“அப்பா பாட்டி எல்லாம் நமக்கு இல்லை வேந்தா… உனக்கு ஒரு பாட்டி தான்… அது இவங்க தான்… புரியுதா உனக்கு…” முதல் முறையாக அதட்டும் குரலில் அத்தனை கண்டிப்போடு சொல்லி இருந்தாள் தென்றல்.
உதடு பிதுக்கி கலக்கமாய் அவளைப் பார்த்தவன், “ஏன் இல்ல… அணுக்கு சந்தோஷ்க்கு நித்தீஸ்க்கு எல்லாம் அப்பா பாட்டி இருக்காங்களே… எல்லாரும் அவங்க அப்பா பாட்டி வீட்டுல தான் இருக்காங்க… நாம மட்டும் ஏன் இந்தப் பாட்டி வீட்டுல இருக்கோம்…” என்றான் சந்தேகமாய்.
தென்றல் வேலைக்குச் செல்லும் நேரம் வேந்தனை பார்த்துக் கொள்ள என்று மழலையர் பள்ளி (play school) ஒன்றில் சேர்த்திருந்தாள். முழுநேரமும் குணவதியே அவனைப் பார்த்துக் கொள்வார் என்று அவளுக்கு நம்பிக்கையும் இல்லை, அதில் பெரிதாய் உடன்பாடும் இல்லை. எப்போது ‘பாட்டி அடித்துவிட்டார்…’ எனப் பிள்ளை வாய்விட்டு சொன்னானோ அப்போதே இந்த ஏற்பாட்டைச் செய்துவிட்டாள் அவள். இன்று அதிகாலையே திருமணத்திற்கு என்று கிளம்பி இருக்க, பிள்ளையைக் கிளப்பிக் கொண்டு போய் மழலையர் பள்ளியில் விட முடியவில்லை. இந்த ஒரு நாளிலேயே இத்தனை கூத்தை செய்து வைத்திருந்தார் அவளின் அன்னை.
இன்னும் முழுமையாய் நான்கு வயது கூட நிரம்பாத பிள்ளை. பெரிதாய் விவரம் தெரியாது என்று நினைத்திருக்க, அப்படி இல்லை என்பதைப் போல இதோ கேட்டே விட்டான். உடனிருக்கும் பிள்ளைகளைத் தந்தைகள் அழைக்க வருவதை அவளே பார்த்திருக்கிறாள். ஆனால் இதுவரை வேந்தன் ‘அப்பா…’ என்று ஒரு வார்த்தை கேட்டதில்லை.
தென்றல் திகைப்பும் யோசனையுமாய் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்க, “இந்தா உன் புள்ளையான்டானே கேட்டுட்டான்… சொல்லு… இப்ப சொல்லுடிங்கறேன்…” என்றாள் அவள் கன்னத்தில் இடித்து நக்கலாய் அரசி.
“நீ வாய மூடிட்டு சும்மா இருடி…” மகனிடம் கோபத்தைக் காட்ட முடியாது, அவளிடம் சிடுசிடுத்தாள் தென்றல்.
மகன் பதிலுக்காய் அவள் முகத்தையே பார்த்திருக்க, “உனக்கு அப்பா வேணுமா வேந்தா…” காற்றாகிப் போன குரலில், பிள்ளைக்கும் ஏக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தில், அப்படி இருக்கவே கூடாது என்ற பயத்தோடு தான் கேட்டிருந்தாள் தென்றல்.
“இல்லம்மா… நமக்குத் தான் அப்பா இல்லையே… நிதீஷ்க்கு கூட அப்பா இல்லையாம்… சாமிகிட்ட போய்டாங்களாம்… ஆனா அப்பா பாட்டி, தாத்தா, சித்தப்பா எல்லாம் இருக்காங்க... நமக்கு ஏன்ம்மா யாருமே இல்ல…” என்றவன் குரலில் நிச்சயம் இருந்தது ஏக்கமில்லாது வேறென்ன?
பிறந்ததிலிருந்து தந்தை முகம் பார்த்ததில்லை அவன். அதைப் பொருட்படுத்தவும் இல்லை பிள்ளை. அந்த இடத்தை அன்னையே நிரப்புகிறாள் தான். ஆனால் மற்ற உறவுகள்? எல்லா உறவின் அன்பையும் அவள் ஒருத்தியால் ஈடுசெய்திட முடியவில்லை.
