Episode 10

Valanchuli Tamil | 23 May 2026 | Share

அத்தியாயம்-10 

“யோவ் நீ வந்து விழுந்து சாகுறதுக்கு என் வண்டி தான் கிடைச்சாதா?” கோபமாக கத்தினான் காளிதாஸ் 

தட்டு தடுமாறி இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து‌ நின்ற துரை “நீ ஏன் பா பேச மாட்ட? அன்னைக்கு ஹெட் லைட் உடைஞ்ச போது ஒரு நானூறோ ஐநூறோ கொடுத்திருந்தால் நான் பாட்டுக்கு போய் இருப்பேன்ல.. தேவை இல்லாமல் அந்த மோதிரத்தை வாங்கி கொடுத்து அதை நான் தொலைச்சு இப்ப அந்த பிள்ளையை கண்டாளே ஓடி ஒளியுற நிலையில் இருக்கேன்”, அவர் பாவமாக கூறினார்

“யோவ் நீ மோதிரத்தை தொலைச்சுட்டு அவரை ஏன் குத்தம் சொல்ற?..” இடுப்பில் கை வைத்த படி குச்சியை துரையின் முகத்திற்கு முன்பு ஆட்டி பேசிக் கொண்டிருந்த மீராவை சற்று ஆச்சரியத்துடன் பார்த்தான் காளிதாஸ் ‌.

‘இவள் இப்படி எல்லாம் பேசுற ஆள் கிடையாதே.. வாயை திறந்தாலே மரியாதை இல்லாமல் தானே பேசுவாள்.. இப்ப என்ன புதுசா மரியாதையா எல்லாம் பேசுறாள்?’ அவன் மனதிற்குள் பல கேள்விகளுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

“ஏன் பா காளிதாஸ் குத்து கல்லு மாதிரி நிற்குறியே தயவு செஞ்சு எப்படியாவது இந்த பொண்ணுகிட்ட இருந்து என்னை காப்பாத்தி விடு பா” என்று துரையின் கெஞ்சலில் அவர் பக்கம் திரும்பியவன் “அந்த மோதிரம் அந்த பொண்ணு கிட்ட தான் இருக்கு” என்று உண்மையை கூறினான்..

“அப்புறம் ஏன் மா என்னை அடிக்கிறதுக்கு துரத்தின?” துரை அதிர்ச்சியுடன் கேட்க 

“நான் எங்க துரத்தினேன்? நீங்க தான் ஓடி வந்தீங்க? அதான் நானும் உங்க பின்னால ஓடி வந்தேன்” என்று அவள் சிரிப்புடன் கூறினாள்..

‘என்ன நக்கலா?” என்ற ரீதியில் அவர் மீராவை முறைத்தார் 

“என்ன முறைப்பு தங்க மோதிரத்தை பார்த்ததும் கண்ணு ரெண்டும் பளபளன்னு மின்னினதை நானும் பார்த்துட்டு தான் இருந்தேன்.. ஒரு 500 ரூபாய் ஹெட் லைட் தானே..‌ அதுக்கான பணத்தை நாளைக்கு கூட வாங்கி இருக்கலாம்.. ஆனா அதெல்லாம் யோசிக்காமல் மோதிரத்தை பார்த்ததும் பேராசைப்பட்டு வாங்கி வச்சு இப்போ என்ன ஆச்சு உங்க கையில் நிலைச்சுதா?” என்று கேட்க துரை குற்ற உணர்ச்சியுடன் “மன்னிச்சுடு மா” தலை குனிந்தார்..

“சரி விடுங்க இனிமே இப்படி பண்ணாதீங்க” என்று மீரா கண்டிப்புடன் கூறினாள்..

“நேரா நில்லுங்க?” என்ற காளிதாஸ் அவரின் தலையை நிமிர்த்தினான்.. 

