Episode 5

Valanchuli Tamil | 23 May 2026 | Share

அத்தியாயம்-5 

“ச்சீ நீ இவ்ளோ கேவலமானவன்னு நான் நெனச்சே பாக்கல”, அவனை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்து கொண்டு நின்றாள் மீரா.

அவளை அழுத்தமாக பார்த்தவன் “ஏய் வார்த்தையை அளந்து பேசு” என்றான் கோபமாக 

“உன்னை மாதிரி திருடன் கிட்ட இந்த அளவுக்கு பேசினாலே போதும்.. வெட்கமா இல்லையா உனக்கு.. ரோட்ல தனியா போற பொண்ணு கிட்ட நடு ரோட்டில் வந்தேன்னு பொய் சொல்லி பெரிய நியாயவதி மாதிரி அவர்கிட்ட மோதிரத்தை பிடுங்கி கொடுத்து நீயே அதை வாங்கிட்ட.. பணத்துக்காக தானே இந்த மாதிரி கேவலமான வேலை எல்லாம் பண்றீங்க.. உனக்கு கை காலெல்லாம் நல்லா தானே இருக்கு.‌. உழைச்சு சம்பாதிக்க வேண்டியது தானே” அவள் பாட்டுக்கு நடந்தது தெரியாமல் காளிதாஸை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்..

“ஏய் நடந்தது என்னன்னு தெரியாம தேவை இல்லாம பேசிட்டு இருந்த வாயை உடைச்சுருவேன் பாத்துக்க” என்று விரல் நீட்டி எச்சரிக்க 

“ஏய் என் மோதிரத்தை நூதனமா நீ திருடி வைத்திருக்கும் போதே என்ன நடந்திருக்கும்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு.. முதல்ல என் மோதிரத்தை குடுடா” என்றவன் கையில் இருந்த  தனது மோதிரத்தை பிடுங்கிக் கொண்டாள்

“இங்க பாரு திருடன் அது இதுன்னு சொல்லிட்டு இருந்த அவ்வளவு தான் பாத்துக்க”

“அப்படி தான் டா சொல்லுவேன்.. நீ திருடன் தான் டா என்னடா பண்ணுவ” மீர தவறாக புரிந்து கொண்டு அனாவசியமாக அவன் மீது கோபப்பட்டு எகிறிக் கொண்டிருந்தாள்..

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவன் சர்ரென்று ஒரு அடி நெருங்க மீரா பதறிப்போய் விலக முற்பட அவளின் இரு கைகளையும் பற்றி தனக்கு மிக அருகில் இழுத்தவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.

அவனின் சிவந்திருந்த கண்கள் கண்டு இதுவரை ஓயாமல் பேசிக் கொண்டிருந்த வாய் பட்டென்று மூடிக்கொள்ள கண்கள் லேசான பயத்தில் நடுங்கியது..

“இன்னொரு வார்த்தை தப்பா வந்துச்சு பேசவே முடியாதபடி பண்ணிடுவேன்.. பொண்ணாச்சேன்னு பாக்குறேன் வீணா என்னை சீண்டி பார்க்காதே” பல் இடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவன் அவள் கைகளை விட மீரா அவனை பயத்துடன் பார்த்தாலும் உள்ளுக்குள் கருவிக்கொண்டே தான் அங்கிருந்து நகர்ந்தாள்..

தாஸை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவன் மீது அவளுக்கு தவறான அபிப்ராயமும் கோபமும் தான் பெருகிக்கொண்டே போகிறது.. அவனுக்கும் அதேபோலத் தான் மீராவை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவள் அவசர புத்தியால் தான் அனைத்தும் தவறாக நடக்கிறது என்ற எண்ணம் வலுவாகி கொண்டு இருந்தது..

‘சொல்ல வருவதை ஒரு நிமிஷம் பொறுமையா கேக்குறாளா? என்ன பொண்ணு இவள்’ போகும் அவளை பார்த்தபடி மனதிற்குள் நினைத்து கொண்டு நின்று இருந்தான்..

‘பொறுமைக்கு அர்த்தமே தெரியாத உன்னையே பொறுமையா சொல்றதை கேட்கணும்னு யோசிக்க வச்சிட்டாளே..‌ அந்த பொண்ணு கிட்ட ஏதோ இருக்கு பா’ என்று மனசாட்சி சிரிக்க அதை முறைத்து விட்டு அத்தோடு அந்த எண்ணத்தை ஓரம் கட்டியவன் அவன் வேலையை பார்க்க கிளம்பியிருந்தான் 

ஊரே திருவிழா கோலம் பூண்டு இருந்தது.. விடிந்தால் குண்டம் திருவிழா ஆரம்பம் ஆக உள்ளது.. கோவிலில் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வெகு விமரிசையாக நடைபெற்று வண்ணம் இருந்தது..