‘நமக்கு ஏன்ம்மா யாருமே இல்ல..?’ இறுதியாய் பிள்ளை கேட்ட வார்த்தைகள், ஆழிப் பேரலையாய் சுழன்று மனதின் மூலைகளில் எல்லாம் எதிரொலித்தது. ‘அப்பா…’ என்று பெரும் ஓலமிட்டு அரற்றியது அவளின் உள்ளம். அவர் இல்லையென்ற பின்பு, அவளும் கூட யாருமில்லாத அனாதை போலத் தான் உணர்கிறாள். முப்பதைக் கடந்துவிட்ட பின்னும் கூடத் தந்தைக்காக ஏங்குகிறது மனது. அப்படியிருக்க மூன்றிலேயே மகனுக்கான தந்தையின் அன்பை வேண்டாமெனச் சொல்ல, அதை நிராகரிக்க அவள் யார்? மகன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதைப் போலத் தந்தையையும் கூடக் கொடுத்துவிட நினைத்தது அவள் மனம்.
வேதனை படிந்த முகத்தோடு யோசனையாய் அமர்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்து ஆதரவாய் கை பற்றிக் கொண்டாள் அரசி.
“சொல்லறேனு தப்பா நினைக்காத தென்றல்… உங்க அம்மா தான்... உன்ன பெத்தவங்க தான்… ஆனா உனக்கு அம்மாவாவும் இல்லை… உன் பிள்ளைக்குப் பாட்டியாவும் இல்லை… இன்னைக்கு ஏதோ இதோட முடிஞ்சுது… நாளைக்கு வேற ஒரு விசயத்துல உன்கிட்ட இருந்து மறைக்கறேன்… செலவ குறைக்கறேனு உங்கம்மா இன்னும் பெருசா இழுத்து வச்சா என்னடி பண்ணுவ நீ… புள்ளைக்கு ஒன்னுனா உன்னால தாங்க முடியுமா..? வரவன் உன் புள்ளைக்கு அப்பனா இருப்பானானு கேட்டீயே… முதல உங்கம்மா இந்தப் புள்ளைக்குப் பாட்டியா இருக்காங்களா..? என்ன காரணம் வேணா இருக்கட்டும்… உன்ன பிடிக்காம இருக்கட்டும்… உன் மேல வெறுப்பா கூட இருக்கட்டும்… ஆனா இந்தப் பிள்ளை என்னடி பண்ணுச்சு அவங்கள…” என்றாள் அமைதியான குரலில்.
“குழந்த முன்னாடி இதெல்லாம் பேசாதனு சொன்னேன் இல்ல…” என்றவளின் குரலில் முன்பிருந்த அளவிற்கு அடர்த்தியில்லை.
“நான் அப்படித் தான்டி பேசுவேன்… என்னடி பண்ணுவ நீ… குழந்தைங்க சந்தோஷமா வளர வீட்டுல முதல நிம்மதியான அமைதியான சூழல் இருக்கணும்… அது இருக்கா உன் வீட்டுல… அதுல எல்லாம் பாதிக்காத உன் புள்ள மனசு… நான் பேசற விசயத்துல தான் பாதிச்சுடுமா..?” என்றாள் காட்டமாய் அரசி.
“இங்க பாருடி நெருப்புனா எக்குத்தப்பா கைய வச்சா சுட தான் செய்யும்… ஐயோ சுட்டுடுச்சே… இனிமே நான் நெருப்பு கிட்டையே போக மாட்டேனு நின்னா பட்டினி கிடந்து தான் சாகணும்… அப்படித் தான் கல்யாண வாழ்க்கையும்… ஒரு தடவ தப்பா போய்டுச்சுனா எல்லாத் தடவையும் தப்பா தான் போகணும்னு எந்த அவசியமும் இல்ல… புரிஞ்சுதா… ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ண யாரும் சந்தோஷமாவே வாழலையா..?” என்றார் ஆதங்கமாய் அரசி.
“ரெண்டாவது கல்யாணம் பண்ண எல்லாருமே சந்தோஷமா தான் வாழறாங்கனு உன்னால உறுதியா சொல்ல முடியுமா..?” என்றாள் அழுத்தமாய்த் தென்றல்.
