காதல் சுவாசமே
மன்னர்கள் காலம்.
வீரநல்லூர் சமஸ்தானம்
1603 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 30 ஆம் நாள்.
மங்கள வாத்தியம் முழங்க அரசன் அருண்மொழிவர்மன் வானதியின் கழுத்தில் தாலி கட்டினான்.
அருண்மொழிவர்மனின் தந்தையை எதிரிகள் கொன்று விட்டனர். அதனால் இளம் வயதிலேயே அந்த சாம்ராஜ்யத்துக்கு அரசனான் அருண்மொழிவர்மன்.
அருண்மொழிவர்மன் மற்றும் வானதி இருவருக்கும் காதல் திருமணம்.
அருண்மொழிவர்மன் ஆயக்கலைகள் அனைத்தையும் கற்க குருகுலம் சென்ற போது அங்கே வேலை செய்த பணிப்பெண் தான் வானதி.
சிறுவயதில் நண்பர்களாக பழகிய இருவரும், பருவமடைந்த பிறகு தங்களுக்குள் இருப்பது நட்பு அல்ல, காதல் என்று உணர்ந்தார்கள். ஒருவர் இல்லாமல் மற்றொருவரால் இருக்க இயலாது என்ற நிலைக்கு ஆளானார்கள்.
குலம், கோத்திரம், ஜாதி, மதம் என்ற எந்த பேதமும் இன்றி வானதியின் கரம் பிடித்தான் அருண்மொழிவர்மன்.
திருமண விழா, கோலாகலமாக நடந்தது.
கோட்டையில் இருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து பறிமாறப்பட்டது.
மேலும் ஊர் மக்கள் அனைவருக்கும் உடை மற்றும் இனிப்பு பலகாரங்களை வழங்கினார்கள்.
குடிமக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.
மாலை நான்கு மணி அளவில் அபாய மணி ஒலித்தது.
அருண்மொழிவர்மன் தன் மனைவியிடம் வந்து,
“அன்பே வானதி, நம் கோட்டையை எதிரிகள் முற்றுகை இட்டுவிட்டனர்.
வெற்றி வாகைச்சூடி வர எனக்கு வீரத் திலகமிட்டு அனுப்பு. ஒருவேளை நான் திரும்ப வரவில்லை…” என்று அருண்மொழிவர்மன் சொல்லி முடிக்கும் முன் தன் கைகளால் அவன் வாயை மூடினாள் வானதி.
போர் உடையில் வந்து நின்ற தன் கணவனுக்கு ஆரத்தி எடுத்து வீர திலகம் இட்டு, “ஒரு நிமிடம் வர்மா” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் வானதி.
சிறுவயது முதலே அருண்மொழிவர்மனை “வர்மா” என்றுதான் அழைப்பாள் வானதி.
பின்னர் அவளும் போர் உடையில் வெளியே வந்தாள்.
சிறுவயதிலிருந்தே வாள் வீசுதல், அம்பு எய்தல், மற்றும் போர் கருவிகள் உபயோகிக்கும் முறைகள் என அனைத்து போர் வித்தைகளையும் அருண்மொழிவர்மனிடமிருந்து கற்றுக் கொண்டாள்.
ஆகையால் போர் உடையை மாற்றிக்கொண்டு வந்து தன் கணவனிடம்,
“இப்போது நீங்கள் எனக்கு ஆரத்தி எடுங்கள். நானும் உங்களுடன் போர் புரிய வருகிறேன்” என்றாள்.
“ஆனால் வானதி?”
“என்னால் போர் புரிய முடியாது என்று நினைக்கிறீர்களா வர்மா?”
“ஒருபோதும் நான் அப்படி நினைக்கவில்லை அன்பே. வீரம் இல்லாதவன் தன் மனைவியையும் போருக்கு அழைத்து வந்துவிட்டான். என்று நாளை யாரும் சொல்லி விடக்கூடாது” என்று நினைத்து தான் அப்படி கூறினேன்.
“தங்கள் வீரத்தை இந்த உலகமே அறியும். அருண்மொழிவர்மன் வீட்டிலேயே பெண்ணை அடைத்து வைக்காமல் அவளுக்கும் போர் புரிய சம உரிமையுடன் வாய்ப்பையும் கொடுத்தான் என்று இந்த உலகம் பேசும்” என்றாள்.
அவள் சொல்வது சரி என்று தோன்றியது அருண்மொழிவர்மனுக்கு.
“சரி, சரித்திரத்தை நாம் மாற்றுவோம். நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து போர் புரிவோம்” என்று சொல்லி அவளுக்கும் ஆரத்தி எடுத்து திலகமிட்டான்.
வானதியுடன் தேரில், கோட்டையை விட்டு வெளியே வந்தான் அருண்மொழிவர்மன் .
