
என்னுள் நீயடி, உன்னுள் நானடி
பாகம் -1
“பொண்ணை அழச்சுண்டு வாங்கோ”
என்று ஐயரின் குரல் கேட்டு தன் மகளை அழைத்து வர மணமகள் அறைக்கு சென்றார் தனலட்சுமி.
அழகு தேவதையே வானில் இருந்து இறங்கி வந்தது போல இருந்த தன் மகள் வசுந்தராவைப் பார்த்து சிரித்தபடி திருஷ்டி உடைத்தார்.
“அம்மா” என்று கண்கள் கலங்கினாள் வசுந்ரா.
“வசு, அழாத, அமைதியா இரு யாராவது பார்க்கப் போறாங்க”
“அம்மா, நான் இதைப் பண்ணியே ஆகணுமா?”
“நமக்கு வேற என்ன வழி இருக்கு வசு?”
“அம்மா அந்த ஆளு சரியான குடிகாரன். ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன். அதுவும் இல்லாம ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்றதா சொல்லி கெடுத்து கொலை பண்ணிட்டானு சொல்றாங்க. எனக்கு இந்தக் கல்யாணம் சுத்தமா பிடிக்கல மா”
“உன் கழுத்துல தாலி ஏறினால் தான் என் கழுத்துல தாலி நிலைக்கும். உங்க ஆப்பிரேஷனுக்கு நாற்பது லட்சம் தேவை. அதைத் தர சம்மதிச்சிருக்காரு. நீ உங்க அப்பா மேல வச்சிருக்க அன்பும் பாசமும் உண்மையாக இருந்தா. தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ. ஒரு வருஷம் எங்களுக்காக பொறுத்துக்கோ. அதுக்கப்புறம் ஏதாவது ஒரு பெரிய லாயரா பார்த்து அவன்கிட்ட இருந்து உனக்கு டைவர்ஸ் வாங்கிடலாம்”
“ஆனா அம்மா அதுவரைக்கும் நான் எப்படிமா இருப்பேன். உயிரோடு இருப்பனா இல்லையான்னு கூட தெரியல”
“வசு, தயவு செஞ்சு இப்படி பேசாத. சரி உனக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுடு. நான் மந்திராவை ரெடியாகி வர சொல்றேன். அவ நான் பெத்த பொண்ணு. எனக்காகவும் உங்க அப்பாக்காகவும் செய்வா”
“அம்மா, ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. நான் என்னைக்காவது உங்கள சித்தியா நினைத்து இருப்பேனா. என்னை பெத்த அம்மாவா தான் நான் உங்களை நினைக்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்று தானே கூப்பிடுறேன்.
மந்திரா ரொம்ப சின்ன பொண்ணு. அவளை எப்படி நான் அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க நினைப்பேன். நான் கேட்டது வேற ஏதாவது வழி இருக்கா என் அப்பாவை காப்பாத்துறதுக்கு என்று தான்”
“இருந்தா ஏம்மா இந்த முடிவுக்கு வர போறோம். இந்த விஷயம் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா. என் உயிர் போனாலும் பரவால்ல என் மகளை அந்த வாழ்க்கையில தள்ளாதே என்று தான் சொல்லுவாரு. ஆனா உங்க அப்பா இல்லாமல் என்னால இருக்க முடியாது. எங்களுக்காக ஒரு வருஷம் நீ பொறுத்துக்கோமா”
“சரிம்மா” என்று தன் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு மெல்ல நடந்து சென்றாள்.
“அக்கா” என்று கண்கள் கலங்க வசுந்தராவை கட்டிக் கொண்டாள் மந்த்ரா.
அவளை சமாதானம் செய்துவிட்டு தன் மனதை கல்லாக்கி கொண்டு நடந்து சென்றாள் வசுந்தரா.
மணமேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் ஆதித்யா. அவன் முகத்தில் சோகம் இருந்தது. அதைவிட கோபமும் ஆத்திரமும் இருந்தது.
“கூல் டவுன் மச்சி” என்று அவன் காதில் கிசுகிசுத்தான் ஆதித்யாவின் ஃபிரண்ட் விக்னேஷ்.
