K 8
” ஆர்யன் ஒரு நிமிஷம்.. நான் ஒன்னு கேட்பேன் நீங்க தப்பா எடுத்துக்ககூடாது.. நீங்கதான செல்வா… “ என பிரியா கேட்க அவளை பார்த்து சிரித்தான் ஆர்யன். அவன் சிரிப்பதை பார்த்த பிரியா,
” என்னாச்சு ஆர்யன்.. ஏன் சிரிக்கறீங்க.. நீங்கதான செல்வா.. ” என மறுபடியும் கேட்க,
” ஏங்க.. யாருங்க அந்த செல்வா.. ஆதிராவும் என்கிட்ட இதையே தான் கேட்டுட்டு இருந்தாங்க.. என்னை பார்த்தத்துல இருந்து இதேதான் கேட்டுட்டே இருக்காங்க.. நான் செல்வா எல்லாம் இல்லங்க.. நான் ஆர்யன் அவ்ளோதான்.. ” என ஆர்யன் சிரித்துகொண்டே சொல்ல பிரியா குழப்பதுடன் அவனை பார்த்தாள்.
” என்னங்க இன்னும் நீங்க என்னனு நம்பலயா.. ஆதிரா தான் என்னை நம்ப மாட்டிங்கறாங்க.. நீங்களாவது என்னை நம்புங்க ப்ளீஸ்.. “
” சரிங்க.. நீங்க சொல்றதை நான் நம்பறேன்.. பாவம் ஆதிரா தான் உங்களை செல்வான்னு நினச்சு ரொம்ப குழப்பத்துல இருக்கா.. அவகிட்ட நான் சொல்லி புரிய வைக்கிறேன்.. “
” ம்ம் ஓகே பிரியா.. ஆமா அந்த செல்வா யாரு.. ஆதிரா எதுக்கு அவர்மேல இவ்ளோ அப்பெக்ஷனா இருக்காங்க.. ” என ஆர்யன் கேட்க முதலில் தயங்கியவள் பிறகு அவனிடம் மும்பை சம்பவத்தை ஒன்று விடாமல் சொல்ல அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஆர்யனுக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை.
” அவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில செல்வா அவளை காப்பாத்தி இருக்காரு.. அதுல இருந்து அவளுக்கு அந்த கனவு அடிக்கடி வந்துட்டு இருக்கு.. அதனால அவளுக்கு எப்படியாவது செல்வாவை மறுபடியும் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டா.. செல்வா சாயல்ல உங்களை பார்த்ததும் அவளால முதல்ல நம்பவே முடியல..
அதனால தான் உங்ககிட்ட அப்படி எல்லாம் நடந்துகிட்டா.. நீங்க அவளை தப்பா எல்லாம் நினைக்காதீங்க ஆர்யன்.. எனக்கு தெரிஞ்சு அவ எந்த பசங்ககிட்டயும் இப்படி எல்லாம் நடந்துகிட்டதே இல்ல.. ” என பிரியா அவனுக்கு புரிய வைக்க முயற்சிக்க அவளை பார்த்து சிரித்தான் ஆர்யன்.
” நீங்க இதெல்லாம் என்கிட்ட சொல்லணும்னே இல்ல பிரியா.. ஆதிராவோட நிலைமை எனக்கு நல்லாவே புரியுது.. ஆனா நான் உண்மையாலும் தான் சொல்றேன்.. நான் செல்வா இல்ல.. நான் ஆர்யன்.. நீங்களாவது என்னை நம்புங்க ப்ளீஸ்.. ” என ஆர்யன் சொல்ல,
” எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஆர்யன்.. ஆதிரா சொல்றதை நம்பறதா நீங்க சொல்றதை நம்பறதான்னு எனக்கு தெரியல.. ரொம்ப குழப்பமா இருக்கு.. சரி நீங்க கிளம்புங்க… சக்தி வெயிட் பண்ணிட்டு இருப்பாரு… ” என்றாள் பிரியா.
” ஆங்.. மறந்துட்டேன் பாருங்க.. நாளைக்கு ஆதிரா பர்த்டே தான.. “என ஆர்யன் கேட்க பிரியா அவனை ஆச்சரியமாய் பார்த்தான்.
” ஆமா.. ஆதிராவுக்கு பர்த்டேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்.. ” என பிரியா கேட்க,
” அது.. பேசிட்டு இருக்கப்ப விக்னேஷ் சொன்னாரு.. அவர் சொன்னதுனால தான் நாளைக்கு ஆதிரா பர்த்டேன்னு தெரியும்.. ” என்றான் ஆர்யன்.
