அத்தியாயம்-9
“என் பட்டுல.. என் தங்கம்ல.. அவங்க வீட்டிலேயே சம்மதம் சொல்லாத போது நான் எப்படி உன்கிட்ட சொல்லுவேன்.. எனக்கு நல்லது நடந்தா அதிகமா சந்தோஷப்படுறவளும் நீ தான்.. ஏதாவது சின்னதா அசம்பாவிதம் நடந்தால் அழுது ஆர்ப்பாட்டம் பண்றவளும் நீ தான்.. மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு நல்ல முடிவு சொல்லட்டும் அதுக்கப்புறம் எல்லார் கிட்டயும் சொல்லலாம்னு அப்பா சொன்னாரு.. அதனால் தான் நானும் உன் கிட்ட கூட சொல்லலை.. மன்னிச்சிடு குட்டி..” ரசகுல்லாவுடன் தன் நிலையை சொல்லிமீராவை கொஞ்சிக் கொண்டிருந்தாள் விசித்ரா..
விசித்ரா கையில் இருக்கும் ரசகுல்லாவையும் அவளையும் மாறி மாறி பார்த்த மீரா “போன போகுதுன்னு இந்த ரசகுல்லாக்காக உன்னை மன்னிச்சு விடுறேன்” என்று ரசகுல்லாவை அமுக்க ஆரம்பித்தாள்.
அவளின் குண்டு கன்னங்களைக் கிள்ளிய விசித்ரா “என் செல்ல தங்கச்சி” என்று கொஞ்சி கொண்டாள்..
“அதெல்லாம் இருக்கட்டும் மாமா உன்கிட்ட நல்லா பேசுறாரா? உன்னை நல்லா பார்த்து பாரு தானே? உன் விருப்பத்துக்கும் உன் உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்குறாரா? உனக்கு பழகாமலே எப்படி அவர் மேல நம்பிக்கை வந்துச்சு? நிஜமாவே அவர் உனக்கு பிடிச்சிருக்கா?”அக்கா மீது உள்ள அக்கறையில் அவள் வாழ்க்கை சரியாக அமைய வேண்டும் என்ற பயத்திலும் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டாள் மீரா..
“எனக்கு நெஜமாவே அவரை ரொம்ப பிடிச்சிருக்கு.. எனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை நான் பண்ணலாம்.. என் விருப்பம் என்னவோ நான் அதை பண்ணலாம்.. எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம்.. அதுல எல்லாம் எந்த விதத்திலும் தலையிட மாட்டேன்னு சொல்லிட்டாரு.. அது போக எனக்கு அவர் கிட்ட ரொம்ப புடிச்ச விஷயமே என்னோட அம்மா அப்பாவை அவரோட அம்மா அப்பாவா நினைக்கிறாரு”
“அவரு அம்மா அப்பாவுக்கு என்ன எல்லாம் பண்ணனும்னு ஆசைப்படுறாரோ அதெல்லாம் என் அம்மா அப்பாவுக்கும் பண்ணனும்னு ஆசைப்படுறார்.. அந்த விஷயம் எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்சது.. அது மட்டும் இல்லாம அவர் குரலை கேட்டாலே எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்கிற மாதிரி இருக்குது தெரியுமா? அந்த பீல் எப்படி எல்லாம் சொல்ல தெரியல.. ஆனா அதெல்லாம் அவரால் தான் அவரை ரொம்ப பிடிச்சிருக்கு.. ஹீ இஸ் சம்திங் ஸ்பெஷல் மீரா..”
“அவர் எவ்வளவு ஜாலி டைப் தெரியுமா? நீயும் அவர் கிட்ட ஒரு தடவை பேசிப் பாரு.. உனக்கும் அவனை ரொம்ப பிடிச்சிரும்” என்று தான் வருங்கால கணவனை பற்றி பக்கம் பக்கமாக ஆசை ஆசையாக சொல்லிக் கொண்டிருந்தாள் விசித்ரா..
