
“தித்திக்கும் தேன்பாவை”
பாகம் 1
“தித்திக்கும் தேன்பாகும் தெவிட்டாத தெள்ளமுதம் தீஞ்சுவை ஆகவில்லையே” என்று டி எம் எஸ் அவர்களின் குரலில் முருகபெருமானின் பக்தி பாடல் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்க டீக்கடையில் அதைக் கேட்டபடி டீ ஆற்றிக் கொண்டிருந்தான் அந்த கடையின் முதலாளி மற்றும் தொழிலாளியான கணேசன்.
அருகில் இருந்த பார்க்கில் சில குழந்தைகள் ஊஞ்சலிலும், சருக்கு மரத்திலும், ஸீ ஸா விலும் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை பார்த்துக் கொள்ள அவர்களுடைய தாத்தாக்களும் பாட்டிகளும் அவர்களின் பின்னே சென்று கொண்டிருந்தனர். சிலர் தாங்கி தாங்கி நடந்து கொண்டும், சிலர் வேகமாக நடந்துக் கொண்டும் சிலர் ஓடிக்கொண்டோம் இருந்தனர்.
“ஜாக்கிரதை கண்ணா”
“தம்பி பார்த்து பா”
“மெதுவா, மெதுவா டா செல்லம்”
“பட்டு இரு இரு தாத்தா தூக்கி விடறேன், நீ விழுந்திடுவ”
“இந்த ஹார்லிக்ஸ் குடிச்சிடுமா செல்லம்”
என்று பலரும் தங்களுடைய பேரன் பேத்திகளுடன் பேசிக் கொண்டு இருக்க,
அதைப் பார்த்துக்கொண்டே ரங்கநாதன் மற்றும் சிவஞானமும் வாக்கிங் செய்துக் கொண்டிருந்தனர்.
“என்னப்பா இன்னும் இரண்டு வருஷத்தில நீயும் இதே போல பேரனோ பேத்தியோ கூட ஓடுவியா”
என்றார் சிவஞானம்.
“நீ இப்பவே ஓடி இருக்கனும் , உன் பொண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பிடவே உனக்கு அந்த வேலை எல்லாம் இல்லாம போச்சு. உன் பேரனுக்கு என்ன வயசு?” என்றார் ரங்கநாதன்.
“மூணு வயசு. அங்கெல்லாம் இதுக்குள்ள ஸ்கூல்ல சேர்க்க கூடாதாம். ஆனாலும் ரெண்டு பேரும் வேலைக்கு போகவே ஏதோ ஒரு
டே-கேர்ல விட்டுட்டு போறாங்க. ஷைலஜா சொல்லுவா ஜேசன் ரொம்ப பாடா படுத்துகிறான்னு”
“ஏன் மாப்பிள்ளை எதுவும் ஹெல்ப் பண்ண மாட்டாரா?”
“ஹெல்ப் பண்ணுவாரு. ஆனாலும் அப்பா அம்மா பண்ற அளவுக்கு எதிர்பார்க்க முடியுமா?”
“அது என்னமோ சரிதான்”
“ஷைலஜா லவ் மேரேஜ் பண்ணதுல உனக்கு எதுவும் வருத்தம் இல்லையா பா?”
“ஆரம்பத்துல வருத்தம் இருந்தது தான். ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து பண்ற அப்பா அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா என்ன. அதை ஏன் ஒரு நொடி கூட பசங்க யோசிக்க மாட்றாங்கன்னு.
ஆனா நானே என்னை சமாதானப் படுத்திப்பேன், நானே பார்த்து கட்டி வச்சிருந்தா கூட இந்த அளவுக்கு ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்க முடியாது. ஏன்னா மைக்கேல் ரொம்ப நல்ல பையன்”
“சரிதான் பா, கடவுள் நம்ம பூமிக்கு வரும்போதே வாழ்க்கையில என்ன எல்லாம் நடக்கணும்னு நம்ம தலையில எழுதிட்டாருன்னு சொல்லுவாங்க. அதை யாரு நினைச்சாலும் மாத்த முடியாது. விதிப்படி தான் நடக்கும். அப்படித்தான் ஷைலஜா ஓட கல்யாணமும்”
“அது என்னமோ சரிதான்”
“சரி வாப்பா, கணேசன் கடையில ஒரு கிளாஸ் டீ குடிச்சிட்டு வரலாம்”
“குடிச்சிட்டு மறுபடியும் வந்து நடக்கலாம்னு சொல்றியா?”