வீரத்தீரனான அருண்மொழிவர்மனை போரிட்டு ஜெயிக்க முடியாது என்று நன்றாக தெரிந்து கொண்ட குறுநில மன்னர்கள் அரசியல் சூழ்ச்சி செய்து அவனுடைய சாம்ராஜ்ஜியத்தை வேரோடு அழிக்க திட்டமிட்டனர்.
அருண்மொழிவர்மன் மற்றும் வானதியின் திருமண சாப்பாட்டில் ஒற்றன் உதவியுடன் மயக்க மருந்து கலந்திருந்தனர்.
அந்த மருந்து நான்கு அல்லது 5மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்யும் என்று தெரிந்து அப்போது போர் புரிய வந்தனர்.
‘வரலாற்றில் சூழ்ச்சி செய்து வென்றதாக இருக்கக் கூடாது என்பதால் மயக்க மருந்து கலந்தனர்.
இல்லை என்றால் விஷத்தை கலந்து கொன்று இருப்பார்கள். இப்பொழுது போர் புரியும் சக்தி இல்லாமல் அனைவரும் மயக்கத்தில் இருக்கும் பொழுது எளிதாக அவர்களைக் கொன்று வீரவாகை சுடலாம்’ என்று நினைத்து அவ்வாறு சூழ்ச்சி செய்திருந்தனர்.
வீரர்கள் அனைவரும் மாள்வதை பார்த்த அருண்மொழிவர்மன் மற்றும் வானதி அதிர்ச்சி அடைந்தனர்.
எதிரிகள் ஏதோ சதி செய்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான் அருண்மொழிவர்மன்.
ஏனெனில் வாள் எடுத்துக்கொண்டு வீரர்கள் வேகமாக ஓடும் பொழுது, எதிரிகள் தாக்கும் முன்னரே அனைவரும் மயங்கி விழுந்தனர். உடனே எதிரிகள் வந்து அவர்களை தாக்கி கொன்று குவித்தனர்.
அருண்மொழிவர்மன் மற்றும் வானதி இருவருக்கும் கூட மயக்கமாக இருந்தது. அந்த மயக்க நிலையிலும் தங்களை சுதாரித்துக் கொண்டு நிறைய பேரை வெட்டி வீழ்த்தினார்கள், அம்பு எய்து போரிட்டினர்.
வானதிக்கு மயக்கம் அதிகமாக வந்தது. அவள் சுதாரிப்பதற்குள் வேகமாக வந்த ஒரு அன்பு அவள் நெஞ்சை கிழித்தது.
தேரிலிருந்து தன்னவள் சாயும் பொழுது அவளை பிடித்து தூக்கி அமர வைத்து, வானதியை தாக்கிய குறுநில மன்னனை நோக்கி அம்பு எய்தான் அருண்மொழிவர்மன்.
கோபத்துடனும் ஆத்திரத்தோடும் மிகுந்த பலம் கொண்டு அருண்மொழிவர்மன் எய்த அம்பு அந்த குறுநில மன்னனின் மார்பை துளைத்து மறுபக்கம் வெளியே சென்றது. அவன் கீழே விழுந்து மாண்டான்.
அருண்மொழியிடம் ஏதோ சொல்ல வந்தாள் வானதி.
ஆனால் அவளால் பேச முடியவில்லை.
நாக்கு வறட்சியில் குழறியது.
அவனிடமிருந்த குடுவையில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. அருண்மொழிவர்மனின் கண்கள் கலங்கியது.
வானதியை தன் மடியில் சாய்த்துக் கொண்டு, அவள் என்ன சொல்கிறாள் என்பதை கேட்க குனிந்தான்.
அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் அவள் உதட்டின் மேல் சிந்தியது.
அவளுடைய வெப்பமான சுவாச காற்று அவன் முகத்தில் பட்டது.
“அடுத்த ஜென்மத்துலாவது நான் உங்களுடன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் வர்மா” என்று சொல்லிவிட்டு உயிரிழந்தாள் வானதி.
தன் மனைவியை கட்டிக்கொண்டு அழுதான் அருண்மொழிவர்மன்.
அப்போது இன்னும் பல வீரர்கள் எதிர்த்து வந்தார்கள்.
தன் வீரர்கள் அனைவரும் மாண்டு கிடப்பதை பார்த்தான். தன்னுடைய கோட்டையில் எதிரிகளின் கொடி பறந்தது.
தன்னவள் இறந்ததில் பாதி உயிர் போனது, மற்றதைப் பார்த்ததும் மீதி உயிரும் போனது.
அதனால், தன்னிடம் இருந்த வில் அம்பு அனைத்தையும் கீழே போட்டு விட்டான் அருண்மொழிவர்மன்.
கண்களை மூடிக்கொண்டு “நீ இல்லாத இவ்வுலகினில் நான் வாழ மாட்டேன் வானதி. நானும் உன்னுடன் விண்ணுலகம் வருகிறேன்” என்றான்.
