பாகம் -2

Vaishnavi Vijayaraghavan | 17 Apr 2026 | Share

பாகம் -2


பாண்டியராஜனின் வீட்டு வாசலில் கார் நின்றது.


ராஜகோபால் மற்றும் வேணுகோபால் இருவரும் காரில் இருந்து இறங்கி அவர்கள் வாங்கி சென்ற பூ, பழங்கள், மற்றும் இனிப்பு கவர்களை எடுத்து கொண்டு வாசற்படியின் அருகில் உள்ள காலிங் பெல்லை அழுத்தினர்.


நிர்மலா கதவருகே வந்த பிறகு தான் இவர்களை அடையாளம் தெரிந்து கொண்டாள்.


“வாங்க அண்ணா, வாங்க அண்ணா” என்றாள் இருவரையும் பார்த்து.


சற்றே தயக்கத்துடன் நின்றனர் இருவரும்.


அப்போது சிவராமன்,


“யாரு நிர்மலா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார்.


இவர்களைப் பார்த்ததும்,


“வாங்க, வாங்க” என்றார்.


அப்போது வீல் சேரில் நகர்ந்து வந்தார் பாண்டியராஜன்.


அதைப் பார்த்ததும் ராஜகோபால் மற்றும் வேணுகோபால் இருவரும் திகைத்தனர்.


அப்போது அவர் கண்கள் கலங்க, “வாங்க” என்று சொன்னார் ஆனால் அவர் வாய் கோணித்தது, வார்த்தை குழறியது.


உள்ளே சென்று அமர்ந்தனர். 


ராஜகோபால் சிவராமனிடம்,


“அப்பாவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி?”


“போன மாதம் பக்கவாதம் வந்திடிச்சு. டிரீட்மெண்ட்ல இருக்காரு. சீக்கிரமா சரியாகிடும். ஸ்டிக் வச்சி நடக்குற அளவுக்கு கொண்டு வந்திடலாம்ன்னு டாக்டர் சொன்னார்”


“ஓ, ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பாவை இப்படி பார்க்க” என்றார் ராஜகோபால்.


அமைதியாகவே இருந்தார் வேணுகோபால்.


“சொல்லுங்க, ஏதோ முக்கியமான விஷயம் சொல்லப் போறீங்க போல? ஸ்வீட் பழம் எல்லாம் இருக்கே” என்றார் சிவராமன்.


“ஆமாம், ஒரு தட்டுக் கொண்டு வாம்மா” என்று நிர்மலாவை பார்த்து சொன்னார் ராஜகோபால்.


“சரிங்க அண்ணா” என்று சொல்லி விட்டு எடுத்து வந்தாள்.


அதில் எல்லாவற்றையும் வைத்து விட்டு,


“வேணுவோட பொண்ணு ஹர்ஷிதா பெரிய பொண்ணா ஆயிட்டா. தாய் மாமன் நீங்க வந்து தான் குடிசைக் கட்டனும்” என்றார் ராஜகோபால்.


“என்ன? அவ்ளோ பெரிய பொண்ணா ஆயிட்டாளா?” என்று கண்கள் கலங்க கேட்டாள் நிர்மலா.


சிவராமன் மற்றும் பாண்டியராஜன் இருவருக்குமே ஆனந்த கண்ணீர் வந்தது.


“விஜயா எப்படி இருக்கா?” என்று வேணுவை பார்த்து கேட்டார் சிவராமன்.


“ஹாங், நல்லா இருக்கா”


அதற்க்குள் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள் நிர்மலா. 


இருவரும் குடித்து விட்டு எழுந்தனர்.


“எத்தனை மணிக்கு தண்ணி ஊத்தனும் அண்ணா?” என்றாள் நிர்மலா.


“ஏழு மணிக்கு” என்றார் ராஜகோபால்.


பாண்டியராஜன் ஏதோ சொன்னார். ஆனால் இவர்கள் இருவருக்கும் புரியவில்லை.


சிவராமனை திரும்பி பார்த்தனர்.


