பாகம் -4
விஜயாவும் லக்ஷ்மியும் மறுநாள் பாண்டியராஜனுடைய வீட்டிற்கு சென்றனர். தன் அப்பாவை அப்படி பார்த்த விஜயா அதிர்ச்சி ஆனாள். வெகு நேரமாக அவருடைய அருகில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.
லக்ஷ்மி மற்றும் நிர்மலா எவ்வளவு சமாதானம் செய்தும் அவளுடைய அழுகையை நிறுத்த முடியவில்லை.
பாண்டியராஜனும் அழத் தொடங்கினார்.
“என்னை மன்னிச்சிடு மா. உன்னையும் மாப்பிள்ளையும் அன்னைக்கு அடிச்சு அவமானப் படுத்தியதுனால தான் நான் இன்னைக்கு இப்படி கஷ்டப் படறேன். அன்னைக்கு மாப்பிளை கிட்ட கூட சொன்னேன்”
“அப்பா, பிளீஸ் பா. இப்படி எல்லாம் பேசாதீங்க” என்று கெஞ்சினாள் விஜயா.
ஒருவழியாக இருவரும் சில நேரம் கழித்து அமைதி ஆனார்கள்.
ஒன்பதாம் நாள் ஹர்ஷிதாவின் ஃபங்ஷன்.
ஊர் மக்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சீர் செய்தனர் பாண்டியராஜன் மற்றும் சிவராமன். ‘தாய்மாமன்னா இப்படி இல்ல இருக்கனும்?’ என்று பேசிக் கொண்டார்கள்.
அவினாஷ் தனக்கு +2 தேர்வுக்கு பிராக்டிகல்ஸ் இருக்கு என்று சொல்லி ஃபங்ஷனுக்கு வர மறுத்து விட்டான். உள்ளூர ‘மறுபடியும் அந்த மாரியாத்தாவை பார்க்க முடியாது’ என்று நினைத்து கொண்டான்.
பத்து பவுனில் ஆரம், மூன்று பவுனில் நெக்லஸ் மற்றும் கம்மல் ஜிமிக்கி, பன்னிரெண்டு பவுனில் ஆறு வளையல்கள். ஆக மொத்தம் இருபத்தி ஐந்து பவுனில் சீர் செய்தனர்.
யமுனா மற்றும் ராமு ஐந்து பவுனில் ஒரு டாலர் செயின் வாங்கி வந்திருந்தனர்.
விழா மிகச் சிறப்பாக நடந்தது.
யமுனா விஜயாவிடம்,
“அண்ணி, தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க அண்ணன் போட்ட அளவுக்கு நகை எங்களால போட முடியாது. ஏதோ எங்களால முடிஞ்சது” என்றாள்.
“அச்சோ அண்ணி, ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க. பணத்துக்கு மதிப்பு கொடுக்கிறவங்களா நாம. நீங்க ஆசிர்வாதம் செஞ்சதே என் பொண்ணுக்கு பெரிய சொத்து. இப்படி எல்லாம் யோசிக்காதீங்க” என்றாள் விஜயா.
“வேலனை உங்களுக்கு பிடிக்குமா அண்ணி?”
“ஏன் இப்படி கேட்கறீங்க அண்ணி?”
“இல்ல, இப்போ உங்க அண்ணோட பசங்க இருக்காங்க. வசதி வாய்ப்புல அவங்க எங்களைவிட உசத்தி. அப்படி இருக்கும் போது நீங்க அவங்களுக்கு தான் பொண்ணு கொடுக்க நினைப்பீங்க. அதான்”
“அண்ணி ஹர்ஷிதா சின்னப் பொண்ணு. இப்போ தான் ஒன்பதாவது படிக்கிறா. இப்பவே அவ கல்யாணத்தை பத்தி பேசணுமா? அதுவும் இல்லாம என்னோட அண்ணன் பசங்களா இருந்தாலும் என் பொண்ணு விருப்பத்துக்கு மாறா நான் யாரையும் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன்”
“ஓ, ஓகே அண்ணி இது போதும். வரேன்” என்று சொல்லி விட்டு சந்தோஷமாக ஓடிச் சென்றாள் யமுனா.
இதையெல்லாம் பக்கத்தில் இருந்து லக்ஷ்மி கேட்டு கொண்டு இருந்தாள். யமுனா சென்றதும் சற்று சத்தமாகவே சிரித்துவிட்டாள்.
“அக்கா, நீங்க வேற ஏன்கா இப்படி சத்தமா சிரிக்கறீங்க?”