ரசகுல்லாவை ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாலும் அக்காவின் வருங்கால கணவனை பற்றி அவள் சொல்வதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது ‘வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை அக்காவுக்கு மிகவும் பிடித்து விட்டது.. அவரை நேசிக்க தொடங்கி விட்டால் என்று… எப்படியோ தான் அக்கா சந்தோஷமாக இருந்தால் சரிதான் என்று நினைத்து கொண்டாள்.. இருந்தாலும் அந்த மாப்பிள்ளையிடம் தானும் பேசி பார்க்க வேண்டும்’ என்று நினைத்து வைத்துக் கொண்டாள்
“என்னடி எதுவுமே பேசாம என்னையே பார்க்கிற?”
“நான் என்ன பேசுறது உன் வாய் பேசறதை விட அவரை பத்தி சொல்லும் போது உன் கண்ணும் கன்னமும் பேசுறது தான் அதிகமா இருக்கு.. அது எப்படி அக்கா உனக்கு அவர் அவ்வளவு பிடிச்சது?”
“நெஜமாவே தெரியல டி.. வீட்டில் சொல்லுறாங்கன்னு தான் சும்மா பார்மாலிட்டிக்காக தான் பேசினேன்.. பேச பேச அவர் பேச்சிலேயே மயங்கிட்டேன்னு கூட சொல்லலாம்.. எவ்வளவு மென்மையா பேசினாரு தெரியுமா?? அவர் அழகானவர் மட்டுமல்ல ரொம்ப அன்பானவரும் கூட..”
“எல்லா பொண்ணுங்களும் தனக்கு வரப்போற புருஷன் எப்படி இருக்கணும்னு ஆசைப்படுவாங்களோ அதே மாதிரி எனக்கும் சில ஆசைகள் இருந்துச்சு அந்த ஆசைகளோட முழு உருவமா இவரு தான் என் கண்ணுக்கு தெரிஞ்சாரு.. இவரை விட்டுடாத என்ன மனசு சொல்லுச்சு அதனால் பிடிச்சிருக்கு வீட்ல சொல்லிட்டேன்.. அவங்களும் மாப்பிள்ளை வீட்ல பேசினாங்க..”
“அதுக்கு அப்புறம் நல்ல நாள் பார்த்துட்டு சொல்லுறேன்னு சொன்னாங்க அப்புறம் என்ன ஏதுன்னு எதுவுமே சொல்லலை.. எனக்கு கூட என்னை பிடிக்கலையோன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. அதுக்கு அப்புறம் இன்னைக்கு தான் அவங்க வீட்ல இருந்து போன் பண்ணி சொன்னாங்க.. அவரும் எனக்கு காலையில் போன் பண்ணி பேசினார்.. அவர் ரொம்ப நல்லவரா தெரியுறாரு மீரா எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு”, காதல் ததும்பியது அவள் வார்தைகளில்..
அக்காவின் கடைசி வார்த்தையில் அவள் நேசம் எத்தனை ஆழமாக இருக்கிறது என்பதும் புரிந்து போனது மீராவிற்கு
“அக்கா ஆற்றில் ஓடுற தண்ணி பாக்குறதுக்கு அழகா தான் இருக்கும்.. ஆனா அந்த ஆற்றோட ஆழம் ரொம்ப ஆபத்தானது.. அதுபோல ஆம்பளைங்க பேசுற பேச்சும்.. கேக்குறதுக்கு இனிமையாக தான் இருக்கும்.. ஆனா அவங்க குணத்தோட ஆழம் சரியா தெரியாமல் அவங்கள நெருங்கிடக் கூடாது..”
“நீ புத்திசாலியான பொண்ணு தினமும் ஃபோன்ல பேசுற பேச்சை மட்டும் வச்சு இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.. நீ பல விஷயங்களை யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்து இருப்பேன்னு நம்புறேன்… என் அக்காவோட வாழ்க்கையில் இந்த நிமிஷம் எவ்வளவு சந்தோஷம் நிறைந்திருக்கோ அதே மாதிரி ஆயுள் முழுக்க அவள் வாழ்க்கை சந்தோஷத்தால நிறைஞ்சு இருக்கணும்.. அவளுக்கு எந்த ஒரு குறையும் வந்துட கூடாது.. அவ்வளவு தான் என் ஆசை.. நீ தேர்ந்தெடுத்த துணை ரொம்ப சரியானதாக இருக்கும்னு நான் நம்புறேன்”
“ஏன் டி பயமா இருக்கா?”