அப்போது குறுநில மன்னர்கள் எய்த அனைத்து அம்புகளும் அருண்மொழிவர்மனின் மார்பை துளைத்தது.
வானதியின் அருகிலேயே விழுந்து, அவள் கைகளை கோர்த்தபடி தன் உயிரை இழந்தான் அருண்மொழிவர்மன்.
#########
2025, ஆகஸ்ட் 30 ஆம் நாள், சென்னை.
தூக்கம் கலைந்து எழுந்தாள் வானதி.
மேல் கூறிய அனைத்தும் மறு ஜென்மத்தில் பிறந்த வானதியின் கனவில் வந்தது.
வானதி வயதுக்கு வந்த பிறகு, வருடா வருடம் வானதி மற்றும் அருண்மொழி இருவருக்கும் திருமணம் நடந்த நாளான ஆகஸ்ட் 30 ஆம் தேதி இதே கனவு வானதிக்கு வருகிறது.
முதல் முறை 2015 ஆகஸ்ட் 30ஆம் தேதி கனவு வந்த போது, ‘நாம் பாகுபலி படம் பார்க்கவே இவ்வாறான கனவு வருகிறது’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு வருடம் கழித்து மறுபடியும் அதே நாள் அந்த கனவு வந்ததை கூட அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மூன்றாவது முறை கனவு வந்த பிறகு தான் தேதியை நினைவு கூர்ந்து பார்த்தாள்.
நான்காவது முறை அவளுக்கு கனவு வருவதற்கு முன்னாலேயே தேதியை குறித்து வைத்துக் கொண்டு தூங்கிய போது அதே கனவு வந்தது.
அப்போதிலிருந்து தான், அவள் தான் அந்த வானதி என்று உணர்ந்தாள். ஆனால் இதுவரை அருண்மொழிவர்மன் என்ற பெயரில் யாரையும் அவள் சந்தித்ததில்லை.
அவளுடைய நெருங்கிய தோழி காயத்ரியிடம் மட்டுமே அவளுடைய கனவைப் பற்றி கூறியிருந்தாள்.
தன் அப்பா அம்மாவிடம் கூட கூறவில்லை.
தன் தோழி வானதி பொய் சொல்ல மாட்டாள் என்பது காயத்ரிக்கு நன்றாகவே தெரியும்.
அதனால் வானதி சொன்னது அனைத்தையும் நம்பினாள் காயத்ரி.
தன் தோழிக்கு உதவி செய்ய நினைத்தாள் காயத்ரி.
அவளுக்கு அதே பெயர் இருப்பதினால் கண்டிப்பாக அருண்மொழிவர்மனுக்கும் அதே பெயர்தான் இருக்கும் என்று நினைத்து அந்த பெயரில் உள்ளவர்களைத் தேட நினைத்தனர்.
காயத்ரியின் தாய் மாமா கவர்மெண்ட் ஆஃபீஸில் வேலை செய்யும் போது இறந்து விட்டார்.
அப்போது டிகிரி முடித்த அவரது மகன் அஸ்வினுக்கு அந்த வேலை கிடைத்தது.
காயத்ரியும் அஸ்வினும் சிறு வயது முதலே காதலித்தனர். உறவு முறை என்பதால் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை.
காயத்ரி தன் மாமா மகன் அஸ்வின் இடம் வானதிக்காக உதவி செய்ய கேட்டாள்.
அவனிடம் கேட்டு அருண்மொழிவர்மன் என்ற பெயரில் இருக்கும் ஆட்களின் விபரங்களை கேட்டாள்.
அந்தப் பெயரில் 2 ஆயிரத்து 420 பேர் இருக்கிறார்கள் என்றான் அஸ்வின்.
அதில் திருமணம் ஆகாதவர்கள் 175 பேர் என்றான்.
அதிலும் 60 பேர் 20-25 வயதுக்குட்பட்டவர்கள் என்ற தகவலை தெரிவித்தான்.
வானதி அவனுக்கு நன்றி தெரிவித்தாள்.
அந்த 60 பேரின் புகைப்படத்தையும் பார்த்தாள் வானதி. அவர்கள் யாருமே அவள் கனவில் வந்த அருண்மொழியை போல இல்லை என்று வருத்தமாகக் கூறினாள்.
“அஸ்வின் அண்ணா, ஒருவேளை வெறும் அருண் இல்ல அருண்மொழி அந்த மாதிரி மட்டும் இருந்தா?” என்றாள் வானதி.
“நீங்க சொன்ன அருண்மொழிவர்மன் என்ற பெயரைப் போடவே தான் இவ்வளவு கம்மியான ஆட்கள் வந்தாங்க. அருண்மொழின்னு போட்டாலே நிறைய வருவாங்க.
