இரவில் எரிகிறேன், பகலில் உறைகிறேன்.
பாகம் -1
“விஹான், சீக்கிரமா வாடா போகலாம்” என்றான் விஹானின் நண்பன் ரோஹித்.
“என்னால முடியாதுடா”
“எனக்கு புரியுதுடா. ஆனா வேற என்ன வழி இருக்கு? நீயே சொல்லு?”
“போகாம இருக்கலாம் இல்ல? அந்த வழி இருக்கு இல்ல?”
“நீ போகலன்னா, அவ கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டா”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் இல்லனாலும் அவ கல்யாணம் பண்ணிப்பா. எப்போ என்னை விட அவன் தான் முக்கியம் என்று நினைத்துப் போனாளோ? அப்பவே அவ யாரோ நான் யாரோ”
“மச்சி என்னதான் இருந்தாலும் அவ உன் கூட பொறந்த தங்கச்சி டா,
அப்பா, அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு. நீ தானடா அவங்க ஸ்தானத்தில் இருந்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்?”
“என்னால முடியலடா. எப்படி தான் அவ அந்த தீபக்கை காதலிச்சாளோ? அவனும் அவன் மூஞ்சியும். நான் உனக்கு தான் என் தங்கச்சியை கட்டிக் கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்னு சொல்லி இருக்கேன் இல்ல?” என்று விஹான் சொன்ன அடுத்த நொடி ரோஹித்துக்கு கண்கள் கலங்கியது, ஏனென்றால் அவனும் விஹானின் தங்கை விருத்திகாவை ஒரு தலையாக காதலிக்கிறான்.
கண்களைத் துடைத்துக் கொண்டு,
“மச்சி, இது அவ வாழ்க்கை. அவ தான் முடிவு பண்ணனும். நம்ம டிசைடு பண்ண கூடாது”
“ஆனா அவன், எப்படிடா. எப்படி அவளுக்கு அவன் மேல காதல் வந்துச்சுன்னு தெரியல?”
“வந்த பிறகு அதை பற்றி பேசி பிரயோஜனம் இல்லடா”
“என்னை மாதிரி, என்னை விட ஒரு படி மேல ஒருத்தன் என் தங்கச்சி நல்லா பாத்துப்பான்னா அது நீ தான்டா. எனக்கு அந்த தீபக்கை கண்டாலே ஆகாது. அவன் மேல எப்படி விருத்திகாவுக்கு?” என்று சொல்லி திக்கினான்.
“இதுதாண்டா, இதுதான் காரணம்”
“என்னடா சொல்ற?”
“ஆமாண்டா ஒரு ஒரு முறையும் அவன் மேல இருக்குற வெறுப்பை நீ அவ முன்னாடியே சொல்லி இருக்க. அதனால தான் அதெல்லாம் சேர்ந்து அவளுக்கு அவன் மேல காதல் வந்துடுச்சு”
“அப்படின்னா வெறுப்பு தானடா வந்து இருக்கணும்? எப்படிடா காதல் வரும்”
“உன் தங்கச்சியை பத்தி உனக்கு தெரியாதா, நான் சொல்லனுமா. எது வேண்டாமோ அதைத்தானே செய்வா. அதனாலதான் நீ ஒரு ஒரு முறையும் என்னை பத்தி பெருமையா பேசுறது என் மேல அவளுக்கு வெறுப்பு வந்துருச்சு. அந்த தீபக் பத்தி ஒரு ஒரு முறையும் நீ வெறுப்பா பேசினது அவளுக்கு அவன் மேல காதல் வந்துடுச்சு”
“நீ என்ன சொன்னாலும் நான் வந்து சாட்சி கையெழுத்து போட மாட்டேன் டா. உன் மனசு நோகடிச்சுட்டு அவளுக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்”
“மச்சி, நீ உன்னோட விருப்பத்தை என்கிட்ட சொன்னா அப்புறம் தான் எனக்கு உன் தங்கச்சி மேல காதல் வந்தது. ஆனா எப்ப அவளுக்கு என் மேல விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சுதோ அப்பவே நான் என் மனசை சமாதானப் படுத்திக்கிட்டேன்.
அதனால என் மனசுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. என்னை பொறுத்த வரைக்கும் இப்போ அவ என் ஃபிரண்டோட தங்கச்சி. அதனால வா போகலாம்”
விஹான் எவ்வளவு மறுத்தும் ரோஹித் அவனை கட்டாயப்படுத்தி ரெஜிஸ்டர் ஆபீஸுக்கு அழைத்து சென்றான்.
