அத்தியாயம்-4
விழிகள் மூடி அந்த இரவை கடத்த முயன்றவள் விழிக்களுக்குள் சட்டென காளிதாஸ் அவள் கையை முதுகோடு வளைத்து பிடித்து இருந்ததும் அவள் அவன் நெஞ்சோடு உரசி நின்றதும் நினைவில் வர உடல் சட்டென்று சிலிர்த்துப் போனது.. சட்டென்று எழுந்து அமர்ந்தாள் மீரா..
அதே சிலிர்ப்பை நேற்று காலையில் வாய்க்காலுக்குள் விழப் போன போது தன்னை இழுத்து பிடித்த கரங்கள் தீண்டிய நொடியும் உணர்ந்தாள்..
“என்ன இது இவனை நினைச்சா ஏன் உடம்பு எல்லாம் சிலிர்க்குது.. காலையில் கூட இதே பீல்.. இவன் தான் நம்மளை இழுத்து பிடிச்சு இருப்பானோ?? உருவமும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கு.. காலையில் ஹெல்ப் பண்ணிட்டு சாயங்காலம் காலை வாரி விட்டுட்டானா? என்னவோ முதலில் எனக்கு மோதிரம் வேணும் அதை வாங்கிட்டு அப்புறம் இருக்கு டா உனக்கு கச்சேரி”, சிலிர்ப்பை மறந்து சீற்றத்துடன் விடியலை நோக்கி காத்திருந்தாள் மீரா..
“யோவ் என்ன நான் பார்க்க தான் அமைதியான பொண்ணு பிரச்சனைன்னு வந்துச்சு யார் என்னன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்.. மரியாதையா என் மோதிரத்தை கொடுக்குற இல்லை கம்பி தான் எண்ண வேண்டி இருக்கும்” மீரா கையில் ஒரு குச்சியுடன் அந்த ஆட்டோ ஓட்டுனர் வீட்டினுள் நின்று கத்தி கொண்டு இருந்தாள்..
அவளுக்கு பதில் சொல்லவும் முடியாமல் விளங்குமாறுடன் தன்னை எரித்து கொண்டு நிற்கும் மனைவியை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் தலை குனிந்து நின்று இருந்தார் அந்த ஆட்டோ டிரைவர் துரை என்பவர்..
நேற்று இரவு மூக்கு முட்ட குடித்து விட்டு வந்தவருக்கு அந்த மோதிரத்தை எங்கு வைத்தார் என்று சுத்தமாக நினைவு இல்லாமல் போனது. மீரா வந்து கேட்ட பிறகு தான் அப்படி மோதிரத்தை வாங்கியதே நினைவு வந்தது.. ஆனால் எங்கு வைத்தோம் என சுத்தமாக மறந்து போனது.. அதன் பிறகு ஒரு மணி நேரமாக அந்த சிறிய ஓட்டு வீட்டை இரண்டு முறை சுற்றி வந்து பார்த்து விட்டார் அந்த இரண்டு கிராம் மோதிரம் மட்டும் கிடைத்தபாடில்லை..
மனைவியின் அனல் பார்வையில் உள்ளுக்குள் பயந்தவர் “இங்க பாரு மா அந்த மோதிரத்தை நான் வீட்டில் தான் பத்திரமா வச்சேன்.. இப்போ காணோம். என் பொண்டாட்டி மேல சத்தியமா நான் அதை எதுவுமே பண்ணல மா.. இங்க தான் இருக்கும்..” பேசி முடிப்பதற்குள் அவர் முகத்திலேயே வந்து விழுந்தது விளக்குமாறு..
பதறி இரண்டு அடி நகர்ந்தார் அந்த ஆட்டோ ட்ரைவர்..