“உங்களை அன்னைக்கு அடிச்சதுக்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் இது ன்னு சொல்றாரு”


அவர் அருகில் சென்று மண்டியிட்டு,


“ உங்க நிலைமைல யாரு இருந்தாலும் அப்படி தான் செஞ்சிருப்பாங்க. அதுவும் இல்லாம நீங்க என் அப்பா மாதிரி. நான் தான் இவ்வளோ நாளாக அறிவில்லாம அதை ஒரு அவமானமா நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு என் பொண்ணுக்கு எல்லாரோட ஆசிர்வாதமும் வேணும் ன்னு அண்ணா சொன்னதும், எனக்கு புரிஞ்சுது. நீங்க தான் எங்களை மன்னிக்கனும். இவ்வளவு நாளாக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பார்க்காமல் பேசாம இருந்ததற்கு” என்று கண்கள் கலங்க கூறினார் வேணுகோபால்.


அதை கேட்டு அனைவரும் கண்கள் கலங்கினர்.


“சரி, நாங்க கிளம்பறோம். நீங்க எல்லாம் சீக்கிரமா வந்திருங்க” என்றார் ராஜகோபால்.


“நாங்க கண்டிப்பா வந்திடறோம். ஆனா, அப்பா இப்போ வரலைன்னு சொல்றாரு. இப்போ இந்த நிலைமையை விஜயா பார்த்தா, அழுவா. நல்ல விசேஷம் நடக்கும் போது சங்கடங்கள் வேணாம்ன்னு சொல்றாரு”


சரி என்பது போல தலையை அசைத்தனர் இருவரும்.


“பசங்க என்ன படிக்கிறாங்க?” என்றார் வேணுகோபால்.


“அர்ஜூன் இன்ஜினியரிங் ஃபைனல் இயர் படிக்கிறான். அவினாஷ் +2 படிக்கிறான் அண்ணா” என்றாள் நிர்மலா.


“ஓ, அவ்வளவு பெரிய பசங்களா ஆயிட்டாங்களா?” என்றார் வேணுகோபால்.


“காலச்சக்கரம் வேகமா சுத்துது பா” என்றார் ராஜகோபால்.


“சரி, பசங்களையும் அழைச்சிட்டு வந்திடுங்க. நான் விஜயா கிட்ட நீங்க வரப்போவதை சொல்லப் போறதில்ல. ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்” என்றார் வேணுகோபால்.


“சரி சரி” என்று சொல்லி அனைவரும் சிரித்தனர்.


ராஜகோபால் மற்றும் வேணுகோபால் கிளம்பியதும் நிர்மலா சிவராமனிடம் சென்று,


“ஏங்க, வாங்க சீக்கிரமா போய் எல்லாம் வாங்கிட்டு வரலாம்” என்றாள்.


“நான் வரலை, நீ போயிட்டு வா”


“என்னங்க சொல்றீங்க? கடைக்கு வரலைன்னு சொல்றீங்களா?”


“இல்ல ஃபங்ஷனுக்கு வரலைன்னு சொல்றேன்”


நிர்மலாவும் பாண்டியராஜனும் சிவராமனை ஆச்சரியமாக பார்த்தார்கள்.




காரில் செல்லும் போது,


“அண்ணா, ரொம்ப தேங்க்ஸ்”


“எதுக்கு டா?”


“நீங்க சொல்லலன்னா விஜயாவோட அப்பா வீட்டுக்கு போயிருக்க மாட்டோம்”


“உங்க அண்ணிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். அவ தான் கூப்பிட சொன்னா”


“ஹூம், அண்ணி நம்ம அம்மா மாதிரி. எல்லாரோட நிலைமல இருந்தும் யோசிப்பாங்க”


“ஆமாம் டா. நீ சொல்றது சரிதான்”


“விஜயாவோட அப்பாவ பார்த்து எனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கு. அவ எப்படி ஃபீல் பண்ணுவாளோ தெரியல?”


“ஹூம், கஷ்டம் தான். ஆனா சரியாகிடும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காறே” என்றார் ராஜகோபால்.


வீட்டிற்கு வந்தனர். விஜயாவிடம் இருவரும் எதுவும் சொல்லவில்லை.


இரவு தண்ணீர் ஊத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.


விஜயாவும், லக்ஷ்மியும் பரப்பரப்பாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வேலை செய்து கொண்டு இருந்தனர்.


முக்காலி, மனை, குத்துவிளக்கு எல்லாம் எடுத்து கழுவி துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து தயார் செய்து கொண்டு இருந்தனர்.


யமுனாவும் வேலனும் வந்தனர். 


