பாகம் 2, 3

Vaishnavi Vijayaraghavan | 26 Jun 2026 | Share

பாகம் -2

“நான் அதுக்கு சாரி சொல்லல”

என்று சொல்லி கத்தியின் பின் பக்கமாக திருப்பி அவள் தலையில் அடித்தான் மனோகர். 

மயங்கி விழுந்தாள் வினோதா.

தான் கொண்டு வந்த பெரிய அட்டைப் பெட்டியில் அவளை அமர வைத்து  அவளுடைய ஹேண்ட் பேக் மற்றும் செல்ஃபோனையும் அதில் போட்டு அதையும் அந்த பெட்டியிலேயே வைத்தான். பிறகு பின் கதவு பக்கமாக தூக்கிக்  கொண்டு பக்கத்து வீட்டு சாமான்களுடன் வேனில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் மனோகர்.

டோர் லாக் மட்டுமே இருந்ததால் வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருக்கிறதா அல்லது வெளியே இருந்து பூட்டப்பட்டிருக்கிறதா என்று யாருக்கும் தெரியாது. ஏன் வினோதா அருணுக்கு கூடத் தெரியாது. ஆகையால் தான் தன் கணவன் வீட்டினுள் இருந்து தான் பூட்டி இருக்கிறான் என்று நினைத்து கொண்டாள் வினோதா. உள்ளே வந்ததும் வினோதாவும் கதவை பூட்டிவிட்டாள். 

மாலை நான்கு மணி அளவில் குழந்தை நித்திலாவின் ஆசிரியை அருணுக்கு கால் செய்தார்.

“ஹலோ” என்றான் அருண்.

“ஹலோ சார், நான் நித்திலா கிளாஸ் டீச்சர் பேசறேன். நீங்க நித்திலாவோட அப்பா மிஸ்டர் அருண் தானே?”

“ஆமாம், சொல்லுங்க மேடம்”

“குழந்தையை பிக்கப் பண்ண யாரும் வரலீயே?”

“என் ஒயிஃப் வரலையா மேடம்?”

“இல்ல சார், ஒன் ஹவர் ஆயிடிச்சு ஸ்கூல் முடிஞ்சு. கொஞ்சம் சீக்கிரமா வரீங்களா?”

“ஃபிப்டீன் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன் மேடம்”

“ஓகே சார்” என்றார் அந்த ஆசிரியை.

காரில் வரும் போது பல முறை வினோதாவிற்கு கால் செய்தான் அருண்.

அவள் ஃபோன் ஸ்விட்சிடு ஆஃப் என்று வந்தது.

‘ஆனாலும் இவளுக்கு இவ்வளவு கோபம் திமிரு இருக்கக்கூடாது’ என்று திட்டிக் கொண்டே ஸ்கூலுக்கு சென்று தன் குழந்தை நித்திலாவை பிக்கப் செய்தான்.

“வெரி வெரி சாரி மேடம். என் ஒயிஃபுக்கு உடம்பு சரியில்லை. அதான் பில்ஸ் போட்டு தூங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். ரியலி சாரி”

“இட்ஸ் ஓகே சார். குழந்தை தான் பாவம், ரொம்ப நேரமா நீங்க யாரும் வரலைன்னு பயந்திட்டா. அதுவும் இல்லாம அவளுக்கு பசி வந்திடிச்சான்னு தெரியல. டல்லா இருக்கா. என் கிட்டேயும் ஸ்நாக்ஸ் எதுவும் இல்லை கொடுக்கிறதுக்கு”

“இட்ஸ் ஓகே மேடம், தேங்க்ஸ். இவ்வளவு நேரமா வெயிட் பண்ணியதுக்கு”

“பரவாயில்லை சார். டேக் கேர்.

பை நித்திலா” என்றார் கிளாஸ் டீச்சர்.

“பை மேடம்” என்றாள் நித்திலா.

“அப்பா” என்று சொல்லி அருணை கட்டிப் பிடித்து கொண்டு அழுதாள் நித்திலா.

“அச்சச்சோ, என் செல்லம் ஏன் அழறீங்க? நீங்க தான் தைரியசாலி பொண்ணாச்சே?”