இன்னும் அருண் மட்டும் போட்டா எக்கச்சக்கமா வரும். அதையெல்லாம் நீ பார்த்து முடிக்கிறதுக்குள்ள உனக்கே வயசு ஆயிடும் வானதி” என்று சொல்லி சிரித்தான் அஸ்வின்.
வானதி சற்றே சோகமானாள். அதை கவனித்த காயத்ரி அஸ்வினை திட்டினாள்.
“மாமா உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? ஏன் இப்படி நெகட்டிவா பேசுறீங்க. அவ எவ்வளவு ஃபீல் பண்றா பாருங்க” என்றாள்.
“சாரி, வானதி. நான் அப்படி மீன் பண்ணல”
“இல்ல அஸ்வின் அண்ணா, நீங்க சொன்னது சரிதான். வெறும் பெயரை வச்சுக்கிட்டு நான் எங்கே தேட முடியும். என்னை தவிர உங்க ரெண்டு பேருக்கும் அவருடைய முகம் கூட தெரியாது”
“அதுக்கு வேணும்னா ஒரு ஐடியா இருக்கு. ஸ்கெட்ச் ஆர்டிஸ்ட் இருக்காங்க. நீ சொல்றத வச்சு அவங்க வரைஞ்சு காட்டுவாங்க. கம்ப்யூட்டர்லயே அதை போட்டு மேட்சிங் ஃபேஸஸ் வச்சு தேடிப் பார்க்கலாம்”
“சூப்பர் ஐடியா மாமா. மூளைக்காரன் நீங்கன்னு நிரூபிச்சிட்டீங்க” என்று சொல்லி சிரித்தாள் காயத்ரி.
“உண்மையிலேயே பாராட்டுரயா? இல்ல கிண்டல் பண்றியா டி?” என்று சொல்லி சிரித்தான் அஸ்வின்.
வானதியும் சிரித்தாள்.
‘அதிலும் கிடைக்கவில்லை என்றால் அருண்மொழிவர்மனே நம்மை தேடி வரட்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் நினைத்தது போலவே அந்த முயற்சியும் தோல்வியுற்றது.
‘இதற்கு மேல் கடவுள் விட்ட வழி’ என்று நினைத்து விட்டு விட்டாள் வானதி.
ஒரு நாள் வானதி மற்றும் காயத்ரி இருவரும் காலேஜிலிருந்து கிளம்பும் பொழுது பிரின்சிபால் அவர்களை கூப்பிட்டார்.
“நாளை மறுநாள் ஏவி காலேஜ் கல்சுரல்ஸில் நீங்கள் இருவரும் பங்கேற்க வேண்டும்” என்று கூறினார்.
“என்ன சார் இப்போ சொல்றீங்க? நாங்க எப்படி ப்ரிப்பேர் பண்ண முடியும்?” என்று கேட்டாள் காயத்ரி.
“ஏற்கனவே வேற ரெண்டு பேர் போற மாதிரி இருந்தது. ஆனா கடைசி நேரத்தில் அவங்களால போக முடியல.
அது பரதநாட்டியமாகவே இருக்கவே தான், நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே அரங்கேற்றம் பண்ணி இருக்கீங்கல? ஸோ, உங்களைத் தவிர லாஸ்ட் மினிட்ல சொன்னா வேற யாராலயும் ஒழுங்கா பெர்ஃபார்ம் பண்ண முடியாது.
நீங்க நாளைக்கு வேணும்னா லீவு எடுத்து பிரிப்பேர் பண்ணிக்கோங்க.
ஓ.டி தரேன். நாளைக்கு மறுநாள் நல்லா பெர்ஃபார்ம் பண்ணுங்க. நம்ம காலேஜுக்காக வின் பண்ணிட்டு வாங்க” என்றார் பிரின்ஸ்பால்.
“வீ வில் டிரை அவர் பெஸ்ட் சார்” என்று சொல்லிவிட்டு அவர் கொடுத்த பாடலின் பென்-டிரைவை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
அடுத்த நாள் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இருவரும் பிராக்டீஸ் செய்து கொண்டு இருந்தார்கள்.
மறுநாள் காயத்ரி வானதி இருவரும் ஏவி காலேஜ் கல்ச்சுரல்ஸுக்கு சென்றனர்.
அந்த காலேஜூக்குள் நுழையும் போதே வானதிக்கு ஏதோ போல இருந்தது.
மேடையில் ஏறி இருவரும் பரதநாட்டியம் ஆடினார்கள்.
பழைய பாடலான வைஜெயந்திமாலா மற்றும் பத்மினி ஆடிய பாடலான “கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே” என்ற பாடலுக்கு ஆடினார்கள்.
இருவரும் மிகவும் நன்றாக ஆடினார்கள்.
வானதி ஆடிக் கொண்டிருக்கும் பொழுது அமர்ந்திருப்பவர்களின் ஒருவரை பார்த்தாள். தன் கனவில் வந்த அருண்மொழிவர்மனைப் போல தெரிந்தான்.
