Episode 1

Valanchuli Tamil | 23 May 2026 | Share

சொல்லாயோ சோலைக்கிளியே!! – எழுதியவர் பிறை நிலா ‘இந்து’

அத்தியாயம் 1

நேர்த்தியாக போடப்பட்டிருந்த அந்த ஒற்றை வழி தார் சாலையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்தப் பயணிகள் ஆட்டோ.. அதில் தாய் தந்தை மகளுமாக மூவர் அமர்ந்து இருந்தனர்..

மஞ்சளும் காவியுமாக பூத்து குலுங்கி வண்ணத்துப்பூச்சிகளுடன் கதை பேசி கொண்டு இருக்கும் பந்து பூவின் வாசம் கலந்து முகத்தை வருடிச் செல்லும் தென்றல் காற்றினை உள்வாங்கிய படி மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு என்பதே கிடையாது.. முகம் முழுக்க சோக ரேகைகள் படர்ந்து முகம் இறுகிப் போய் இருந்தது..

ஆள் தான் இங்கே அவள் நினைவெல்லாம் வேறு எங்கோ நிலைத்திருந்தது அந்த ஐந்து அடி அழகிக்கு..

மஞ்சள் நிறத்தில் சிவப்பு வண்ண ரோஜாக்களை அள்ளித் தூவி இருந்த சல்வாரிற்கு ஏற்ற மஞ்சளும் சிவப்பும் கலந்த துப்பட்டாவை ஒரு பக்கம் சரிய விட்டபடி போட்டு இருந்தாள்.. காற்றில் அலைபாயும் அவளின் சில்கி முடிகள் வேறு அந்த மஞ்சள் நிலவின் நெற்றி, கண்கள், கன்னம் என தொட்டு தொட்டு விளையாடி கொண்டு இருந்தது.. இயற்கையிலேயே சிவந்த அதரங்கள் மலர மறுத்து சிரிப்பை இறுக்க பூட்டி கொண்டது ஏனோ தெரியவில்லை?

“அடடா என்ன ஆச்சுங்க அண்ணா” என்ற தந்தை சந்திரனின் குரலில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து வெளி வந்தவள் தாய் தந்தை பக்கம் திரும்பி பார்த்தாள்..

அவர்கள் இருவரும் அந்த ஆட்டோவில் இருந்து வெளியே இறங்கி நின்று இருக்க ஆட்டோ ஓட்டுநரும் வெளியே நின்று இருந்தார்.. அப்பொழுது தான் சென்று கொண்டிருந்த ஆட்டோ நின்று சில நிமிடங்கள் ஆனதையே உணர்ந்தாள் அவள்..

‘என்ன ஆச்சு? ஏன் இங்க நிற்குறாங்க?’ புருவங்கள் சுருக்கி யோசித்தவள் வெளியே இறங்கி நின்றவள் “என்னாச்சு மா?” என்று தன் தாய் ஆனந்தியிடம் கேட்டாள்..

“ஆட்டோவில் ஏதோ பிரச்சனையாமா.. பார்த்துட்டு இருக்காரு..‌ நீ இப்படி ஓரமா நில்லு” தன்‌ மகளை சாலை ஓரம் நிற்க வைத்தார் ஆனந்தி..

“ம்ம்ம்”, பெருமூச்சுடன் நகர்ந்து வந்து கைகளை கட்டி கொண்டு நின்றவள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பூத்து குலுங்கி மணம் பரப்பி மனதை கவர்ந்து கொண்டு இருக்கும் பூக்களை வேடிக்கை பார்க்க தொடங்கினாள் மீரா.

பூக்களை வெறித்து பார்த்து கொண்டு நின்று இருந்தவளின் முகத்தில் சட்டென பூத்தது கசப்பான ஒரு புன்னகை… ‘சில மாதங்களுக்கு முன்பு உன்னை போல தானே நானும் சிறகடித்து பறந்து திரிந்தேன்.. ஆனால் இன்று?’ என்ற விரக்தியான எண்ணம் பந்து பூக்களில் தேனை உறிஞ்சி துள்ளலுடன் பறந்து திரியும் பட்டாம்பூச்சியை பார்த்து வந்தது..