“இல்லப்பா, அம்மாவுக்கு என்னாச்சு? உடம்பு சரியில்லையா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உங்க அம்மா லஞ்ச் சாப்பிட்டு விட்டு படம் பார்த்துக்கிட்டே தூங்கிட்டு இருப்பா. அதைச் சொன்னா உங்க மேடம் திட்டுவாங்க இல்ல. அதான் அப்படி சொன்னேன்”

 “ஓ,ஓ” என்று சொல்லி சிரித்தாள் நித்திலா.

“சரி வா, இன்னைக்கு நம்ம இப்போ பேக்கரி போய் கேக், ஸாண்ட்விச் எல்லாம் சாப்பிட்டு விட்டு போகலாம். உன்னை பிக்கப் பண்ண வராததால உங்க அம்மாவுக்கு எதுவும் வேண்டாம். அதான் அவளுக்கு பனிஷ்மெண்ட். ஓகே வா?” என்றான் அருண்.

“வேண்டாம் அப்பா. அம்மா பாவம். அவங்களுக்கு சமோசா வாங்கிட்டு போகலாம்”

ஸ்மைல் செய்தான் அருண்.

“சரி வா. நம்ம ஃபர்ஸ்ட் சாப்பிட்டு விட்டு அப்புறம் அம்மாவுக்கு வாங்கிக் கொண்டு போகலாம்” என்றான் அருண்.

“ஓகே அப்பா” என்று நித்திலா சொல்ல,

அவளை ஒரு கையிலும் இன்னொரு கையில் அவளுடைய பேக் மற்றும் லஞ்ச் பேகையும் எடுத்துக் கொண்டு போய் காரில் வைத்து விட்டு மறுபடியும் வினோதாவிற்கு கால் செய்தான். ஸ்விட்சிடு ஆஃப் என்று வந்தது.

ஃபோனை கோபமாக காரில் வைத்து விட்டு பேக்கரி சென்று குழந்தைக்கு கேக் ஆர்டர் செய்து ஃபிரெஞ்சு ஃபிரைஸ் ஸாண்ட்விச் எல்லாம் ஆர்டர் செய்தான். அவள் சாப்பிட்டு விட்டு மிச்சம் வைத்ததை சாப்பிட்டான் அருண். பின்னர் இரண்டு சமோஸாவை பேக் செய்யச் சொன்னான்.

வீட்டிற்கு வந்த போது மணி 6:30. இருட்டாகி விட்டிருந்தது. வீட்டு வாசலில் லைட் எரியவில்லை. ‘இன்னுமா இவ வீட்டுக்கு வரல?’ என்று நினைத்து கொண்டான் அருண்.

“அப்பா, அம்மா எங்க அப்பா?”

“தெரியலையே?” என்றான். 

‘எங்க தான் போயிருப்பா?’ என்று நினைத்து கொண்டான் அருண். 

அப்போது ஃபிரிட்ஜின் டோரில் அவள் ஒட்டியிருந்த கோ டூ ஹெல் என்பதை பார்த்தான் அருண். 

‘வீட்டுக்கு வந்திருக்கா, அப்புறம் எங்கே போயிருப்பா?’ என்று நினைத்து ஃபோனை எடுத்து வாட்ஸ்அப்பில் வந்த  மெஸேஜை பார்த்தான். வினோதா அனுப்பிய மெஸேஜ் வந்திருந்தது.

‘சே, இவ்ளோ நேரமா வாடஸ் அப் பார்க்கனும்னு தோணலையே. அவ ஃபோனை எடுக்கலைன்னு மறுபடியும் மறுபடியும் கால் பண்ணினே தவிர அவளுக்கு மெஸேஜ் அனுப்பனும் இல்ல அவ எதாவது மெஸேஜ் அனுப்பி இருக்காளான்னு பார்க்கனும்னு தோணலையே’ என்று நினைத்துக் கொண்டான் அருண்.

வினோ என்று அவள் பெயருடன் வந்த மெஸேஜை திறக்கும் முன்னர் அவ்வாறு யோசித்தான்.