பெருமூச்சோடு கடுப்பாய் அவளைப் பார்த்தவள், “சொல்ல முடியாது தான்… அதே நேரம் அப்பா இல்லங்கற ஏக்கமே இல்லாம வளர்ற ஒரு குழந்தையையாவது உன்னால காட்ட முடியுமா..? தனியா உன்னால பிள்ளைய வளக்க முடியாதுனு சொல்லலை… எத்தனையோ பேர் வளக்கவும் செய்யறாங்க தான்… ஆனா அப்பாவுக்கான இடம்… அது என்னைக்கும் அப்பாவுக்கானது மட்டும் தான் தென்றல்… அத புரிஞ்சுக்கோ… உன்ன கல்யாணம் பண்ணிக்கோனு நான் கட்டாயப்படுத்த எல்லாம் இல்ல… ஆனா அதுவே அமையும் போது ஏன் குருட்டுக் கிழவி மாதிரி கண்ண மூடிட்டு தட்டிவிடற… முதல பேசிப் பாரு… விசாரிச்சு பாரு… உன் மனசுக்கு சரினு பட்டா மட்டும் கல்யாணத்த பத்தி யோசி…” என்றாள் அரசி.
தென்றலின் முகம் தீவிர யோசனையில் இருக்கவும், “ஆனா சிவா அளவுக்கு உன் பிள்ளைக்கு வேற யாராலையும் அப்பாவா நடந்துக்க முடியாதுனு நான் அடிச்சு சொல்லுவேன்… நீ சிவாவ கல்யாணம் பண்ணிக்கறதால அப்பா மட்டும் இல்ல, வேந்தன் எதிர்பாக்கற மாதிரி அவனுக்கு ஒரு குடும்பத்தையே குடுக்க முடியும்…” என்றாள் அரசி தூண்டில் விரிப்பதைப் போல ஆசை வார்த்தை காட்டி.
“ஆமாம்… அந்தச் சிவா மட்டும் தான் குடும்பத்தோட இருக்காரு… மத்தவங்க எல்லாம் ரோட்டுல அனாதையா சுத்தறாங்க பாரு…” நக்கலாய் என்றாலும் தென்றலின் முகத்தில் இலகுவாய் ஒரு மென்னகை.ஸ
“அப்ப உனக்கு ஓ.கேவா தென்றல்… அவங்கள பாக்க வர சொல்லட்டுமா..?” என்றாள் ஆர்வமும் ஆசையுமாய் அரசி.
அவளின் பாவனையில் இன்னுமே பெரிதாய் விரிந்தது தென்றலின் புன்னகை. “அதுக்குள்ள என்ன அவசரம்… முதல நீ அவங்க டீட்டைல்ஸ் குடு… நான் யோசிச்சு சொல்லறேன்…” என்றாள் தென்றல்.
வேண்டவே வேண்டாம் என்றவள், யோசிக்கறேன் என்கிறாளே! அதுவே இருவருக்கும் திருமணமான துள்ளலை, சந்தோஷத்தை கொடுத்திருந்தது அரசிக்கு. சட்டென்று ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது அவளை. இத்தனை சுலபத்தில் தென்றல் சம்மதிப்பாள் என்று நினைக்கவே இல்லை. பெரிதாய் ஒரு போராட்டத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவளால் சட்டென்று நம்பக் கூட முடியவில்லை.
இப்போது யோசிக்கிறேன் என்பது கூடச் சிவநேசனைப் பற்றி அவள் நேரடியாய் விசாரிக்க எடுத்துக் கொள்ளும் அவகாசம் என்று புரிந்தது. விசாரித்த பின்பு நிச்சயமாய்ச் சிவநேசனை வேண்டாமென்று தென்றலால் மறுத்துவிட முடியாது என்பதில் அத்தனை திடம் அரசிக்கு. கிட்டத்தட்ட திருமணமே உறுதியாகிவிட்ட உணர்வு தான் அவளுக்கு.
ஆனால் சிவநேசனும் இதற்குச் சம்மதிக்க வேண்டுமே என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை. அவன் மூளையைச் சலவை செய்யும் வேலையை அவன் குடும்பமே பார்த்துக் கொள்ளும் என்று தான் நம்பினாள். தென்றல் எதிர்பார்ப்பதைப் போல அவர்களுமே தென்றலை பற்றித் தெரிந்து கொள்ள விழைவார்கள் என்று யோசிக்கத் தோன்றவில்லை.
சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவளின் தோழி நல்லவள் தான். ஆனால், அவளின் கடந்த காலம். அது பெரிய கேள்விக்குறி தானே! அரசிக்கு என்றில்லை இங்கிருக்கும் யாருக்குமே அதைப் பற்றித் தெரியாதே!