தன் நண்பனை முறைத்தான் ஆதித்யா.
“ஏய் எல்லாரும் பாக்குறாங்க டா. உன் கல்யாண ஃபோட்டோல உன் முகம் இப்படி இருந்தா உங்க அப்பா உனக்கு தரேன்னு சொல்ற கம்பெனி சிஇஓ பதவியை தர மாட்டாரு”
தன் நண்பனை முறைத்து விட்டு மெல்லிய புன்னகையுடன் கேமராவுக்கு போஸ் கொடுத்தான் ஆதித்யா.
ஆதித்யாவும் வசுந்தராவும் இதுவரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
வசுந்தரா நடந்து வந்தாள். பச்சை நிற பட்டுப்புடவையில் சிகப்பு நிற பார்டர். மேட்சிங்கா பிளவுஸ். அவளுக்கு ஜவுரியே தேவையில்லை அவளுடைய கூந்தலிலேயே பூ அலங்காரத்துடன் அழகாக ஹேர் ஸ்டைல் செய்து இருந்தனர். மேக்கப் போடாமலேயே தேவதை போல் இருக்கும் நமது ஹீரோயினுக்கு மென்மேலும் அழகு சேர்த்து அழகோவியமாக ஆக்கிய அந்த பியூட்டிஷியனுக்கு பாராட்டுக்கள் சொல்லியே ஆக வேண்டும்.
அவளை ஏறெடுத்து பார்த்த ஆதித்யா ஒரு நிமிடம் கண்ணிமைக்க மறந்தான். ஏனோ இறந்து போன தன் காதலி ஷைலஜா அவன் முன் தோன்றி மறைந்தாள்.
“டேய் மச்சி, அண்ணி சூப்பரா இருக்காங்க” என்றான் விக்னேஷ்.
சுய நினைவுக்கு வந்தவனாய் திரும்பி கேமராவை பார்த்து அமர்ந்தான். ஃபோட்டோகிராஃபர் வசுந்தராவை ஆதித்யா பிரமிப்பாய் பார்த்ததையும் சேர்த்து அழகாக கிளிக் செய்து இருந்தார்.
நமது ஹீரோயின் வசுந்தரா இன்னும் நம் ஹீரோ ஆதித்யாவை பார்க்கவில்லை.
ஆசிரியர் குறிப்பு: என்னடா இவங்க முதல்ல குடிகாரன், ஜெயில்ல இருந்தவன் அப்புறம் கொலைகாரன்னு சொன்னவங்க. இப்ப ஹீரோன்னு சொல்றாங்களே கன்ஃபியூஸ் ஆகாதீங்க. ஆதித்யா தான் நம்ம கதையோட ஹீரோ. எல்லாம் சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தான். கம்யூனிகேஷன் ப்ராப்ளம். அதையெல்லாம் சீக்கிரமா சரி பண்ணிடலாம். சரி வாங்க கதைக்குள்ள போகலாம்.
மெல்ல நடந்து வந்து ஆதித்யாவின் பக்கத்தில் அமர்ந்தாள் வசுந்தரா.
ஐயர் “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொன்னவுடன். நாதஸ்வரம் மற்றும் மிருதங்கம் ஒலிக்க வசுந்தராவின் கழுத்தில் தாலி கட்டினான் ஆதித்யா.
கையைக் கூப்பி கண்களை மூடிக்கொண்டு
‘கடவுளே நீதான் என்னை காப்பாத்தணும்’
என்று வேண்டிக் கொண்டு அவனுடைய முகத்தை திரும்பி பார்த்தாள் வசுந்தரா.
“இவனா?” என்று நினைத்துக் கொண்டாள்.
திருமணம் முடிந்த உடன் நிறைய ஃபோட்டோக்களை எடுத்தார் ஃபோட்டோகிராஃபர். லஞ்ச் சாப்பிடும் போது இருவரையும் ஊட்டிக் கொள்ளும் மாதிரி ஸ்டில் கொடுக்க சொன்னார்.