மெஸேஜை படிக்கத் தொடங்கினான்.

‘உனக்கு நான் ஒரு பெரிய பனிஷ்மெண்ட் தரப்போறேன். இனிமே நீ என் கிட்ட சண்டை போடனும்ன்னு நினைக்கவே கூடாது. அப்படி ஒரு பனிஷ்மெண்ட்’ என்று இருந்தது. 

 அதை படித்ததும் அருணுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

‘என்ன பைத்தியக்காரத்தனம் பண்றா இவ?’ என்று நினைத்து கொண்டே தன் மாமியாருக்கு கால் செய்தான் அருண்.

“ஹலோ அத்தை”

“சொல்லுப்பா அருண்”

“அத்தை, எப்படி இருக்கீங்க?”

“ நல்லா இருக்கேன் பா, நீங்க எப்படிப்பா இருக்கீங்க? வினோ, நித்தி எல்லாம் எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க அத்தை. மாமா இருக்காரா வீட்ல?”

“இல்லப்பா இன்னும் வரல. தாஸில்தார் பிரமோஷன் கிடைச்சதில் இருந்து வேலை அதிகமாக இருக்குன்னு சொன்னாரு. இப்போது கூட கலெக்டர் ஆஃபீஸ்ல மீட்டிங் போயிருக்கிறதா சொன்னாரு”

“ஓ, ஓகே ஓகே அத்தை. நான் அப்புறமா பேசறேன்”

“என்ன விஷயம் பா?”

“ஒண்ணும் இல்லை அத்தை. அப்புறமா பேசறேன்” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் அருண்.

இப்போது அவனுக்கு சற்றே பயம் தொற்றிக் கொண்டது. தன் நண்பன் ஹரிக்கு கால் செய்தான்.

“ஹரி”

“சொல்லுடா மச்சி”

“என் ஒயிஃபை காணோம். எனக்கு மைண்ட் அப்படியே பிளான்கா இருக்கு டா, நீ கொஞ்சம் வரீயா?”

“சரி டா, உடனே வரேன். நித்தி எங்க இருக்கா?”

“என் கூடத் தான். நீ நேரா வா பேசலாம்” என்றான் அருண்.

“சரிடா” என்று சொல்லி விட்டு அடுத்த கால்மணி நேரத்தில் அருணின் வீட்டில் இருந்தான் ஹரி.

“சொல்லு மச்சி. என்னாச்சு?” என்றான் ஹரி.

“காலைல சின்னதா ஒரு சண்டை டா”

“சொல்ல முடியும்ன்னா சொல்லு”

“இல்லடா சட்னீல உப்பு அதிகமா இருந்துச்சு. அதனால கத்திட்டேன்”

“ஏய் என்னடா. இதுக்கு எல்லாம் கூடவா சண்டை போடுவ?”

“இல்லடா. முதல்ல சாதாரணமாக தான் சொன்னேன்”

“என்ன சொன்ன?”

காலையில் நடந்த சண்டையை விவரிக்க தொடங்கினான் அருண்.

நித்திலாவை ஸ்கூலில் டிராப் செய்துவிட்டு வீட்டிற்கு வரும்போது குளித்து விட்டு ஆஃபீஸூக்கு ரெடி ஆகி கொண்டு இருந்தான் அருண்.

“வினோ. டிபன் ரெடியா?”

“ஹாங், ஆச்சு அருண் வாங்க உட்காருங்க, நான் எடுத்துக் கொண்டு வரேன்”

“ஓகே” என்று சொல்லி டைனிங் டேபிளில் அமர்ந்தான் அருண்.

இட்லி இரண்டு தான் இருந்தது.

“என்ன வினோ ரெண்டு இட்லி தான் இருக்கா?”

“நீங்க இதை சாப்பிட்டுக்கிட்டே இருங்க அருண், நான் தோசையை வார்த்துக் கொண்டு வரேன்”

“டைம் ஆகுது வினோ. இன்னைக்கு 10 ஓ கிளாக் ஆஃபீஸ்ல மீட்டிங் இருக்கு”

“சீக்கிரமா கொண்டு வரேன். நீங்க இதை சாப்பிடுங்க” என்று சொல்லி சட்னியை வைத்து விட்டு கிட்சனுக்கு சென்று தோசைக் கல்லை வைத்து தோசையை ஊற்றினாள்.

