3. யுகன் சேட்டை

Bharathi Gunasekaran | 16 Nov 2025 | Share

          மயூரன் ஆதினி இருவரும் பேசிக்கொண்டு இருக்க அவள் கூறுவதை எல்லாம் கேட்டு அவளை முறைத்துக்கொண்டு இருந்த மயூரன் அவன் கூறியதை கேட்டு ஆதினி சிரிக்க அந்த   சிரிப்பை பார்த்த மயூரன் கோவம் எல்லாம் காற்றில் பறந்து போக  ‘ம் சிரிச்சே மயக்குடி, இந்த சிரிப்பு எப்பவும் உன்னோட முகத்துல நிலைச்சி இருக்கனும், அந்த சிரிப்புக்கு முழு சொந்தக்காரன் நானா இருக்கனும் நினைக்கிறேன், ம்…‌ ஆனா அது எப்போ நடக்குமோ,  என்னோட காதல எப்போ நா உன்கிட்ட  சொல்ல போறமோ தெரியல’ என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.
 
        அவனை பார்த்த ஆதினி “என்ன சார் அமைதியா இருக்கீங்க?” என்று கேட்டாள்.
   
        “ஆ ஒன்னும் இல்ல, சரி நா கிளம்புறேன் டைமாகுது, நீங்க தான் வருலன்னு சொல்லிட்டிங்களே, அதுனால நா கிளம்புறேன்” என்றான் மயூரன்.
 
          “ம் சரிங்க சார், ம் தேங்க் யூ” என்றாள் ஆதினி. 
   
         அதை கேட்டு திரும்ப அவளை முறைத்த மயூரன் “யுகன் குட்டி உங்க அம்மாவ அந்த தேங்க்ஸ் எல்லாம் சேர்த்து வெச்சி உண்டியல்ல போட்டு வெக்க சொல்லு, ஒரு நாளைக்கு உடைச்சா எதுக்காவது யூஸ் ஆகும்” என்றான்.
   
         அதை கேட்டு ஆதினி தலையை கீழே சாய்த்து உதடுக்குள் சிரிக்க யுகன் குட்டி மயூரனை பார்த்து “அத எப்படி உண்டியல்ல போட முடியும் மயூ” என்று விழித்தவாறு கேட்டான்.
 
          “ம் அதையும் உங்க அம்மா கிட்டையே கேளு” என்றவன் “இந்தா யுகன பிடி” என்று ஆதினி கையில் கொடுத்தவன் “பை செல்லம்” என்று அவன் கன்னத்தை கிள்ளி தன் உதட்டில் வைத்து முத்தம் கொடுத்தவன் “பை” என்று ஆதினியை பார்த்து முறைத்து விட்டு காரில் ஏறினான்.
 
        அதை பார்த்து ஆதினி மெலிதாக சிரிக்க “பை மயூ” என்று கையை ஆட்டி கத்தினான் யுகன்.

          “பை தங்கம்” என்ற மயூரன் ஆதினி முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து காரை எடுத்து சென்றான்.
 
        போகும் காரை பார்த்த ஆதினி தலையை திருப்பி ‘யுகன் குட்டி நாம்ப போலாமா?” என்று கேட்டாள்.
 
          “ஆ அம்மா, எனக்கு சாக்லேட் வேணும்” என்றான் யுகன்.
   
       “சாக்லேட்டா எதுக்கு?” என்று கேட்டாள் ஆதினி.
 
         “அது நா புது  ஸ்கூலுக்கு சமத்தா வந்து சேர்த்துக்கிட்டேன் இல்ல, சமத்தா ஸ்கூல் வருவேன் இல்ல அதுக்கு தான் வாங்கி கொடுமா” என்று தன் குட்டி தலையை ஆட்டி ஆட்டி கூறினான்.
 
          அதை கேட்டு தன் மகனை  செல்லமாக முறைத்த ஆதினி “நீங்க ஸ்கூல் வர நா உங்களுக்கு லஞ்சம் தரம் அப்படியே தானே செல்லம்?” என்றாள்.

