“நா.. நான் உன்கிட்ட என்னக்கா மறைக்க போறேன்” லேசான தடுமாற்றம் இருந்த போதிலும் சமாளித்து பேசினாள் மீரா..
“எனக்கு மனசு ஏதோ நெருடலாக இருக்கு.. உனக்குள்ள ஏதோ மன அழுத்தம் இருக்கிற மாதிரியே தோணுது.. எதுவா இருந்தாலும் அக்கா கிட்ட மனசு விட்டு சொல்லு” விசித்ரா மீராவின் இரண்டு கைகளையும் தனது கைக்குள் வைத்து பொத்திக் கொண்டாள்..
விசித்ரா அப்படி கேட்டதும் மீராவுக்கு இப்போது வெடித்து அழுது விடுவோமோ என்ற பயம் வந்து ஒட்டி கொண்டது..
வேகமாக எழுந்து நின்றவள் கையை பிசைந்தபடி “எ.. எனக்கு இந்த கவலையும் இல்லை அக்கா, நீ பாக்குற இல்ல நான் சிரிச்சிட்ட சந்தோசமா தான் இருக்கேன்”, வலுக்கட்டாயமாக சிரித்தாள்..
“அந்த சிரிப்பு நிஜம்னு எனக்கு தோணல.. உன்னை சின்ன வயசுல இருந்து பார்க்குறேன்.. உன் முகத்தில் சின்ன சுணக்கம் இருந்தால் கூட எனக்கு தெரிஞ்சுடும். நம்ம எத்தனை வருஷம் பாக்காம இருந்தாலும் உனக்கும் எனக்கும் இருக்கிற பந்தம் மாறாது மறையாது.. ஏதோ இருக்கு.. எக்ஸாம் நல்லா பண்ணலையா? இல்ல அடுத்து வேலைக்கு போகணும் அம்மா அப்பாவை பார்த்துக்கனும்னு அந்த கவலையில இருக்கியா? இல்லை வேற ஏதாவது??” விசித்ரா விடுவதாக தெரியவில்லை
‘சொல்லிவிடு சொல்லிவிடு’ என்று துடிக்கும் மனதை பலத்த கயிற்றால் கட்டி வைத்தவள் “எனக்கு என்ன அக்கா பிரச்சனை இருக்க போகுது அந்த மாதிரி எதுவுமே இல்லை.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என்னோட ப்ராஜெக்ட் பிரான்ஸ் இன்ஸ்டிடியூட் அனுப்பி இருக்காங்க.. அது செலக்ட் ஆகிடனும்னு ஒரு சின்ன பயம் இருக்கு.. மத்தபடி நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் எதுவும் இல்லை.. நீ ரிலாக்ஸா இரு.. நானே இப்போ தான் எக்ஸாம் ப்ராஜெக்ட் வைவா அது இதுன்னு பல டென்ஷன்ல இருந்து தப்பிச்சு வந்திருக்கேன்.. நீ வேற இப்படி சோகமா முகத்தை வச்சுக்கிட்டு என்ன அப்செட் பண்ணிடுவ போல’ பேச்சை மாற்றும் வேலையில் இறங்கி இருந்தாள்..
அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.. சமாளிக்க முடியாத பட்சத்தில் பேச்சை மாற்றி தானே ஆக வேண்டும்..
“நெஜமாவே எதுவுமில்லை தானே” விசித்ரா மனம் மீராவுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்து படாத பாடுபட்டது.
ஆழமான அன்பில் இருக்கும் உறவுகளுக்குள் வார்த்தைகள் அதிகம் தேவைப்படாது.. கண்களில் ஓரம் கடுகளவு கவலை தெரிந்தாலும் கூட எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
விசித்ராவின் தோள்களை பற்றிய மீரா “எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. உண்மையை சொல்லப்போனால் இங்க வந்ததுக்கு அப்புறம் மைண்ட் நல்லாவே ரிலாக்ஸ் ஆகி இருக்கு.க்ஷ நீ எப்படி கவலைப்படுறதை பார்த்தால் எனக்கு கஷ்டமாக இருக்கு அக்கா” முகம் வாடி போனது அவளுக்கு.
“சரி சரி நான் இனிமேல் அப்படி கேக்கல.. நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான். நீ வேணா என் சைக்கிள் எடுத்துட்டு ஒரு ரவுண்ட் போய்ட்டு வா. அதுக்குள்ள உனக்கு புடிச்ச பால் பணியாரம் செஞ்சு வைக்கிறேன்” என்று மீரா ஒரு விதமான நிம்மதியுடன் தங்கையின் கன்னம் பிடித்து கொஞ்சியபடி பேசினாள்.