விருத்திகா மற்றும் தீபக்கின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. தீபக்கின் இரண்டு நண்பர்களும் அவனுக்காக சாட்சி கையெழுத்து போட்டனர். விருத்திகாவின் சார்பில் விஹான் மற்றும் ரோஹித் கையெழுத்து போட்டனர்.
அதன் பின்னர், கோவிலில் மாலை மாற்றி விருத்திகாவிற்கு தாலி கட்டினான் தீபக்.
கோவில் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் அனைவரும் சாப்பிட்டனர்.
சாப்பிட்டுவிட்டு எழுந்து தீபக் கை கழுவ சென்றான்.
அப்போது ரோஹித் தீபக்கிடம் பேச சென்றான்.
“ஹாப்பி மேரிட் லைப் தீபக்” என்று சொல்லி கை நீட்டினான் ரோஹித்.
ரோஹித் ஒரு தலையாக விருத்திகாவை காதலித்தது தீபக்கிற்கு தெரியும். அதனால் அவனைக் கண்டாலே இவனுக்கு பிடிக்காது.
கை கொடுக்கவில்லை, “தேங்க்ஸ்” என்று மட்டும் சொல்லி விட்டு திரும்பி நடந்து சென்றான் தீபக்.
“ஒரு நிமிஷம் தீபக்”
“என்ன?” என்று சற்று வெறுப்பாகவே கேட்டான்.
“உன்னோட பேரன்ட்ஸ் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னு தெரியும்”
“அதுக்கு?”
“நீயும் விருத்திகாவும் எங்கே ஸ்டே பண்ண போறீங்கன்னு?”
“அது உனக்கு எதுக்கு?”
“இல்ல விஹான் தான் கேட்க சொன்னான்”
“அதை நான் அவன்கிட்டயே சொல்லிக்கிறேன். உன்கிட்ட சொன்னா நான் இல்லாத நேரத்துல வந்து என் பொண்டாட்டியை பாக்குறதுக்கா?”
“ஏன் தீபக், இப்படி எல்லாம் பேசுற?”
“உண்மைய சொல்லணும்ன்னா உன் மூஞ்சியை பாக்கவே எனக்கு புடிக்கல. விருதிக்காவுக்காக தான் நான் பொறுமையா இருக்கேன். அவளுக்கு அவங்க அண்ணன் முக்கியம், அவங்க அண்ணனுக்கு நீ முக்கியம்”
“சாரி தீபக், இதுக்கு மேல உங்க ரெண்டு பேரையும் நான் கண்டிப்பா சந்திக்க மாட்டேன்”
“அது மட்டும் நடந்தா, உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கும்”
கண்கள் கலங்க அங்கிருந்து நடந்து வந்தான் ரோஹித்.
அவன் கண்கள் கலங்கி வருவதைப் பார்த்தான் விஹான்.
அப்போது கை கழுவ எதிரே வந்த விருத்திகா ரோஹித்தைப் பார்த்து,
“ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
“எதுக்கு?” என்றான் ரோஹித்.
“கண்டிப்பா நீங்க தான் அண்ணா கிட்ட பேசி என்னோட கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்து இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்காக தான் சொல்றேன்”
“அப்படி எல்லாம் இல்ல, அவனோட ஒரே தங்கச்சி நீங்க, உங்க கல்யாணத்துக்கு போய் அவன் எப்படி வர மாட்டேன்னு சொல்லுவான்?”
“எனக்கு எங்க அண்ணனை பத்தியும் தெரியும். உங்களை பத்தி தெரியும்” என்று சொல்லி சிரித்தாள் விருத்திகா.
ஸ்மைல் செய்தான் ரோஹித்.
அப்போது அங்கே வந்த தீபக், தன் மனைவி விருத்திகாவின் தோளில் கையை போட்டுக்கொண்டு,
“என்ன டார்லிங் என்னாச்சு?” என்றான்.
“என்னடா, பப்ளிக் பிளேஸ்ல, தோளிலிருந்து கையை எடு” என்று சொல்லி வெட்கப்பட்டாள் விருத்திகா.
“ஏய், இப்போ நீ என்னோட ஒயிஃப். எனக்கு எல்லா உரிமையும் இருக்கு உன் மேல”
“அதுக்காக இப்படியா இங்கேயா?” என்று சொல்லி அவள் தோளிலிருந்து அவனுடைய கைகளை மெதுவாக எடுத்தாள்.
அவர்கள் இருவரும் அன்னியோன்யமாக பேசிக் கொள்கிறார்கள் என்று தோன்றியதால் அங்கிருந்து நகர்ந்தான் ரோஹித்.