“ஆமா அக்கா என்ன மாதிரி நீயும்…”
“உன்ன மாதிரியா?” விசித்ரா குறுக்கிட்டாள்.
‘அவசர த்தில் என்ன சொல்லிவிட துணிந்து விட்டோம்’ என்று மனதிற்குள் அதிர்ந்தவள் அதை முகத்தில் காட்டாமல் “இல்லை அக்கா கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நிறைய பேர் நல்ல விதமாக தான் இருக்காங்க.. ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என்ன காரணமோ தெரியல பல ஆம்பளைங்க மாறிடுறாங்க.. அதுக்கப்புறம் அந்த பொண்ணுங்களோட வாழ்க்கை நரகமா தான் இருக்கு”
“பலர் பல்லை கடிச்சுக்கிட்டு குடும்ப கௌவுரவத்துக்காகவும் பெத்த குழந்தைக்காகவும் வாழுறாங்க.. சிலர் போடான்னு தூக்கி எறிஞ்சிட்டு வந்து இந்த சமூகத்தோட அவபேச்சுக்களை தினம் தினம் கேட்டு மனசளவுல நொந்து போய் நரக வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க.. உன்னோட வாழ்க்கையில் அந்த மாதிரி எதுவுமே நடந்திட கூடாது அப்படிங்கிற பயம் எனக்கு நிறையவே இருக்கு. அந்த மாதிரி எதுவும் நடக்காது”
“அப்படிப்பட்ட ஒரு பையனை பெரியப்பாவும் பார்த்து இருக்க மாட்டாரு நீயும் ஓகே பண்ணி இருக்க மாட்ட.. அதனால் தான் என்ன மாதிரி நீ பயக்காமல் தைரியமா இருக்கேன்னு சொல்ல வந்தேன்”, எப்படியோ சமாளித்து இருந்தாள்..
மீரா அவள் வாழ்க்கையில் தினம் தினம் அனுபவிக்கும் காதல் வலிகளை தன் அக்கா அனுபவித்து விடக் கூடாது.. அதிலும் தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் எந்த இடத்திலும் சறுக்கி விடக்கூடாது என்ற பயத்தில் தான் இவ்வளவு தூரம் பேசிக் கொண்டிருந்தாள்.
“நிஜமாவே அவர் ரொம்ப நல்லவரு மீரா.. நீ ஒரு தடவை அவர்கிட்ட பேசி பாரு. முதல் முறையே உனக்கு அவரை ரொம்ப பிடிச்சிடும்… அவரோட நல்ல குணமும் உனக்கு புரிஞ்சிடும்.. உனக்கு அவ்வளவு பயமா இருந்தா நீ வேணா அவர் கிட்ட பேசி பார்க்கிறியா?… இன்னைக்கு போன் பண்ணுவாரு நான் உன்கிட்ட தரட்டா?”
“அதெல்லாம் வேணாம் அக்கா.. இங்க வருவாங்கல்ல அப்போ நான் பேசிக்கிறேன்”
“சரி அட்லீஸ்ட் அவரோட போட்டோவையாவது பாரு.. இரு எடுத்துட்டு வரேன்” என்று விசித்ரா சந்தோஷமாக துள்ளி குதித்து அவளின் வருங்கால துணையின் புகைப்படத்தை எடுக்கச் சென்றாள்.
‘இப்போவே அக்கா அவள் வாழ்க்கையை பற்றி ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இருப்ப போல.. ஆண்டவா வாழ்க நல்லபடியா அமையணும்.. என் மனசு ஏனோ பதறுது.. அக்கா எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா வாழனும்’ என்று மனதினுள் கடவுளை வணங்கிக் கொண்டாள்
“இந்தா இது தான் உன் மாமாவோட போட்டோ” என்று புன்னகையுடன் ஒரு புகைப்படத்தை கொண்டு வந்து மீரா கையில் கொடுத்தவள் மெத்தையில் துவைத்து போட்டிருந்த துணிகளை மடித்தாள்..