ப்ரோக்ராம் முடிந்த பிறகு காயத்ரியிடம் வானதி கூறினாள்.
“என்னடி சொல்ற? உண்மையாவா?”
“ஆமாம் காயு, நான் கூட முதல்ல என்னோட கற்பனைன்னு நினைச்சேன். ஆனா இரண்டு மூன்று முறைப் பார்த்தேன். கண்டிப்பா என் கனவுல வந்த அதே அருண்மொழிவர்மன் தான்”
“சரி வா, நம்ம போய் பார்க்கலாம்” என்றாள் காயத்ரி.
அவர்கள் உடையை மாற்றி வெளியே வரும் பொழுது அவர்கள் பெயர் மற்றும் காலேஜ் பெயரையும் கூறி, இரண்டாவது பரிசு அறிவித்தனர். அதை வாங்குவதற்காக மேடைக்குச் சென்றனர்.
காயத்ரிக்கு சர்டிபிகேட் மற்றும் மெடல் கொடுத்தார் சீஃப் கெஸ்ட்.
அதை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்தாள் காயத்ரி.
அப்போது அருண்மொழிவர்மன் வானதியை பார்த்து சிரித்தான்.
கைகளை தட்டி சூப்பர் என்று ஆக்ஷனில் காண்பித்தான்.
அவனைப் பார்த்துக் கொண்டே சீஃப் கெஸ்ட் கொடுக்கும் சர்டிஃபிகேட் மற்றும் மெடலை வாங்காமல் நின்றுக் கொண்டிருந்தாள் வானதி.
காயத்ரி அவள் தோளை தட்டினாள். அதன் பின்னர் சுயநினைவுக்கு வந்தவளாய்,
“சாரி சார், தேங்க்ஸ்” என்று சொல்லி, அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு கீழே வந்து பார்த்த போது அங்கே அருண்மொழிவர்மன் இல்லை.
வானதிக்கு லேசாக கண்கள் கலங்கியது.
வெகு நேரமாக தேடியும் எங்குமே அவன் இல்லை என்பது தெரிந்து கொண்டு கிளம்பலாம் என்று வானதி நினைத்தபோது,
“ஹாய்” என்று குரல் கேட்டு திரும்பினாள்.
அங்கே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் அருண்மொழிவர்மன். இன்னொருவன் ஜனார்த்தனன்.
வானதிக்கு அவனைப் பார்த்ததும் கண்கள் கலங்கியது. வேகமாக சென்று அருண்மொழிவர்மனைக் கட்டிக் கொண்டாள்.
ஜனார்த்தனனுக்கும் அருண்மொழிவர்மனுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவளை திரும்ப அணைக்காமல் சிலை போல நின்று கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன்.
காயத்ரி வானதியை அவனிடமிருந்து விலக்கினாள்.
“ஹாய்” என்று இருவரையும் பார்த்து கூறினாள் காயத்ரி.
“உங்களுக்கு ஏற்கனவே இவனைத் தெரியுமா?” என்று வானதியை பார்த்து கேட்டான் ஜனார்த்தனன்.
வானதி அமைதியாக இருந்தாள்.
“மச்சி டு யூ நோ ஹேர் ஆல்ரெடி?” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
“நோ ஐ டோன்ட்” என்று ஒரு ஆங்கிலேயர் பேசுவது போல பேசினான் அருண்மொழிவர்மன்.
“மன்னிச்சிடுங்க ப்ரோ, என் ஃபிரண்டு அவளுக்கு தெரிஞ்ச யாரோ மாதிரி இவர் இருக்காருன்னு கட்டி பிடிச்சிட்டா. சாரி சாரி” என்று இருவரையும் பார்த்து கூறினாள் காயத்ரி.
காயத்ரி சொன்னதை அருண்மொழிக்கு மொழிபெயர்த்தான் ஜனார்த்தனன்.
“இட்ஸ் ஓகே, நோ இஷ்யூஸ்” என்றான் அருண்மொழிவர்மன்.
கண் கொட்டாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.
காயத்ரி வானதியை உலுக்கினாள்.
“உங்க ஃபிரண்டோட பேரு என்ன?” என்று ஜனார்த்தனனை பார்த்து கேட்டாள் வானதி.
“ஹலோ, நான் இவ்வளவு நேரம் உங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். என் பெயரையே நீங்க கேட்கல? இவன் பெயரை கேக்குறீங்க?
அப்புறம் இவன் என்னோட ஃபிரண்டு இல்லை. என்னோட மாமா பையன். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கான். காலேஜ் கல்ச்சுரல்ஸ் என்பதால் இங்கு கூட்டிகிட்டு வந்தேன்.
நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுனீங்க. உங்களை பாராட்டலாம் என்று சொன்னான். அதனாலதான் உங்களை கூப்பிட்டேன்” என்றான் ஜனார்த்தனன்.