“ஏன் யா பண்ணுற பாவத்தை எல்லாம் நீ பண்ணிட்டு என் மேல வேற சத்தியம் பண்ணுறியா?” முந்தியை உதறி இடுப்பில் சொருகி கொண்டு வந்தார் அவரின் மனைவி
“இல்லை ருக்கு அந்த லைட் உடைஞ்சது இந்த பொண்ணால் தான்னு காளிதாஸ் தான் அந்த மோதிரத்தை வாங்கி கொடுத்தான்.. நான் பத்திரமா தான் வச்சேன் காணோம்…”
“அவனே ஒரு ரவுடி அவன் பேச்சை கேட்டு இந்த பொண்ணு மோதிரத்தை வாங்கிட்டு வந்து தொலைச்சுட்டு நிற்குற.. இவுங்க ஈஸ்வரன் ஐயா வீட்டு பொண்ணு ஒரு வார்த்தை சொன்னால் உன்னை உரிச்சு தொங்க விட்ருவாரு தெரியும்ல.. அந்த பொண்ணு தான் நாளைக்கு பணம் வாங்கிகோன்னு சொல்லுச்சுல்ல வீடு வரைக்கும் போய் பணத்தை வாங்கிட்டு வந்து இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்குமா?? இப்ப தங்கம் விற்குற விலைக்கு அந்த மோதிரத்தை எப்படி திருப்பி தர போற”, மனைவி ஒரு பக்கம் கணவரை வறுத்தெடுக்க அவருக்கோ விழி பிதுங்கி போனது..
“அம்மா சாயங்காலத்துக்குள்ள அந்த மோதிரத்தை திருப்பி கொடுத்துடுறேன்.. இப்போ போ மா” என்று துரை கெஞ்சினார்.
“வீட்டில் தான் கிடக்கும்ங்க அவர் எப்படியாவது கொண்டு வந்து கொடுத்துடுவாரு’ என்று அவர் மனைவியும் அவருக்காக பேசினார்.. ஆயிரம் இருந்தாலும் கணவன் ஆயிற்றே எப்படி விட்டு தர முடியும் அதனால் துரையின் மனைவியும் அவருக்காக பேசினார்.
“சரி ஈவ்னிங் என் மோதிரம் வரல நிச்சயமா பெரியப்பா கிட்ட சொல்லிடுவேன். அப்புறம் உங்க நிலைமை ரொம்ப மோசமாகிடும் பாத்துக்கோங்க” அவர் மனைவிக்காக பாவம் பார்த்து விட்டு சென்றாள் மீரா..
சிறு பெண்ணாக இருக்கிறாள் அந்த மோதிரத்தை நாமே அமுக்கி விடலாம் என்று தான் நினைத்திருந்தார் துரை அந்த ஓட்டுனர். எந்த கஷ்டமும் இல்லாமல் தங்க மோதிரம் கிடைத்ததில் மனம் அதீத சந்தோஷத்துடன் இருக்கவே மூக்கு மூட்ட குடித்து விட்டு கண்மண் தெரியாமல் சாலையில் விழுந்து எழுந்து வந்ததில் சட்டையில் பொத்தி வைத்திருந்த மோதிரம் எங்கு கால் முளைத்து சென்றது என்று எவ்வளவு யோசித்தும் தெரியவில்லை..
ஒன்று மோதிரத்தை கொடுக்க வேண்டும் அல்லது அதற்கான பணத்தை கொடுத்தே ஆக வேண்டும் இல்லை என்றால் மீரா நிச்சயம் வீட்டில் சொல்லிவிடுவாள் என்ற உறுதியை அவள் கண்களில் பார்த்துவிட்டார்.. அவளை சிறு பெண் என்று நினைத்தது மாபெரும் தவறு என்பதையும் உணர்ந்துவிட்டார்.. பேராசை பட்டு இருப்பதையும் இழந்து விடுவோமோ என்று பயத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போய் நின்று இருந்தார் அவர்..