” ஓ.. விக்னேஷ் சொன்னான்னா.. ஆமா ஆர்யன் நாளைக்கு அவளோட பர்த்டே.. காலையில அவ வளர்ந்த ஆசிரமத்துக்கு போய் அங்க இருக்க குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு நாளைக்கு முழுசும் அவங்களோட தான் இருப்பா.. “,
” அப்போ நாளைக்கு ஆதிரா ஆபிஸ் வர மாட்டாங்களா.. ”
” எனக்கு தெரிஞ்சு வரதுக்கு வாய்ப்பு இல்ல.. ஏன் கேக்கறீங்க.. “
“ஆங்.. ஆபிஸ் வந்தா கேக் கட் பண்ணலாம்ல.. அதுக்குதான்… சரி ஓகே நான் கிளம்பறேன்..” என்ற ஆர்யன் அங்கிருந்து கிளம்ப பிரியா ஆதிராவை பார்க்க உள்ளே சென்றாள்.
பல எதிர்பார்ப்புகளுடன் விடிந்தது அடுத்த நாள் காலை பொழுது..
தூக்கத்தில் இருந்து கலைந்த ஆதிரா எழுந்து அமர்ந்தவளுக்கு தலை ரொம்ப பாரமாக இருக்க தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள் ஆதிரா.
கதவை நீக்கிக்கொண்டு வந்த பிரியா, ” என்ன பர்த்டே பேபி.. ரொம்ப ஹேங்ஓவரா இருக்கா.. வேணுனா லெமன் ஜூஸ் இல்லன்னா மோர் எதுவும் கொண்டு வரட்டுமா.. ” என சிரித்துக்கொண்டே கேட்க அவளை முறைத்தாள் ஆதிரா.
” ஏன்டி என்ன கிண்டலா.. நான்தான் ஏதோ தெரியாம குடிச்சுட்டேன்.. நீ அதை பார்த்துட்டு இருந்தியா.. என்னை வந்து தடுத்து இருக்கலாம்லடி.. ” என ஆதிரா அவளை திட்ட,
” ம்ம் சொல்லுவடி.. சொல்லுவ.. நீ வேணும் வேணும் அப்படினு வாங்கி குடிச்சுட்டு என்னை குத்தம் சொல்றியா.. நல்லா இருக்குடி.. நேத்து நீ என்னென்ன அலப்பறை பண்ணுன தெரியுமா.. பாவம் ஆர்யன்.. அவரை போதும் போதுங்கற அளவுக்கு டார்ச்சர் பண்ணி இருக்க.. ” என பிரியா சொல்ல அதை கேட்டு அதிர்ந்து போய் அவளை பார்த்தாள் ஆதிரா.
பிரியா சொன்னதை கேட்டு அதிர்ந்து போன ஆதிரா, ” ஏய் என்னடி சொல்ற.. நான் ஆர்யனை டார்ச்சர் பண்ணுனேனா.. இல்ல இல்ல நீ பொய் சொல்ற.. நான் நம்பமாட்டேன்.. ” என சொல்ல,
” நான் எதுக்குடி பொய் சொல்லணும்.. நான் உண்மையாலுமே தான் சொல்றேன்.. ” என்ற பிரியா நேற்று நடந்ததை ஒன்று விடாமல் அவளிடம் சொல்ல எல்லாத்தையும் கேட்ட ஆதிரா அதிர்ச்சியடைந்தாள்.
” இதெல்லாம் பத்தாதுன்னு சாப்பாடு ஊட்டி விட சொல்லி அடம் பிடிச்சிருக்க.. அப்புறம் வேற வழி இல்லாம ஆர்யன் தான் உனக்கு சாப்பாடு ஊட்டி விட்ருக்காரு.. ” என பிரியா சொல்ல ஆதிரா தன்னையே நொந்து கொண்டவள்,
” என்னடி.. நான் இவ்ளோ பண்ணிருக்கேனா.. ஆர்யன் என்னை என்ன நினைச்சுருப்பாரு.. எனக்கு அறிவே இல்லடி.. சரக்குக்கும் ஜூஸுக்கும் கூட வித்தியாசம் தெரியல.. இனி எப்படி அவர் முகத்தை பார்ப்பேன்.. ” என கவலையுடன் சொன்னாள் ஆதிரா.