         அதை கேட்டு இன்னும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தன் அம்மாவை பார்த்த யுகன் “ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா நா உன்னோட செல்ல பையன் தானே ஒன்னே ஒன்னு மட்டும் வாங்கி கொடு ப்ளீஸ் ப்ளீஸ்” என்று தன் அம்மா தாடையை பிடித்து அழகாக கொஞ்சி கேட்டான்.

         அந்த அழகை பார்த்து அதற்கு மேல் எந்த தாயிக்கு தான் மறுக்க தோணும் “ம்….. இப்படியே எதாவது பண்ணி எனக்கு ஐஸ் வெச்சி வாங்கிக்கோ, அப்படியே….. உன்ன…..” என்று அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள் ஆதினி.
 
       “ஆ அம்மா” என்று தன் அம்மா கையை பிடித்து சிரித்த யுகன் “எனக்கு வாங்கி தரியா?” என்று பாவமாக கேட்டான்.
   
      “ம் அதுதான் ஐஸ் வெச்சிட்டேன்னு சொல்றேன் இல்ல, அப்பறம் எதுக்கு இன்னும் பாவமா மூஞ்சிய வெச்சிட்டு திரும்ப கேட்குற, வாங்கி தரேன் வா” என்றாள்.

          அதை கேட்டு ஈ என்று தன் குட்டி பல் அனைத்தையும் காட்டி சிரித்த யுகன் “தேங்க் யூ மா” என்று அவள் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
   
        அதில் சிரித்த ஆதினி “அதுதான் கிஸ் கொடுத்துட்ட இல்ல உனக்கு சாக்லேட் கிடையாது” என்றாள்.

          அதை கேட்டு தன் அம்மாவை அதிர்ச்சியாக பார்த்த யுகன் தான் முத்தம் கொடுத்த தன் அம்மா கன்னத்தை தன் குட்டி கை வைத்து அழுத்தி அழுத்தி தேய்த்து துடைத்தவன் “நா கிஸ் கொடுத்தது போயிடுச்சி, நீ வாங்கி கொடு” என்றான்.

          அதை பார்த்து தன் மகனை வாயை பிளந்து பார்த்த ஆதினி “அடப்பாவி ஒரு சாக்லேட்காக அம்மாவுக்கு கொடுத்த முத்தத்தையே துடைச்சி எடுத்துட்டியா நீ” என்றாள்.
 
         அதில் திரு திருவென்று விழித்த யுகன் “நீ சாக்லேட் வாங்கி கொடு நா உனக்கு நிறைய கிஸ் தரேன்” என்றான்.
   
         “ஆ அப்படி ஒன்னும் வேண்டாம் போடா” என்றாள் ஆதினி.
   
        அதில் தன் அம்மாவை தன் குட்டி மூக்கு வாய் எல்லாம் சுருக்கி முறைத்த யுகன் “என்னமா நீ இப்படி பண்ற? ஒரு குட்டி பையன இப்படி ஏமாத்துறியே இது எல்லாம் நியாயமா, இந்த குட்டி மனசு எப்படி வலிக்குது தெரியுமா” என்று தன் நெஞ்சின் மீது கையை வைத்து கண்ணை சுருக்கி கூறினான் யுகன்.
   
         அதை கேட்டு சிரித்த ஆதினி “இந்த குட்டி நெஞ்சு வலிக்குதா?” என்று தன் மகன் நெஞ்சின் மீது கையை வைத்து கேட்டாள்.

           “ஆமா பாரு சுள்ளு சுள்ளுன்னு குத்துது தெரியுமா” என்றான் யுகன்.
 
          “ஹான் குத்தும் குத்தும் உனக்கு, இது எல்லாம் உனக்கு யாரு தான் சொல்லி தரா, வாய் வாய் ஊருப்பட்ட வாய் என்னோட பையனுக்கு, ஆனா எங்க இருந்து தான் இந்த வாய் வந்துச்சின்னு தெரியல” என்று அவன் குட்டி மூக்கை பிடித்து ஆட்டியவள் “டேய் எனக்கு தெரியாம வாய் பேச கத்துக்க எதாவது கிளாஸ் போறியா?” என்று கேட்டாள்.

