பாகம் 1

Vaishnavi Vijayaraghavan | 25 Jun 2026 | Share

“மறக்க மனம் கூடுதில்லையே”

” மறக்க மனம் கூடுதில்லையே “

 வினோதா சந்தர்ப்பவாசத்தால் தான் காதலித்த மனோகரை விட்டு விட்டு அருண் என்பவரை திருமணம் செய்து கொள்கிறாள்.

 மனோகர் வினோதாவை வெறித்தனமாக காதலிக்கிறான். வினோதாவை கடத்தி செல்கிறான்.

 அருண் வினோதாவை காப்பாற்றுவானா?

 மனோகர் வினோதாவிற்கு தன் காதலை வெளிப்படுத்துவானா?

 வினோதா மனோகரின் காதலை ஏற்றுக் கொள்வாளா அல்லது அருணுடன் சேர்ந்து வாழ்வாளா?

 நித்திலா அருண் வினோதாவின் நான்கு வயது குழந்தை. குழந்தைக்காக அருணை ஏற்றுக் கொள்வாளா?

 அல்லது உண்மையிலேயே அருணை தான் காதலிக்கிறாளா?

 இப்படி பல கேள்விகளுக்கான பதிலை இக்கதையில் தெரிந்து கொள்ளலாம்.

 படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள் தோழமைகளே!

 நன்றி.

 அ. வைஷ்ணவி விஜயராகவன்.

பாகம் -1

ஆதவன் கடலுடன் போட்டிப் போட்டுக் கொண்டு கடலினால் நீல நிரமான வானத்தை தன் ஒளிக் கதிர்களை பரப்பி செந்நிறமாக மாற்றிக் கொண்டிருந்த காலை வேளை. சிவப்பு நிறத்தில் கடலுக்கு எல்லைக் கோடு போட்டது போல காட்சி அளித்தது. அங்கங்கே கருப்பு நிறத்தில் அசையும் கோடுகள் போல பறவைகள் பறந்து கொண்டிருந்தது. 

அவ்வளவு வேகமாக ஒளிக் கதிர்களை பரப்பினாலும் அந்த கதிர் அலைகள் இதமான சூட்டைத் தந்ததே தவிர தீயாகச் சுட வில்லை. 

அதனால் தானோ என்னவோ நம் கதாநாயகி வினோதா எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக யாரும் இல்லாத பக்கமாக அந்த பீச்சில் அமர்ந்து கொண்டு இருந்தாள். அப்போது அவளுடைய ஃபோன் அடித்தது.

ஃபோனை எடுத்து பார்த்தாள். 

‘அருண் காலிங்’ என்று வந்தது.

ஆன் செய்ய மனமில்லை. கட் செய்தாள். உடனே கிளிங் கிளிங் கிளங் என்று வாட்ஸ்அப் மெஸேஜூகள் வந்தது.

‘மிச்’ என்று சொல்லி விட்டு தன் ஃபோனை ஆஃப் செய்தாள்.

இது முதல் முறை இல்லை இவள் இவ்வாறு வந்து பீச்சில் அமர்வது. எப்போது எல்லாம் தன் கணவன் அருணுடன் சண்டை வந்தாலும் வினோதா இப்படி தான் கடற்கரையில் வந்து அமர்ந்து கொள்வாள். எப்போது தனக்கு கோபம் குறைகிறதோ அப்போது தான் அந்த இடம் விட்டு செல்வாள். காலையில் உதயமாகும் சூரியனை பார்க்கும் போதும், கடல் அலைகளின் சப்தமும், பறவைகளின் அணிவகுப்பும் சேர்ந்து அவளுடைய மனதிற்கு இதமான மனநிலையை ஏற்படுத்தும். அதன் பின்னர் தான் அவளுடைய கோபம் பாதியாக குறையும் அதற்கு பிறகே வீட்டிற்கு கிளம்பி செல்வாள். இப்போதும் அப்படித்தான்.

இவ்வளவு நேரமாக தன் மென்மையான கதிர்களை வீசிக் கொண்டிருந்த ஆதவன் இப்பொழுது சுடும் சூரியனாக மாறத் தொடங்கியது. வெயில் தன்னைச் சுடும் போது தான் தன் வாட்சில் டைம் பார்த்தாள் வினோதா.

