்கு நினைவுல இருந்து தொலையாது அப்புறம் என்னை ஏன்டா அப்படி பண்ண விட்ட, நீ எல்லாம் ஒரு நண்பனானு வந்து என் கொமட்டுலேயே குத்துவ, எனக்கு அது தேவையா சொல்லு? அதனால மரியாதையா என்கூட வா…. உன் அம்மா வேற இதோட பத்து தடவை போன் போட்டாச்சி. வாடா உயிரை வாங்காத” என்று மாதவனை மல்லுக் கட்டி வீட்டில் அவன் குடும்பத்திடம் ஒப்படைத்தப் பின் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
மாதவனின் தாய் மங்கையோ அவனை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு அறை வாசலில் அமர்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டார்.
“அவ எல்லாம் நல்லா இருப்பாளா? என் புள்ளையை இப்படி கிறுக்கனா மாத்திட்டாளே” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்.
“எல்லாரும் கூட்டு சேர்ந்து என்னை அடைச்சி வைக்குறீங்களா? என் நிம்மதியை கெடுத்துட்டு அவ மட்டும் சந்தோஷமா இருந்திடுவாளா? நான் இருக்க தான் விட்டுடுவேனா?” என்று காட்டுக் கத்து கத்தியவன் “என்னை இப்படி இங்க புலம்ப விட்டுட்டு அங்க இன்னொருத்தன் கூட நின்னு போட்டோவுக்கு போஸ் குடுக்குறியா? இருடி உன் சந்தோஷம் மொத்தத்தையும் குழி தோண்டி புதைக்க வரேன். தயாரா இரு” என்று மனதிற்குள் முனுமுனுத்துக் கொண்டான்.
அடுத்து எப்படி இங்கிருந்து எஸ்ஸாக என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
காலையில பத்து மணிக்கு தானே கல்யாணம் அதற்குள் செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்க….
முதலில் சிவாவிற்கு அழைக்கப் போனவன், ” ‘நோ நோ அவன் அப்படியே வீட்ல வத்தி வச்சிடுவான்’ என்று நினைத்தவன் தனது மற்றொரு நண்பன் மூர்த்திக்கு அழைத்து செய்ய வேண்டியவற்றை சொன்னவன் நிம்மதியாக தூங்கினான்.
காலையில் போதை தெளிந்ததும் ஆளும் தெளிந்து விட்டது என்று நினைத்த மங்கை அறையை திறந்து விட….
அவனும் சமத்துப் பிள்ளையாக மற்றவர்களுக்கு சந்தேகம் வராதபடி நடந்து கொண்டான்.
“அம்மா அப்போ நான் வேலைக்கு கிளம்புறேன்” என்றவன் கிளம்ப எத்தனிக்க.
என்ன நினைத்தாரோ மங்கை “தம்பி நம்பளை வேண்டாம்னு ஒருத்தங்க விலகி போறாங்கனா விட்டுடனும். அவங்களை பிடிச்சி வைக்கனும்னு நினைச்சோம்னா கடைசில வலி என்னவோ இரண்டு பேருக்கும் தான். அந்த புள்ளை மனசுல என்ன இருக்கோ? எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு விட்டுருப்பு” என்றவர் அவன் நாடிப் பிடித்து சிறுபிள்ளைக்கு சொல்வதே போல சொல்ல…
அவரது கழுத்தோடு கட்டிக் கொண்டவன், “நான் எதுவும் நினைக்கல. நீங்க எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம போய் வேலையைப் பாருங்க. எனக்கு கடைக்கு நேரமாச்சி பை” என்றவன் அவரது கன்னத்தில் ஒரு இச் வைத்து எஸ்ஸாகி விட்டான்.
அவரும் செல்லும் அவனையேப் பார்த்தவன், ‘இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கான். சீக்கிரமே ஒரு நல்ல பிள்ளையாப் பார்த்து கல்யாணத்தை முடிச்சிடனும்’ என்று சிரித்துக் கொண்டவர் தனது வேலையைப் பார்க்க சென்று விட்டனர்.
அவரது சின்னப் பிள்ளை ஒரு பெண் பிள்ளையின் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் விபரீதம் பற்றி அறியாமல்.
“டேய் மூர்த்தி நான் கேட்டதெல்லாம் ரெடியா?” என்றான் மாதவன் அவனிடம்.
“ம்ம் இந்தா மாப்ள நீ கேட்டது எல்லாம் இதுல இருக்கு. ஆனா மாப்ள நீ ஏதோ குடி போதையில சொல்றனு நினைச்சேன்” என்றவன் தயங்க…
அவன் இதழ்கள் மெலிதாக வளைந்தது கேலியாக…
“மாப்ள எதுக்கும் சிவாகிட்ட” என்று மூர்த்தி சொல்ல வர..
“சங்கை நெறிச்சிருவேன் மூச்சு விட்ட…. அவ்வளவு தான்…. அந்த நாய் வந்தா நீதி நேர்மை வெங்காயம்னு எதாவது பேசுவான். இந்த இந்த வேலைக்கு இவங்க இவங்களை தான் யூஸ் பண்ணனும். இந்த வேலைக்கு நீ தான் லாயக்கி. சோ நான் என்ன சொல்றனோ அதை வாயை மூடிட்டு செய்” என்றவன் தோரணையாக தனது புல்லட்டில் கல்யாண மண்டபம் நோக்கி சென்றான்.
‘ம்ஹூம் நீ போடுற அஞ்சிக்கும் பத்துக்கும் உன் பின்னாடி நாயை அழைய வேண்டி இருக்கு’ என்று அலுத்துக் கொண்ட மூர்த்தியும் அவன் பின் சென்றான்.
அங்கே கல்யாண மண்டபமே கலைகட்டியது.
முகூர்த்த நேரமும் நெருங்க மணமேடையில் மணமக்கள் அமர வைக்கப்பட்டனர்.
மெரூன் நிற பட்டுச் சேலையில் அம்சமாக குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் அவள் மாதவனின் முன்னால் காதலி ராதா.
அவளை வெறித்த படி முதல் வரிசையில் முதல் ஆளாக அமர்ந்திருந்தான் மாதவன்.
அவன் முகத்தில் என்ன உணர்வென்றே தெரியவில்லை.
“முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சி கெட்டி மேளம் கெட்டி மேளம் மாப்பிள்ளை மாங்கல்யத்தை பொண்ணு கழுத்துல கட்டுங்க” என்று ஐயர் மங்கல்யத்தைக் மணமகன் கையில் கொடுக்க…
திடீரென ஹோம குண்டத்திலிருந்து புகை கிளம்ப மணமேடை முழுவதும் புகை மண்டலமாக….
சற்று நேரத்தில் மணமகன் இடத்தில் மாதவனும் ராதையின் கழுத்தில் மாதவனின் மாங்கல்யமும்…….
No comments yet.