அவர் அவனை பார்க்க “அன்னைக்கு இருந்த கோபத்தில் நானும் அந்த பொண்ணு மோதிரத்தை வாங்கி கொடுத்துட்டேன்.. நீங்க திருப்பி கொடுத்துடுவீங்க அப்படிங்கற நம்பிக்கையில் தான் கொடுத்தேன்.. ஆனா நீங்க எங்கேயோ குடிச்சிட்ட நடு ரோட்டில் விழுந்திருப்பீங்க போல அந்த மோதிரம் மறுபடியும் என் கைக்கு தான் கிடைச்சது.. இதே வேற யாராவது கைது கிடைத்திருந்தால் அது வீணா போய் இருக்கும்..”

“நீங்க நல்லவரோ கெட்டவரோ ஒன்னை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கோங்க..‌ நம்ம உழைச்சு சம்பாதிக்கிற காசை தவிர வேற காசோ சொத்தோ எதுவும் நம்ம கையில நிலைக்காது… இனிமேல் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாம நீங்க உழைச்சு சம்பாதிக்கிற பணத்துல அந்த பொருளை வாங்கணும்னு நினைச்ச வாழுங்க இல்லன்னா இப்படித் தான் யார் யாருக்கோ ஓடி ஒளிஞ்சு வாழ வேண்டி இருக்கும்.. உங்க பொண்டாட்டியும் உங்க குழந்தையும் உங்களை நம்பி தான் இருக்காங்க.. நீங்க பண்ற சின்ன சின்ன செயல் கூட அவர்களை பாதிக்கும்..‌ இனிமே எது பண்ணுவதாக இருந்தாலும் முதலில் உங்க மனைவி புள்ளையை யோசிச்சிட்டு அப்புறம் பண்ணுங்க” என்ற‌ காளிதாஸ் அவர் தோளில் தட்டி கொடுத்து விட்டு பைக்கை கிளப்பி இருந்தான்….

மீரா தலை சாய்த்து போகும் அவனை புன்னகையுடன் பார்த்திருந்தாள்.. ‘பரவாயில்லை எல்லாரும் சொல்ற அளவுக்கு ரொம்ப மோசமானவன் இல்லை.‌ கொஞ்சம் நல்லவன் தான்.. ஆனா என்ன அந்த மீசையும் தாடியும் ட்ரிம் பண்ணி இறுக்கமான முகம் தளர்ந்து இருந்தால் பார்க்க இன்னும் அழகா இருக்கும்’ என்று அவள் சிந்தனை செய்து கொண்டிருக்க மூளை சந்தேகமாக பார்த்ததில் தலையில் தட்டிக் கொண்டவள் உள்ளே சென்று இருந்தாள்‌‌.‌

“காலங்காத்தால இந்த குளிரில் நல்லா இழுத்து போட்டுகிட்டு தூங்கிட்டு இருந்து இருப்பேன்‌‌.. தோட்டத்தில் இருக்கிற கருப்பராயன் கோயிலுக்கு போலாம்னு அஞ்சு மணிக்கு பச்சை தண்ணியை தலையில் ஊத்தி ஒரு பச்ச பிள்ளை இழுத்துட்டு வந்து இருக்கியே உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது அக்கா” அந்த ஆறு மணி காலை பொழுதில் தென்னந்தோப்பில் இருக்கும் கருப்புராயன் கோயிலில் சாமி கும்பிட்டு முடித்து மீரா விசித்ரா இருவரும் திரும்பி நடந்து வந்து கொண்டிருக்கையில் தான் மீரா புலம்போ புலம்பு என்று புலம்பி கொண்டு இருந்தாள்.. 

அனைத்தையும் சிறு புன்னகையுடன் கேட்டுக் கொண்டு வந்த விசித்ரா சட்டென்று நிற்க.. முன்னாள் சென்று கொண்டிருந்த மீராவும் நின்று திரும்பி என்னவென்று பார்த்தாள் 

“அங்க என்ன அக்கா பார்த்துட்டு இருக்க?” என்ற மீரா விசித்ரா பார்வை சென்று திசையில் பார்க்க அங்கு காளிதாஸ் ஒரு பெரிய கூடையில் 10 15 இளந்தேங்காய்களை அசால்ட்டாக தலையில் தூக்கி சுமந்து வந்து ஒரு இடத்தில் குமித்து கொண்டிருந்தான்.. 