“அட ஏன் பா பார்த்து போக மாட்டிங்களா?” மீண்டும் தந்தையின் குரலில் திரும்பிய மீராவை ஒருவன் இடித்து விட்டு ஓடியதில் நொடி பொழுதில் சுழன்று வாய்க்காலுக்குள் விழ போனவளின் கையை எட்டி பிடித்தது ஒரு வலிய கரம்.. அத்தனை இறுக்கம் அந்த கரத்தினில்.. அவள் உடல் ரோமங்கள் சிலிர்த்து அடங்கியது 

குனிந்த மேனிக்கு நெஞ்சில் கை வைத்து இருந்தவள் அந்த சிலிர்ப்பை எல்லாம் உணரும் நிலையில் இல்லை.. அவள் நிமிரும் முன்பு அவளின் கையை விட்டவன் வேகமாக ஓட்டம் எடுக்க அவன் கையில் அணிந்து இருந்த ப்ரேஸ்லெட்டுடன் சிக்கிய காற்றில் பறந்து கொண்டிருந்த அவள் துப்பட்டாவும் அவனோடு பறந்து இருந்தது..

“ஹேய் என் துப்பட்டா” என நெஞ்சுக்கு குறுக்காக கை வைத்தபடி கத்தினாள் அவள்..

அவனோ நிற்காமல் ஒருவனை துரத்தி கொண்டு ஓடி இருந்தான்.. கருப்பு வண்ண சட்டையும் மடித்து கட்டிய வெள்ளை வேட்டியுமாக புயல் வேகத்தில் ஓடியவனின் முதுகை மட்டுமே காண முடிந்தது அவளால்..

“ரவுடி” என மீரா இதழ்கள் முணுமுணுத்தது..

“மீரா உனக்கு ஒன்னும் இல்லையே” என சந்திரன் பதட்டமாக அவள் அருகில் வந்தார்..

“இல்லைங்க பா”

“இந்தா இதை போட்டுக்கோ” என ஆனந்தி வேறு துப்பட்டாவை எடுத்து கொடுத்தார்..

“பொறுக்கி பசங்க ஆள் நிக்குறது கூட கண்ணு தெரியாமல் இடிச்சுட்டு போறானுங்க” என்று சந்திரன் கோவமாக சொன்னார்..

“சரி விடுங்க அவருக்கு காசு கொடுத்துட்டு வாங்க பக்கம் தானே நடந்தே போயிடலாம்” என்று ஆனந்தி துணிகள் அடங்கிய பையை எடுத்துக் கொள்ள சந்திரன் ஆட்டோக்காரருக்கு பணத்தை கொடுத்துவிட்டு “வாங்க போலாம்” என அவர் ஒரு பையை எடுத்து கொண்டு முன்னே நடந்தார்..

அவன் ஓடிய திசையை பார்த்து கொண்டு நின்று இருந்த மீரா அவன் அழுத்தி பிடித்த தன் வலது கையின் மணிக்கட்டை வருடியபடி தாய் தந்தைக்கு இடையில் நடந்தாள்..

மூவரும் திருவிழாவிற்காக மீராவின் பெரியம்மா ஊருக்கு வந்து இருந்தனர்.. மீராவின் குடும்பம் சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறது..‌ நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள் தான் என்றாலும் எந்த குறையும் இன்றி செல்லமாக வளர்க்கப்பட்டவள்.. தாய் தந்தை தான் அவள் உலகம் என்று இருந்தவள் மனம் இரண்டு வருடங்களாக கலைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டு நேசிக்கப்பட்டு இன்று வலியில் தனியே தவிக்கப்பட்டு இருக்கிறது பாவம்..

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து திரிந்தவள் இன்று பறக்க மறந்து அடங்கி கிடப்பதவன் காரணம் அவள் மட்டுமே அறிவாள்.. நாம் போக போக தெரிந்து கொள்ளவோம்..

மீரா ஐந்து அடி உயரத்தில் வட்டமான முகத்துடன் எலுமிச்சை நிறத்தில் செதுக்கி வைக்கப்பட்ட சிலை தான்.. அவளின் அழகே வளைந்த வில் புருவமும் மீன் போன்ற பெரிய கண்களும் தான்.. அவள் அழகிலும் சரி குணத்திலும் சரி தங்கம் தான்.. விளையாட்டாக கூட அடுத்தவர் மனதை காயப்படுத்தி விட கூடாது என்று பேசும் போது கூட பார்த்து பார்த்து பேசும் ரகம்.. மனதால் மென்மையானவள் குணத்தால் சிறந்தவள் ஆனால் என்ன மனதிற்கு பிடித்தவர்களிடம் குறும்புக்காரி..‌

மீரா பிஎஸ்சி ஃபேஷன் டிசைனிங் முடித்து இருக்கிறாள்.. தற்பொழுது தான் தேர்வு முடிந்து இருக்கிறது. தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறாள்.. இன்னும் சொல்லப்போனால் தற்போதைக்கு விஐபி.. 

