பிரியமுடன் உதிர்ந்த இலை!

Ival Minmini | 29 Mar 2026 | Share

அன்று ஏனோ அந்த பறவை வரவே இல்லை. அந்த பழைய மர நாற்காலியில் ஒரு தடுமாற்றத்துடன் அமர்ந்தார் செல்வம். அவருக்கு சுமார் அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்து வயதுக்குள் இருக்கும். மனைவி கமலம் அதிர்ஷ்டகாரி ஐம்பத்தி எட்டை தொட்டவுடனே சுமங்கலியாய் எடுக்காமல் வைக்காமல் போய் சேர்ந்துவிட்டாள். அவளின் ஞாபகார்த்தமாக அவரிடம் இருந்தது வெறும் உடைந்த கண்ணாடி ஒன்று, அதும் அவளை வற்புறுத்தி கண்ணை சரிபார்க்க இவர் அழைத்து சென்று வாங்கி குடுத்தது. அவ்வபோது அந்த கண்ணாடி எடுத்துப் பார்த்து சிரித்துக் கொள்வார், சில சமயங்களில் அந்த சிரிப்போடு கண்ணீரும் வருவதும் உண்டு. பின் பழங்காலமாய் அவரிடம் பூட்டிய டிராயருடன் ஒரு பழைய மேசை ஒன்று இருந்தது. அதை பூட்டியது என்னவோ அவர் தான் ஆனால் அதன் சாவியை தொலைத்து விட்டார். இப்போது அவர் வயதுக்கு அதில் என்ன வைத்திருந்தார் என்பதும் மறந்துவிட்டார். கூட இருந்த அத்தனை பேரும் அதை உடைத்தாவது பார்ப்போம் என சொல்லியும் அவர் விடவே இல்லை. ஏனோ அந்த மேசையின் மீது தீரா அன்பு ஒன்று இருந்தது அவருக்கு. மாலை நேரம் தான்… அந்த பறவைக்காக காத்திருந்தார். கமலம் இறந்ததில் இருந்து ஒரு பறவை தினமும் இவரை சந்திக்க வருவது உண்டு. அதை கமலமாகவே அவர் நினைத்துக் கொள்வதும் உண்டு‌. முதலில் அதில் நம்பிக்கை இல்லை இவருக்கு ஆனால் போக போக தன்னுடைய கமலம் தான் அது என உறுதியாகவே நம்பினார்.தினமும் அந்த பறவைக்கு சாப்பிட ஏதாவது காயோ கனியோ வைப்பது அவருக்கு வழக்கம். அன்றும் அப்படிதான் புதிதாக கமலத்துக்கு பிடித்த கோவபழத்தை வைத்திருந்தார். ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை.பின் அந்த நாற்காலியிலே அமர்ந்து தன் கண்களை மூடி கமலம் இறந்த அந்த தினத்தை நினைத்து பார்த்தார். எல்லாரும் பரபரப்பாய் இருந்தனர். இவரின் மூத்த மகன் பாபு ஒரு குடிகாரன். நன்று குடித்துவிட்டு பாடைக் கட்டும் இடத்தில் ஆடிக் கொண்டிருந்தான்.இளைய மகள் வாசுகி தன் இறந்த அம்மாவின் உடல் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வீட்டில் உள்ள பண்டம் பாத்திரத்தை எது யார்யாருக்கு என்று தன் இரு அண்ணிகளுடனும் பேசி சண்டையிட்டு பங்குப்போட்டுக் கொண்டிருந்தாள். அவரின் இரண்டாவது மகன் பாலு இன்னும் இந்த கருமாதிக்கு எவ்வளவு செலவு இருக்குன்னு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். சின்ன பேற பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாண்டுக் கொண்டிருந்னர். பெரிய பேற பிள்ளைகள் அலைபேசி கையுமாக ஒவ்வொரு மூலைக்கு மூலை உட்கார்ந்திருந்தனர். இப்படியே நேரம் கழிய கமலம் நல்லபடியாக எலக்ட்ரிக் மயானத்தில் சாம்பலாக்கப் பட்டாள். அதுவரை அமைதியாக இருந்த செல்வம் அப்போது தான் உடைந்து அழுதார். “என்ன இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போய்டீயேடி…. கமலா…!”என கத்தி கதறி அழ அங்கிருந்த எல்லோரும் பாவமாய் இருந்தது. எல்லாம் முடிந்து வீட்டுக்கு வர செல்வத்தை யார் வீட்டில் வைத்துக் கொள்வது? எவ்வளவு காலம் வைத்துக் கொள்வது? என உடன்பிறப்புகளுடன் பேசிக் கொண்டிருந்தான் பாலு. அவர்கள் பேசியதில் இவருக்கு ஒன்று புரிந்தது யாருக்கும் அவர் தேவையில்லை என்பதுதான் அது. 

அந்த பேச்சை வளர்க்கவிடாமல் நடுவில் இவர் சென்று, “எனக்காக யாரும் எந்த சிரமமும் பட வேண்டாம். நான் என் கைகால் நல்லா இருக்குற வரைக்கும் என்ன நானே பாத்துப்பேன். ஒருநாள் அதுவும் இல்லாம போச்சுனா கஷ்டபடாம எதாவது முதியோர் இல்லத்துல சேத்துருங்க. இல்ல அதுக்கு நடுவுலே எதாவது ஆச்சுனா… இப்படி செலவெல்லாம் பண்ண வேணாம்… என் கமலத்த எரிச்ச மாதிரி என் எரிச்சா மட்டும் போதும்…!” என பேசி முடித்துவிட்டு தன் துண்டை தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். அன்றிலிருந்து தனியாகவே அவர் அவரை பார்த்துக் கொண்டார். அவரின் பிள்ளைகள் ஏற்கனவே வேலை மாற்றம், அவர்களின் பிள்ளைகளுடைய படிப்பு என வெவ்வேறு இடத்தில் இருந்தனர். தனக்கென யாரும் இல்லை என்று அவர் வருந்தியதைவிட தன் கமலம் தன்னுடன் இல்லை என்பது தான் அவருக்கு பெரும் ஆற்றாமையாக இருந்தது. கண்ணீர் வழிய கண்களை திறந்தார்.எதிரில் காலண்டர் இருந்தது. அதில் பார்த்த போது கமலம் செத்து சரியாக ஒரு மாதம் ஆகி இருந்தது. பின் லேசாக அவர் திரும்பி பார்க்க அந்த பறவை வந்து அந்த கோவபழத்தை உண்டுக் கொண்டிருந்தது. தனக்கு முன் இருந்த அந்த ஆசையான பழைய மேசையில் சாய்ந்தார். தன் கையில் வைத்திருந்த கமலத்தின் அந்த உடைந்த கண்ணாடி கீழே விழ அந்த பறவையும் பறந்தது.

                                 ***முற்றும்***

© மின்மினி 

    No comments yet.