“அதெல்லாம் வேண்டாம் சார்” என்றாள் வசுந்தரா.
அவள் வாய்வரை ஸ்வீட்டை எடுத்து வந்தவனுக்கு அவள் சொன்னது கடுப்பாகி ஸ்வீட்டை தன் இலையில் கோபமாக போட்டான். அவனுடைய இந்த செயலால் ஒரு நிமிடம் பயந்தாள் வசுந்தரா.
அப்போது அங்கே வந்த தனலட்சுமி.
“வசு” என்றதும் அமைதியாக ஆனாள்.
“மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை. அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம”
என்றார் தனலட்சுமி.
“பரவாயில்லைங்க. அப்படித்தான் ஊட்டி விடணும்னு அவசியம் இல்ல?”
“மாப்பிள்ளை கோச்சுக்காதீங்க. நீங்க ஊட்டி விடுங்க அவ சாப்பிடுவா”
மறுபடியும் மறுபடியும் தனலட்சுமி சொல்லவே, மறுக்காமல் ஸ்வீட்டை எடுத்து ஊட்டி விட்டான் ஆதித்யா.
தன் அம்மாவிற்காக வேறு வழி இன்றி அவன் ஊட்டி விடும் பொழுது ஸ்மைல் செய்தவாறு அந்த ஸ்வீட்டை கடித்தாள்.
“வசு, நீ இப்ப மாப்பிள்ளைக்கு ஊட்டி விடு”
ஒரு ஸ்வீட்டை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.
பிறகு அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்தது.
“இந்த வேஷ்டியை கட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு ரொம்ப கடுப்பா இருக்கு மச்சி, இத சேஞ்ச் செய்யலாமான்னு யார்கிட்டயாவது கேட்டு வந்து சொல்லு”
அப்போது வசுந்தரா அந்த ரூமுக்கு வந்தாள்.
“சரி மச்சி, நான் கேட்டுட்டு வரேன்” என்று சொல்லி விக்னேஷ் வெளியே சென்றதும்.
“ஒரு ரெக்வெஸ்ட்” என்றாள் வசுந்தரா ஆதித்யாவிடம்.
‘என்ன?’ என்பது போல அவளைப் பார்த்தான்.
பாகம் -2
“எங்க அப்பா ஹாஸ்பிடல் அட்மிட் ஆயிருக்கார். அவர் கல்யாணத்தை பார்க்கவில்லை. நம்ம ரெண்டு பேரும் இந்த கல்யாண ட்ரெஸ்லயே போய் அவர் கிட்ட ஆசிர்வாதம் வாங்கலாமா?”
“இவ்வளவு நேரம் இந்த வேஷ்டியை கட்டிட்டு இருக்கறதே, எனக்கு கடுப்பா இருக்கு. இதுல இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல கட்ட சொல்றீங்களா?”
“சாரி. நீங்க உங்க கன்வீனியண்ட் டிரஸூக்கு சேஞ்ச் ஆகிக்கோங்க. நான் இந்த டிரஸ்லியே வரேன். என் கூட ஹாஸ்பிடலுக்கு மட்டும் வாங்க.டூ மினிட்ஸ் அவர பார்த்துட்டு மட்டும் போயிருங்க”
“மிச்” என்றான் ஆதித்யா.
“சரி, உங்களுக்கு முக்கியமான வேலை இருந்தா நீங்க போங்க”
போகலாம் என்று நினைத்து திரும்பி சென்றவனிடம்,
“ஒரே நிமிஷம்” என்று சொல்லி அவன் அருகில் நின்று தன் ஃபோனில் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள் வசுந்தரா.
“இப்போ நீங்க கிளம்புங்க. நான் போய் ஹாஸ்பிடல் எங்க அப்பாவ பார்த்துட்டு, இந்த ஃபோட்டோவ எங்க அப்பா கிட்ட காட்டிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு, ஈவினிங் நீங்க சொல்ற இடத்துக்கு வந்துடறேன்”
“சரி. நான் லொகேஷன் அனுப்புறேன்”
“ஓகே”
“எப்படி வருவீங்க? கார் இருக்கா?”