“சாரி ப்ரோ, நான் தான் சொன்னேன்ல? அவளுக்கு தெரிஞ்சவங்க மாதிரி இருக்கவே அவரோட பெயர முதல்ல கேக்க நினைச்சா. சொல்லுங்க ப்ரோ, உங்க பேர் என்ன? அவரோட பேர் என்ன?” என்றால் காயத்ரி.
“என் பேரு ஜனார்த்தனன், இவன் அருண்”
“ஃபுல் நேம்?” என்றாள் வானதி.
“அருண்மொழிவர்மன்” என்று ஜனார்த்தனன் சொன்னபோது காயத்ரி வானதியை பார்த்து ஸ்மைல் செய்தாள்.
‘ஆமாம், இவர்தான் என் கனவில் வந்தவர்’ என்று கண்களாலேயே சொன்னாள் வானதி.
“ப்ரோ, நீங்க தப்பா நினைக்கலனா உங்க ரெண்டு பேரோட ஃபோன் நம்பரையும் நாங்க எடுத்துக்கலாமா?” என்று கேட்டாள் காயத்ரி.
“என்னுடைய நம்பர் எடுத்துக்கோங்க. நாளை மறுநாள் இரவு இரண்டு மணிக்கு மச்சி ஃபாரின் கிளம்பிடுவான். அவன் நம்பர் வச்சு நீங்க என்ன பண்ண போறீங்க?” என்றான்.
‘அருண்மொழிவர்மனுக்கு தன்னை சுத்தமாக அடையாளம் தெரியவில்லையே?’ என்பதை நினைத்து வருந்தினாள் வானதி.
ஜனார்த்தனனின் நம்பரை மட்டும் வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள்.
சற்று தூரம் தள்ளி சென்ற வானதி, திரும்ப அருண்மொழிவர்மன் அருகில் வந்து,
“இந்த டூ டேஸ் என் கூட டேட் பண்றீங்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.
காயத்ரியும் ஜனார்த்தனனும் கண்கள் விரிய வானதியை பார்த்தனர்.
அருண்மொழிவர்மனுக்கு வானதியை மிகவும் பிடித்திருந்ததால்,
“யா, ஷியூர்”
என்று ஸ்மைல் செய்தபடி கூறினான்.
“என்னடி சொல்ற?” என்று தன் தோழியை உலுக்கி கேட்டாள் காயத்ரி.
“ப்ளீஸ் காயத்ரி, எனக்கு வேற வழி தெரியல”
“ஏய் ஃபாரின் ஆளுடி இவரு, அவங்கள பொறுத்த வரைக்கும் டேட்டிங்னா எல்லாமே நடக்கணும். புரியுதா எல்லாமே” என்று அவள் காதில் மட்டும் கேட்கும்படி அழுத்தமாக முணுமுணுத்தாள் காயத்ரி.
“எனக்கு தெரியும், நான் பார்த்துக்கிறேன்” என்றாள் வானதி.
வானதியின் கையை குலுக்கினான் அருண்மொழிவர்மன்.
பின்னர் அவளுடைய நம்பரை கேட்டு, தன் ஃபோன் நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்தான்.
“திஸ் இஸ் மை நம்பர். யூ கேன் மெசேஜ் மீ எனி டைம்” என்றான்.
“ஓகே, ஷியூர் வர்மா. ஓ சாரி, நான் அப்படி உங்களை கூப்பிடலாமா?”
“வாவ், நைஸ். இதுவரைக்கும் யாரும் என்னை அவ்வாறு கூப்பிட்டதில்லை.
அப்படியே கூப்பிடுங்க” என்று ஆங்கிலத்தில் சந்தோசமாக கூறினான்.
ஸ்மைல் செய்தாள் வானதி.
“பை டியர் வானதி, டேக் கேர்” என்று சொல்லிவிட்டு ஜனார்த்தனனுடன் கிளம்பிச் சென்றான் அருண்மொழிவர்மன்.
“டியர்” என்று அருண்மொழிவர்மன் சொன்னதும் “அன்பே” என்று அவன் தன் கனவில் கூப்பிட்டது அவளுக்கு நினைவு வந்தது.
“என்ன தான்டி நீ நினைக்கிற?” என்றாள் காயத்ரி.
“இந்த ரெண்டு நாள்ல எப்படியாவது அவருக்கு எங்களுடைய பழைய ஞாபகங்களை வரவழைக்க முயற்சி செய்யப் போறேன்.
நாங்கள் இந்த ஜென்மத்துலையாவது ஒன்னா சேரணும்னு நினைக்கிறேன்” என்று கண்கள் கலங்க கூறினாள் வானதி.