விசித்ரா முகத்தில் நிம்மதியை கண்ட பிறகு தான் மீரா மனம் அமைதி அடைந்தது. தனக்குள் இருக்கும் கஷ்டங்கள் அது தன்னோடு போகட்டும். தன்னை சார்ந்தவர்களுக்கு எந்த துன்பமும் வேண்டாம். மனதில் இருக்கும் வலிகளை முகத்தில் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் தன் மீது பாசம் கொண்ட உள்ளங்களுக்காக சிரிக்க ஆரம்பித்தாள் மீரா.
விசித்ரா தங்கைக்கு பிடித்த பால் பணியாரம் செய்ய கிளம்பி விட அக்காவிடம் இருந்து தப்பித்தாயிற்று என்ற நிம்மதியுடன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் தன்னையே ஆளப்போகும் ஒருவனை சந்திக்க போகிறோம் என்று தெரியாமல்
“ஏய் புள்ள நில்லு”
“ஒழுங்கா போயிடு உன்ற பக்கம் திரும்பி பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்லை..” அந்த தாவணி பெண் தலையில் இருக்கும் புல்கட்டை ஒரு கையிலும் கதிர் அருவாளை ஒரு கையிலும் பிடித்தபடி வேகமாக நடந்து சென்றாள்..
“ஏய் சுமதி நீ நினைக்கிற மாதிரி ஆம்பள நான் இல்லை.. நான் ரொம்ப நல்லவன் டி.. உன்னை கண்கலங்காமல் பாத்துப்பேன்..” அவள் பின்னாலே வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தியபடி அவளிடம் கெஞ்சிக் கொண்டு ஓடினான்
இளங்காளை ஒருவன்..
“ம்ம்ம்” ராகத்துடன் இழுத்தபடி திரும்பி அவனை பார்த்த சுமதி “குடிகாரன் பேச்சு விடிஞ்சா தான் போச்சு காதல்காரன் பேச்சு கண் அசைச்சாலே போச்சு.. உன்ற பாச்சா எல்லாம் என்கிட்ட பலிக்காது.. ஒழுங்கு மரியாதையா போய் சோலியை பாரு.. பின்னாடியே வந்து இம்சை பண்ணிட்டு இருந்த கையில் என்ன இருக்குன்னு தெரியுதுல்ல” கூர்மையான கதிர் அரிவாளை தூக்க காட்டஅவனும் அசராது அவளை ரசித்தபடி நின்று இருந்தான்..
“உண்மை காதல் தான்.. அவன் கண்களே பிரதிபலிக்கிறது.. ஆனால் வெண்பாவை மனம் தான் நம்ப மறுக்கிறது..
“இங்க பாரு புள்ள நீ என்ன உருட்டினாலும் மிரட்டினாலும் என் காதல் மாறாது.. என் காதல் கானல் நீர் இல்லை.. அந்த சிவன் தலையில் இருக்க கங்கை நீர் மாதிரி புனிதமானது.. உனக்கு பல்லு போனாலும் முடி நரைச்சாலும் இன்னைக்கு காதலிக்குற மாதிரி தான் அன்னைக்கும் காதலிப்பேன்.. என் உயிர் உலகம் எல்லாமே நீ மட்டும் தான்.. இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது என் காதல் உனக்கு புரியும்.. அன்னைக்கு வரைக்கும் உனக்காக நான் காத்திருப்பேன்” என்று படபடவென பேசியவனின் கண்களில் ரசனை கலந்த காதலை கண்டாளும் “திருந்தாத ஜென்மம்” என முறைத்து விட்டு சென்று இருந்தாள் அவள்..
மிதிவண்டியில் இரு பக்கமும் கால்களை ஊன்றி நின்று இருந்த மீரா இவர்கள் இருவரின் அழகாக உரையாடலை ரசித்துக் கொண்டிருந்தவள் உள்ளம் கடைசியாக அந்த ஆண்மகன் பேசிய வரிகளில் கலங்கி போக நினைவுகள் அவளை எங்கோ இழுத்து செல்ல உதடுகள் “வினோ” என துடிக்க இதயத்தில் சுருக்கென்ற வலி.. நெஞ்சோடு உரசி கொண்டிருந்த துப்பட்டாவை இறுக்கி பிடித்தவள் கண்களிலிருந்து கண்ணீரை அருவியாக கொட்டியது..