“இல்ல, ஆட்டோ இல்லனா கேப் புக் பண்ணி வரேன்”
“ஓகே”
“என் நம்பர் உங்ககிட்ட இருக்கா?”
“இல்ல”
“உங்க நம்பர் என்கிட்ட இருக்கு. நான் மிஸ்டு கால் தரேன். ஸ்டோர் பண்ணிக்கோங்க”
என்றாள் வசுந்ரா.
“ஓகே, உங்க பேரு”
‘பேர் கூட தெரியாமையா, தாலி கட்டி இருக்கான்’ என்று நினைத்துக் கொண்டே.
“ஐ அம் வசுந்ரா”
“ஓகே வசுந்ரா”
“ஜஸ்ட் கால் மீ வசு”
“ஓகே வசு, நீங்களும் என்னை ஆதின்னே கூப்பிடுங்க”
“ஓகே ஆதி, பை” என்று சொல்லிவிட்டு ரூமிலிருந்து வெளியே வந்து தன் அம்மாவிடம்.
“அம்மா நான் அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போறேன்”
“தாலி கட்டின அப்புறம் நீ தனியா போக கூடாது வசு”
“அம்மா ஆதி கிட்ட நான் கேட்டேன். அவர் வர முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆனா நான் அப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்காமல், அவங்க வீட்டுக்கு போக மாட்டேன்”
“என்னாச்சு வசு, இப்படி எல்லாம் பேசுற?”
“தப்பா ஏதாவது பேசிட்டேனா அம்மா?”
“ஆமாம், முதல் தப்பு உன் புருஷனை பேர் சொல்லி சொன்னது. இரண்டாவது தப்பு அவங்க வீடுன்னு சொன்னது”
“ஆனா அம்மா, அவர்தான் பேர சொல்லி கூப்பிட சொன்னாரு”
“நீ அவர் கூட தனியா இருக்கும்போது, பேர் சொல்லி கூப்பிடு. மத்தவங்க கிட்ட பேசும்போது அவர் இவர்னு மரியாதையா பேசு”
“ஓகே மா. ஆனா அது என் வீடு இல்ல”
“வசு இப்படி எல்லாம் பேசாத மா”
“அம்மா, ஒரு வருஷம் கழிச்சு இங்க தானே வரப்போறேன். அப்போ அதெப்படி என் வீடா ஆகும்”
“சரி. ஒரு வருஷத்துக்கு அது தான் உன் வீடு”
“அம்மா” என்று சொல்லி கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள் வசுந்ரா.
மனதிற்குள் ‘உயிரோடு வருவேனா? அல்லது பிணமாக வருவேனா? என்று கடவுளுக்கு தான் தெரியும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
“மந்த்ராவை கூட ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறியா மா?”
“இல்லம்மா வேண்டாம். அவளோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்து இருக்காங்க. அவங்க கூட பேசிட்டு இருக்கா அவ. அவளாவது நிம்மதியா இருக்கட்டும்”
“வசு, நீ இப்படி ஒரு ஒரு முறையும் பேசுறது, என் நெஞ்சில் ஈட்டி வச்சு குத்துறது போல இருக்கு”
“இல்லம்மா இல்ல நீங்க கவலைப்படாதீங்க. உங்களுக்காகவும் அப்பாவுக்காகவும் மந்த்ராவுக்காகவும் நான் ஒரு வருஷம் பல்லு கடிச்சுட்டு பொறுத்துக்கிறேன்”
“வெளியே பேசுறது தான் அந்த மாதிரி. மாப்பிள்ளை பார்த்தா அவ்ளோ தப்பானவரா தெரியலம்மா”
“வெளியே பார்த்தால் எப்படிமா தெரியும்?”
“சரிமா அந்த பேச்சை விடு. நான் கேட்கவா மாப்பிள்ளை கிட்ட?”
“என்ன கேட்க போறீங்க?”
“உன் கூட ஹாஸ்பிடலுக்கு வராரான்னு?”