“அப்படியோ என்ன அசால்டா இவ்வளவு பெரிய கூடயை தூக்கி தலையில வைக்கிறாரு” மீரா ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவள் “ஆமா இவருக்கு தான் வேலை வெட்டி இல்ல பொறுப்பில்லாதவன்னு ஊர்ல பலரும் பலவிதமா சொன்னாங்களே.. ஆனால் இங்க பொறுப்பான பையனா தோட்டத்துல வேலை செஞ்சிட்டு இருக்காரு?? இது யாரோட தோட்டம் அக்கா” என்ற மீரா தன் சந்தேகத்தையும் கேள்வியையும் ஒரு சேர கேட்டாள்.. 

“இது அவரோட தோட்டம் தான்” என்று விசித்ரா கூற‌ காளிதாஸ் விசித்ரா மீரா இருவரும் நின்று இருப்பதை பார்த்தவன் “டேய் இரண்டு இளநீர் போடுங்க” என்ற கணீர் குரலில் சொல்ல அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் கையில் இளநீர் இருக்க அழகாக சீவி கொண்டு வந்தவன் “இங்க என்ன பண்ற பாப்பா” என்று கேட்டபடியே விசித்ரா கையில் கொடுத்தான்

“கோவிலுக்கு வந்தோம் அண்ணா.. என்ன காலங்காத்தால தேங்காய் போடுவதற்கு ஆளுங்க வந்துட்டாங்களா?” என்று விசித்ரா கேட்டபடி இளநீரை பருகினாள்..

“ஆமாம் மா” என்றவன் மீராவிடம் இளநீரை நீட்ட “இவ்ளோ காலையில இளநீர் குடிச்சா சளி பிடிக்காதா?” என்று கேட்டபடி அதை வாங்க கை நீட்டினாள் மீரா..

“அவ்வளவு சந்தேகம் இருந்தா அதை குடிக்க வேண்டாம்” என்றவன் அவள் கையில் கொடுக்க சென்றதை பின்னால் இழுத்து கொண்டான்..

“இல்லை இல்ல சும்மா தான் கேட்டேன்” என்றவள் இளநீர் பிடுங்கி கொண்டாள்.. மீராவுக்கு இளநீர் என்றால் உயிர் ஆயிற்றே..

“என் கண்ணு உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாமே.. உனக்கு புடிச்சிருக்கா?” அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவர் விசித்ராவிடம் வந்து கேட்க விசித்திரா வெட்கத்துடன் தலையை அசைத்தாள்..

“என் கிட்ட சொல்லவே இல்லை பார்த்தியா நீ” காளிதாஸ் செல்ல முறைப்புடன் கேட்க 

“அதை சொல்ல தான் வந்தேன் அண்ணா” என்று விசித்ரா கூறினாள் 

“சரி பாப்பா உனக்கு புடிச்ச சரி தான்.. சந்தோஷமா இரு” என்று சொன்னவன் வார்த்தைகளில் அன்பு இருந்ததே தவிர அவன் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பே இல்லை 

‘அய்யய்ய என்ன இது சந்தோஷமா இருன்னு சொல்றதை கூட இவ்வளவு சிடுசிடுன்னு முகத்தை வச்சுட்டு சொல்லுவாங்களா?.. இந்த ஆளுக்கு முதலில் சிரிப்புன்னா எப்படி இருக்கும்னு கிளாஸ் எடுக்கனும் போலயே’ என்று இளநீரை பருகியபடி யோசித்துக் கொண்டு நின்றவள் தன் அக்கா விசித்ரா பக்கம் திரும்ப அவளோ தீவிரமாக அங்கு வேலை செய்ய வந்த பெண்மணியிடம் பேசிக் கொண்டு இருந்தாள்

அவளிடம் இருந்து விலகி காளிதாஸை நோக்கி வந்தவள் அவன் முதுகின் பின்னால் நிற்க சட்டென திரும்பியவன் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது போக “என்ன வேணும்” என்றான் எரிச்சலாக..

