பாகம் -5
வெள்ளிக்கிழமை காலை.
“ஹர்ஷி”
“சொல்லுங்க பெரியம்மா”
“நாங்க இன்னைக்கு உங்க தாத்தா வீட்டுக்கு போய் அர்ஜூன் மாமாவை உனக்கு பேசப் போறோம். உனக்கு சம்மதம் தானே?”
“போங்க பெரியம்மா. இதெல்லாம் ஏன் என் கிட்ட கேட்டுக்கிட்டு. நீங்க எல்லாரும் என்ன முடிவு பண்றீங்களோ அது எனக்கு ஓகே”
“ஓ, அப்படியா? சரி நம்ம வேலனை கல்யாணம் பண்ணிக்கிறீயா?”
“அச்சச்சோ வேணாம். அதுக்கு நான் கல்யாணமே பண்ணிக்காம வாழ்நாள் பூராவும் வாழ்ந்திடுவேன். இல்ல ஔவையார் மாதிரி கடவுள் கிட்ட கேட்டு இப்பவே வயசானவளா ஆகிடுவேன்”
“அப்புறம் சொன்ன, உங்க எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கு ஓகேன்னு. வேலனை நாங்கள் எல்லாரும் ஓகே சொன்னா என்ன பண்ணுவ?”
“பெரியம்மா உங்க எல்லாரையும் பற்றி எனக்கு தெரியாதா? நானே வேலன் மாமாவை கட்டிக்கிறேன்னு சொன்னாலும் நீங்க யாரும் ஒத்துக்க மாட்டீங்க. சரியான லூசு வேலன் மாமா. பொறுப்பில்லாதவன்னு எத்தனை முறை நீங்களே சொல்லி இருக்கீங்க. அப்புறம் நீங்க எப்படி ஓகே சொல்லுவீங்க?”
“சரி சரி, அவனை விடு. அர்ஜூனை உனக்கு பிடிச்சிருக்கா?”
“ஹூம்” என்று சொல்லி சிரித்து கொண்டே உள்ளே ஓடி சென்றாள்.
ஹர்ஷிதாவை காலேஜில் டிராப் செய்துவிட்டு ராஜகோபால் வேணுகோபால் லக்ஷ்மி மற்றும் விஜயா நால்வரும் பாண்டியராஜன் வீட்டிற்கு சென்றனர்.
பாண்டியராஜன் வீட்டில்.
“என்ன விஷயம்ன்னு கேட்க மாட்டியா நிர்மலா?” என்றார் சிவராமன்.
“ஏங்க நான் கேட்டேன். உங்க தங்கச்சி தான் அது சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்ன்னு சொல்லிட்டா” என்றாள் நிர்மலா.
“எனக்கு டியூட்டிக்கு டயம் ஆகுது. எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னாங்க?”
“காலைல 10க்குள்ள வந்திடறேன்னு சொன்னா”
“10 ஆயிடிச்சு டி”
“நான் என்ன பண்றது. நீங்க உங்க தங்கச்சிக்கு கால் பண்ணி கேளுங்க”
“இல்ல இல்ல, இன்னும் ஒரு பத்து நிமிஷம் பார்க்கலாம்”
“சரி சரி” என்றாள் சிரித்துக்கொண்டே.
காலிங் பெல் சப்தம் கேட்டது.
அன்று போலவே பூ பழம் போன்ற தாம்பூலம் எல்லாம் எடுத்து வந்திருந்தார்கள்.
வாங்க மச்சான்… வாங்க அக்கா, வாங்க மாமா, வாம்மா என்று அனைவரையும் பார்த்து சொன்னார் சிவராமன்.
அனைவரும் அமர, பாண்டியராஜன் மெதுவாக கோளூன்றி நடந்து வந்து சோஃபாவில் அமர்ந்து அனைவரையும் வரவேற்றார்.
நிர்மலா ஒரு தட்டில் ஸ்வீட் மற்றும் காரம் எடுத்து வந்து வைத்தாள்.
“என்ன விசேஷம், ஹர்ஷிதாவுக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டீங்களா என்ன?” என்றார் சிவராமன்.
“முடிவை நீங்க தான் சொல்லனும்” என்றார் ராஜகோபால்.