“நம்ம ஹர்ஷிக்கு இப்பவே போட்டி அதிகமா ஆயிடிச்சு” என்றாள் லக்ஷ்மி.
“அக்கா சும்மா இருங்க அக்கா” என்றாள் விஜயா.
வேலன் ஹர்ஷிதாவை தன் செல்ஃபோனில் பல ஃபோட்டோக்கள் எடுத்தான். பல ஃபோட்டோக்களில் வேண்டும் என்றே முறைத்து கொண்டு இருந்தாள் ஹர்ஷிதா.
அர்ஜூன் விழாவிற்கு வந்திருந்தான். எல்லாரிடமும் நன்றாக பேசி பழகினான்.
எல்லாருக்கும் ஜூஸை வாங்கிக் கொடுப்பது. வயதானவர்களுக்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுப்பது என்று பல வேலைகளை செய்தான். இதை பார்த்ததும் அனைவருக்கும் அவனை பிடித்து போனது. வேலன் மற்றும் அவனுடைய பெற்றோரைத் தவிர.
வழக்கமாக எல்லா விசேஷங்களிலும் வேண்டும் என்றே ஏதாவது பிரச்சனை செய்யும் ராமு இப்போது அமைதியாக இருந்தார். அதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று விஜயாவின் அண்ணா ஒரு போலீஸ் இன்னொன்று தன் மகன் வேலனை ஹர்ஷிதாவிற்கு திருமணம் செய்து தர அவரும் ஆசையாக இருந்தார். நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்தது.
விஜயாவும் தன் தந்தை வீட்டிற்கு அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தாள்.
அவினாஷ் +2 வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பி.டெக் மெரைன் எஞ்சினியரிங் படிக்க கொயம்பத்தூரில் உள்ள பிரபல கல்லூரியில் சேர்ந்தான். அங்கேயே கல்லூரி விடுதியில் தங்கினான். நான்கு வருடங்களுக்கான படிப்பு.
மூன்று வருடங்களுக்கு பிறகு….
ஹர்ஷிதாவிற்கு +2 மார்க் வந்தது. படிப்பில் சுமார் தான் நம் ஹீரோயின். அறுபது சதவிகித மார்க்குகள் மட்டுமே எடுத்து இருந்தாள். சென்னையிலேயே ஒரு கல்லூரியில் பி.காம் சேர்த்தனர். ‘கல்யாண பத்திரிகையில் தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளதான் நான் காலேஜ் வருகிறேன்’ என்று தன் தோழி கேத்தரினிடம் அடிக்கடி கூறுவாள்.
நெருக்கமான தோழர் தோழியர் என்று அவளுக்கு யாரும் இல்லை என்றாலும் அவளுடன் படிக்கும் கேத்தரின் மற்றும் அவளுடைய காதலனுமான சாக்ரட்டீஸ் இருவரிடம் மட்டுமே நட்புடன் நடந்து கொள்வாள்.
சாக்ரட்டீஸ் எப்போதும் ஹர்ஷிதாவை சகி என்றே அழைப்பான். தன் சகோதரி போல நினைத்து பழகுவான்.
சாக்ரட்டீஸூக்கு ஒரே ஒரு அண்ணன் பெயர் ஜார்ஜ். ஆந்திராவில் இருந்து தரமான மிளகாய் வாங்கி மிளகாய்த்தூள் தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். அப்பர் மிடில்கிளாஸ் என்று சொல்லலாம். தனிவீடு, கார், என்று ஓரளவு வசதியாக இருக்கிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. மேட்ரிமோனியில் பதிவு செய்து பார்த்து கொண்டு இருந்தான் சாக்ரட்டீஸ்.
சிறு வயதிலேயே அவர்களுடைய அம்மா இறந்துவிட்டார். சாக்ரட்டீஸ் +2 படிக்கும் போது அவனுடைய தங்கை மற்றும் அவனுடைய அப்பா ஒரு ஆக்ஸிடென்டில் இறந்து விட்டனர். விரக்தியாக இருந்த அவனுக்கு ஆறுதலாக வந்தனர் ஹர்ஷிதாவும் கேத்தரினும். கேத்தரினே முதலில் தன் காதலை தெரிவித்தாள். ஹர்ஷிதாவின் வற்புறுத்தலினால் ஒப்புக்கொண்டான் சாக்ரட்டீஸ். பிறகு கேத்தரினின் உண்மையான காதலை அவனால் நிராகரிக்க முடியவில்லை. அவனும் உண்மையாக அவளை காதலிக்க தொடங்கினான்.
