Episode 8

ஶ்ரீ துர்க்கா | 11 Dec 2025 | Share

அல்லி 8

ஏற்காடு

எழிலனின் கை வளைவில் நிம்மதியாய் உறங்கி இருந்தாள் தென்றல். சற்று முன்னர் அவள் கண்டது கனவு தான் என்று நம்பவே முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தவளைத் தட்டிக் கொடுத்து, குழந்தையைத் தூங்க வைப்பது போல் துயில் கொள்ள வைத்திருந்தான் எழிலன். அவனிடம் தஞ்சம் கொண்டிருக்கையில் அத்தனையும் மறந்து நிம்மதியாய் உறங்க முடிகிறது அவளால்.

பொழுது விடிந்த பின்னரும் கூட எழாமல், ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து தன்னாலேயே ஒரு குறுநகை முகிழ்ந்தது எழிலனிடத்தில். தான் எழுந்தால், அவளது துயில் கலைந்து விடும் என்பதால் அமைதியாய் அவளைத் தட்டிக் கொடுத்தபடி படுத்திருந்தான் அவன். 

தென்றலுக்கு வெளியில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று அவ்வளவு ஆசை. ஆனால், அவள் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் வேலைக்கே செல்ல வேண்டாம் என்று மறுத்து விட்டார் தெய்வேந்திரன். அவள் அவர்களது உடைமையாய் இருந்த போது எழிலால் எதுவும் பேச முடியவில்லை, ஆனால் இப்போது தான் அவள் அவனுக்கு சொந்தமானவள் ஆயிற்றே..! இனி அவன் சொல்வது தானே அங்கு பிரதானமாக இருக்கும்.

தங்களது ஊருக்கு பக்கத்து ஊரில் இருந்த தனியார் பள்ளி ஒன்றில் பேசி, தென்றலுக்கு ஆசிரியர் நியமனம் வாங்கி விட்டான் எழில். அது ஒன்றும் அவ்வளவு எளிதாய் கிடைத்து விடவில்லை. எழில் எத்தனையோ பாடுபட்டு, தனது செல்வாக்கையும் பயன்படுத்தி வாங்கிக் கொண்ட நியமனம் அது. அத்தனை கஷ்டங்களும் அவள் ஒருத்தியின் சந்தோஷத்திற்காகத் தான்..! 

எழில் அந்தக் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (Village administrative officer) பணிபுரிகிறான். அப்படி வேலை விடயமாக வந்த போது தான் தென்றலை அவன் முதன்முதலில் சந்தித்தது. கண்டவுடன் காதல் என்றெல்லாம் சொல்ல முடியாது. தென்றல் மேல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருந்த ஈர்ப்பு பின்பொரு நாள் காதலாக மாறி, இன்று அவள் அவனது மனைவியாக முழுமையடைந்தும் நிற்கிறது. அவனை முதன்முதலில் தென்றல் பால் ஈர்த்தது, அவளது பெயர் தான் என்பான் எழில். என்னதான் அவனை ஒரு அலுவலராக தெரிந்திருந்தாலும், அவன் தென்றலை பெண் கேட்டு வந்திருந்த போது அவனைப் பற்றி நன்கு விசாரித்தே தான் தென்றலை திருமணம் செய்து வைத்தார் தெய்வேந்திரன். ஒரு தந்தையாக அவரது கடமையில் அவர் சரியாகத் தான் நடந்து கொண்டிருந்தார். அது தென்றலின் குடும்பத்தின் மீதான நம்பிக்கையையும் அன்பையும் இன்னும் பலப்படுத்தி இருந்தது எழிலனுக்கு. 