“மீரா ஐ லவ் யூ.. இதை நான் சும்மா டைம் பாஸ்க்காக எல்லாம் சொல்லை.. சீரியஸ்லி ஐயம் இன் லவ் வித் யூ..” கல்லூரி வளாகத்தின் நடுவே அத்தனை மாணவர்களுக்கு மத்தியில் தரையில் முட்டி போட்டு ஒற்றை ரோஜாவை அவள் முன்பு நீட்டி வசீகர புன்னகையுடன் அவளையே பார்த்திருந்த வினோத் முகம் இன்றும் அவள் கண்களில் இருந்து மறையவில்லை..
நினைவு தெரிந்த நாளிலிருந்து காதலர் தினம் என்ற ஒன்றை சாதாரணமாக கடந்து கொண்டு இருந்தவளுக்கு கல்லூரியின் முதல் வருடத்தில் வந்த அந்த காதலர் தினம் வாழ்நாள் முழுக்க மனதில் நிலைத்து நிற்கும் தினமாக மாறும் என்று அவள் கனவிலும் கூட நினைத்து பார்த்ததில்லை..
வினோத்… மீராவின் காதலனாக கை பிடித்து கணவனாக அவள் மனதில் வாழ்ந்தவன்.. வாழ்ந்து கொண்டு இருப்பவன்.. அவளின் சீனியர்… அவள் யூஜி முதல் வருடம் சேர்ந்ததிலிருந்து அவளை துரத்தி துரத்தி காதலித்து அவள் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.. அவள் போகும் இடமெல்லாம் அவனும் வந்து நிற்பானே.. இன்றும் எங்கு பார்த்தாலும் அவன் முகம் தான் கண்களுக்கு தெரிகிறது..
இதோ சற்று முன்பு கண்ட காட்சிகள் எல்லாம் அவள் வாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது..
அன்று ஒரு நாள் லேப்க்கு செல்லும் வழியில் அவளை வழிமறித்து பிடித்திருந்தான் வினோத்..
“மீரா என் இதயம் கூட தினமும் உன் பெயரை சொல்லி தான் துடிக்குது.. நீ என்னை சினிமா தனமா டயலாக் பேசறதா நினைச்சாலும் பரவால்ல எனக்கு எந்நேரமும் உன் நினைப்பா தான் இருக்கு.. உன்னை பார்க்கலைன்னா அந்த நாளே ஓட மாட்டேங்குது.. என் உயிர் முழுக்க நீ மட்டும் தான் நிறைஞ்சிருக்க.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இங்க பாரு…” என அவனின் யூஜி கடைசி வருடத்தின் முதல் செமஸ்டர் ரிசல்ட்டை தனது போனில் அவளிடம் காட்டினான்..
மீரா விழிகள் ஆச்சரியத்தில் மூழ்கி வெளிவந்தது.. அனைத்து பாடப்பிரிவுகளிலும் 95க்கு மேல் அல்லவா வாங்கி இருந்தான்..
அவள் விழிகளில் தெரியும் ஆச்சர்யத்தை குறித்து கொண்டவன் லேசான புன்னகையுடன் “இதெல்லாம் உனக்காக தான்” உயிர் உருக சொன்னவனை கண்டு மீண்டும் ஆச்சர்யம் அவள் விழிகளில்..
‘மேஜிக்கல் ஐஸ்’ அவன் முணுமுணுப்பாக வசீகரப் புன்னகையுடன் சொன்னது இன்று நினைத்தாலும் தித்திக்கிறது..
இடைவெளி விட்டு நின்று இருந்தவன் ஒரு அடி முன் வந்து நின்று அவள் விழிகளை நேருக்கு நேராக பார்த்தவன் “மீரா எனோ தானோன்னு காலேஜ் வந்துட்டு இருந்தவன் இப்ப எல்லாம் ரொம்ப ஆசைப்பட்டு காலேஜ் வரேன்.. ஒரு நாள் லீவ் கூட மனசுக்கு அவ்வளவு பாரமா இருக்கு.. நல்லா படிக்கிறேன்.. நல்ல மார்க் ஸ்கோர் பண்றேன்.. எல்லாமே உனக்காக தான்..”