அதே நேரத்தில் முடியவே முடியாது ஆயா உன் கிட்ட நான் பல தடவை சொல்லிட்டேன் இந்த கல்யாணத்தை பற்றி எல்லாம் பேச்சே எடுக்காதேன்னு ஆனால் நீ தினமும் அதை பத்தி பேசாமல் இருக்குறதே இல்லை.. இனி மறுபடியும் இதை பத்தி பேசின வீட்டுக்கே வர மாட்டேன் பாத்துக்க”, கத்தி விட்டு கோவமாக வெளியேறி இருந்தான் காளிதாஸ்..
வாசல் படியில் நின்றபடி வாடிய முகத்துடன் பைக்கை கிளப்பிக் கொண்டு செல்லும் பேரனையே கவலையுடன் பார்த்து கொண்டு நின்றார் எழுபது வயதுகளில் இருந்த காளிதாஸின் பாட்டி சிவகாமி..
நாலா பக்கமும் வேயப்பட்டு இருந்த முள்வேலிக்கு இடையில் சுற்றிலும் வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்ட சிறிய ஓட்டு வீடு அதன் வெளிப்புறத்தில் சிறிய வாசல்.. நடுவே சிறிய நடைபாதை விட்டு இரண்டு மூன்று ரோஜா செடிகளும் மல்லி செடியும் முல்லைச் செடியும் ஆக மிக நேர்த்தியாக இருந்தது..
அதே வீட்டின் உட்புறத்தில் ஒரு சமையலறை ஒரு படுக்கையறை ஒரு சிறிய கூடாரம்.. அதில் பெரிதாக பொருட்கள் எல்லாம் இல்லை.. ஒரு மரக்கட்டிலும் இரண்டு மூன்று நெகிழி நாற்காலிகளும் சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த அடுக்கு தட்டும் அதன் மீது இரண்டு சாமி படங்களும் மட்டுமே அந்த கூடாரத்தை நிறைத்திருந்தது.. பார்க்க சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாக இருந்தது காளிதாஸின் பாட்டி சிவகாமியின் கைவண்ணத்தில்..
காளிதாஸின் அம்மா அப்பா அவனின் சிறு வயதில் ஒரு விபத்தில் தவறி விட அதன் பிறகு தாய் வழி சொந்தமான பாட்டியின் வீட்டில் தான் வளர்ந்து வருகிறான்.. தாத்தாவும் பத்து வருடங்களுக்கு முன்பே தவறி இருக்க அவனும் பாட்டியும் தான் இந்த சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்..
தன் சக்திக்கு மீறி உழைத்து அவனை படிக்க வைத்திருந்தார் சிவகாமி.. ஆனால் அவனோ படித்து முடித்து இதுவரை வேலைக்கு சென்றது போல தெரியவில்லை.. ஐந்து ஏக்கர் நிலத்தையும் அவன் தான் பார்த்துக் கொள்கிறான் நல்ல வருமானம் இல்லை என்றாலும் வாழ்வாதாரத்துக்கு எந்த குறையும் இல்லை..
சிவகாமியும் பேரன் படித்து முடித்து வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிப்பான் என்று தான் கனவு கண்டிருந்தாள்.. ஆனால் அவன் அதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் இதே ஊரில் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறான்.. என்ன சுற்றினாலும் தோட்டத்து வேலைகளை எல்லாம் சரியாக பார்த்து விடுவான்.. அதுவரை சிவகாமிக்கு நிம்மதி.
அவன் பொறுப்பாக அனைத்தையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யவில்லை என்றாலும் இருப்பதை கைவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறான்.. தோட்டம் இருக்கிறது தனக்கு பிறகு அதை வைத்து பிழைத்து கொள்வான் என்ற நம்பிக்கை இருந்ததால் அவன் விருப்பப்படி இருக்கட்டும் அவனை எதற்காகவும் வற்புறுத்தக் கூடாது என்று சிவகாமியும் அவன் வேலைக்கு செல்லவில்லை என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை.