கோவிலில் கூட்டம் அலை மோத மீரா விசித்ரா இருவரும் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய அனார்கலி சுடிதாரில் அன்று பூத்த ரோஜா மலர்கள் போல சிரித்த முகத்துடன் இரவு கோவிலுக்கு கிளம்பி இருந்தனர்.. 

முதல் நாள் பூச்சாட்டுதலுடன் தொடங்கிய திருவிழா பதினைந்து நாட்கள் நடைபெறும்..தினமும் ஏதாவது ஒரு சிறப்பு பூஜை நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.. அதிலும் இரவு அம்மனுக்கு நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பான ஒன்று.. பூச்சாட்டுதலில் இருந்து தினமும் மீராவும் விசித்ரா கோவிலுக்கு சென்று வருவது வழக்கமான ஒன்றாக இருந்தது.. 

மீரா காளிதாஸை அந்த சாலையில் கடைசியாக பார்த்ததோடு சரி அதன் பிறகு அவன் அவள் கண்களில் படவே இல்லை.. 12 நாட்கள் கோவிலுக்கு வந்தாயிற்று ஒரு தடவை கூட அவனை கோவிலிலோ மற்ற இடங்களிலோ பார்த்ததாக ஞாபகம் இல்லை.. 

‘எங்க யாரை ஏமாத்தி திருடலாமோன்னு யோசிச்சுட்டு திரியுவான்.. நம்ம எதுக்கு தேவை இல்லாம அவனை பத்தி யோசிக்கணும்’ மனதினுள் திட்டிக் கொண்டவள் அத்தோடு அவன் நினைவுக்கு பூட்டு போட்டு கொண்டாள்..

மீரா குடும்பம் கோவிலுக்கு வந்து சேர்ந்து இருந்தது.. பெரியவர்கள் ஒரு பக்கம் சென்று விட மீரா விசித்ரா இருவரும் திருவிழா கடைகள் இருக்கும் பக்கம் வந்து இருந்தனர்…

“ஹேய் நீ இரு நான் வாங்கிட்டு வரேன்” என்று விசித்ரா பானிபூரி வாங்க கடைக்குள் சென்று இருந்தாள்..

மீரா சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நின்று இருக்க அவளின் கண்கள் திருமணமான புது தம்பதியினரிடம் நிலைகுத்தி நின்றது..

அந்த பெண்ணின் கணவன் காளான் சில்லியை அவளுக்கு காதலுடன் ஊட்டி விட்டான்.. அவளுக்கு சுட்டு விடுமோ என பார்த்து பார்த்து அவன் ஊட்டி விட்டது அவள் இதழை துடைத்து விட்டது என அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தவள் முகம் மெல்ல மெல்ல சந்தோஷத்தை தொலைத்து சோகத்தை தத்தெடுத்து கொண்டு இருக்க மனம் மீண்டும் ‘வினோ வினோ’ என கதற ஆரம்பித்திருந்தது 

வினோத் கல்லூரி முடித்த பிறகும் அவளுக்காக மாலை கல்லூரி வாசலில் வந்து காத்திருப்பான்.. பெரும்பாலும் மீரா கண்டும் காணாதது போல் தான் செல்வாள்.. அவள் அப்படி திரும்பி பார்க்காமல் சென்றாலும் அவன் விடாமல் ஏதாவது வம்பு வளர்த்துக் கொண்டே அவளுடன் நடந்து வருவான்.. எவ்வளவு சிடுசிடுவென பேசினாலும் அவள் பேருந்து ஏறும் வேளையில்  எப்படியோ சிரிக்க வைத்து விடுவான்.. 

ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை மீரா கல்லூரி இரண்டாம் வருடம் முடிக்கும் வரை இது தொடர்ந்து கொண்டே இருந்தது.. அவளையும் மீறி மாலை வெளியே வரும் போது அவளின் கண்கள் வினோத்தை தேட ஆரம்பித்திருந்த காலம் அது.. தன்னையும் தன் மனம் அவன் பால் சாய்கிறது என்பதை நன்றாகவே உணர்த்த இருந்தாள் மீரா.. 

இந்த ஒரு வருட காலத்தில் அவனிடம் பல நல்ல குணாதிசயங்களை கண்டிருக்கிறாள்.. எப்படி பார்த்தாலும் அவனை மறுப்பதற்கு அவளிடம் ஒரு காரணங்கள் கூட இல்லை.. அது போக மூளை வேண்டாம் என்று கத்தினாலும் மனம் அவன் நினைவிலேயே தவிக்கிறது.. அவனை பார்க்கும் நிமிடத்திற்காக ஒவ்வொரு நாளும் கண்கள் தவம் இருக்கிறது.. 