“வினோ” என்று கத்தினான் அருண்.

வேகமாக ஓடி வந்தாள் வினோதா.

“என்னடி இது சட்னீல உப்பை வாரி கொட்டி வச்சிருக்க?”

“சாரி அருண். இருங்க தேங்காய் சட்னி தான் கொஞ்சம் தண்ணி விட்டா சரியாயிடும். அவசர அவசரமாக செய்யவே தெரியாம ரெண்டு முறை உப்பு போட்டுட்டேன் போல?” என்று சொல்லி தண்ணீர் விட்டு கலங்கினாள் வினோதா.

பாகம் -3

“எனக்கு சட்னீ வேண்டாம் மிளகாய் பொடி கொடு” என்றான் அருண்.

“அருண், உங்களுக்கு அல்சர் இருக்கே?”

“கொடு, ஒரு நாளைக்கு சாப்பிட்டா செத்திட‌மாட்டேன்”

“அருண், ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?”

“பின்ன என்ன? காலைல பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடாம போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லவே தினமும் சாப்பிட்டு விட்டு போறேன். ஒரு மாசத்துக்கு ஹோட்டலில் சாப்பிடாதீங்கன்னு வேற டாக்டர் ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு. வேற வழி இல்லாம தான் உன்னை எதிர் பார்த்து கொண்டு இருக்கேன். இது கூட உன்னால சரியா பண்ண முடியாதா?”

“அச்சச்சோ” என்று சொல்லி கிட்சனுக்கு ஓடினாள் வினோதா.‌ 

வேகமாக கிட்சனுக்குள் வந்த வினோதா ஸ்டவ்வை பார்த்தாள். தோசை காய்ந்து தீய்ந்து போய் விட்டது.

அவள் அவசரமாக கிட்சனுக்கு ஓடுவதைப் பார்த்து கிட்சனுக்கு வந்தான் அருண்.

“மிச், நான் கிளம்பறேன்”

“அருண் அருண் அருண், பிளீஸ் டூ மினிட்ஸ் இருங்க. இதை எடுத்திட்டு வேற ஊற்றி தரேன். மணி 8.30 தான் ஆகுது”

“இட்லியே ஊற்றி வைத்திருக்கலாம் இல்ல?” என்றான் அருண் சற்றே கோபமாக.

“இல்ல அருண் உங்களுக்கு ஆறினா பிடிக்காதேன்னு…”

“அதான் 3 ஹாட் பாக்ஸ் வச்சிருக்க இல்ல?”

“இல்ல அதெல்லாம் ரொம்ப நாளா யூஸ் பண்ணல”

“அப்புறம் எதுக்கு போன மாசம் அடம்பிடிச்சு வாங்கின?”

“அருண், பிளீஸ் சாரி. எனக்காக ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க”

“முடியாது. எனக்கு தேவையில்லை. நீயே சாப்பிடு” என்றான் அருண்.

அடுத்த நொடி அவனுக்கு முன்னாலேயே ஸ்டவ்வை ஆஃப் செய்தாள் வினோதா. வேகமாக சென்று துப்பட்டாவை போட்டுக் கொண்டு பைக் சாவி மற்றும் தன் ஹேண்ட் பேகை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.

“வினோ, வினோ” என்று அருண் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாக தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து கடற்கரைக்கு சென்றாள்.

அப்போது பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டை காலி செய்து கொண்டு இருந்தனர். பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் ஆட்கள் இரண்டு பேர் சாமான்களை பெரிய பெரிய அட்டை பெட்டிகளில் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

“வினோ” என்று வாசலில் வந்து கூப்பிட்டான் அருண். ஆனால் அதற்குள் தெரு முனையில் திரும்பிவிட்டிருந்தாள் வினோதா.

பெருமூச்சு விட்டபடி,

‘ஒண்ணு சொல்லக் கூடாது ன்னு சொல்றா, உடனே கோச்சிக்கிறா’ என்று சற்று சத்தமாகவே புலம்பிக் கொண்டே உள்ளே சென்றான் அருண்.