அவருக்கு அவனிடம் அதிகம் பயமுறுத்த கூடிய விஷயம் அவனது கோபம் தான்.. கோபம் வந்துவிட்டால் அவன் வாய் பேசுவதை விட கை தான் அதிகம் பேசும்.. யார் என்றெல்லாம் பார்க்க மாட்டான் அவன் பார்வையில் தவறாக பட்டால் அடி உதை தான். பொறுமை என்பது கடுகளவும் கிடையாது.. அதனாலயே இந்த ஊரில் அவனை யாருக்கும் பிடிப்பதில்லை..
“காளிதாஸா அவன் சரியான ரவுடி, பொறுக்கி, பொறுப்பில்லாதவன். அப்பா அம்மா இருந்து வளர்த்தி இருந்தால் இப்படி உதறித்தனமா சுத்தாமல் பொறுப்பா வேலைக்கு போய் இருப்பான்ல” என்றெல்லாம் ஊரார் பேச கேட்கையில் சிவகாமிக்கு மனம் சுருக்கென்று வலிக்கும்..
“காளி எல்லாரும் உன்னை பத்தி என் காது படவே தப்பு தப்பா பேசறாங்க பா.. கோபத்தை குறைச்சுக்க கூடாதா? நீ பேசாம தோட்டத்தை மட்டும் பார்த்துட்டு அமைதியா வீட்ல இரு.. மத்தவங்க எப்படி போனால் உனக்கு என்ன” என்று சிவகாமி எவ்வளவு சொன்னாலும் அவன் காதில் போட்டுக் கொள்ள மாட்டான்.. அவன் விருப்பம் என்னவோ அதை தான் செய்வான்..
சரி நாம் சொன்னால் தான் கேட்பதில்லை அவனுக்கென ஒருத்தி வந்தால் அவள் பேச்சை கேட்டு பொறுமையாக குடும்ப பொறுப்பை உணர்ந்து அமைதியாக வாழ்வானோ என அவனுக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்தார்.. ஆனால் அவன் கோவம் பற்றி ஊரார் அவனுக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்..
அவர் வயதுக்கும் மீறி போராடி பக்கத்து ஊரில் நல்ல பெண்ணாக பார்த்து இருந்தார்.. ஆனால் அவனோ ஒரு போடாக திருமணமே வேண்டாம். மீறி தொந்தரவு செய்தால் வீட்டிற்கே வர மாட்டேன் என முடிவுடன் சொல்லி சென்று விட்டான்..
பேரனை பற்றிய கவலையிலேயே அப்படியே அமர்ந்து விட்டார் சிவகாமி..
“ச்சை இனி மறுபடியும் அந்த மோதிரம் எனக்கு திரும்ப கிடைக்காதோ. அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்தாரு” கவலையுடன் வீட்டுக்கு செல்லும் மண் சாலை வழியே சோர்ந்து போய் நடந்து வந்து கொண்டிருந்தாள் மீரா..
அதே சாலையில் அவளுக்கு நேர் எதிரே ஒரு ஓரமாக வண்டியில் ஏதோ பிரச்சனை என்று கீழே அமர்ந்து வண்டியை பார்த்து கொண்டு இருந்த காளிதாஸ் அதை சரி செய்து விட்டு எழுந்து பைக்கில் அமர போனவன் கண்களில் ஏதோ பட கீழே குனிந்து பார்த்தான்..
அந்த மண் சாலையில் மின்னும் வெள்ளைக்கல் பதித்த தங்க மோதிரம் ஒன்று..
“இது அவளோடது தானே” என்ற ஒரு நொடியில் கண்டு கொண்டவன் குனிந்து மோதிரத்தை எடுத்து அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்க “ச்சை இவ்வளவு கேவலமானவனா நீ” என்ற மீரா பேச்சில் பார்வை மோதிரத்தை விடுத்து தனக்கு நேருக்கு நேராக நின்று தன்னை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்து கொண்டு இருப்பவள் மீது அழுதமாக பதித்தது..
No comments yet.