பாகம் 3
ரோஹித் தன் அம்மாவிற்கு கால் செய்து, அம்மா,நான் விஹான் வீட்ல தங்கிக்கிறேன். இன்னைக்கு வீட்டுக்கு வரல என்றான்.
சரிப்பா நான் அப்போ அண்ணா வீட்டிலேயே இருக்கவா?
சரிமா என்றான்.
ஃபோனை வைத்தவுடன், ஏண்டா அடிப்பட்டதை பத்தி அம்மாக்கு சொல்லல? என்றான் விஹான்.
இல்லடா அம்மா ரொம்ப பயந்துடுவாங்க. அதனாலதான்.
சரிடா மச்சி.
ரோஹித்திற்கு, அப்பா இல்லை. அம்மா மட்டுமே. அம்மா விஜயலட்சுமி ரோஹித்தின் அண்ணன் ரமேஷ் வீட்டில் இருக்கிறார். ரமேஷுக்கு திருமணம் ஆகி விட்டது. அவன் மனைவி பெயர் சுசீலா மற்றும் அவனுடைய 2 வயது பெண் குழந்தையின் பெயர் ஆதிரா. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் தன் குழந்தையை பார்த்துக் கொள்ள தன் அம்மாவை அவனுடைய வீட்டிலேயே வைத்திருக்கிறான் ரமேஷ்.
வழக்கமாக திங்கள் முதல் வெள்ளி வரை தன்னுடைய பெரிய மகன் ரமேஷ் வீட்டில் இருப்பார் ரோஹித்தின் அம்மா விஜயலட்சுமி.
சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் வந்து ரோஹித்துடன் ரோஹித் ஆஃபீஸ் பக்கத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தான். வீக் எண்டில் அங்கே வந்து விடுவார்.
அன்று தன் மகன் ரோஹித் வரவில்லை என்று கூறியதால், அங்கேயே இருக்கப் போவதாக தன் பெரிய மகன் ரமேஷுக்கு கால் செய்து சொன்னார் விஜயலட்சுமி.
விஹானின் வீட்டில் தங்கினான் ரோஹித்,
விஹானுடைய ரூமிலியே இருவரும் படுத்துக் கொண்டனர்.
காலை எழுந்ததும் விஹான் குளிக்கச் சென்றான். அப்போது விருத்திகாவிடம் இருந்து கால் வந்தது.
ரோஹித் படுத்திருந்த கட்டிலின் பக்கத்தில் டேபிள் மேல் தான் விஹானுடைய ஃபோன் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவன் கண் விழித்தான்.
முதலில் அவனே வந்து பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்து ஃபோனில் யார் கால் செய்கிறார்கள் என்று கூட பார்க்காமல் படுத்திருந்தான் ரோஹித்.
முதல் முறை ஃபுல் ரிங் போய் கட்டாகியது.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு மறுபடியும் அடித்தது.
அப்போது பாத்ரூமில் இருந்த விஹான்,
மச்சி, எழுந்துட்டியா டா?
ஆமாண்டா சொல்லுடா.
ஃபோன்ல யாருன்னு பாருடா என்றான் விஹான்.
மெல்ல எழுந்து ஃபோனை எடுத்துப் பார்த்தான் ரோஹித்.
விருத்திகா காலிங் என்று வந்தது.
மச்சி உன் தங்கச்சி விருத்திகா கால் பண்றடா.
ஓ, அவதானா விடு, எடுக்க தேவை இல்லை. காலையிலேயே கால் வரவும், என்னோட ஆபீஸ் கால்னு நினைச்சேன்.
ஏன்டா இப்படி பண்ற, ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது, இவ்வளவு காலையிலேயே பண்றா இல்ல?
குளித்துவிட்டு வெளியே வந்தவன் தலையை துவட்டிக் கொண்டே,
அதெல்லாம் ஒன்னும் இல்லை அவ சும்மாவே இப்படி அடிக்கடி கால் பண்ணுவா?
எப்படி இருக்காளாம்? தீபக் அவளை நல்லா பாத்துக்கிறானா? ஏதாவது கேட்டியா?
மச்சி உண்மைய சொல்லட்டுமா, அவளுக்கு கல்யாணம் ஆன இந்த ரெண்டு மாசத்துல 15 ல இருந்து 20 தடவைக்கு மேல எனக்கு கால் பண்ணி இருப்பா. ஆனா நான் ஒரு முறை கூட நீ எப்படி இருக்க அப்படின்னு கேட்டதில்லை.
ஏன்டா உனக்கு இவ்வளவு வீம்பு.