“சிரிப்பு வேணும்” அவள் தலை சாய்த்து அசயாமலச கேட்டாள்

“அதெல்லாம் இங்க கிடைக்காது” அவன் வேலையை பார்க்க சென்றிருந்தான்.

“நீங்க நெனச்சா கிடைக்குமே.. இப்படி சிரிக்காமயே இருந்து என்ன சாதிக்க போறீங்க” அவன் பின்னாலே சென்றவள் பேசிக் கொண்டே இருந்தாள்.. 

சட்டென திரும்பியவன் “என்ன பார்த்தாலே பொறுக்கி ரவுடி அப்படி இப்படின்னு கடிச்சு கொதறுவ.. இப்ப என்ன கரிசனமா வந்து பேசிட்டு இருக்குற… மண்டையில் ஏதாவது அடிபட்டுருச்சா” நக்கலாக கேட்டவன் அந்த தென்னை மரத்தின் கீழே கிடந்த தேங்காய்களை கூடையில் எடுத்த போட்டு அலேக்காக தூக்கி தலையில் வைத்துக் கொண்டு நடந்தான்.. 

“அப்படி கடிச்சு கொதறினது எந்த அளவுக்கு தப்புன்னு என் பெரியப்பா பேசின பிறகு புரிஞ்சுக்கிட்டேன்.. அவரே உங்க மேல அவ்ளோ நம்பிக்கை வைத்திருக்கிறார்.. அதனால…”

தேங்காயை கொட்டியவன் “அதனால” அவளை அழுத்தமாக பார்த்தான்..

“அதனால நானும் நீங்க ரொம்ப நல்லவருன்னு நம்புறேன்.. அந்த நம்பிக்கைல தான் இப்ப வந்து பேசிட்டு இருக்கேன்”

இதழ் வளைத்தவன் “நம்பிக்கை மரியாதை அன்பு காதல் இதெல்லாம் அடுத்தவங்க சொல்லி வரக் கூடாது தானா வரணும்..‌”

*தானா எப்படி வரும்? பழகினால் தானே வரும்.. நம்ப பழகுறவங்களோட செயல்களை வைத்து தானே அவங்க மேல நல்லா அபிப்ராயம் வருவதும் கெட்ட அபிப்ராயம் வருவதும்” 

“ம்ம் உனக்கு என் மேல நல்ல அபிப்ராயம் வர வேண்டிய அவசியமும் இல்ல என் மேல நீ நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.. இங்க எதுக்காக வந்தியோ அந்த வேலைய மட்டும் பாத்துட்டு போ” என்று இறுகிய முகத்துடன் சிடுசிடுவென சொல்லியவன் அவனது வேலையை பார்க்க கிளம்பி இருந்தான்..

‘ரெண்டு வார்த்தை நல்லா பேசுறான்.. அடுத்த வார்த்தைக்கு சிடுசிடுன்னு கத்த ஆரம்பிச்சிடுறான்.. இவன் குணமே இப்படித் தானோ’ என்று சிந்தனையுடன் நின்று இருக்க “ஏய் மீரா என்ன பண்ற போலாமா” என்றபடி வந்தாள் விசித்ரா 

“ம்ம் போலாம் அக்கா* என்ற மீரா கூற விசித்ரா காளிதாஸிடம் சென்று அவனிடம் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு வந்தவள் மீராவை அழைத்துக் கொண்டே இருந்து சென்றாள்..

மீரா திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல இடுப்பில் கைவைத்தபடி அவளை முறைத்த பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் தனது வேலையை பார்க்க சென்றிருந்தான்.. 

அவன் முகத்தை திருப்பி கொண்டு போனதில் உதட்டை சுழித்தவள் ‘‘இவனை கட்டிக்க போற புள்ள எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணுச்சோ தெரியல” அவளை நினைத்து அவளே பாவப்பட்டுக் கொண்டாள்!

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.