“வேண்டாம் அம்மா. நான் அவ்வளவு தூரம் சொல்லியும் அவரு கேட்கல. நீங்களும் கேட்டுட்டு அவமானப்படாதீங்க”
தன் மனைவியை காரில் கூட்டிச் சென்று ஹாஸ்பிடலில் விட்டு விட்டு பிறகு அவளை அழைத்து வரும்படி தன் நண்பன் விக்னேஷிடம் கேட்டு இருந்தான் ஆதித்யா. ஏனென்றால் அவள் ஆட்டோ புக் செய்து வருவேன் என்று கூறியதால் தன் அப்பா அம்மாவிற்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்று பயந்து தன் நண்பனிடம் உதவியாக கேட்டான்.
மேலும் அவள் ஹாஸ்பிடலில் இருந்து வரும் பொழுது தன்னுடைய ஆபீசுக்கு அழைத்து வருமாறு கூறியிருந்தான். பிறகு அவனும் அவளும் சேர்ந்து அவனுடைய வீட்டுக்கு செல்வதாக பிளான் பண்ணி இருந்தான்.
அதை வசுந்தராவிடம் கூற வந்த விக்னேஷ் தனலட்சுமி வசுந்தராவின் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு ஆதித்யாவிடம் சென்று கூறினான்.
“அவங்க என்னன்னா சொல்லட்டும், அதை பத்தி எனக்கு கவலை இல்லை” என்றான் ஆதித்யா.
“ஆனா மச்சி புரிஞ்சுக்கோடா. நீ அவங்க கழுத்துல தாலி கட்டிட்ட. அவங்க தான் உன் பொண்டாட்டி”
“எல்லாம் இன்னும் ஒரு வருஷம் தான்”
“அப்புறம்”
“டைவர்ஸ் பண்ணிடுவேன்”
“என்னடா சொல்ற?”
“ஆமா. கல்யாணம் ஆனதும் கம்பெனியோட சிஇஓ ஆக்குறேன்னு சொன்னாரு. அதனால ஒரு மூணு மாசம் கழிச்சு டைவர்ஸ் பண்ணிடலாம்னு நினைச்சேன். ஆனா இப்போ என்னடான்னா எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் தான் கம்பெனியை என் பேர்ல எழுதி வைப்பேன்னு சொல்றாரு”
“அதனால”
“அதனால, அவ ஒரு குழந்தையை பெத்ததும் டைவர்ஸ் கொடுத்திடுவேன்”
“நீ என்ன லூசா. அந்த பொண்ணுக்கு இதெல்லாம் தெரிஞ்சா?”
“இது எல்லாத்தையும் அவங்க அம்மாகிட்ட நான் முதலிலேயே பேசிட்டேன்”
“அவங்க அம்மா ஒத்துக்கிட்டாங்களா?”
“ஆமா ஒத்துக்கிட்டு தான் சம்மதம் சொன்னாங்க. அதனால இந்த விஷயம் அவளுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்”
“அப்ப, நீ அவ கூட சேர்ந்து குழந்தை பெத்துக்க போறியா?”
“இல்லடா. அதுக்குதான் மெடிக்கல்ல ஆயிரம் வழி இருக்கு இல்ல?”
“அப்படின்னா?”
“குழந்தைக்கு அப்பா அம்மா நானும் அவளும் தான். ஆனா எங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் நடக்காது”
“எந்த பொண்ணுடா இதக்கு ஒத்துக்குவா?”
“இவ ஒத்துக்கவே தானே அவங்க அம்மா சம்மதம் சொன்னாங்க”
“எனக்கு என்னமோ அவங்களுக்கு உண்மை தெரிஞ்ச மாதிரி தெரியல”
“அப்படின்னா இன்னைக்கு நைட்டு, நான் கிளியரா எல்லாம் அவங்க கிட்ட சொல்லிடறேன்”
“சரிடா. இப்பதான் தாலி கட்டி இருக்க. இன்னைக்கு ராத்திரியே அவங்க தலையில இடியை இறக்க போற, ஒரு ஹெல்ப் பண்ணு”
“யாருக்கு, உனக்கா? “
“இல்ல அவங்களுக்கு”
No comments yet.