“நல்ல வேலைக்கு போய் உன்னை நல்லபடியா பாத்துக்கணும்.. உனக்கு வேணுங்கிறதை எல்லாம் நீ கேட்காமலே பண்ணனும்.. அது எவ்வளவு பெரிய தொகையா இருந்தாலும் உனக்காக யோசிக்காமல் செலவு பண்ணனும்.. அந்த அளவுக்கு என் தகுதியான உயர்த்திக்கனும்.. அதுக்காக தான் நல்லா படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்” என்றதில் ஒரு வருடமாக இரும்பாக இருந்த இதயம் லேசாக உருக துடித்தது..
“வேண்டாம்” என்று மூளை எச்சரித்ததை சரியாக கவனித்தவள் உள்ளுக்குள் தோன்றிய சில்லென்ற உணர்வை மறைத்து கொண்டு ஓடி இருந்தாள்..
“ஐ லவ் யூ மீரா” அவள் பதிலே சொல்லாமல் விலகிச் சென்றாலும் அவன் வசிகர புன்னகையுடன் ஒவ்வொரு காதலுடன் வந்து நின்றான்…
‘எனக்காக தான் எல்லாம்னு சொன்னிங்களே.. ஆனா இன்னைக்கு நீங்களே எனக்கு இல்லாமல் போயிட்டீங்களே.. எனக்கு இப்பவே நீங்க வேணும்.. என்னால நீங்க இல்லாம இருக்கவே முடியல.. வாழ்க்கையே வெறுத்து போன மாதிரி இருக்கு.. ஐ மிஸ் யூ சோ மச் வினோ’ அந்த ஆளில்லா சாலையில் அவள் மட்டுமே குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்..
வெகு நேரம் அழுது தீர்த்தவளுக்கு மன பாரம் மட்டும் குறையவே இல்லை.. நொடிக்கு ஆயிரம் தடவை ‘வினோ வினோ’ என அவள் இதயம் துடித்தது..
அன்று என் இதயம் கூட உன் பெயரை தான் சொல்கிறது.. அன்று அவன் சொன்னது அனைத்தும் அவளுள் நடந்து கொண்டு இருந்தது..
இருட்டு கட்டுவது போல இருக்க எப்படியும் அக்கா தேடி வந்து விடுவாள் என்று யோசித்தவள் வினோத் நினைவிலேயே சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தவளுக்கு எதிரில் வண்டி வருவது கூட கவனம் இல்லாமல் போனது.
“ஏய்.. ஏய்.. ஏய்…” எதிரில் வந்தவன் உயிர் போக கத்தி பார்த்தான்.. அவள் சுயநினைவு இல்லாமல் மிதிவண்டியை ஓட்டி வர அவனே தனதுஇருசக்கர வாகனம் அவள் மேல் மோதி விடாமல் வளைத்து திருப்பியவன் அவளைத் தாண்டி சென்று எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது மோதி “அம்மாஆ” என்ற அலறலுடன் பைக் கால் மேல் விழ தரையில் சரிந்தான்..
“ஏன் பா நீ வந்து சாக என ஆட்டோ தான் கிடைச்சுதா?.. மேல ஆட்டோல எத்தனை பேர் நிக்கிறாங்கன்னு பார்த்தல்ல எல்லாம் வேலைக்கு போயிட்டு வந்தவங்க.. எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போக வேண்டாமா? அவங்க யாருக்காவது ஏதாவது இருந்தால் நான் என்ன பதில் சொல்லுவேன்.. ஐயோ வண்டியோட ஹெட் லைட் வேற உடைச்சிட்டியா? மரியாதையா பணம் கொடுத்துட்டு தான் இந்த இடத்தை விட்டு நகருர..” ஆட்டோ டிரைவர் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அவனோ பல்லை கடித்தபடி நடந்து கொண்டிருப்பது கூட தெரியாமல் மிதிவண்டியில் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்த மீராவையே பார்த்துக் கொண்டிருந்தான்..
அவள் வேண்டும் என்றே இப்படி செய்ததாக தான் அவனுக்கு தோன்றியது.. அது எப்படி அவ்வளவு பெரிய உருவம் சாலையில் வருவது தெரியாமல் போகும் என்று யோசித்தான்.
வேகமாக பைக்கை நகர்த்தி விட்டு எழுந்தவன் அடிபட்ட காலின் வலியை பொறுத்துக் கொண்டு சற்று வேகமாகவே அவளுக்கு முன்வந்து ஹேண்டில் பாரை பிடித்தான்..
அவளோ சுதாரித்து இறங்கி நின்றவள் அவனை ஏற இறங்க பார்க்க எதிரே கடும் கோவமாக அவளை முறைத்து கொண்டு இருந்தான் காளிதாஸ்.. நம் கதையின் நாயகன்.
No comments yet.