“என்ன சொல்றீங்க மாமா?”
“வேணு, நீயே கேளுப்பா”
“அண்ணா நீங்க தான் பெரியவர். நீங்களே கேளுங்க”
“யாராவது ஒருத்தர் சொல்லுங்க”
“அண்ணா, அர்ஜூனை ஹர்ஷிதாவுக்கு கட்டி தருவீங்களா?” என்றாள் விஜயா.
இதை சற்றும் எதிர்பார்க்காத சிவராமன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
“என்ன ஆச்சு அண்ணா, நான் எதாவது தப்பா கேட்டுட்டேனா?”
“இல்லம்மா இல்லை”
“என்னோட புருஷன் வீட்டில இருக்கிறவங்க, நம்ம ஜாதி இல்லை ன்னு யோசிக்கிறீங்களா?”
“விஜயா, உன்னோட கல்யாணத்தின் போதே எனக்கு ஜாதி மதம் ஆட்சேபணை இல்லை. அது உனக்கும் நல்லாவே தெரியும்”
“அப்புறம் என்ன அண்ணா”
“ஹர்ஷிதாவை கேட்டீங்களா?”
“கேட்டுட்டோம் அண்ணா. அவளுக்கு சம்மதம்”
“அர்ஜூன் கிட்ட கேட்கனுமே”
“அண்ணா, அர்ஜூன் விருப்பம் இல்லாமையா? நாங்க உங்க மூணு பேரோட விருப்பத்தை கேட்க தான் வந்தோம். உங்களுக்கு சம்மதம் ன்னா அர்ஜூன் கிட்ட பேசிட்டு சொல்லுங்க” என்றாள் விஜயா.
“ஏங்க, சரி ன்னு சொல்லுங்க. ஹர்ஷிதாவை விட நல்ல பொண்ணு நம்ம பையனுக்கு கிடைக்க மாட்டா” என்றாள் நிர்மலா.
அந்த நேரம் பல்லி கத்த.
“பாருங்க அண்ணா, நல்ல சகுனம்” என்றாள் விஜயா.
“எனக்கு ஹர்ஷிதாவை மருமகளா ஏத்துக்க பரிபூரண சம்மதம். இத்தனை வருடங்களாக உடைஞ்ச நம்ம உறவு இப்போ அர்ஜூன் ஹர்ஷிதாவின் கல்யாணத்துல ஒட்டப்போகுது” என்று பாண்டியராஜன் சொன்னார். இந்த பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் அர்ஜூன்.
“வாப்பா அர்ஜூன். வா வா” என்று அனைவரும் கூப்பிட
“வாங்க வாங்க, எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.
நிர்மலா அர்ஜூனை தனியாக கிட்சனுக்கு அழைத்து சென்று
“டேய், ஹர்ஷிதாவுக்கு உன்னை கேட்டு வந்திருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு சம்மதம் தானே டா?”
“அம்மா, அவ ரொம்ப சின்ன பொண்ணு. அவளை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது” என்றான்.
“வயசு வித்தியாசம் எல்லாத்தையும் விடு. உனக்கு அவளை பிடிச்சிருக்கா இல்லையா?”
“அம்மா, அது வந்து. எனக்கு, நான்….”
“அப்பா” என்று அலறல் சத்தத்தை கேட்டு நிர்மலா மற்றும் அர்ஜூன் கிட்சனில் இருந்து ஓட,
மார்பை பிடித்து கொண்டு சோஃபாவில் சாய்ந்து கிடந்தார் பாண்டியராஜன்.
ஆண்கள் நால்வரும் ஆளுக்கு ஒரு கை பிடித்து தூக்கிக் கொண்டு ஆஸ்பிட்டலுக்கு சென்றனர். இன்னொரு காரில் பெண்கள் ஏறிச் சென்றனர்.
விஜயா அழுதுகொண்டே இருந்தாள்,
லக்ஷ்மி மற்றும் நிர்மலா அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஹாஸ்பிடலில் ஐசியூ வில் சேர்த்தனர். எமர்ஜென்சி டிரீட்மென்ட் நடந்து கொண்டிருந்தது. அனைவரும் ஹாஸ்பிடலில் ரிசெப்ஷனில் அமர்ந்திருந்தார்கள்.