மணி 10.20. காலை 8.15 மணிக்கு தன் குழந்தை நித்திலாவை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவளிடம் ஏதோ சிறிய விஷயத்திற்காக அருண் ஆரம்பித்த சண்டை  பெரியதாக மாறியது. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தன் ஃபோன் மற்றும் ஹேண்ட் பேகை எடுத்து கொண்டு பீச்சிற்கு வந்து விட்டாள். 8.45 முதல் 10.20 வரை பீச் கடற்கரையில் அமர்ந்து இருந்தாள் வினோதா.

பிறகு எழுந்து நடந்து சென்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு சென்றாள். வீடு பூட்டி இருந்தது . தன் ஹேண்ட் பேகில் இருந்து சாவியை எடுத்து கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள். ஃபிரிட்ஜ் டோரில் “சாரி வினோ, ஐ லவ் யூ டி” என்று அருண் எழுதி வைத்திருந்தான். 

அதை பிய்த்து கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டாள் வினோதா. 

“கோ டூ ஹெல்” என்று ஒரு ஸ்டிக்கி நோட்ஸ் பேப்பரில் எழுதி ஃபிரிட்ஜின் மேல் ஓட்டினாள்.

‘எதுக்கு ஒரு ஒரு முறையும் கோபப் படனும் இப்படி சாரி சொல்லனும்’ என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள். 

தன் ஃபோனை எடுத்து ஆன் செய்தாள்.

மெஸேஜூகள் வந்து குவிந்திருந்தது. 

‘சாரி டி’

‘சாரி வினோ’

‘சாரி என் செல்லம்’

‘நீ சொன்னது போல லவ் அதிகமாக ஆயிடிச்சு’

‘உன் கிட்ட தான என்னோட ஃபீலிங்கஸ் எல்லாத்தையும் காட்ட முடியும். லவ்வை காட்டினா மட்டும் ஓகே சொல்ற. கோபப்பட்டா மட்டும் கோச்சிக்கிட்டு போயிடற?’ என்று சில லவ் எமோஜிகளுடன் மெஸேஜூகள் அனுப்பி இருந்தான் அருண்.

சிரிப்பு வந்தது வினோதாவிற்கு.

‘உனக்கு நான் ஒரு பெரிய பனிஷ்மெண்ட் தரப்போறேன். இனிமே நீ என் கிட்ட சண்டை போடனும்ன்னு நினைக்கவே கூடாது. அப்படி ஒரு பனிஷ்மெண்ட்’ என்று மெஸேஜை அனுப்பி விட்டு சிரித்துக் கொண்டே அடுத்த நொடி அவன் ரிப்ளை செய்வதற்குள் மறுபடியும் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தாள் வினோதா.

அப்போது பெட் ரூமில் ஏதோ சப்தம் கேட்டது.

ஃபோனை ஆஃப் செய்து கொண்டே ரூமிற்குள் சென்றாள் வினோதா. தன் கணவன் ரூமுக்குள் தான் இருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு. ஸ்மைல் செய்து கொண்டே உள்ளே வந்தாள்.

கதவின் பின்னாலிருந்து அவளை கட்டிப் பிடித்தான்.

“எனக்கு தெரியும் அருண் நீ இப்படி தான் என்னை சமாதானம் செய்வேன்னு” என்று சொல்லி திரும்பியவள் கட்டிப்பிடித்தவனின் முகத்தை பார்த்ததும் அவனை தள்ளி விட்டாள்.

“நீயா? நீ எப்படி இங்க வந்த?”

“வினோ, எப்படி இருக்க? நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?”

“பிளீஸ் மனோ இங்கிருந்து போ. என் புருஷன் வந்தா அவ்வளவு தான்”

“என்ன பண்ணிடுவான்? மிஞ்சி போனா உன்னை டைவர்ஸ் பண்ணிடுவான். அவ்வளவுதானே? அது நல்லது தான? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். நாம சந்தோஷமா இருக்கலாம்”

“அச்சோ மனோ, நான் பழைய வினோதா இல்ல. எனக்கு கல்யாணம் ஆகி நாலு வயசுல ஒரு பொண்ணு இருக்கா”

“இங்க பாரு வினோ, உன்னோட பொண்ணுன்னா அவ எனக்கும் பொண்ணு தான். அவனை விட்டுட்டு வந்திடு. உன்னை நான் என் மனைவியாக இல்ல ராணி மாதிரி பார்த்துக்கிறேன். அவன் கூடத் தான் உனக்கு அடிக்கடி சண்டை பிரச்சனை வருது இல்ல? நம்ம லவ் பண்ண அந்த நாலு வருஷத்தில ஒரு நாளாவது உனக்கும் எனக்கும் சண்டை வந்திருக்கா?”