லக்ஷ்மியும் விஜயாவும் அவர்களை வரவேற்றனர். வேலையாட்கள் சிலர் அனைவருக்கும் ஜூஸ், காஃபி, டீ என அவரவர் விருப்பத்திற்கு கொடுத்து கொண்டிருந்தனர். 


அந்த தெருவில் இருக்கும் அக்கம் பக்கத்தினர் வீட்டு பெண்களுக்கும் சொல்லி விட்டு வந்தாள் விஜயா. ஆகவே 1 கிரௌண்டு ஹால் கூட அனைவரும் அமர்ந்து இருக்க சிறியதாக தெரிந்தது.


வேலன் ஹர்ஷிதாவை பார்த்து வெட்கப்பட்டு சிரித்தான்.


“சீ, கொன்னுடுவேன்” என்று ஆட்காட்டி விரலை காட்டினாள்.


இதை கவனித்த யமுனா,


“அம்மாடி ஹர்ஷி, வேலன் கிட்ட அப்படி எல்லாம் பேசக் கூடாது. என்னதான் இருந்தாலும் அவன் உன்னோட மாமா இல்ல? இப்போ அவன் தான் உனக்கு குடிசை கட்டனும். இவனையும் என் புருஷனும் தான் உனக்கு மாமாங்க. வேற யாரு இருக்கா உனக்கு மாமா ன்னு?” என்று சொன்னாள்.


இதை கேட்டதும் விஜயாவிற்கு கண்கள் கலங்கியது. 


‘தாய் மாமா ஒருவர் மற்றும் மாமா மகன்கள் இருவர் இருக்கும் போது, உனக்கு மாமான்னு யாரும் இல்லைன்னு சொல்றாங்களே?’ என்று நினைத்து வருத்தம் கொண்டாள்.


அவளுடைய கவலையை உணர்ந்த லக்ஷ்மி, விஜயாவின் தோளில் கை வைத்து ஆறுதல் சொன்னாள்.


பின்னர் யமுனாவிடம்,


“யமுனா, ரொம்ப தான் உனக்கு ஆசை. மீசை கூட முளைக்காத பையனை குடிசை கட்ட சொல்லுவியா? ராமு வந்தா கட்டட்டும். இல்லன்னா வேற யாராவது மாமா முறைல இருக்கிறவங்க கட்டுவாங்க” என்றாள் லக்ஷ்மி.


“என்ன அண்ணி சொல்றீங்க? இப்போ விஜயா அண்ணிக்கு ஒரு தம்பி இருந்தா அவனை கட்ட சொல்ல மாட்டீங்களா?”


“தாய் மாமனுக்கும் அத்தை மகனுக்கும் வித்யாசம் இருக்கு யமுனா. உனக்கு இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தெரியாது. சும்மா இரு” என்று சொல்லி யமுனாவின் வாயை அடைத்தாள்.


அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தாள் யமுனா.


விஜயாவிற்கு லக்ஷ்மி பேசியது ஆறுதலாக இருந்தது. வேலன் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அவனுக்கு ஒரு மெக்கானிக் கடை வைத்து கொடுத்தனர். ஒரு வருடமாக அதை நடத்தி வருகிறான். 


லக்ஷ்மியிடம் விஜயாவின் குடும்பத்தினர் வருவார்கள் என்று ராஜகோபால் சொல்லியிருந்தார். ஆகையால் அவள் முழு நம்பிக்கையுடன் அவர்கள் அனைவரையும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.


“மணி 6.30. என்னங்க, தண்ணி ஊத்தலாமா?” என்று விஜயா வேணுகோபாலிடம் கேட்டாள்.


“7 மணிக்கு ஊத்தலாம் ன்னு அண்ணா சொன்னாரு”


“சரிங்க, நான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன்” என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல காலடிகளை எடுத்து வைத்த போது ஒரு கார் வீட்டு வாசலில் வந்து நின்றது.


காரில் இருந்து நிர்மலா, மற்றும் இரு பையன்கள் இறங்கினார்கள்.


கண்கள் விரிய பார்த்தாள் விஜயா.


“அண்ணி” என்று கண்கள் கலங்க கூறினாள்.


“விஜயா”


உடனே வேணுகோபாலை பார்த்தாள் விஜயா.


கண்களால் சம்மதம் தெரிவித்தார் வேணுகோபால்.


ஓடிச் சென்று நிர்மலாவை கட்டிக்கொண்டு அருகில் இருந்த இருவரின் கன்னங்களையும் தடவி கொடுத்து “வாங்கடா செல்லங்களா?” என்றாள்.