இன்று தான் தென்றலுக்கு தனது கல்யாணப் பரிசை தரப் போகிறான் எழில். அந்த வேலைக்கான நியமனத்தைப் பார்த்து விட்டு, தென்றல் எந்தளவுக்கு சந்தோஷப்படுவாள் என நினைத்து நினைத்தே பூரித்துப் போனான் அவன். தென்றலுக்கு டீச்சிங் ரொம்பவே பிடிக்கும். ‘ஆர்ட் ஆஃப் டீச்சிங்’ பற்றி எழிலுடன் பொழுது போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பாள். பேச்சின் முடிவில் ஒரு பெருமூச்சு விட்டு, “ஹூம்… இதெல்லாம் பேசிப் பேசி எதுக்கு ஆசையை வளத்துக்கணும்… நான் தான் வேலைக்கே போகப் போறதில்லையே..?” என்று ஏக்கமாக சொல்லி வைப்பாள். எழிலுக்கு என்னவோ போல் கஷ்டமாக இருக்கும் அவளது செய்கை.‌ அப்பாவை மீறி அவள் எதுவும் செய்ய மாட்டாள் என்பது தெரிந்ததால், அது பற்றி துருவி துருவி எதையும் கேட்பதில்லை. அன்றுடன் ஒப்பிடும்போது இன்று, அவள் மீது தனக்கான உரிமை இன்னுமின்னும் அதிகமாகி இருப்பதை எண்ணும் போதே சர்க்கரையாய் இனித்தது அவனுக்கு.

“சீக்கிரமாவே ஏந்திரிச்சுட்டியா என்ன..?” என சோம்பல் முறித்தபடியே எழுந்து அமர்ந்தாள் தென்றல். 

“நான் ஒண்ணும் சீக்கிரம் ஏந்திரிக்கல… மேடம் தான் ரொம்ப லேட்டா ஏந்திரிச்சிருக்கீங்க…” என்றபடியே எழுந்து, அவள் அருகில் தானும் அமர்ந்து கொண்டான் எழில்.

“ஓஓ… ரொம்ப லேட் பண்ணிட்டேனா..?” என அசடு வழிந்தவள், “ஏதோ அசதில தூங்கிட்டேன் எழில்… நேத்து கல்யாணத்துக்கு ரொம்ப நேரம் முழிச்சிருந்தேனா, அது ரொம்ப அசதியா இருந்திச்சு… கூடவே அந்த கனவு… யப்பா! அதை நினைச்சா இப்பவும் நடுங்குது எழில் எனக்கு… ஒரே கரும்புகையா என்னை சூழ்ந்துக்கிட்டு அசையவே விட மாட்டேனுடுச்சு… செத்துட்டேன்னு நினைச்சேன் தெரியுமா..?” என்றவளுக்கு உடல் உண்மைக்கும் நடுங்கியது. 

“ரிலாக்ஸ்டா… ரிலாக்ஸ்…” என அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவன், “நல்ல நாள் அதுவுமா எதுக்கு இந்த தேவையில்லாத விசயத்தை பத்தி பேசணும்..? நீ எழுந்து ரெடியாகு… முதல்ல நம்ம கோவிலுக்கு போயிட்டு வரலாம்… அப்படீன்னா உனக்கும் மனசுக்கு நிம்மதியா இருக்கும்… நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போயிட்டு வந்த மாதிரியும் இருக்கும்…” என்றான்.

“இதோ… பத்து நிமிஷத்துல ரெடி ஆகிடறேன்…” என்றவள் அரை மணி நேரம் கழித்து ஆயாசமாய் வந்து சேர்ந்தாள். அவளது நேர முகாமைத்துவம் ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை எழில்.

சற்றே வேலைப்பாடு அமைந்த இளம் பச்சை நிற சேலை. அதற்கு அதே நிறத்தில் பிளேனாக பிளவுஸ் அணிந்திருந்தாள் தென்றல். அவளை அப்படியே அள்ளிக் கொள்ளலாம் போல் இருந்தது எழிலுக்கு. மணமான பின்னும் கூட சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் கணவனையும் மனைவியையும் பிரித்து வைத்திருக்கும் மாமனார் மாமியார் மீது, முதல் தடவையாக அவ்வளவு கோபம் வந்தது அவனுக்கு. தன் அத்தனை உணர்வுகளையும் ஒன்றுதிரட்டி ஒரேயொரு நெற்றி முத்தத்தில் பரிசளித்திருந்தான் அவன். அதன் பின்னரும் அரை மணி நேரம் கழித்தே கோவிலுக்கு கிளம்பினார்கள் அவர்கள்.

கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டிருந்ததில், மனம் நிரம்பவே நிம்மதி அடைந்திருந்தது இருவருக்கும். ஏதோ சிந்தனையில், தன் கை விரல்களை எழிலுடன் கோர்த்துக் கொண்டவள் அவன் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.‌ அவளின் பிரார்த்தனை எல்லாம், அவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான். சாஸ்திர கணக்குகளின் படி, அது அவளது இருபத்தாறு வயது நிறைவுற்றால் மாத்திரமே சாத்தியம்..! அதற்கு சரியான பதிலை காலம் தான் அவர்களுக்கு சொல்ல வேண்டும்.

                   ✯✯✯✯✯

அத்திப்பட்டு

“எனக்கென்னமோ மனசே சரியில்லை சரசு. வழமையா கோவிலுக்கு போறதுன்னாலே ஒரு எனர்ஜி வரும்… சாமிக்கு தீபாராதனை காட்டினா ஒரு நிறைவு வரும்… ஆனா இப்போ ரெண்டு மூணு நாளா அப்படி இல்லை எனக்கு… ஏதோ ஒரு கெட்டது நடக்கப் போறதா உள்மனசு சொல்லிட்டே இருக்கு… நம்ம ஊருக்குள்ள ஏதோ ஒரு அந்நிய சக்தி ஊடுருவி இருக்கிற மாதிரியே ஒரு உணர்வு…”

தன் மனைவியான சரஸ்வதியிடம் சொல்லி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார் முருகர் கோவில் பூசாரி அஸ்வத்தாமன்.

“என்னங்க சொல்றீங்க..? எனக்கு ஒண்ணுமே புரியல… ஏதாவது பிரச்சனையா..?”

“தெரியல சரசு… நம்ம சீதாலக்ஷ்மி வேற இறந்துட்டால்ல..? அதெல்லாம் சாதாரணமா நடக்கிற மாதிரி தெரியல எனக்கு… எந்தக் காரணமுமே இல்லாம, நாம கோவிலுக்குனு நேர்ந்து விட்ட கோமாதா எப்படி இறக்கும் சொல்லு..? எனக்கு தெரிஞ்ச மிருக வைத்தியரை வச்சு, லக்ஷ்மியை தகனம் பண்ணறதுக்கு முன்னால நல்லா செக் பண்ணேன்… ஆனா அவரால எதையும் கண்டுபிடிக்க முடியல… மர்மமான முறையில அவ இறந்திருக்கான்னு தான் ஸ்டேட்மென்ட் குடுத்திருக்காரு… நாப்பது வருஷ அனுபவமுள்ள மனுஷன்… எந்த ஒரு நோயையுமே இதுவரைக்கும் கண்டுபிடிக்காம விட்டதில்ல அவரு… அவரையே சுத்தல்ல விட்டிருக்குன்னா… இது வேற என்னமோ சரசு… எல்லாமே ஏதோ ஒரு புள்ளிய சுத்தி, காரணமா தான் நடக்குது… ஆனா எனக்கு தான் எதுவும் புரிய மாட்டேங்குது…”

“எனக்குமே எதுவும் புரியலங்க… உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்குன்னா அத தெளிவுபடுத்திக்கிறதுக்கு ஒரு வழி இருக்கு… நான் சொல்றேன், அது சரியா வருமான்னு பாருங்க…”

“ம்ம்…”

“பொதுவா இந்த குறி சொல்றவங்க இருக்காங்க இல்ல..? அவங்களுக்கு இந்த மாதிரியான விசயங்கள் ரொம்ப அத்துப்படியா இருக்கும்… அந்த மாதிரி யாரையாவது கூப்பிட்டு குறி கேட்டு பாக்கலாமா..?”