அவளின் வாழ்நாள் கனவு, லட்சியம் ஆசை,பேராசை அனைத்துமே (fashion capital) ஃபேஷன் கேப்பிட்டல் என்று அழைக்கப்படும் பாரிஸில் (Paris) உள்ள பெரும் கம்பெனிகளில் ஒன்றில் வேலைக்கு சேர வேண்டும்.. அதனுடன் வருடத்தில் நான்கு முறை நடைபெறும் பாரிஸ் ஃபேஷன் வீக் விழாவில் (Paris Fashion Week) அவளுடைய கை வண்ணத்தில் உருவாகும் ஆடையும் பங்கு பெற வேண்டும் என்பதும் தான் அவளின் மிகப்பெரிய கனவு..

அதற்காகவே கல்லூரியின் கடைசி வருடத்தில் ஆறு மாத காலம் அயராது உழைத்து அவளது ப்ராஜக்ட்டை‌‌ திறம்பட முடித்து இருக்கிறாள்.. வைவாவில் அவளது ப்ராஜெக்ட்டை சிறப்பாக விவரித்தும் இருந்தாள்.. வருடா வருடம் கல்லூரி மூலம் மாணவர்களின் பத்து ப்ராஜெக்ட் தேர்வு செய்யபட்டு கல்லூரியுடன் டைஅப் வைத்து இருக்கும் பாரிஸ் கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.. அந்த கல்வி நிறுவனம் அதில் ஐந்தை தேர்வு செய்து மாணவர்களை களப் பயில்கைக்காக (internship) அழைத்து கொள்வார்கள்..

இந்த வருடத்தில் அந்த பத்தில் ஒன்றாக மீராவின் ப்ராஜெக்ட்டும் பாரிஸ் கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.. தனக்கு களப்பயில்கைக்கான வாய்ப்பு கிடைத்து விட வேண்டும் என்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை.. பாரிஸ் கல்வி நிறுவனத்தில் இருந்து வரும் மின்னஞ்சலுக்காக ஆவலாக காத்திருக்கும் சிட்டு மின்னஞ்சல் வருவதற்குள் என்னென்ன கற்றுக்கொள்ள போகிறதோ?

நாலா பக்கமும் சூழ்ந்திருந்த பெரிய மதில் சுவருக்கு நடுவில் பாரம்பரியத்தின் மெருகு போகாமல் கம்பீரமாக நின்றது அந்த வீடு… 

வீட்டின் பெரிய கேட் நீக்கியிருந்தது விஸ்தாரமாக வாசல், நடைபாதைக்கு இருபுறமும் கார்டன்.. அதில் பற்பல பூச்செடிகள் என கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.. வீட்டின் முன்பக்கம் ஒடுகளால் வேயப்பட்டு அதன்‌ கீழ் இடது பக்கம் இருச்சக்கர வாகனங்கள் இரண்டும் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டும் நின்று இருந்தது..

“மீரா பதினொன்றாவது படிக்கும் போது வந்தது ஐந்து வருஷம் கழிச்சு இப்போ தான் வரோம்.. வீடு இன்னும் அப்படியே இருக்குல்ல ஆனந்தி” திறந்திருந்த கேட்டினுள் நுழைந்தவாறே வீட்டை கண்களில் நிரப்பி கொண்டு மகிழ்ச்சியான முகத்துடன் சொன்னார் சந்திரன்..

“ஆமாங்க ஆனால் கார்டன் எல்லாம் இன்னும் அழகுபடுத்தி இருக்காங்க‌. இது விசித்ரா வேலையாக தான் இருக்கும்” என்ற ஆனந்தி மகளின் கை பிடித்து நடத்தபடி சிரிப்புடன் சொன்னார்..

எதிலும் நாட்டம் இல்லாமல் வெறுமையான பார்வையுடன் நடந்து வந்த மீரா முகம் சடுதியில் சிரிப்பை அள்ளி பூசி கொண்டது..

“சித்ரா அக்காஆஆ” கையில் இருந்த பேக்கை தாய் காலில் போட்டவள் பாய்ந்து ஓடி இருந்தாள் எதிர்வரும் தன் அக்கா விசித்ராவை பார்த்து‌…

“தங்கமே” கண்களில் நீர் திரள வாரி அணைத்து கொண்டாள் அக்காளானவள்..