டேய், அவன் நல்லா பார்த்துப்பான்னு தான அவன் கூட போயிருக்கா, அப்புறம் நல்லா இருக்கியான்னு வேற எதுக்கு கேட்கணும்?
மச்சி, நடந்தது நடந்திருச்சு அதையே மனசுல போட்டு குழப்பிக்காத, அவ நல்லா இருந்தா அதுவே போதும்.
உன்ன மாதிரி ஞானியா எல்லாம் என்னால இருக்க முடியாது. என் மனசை காய படுத்திட்டு போயிருக்கா, அதனால அந்த காயம் எப்போ சரி ஆகுதோ அப்பதான் நான் அவ கிட்ட ஒழுங்கா பேசுவேன்.
மச்சி ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது, ஃபோனை எடுத்து பேசுடா.
முடியாதுடா.
மிச், என்று சொல்லிவிட்டு ஃபோனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.
அண்ணா, எப்படி அண்ணா இருக்க?
பதில் பேசுடா என்று விஹானை பார்த்து முறைத்து ஆக்ஷனில் சொன்னான் ரோஹித்.
ஹூம், இருக்கேன்.
அண்ணா, உன் கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு கால் பண்ணினேன். இன்னும் தீபக் கிட்ட கூட சொல்லல. இன்னைக்கு மார்னிங் தான் டெஸ்ட் பண்ணேன். நான் பிரக்னண்டா இருக்கேன் அண்ணா. அம்மா இருந்திருந்தால் அம்மா கிட்ட முதல்ல சொல்லி இருப்பேன். எனக்கு அப்பா அம்மா எல்லாமே நீ தானே அண்ணா என்று சொல்லி அழுதாள் விருத்திகா.
விஹானின் கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடியது.
அவள் பேசியதை கேட்டு ரோஹித்திற்கும் கஷ்டமாக இருந்தது. அவனும் கண்கள் கலங்கினான்.
அண்ணா நான் பேசுறது கேக்குதா? லைன்ல இருக்கியா? என்றாள் விருத்திகா.
தொண்டையை சரி செய்து கொண்டு,
லைன்ல தான் இருக்கேன் என்றான்.
அண்ணா, உன்னை பார்க்கணும் போல இருக்கு நான் வீட்டுக்கு வரட்டுமா?
சரி என்று மட்டும் சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.
மச்சி, வாழ்த்துக்கள் டா மாமாவாக ஆகப் போற.
என்றான் ரோஹித்.
மச்சி இந்த விஷயத்தை கேட்டு சந்தோஷப்படுறதா இல்லையான்னு எனக்கே தெரியல டா? என்றான் விஹான்.
ஏன்டா அப்படி சொல்ற?
தெரியல டா மனசுக்கு என்னவோ உறுத்தலாகவே இருக்கு.
தயவு செஞ்சு நம்ம விருத்திகாவுக்காக நார்மலா இருடா. முதல்ல போய் அவளை நேரா பாரு.
அதான் அவளே இங்கு வரேன்னு சொல்லிட்டாளே.
ஆமால்ல சரி சரி நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன்.
எதுக்கு, நீ தான் உங்க அம்மா அங்கேயே இருக்க சொல்லிட்ட இல்ல, உடம்பு சரியில்லாத நேரத்துல தனியா அங்க போய் என்ன பண்ணுவ? நீ இங்கேயே இரு.
இல்லடா விருத்திகா ஒரு சந்தோஷமான விஷயத்தை உன்னோட பகிர்ந்து கொள்ள வீட்டுக்கு வரா, இந்த டைம் நான் இருந்த இருந்தேன்னா அது நல்லா இருக்காது நான் என் வீட்டுக்கு போயிட்டு நைட்டு இங்க வந்துடறேன்.
ஏண்டா இப்படி பண்ற?
மச்சி இந்த வீக் ஃபுல்லா நான் இங்கேயே இருக்கேன் டா. கம்மிங் சாட்டர்டே அம்மா வரும்போது நான் வீட்டுக்கு போய்கிரேண்டா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. எனக்குமே அவங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதுக்கு அன் கம்ஃபோர்ட்டபிளா இருக்கும் டா.
அவன் அப்படி சொன்ன பின்பு தான் ஒப்புக்கொண்டான் விஹான்.
எழுந்து குளித்துவிட்டு விஹானின் டிரெஸ்ஸையே போட்டுக் கொண்டு தன் வீட்டிற்கு ஆட்டோ புக் செய்து சென்றான் ரோஹித்.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
பாகம் 4
அந்த பிரக்னன்சி ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து கட்டிலில் சென்று தீபக் பக்கத்தில் அமர்ந்தாள் விருத்திகா.