“அண்ணி, நல்ல விஷயம் பேச வரும்போது இப்படி ஆகிவிட்டதே” என்று சொல்லி அழுதாள் விஜயா.
“விஜயா, மாமாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லைன்னு உனக்கு தெரியும் இல்ல? ஏன் இப்படி எல்லாம் நினைக்கிற”
“நம்ம பசங்க கல்யாணத்தை பார்ப்பாறா என் அப்பா?” என்று சொல்லி அழுதாள் விஜயா.
“விஜயா தேவையில்லாம கண்டத யோசிச்சு மனசை கெடுத்துக்காத. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது” என்றாள் லக்ஷ்மி.
“அண்ணி, அர்ஜூன் என்ன சொன்னான்”
“சின்ன பொண்ணு மா அவன்னு சொன்னான். ஆனா பிடிச்சிருக்குன்னு தான் சொன்னான்”
“அப்போ வர முதல் முகுர்த்த்திலேயே நிச்சயம் பண்ணிடலாம். கல்யாணம் மெதுவா வெச்சிக்கலாம்” என்றாள் விஜயா.
“ஆம், நீ சொல்றது சரிதான்” என்று அனைவரும் பேசிக் கொண்டனர்.
அர்ஜூனால் எதுவும் பேச முடியவில்லை.
டாக்டர்கள் வெளியே வந்து
“பிளாக்ஸ் இருக்கு. ஓபன் பை-பாஸ் செய்ய முடியாது. ஏன்னா வயதானவர். அதனால ஆஞ்சியோ பிளாஸ்ட் பண்ணிடலாம். ஒன் வீக் டேப்லட்ஸ் கொடுத்து ஸ்டெபிலைஸ் பண்ணிட்டு அப்புறம் ஆஞ்சியோ பண்ணலாம்”
“டாக்டர் அதுவரைக்கும் இங்கேயே இருக்கனுமா இல்ல வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போலாமா?” என்றார் சிவராமன்
“தாராளமா வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். ஆனா நாங்க கொடுக்குற மருந்து மாத்திரைகளையும் டயட்டையும் ஃபாலோ செய்யனும்” என்றார் டாக்டர்.
“கண்டிப்பா டாக்டர்” என்றார் சிவராமன் .
வீட்டிற்கு வந்தனர் அனைவரும். ஹர்ஷிதாவும் விஷயம் தெரிந்து காலேஜில் இருந்து தாத்தா வீட்டுக்கு வந்தாள்.
பாண்டியராஜன் அனைவரிடமும்.
“எனக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்குன்னு தெரியல. அதுக்குள்ள என்னோட பேரன் – பேத்தி கல்யாணத்தை பார்க்க ஆசைப் படறேன். ரெண்டு பேரையும் மாலையும் கழுத்து மா பார்க்க நினைக்கிறேன்”
“அப்பா அப்படி எல்லாம் சொல்லாதீங்க. வர முதல் முகுர்த்த்திலேயே நிச்சயம் பண்ணிடலாம். உங்களுக்கு ஆப்ரேஷன் முடிஞ்ச பிறகு கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றார் சிவராமன்.
“சரிப்பா, ரொம்ப சந்தோஷம்” என்றார்.
அனைவரும் சந்தோஷமாக சிரித்தனர்.
அர்ஜூன் ஒருவனை தவிர.
ஹர்ஷிதாவிடம் பேச முயற்சி செய்தான் அர்ஜூன். ஆனால் பேச முடியவில்லை.
“நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே நாள் நன்றாக உள்ளது. அன்னைக்கே நிச்சயத்தை வைத்து கொள்ளலாம்”
ராஜகோபால் வேணுகோபால் வீட்டிலேயே நிச்சயத்தார்தம் வைத்து கொள்ள முடிவு செய்தனர்.
நிர்மலா அவினாஷூக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறினாள்.
“என்னம்மா சொல்றீங்க? அந்த மாரியாத்தா வா அண்ணனுக்கு” என்று சொல்லி சிரித்தான்.