நெற்றியில் முத்தமிட்டவள் “இப்போ தான் இங்க வர நேரம் கிடைச்சுத்தா டி உனக்கு” செல்லமாக கோபித்து கொண்டவள் மீராவின் தலையை வருடி விட்டாள்..

“இல்லை அக்கா அப்பா தான் கூட்டிட்டே வரல.. நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன்னு போன்ல தினமும் சொன்னேன் தானே” கண்ணீருடன் சொன்னவள் விசித்ரா தோளில் சாய்ந்து மூக்கை உறிஞ்சினாள்..

“ஆமாம் பட்டு… அக்காவும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன்.‌.. வா உள்ளே போலாம்” என்று அவளை தோளோடு அணைத்து கொண்டவள் “அப்பாஆஆ மீரா குட்டி வந்து இருக்காள்” என்று சத்தமிட்டு சொன்னாள்..

“ஏய் சித்தி சித்தப்பா வந்து இருக்காங்க வாங்கன்னு கேளு” என்று அதட்டலுடன் சொன்ன விசித்ராவின் தாய் கோமதி “வாங்க மச்சான் வா அக்கா” என்றபடி செம்பில் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தவர் “என் செல்லம் நல்லா இருக்கியா?” என மீராவின் கன்னம் வருடினார்..

“மீராவை பார்த்த சந்தோஷத்தில் எல்லாத்தையும் மறந்துட்டேன் சித்தி” பாசமாக ஆனந்தியை அணைத்து கொண்ட விசித்ரா “நல்லா இருக்கீங்களா சித்தப்பா?” என்று கேட்டாள் 

“நல்லா இருக்கேன் தங்கம்” என்றவர் அவளுக்கு வாங்கி வந்து இருந்த இனிப்புகளை கொடுக்க வாங்கி கொண்டவள் சித்தியிடம் பேச மீரா வீட்டை சுற்றி பார்த்து கொண்டு இருந்தவள் “பெரியப்பா” வீட்டின் உள்ளே இருந்து சிரித்த முகமாக வெளியே வந்த ஈஸ்வரனை நோக்கி துள்ளலுடன் ஓடியவர் அவரை அணைத்து கொண்டாள்..

“என்ன குட்டி மா பெரியப்பாவை மறந்தே மறந்துட்ட போல.. நான் உன்னை எவ்வளவு?… அது பெயர் என்ன… மஸ்ஸா” என்று யோசிக்க 

சிரித்த மீரா “அது மிஸ் பெரியப்பா.. நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன்” என அவரின் கன்னம் கிள்ளினாள்..

பாசமாக அவள் தலை வருடி விட்டவர் “நல்லா இருக்கியா” என கேட்டார்..

“ம்ம்ம் நல்லா இருக்கேன் பெரியப்பா.. நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஆகிட்டே போறீங்களே என்ன பெரியம்மா நல்ல கவனிப்பு போல” என்று குறும்பாக கேட்டாள்..

“சும்மா இரு மீரா குட்டி” என அவர் செல்லமாக முறைத்தார் கோமதி..

“அட நல்லா சமையலோன்னு கேட்டேன் இப்படி வெடகப்படுறீங்களே” என‌ மீரா கிண்டலாக சிரித்து கொண்டே மீண்டும் கோமதி தோளில் இடித்தாள்..

“ஏய் பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியுதா?” என ஆனந்தி அடிக்க வர மீரா விசித்ராவை இழுத்து கொண்டு உள்ளே ஓடி இருந்தாள்..

தன் தங்கை மீராவின் துணிகளை அலமாரியில் எடுத்து வைத்தபடியே மெத்தையில் கால்களை ஆட்டியபடி கொய்யாவை கொறித்து கொண்டு இருந்த மீராவை பார்த்து கொண்டு இருந்த விசித்ரா அவள் அருகில் வந்து அமர்ந்து அவளையே கூர்ந்து பார்த்தாள்..

“என்ன அக்கா அப்படி பாக்குற”, என்று தலைசாய்த்து சிரிப்புடன் கேட்டாள் மீரா..

“என் கிட்ட எதையாவது மறைக்குறியா குட்டி மா”, விசித்ரா சட்டென‌ கேட்டதில் மீரா திடுக்கிட்டு போனாள்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.