“பார்கலாம், முடிஞ்சா நடக்கலாம் இல்லனா அப்படியே வீட்டுக்கு போகலாம் “
“அதான பார்த்தேன், என்னடா இது மறுபடியும் வந்து நடக்கலாம்னு அதிசயமா சொல்றீயேன்னு”
என்று சொல்லி சிரித்தார் சிவஞானம்.
“சரிப்பா சரிப்பா வாப்பா” என்று சொல்லி அவரை இழுத்து செல்லாத குறையாக அழைத்துச் சென்றார் ரங்கநாதன்.
இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர்.
“கணேசா ஒரு டீ போடுப்பா” என்று சொல்லி பெஞ்சில் அமர்ந்தார் ரங்கநாதன்.
58 வயதிலேயே வாலண்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கிய ரயில்வே ஆபிஸர் ரங்கநாதன்.
ரங்கநாதனின் நண்பன் மற்றும் எதிர் வீட்டுக்காரர் தான் சிவஞானம். ரங்கநாதன் உடன் ஒன்றாக சிவஞானம் வேலை செய்தார். 60 வயது ஆகிவிட சிவஞானம் ரிட்டையர் ஆனார். ஆனால் ரங்கநாதனோ பைபாஸ் ஹார்ட் சர்ஜரி ஆகி ஆறு மாதத்திற்கு பின்னர் வாலண்டரி ரிட்டயர்மென்ட் வாங்கிக் கொண்டார்.
“சரிங்க சார்” என்று சொன்ன டீக்கடை கணேஷ் சர்க்கரை இல்லாமல் ஏலக்காய் மற்றும் இஞ்சி தட்டி போட்டு சுட சுட டீயை கிளாசில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து ரங்கநாதனிடம் நீட்டினான்.
“கணேசா சர்க்கரை போடல இல்ல இவருக்கு”
என்றார் சிவஞானம்.
“சார் உங்களை விட அவரை எனக்கு நல்லா தெரியும், அவருக்கு எது எது எவ்வளவு தேவையோ அவ்வளவு போட்டு இருக்கேன். சக்கரை தான் அவரு உடம்புல நிறைய இருக்கே அதனால நான் அதை போடல”
“பத்தியாப்பா ஞானம், கணேசனுக்கு கூட என்னை பாத்தா கிண்டலா இருக்குது ” என்றார் ரங்கநாதன் சிவஞானத்தை பார்த்து.
“ஐயோ சார் நான் என்னைக்காவது உங்கள கிண்டல் பண்ணி இருக்கேன்னா? சிவஞானம் சார் உங்களை கிண்டல் பண்ணா கூட நான் தானே உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன் ” என்றான் கணேசன்.
” அப்போ இப்ப நீ சொன்னதை என்னன்னு எடுத்துக்கணும் நாங்க” என்று மேலும் கிளறினார் சிவஞானம்.
” அதானே ” என்றார் ரங்கநாதன்.
” ஐயோ நண்பர்கள் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து என்னை கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா?, எனக்கு வேலை இருக்கு நான் போய் என் வேலையை பார்க்கிறேன் ”
” பார்த்தியா ரங்கா, நம்ம ரெண்டு பேரும் ரிட்டயர் ஆயிட்டு வேலை வெட்டி இல்லாம இருக்கோம்னு சொல்லாம சொல்றான் “
” ஐயோ சிவஞானம் சார், இன்னைக்கு நான் போதும் வேற யாராவது மாட்டுவாங்க. அவங்கள பிடிச்சுக்கோங்க என்னை விடுங்க ” என்று கணேஷ் சிரித்துக் கொண்டே சொல்ல
” சரி சரி வா பா நம்ம வீட்டுக்கு போகலாம் ” என்றார் ரங்கநாதன்.
” என்னப்பா இன்னும் ஒரு ரெண்டு ரவுண்டு வாக்கிங் போக வேண்டாமா? “
” இல்ல ஞானம், இன்னைக்கு என்னமோ போல இருக்குது வீட்டுக்கு போகலாம் வா “
” இது ஒரு சாக்கா? இல்ல உண்மையிலேயே முடியலையா? “
“உண்மையிலேயே தான் பா சொல்றேன்”
“என்னாச்சுப்பா, டாக்டர் கிட்ட போலாமா? எப்போ அடுத்த செக்கப்?”