“ஏய், சும்மா இரு. இப்போ பார்கலியே நீ அவளை தங்க பதுமை மாதிரி இருக்கா. பையனோட அம்மாவா இருந்துக்கிட்டு நான் இதை சொல்லக் கூடாது. உண்மையிலேயே என் பையன் அவளை கட்டிக்க கொடுத்து வச்சிருக்கனும்” என்றாள் நிர்மலா.
“அம்மா, அம்மா. போதும் போதும் என்னால முடியல. நாளைக்கு ஒரு எக்ஸாம் இருக்கு. முடிச்சிட்டு நாளைக்கு சாயங்காலம் டிரெயின் ஏறிடறேன். ஞாயிற்றுக்கிழமை காலைல அங்க இருப்பேன்”
“ஏய், என்னடா? இன்னைக்கே கிளம்பி நாளைக்கு வாடா. எக்ஸாம் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்”
“அம்மான்னா உங்கள மாதிரி இல்ல இருக்கனும்? இந்த எக்ஸாம் லீவு போட முடியாது. நேவி எக்ஸாம் இது. கிளாஸ் டெஸ்ட் இல்ல. நான் கண்டிப்பா ஞாயிற்றுக்கிழமை காலைல இருப்பேன். அண்ணாவுக்கு பெஸ்ட் விஷ்ஷஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க.
அம்மா இப்போ எனக்கு குரூப் ஸ்டடி இருக்கு ஃபோனை ஆஃப் பண்ணிடுவேன். நான் நாளைக்கு எக்ஸாம் முடிஞ்சதும் ஈவினிங் தான் ஃபோனை ஆன் செய்வேன். எதாவது முக்கியமான விஷயம்ன்னா மெஸேஜ் பண்ணுங்க. இல்ல லேண்ட் லைன்ல வாங்க. பை” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்துவிட்டான் அவினாஷ்.
“டேய், டேய்” என்று நிர்மலா பேசிக் கொண்டு இருக்கும் போதே கட் செய்து விட்டான்.
‘இவன் இருக்கானே?’ என்று சொல்லி கொண்டே அடுத்த வேலையைப் பார்க்கப் சென்றாள் நிர்மலா.
ராஜகோபாலின் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது.
யமுனா ராமு மற்றும் வேலன் மூவரும் வந்தனர்.
“அண்ணி, என்ன அண்ணி இது? எப்படி நீங்க எங்க கிட்ட சொல்லாம இப்படி ஒரு பெரிய முடிவை எடுப்பீங்க?” என்றாள் யமுனா.
“அண்ணி, கோச்சிக்காதீங்க. ஹர்ஷிதாவிற்கு அர்ஜூனை பிடிச்சிருக்கு. அதனால தான் மேற்கொண்டு நாங்க பேசினோம்”
“அவ சின்ன பொண்ணு அண்ணி. அவ யாரைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாலும் அவன் கூட கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்களா?”
“இல்ல அண்ணி. பிளீஸ் புரிஞ்சிக்கோங்க”
“வசதி வாய்ப்புல அவங்க எங்களைவிட உசத்தின்னு நான் அன்னைக்கே சொன்னேன் இல்ல? இப்போ அதை நிரூபிச்சிட்டீங்க நீங்க”
“இல்ல அண்ணி. சத்தியமா காசு பணத்தை பார்த்து போறவங்க இல்ல நாங்க. வேலன் மட்டும் பொறுப்பானவனா இருந்து என் பொண்ணுக்கு அவனை பிடிச்சிருந்தா நான் கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன்”
“அப்போ என் பையனுக்கு பொறுப்பில்லைன்னு சொல்றீங்களா?”
“ஆமாம் அதிலென்ன சந்தேகம்?” என்றாள் லக்ஷ்மி.
“அண்ணி, நீங்களுமா?” என்று அழத் தொடங்கினாள் யமுனா.
“ஏய், சும்மா அழாத யமுனா. நீயே யோசிச்சு பாரு ஒரு பொண்ணை பெத்தவங்க அர்ஜூன் வேலன் ரெண்டு வரன் வந்தா யாருக்கு கட்டிக் கொடுக்க நினைப்பாங்க”
“இதைவிட பெரிய அவமானம் உனக்கு தேவையா டி” என்றார் ராமு.