           “ம்கூம் ஸ்கூல்ல கொடுக்குற homeworkகே என்னால பண்ண முடியல, அதையே நீ தான் எனக்கு பண்ணி தர, இதுல இதுக்கு வேற கிளாஸ் போய் அதுக்கு homework கொடுத்தா அத யாரு பண்றது?” என்று கேட்டான் யுகன்.

           “ம் அதுவும் சரிதான், அதையும் நான் தான் பண்ணி தரணும்” என்றாள் ஆதினி.
 
          “ஆ அதுதான் நா போகுல, என்னோட அம்மாவுக்கு நா கஷ்டம் கொடுக்க மாட்டேன்” என்றான் யுகன்.
   
        “ஐயோ என்னோட பையனுக்கு என்மேல எவ்ளோ பாசம், டேய் படவா அஞ்சு வயசு பையன் மாதிரியா பேசுற நீ” என்று அவன் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டினாள் ஆதினி.
 
        “ஆ ஆ அம்மா அம்மா” என்று தன் அம்மா இடுப்பில் அமர்ந்து ஆடி சிரித்த யுகன் தன் அம்மா கையை எடுத்து விட்டு “எனக்கு அஞ்சு வயசு ஆகுதுமா, நா பெரிய பையனாகிட்டேன்” என்று தன் தலைக்கு மேலே கையை உயர்த்தி காட்டி கூறினான்.
   
        “ஓ பெரிய பையன் ஆகிட்டீங்களா? அப்போ சரி பெரிய பையன் எல்லாம் சாக்லேட் சாப்பிட மாட்டாங்க, அதே மாதிரி என்னோட இந்த பெரிய பையனான யுகன் குட்டியும் சாக்லேட் சாப்பிட மாட்டாங்க தானே” என்றாள்.
   
       அதை கேட்டு தன் அம்மாவை அதிர்ச்சியாக பார்த்த யுகன் “நீ ஏன் இப்படி பண்ற? போமா நா சின்ன பையன் தான், எனக்கு சாக்லேட் வேணும்” என்று அழுவது போல் கூறினான்.

          அதில் சிரித்த ஆதினி “சரி சரி அழாத அம்மா வாங்கி தரேன், ஆனா ஒன்னு மட்டும் தான்” என்றாள்.
 
         “ஆ ஆ சரி சரி ஒன்னு மட்டும் போதும், அதுக்கு மேல நா ஒன்னு கூட கேட்க மாட்டேன்” என்றான் யுகன்.
 
        “அச்சோ சமத்து குட்டி வா போலாம்” என்று தன் மகனுடன் நடந்தாள்.

           “அம்மா நீ என்ன கீழ இறக்கி விடு, நீ எவ்ளோ நேரம் என்ன தூக்கிட்டு வருவ, உனக்கு கை கால் எல்லாம் வலிக்கும்” என்றான் யுகன்.

          அதை கேட்டு தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “செல்லம்” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் “அம்மாவுக்கு உன்ன தூக்கிட்டு போகுறதுல எந்த சிரமமும் இல்ல சரியா” என்றாள்.

         “ம் சரி ஆனாலும் பரவாயில்ல என்ன இறக்கி விடு, நா நடந்து வரேன்” என்று தன் அம்மா இடுப்பில் இருந்து கீழே இறங்கி நின்றான்.
 
       அதில் தன் மகனை பார்த்து சிரித்த ஆதினி “தங்க புள்ள” என்று அவன் கன்னத்தை தொட்டு தன் உதட்டில் வந்து முத்தம் கொடுத்தவள் “சரி வா போலாம்” என்று அவன் கையை பிடித்துக்கொண்டு நடந்தாள்.

       அப்போது அவள் ஃபோன் அடிக்க அதை எடுத்து பார்த்த ஆதினி “அச்சோ சார் கால் பண்றாரு” என்றவள் உடனே கால் அட்டன் செய்து “ஹலோ சார்” என்றாள்.

         “ஆதினி எங்கமா இருக்க? தம்பிக்கு ஸ்கூல்ல அட்மிஷன் போட்டாச்சி தானே?” என்று கேட்டார் தனபால்.
 
        “ஆ சார் போட்டாச்சி அடுத்த வாரத்துல இருந்து யுகாவ ஸ்கூல் வர சொல்லி இருக்காங்க” என்றாள் ஆதினி.