எந்த இடத்தில் பிடித்தது அவனின் எந்த பேச்சு ஈர்த்தது என்றெல்லாம் தெரியவில்லை அவனை பிடித்து இருக்கிறது அவனுடன் காலம் முழுக்க வாழ வேண்டும் எனும் அளவிற்கு அவன் மேல் காதல் பைத்தியம் பிடித்திருக்கிறது.. இரண்டாம் வருட முடிவில் அவன் மீதான தன் காதலை தெள்ளத் தெளிவாகவே உணர்ந்து கொண்டாள் மீரா‌‌.. சொல்ல தான் தயக்கம்.‌ அதையும் அவனே உடைத்தெறிந்து இருந்தான்..

அன்று இரண்டாம் வருடத்தின் கடைசி தேர்வு எழுதி முடித்து வெளியே வந்தவளின் கண்கள் வழக்கம்போல வினோத்தை தேடியது..

அவனும் அவளை ஏமாற்றாமல் அவள் முன்பு புன்னகைத்தபடி வந்து நின்றவன் “காளான் சாப்பிட போலாமா” என்று ஆசையாக கேட்கவே அவளுக்கும் ஆசை தான்.. ஆனால் தயக்கமாக இருந்தது.. மறுக்கவும் மனமில்லை.. 

கைகளை‌ பிசைந்தபடி அமைதியாக நின்று இருந்தாள்

அவள் தயக்கத்தை உணர்ந்தானோ என்னவோ “ஹேய் இங்க பக்கத்துல தான்.. அங்க நிறைய பேர் இருப்பாங்க என் விரல் கூட உன் மேல படாது.. எனக்கு ஒரு வேலை கிடைச்சு ஒரு மாசம் ஆகுது.. இன்னும் யார்கிட்டயும் சொல்லலை.. என் சம்பளத்தில் உனக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன்.‌ உனக்கு தான் காளான் ரொம்ப பிடிக்கும்ல அதான் வாங்கி கொடுக்கலாமுன்னு கூப்பிடுறேன்.. ஒரு பத்து நிமிஷம்.. ப்ளீஸ்” அவனின் கண்ணியமான பேச்சும் எட்ட நின்று காதலுடன் ஏக்கமாக அவளை வருடும் விதிகளையும் பார்த்தவளுக்கு முடியாது என்று சொல்ல முடியவில்லை..

“என்ன என் மேல நம்பிக்கை இல்லையா?”, அவன் முகம் வாடி போனது.

“அய்யோ அப்படி எல்லாம் இல்ல போலாம்” என்ற மீரா தயங்கியபடியே அவனுடன் சென்றாள்.. அவன் மீது இருந்த காதலால் அவன் முக வாட்டத்தை கூட தாங்கி கொள்ள முடியவில்லை.

கடையில் மிகவும் கூட்டமாக இருந்ததால் இருவரும் ஒரு மேசையில் அமர்ந்து இருந்தனர்..  அவள் கை அருகே ஒரு பார்சலை தள்ளி வைத்தான் வினோத்.

தலை குனிந்து அமர்ந்து இருந்தவள் மெல்ல விழி உயர்த்தி அந்த பார்சலையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்

“இந்தா பிடி.. உனக்காக தான்” புன்னகை மாறாத முகத்துடன் அவள் கையில் திணித்தான்..ள

மீரா அதைப் பிரித்தாள்.. என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அவளுள்ளும் இருந்தது.

ஆச்சர்யமாக பார்த்தவள் “புடவை எனக்கா?” என அவள் ஆசையாக அதை வருடினாள்..

“ஆமா என்னோட வருங்கால பொண்டாட்டிக்கு நான் எடுத்துக் கொடுக்காமல் யார் எடுத்துக் கொடுப்பாங்க?” என்றவன் பேச்சில் அத்தனை உரிமை.

‘பொண்டாட்டி’ என்ற வார்த்தையை கேட்டதும் மீராவின் கன்னங்கள் அவளையும் மீறி சிவந்து போனது. வெட்கச்சரிப்புடன் அதை மறைக்க அவள் அரும்பாடு பட வினோத் தனக்கான அவளின் வெட்கத்தை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தவன் “கல்யாணம் பண்ணிக்கலாமா மீரா?” காதல் ததும்பும் குரலில் கேட்டிருந்தான்.