தேம்பி தேம்பி அழுதுகொண்டு நின்றிருந்தாள் யமுனா.
“ராமு தம்பி, ஏன் பா இப்படி எல்லாம் பேசறீங்க?” என்றாள் லக்ஷ்மி.
“அண்ணா பிளீஸ் கோச்சிக்காதீங்க”
என்றாள் விஜயா.
ராஜகோபால் மற்றும் வேணுகோபால் இருவரும் சேர்ந்து ராமுவை சமாதானம் செய்ய பார்த்தும் அது நடக்கவில்லை.
மூவரும் கோபித்துக் கொண்டு கிளம்பினார்கள்.
“எங்க வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டீங்க இல்ல? நல்லாவே இருக்க மாட்டீங்க. இந்த கல்யாணம் நாசமா போகட்டும்” என்று சபித்து விட்டு சென்றான் ராமு.
“அச்சச்சோ வேணாம்ங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க. என்னதான் இருந்தாலும் அவ என் தம்பி பொண்ணு. அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்”
“அப்போ, நம்ம புள்ளை நாசமா போனா பராவாயில்லையா உனக்கு?” என்றார் ராமு.
“அச்சச்சோ இல்லீங்க. அப்படி பேசாதீங்க” என்று தலையில் அடித்து கொண்டு அழுதாள் யமுனா.
வேலனையும் யமுனாவையும் தன் இரு கைகளாலும் இழுத்து கொண்டு வேகமாக வீட்டைவிட்டு வெளியே சென்றார் ராமு.
விஜயா லக்ஷ்மி மற்றும் ஹர்ஷிதா அழுதுகொண்டு நின்றிருந்தார்கள்.
ராஜகோபால் மற்றும் வேணுகோபால் டென்ஷனாக இருக்கையில் அமர்ந்தனர்.
தனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்ல வந்த அர்ஜூன் இங்கே நடந்த பிரச்சனையை பார்த்து விட்டு அமைதியாக இருந்தான்.
“வாப்பா அர்ஜூன். நீ எதுவும் தப்பா நினைக்காத. சின்ன வயசுல இருந்தே அவங்க பையனை ஹர்ஷிதாவுக்கு கட்டி கொடுக்க ஆசைப் பட்டாங்க அது இல்லைன்னு தெரிஞ்சதும். இப்படி பேசிட்டு போறாங்க” என்றார் வேணுகோபால்.
அர்ஜூன் அமைதியாக இருந்தான்.
“என்ன விஷயம் பா. அப்பா அம்மா எதாவது சொல்லி அனுப்பினாங்களா? இல்ல ஹர்ஷிக்கிட்ட பேச வந்தியா?” என்றார் ராஜகோபால்.
“எதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்க வந்தேன் மாமா”
“எல்லாம் நல்லபடியா நடக்குது பா. நாளைக்கு காலைல சீக்கிரமா வந்திடுங்க” என்றார் ராஜகோபால்.
“சரிங்க மாமா. நான் கிளம்பறேன்” என்றான் அர்ஜுன்.
“இருப்பா, காஃபி டீ எதாவது குடிச்சிட்டு போ” என்றார் வேணுகோபால்.
“சரிங்க மாமா” என்று சொல்லி அமர்ந்தான்.
ஹர்ஷிதா பால்கனியில் அமர்ந்து கொண்டு ஃபோனை பார்த்து கொண்டு இருந்தாள்.
“இருப்பா காஃபி எடுத்துக் கொண்டு வரேன்” என்று சொல்லி விஜயா கிட்சனுக்கு சென்றாள்.
“ஓகே அத்தை”
“ஹர்ஷிதா பால்கனியில் இருக்கா. போய் பேசிக்கிட்டு இருப்பா காஃபி எடுத்துக் கொண்டு வரோம்” என்றாள் லக்ஷ்மி.
“சரிங்க அத்தை” என்று சொல்லி விட்டு, இதுதான் சமயம் நாம் ரஞ்சனியை காதலிப்பதை ஹர்ஷிதாவிடம் சொல்லி எப்படியாவது இந்த நிச்சயத்தை நிறுத்தி விட வேண்டும் என்று நினைத்து கொண்டே நடந்து சென்றான் அர்ஜூன்.
No comments yet.