” அதெல்லாம் அடுத்த மாசம் தான் பா, ஒன்னும் இல்ல எனக்கு, வீட்டுக்கு போகலாம் வா, எக்கச்சக்க வேலை இருக்குது. பையனுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் என்றால் சும்மாவா? “
” உன்னோட உடம்பையும் கொஞ்சம் பாருப்பா “
” அதெல்லாம் நல்லா தான்பா இருக்கேன் “
“சரி வா, மெதுவாகவே நடந்து போகலாம் “
” சார் நீங்க என்னைக்குமே டீ காஃபி குடிக்கவே மாட்டேங்கறீங்க என் கடையில” என்ற வருத்தமாக சொன்னால் கணேசன் சிவஞானத்தை பார்த்து.
” ஆமாம் பா, நீ ஒரு தடவை கணேசனோட டீயை குடிச்சு பாருப்பா. என்ன டேஸ்ட் தெரியுமா? பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுற வரைக்கும் அந்த டீயோட சுவையின் நுனி நாக்குல இருக்கும்னா பார்த்துக்கொள் எப்படி இருக்கும்னு? “
” இல்ல கணேசா, இன்னொரு நாள் குடிக்கிறேன்”
” இதையே தான் சொல்றீங்க ஆனா ஒரு நாளும் குடிக்கிறது கிடையாது “
” கணேசன் தான் ரொம்ப ஃபீல் பண்றானே ஒரு கிளாஸ் குடியேன் பா”
” இல்ல இல்ல பா, எனக்கு என்னவோ என் பொண்டாட்டி கையால காஃபி குடிச்சா தான் நல்லா இருக்கு” என்று மெதுவாக ரங்கநாதன் காதில் மட்டும் கேட்கும்படி பேசினார் சிவஞானம்.
” அப்புறம் வரேன் கணேசா” என்று சத்தமாக கணேசனின் காதில் விழும் படி சொல்லிவிட்டு தன் நண்பனுடன் நடந்து சென்றார் சிவஞானம்.
” ஒரு நாள் இல்லனா ஒரு நாள் என் கடையில நீங்க கண்டிப்பா குடிப்பீங்க சார்” என்று சற்று தூரம் நடந்து சென்றவர்களின் காதல் கேட்கும் படி சத்தமாக சொன்னான் கணேசன்.
” சரிடா சரி கண்டிப்பா குடிக்கிறேன் “
என்று சொல்லி சிரித்துக் கொண்டே நடந்தார் சிவஞானம்.
“ஆமாம், காஃபின்னா சிவகாமியை விட நல்லா போடுறவங்க யாரும் இல்லை “
என்றார் ரங்கநாதன்.
“அச்சச்சோ, இதை அப்படியே உன் ஒயிஃப் கௌசல்யா கிட்ட சொல்லிடாத கோவிச்சுக்க போறாங்க”
” அதெல்லாம் கோச்சுக்க மாட்டா, நிறைய முறை அவ கிட்ட சொல்லி இருக்கேன். அவளே சொல்லுவா சிவகாமி அண்ணி காஃபி தான் சூப்பர்னு. நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும் அந்த மாதிரி போட முடியலன்னு சொல்லுவா”
“அப்படியா, இதை நான் சிவகாமி கிட்ட சொன்னா போதும். பாருங்க எல்லாரும் என்னோட காஃபியை புகழறாங்க. நீங்க என்னைக்காவது சொல்லி இருக்கீங்களான்னு என்கிட்ட சண்டை போட ஆரம்பிச்சிடுவா”
” ஏன் ஞானம் இதுவரைக்கும் நீ சிவகாமி கிட்ட சொன்னது
இல்லையா? “
” அப்படி இல்ல, இன்னொரு முறை கேட்கிறேன் என்றால் நல்லா இருக்குன்னு தானே அர்த்தம். அவளுக்கே தெரியும் அவளோட காஃபி தான் எனக்கு பிடிக்கும் அதை வேற சொல்லனுமா என்ன? ” என்றார் சிவஞானம்.
தொடரும்…
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.