ஜனார்த்தனன் அருள்மொழிவர்மனிடம்,
“என்னடா மச்சி, உனக்கு அவளை யாருன்னே தெரியாது. எனக்குமே அவர்களைத் தெரியாது. அப்படி இருக்கும் போது அவ கூட டேட்டிங் போறதுக்கு நீ எதுக்கு சம்மதிச்ச?” என்று ஆங்கிலத்தில் கேட்டான் ஜனார்த்தனன்.
“ஐ டோண்ட் நோ, பட் ஐ லைக் ஹர் வெரி மச்” என்று சொல்லி கண்ணடித்தான் அருண்மொழிவர்மன்.
பெருமூச்சு விட்டபடி அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் ஜனார்த்தனன்.
‘இந்த ரெண்டு நாட்கள் முழுதாக அருண்மொழிவர்மன் உடன் பேசி பழகி தன்னை போல அவனுக்கும் அவர்களது முன் ஜென்மம் ஞாபகத்தை வரவழைக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள் வானதி.
தன் தோழி காயத்ரி இடம் “எனக்காக, நீயும் என் கூட வருவியா காயு?” என்று கேட்டாள்.
“சாட்டர்டே அண்ட் சண்டே தானே? ஓகே டி. உனக்காக நான் வரேன்”
அஸ்வினிடம் காயத்ரி அனைத்தையும் கூறினாள்.
வானதிக்காக காயத்ரியை அவளுடன் செல்ல சம்மதம் தெரிவித்தான் அஸ்வின்.
“ப்ராஜெக்ட் வேலைக்காக காயத்ரியுடன் செல்கிறேன்” என்று வீட்டில் சொல்லிவிட்டு சென்றாள் வானதி.
முதல் நாள் பார்க், பீச் என்று சென்றார்கள்.
அருள்மொழிவர்மனும் வானதியும் பீச்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
ஜனார்த்தனன் தன் ஃபோனை எடுத்துக் கொண்டு தனியாக போய் அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.
காயத்ரியும் சற்றுத் தள்ளிப் போய் அமர்ந்து அஸ்வினுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அருண்மொழிக்கு வானதியுடன் இருப்பது பிடித்திருந்தது. அவள் கையை கோர்த்தபடியே அன்று முழுவதும் இருந்தான்.
தமிழை ஒரளவுக்கு புரிந்துக் கொண்டான் அருண்மொழிவர்மன்.
தன் தாய்மொழி தமிழ் தான் என்றாலும், அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் வெளிநாட்டில் என்பதால் தமிழ் பேச வரவில்லை.
மாலை ஆறு மணி அளவில் காயத்ரி மற்றும் வானதி கிளமபினார்கள்.
நாளைக் காலை பதினோரு மணி அளவில் ஏவி மாலுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வானதி.
“நாளைக்கு என்னால வர முடியாது. எனக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு” என்றான் ஜனார்த்தனன்.
“ஆமாம் டி என்னாலயும் வர முடியாது. அஸ்வின் மாமாவோட வெளியே போக வேண்டி இருக்கு” என்றாள் காயத்ரி.
“இட்ஸ் ஓகே, நாங்க ரெண்டு பேரு மட்டும் மீட் பண்ணிக்கிறோம்” என்றான் அருண்மொழிவர்மன்.
அன்று இரவு முழுவதும் அருண்மொழிவர்மனுக்கு வானதி ஞாபகமாகவே இருந்தது. கனவில் குதிரைகள், போர் என வானதிக்கு வந்தது போலவே வந்தது. ஆனால் சுத்த தமிழில் அவர்கள் பேசியதால் அவனால் புரிந்து கொள்ள கூட முடியவில்லை.
மறுநாள் காலை,
ஜனார்த்தனன் மாலில் அருண்மொழிவர்மனை விட்டுவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றான்.
மாலில் ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தான் அருள்மொழிவர்மன்.
வானதி அவன் பின்னால் வந்து அவன் கண்களை மூடினாள்.
“ஹாய் டியர்” என்று சொல்லி அவள் கைகளுக்கு முத்தமிட்டான்.
நேற்று எனக்கு ஒரு வியர்டு கனவு வந்தது என்று கூறினான்.
வானதிக்கு கண்கள் கலங்கியது.
‘எனக்கும் அதே போல் கனவு வந்தது’ என்று சொல்லலாம் என்று நினைத்தாள்.
ஆனால் அவன் வியர்டு கனவு என்று கூறியதால், எதுவும் சொல்லாமல் ஸ்மைல் செய்தாள்.
இருவரும் ஜூஸ் மற்றும் காபி ஆர்டர் செய்து குடித்தார்கள்.
பின்னர் என்ன செய்யலாம் என்று கேட்டான் அருண்மொழிவர்மன்.
“படம் பார்க்கலாமா?” என்று கேட்டாள் வானதி.
“ஆனால் ஆங்கில படம் எதுவும் இல்லையே?” என்றான்.