         “சரிமா ஒன்னும் பிரச்சனை இல்ல தானே? எதுவும் கேட்கல தானே?” என்று கேட்டார் தனபால்.

          “ஆஹா இல்ல சார் அதுக்குள்ள மயூரன் சார் வந்துட்டாரு, அவரே பிரின்சிபால் கிட்ட எல்லாம் பேசிட்டாரு” என்றாள் ஆதினி.

            அதை கேட்டு ஓ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கூறிய தனபால் “ம் சரிமா எதுவும் பிரச்சனை சங்கடம் இல்லாம ஸ்கூல் சேர்த்தாச்சி இல்ல அது போதும், சரி நீ ஆபிஸ் தானே வர?” என்று கேட்டார்.

          “ஆ சார் இப்போ தான் கிளம்பி இருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்” என்றாள் ஆதினி.

           “சரிமா சரி இரண்டு பேரும் பாத்து வாங்க” என்றவர் ஃபோனை வைத்தார்.

         ஆதினியும் ஃபோனை வைத்தவள் “ஸ் தேவகி மேடம்கு ஃபோன் பண்ணி சொல்லணும்” என்றவள் தேவகிக்கு கால் செய்தாள்.

         “யாருமா மில்க் கிட்டியா பேசுன?” என்று கேட்டான் யுகன்.

          “ஏய் அப்படி தான் சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்கேன் இல்ல, தாத்தான்னு சொல்லு” என்று தன் மகனை அதட்டினாள் ஆதினி.

           “ம் போமா மில்க் தான் நல்லா இருக்கு, அவரே எதுவும் சொல்லுல என்ன அப்படி தான் கூப்பிட சொல்லி இருக்காரு, நா அப்படி தான் கூப்பிடுவேன்” என்றான் யுகன்.

          “ம் இதுக்கு எல்லாம் அடி வாங்குற பாரு ஒரு நாள், எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிட்டு” என்றாள் ஆதினி.

           “ஏய் என்ன யுகா குட்டிய நீ மிரட்டிட்டு இருக்க?” என்று அந்த பக்கம் ஃபோனில் தேவகி குரல் கேட்டது.
 
        அதில் “ஸ் மேடம் அது சும்மா’ என்று தயக்கமாக இழுத்தாள் ஆதினி.
   
         அதில் சிரித்த தேவகி “சரி அட்மிஷன் போட்டாச்சி தானே? மயூ அங்க தான் வந்தான், வந்தான் தானே?” என்று கேட்டார்.
 
         “ஆ மேடம் வந்தாங்க அவங்க தான் பிரின்சிபால் கிட்ட பேசுனாங்க” என்றாள் ஆதினி.

            “சரி ஆதினி நீ எதுக்கும் டென்ஷனாக வேண்டாம், அங்க யுகா குட்டிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்றார் தேவகி.

           “தேங்க்ஸ் மேடம், நீங்க எனக்கு செஞ்ச செய்யுற உதவிய நா என்னைக்கும் மறக்க மாட்டேன்” என்றாள் ஆதினி.

            “ஆதினி என்னமா நீ பேசிட்டு இருக்க? தேங்க்ஸ் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க, சரி நீ எதுவும் யோசிக்காம அடுத்து என்னனு பாரு, ஆபிஸ் தானே போற?” என்று கேட்டார் தேவகி.
 
         “ஆமா மேடம், நா ஈவினிங் உங்கள ஹாஸ்பிடல்ல வந்து பாக்குறேன், நீங்க ஹாஸ்பிடல்ல தானே இருப்பிங்க?” என்று கேட்டாள்.

           “ஆ இங்க தான் இருப்பேன், எதுக்கும் நீ கிளம்பும் போது எனக்கு கால் பண்ணிட்டு கிளம்பு சரியா” என்றார்.

            “ஆ சரிங்க மேடம், அப்பறம் தேங்க் யூ” என்றாள்.

            “ஏய் இப்போ தானே சொன்னேன் அடி வாங்க போற பாரு, சரி யுகா கிட்ட ஃபோன் கொடு” என்றார்.