தீபு, என்று அவன் காது அருகில் சென்று மெதுவாக கூப்பிட்டாள்.
அவளை அப்படியே இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்து இறுக்கமாக அணைத்தான் தீபக்.
குட் மார்னிங் டா.
குட் மார்னிங்கா? அடியேய் பொண்டாட்டி, எதுக்குடி இவ்வளவு சீக்கிரம் எழுப்புற? சண்டே தானே? வா ரெண்டு பேரும் தூங்கலாம் என்றான்.
தீபு, என்று சத்தமாக கூப்பிட்டாள். அவன் காது வலித்ததால் எழுந்து உட்கார்ந்தான்.
ஏய் உனக்கு என்ன பைத்தியமா டி என்று தன் காதுகளை குடைந்து கொண்டே அவளைப் பார்த்து கேட்டான்.
அவன் கண் முன்னே அந்த பிரக்னன்சி ஸ்டிக்கை காண்பித்தாள்.
கண்கள் வெளியே பார்த்த அவனின் முகத்தில் புன்னகையும் விரிந்தது.
உண்மையிலேயே வா? அதுக்குள்ளேயே வா?
நம்ம அப்பா அம்மாவாக போறோமா? என்று சொல்லி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
ஆமாம் டா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
நானும் தாண்டி என்று சொல்லி அவள் இதழில் முத்தமிட்டான்.
இரண்டு நிமிடம் முத்தத்திற்கு பிறகு,
சரி உனக்கு என்ன வேணும் சொல்லு?
முதல்ல அத்தை மாமா கிட்ட சொல்லலாமா.?
யாரு எங்க அப்பா அம்மா கிட்டயா?
ஆமாண்டா, நிறைய சினிமால பார்த்திருக்கேன். கல்யாணத்துக்கு ஒத்துக்கலனாலும் குழந்தை பிறக்க போகுது என்று தெரிஞ்சா, கண்டிப்பா நம்மள சேர்த்துப்பாங்க.
அதெல்லாம் சினிமாவுக்கு தான். நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராது. முக்கியமா எங்க அப்பா அம்மா ஒத்துக்கவே மாட்டாங்க.
ஃபோன் பண்ணி தான் பாரேன் டா.
சரி நீ சொல்றன்றத்துக்காக நான் ஃபோன் பண்றேன் ஸ்பீக்கரில் போடுறேன் நீயே அவங்க பேசுவதை கேட்டு பாரு.
சரி தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தாள்.
அம்மாவுக்கு கால் பண்ணலாமா இல்ல அப்பாவுக்கு கால் பண்ணலாமா என்று யோசித்தவன், அம்மாவுக்கே கால் பண்ணலாம் அப்பா ஏதாவது ஏடா கூடமா பேசிட போறாரு என்று நினைத்துக் கொண்டே தான் அம்மாவிற்கு கால் செய்தான்.
முதலில் அவர் ஃபோனை எடுக்கவில்லை.
அம்மா பிஸியா இருக்காங்கன்னு நினைக்கிறேன் நான் அப்புறமா கால் பண்றேன் நீ உங்க அண்ணனுக்கு கால் பண்ணி சொல்லு.
ஒன்னு சொன்னா கோச்சிக்காத தீபக்,
இல்ல சொல்லு,
உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எங்க அண்ணனுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்.
அடிப்பாவி, என்னை விட உங்க அண்ணன் தான் உனக்கு முக்கியமா?
ஆமா, உன்னை எனக்கு மூணு நாலு வருஷமா தான் தெரியும். ஆனா எங்க அண்ணன் என் கூட பொறந்தவன் ஆச்சே.
நான் என்னோட அப்பா அம்மாவை விட நீ தான் முக்கியம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன், ஆனா நீ இப்படி பண்ற.
நீயும் வாய் வார்த்தைக்கு தான் சொல்ற. உங்க அம்மா உன் கண் முன்னாடி வந்து நின்னா என்னை மறந்திடுவ.
அடச்சி லூசு மாதிரி பேசாத.
சரிடா 10 மினிட்ஸ் ஆயிடுச்சு மறுபடியும் உங்க அம்மாக்கு கால் பண்ணு.
மறுபடியும் கால் செய்தான்.
ஃபோனை எடுத்து மெதுவாக பேசினார்.
ஹலோ யாரு என்றார்.
அம்மா, என்னம்மா நீங்க? நான் தீபு மா.