மீரா புகைப்படத்தை பார்க்க போகும் சமயம் “மீரா போன் அலறிட்டே இருக்கு.. இதோட அஞ்சு தடவை உனக்கு போன் பண்ணிட்டா ரஞ்சிதா. இப்ப வந்து பேசுறியா இல்ல நான் கட் பண்ணி விடட்டுமா” என்று கூடத்தில் இருந்து சத்தமிட்டார் ஆனந்தி
“அய்யய்யோ அவள் காலையிலேயே கூப்பிட்டாளே.. நான் தான் மறந்து போயிட்டேன்.. இதோ வரேன் அம்மா” என்றவர் அந்த புகைப்படத்தை பார்க்காமல் அப்படியே பெத்தையில் வைத்துவிட்டு எழுந்து ஓடி இருந்தாள்..
துணிகளை பீரோவில் அடுக்கி கொண்டிருந்த விசித்ரா ‘சரி பாத்து இருப்பாள்’ என்று புன்னகையுடன் அந்த புகைப்படத்தை கையில் எடுத்தவள் சுற்றிலும் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அந்த புகைப்படத்தில் முத்தமிட்டு நாக்கை கடித்து வெட்கம் கொண்டவள் நெஞ்சோடு அணைத்து கொண்டாள்..
வாசலில் வலது பக்க ஓரத்தில் பச்சை புல் தரை போடப்பட்டிருந்த கார்டனில் அங்கும் இங்கும் நடந்தபடி போனில் பேசிக் கொண்டிருந்தாள் மீரா
“சரி சரி நான் செக் பண்ணிட்டே இருக்கேன்.. நானும் என் இன்டர்ன்ஷிப்க்கு செலக்ட் ஆயிடுவேன்னு நம்புறேன்.. என்னோட ரொம்ப பெரிய கனவு இது.. இது மட்டும் நிறைவேறிடுச்சுன்னா என்னோட ஆசையில பாதி நிறைவேறி மாதிரி” என்று சிலாகித்து பேசிக் கொண்டிருந்தவள் முகம் சட்டென முறைப்பை தத்தெடுத்த கொள்ள ‘உனக்கு நான் அப்புறம் கூப்பிடுறேன்’ என்று போனை அணைத்தவள் சுவர் வரும் கிடந்த வேப்பங்குச்சி ஒன்றினை உருவினாள்..
“அய்யய்யோ அம்மா சத்தியமா உங்க மோதிரத்தை நான் எதுவுமே பண்ணல.. அது எங்கேயோ காணாமல் போயிடுச்சு.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.. ஐயா கிட்ட மட்டும் இதை பத்தி சொல்லிடாதீங்க.. என்ன உரிச்சு தொங்க விட்டுடுவாரு..” ஆடு மாடுகளுக்கு தேவையான தவிட்டு மூட்டையை டெம்போவில் ஏற்றுக் கொண்டு வந்த துரை மீராவிடம் கெஞ்சி கொண்டு இருந்தான்..
“அதெப்படி விட முடியும் ஆப்டரால் ஒரு நூறு இருநூறு ரூபா ஹெட் லைட் உடைஞ்சதுக்கு நாற்பதாயிரம் ரூபாய் மோதிரத்தை தொலைச்சு இருக்க.. உன்னை அடிச்சா தான் என் ஆத்திரம் தீரும்” என்றவள் அந்த டிரைவரை அடிக்க குச்சியை ஓங்கிக்கொண்டு வர
“ஐயோ அம்மா விட்டுடுங்க” என்று பதறியவர் வெளியே ஓடி வந்தவர் மீரா வீட்டை கடந்து சென்ற காளிதாஸ் பைக் மேல் போக அதன் சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தியவன் “யோ கண்ணு என்ன பொடனிலையா வச்சிருக்க” என்று கத்தி இருந்தான்..
No comments yet.