“உனக்கெப்படி தெரியும்?, எனக்கும் அருணுக்கும் சண்டைன்னு?

“நீ சண்டை போட்டு கொண்டு பைக்ல போகும் போது பார்த்தேன்”

“நீ எப்படி இங்க?”

“நான் உன்னை தேடி அலையாத இடமே கிடையாது. அதான் உன்னை கண்டுபிடிக்கிறதுக்காகவே பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸில் சேர்ந்தேன். இந்த இரண்டு வருஷமா உன்னை தேடி தேடி, இப்போ தான் ஏதேச்சையாக உன்னை பார்த்தேன். நான் வேண்டிய கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும் உன்னை எனக்கு காட்டியதற்கு” என்று சந்தோஷமாக கூறினான் மனோகர்.

“மனோ பிளீஸ் போயிடு, எனக்கும் அருணுக்கு பிரச்சனை எல்லாம் இல்லை. இது சாதாரண விஷயம் தான். மனோ பிளீஸ் மனோ என்னை விட்டிடு. எனக்கு உன் மேல லவ் இல்லடா. நான் அருணை தான் மனசார காதலிக்கிறேன். அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது”

“அதெப்படி டி, இந்த பொம்பளைங்க எல்லாம் காலம் நேரத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கிறீங்க. இதுவே வசதி இல்லாதவனாவோ இல்ல குடிகாரனாகவோ உன் புருஷன் இருந்திருந்தா அவனை விட்டுட்டு வந்திருப்ப இல்ல? இவன் நல்லா சம்பாதிக்கிறான். கார், வீடுன்னு லைஃப்ல நல்லா செட்டில் ஆயிட்ட அதனால தான என் கூட வரப்பிடிக்காம அவன் மேல லவ் வந்திடிச்சுன்னு பொய் சொல்ற?

“இல்ல மனோ, கல்யாணம் ஆன இந்த 5 வருஷத்தில அவர் என்னை எப்படி எல்லாம் பார்த்துக்கிட்டாரு தெரியுமா? அவர் என் மேல உயிரையே வச்சிருக்காரு டா. நானும் தான். இந்த சின்ன சின்ன சண்டை எல்லாம் எங்களுக்குள்ள இருக்குற காதலையும் அன்னியோன்யத்தையும் அதிகப் படுத்துது”

“சரி வினோ, உனக்கு அவன் தான் வேணும் இல்ல?”

“ஆமாம்”

“நான் வேண்டாமா?”

“இல்ல மனோ,  நீ வேற யாராவது ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ”

“எப்படி உன்னால உன் புருஷன் இல்லாம வாழ முடியாதோ? அதே மாதிரி தான் நீ இல்லாம என்னால வாழ முடியாது. ஏன்னா நீ தான் என் பொண்டாட்டி” என்று சொல்லி விட்டு வேகமாக அவளுடைய கிட்சனுக்கு சென்று தேடி ஒரு கத்தியை எடுத்து வந்து வினோதாவிடம் நீட்டி.

“என்னை கொன்னுடு, உன் கையாலேயே நான் செத்துப் போறேன்”

“மனோ, உனக்கென்ன பயித்தியமா? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற?”

“அப்போ என் கூட வந்திடு, வா. நம்ம போயிடலாம். போகும் போது நம்ம குழந்தையை ஸ்கூல்ல இருந்து கூட்டிக்கிட்டு போகலாம்”

“நம்ம குழந்தையா? அவ என் குழந்தை. எனக்கும் என் புருஷன் அருணுக்கும் பிறந்தவ. உனக்கு அவ மேல எந்த உரிமையும் கிடையாது”

“சரி, அப்போ உன் குழந்தையை உன் புருஷனே பார்த்துக்கட்டும். நீ மட்டும் வந்திடு” என்றான் மனோகர் சிரித்துக் கொண்டே.

“மனோ, நீ இப்படி எல்லாம் பண்ணினன்னா நான் கத்தி ஊரைக் கூப்பிடுவேன். அப்புறம் பெரிய பிரச்சனை ஆயிடும்” என்றாள் வினோதா மிரட்டும் தோரணையில்.

“சாரி வினோ” என்றான் மனோகர்.

“சரி சரி, சாரி எல்லாம் சொல்லாத. நீ முதல்ல கிளம்பு” என்றாள் வினோதா.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.