அர்ஜூன் இஞ்சினியரிங்கில் பி.ஜி முடித்து விட்டு ஒரு பிரபல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். எப்போது அவன் வேலைக்கு சேருவான் என்று காத்திருந்த விஜயா தன் கணவன் வேணுகோபாலிடம் தன் எண்ணத்தை கூறினாள்.
“என்னங்க”
“சொல்லு விஜி”
“நம்ம ஹர்ஷிக்கு, என்னோட அண்ணன் பையன் அர்ஜூனை கேட்கலாமா?”
“ஏய், அவ இப்போ தான் ஃபைனல் இயர் படிக்கிறா. அதுக்குள்ள எப்படி?”
“நம்ம பார்த்து பேசி முடிக்கறதுக்குள்ள அவ எக்ஸாம் முடிஞ்சிரும். அப்புறம் உங்க பொண்ணை எக்ஸாம் எழுதி பாஸ் ஆனதும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் னு நினைக்காதீங்க. அது நடக்கவே நடக்காது. கண்டிப்பா எல்லா பேப்பரையும் கிளியர் பண்ண மாட்டா. ஏற்கனவே நிறைய அரியர்ஸ் வச்சிருக்கா” என்றாள் விஜயா.
“அம்மாவை மாதிரி தான பொண்ணும் இருப்பா”
“இதோ பாருங்க, என்னை வேணும்னாலும் சொல்லுங்க. என்னோட படிப்பை பத்தி மட்டும் தப்பா சொல்லாதீங்க. நான் +2 ல 1078/1200 க்கு. காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல 80%. ஸெகண்டு இயர்ல 88%. ஃபைனல் இயர் எக்ஸாம் எழுதி இருந்தா எனக்கும் ஒரு டிகிரி கிடைச்சிருக்கும். உங்க பொண்ணோட என்னை கம்பேர் பண்ணாதீங்க”
“சரி சரி விடு. எனக்கு தான் படிப்பு சரியா வராது. அவ என்னை மாதிரி இருக்கா. போதுமா?”
“ஹூம். அப்படி வாங்க வழிக்கு. இப்பவாவது உண்மையை ஒத்துக்கிட்டீங்களே?” என்று சொல்லி சிரித்தாள்.
“உன் புருஷன் படிக்காத மேதை டி”
“சரி சரி, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க”
“அர்ஜூன் நல்ல பையன் தான். ஆனா நம்ம ஹர்ஷிக்கு பிடிக்கணும். அர்ஜூனுக்கு, அவங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு. அப்புறம் அண்ணா அண்ணிக்கு. கண்டிப்பா யமுனாவும் ராமுவும் பிரச்சனை பண்ணுவாங்க”
“எனக்கு முதலில் உங்க சம்மதம் தான் வேண்டும். மத்தவங்களை நான் பாத்துக்கிறேன்”
“சரி விஜி, எனக்கு சம்மதம்”
“ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லி சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து விட்டு தன் கணவன் வேணுகோபாலை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். பின்னர் வெட்கத்தில் வேகமாக வெளியே சென்றாள்.
வெகு நாட்களுக்கு பிறகு, இல்ல இல்ல பல வருடங்களுக்கு பிறகு தன் மனைவியிடம் இருந்து முத்தம் பெற்ற வேணுகோபாலுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவரும் சிரித்துக் கொண்டே தன் வேலையை பார்க்க சென்றார்.
அடுத்து ஹர்ஷிதாவிடம் விஜயா கேட்டாள்.
“ஹர்ஷி”
“ஹூம்”
“ஹர்ஷி”
“என்னம்மா?”
“அது வந்து”
“யாரு மாப்பிளை?”
“என்னடி, எப்படி டக்குனு கண்டுபிடிச்சிட்ட?”
“சரி சரி, சொல்லுங்க யாரு?”
“நம்ம அர்ஜூன். ஓகே வா?”
“அர்ஜூன் மாமா வா?”
“ஏன்டி?, அப்படி சொல்ற?”
“இல்ல, ஒண்ணும் இல்ல. அவருக்கு ஓகே வா?”
“இன்னும் பேசல, இதுக்கு மேல தான். முதல்ல உங்க அப்பாவை கேட்டேன். இப்போ உன் கிட்ட கேட்கிறேன்”
“அப்பா என்ன சொன்னாரு?”