பின்னர் ஷூவை போட்டுக்கொண்டு ஆஃபீஸூக்கு கிளம்பினான்.

ஹாலில் பெரியதாக மாட்டி வைக்கப் பட்டிருந்த அவர்கள் இருவரது திருமண ஃபோட்டோவை பார்த்தான். திருமணம் ஆன புதிதில் அவள் ஒருநாள் சொன்னது ஞாபகம் வந்தது.

“அருண் கண்டிப்பா நமக்குள்ள சண்டைகள் வரும். சில நேரம் நான் மறந்திட்டு சாரி சொல்லுவேன் உங்க மேல தப்பா இருந்தாக்கூட. சில நேரம் நீங்க சாரி சொல்லனும் என் மேல தப்பா இருந்தாக்கூட. சண்டை வரலைன்னா நமக்குள்ள லவ் குறைஞ்சிடும். சண்டை வந்து சமாதானம் ஆனா தான் லவ் அதிகமாகும். மோஸ்ட்லி நான் சண்டையை அவாய்டு பண்ண அந்த பிலேஸை விட்டு போயிடுவேன். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு வந்திடுவேன்”

“ஓகே வினோ” என்று சொல்லி அவளை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டான் அருண். அது ஞாபகம் வந்தது.

‘நாம தான் ஓவரா பேசிட்டோம். தவறு பண்றது சகஜம் தானே? சட்னீல உப்பு அதிகமா போட்டதுக்கு போய் இப்படி திட்டலாமா?’ என்று சொல்லி தன்னையே திட்டிக் கொண்டே ஃபோனை எடுத்து வினோதாவிற்கு கால் செய்தான்.

கட் செய்தாள்.

‘சாரி டி’

‘சாரி வினோ’

‘சாரி என் செல்லம்’

‘நீ சொன்னது போல லவ் அதிகமாக ஆயிடிச்சு’

‘உன் கிட்ட தான என்னோட ஃபீலிங்கஸ் எல்லாத்தையும் காட்ட முடியும். லவ்வை காட்டினா மட்டும் ஓகே சொல்ற. கோபப்பட்டா மட்டும் கோச்சிக்கிட்டு போயிடற?’

என்று சில லவ் மற்றும் முத்த எமோஜிகளுடன் வினோதாவிற்கு மெஸேஜ் அனுப்பினான் அருண்.

வினோதா மெஸேஜூகளை பார்க்காமலேயே ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தாள். 

மறுபடியும் மறுபடியும் கால் செய்தான் அருண்.

லைன் கிடைக்கவில்லை. ஆஃபீஸில் இருந்து ஃபோன் வந்துக் கொண்டே இருந்ததால், மீட்டிங்கிற்கு டைம் ஆகிறது என்று ஃபிரிட்ஜின் டோரில் ‘சாரி வினோ, ஐ லவ் யூ டி’ என்று எழுதி வைத்து விட்டு சென்றான்.

(ஆஃபீஸ் செல்லும் அவசரத்தில் பின் கதவு சாத்தி இருக்கிறதா என்று செக் செய்ய மறந்துவிட்டான் அருண். கதவு எப்போதுமே சாத்தி இருக்கும். ஆனால் தாழ்ப்பாள் போட்டிருக்கிறதா என்று அவன் பார்க்கவில்லை. அது மனோகருக்கு வசதியாக போனது. வினோதா தான் அந்த கதவை எப்போதுமே பூட்டி வைத்திருப்பாள். கதவு சாத்தி இருக்கவே, பூட்டி தான் வைத்திருக்கிறாள் என்று நினைத்து வெளி கதவை மட்டும் பூட்டிவிட்டுச் சென்றான் அருண்).

“இதுதான் டா நடந்துச்சு” என்று தன் நண்பனிடம் சொல்லி முடித்தான் அருண்.

“என்னடா நீ, இந்த சாதாரண விஷயத்திற்காகவா இவ்வளவு கோபம்?”