“வாங்க… வாங்க” என்று வேணுகோபால், ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி அழைத்தனர்.


“எங்கம்மா சிவராமனை காணும்?”


“அது வந்து அண்ணா. அவரு பின்னாடி வரேன்னு சொன்னாரு”


“பின்னாடியா?அவருதானம்மா குடிசை கட்டனும்?”


“இல்லண்ணா, அவருக்கு தீடீர்ன்னு ஃபோன் வந்திடிச்சு. அவரோட போலீஸ் வேலை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே?”


“அதுக்காக முக்கியமான விசேஷத்துக்கு கூட பர்மிஷன் தர மாட்டாங்களா?”


“நீங்க வீட்டுக்கு வரும் போது ஒரு கேஸ் ஃபைல் எடுத்து கொண்டு போகத் தான் வந்தாரு. அதை கொடுத்து விட்டு வந்திடறேன்னு சொன்னாரு”


“ஓ, அப்படியா? சரிம்மா. வாங்க நீங்க எல்லாம் உள்ள வாங்க” என்று அழைத்து சென்றார்கள்.


“அண்ணி, அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் என் மேல கோபம் தீரல அதனால தான அவங்க ரெண்டு பேரும் வரல?” என்றாள் விஜயா.


“இல்ல விஜயா அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. உங்க அண்ணன் ஃபங்ஷன் முடியறதுக்குள்ள வந்திடுவார். நீ வேணும்ன்னா பாரேன்”


“அப்போ என்னோட அப்பா?”


“இல்ல, அவருக்கு உடம்பு சரியில்லை. அதான் அவரால வர முடியல”


“அச்சச்சோ, அப்பாவுக்கு என்னாச்சு?”


“ஒண்ணும் இல்ல, நீ டென்ஷன் ஆகாத. சரி ஆயிடும்”


“வீட்ல தனியாவா இருக்காரு. இல்ல இல்ல நம்ம கோமதி அக்காவும் சுந்தர் அண்ணாவும் இருக்காங்க

(வேலையாட்கள்)”


“ஓ, சரி, அவங்க எல்லாம் எப்படி இருக்காங்க?”


“எல்லாம் நல்லா இருக்காங்க” என்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.


விஜயா அர்ஜூனிடம்,


“என்னை ஞாபகம் இருக்கா அர்ஜூன்?”


“நல்லா ஞாபகம் இருக்கு அத்தை. நீங்க தான் என் பேரை கூட மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன்”


“ஏய், அவ தான் உங்க ரெண்டு பேருக்கும் பெயர் வச்சா. அவ எப்படி மறப்பா?” என்றாள் நிர்மலா.


“உங்களை எல்லாம் மறக்க முடியுமா பா? அவினாஷ் உனக்கு இந்த அத்தையை ஞாபகம் இருக்கா பா?”


சற்று வெட்கம் கலந்த சிரிப்பை சிந்திவிட்டு,

“இருக்கு அத்தை” என்றான் அவினாஷ்.


“அண்ணி அண்ணாவுக்கு கால் பண்ணி கேளுங்க எவ்வளவு நேரம் ஆகும்ன்னு”


“ஹர்ஷிதாவை குளிப்பாட்டி கூட்டி வந்து குடிசையில் உட்கார வைக்கணும். குடிசை எல்லாம் பிண்ணி ரெடியா வச்சிருக்கோம். அண்ணா வந்து அதை கட்டிவிட்டா போதும்”


யமுனாவிற்கு விஜயாவின் குடும்பத்தினர் வந்தது அவ்வளவாக பிடிக்கவில்லை. தன் தம்பி மகள் தனக்கு தான் மருமகளாக வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு உண்டு. மேலும் வேலனிடமும் அவள் தான் உன் மனைவி என்று ஆசை வார்த்தை கூறி வைத்திருந்தாள்.


நிர்மலா ஃபோனை எடுத்து “ஹலோ” என்றாள்.


“நான் தான் வரலைன்னு சொன்னேன் இல்ல? அப்புறம் எதுக்கு ஃபோனா பண்ணிக்கிட்டு இருக்க?”


“அண்ணா” என்று விஜயா பேசினாள்.


“விஜயா, நீயா பேசற?” என்றார் சிவராமன்.


இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.