ரோஹித் சென்றதும்,
“டேய், நீ ஏன் இப்படி பண்ணனு எனக்கு தெரியும். ரோஹித்தை வெறுப்பு ஏத்துவதற்கு தானே?” என்று சொல்லி அவனுடைய இடுப்பில் கிள்ளினாள் விருத்திகா.
தொடரும் ….
அ. வைஷ்ணவி விஜயராகவன் . 
பாகம் 2
ஆமாண்டி பொண்டாட்டி, கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே. நான் ரொம்ப பொசசிவ் என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்தான் தீபக்.
வெட்கம் கொண்டு சிரித்தாள் விருத்திகா.
விஹான் பக்கத்தில் போய் அமர்ந்தான் ரோஹித்.
மச்சி அந்த தீபக் உன்னை வெறுப்பேத்துனான் தானே?
ஏய், இன்னும் என்னடா அந்த தீபக்னு சொல்ற?
பின்ன என்ன சொல்ல சொல்ற?
தீபக் உன்னோட மச்சான் டா.
என் தங்கச்சியை கல்யாணம் பண்ணாலும் பண்ணலன்னாலும் நீ தாண்டா என்னோட மச்சி. உன்ன தவிர நான் வேற யாரையும் மச்சான்ற ஸ்தானத்தில் வைத்து பார்க்க மாட்டேன்.
சரிடா மச்சான் இல்ல தங்கச்சி புருஷன் போதுமா?
சரி அத விடு, அவன் என்ன சொன்னான் அதை மட்டும் முதல்ல சொல்லு.
ஒன்னும் இல்லடா,
பொய் சொல்லாத மச்சி உன் கண்ணு கலங்குச்சு நான் பார்த்தேன். என் மேல சத்தியம் இப்ப சொல்லப் போறியா இல்லையா?
என்னடா இதுக்கெல்லாம் இப்படி பேசுற.
அவங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கலையே எங்க தங்க போறீங்கன்னு கேட்டேன். அத உன்கிட்ட சொல்லிக்கிறேன்னு சொல்லிட்டாரு.
ஏய் லூசா டா நீ அவனை போய் அவரு இவரு மரியாதையா பேசுற, அதுவும் இல்லாம உனக்கு அந்தக் கேள்வி ரொம்ப அவசியமா? அவங்க எங்க தங்கினா உனக்கு என்ன?
மச்சி, அவ உன் தங்கச்சி டா, எப்படியாவது போகட்டும்னு விட்டுற முடியுமா?
இந்த நல்ல மனச புரிஞ்சுக்காம தான் போயிட்டா இல்ல கஷ்டப்படட்டும், அப்பதான் உன்னோட அருமை தெரியும்.
ஒருநாளும் அப்படி சொல்லாத மச்சி. அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.
உன்ன திருத்தவே முடியாது. நான் கிளம்ப போறேன் நீ வரியா வரலையா. இல்ல அவங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பிட்டு தான் வருவியா?
போகலாம் மச்சி, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
அண்ணா என்று தன் தங்கை விருத்திகாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தான் விஹான்.
நீ இன்னும் என் மேல கோபமா தான் இருப்பேன்னு எனக்கு தெரியும். ஆனா சீக்கிரமா என்னை பத்தி புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்.
இது நாங்க தங்க போற பிளாட்ஸ் அட்ரஸ். அடிக்கடி இல்லனாலும் எப்பவாவது ஒரு முறை வந்து பாரு அண்ணா.
அந்தக் கார்டை வாங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, சரி நான் கிளம்புறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப நினைத்தவனை மறுபடியும் அண்ணா என்று கூப்பிட்டாள்.
இப்ப என்ன?
நம்ம வீட்டுக்கு நான் வரலாமா அண்ணா?
அவள் அப்படி கேட்டது அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும், சரி என்று தலையை மட்டும் அசைத்து விட்டு அங்கிருந்து தன் நண்பன் ரோஹித்துடன் பைக்கில் கிளம்பி சென்றான் விஹான்.
கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த தன் மனைவியின் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான் தீபக்.
புதிதாக இருந்த அந்த பிளாட்டை பார்த்து ஆச்சரியப்பட்டாள் விருத்திகா.
வாடகைக்கு தங்க போறோமா இல்ல சொந்தமாகவே வாங்கிட்டியா டா?
