ஓட்ட வண்டியில் ஒரு சவாரி!

Ival Minmini | 29 Mar 2026 | Share

“சரியான ஓட்ட வண்டிய்யா இது… கடமுட கடமுடன்னு… ஆனது ஆச்சு… இத குடுத்துட்டு வேற நல்ல மினி வேனா வாங்க வேண்டிதான? நாங்களும் ஆடாம குலுங்காம வருவோம்ல” என மட்டம் தட்டி பேசிக் கொண்டே வந்தாள் இளமதி. கூட அவளின் தோழிகளும் அவள் பேசுவதற்கு தாளம் தட்டிக் கொண்டே வந்தனர்.

குலுங்கிக் கொண்டே செல்லும் அந்த பழைய பெரிய வேனின் சொந்த காரர் தான் டேவிட். அவர் தான் அந்த வண்டியை ஓட்டுபவரும் கூட. அதுவரை அமைதியாக வந்தவர் “என்னம்மா பண்றது உன் புருசன் சிதம்பரம் ஒரு ஆறு லட்சம் என் கிட்ட குடுத்து வச்சுருக்கான்… நான்தான் அத பேங்குல போட்டுட்டு கஞ்சதனமா நீ சொல்ற மாதிரி இந்த ஓட்ட வண்டியே கெதின்னு கிடக்கேன்…!” என கிண்டலாய் பேசினார். அதற்கு அவள் “ஐய… உன் நல்லதுக்கு தான சொன்னேன்!” என முகத்தை சுளித்துக் கொண்டாள். மற்றவள்கள் அதற்கும் சிரித்தனர். 

அதை அவர் தன் காதுகளில் வாங்கிக் கொள்ளவில்லை. “எம்மா… நீங்க சொன்ன கோவில் வந்துடுச்சு… பாத்து இறங்குங்க… கண்ணு தெரியாம கீழ விழ போறீங்க!” என வண்டியை நிறுத்திவிட்டு பின் பக்கமாய் திரும்பி சொன்னார். “அதெல்லாம் எங்களுக்கு தெரியும்… உன் ஓட்ட வண்டிய ஓடாம பாத்துக்க… நாங்க இறங்குறப்ப… பிரேக்கு பிடிக்காம ஓட போவது!” என ஒரு கிழவி அவரிடம் வம்பிழுத்தாள். “அடி கிழவி… மொதல்ல நிக்க வச்சு உன் மேல விட்டு ஏத்துறேன் இரு!” என கோபித்துக் கொண்டார் டேவிட். பின் அந்த வண்டியில் இருந்து மொத்தமாய் ஒரு ஏழு பேர் இறங்கினர். பிறகு டேவிட்டும் இறங்கினார். இறங்கியவுடன் அந்த கிழவி “மாரியாத்தா… உன்ன பாக்க வந்துட்டேன்டி… என் ஆத்தா…வந்துட்டேன்டி!” என கத்திக் கொண்டே அங்கிருந்த அம்மன் கோவிலை நோக்கி ஓடினாள். 

அதை பார்த்ததும் இவருக்கு சிரிப்பு வந்தது. “பெரிய கோவிலுதான் போல… ஏயெப்பா… எத்தன காரு… எத்தன வேனு…!” என திகைத்தார் டேவிட். எல்லாரும் அந்த கோவிலுக்கு வருவதற்காக தான் இந்த டேவிட்டின் வேனில் வந்தனர். முக்கியமாக அவர்களின் பட்ஜெட்க்கு இவர்தான் சரி வருவார். எப்படியும் அவர்கள் வர நேரமாகுமென சிகரெட் ஒன்றை கையில் எடுத்தார். எதிர் தரப்பில் அந்த கோவிலின் வாசல் இருக்க ஏதோ யோசித்துவிட்டு எடுத்த சிகரெட்டை பாக்கெடிலே வைத்துவிட்டார். நேரம் சென்றது, பின் வந்தவள்களின் ஒருத்து “அண்ணே… அண்ணே…” என ஓடி வந்தாள். “என்ன ஆச்சு?” என இவரும் பதட்டமாக… “நம்ம கூட வந்துச்சுல்ல அதான்… நம்ம பொண்ணாத்தா கிழவி… இழுத்துக்கிட்டு கிடக்குண்ணே…” என சொல்ல அவர் உடனே “ஐயோ…?!” என அவளை பார்க்க ஓடினார். கோவில் வாசல் வர தன் காலனியை கழட்டிவிட்டு உள்ள போய் பார்த்தார்.

அவள் சொன்னதுப் போல் கிழவி மூச்சு விட முடியாமல் இழுத்துக் கொண்டு கிடக்க… முதலில் அவர் கூட்டமாக நின்ற எல்லோரையும் விளக்கி விட்டார். பின் அவளுக்கு நெஞ்சை தடவிக் கொடுத்துக் மிக கம்மியான மிடறு தண்ணீர் குடுத்து அவளை ஆசாவசப் படுத்தினார். பின்‌ எல்லோரையும் அங்கே இருக்க சொல்லிவிட்டு அந்த கிழவியையும் துணைக்கு கூடவே ஒரு பெண்ணையும் கூட்டிக் கொண்டு அந்த வேனிலே பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்த கிழவியை சிகிச்சைப் பார்த்து அனுப்பி வைத்தனர். பின் அவர்கள் அந்த கோவிலுக்கே திரும்பி வர அப்போது தான் நிம்மதியாக இருந்தது அங்கிருந்த எல்லோருக்கும். “ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் நீ என் குலசாமி தான் தங்கம்” என தன் வேனைப் பார்த்து பெருமிதம் கொண்டார் டேவிட்.

கோவில் காரியங்களை முடித்துவிட்டு வந்த எல்லோரும் அமைதியாக வந்தனர். அது இவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பின் அவர்களின்‌ இடம் வர எல்லோரும் அமைதாயாக இறங்கிட அவரும் இறங்கினார். அப்போது “அண்ணே… எப்பயுமே… உன்னையும் உன் வேனையும் கிண்டல் பண்ணேட்டே வருவோம்… அப்போல்லாம் நீ திட்டிருக்க… ஆனா இப்ப… அந்த கிழவிக்கு ஒன்னுன்னதும் எந்த தயக்கமும் இல்லாம மதம் இனம்ன்னு பாக்காம நீயும் ஓட்ட வண்டி ஓட்ட வண்டின்னு நாங்க கிண்டல் பண்ண இந்த வேனும் தான்ண்ணே வந்தீங்க… பெரிய பெரிய காரு புது வேனுன்னு வச்சுருந்த எந்த புண்ணிய ஆத்மாவும் உதவிக்கு பக்கத்துல வரல… ரொம்ப நன்றிண்ணே…என் மனசார சொல்றேன் நீ நல்லா இருப்பண்ணே” என‌ இளமதி சொன்னாள்.

அவர் பதிலுக்கு “என் தங்கம் இருக்குறவர எனக்கென்ன குறை… நான் இப்பவே நல்லாதான் இருக்கேன். அந்த கிழவிய பாத்துக்கோ… அடுத்த ட்ரிப்ல நல்ல குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறேன்னு சொல்லிருக்கு!” என சொல்லி விட்டு அவரின் தங்கத்தில் தேரில் ஏறினார். அவளும் இதமாய் சிரித்தாள்.

                       

                              ***முற்றும்***

© மின்மினி 

    No comments yet.