நொடியும் தாமதிக்காது தனக்குத் தெரிந்த வரை அத்தனை தகவல்களையும் புலனத்தின் வழி தென்றலுக்கு அனுப்பி வைத்தாள் அரசி.
சந்தோஷத்தில் மலர்ந்து விகாசித்த தோழியின் முகத்தை ஆதுரமாய்ப் பார்த்தபடியே, “நான் யோசிக்கறேனு தான் சொன்னேன்… ஓ.கேனு ஒன்னும் சொல்லலை…” என்றாள் கேலியாய் தென்றல்.
“யோசிக்கறேனு சொல்லிட்ட இல்ல… ஓ.கேவும் சொல்லிடுவ…” என்றாள் பெரிதாய் விரிந்த புன்னகையோடு துள்ளல் குரலில் அத்தனை உறுதியாய் அரசி. அவளின் புன்னகை தென்றலுக்கும் தொற்றிக் கொண்டது.
மாறி மாறி பெரியவர்கள் இருவரின் முகத்தையும் தான் பார்த்திருந்தான் வேந்தன். பெரிதாக ஒன்றும் புரியவில்லை என்றாலும், அவனின் அப்பா பற்றித் தான் பேச்சு என்றளவில் புரிந்தது.
அவளின் முகம் பற்றித் தன் பக்கம் திருப்பித் தன்னைப் பார்க்கும் படி செய்தவன், “அம்மா… அப்பாவா ம்மா… நம்ம அப்பாவா ம்மா…” என்றான் ஆசையாய்.
அவனின் ஏக்கத்தில் வாயடைத்துப் போனாள் தென்றல். இதுவரை அவன் அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்காதது ஆசையோ ஏக்கமோ இல்லாமல் இல்லை. தனக்குத் தந்தையில்லை என்று அவனே முடிவு செய்து கொண்டதால் தான் என்று புரிந்தது.
“ஆமான்டா கண்ணா… வேந்தனோட அப்பா…” என்றாள் அவன் கன்னம் பற்றிக் கிள்ளி தன் இதழ்கள் ஒற்றியபடியே அரசி. அவள் மலையென நினைத்த காரியத்தை மடுவென ஆக்கியது அவனின் ஒற்றை வார்த்தை அல்லவா?
அவன் நம்பாது ஆசையும் ஏக்கமாய் ‘நீ சொல்…’ என்பதைப் போலத் தாயின் முகம் பார்க்க, உருகி விட்டது அவளுக்கு.
“ஆமான்டா வேந்தா… நம்ப அப்பா… என் வேந்தனோட அப்பா… வேந்தனுக்கு மட்டும் அப்பா…” என்றாள் அழுத்தமாய்த் தென்றல், அவனின் தலை கோதி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடி.
“அப்பா வராங்களா..? என்ன பாக்கவா… அப்ப நம்ம அப்பா சாமிகிட்ட போகலையா..? அப்பறம் ஏன் இத்தன நாள் என்ன பாக்க வரல… வரும் போது எனக்கு என்ன வாங்கிட்டு வருவாங்க… அணு அப்பா மாதிரி சாக்கி… டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வருவாங்களா..?” என்று தொணதொணக்க தொடங்கி இருந்தான் பிள்ளை.
அவனின் அத்தனை கேள்விக்கும், “சீக்கிரமே வருவாங்க…” என்ற ஒற்றைப் பதிலைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவள் முகத்தில் வலியுடனான ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டது. என்ன இருந்தாலும் தந்தைக்கான இடத்தை அவளால் நிரப்ப முடியாதோ?
அதன் பின் வீட்டிற்குச் செல்ல வேந்தன் அடம்பிடிக்கவே இல்லை. அவனுக்குத் தான் அப்பா வரப் போகிறாரே! மற்றதெல்லாம் சட்டென்று பின்னுக்குச் சென்று மறந்தும் போனது.
அரசிக்காக என்றில்லை, அவள் பிள்ளை கேட்டுவிட்டான். அவளும் அவனுக்கு அப்பாவை வாங்கித் தருவதென்று முடிவும் செய்து விட்டாள். அது சிவாவாய் இருந்தால் என்ன? இல்லை வேறு எந்தக் கழுதையாய் இருந்தால் தான் என்ன? என்ற எண்ணம் தான் அவளுக்கு. ஆனால் வாங்கித் தர எதிர்ப்பக்கம் இருப்பவன் பொருளில்லையே, உயிரும் உணர்வுமான மனிதன்! அதை அவள் உணரும் நேரம், காலம் கடந்திருக்கலாம்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.