“ஓகே ன்னு சொல்லிட்டாரு. உன்னோட விருப்பத்தை சொல்லு”
“உண்மையை சொல்லனும் ன்னா, எனக்கு தெரியல என்ன சொல்றதுன்னு. அர்ஜூன் மாமாவை பிடிக்கும் ஆனா கல்யாணம் பண்ணிக்கனும்னா?” என்று இழுத்தாள்.
“யம்மாடி, தயவு செஞ்சு ஒழுங்கா சொல்லு”
“எல்லாருக்கும் ஓகேன்னா? முக்கியமா அர்ஜூன் மாமாவுக்கு ஓகேன்னா? எனக்கும் ஓகே” என்றாள்.
“என் தங்கம்” என்று கட்டி அணைத்து தன் மகளின் கன்னத்திலும் முத்தமிட்டாள்.
“அம்மா”
“என்னம்மா?”
“அப்பா ஓகே சொன்னவுடன் அப்பாவுக்கும் முத்தம் கொடுத்தியா?”
“ஏய்” என்று விஜயா சொல்ல சிரித்து கொண்டே ஓடிவிட்டாள் ஹர்ஷிதா.
‘இவ பார்த்துட்டு சொல்றாளா இல்ல இவளுக்கு முத்தம் கொடுத்ததால் சொல்றாளா?’ என்று யோசித்துக் கொண்டே லக்ஷ்மியிடம் கேட்கச் சென்றாள்.
லக்ஷ்மியிடம் சென்ற விஜயா தன் விருப்பத்தை சொல்ல மிகவும் சந்தோஷப் பட்டாள் லக்ஷ்மி.
உண்மையிலேயே இது ஒரு நல்ல யோசனை. இரு முதல்ல இவருக்கு சொல்றேன் என்று ஃபோனை எடுத்து ராஜகோபாலுக்கு கால் செய்தாள் லக்ஷ்மி.
ராஜகோபாலும் மிகவும் சந்தோஷப்பட்டார்.
ஜாதகத்தில் அதிக நம்பிக்கை உடையவர் ராஜகோபால். இருப்பினும் சொந்தத்தில் பெண் கொடுக்கலாம் என்று முடிவு செய்து விடவே ஜோசியிரிடம் நல்ல நாளை மட்டும் பார்க்கச் சொன்னார். அதுவும் இல்லாமல் ஹர்ஷிதாவின் விருப்பத்திற்கு தான் திருமணம் நடக்கும் என்று முதலிலேயே ஜோசியர் கூறியதால், ராஜகோபாலும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்.
“நாளை வெள்ளிக்கிழமை நாள் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க போய் பேசிவிட்டு வாங்க” என்றார் ஜோசியர்.
விஜயா தன் அண்ணி நிர்மலாவிடம்,
“அண்ணி நாளைக்கு வீட்டுக்கு வரோம். ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அண்ணாவை வீட்டில் இருக்க சொல்லுங்க. ரொம்ப நேரமா அண்ணாவோட ஃபோனுக்கு கால் செய்தோம் லைன் கிடைக்கல” என்றாள்.
“எப்போ வேண்டுமானாலும் வாம்மா. ஆனா முக்கியமான விஷயம் என்ன? அதை முதலில் சொல்லு”
“அது சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும். நாளைக்கு தெரியும். பை” என்று சொல்லி ஃபோனை வைத்தாள் விஜயா.
லக்ஷ்மி விஜயா விடம்,
“விஜயா”
“சொல்லுங்க அக்கா”
“யமுனா கிட்ட சொல்லலாமா?”
“அக்கா, தப்பா நினைச்சுக்காதீங்க. இப்போ வேணாம். ஏன்னா அண்ணா அண்ணி அப்பா என்ன சொல்லுவாங்கன்னு தெரியல. முக்கியமா அர்ஜூன் என்ன சொல்லுவான்னு தெரியல. நாளைக்கு போயிட்டு வந்து அப்புறம் யமுனா அண்ணிக்கு சொல்லலாம். அதுவும் இல்லாம வேலனுக்கு நம்ம ஹர்ஷியை கல்யாணம் பண்ணி கொடுக்க அவங்க ஆசைப் படறது நம்ம எல்லாருக்குமே தெரியும். அப்படி இருக்கும் போது அவங்க கிட்ட இப்போ சொன்னா கண்டிப்பா பிரச்சனை வரும். அதனால தான் அக்கா”
“நீ சொல்றதும் சரிதான் விஜயா” என்றாள் லக்ஷ்மி.
No comments yet.