“ஏதோ ஒரு டென்ஷன்ல அவ கிட்ட கோபப் பட்டுட்டேன் டா”

“சரி, வினோதா உன் மெஸேஜை பார்க்கவே இல்லையா?”

“10.45 இருக்கும் புளூ டிக் வந்துச்சு. அப்போது மீட்டிங்ல இருந்தேன். வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பி இருந்தா. மீட்டிங் முடிஞ்ச்சிட்டு வந்து மெஸேஜை பார்த்து விட்டு அவளுக்கு மறுபடியும் கால் பண்ணேன். லைன் கிடைக்கவில்லை”

“எங்க அந்த மெஸேஜ்,

நான் பார்க்கலாமா?”

“இதோ பாரு” என்று காண்பித்தான் அருண்.

‘உனக்கு நான் ஒரு பெரிய பனிஷ்மெண்ட் தரப்போறேன். இனிமே நீ என் கிட்ட சண்டை போடனும்ன்னு நினைக்கவே கூடாது. அப்படி ஒரு பனிஷ்மெண்ட்’ என்று இருந்தது. அதை தன் நண்பன் ஹரியிடம் காண்பித்தான் அருண். 

அந்த ஃபோனை கொடுக்கும் போதே கண்கள் கலங்கியது அருணிற்கு.

“மச்சி, டோண்ட் ஒரி. உன்னை வெறுப்பேத்த தான் வினோதா இப்படி பண்ணி இருக்கா. சீக்கிரமா அவளே வந்திடுவா பாரு”

“இல்லடா, என் மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் நித்திலா கிட்ட அதை காட்டமாட்டா. நித்திலாவை பிக்கப் பண்ண அவ போகலன்னு தெரிஞ்சதும் தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

“நீ ரொம்ப திங்க் பண்ணாத டா. அவ ஃபிரெண்ட்ஸூக்கு கால் பண்ணி பேசு”

“இல்லடா கன்னியாகுமரில உன் ஒயிஃபை தவிர அவளுக்கு எந்த ஃபிரெண்ட்ஸூம் இல்லன்னு உனக்கே தெரியாதா? அவளோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சென்னைல தான் இருக்காங்க”

“தெரியும் டா. அவ ஃபிரெண்ட்ஸூக்கு கால் பண்ணி பேசி இருக்காளான்னு தெரிஞ்சிக்கலாம் இல்ல? எங்க போறேன் என்ன ஏதுன்னு”

“இல்லடா. அவ எங்க சண்டையை அவங்க அம்மா கிட்டயே கூட சொல்ல மாட்டா. அப்படி இருக்க கண்டிப்பா அவ ஃபிரெண்ட்ஸூகளுக்கு சொல்லி இருக்க மாட்டா”

“பெருமூச்சு விட்டபடி.

சரி அப்போ லீகலா கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்ன்னு சொல்றீயா?”

“ஆமாம் டா. கண்டிப்பா அவளுக்கு ஏதோ ஆபத்து தான் நடந்திருக்கு. ஏன்னா ஸ்கூட்டர் வீட்டில தான் இருக்கு” 

“ஒருவேளை ஆட்டோவில் போயிருக்கலாம் இல்ல?”

“இல்லடா அவ பைக்ல போவா இல்லன்னா என் கூட கார்ல தான் வருவா. தனியா எங்க போகனும்ன்னாலும் அவளோட ஸ்கூட்டரில் தான் போவா. மழை வெயில் எதுவா இருந்தாலும் சரி”

“வீட்டிற்கு உள்ள வந்திட்டு அப்புறமா வெளியே போயிருக்காளா?”

“ஆமாம் டா. ஃபிரிட்ஜின் டோரில் 

‘சாரி வினோ. ஐ லவ் யூ’ எழுதி வச்சிருந்தேன். அதை கிழித்து கீழே போட்டு விட்டு ‘கோ டூ ஹெல்’ ன்னு எழுதி வச்சிருந்தா” என்றான் அருண்.

“அப்போ உன் மேல செம கோபத்தில இருந்திருக்கா டா வினோதா. எங்க போயிருப்பானு ஒண்ணுமே புரியலையே?” என்றான் ஹரி.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.