என் பொண்டாட்டி வாடகை வீட்டில் எல்லாம் கஷ்டப்படக்கூடாது, தண்ணி கம்மியா செலவு பண்ணுங்க, கரண்ட் கம்மியா செலவு பண்ணுங்க, அங்க ஆணி அடிக்காதீங்க, இங்க இதை இழுக்காதீங்க அப்படி எல்லாம் கண்டிஷன் போடுற ஹவுஸ் ஓனர் நமக்கு வேண்டாம். என் பொண்டாட்டி தான் இந்த வீட்டுக்கு ஓனர் என்றான் தீபக்.
அவனை இறுக்கமாக கட்டி அணைத்து, அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள்.
இன்னும் ஐயர் குறித்து கொடுத்த டைம் வரல, நம்ம வெயிட் பண்ணலாமா இல்ல இப்பவே ஸ்டார்ட் பண்ணிடலாமா? என்றான் தீபக்.
சீ போடா, என்று வெட்கத்துடன் பெட்ரூமுக்குள் ஓடினாள்.
சிரித்துக் கொண்டே அவள் பின்னால் ஓடினான் தீபக்.
எந்த நேரத்தில் வேண்டாம் என்ற ஐயர் குறித்து வைத்திருந்தாரோ அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாகினார்கள்.
தன் மேல் உயிரையே வைத்திருக்கும் கணவன் கிடைத்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டாள் விருத்திகா. அந்த மாதம் முழுவதும் இருவரும் மோகத்தின் வசம் இருந்தனர். தீபக் நல்ல வேலையில் இருந்ததால் குழந்தை பெற்றுக் கொள்ளும் பிளானை தள்ளி போடவில்லை.
விஹானுக்கு நிறைய முறை கால் செய்தாள் விருத்திகா. ஆனால் அவன் வெளியே இருக்கிறேன் அப்புறம் பேசுறேன், மீட்டிங்ல இருக்கேன், பிஸியா இருக்கேன் என்றெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவள் ஃபோனையே அவாய்ட் செய்தான்.
விருத்திகாக்கு அழுகையாக வந்தது. தீபக் வீட்டில் இருக்கும் போது அப்படி நடந்தால் ஏதாவது பேசி அவளை சிரிக்க வைத்து விடுவான். சில சமயம் அவன் ஆஃபீஸ் சென்ற பின் அவள் கால் செய்தால் தீபக் வரும்வரை அன்று முழுவதும் வருத்தமாக இருப்பாள்.
அவன் வீட்டிற்கு வந்து அவளை வெளியே அழைத்து செல்வது, சில சமயம் அவனே அவளுக்கு சமைத்து தருவது என்று அவளை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டான்.
ரோஹித்துக்கு விருத்திகாவை மறக்க முடியவில்லை. சில மாதங்களே அவளை காதலித்தான் என்றாலும், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்று தெரியாததால் அவள் மேல் உயிரையே வைத்திருந்தான். அதனால் தினமும் இரவில் குடிக்க ஆரம்பித்தான்.
முதலில் ஒரு கட்டிங், இரண்டு கட்டிங் என்று ஆரம்பித்தவன் அவளுக்கு கல்யாணம் ஆன இந்த இரண்டு மாதத்தில் பாட்டில், பாட்டிலாக குடிக்க ஆரம்பித்து விட்டான்.
அவன் நண்பன் இவ்வாறு ஆனதற்கு காரணம் தன் தங்கை தான் என்று நினைத்து அவளிடம் பேசாமல் இருந்தான் விஹான்.
குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது ரோஹித்துக்கு ஆக்சிடென்ட் ஆனது. நல்ல வேலையாக கை கால்களில் மட்டுமே அடிபட்டது. உயிருக்கு ஆபத்து இல்லை. விஹான் அவனைப் பார்த்து திட்டினான்.
ஏன்டா இப்படி பண்ற, எனக்கு இருக்கிற ஒரே உறவு நீ தான்டா. நீயும் போயிட்டனா எனக்கு யாருமே இல்ல மச்சி. நானும் உன் கூட சேர்ந்து செத்துருவேன் டா என்று கண்கள் கலங்க சொன்னான் விஹான்.
சாரி மச்சி, நான் ஏன் இப்படி பண்றன்னு தெரியல. உன் மேல சத்தியமா நான் இதுக்கு மேல குடிக்க மாட்டேன் டா, என்றான் கண்கள் கலங்க.
மச்சி என்று சொல்லி கட்டிக் கொண்டான் விஹான்.
காயங்களுக்கு கட்டுப்பட்டு கொண்டு தன் நண்பனை வீட்டிற்கு அழைத்துச் சென்றான் விஹான்.
தொடரும்….
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
No comments yet.