ராங் நம்பர் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார்.
தீபத்திற்கு கண்கள் கலங்கியது.
சாரிடா, என் தப்புதான். நான்தான் உன்னை ஃபோர்ஸ் பண்ணி கால் பண்ண சொன்னேன் என்று சொல்லி அவனை கட்டி பிடித்து அழுதாள் விருத்திகா.
இட்ஸ் ஓகே டி, விடு உனக்கு என்ன தெரியும். ஆனா எனக்கு எங்க அப்பா அம்மாவை பற்றி தெரியும். நீ சொன்னதுக்காக நான் கால் பண்ணேன் பாரு அது என் தப்பு தான்.
சாரிடா சாரி என்று சொல்லி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
சரி வா முதல்ல குளிச்சிட்டு ஹாஸ்பிடல் போகலாம்.
தீபு, என்று இழுத்தாள் விருத்திகா.
சொல்லு.
முதல்ல கோவிலுக்கு போயிட்டு, நம்ம ரெண்டு பேர் பெயர்லையும் அர்ச்சனை பண்ணிக்கிட்டு அப்புறம் அங்கிருந்து எங்க அண்ணனை வீட்டுக்கு போய் அண்ணனை பார்த்துட்டு அதுக்கப்புறமா ஹாஸ்பிட்டல் போலாமா?
நான் முதல்ல ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் பண்றேன். அப்பாயின்மென்ட் டைமிங் என்ன கிடைக்குதோ அதுக்கேத்த மாதிரி தான் உன்னோட பிளான்ஸ் எல்லாம்.
ஓகேடா.
பெஸ்ட் கைனகாலஜிஸ்ட் நியர் மீ என்று கூகுளில் தேடி, பெஸ்ட் ரிவியூஸ் எடுத்த டாக்டரை தேடினான். அதிலே அப்பல்லோ ஹாஸ்பிடலில் டாக்டர் ஷீலா என்று இருந்தது.
உடனே ஹாஸ்பிடலுக்கு கால் செய்து அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்தான்.
நாளை காலை 10 மணிக்கு அல்லது நாளை ஈவினிங் நாலு மணிக்கு வர சொல்லி சொன்னார்கள்.
இன்றே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காதா என்று கேட்டான்.
இல்ல சார் இன்னைக்கு சண்டே. ஒன்லி இன் பேஷண்ட்ஸ் அண்ட் எமர்ஜென்சிஸ் தான் அட்டென்ட் பண்ணுவோம். பர்டிகுலர் டாக்டர் வேணும்னா அவங்க இந்த ஹாஸ்பிடலுக்கு வர ஷெட்யூல்டு டைம் தான் உங்ககிட்ட சொன்னேன். ஷீலா மேடம் மண்டே டு ஃப்ரைடே மார்னிங் 10 டு 2 , ஈவினிங் 4 டு 8 என்றார்கள்.
ஓகே தேங்க் யூ. நாளைக்கு மார்னிங் 10 ஓ கிளாக் வரோம். பேஷண்ட் நேம் விருத்திகா.
ஓகே சார் அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணிட்டேன். தேங்க்ஸ் ஃபார் காலிங். ஹேவ் எ குட் டே.
தேங்க் யூ, யூ டூ, பை என்று சொல்லி ஃபோனை வைத்தான் தீபக்.
இன்னைக்கு டாக்டர் இல்லையாம் நாளைக்கு தான் அப்பாயின்மென்ட் கிடைச்சிருக்கு. அதனால உனக்கு இன்னைக்கு எங்க எல்லாம் போகணுமோ அங்கெல்லாம் போகலாம் வா என்றான் தீபக்.
தேங்க்யூ புருஷா, என்று சொல்லி அவனின் தோள் மேல் சாய்ந்து கொண்டாள் விருத்திகா.
விருத்திகா ஆசைப்பட்டது போல முதலில் அவர்களுக்கு திருமணம் ஆன அந்த கோவிலுக்கு சென்று அவர்கள் இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்தனர்.
விருத்திகாவை ஏற்கனவே தெரியும் அந்த ஐயருக்கு. சிறு வயதிலிருந்து கோவிலுக்கு அடிக்கடி வருவாள்.
அர்ச்சனை செய்து தேங்காய் உடைத்த போது, தேங்காய் அழுகிப் போய் இருந்தது. கழுத்தில் புது தாலியுடன் சந்தோஷமாக வந்த அந்த கணவன் மனைவியிடம் இதை சொல்ல வேண்டாம் என்று நினைத்தார் ஐயர்.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.