மீரா வெட்கத்தை மறைக்க முடியாமல் எழுந்து ஓட போக அவள் கை பற்றி அமர வைத்தவன் “ப்ளீஸ் இப்படியே இரு” என கெஞ்சலுடன் சொன்னவன் கன்னத்தில் கைவைத்து அவளையே பார்த்திருந்தான் 

“கா.. காளான் வாங்கிட்டு வரேன்னு சொன்னீங்க” அவன் பார்வை வீச்சிலிருந்து தப்பிக்க இதை விட அவளுக்கு வேறு வழி தெரியவில்லை 

“ஆமாம்ல.. இதோ வரேன்” எழுந்து நகர்ந்தவன் காளான் வாங்கி வந்தான்

நடந்து வரும் அவனையே அவள் விழிகள் வட்டமடிக்க..‌அருகில் வந்தவன் “இப்படி பார்க்காதே மா வெட்கமா இருக்கு” என்ற கண்ணடித்து சிரித்தபடி காளானுடன் எதிரே அமர்ந்தவன் அழகில் சொக்கித்தான் போனாள் மீரா..

அவள் கூச்சத்தில் தலை குனிந்து அமர்ந்து இருக்க அவள் வாய்‌ அருகே காளானை கொண்டு வந்தான் வினோத்.. 

“வாங்கிக்கோ” என்றவன் கண்களில் காதலுடன் கூடிய ஏக்கம் நிரம்பி வழிந்தது‌‌..

அவள் தயக்கமாக பார்க்க அவன் வாடிய முகத்துடன் கையை‌ பின் இழுக்க பட்டென்று அவன் கைப்பற்றி அந்த சில்லியை வாங்கி கொண்டாள்..

அந்த நொடி அவன் முகத்தில் தோன்றிய புன்னகையை இன்று நினைத்தாலும் திகட்டவகலலை..

அவனுக்கும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது புரிந்து விட்டது..‌ அவளுக்கும் அவன் இல்லாமல் தனக்கு ஒரு வாழ்க்கை இல்லை எனும் அளவிற்கு அவனை பிடித்து விட்டது. இனி அடுத்த கட்டம் நோக்கி நகர்வது தான் வேலையாகி போனது.

வினோத் பேசிப்பேசியே அவளை சகஜமாக இருந்தான்.. இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தவர்கள் மெல்ல அந்தக் கடையிலிருந்து வெளியே வந்தனர்..

தோழர் உரசிக் கொண்டதில் உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.. இருவரின் விழிகளும் காதலுடன் ஒருவரை ஒருவர் தழுவி கொண்டது..

மீராவின் துப்பட்டா தோளில் இருந்து சரிந்து விழுந்து இருந்தது.. அவன் அருகில் இருப்பதில் அவள் உள்ளம் அவனை தவிர எதையும் கவனிக்கவில்லை..

“ஹேய் ஸ்டாப்” என்றவன் அவள் துப்பட்டாவை சரியாக மடித்து போட்டு விட்டவன் “இனி விழாது வா போலாம்” என சாவி தூக்கி போட்டபடி முன்னே சென்று இருந்தான்..

எங்கும் அத்து மீறாத அவனின் கண்ணியமான பார்வையில் மனம் பாகாக கரைந்து போனது அவளுக்கு..

“நானே ட்ராப் பண்ணட்டுமா?” அவன் ஆசையாக கேட்க அவன் மீது பிறந்த காதலாலும் பல மடங்கு பெருகி இருந்த நம்பிக்கையாலும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் பின்பக்கம் அமர்ந்து கொண்டாள்‌‌

வண்டியை உயிர்ப்பித்தவன் “ஓய் என்னை பிடிச்சு இருக்கா?” என்று தலையை பின்னால் சாய்ந்து கேட்டான்..

“ம்ம்ம் பிடிக்காமல் தான் உங்க பின்னாடி உட்கார்ந்து இருக்கேனா”, அவள் வெட்கம் கலந்த சிரிப்புடன் கேட்டாள் 

“அப்போ தோளை பிடிச்சுக்கலாமே” அவனின் இது போன்ற ஆசைகளை காதலுடன் கேட்கும் விதம் அவளை வெகுவாக ஈர்த்தது.

இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து இருந்தவள் அவனை பின்னால் இருந்து கட்டி கொள்ள வினோத் உள்ளம் ரெக்கை கட்டி பறக்க வண்டி ரெக்கையே இல்லாமல் பறந்தது..

அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமாய் காதலித்து சுற்றி திரிந்தது காதல் புறாக்கள் இரண்டும்.. அந்த அழகிய நாட்களை எல்லாம் இன்று நினைத்தாலும் சந்தோஷத்தை வாரி கொடுக்கும்..

கண்களில் தேங்கிய கண்ணீருடன் வினோத்துடனான அழகிய தருணங்களை நினைத்து அவள் இதழ்கள் வலி நிறைந்த புன்னகையை சுமந்து கொண்டு இருக்கும் வேளை அவள் துப்பட்டாவை பிடித்து உருவி வீசி இருந்தது ஒரு வலிய கரம்.‌.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.