” அதெல்லாம் இப்போ யோசிச்சு என்னமா பண்ண முடியும்.. நைட் அந்த ஜூஸை குடிக்கறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும்… அதுசரி முதல்ல குடிச்சப்ப தான் அது சரக்குன்னு தெரியல.. ஆனா எதுக்குடி மறுபடியும் மறுபடியும் கேட்டு வாங்கி குடிச்சுருக்க.. அந்த பையன் பாவம் ரெண்டு நாள் லீவ் வேணும்னு ஓடிட்டானாம்மா.. அவனையும் டார்ச்சர் பண்ணிருக்க நீ.. ”
” ஏய் ப்ளீஸ்.. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் சொல்லாத.. என்னால முடியல.. என் லைப்ல இப்படி ஒரு பர்த்டே மார்னிங் நான் பார்த்ததே இல்ல.. மூடே ஸ்பாயில் ஆகிருச்சு.. ” என ஆதிரா கவலையுடன் சொல்ல,
” சரி விடுடி.. நேரமாச்சு பாரு.. சீக்கிரம் குளிச்சி ரெடியாகி வா.. ஆசிரமத்துக்கு போவோம்.. ” என்றாள் பிரியா.
” அப்படினா நீயும் என்கூட ஆசிரமத்துக்கு வரியா… ” அதிரா நம்ப முடியாமல் கேட்க,
” ஆமாடி.. நானும் தான் வரேன்.. நான் போய் டிபன் ரெடி பண்றேன்.. நீ சீக்கிரம் ரெடியாகி வா.. அப்புறம் ஒரு நிமிஷம் இரு.. வரேன்.. ” என்ற பிரியா அவளுக்காக வாங்கி வைத்திருந்த புது துணியை எடுத்துகொண்டு வந்தவள்,
” விஷ் யூ ஹாப்பி ஹாப்பி பர்த்டே.. ” என கையில் கொண்டு வந்த கவரை அவளிடம் நீட்ட அதை வாங்கி ஆர்வமாய் பிரித்தாள் ஆதிரா.
அவளுக்கு பிடித்த கலரில் இருந்த லெகங்காவை பார்த்ததும் சந்தோசமான ஆதிரா, ” ட்ரெஸ் சூப்பரா இருக்குடி.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..” என அவளை அணைத்துகொண்டவள் திடீரென அழ அதை பார்த்து பதறிய பிரியா,
” ஹேய் என்னாச்சுடி.. ஏன் அழற.. ” என பதட்டத்துடன் கேட்க,
” இல்லடி.. நீ இருக்கறதுனால எனக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்து தர.. நீயும் இல்லனா எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்லன்னு யோசிக்கறப்ப அழுகை வந்துருச்சுடி.. ” என ஆதிரா அழ அவளது கண்ணீரை துடைத்துவிட்டாள் பிரியா.
” ஏய் என்னடி.. இப்படி எல்லாம் சொல்ல கூடாதுன்னு உன்கிட்ட எத்தனை தடவ சொல்லிருக்கேன்.. உனக்கு யாரும் இல்லனு நீ எப்பவும் சொல்லகூடாது.. நான் இருக்கேன்.. என் அப்பா அம்மா என்னை மாதிரி தான்டி உன்னையும் நினைக்கறாங்க.. உனக்கே அது தெரியும்ல.. நீ இப்படி எல்லாம் பேசுறது அவங்க கேட்டா ரொம்ப வருத்தப்படுவாங்க.. ” என பிரியா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஆதிரா போன் அடிக்க,
” போன் எடு.. அம்மாதான் கூப்பிடுவாங்க.. ” என பிரியா சொல்ல ஆதிரா போனை எடுத்து யாரென பார்க்க பிரியாவின் அம்மாதான் அழைத்து இருக்க கண்ணீரை துடைத்துக்கொண்டு சிரித்தாள் ஆதிரா.
” அம்மாதான்டி கூப்பிடறாங்க.. ” என்ற ஆதிரா சந்தோசமாய் அட்டன் செய்ய பிரியாவின் அப்பா, அம்மா, அண்ணா என மூவரும் மாறி மாறி அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி போனை வைக்க சிரித்துகொண்டே வைத்தாள் ஆதிரா.
” என்னடி இப்போ ஹாப்பியா.. சீக்கிரம் கிளம்பு.. ” என பிரியா சொல்லிவிட்டு கிட்சனுக்கு செல்ல ஆதிரா சந்தோசமாய் குளிக்க சென்றாள்.
No comments yet.