“ராஜா சாப்” என்று எழுதி இருந்த படத்தை காண்பித்து
“இந்த படத்திற்கு செல்லலாமா? நான் உங்களுக்கு மொழிபெயர்க்கிறேன்” என்றாள்.
“ஓகே” என்றான் அருண்மொழிவர்மன்.
அப்போது காயத்ரி வானதிக்கு கால் செய்தாள்.
“என்னடி என்னாச்சு?”
“ராஜா சாப் படம் புக் பண்ணி இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் படம் பார்க்க போறோம்”
“நிறைய படம் இருக்கும் போது, எதுக்குடி தமிழ் படம். அவருக்கு புரியிற மாதிரி ஏதாவது ஆங்கில படம் போயிருக்கலாமே?” என்றால் காயத்ரி.
“அவரை நான் படம் பார்க்க கூட்டிகிட்டு போகல. இதுல ராஜா காலத்து சீன்ஸ் எல்லாம் வரும், டிரெயிலர்ல பார்த்து இருக்கேன்.
அதனால அதை பார்க்கும்போது, அவருக்கு பழைய ஞாபகங்கள் வருதா? என்று பார்க்கத்தான் கூட்டிக்கிட்டு போறேன்”
“ஓ, ஓகே புரியுது டி”
“எனக்கு இருப்பது இன்று ஒரு நாள் தான்டி, நாளைக்கு இவர் வெளிநாடு போயிடுவாரு. இந்த ஒரு நாளிலும் இவருக்கு ஞாபகம் வரலைன்னா என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல?
அதனால தான் நான் என்னென்னமோ யோசிச்சு இப்படி ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கேன்” என்று சொல்லும் போதே வானதிக்கு கண்கள் கலங்கியது.
அவள் பேசுவதிலிருந்தே அவள் வருந்துகிறாள் என்பதை புரிந்து கொண்ட காயத்ரி,
“டோண்ட் ஒரி. கண்டிப்பா அவருக்கு ஞாபகம் வரும். நான் உங்க ரெண்டு பேருக்காகவும் பிரே பண்ணிக்கிறேன். பை, டேக் கேர்”
“தேங்க்ஸ் காயு, பை டி”
தியேட்டரில் அருண்மொழிவர்மனின் பக்கத்தில் அமர்ந்தாள் வானதி.
இடைவேளை வரை படத்தை பார்த்து வானதி இடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன்.
கடைசி ரோ இருட்டில் அமர்ந்திருந்ததனர் இருவரும். இரண்டு நாட்கள் அவளுடன் டேட் செய்த பிறகு அவளை மிகவும் பிடித்து விட்டது அருண்மொழிவர்மனுக்கு.
அதனால் “உன் கையைப் பிடித்துக் கொள்ளலாமா?” என்று கேட்டான்.
அவளே அவன் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்துக் கொண்டாள்.
“டூ யூ ரிமெம்பர் மீ வர்மா?” என்று கேட்டாள் வானதி.
“வாட்?” என்றான்
“சாரி வர்மா, எனக்கு வேற வழி தெரியல” என்று சொல்லி அவன் இதழில் ஒரு ஆழ்ந்த முத்தம் கொடுத்தாள் வானதி.
இதை சற்றும் எதிர்பார்க்காத அருண்மொழிவர்மன் முதலில் சந்தோஷப்பட்டான். பிறகு அவனுக்குள் ஏதோ ஒரு உணர்வு தோன்றியது.
கண்களை மூடும் போது முந்தைய நாள் வந்த கனவு காட்சிகள் வந்தது. அவனிடமிருந்து அவள் விலக நினைத்தபோது, அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவன் அவளுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.
பின்னர் இத்தனை வருடமாக வானதியின் கனவில் வந்த அதே கனவு அருண்மொழிவர்மனுக்கு முழுமையாக தெரிந்தது. இப்போது அவனுக்கு அர்த்தமும் புரிந்தது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வானதிதான் தன்னுடைய மனைவி என்பதை தெரிந்து கொண்டான் அருண்மொழிவர்மன்.
பத்து நிமிட இதழ் முத்தத்திற்குப் பிறகு இருவரும் விலகினார்கள்.
கண்களைத் திறந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“வானதி” என்றான் அருண்மொழிவர்மன்.
“வர்மா? நான் யார் என்று தெரிகிறதா?” என்ற சுத்த தமிழில் கேட்டாள் வானதி.
“ஆம் அன்பே, நீதான் என் உயிர், என் மனைவி. உன்னை எந்த ஜென்மத்திலும் மறக்க மாட்டேன்”
என்று சுத்த தமிழில் பேசினான் அருண்மொழிவர்மன்.
இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்.
இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது.
இருவரும் சந்தோஷமாக இந்தப் பிறவியில் வாழத் தொடங்கினார்கள்.
காயத்ரி மற்றும் அஸ்வினின் திருமணமும் நடந்தது.
சுபம்
முற்றும்
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

No comments yet.