            “ஆ மேடம்” என்ற ஆதினி “யுகா இந்தா தேவகி பாட்டி பேசுறாங்க, பாட்டின்னு சொல்லி பேசு” என்று தன் மகன் கையில் ஃபோனை கொடுத்தாள்.

            அதை கேட்டு யுகா தன் அம்மாவை முறைக்க இங்கு தேவகி சிரித்தார்.

            யுகா ஃபோனை வாங்கி “தேவா என்ன பண்ற? ஹாஸ்பிடல் போயிட்டியா?” என்றான்.

              அதை கேட்டு தன் மகனை முறைத்த ஆதினி “இவன” என்று தன் தலையில் அடித்துக்கொண்டாள்.

             “ஆ யுகா குட்டி உன்னோட தேவா ஹாஸ்பிடல் வந்துட்டேன், சரி உங்களுக்கு ஸ்கூல் பிடிச்சி இருக்கா?” என்று சிரித்தவாறு கேட்டார்.

             “ஆ தேவா ரொம்ப பிடிச்சி இருக்கு, ஸ்கூல் பெருசா இருக்கு, நா இங்கையே படிக்கிறேன்” என்று அழகாக கூறினான்.

             “சரிடா தங்கம், ஆனா நல்லா படிக்கணும் நல்ல புள்ளையா இருக்கனும் சரியா” என்றார் தேவகி.

               “ஆ தேவா நா நல்லா படிப்பேன், நா இப்போ நல்ல புள்ளையா தானே இருக்கேன்” என்றான்.

               அதை கேட்டு சிரித்த தேவகி “ஆமா செல்லம் நீங்க நல்ல புள்ளையா தான் இருக்கீங்க, அதே மாதிரி இனிமேலும் இருக்கனும்” என்றார்.

             ஆதினி தன் மகனை பார்த்து புன்னகை புரிந்தவாறு இருக்க “ஆ தேவா நா நல்ல பையனா இருப்பேன்” என்றான்.

          “சரிடா தங்கம் அம்மா கூட என்ன பாக்க வாங்க சரியா” என்றார்.

        “ஆ சரி தேவா வரேன், எனக்கு சாக்லேட் வாங்கி வை” என்றான் யுகா.

        “யுகா” என்று ஆதினி தன் மகனை முறைக்க.

         இங்கு சிரித்த தேவகி “சரி செல்லம் வாங்கி வெக்குறேன்” என்றார்.

          “ஆ சரி நா அம்மா கிட்ட கொடுக்குறேன், ஆதி வேற என்ன முறைச்சிட்டே இருக்கு” என்றவன் “அம்மா இந்தா” என்று ஃபோனை தன் அம்மா முன் நீட்டினான்.

         அதில் தன் மகனை செல்லமாக முறைத்தவாறு ஃபோனை வாங்கிய ஆதினி “மேடம்” என்றாள் .

          “சரி ஆதினி இரண்டு பேரும் பத்திரமா ஆபிஸ் போயிட்டு வாங்க, நா இப்போ ஃபோன் வெக்குறேன்” என்றார்.

          “ஆ சரிங்க மேடம்” என்றவள் ஃபோனை காதில் இருந்து எடுத்து தன் மகனை பார்த்து முறைத்தவள் “வர வர உனக்கு வாய் அதிகமா போச்சி, எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிட்டு, ம்… நீ தான் பேர் வெச்சியா எல்லாருக்கும்” என்று தன் மகன் காதை பிடித்து வலிக்காதவாறு மெதுவாக திருகினாள்.

           அதில் “ஆ அம்மா” என்று தன் தலையை சாய்த்து கத்தினான் யுகன்.

           இங்கு தேவகி food சென்டர் மெயின் ஆபிஸ் உள்ளே சென்ற மயூரன் அங்கு தனபால் md என்று போட்டிருக்கும் கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றவன் “ஹாய் டாடி” என்றான்.

         அதில் தலையை தூக்கி அவனை பார்த்து முறைத்த தனபால் “என்னடா சைட்டடிச்சிட்டு வந்துட்டியா?” என்று கோவமாக கேட்டார்.   

    No comments yet.