“செய்யலாம்… ஆனா… அதுக்கு நம்ம கோவில் திருப்பணிக்குழு சம்மதம் தரணும்… அவங்க சம்மதத்த நான் கேட்டுப் பாக்கறேன்… அவங்க ஓகே சொன்னா நம்ம இந்த விசயத்தை ப்ரொசீட் பண்ணி பாக்கலாம்…”

“சரிங்க…”

                   ✯✯✯✯✯

அத்திப் பட்டு

ரத்னாவிடம் நடந்த அத்தனையையும் சொல்லி முடித்த பின்னரும் கூட அழுது கொண்டே இருந்தாள் அல்லி. அன்றே காவல்துறையிடம் அந்த பெண்ணின் சடலத்தை ஒப்படைத்திருந்தால் பரவாயில்லாமல் இருந்திருக்கும். ஆனால் இன்றோ காலம் கடந்து விட்டிருந்தது. அன்றைய பதற்றம் அவளையோ பெரியாத்தாவையோ நிதானமாக யோசிப்பதற்கு இடமளித்திருக்கவில்லை.‌ ஆனால் இன்று, இருவருக்குமே தாம் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் சூறாவளியாய் சுழட்டியடித்தது. 

அல்லி சொல்லி முடித்திருக்க, அத்தனையையும் கேட்ட ரத்னாவிற்கு தான் பேச்சே வரவில்லை. வாட்ஸப்பில் வந்திருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை அத்தனை தடவை காட்டி, அல்லியிடம் கேட்டு விட்டாள். ஒரு தடவையாவது, அது இவர்கள் புதைத்த பெண் அல்ல என்று சொல்லி விட மாட்டார்களா என்ற ஏக்கம் அவளுக்கு. ஆனால் பதிலுக்கு அவளுக்கு கிடைத்ததென்னமோ ஏமாற்றம் மாத்திரமே. போலீஸ்காரர்கள் காட்டும் தீவிரத்தைப் பார்த்தால் நிச்சயம் அவர்கள் இந்த வழக்கை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என்றே எண்ணத் தோன்றியது அவளுக்கு. அல்லியை நினைக்க நினைக்க கவலையாக இருந்தது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அல்லி ரத்னாவைக் காப்பாற்றி விடுவாள் என்று ரத்னாவுக்கு தெரியும். ஆனால் அல்லியைக் காக்க யார் வருவார்..? ‘அம்மா தாயே..! எங்க அக்காவ நீ தான் காப்பாத்தணும்…’ என மனதினுள் மானசீகமாக அவளது இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொண்டாள் ரத்னா.

இதற்கு மேலும் மறைக்க வேண்டாமென நினைத்து, இறந்து போன அந்தப் பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடிக் கொண்டிருப்பதை பெரியாத்தாவிடமும் சொல்லி வைக்க, மூச்சு பேச்சே இல்லை அவரிடம். இனி அடுக்கடுக்காக பொய்களை தயார் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விசாரணைக்காக அவர்கள் இங்கு வரக்கூடும். அதன்படி மூன்று பேரும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டுமென்றால் எந்தெந்த கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ரத்னாவுக்கும் பெரியாத்தாவுக்கும் சொல்லித் தர வேண்டும். இப்படி ஒரு காலம் தனக்கும் வருமென்று அல்லி கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை. இயலாமையில் அழுகை தான் வந்தது அவளுக்கு. 

‘அந்தப் பொண்ணக் கொன்னு நம்ம வீட்டு வாசல்ல போட்டுட்டு போனவன் சத்தியமா நல்லா இருக்க மாட்டான்… எங்களுக்கு பண்ணின பாவம் அவனை சும்மாவே விடாது…’ என்ற ஆதங்கமான எண்ணம் மாத்திரம் அவள் மனதில் கடைசியாக வந்து போனது.

                                  – அல்லி மலரும்…

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.