“அம்மா…” விழிகளைத் திறக்கும் முன்னமே ஈன ஸ்வரத்தில் முனங்கலாய் வேந்தன் அழைக்க, உருகி விட்டது தென்றலுக்கு.
“கண்ணா… ஒன்னுமில்லடா செல்லம்… அம்மா இதோ… இங்க… உன் பக்கத்துல தான் இருக்கேன்... கண்ண திறந்து பாருடா தங்கம்… என் பட்டுக்கு ரொம்ப வலிக்குதா…” என்றபடியே அவனை அள்ளி மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டவளின் விழிகள் கலங்கி தழும்பி நின்றது.
“ஓய்… ஃபயர்… என்ன பண்ணற நீ… குட்டிக்கு கையில இன்னும் ட்ரிக்ஸ் ஏறிக்கிட்டு இருக்கது கண்ணுக்கு தெரியலையா..? அதக்கூடக் கவனிக்காம அவனப் போட்டு இந்த அமுக்கு அமுக்குற… முதல அவன விட்டு தள்ளி உக்காரு நீ… நான் போய் டாக்டர அழைச்சுட்டு வரேன்…” என அதட்டலாய் சொன்னவள், தென்றல் தனது பிடியை தளர்த்திய பின்பு தான் அங்கிருந்து கிளம்பினாள்.
அரசி மருத்துவரை அழைத்து வந்த போது, தென்றலின் மடியில் அமர்ந்து உதடுகள் பிதுங்க, பொங்கிய அழுகையை அடக்கிக் கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் வேந்தன். அவனைச் சமாதானப் படுத்தியபடியே, வேறெங்கும் காயமோ வலியோ இருக்கிறதா எனச் சோதித்துக் கொண்டிருந்தாள் தென்றல். தூரத்தில் இருந்து பார்க்க, மனதிற்கு இதமான அழகிய ஓவியம் போன்றிருந்தது அந்தக் காட்சி.
‘சரியான அம்மா கோந்து…’ செல்லமாய்க் கடிந்து கொண்ட அரசிக்கும் கூட, இப்பொழுது தான் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது. அவனுக்குப் பெரிதாய் எதுவுமில்லை என்று சொல்லிவிட்டாலும் கூட, கண் விழிக்கும் வரை மனதில் ஒரு சின்னப் பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.
அவனின் காயங்களை ஆராய்ந்து பார்த்துவிட்டு, ‘இன்னமும் வலி இருக்கிறதா..?’ எனப் பிள்ளையிடம் விசாரித்துக் கொண்டவர், அவனின் செயலுக்காகக் கண்டிக்கவும் செய்திருந்தார்.
“பயப்பட ஒன்னுமில்ல… கொஞ்சம் டயர்டா இருப்பான்… சாப்பிடறதுக்கு முதல ஏதாவது ஃப்ரஷ் ஜூஸ் குடுங்க… ட்ரிப்ஸ் இன்னும் கொஞ்சம் தான் இருக்கு… அது முடிஞ்சதும் வீட்டுக்குக் கிளம்பலாம்… இன்னும் ரெண்டு நாள் கழிச்சு கட்டுப் பிரிக்கக் கூட்டிட்டு வந்தா போதும்…” என்றவர் தென்றலை நிமிர்ந்து பார்த்து, “இனிமேலாவது பிள்ளைய கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க… கை வைத்தியம் பாக்கறேனு பெருசா எதையும் இழுத்து வைக்காதீங்க… எல்லாத்தையும் வீட்டுலையே பாத்துக்கலாம்னா பின்ன டாக்டருனு நாங்க எதுக்கு இருக்கோம்… குழந்தைங்க விசயத்துல இது மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுக்காதீங்க…” என ஒரு குட்டும் வைத்துவிட்டுத் தான் கிளம்பினார்.
“சின்னக் காயம்… அதுக்குப் போய் அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து என்ன பாடு படுத்திட்டீங்க…” என்றபடியே முன்பே அவனுக்கென வாங்கி வந்திருந்த மாதுளைப் பழச்சாற்றை எடுத்துக் கொடுத்தாள் அரசி.
“எது இது உனக்குச் சின்னக் காயமா..? பாரு எவ்வளவு பெரிய கட்டுப் போட்டு இருக்காங்க… எழுந்ததுல இருந்து வலிக்குது வலிக்குதுனு அனத்திட்டே இருக்கான்… இது உனக்குச் சின்னக் காயமா தெரியுதா..?” என்றாள் பிள்ளையின் நெற்றியில் போடப்பட்ட கட்டினை தடவியபடியே கொதித்துப் போய்த் தென்றல்.
“யம்மா… அக்னி குழம்பு… சூட்ட கொஞ்சம் குறைச்சுக்க… ஏதோ தெரியாம சொல்லிட்டேன்… பெரிய காயம் தான்… போதுமா..?” என்றவளின் கையில் இருந்து இன்னும் பழச்சாறை வாங்கி இருக்கவில்லை வேந்தன்.
“டேய் உனக்கென்னடா… ஜூஸ குடி முதல…” என்றாள் அதட்டலாய் அரசி. பொதுவாகவே இனிப்பென்றாலே முகத்தைச் சுருக்குவான் வேந்தன். அப்படித் தான் தென்றலும் அவனைப் பழக்கி இருந்தாள்.
“ஜூஸ்ஸா… நோ ஆன்ட்டி… வேண்டாம்…” என்றான் முகத்தைச் சுழித்துக் கொண்டு வேந்தன்.
“இப்ப தான டாக்டர் அங்கிள் சொல்லிட்டு போனாங்க குட்டி… வேண்டானு சொல்ல கூடாது… ஜூஸ் குடிச்சா தான் என் ப்ரின்ஸ் ஸ்ட்ராங்க் பாய் ஆவீங்க… அப்பறம் அம்மாவும் நீங்களும் வீட்டுக்கு போய்டலாம்…” என்றபடியே அழுத்தமாய் அவன் கன்னத்தில் முத்தமிட்ட தென்றல், தானே அதை வாங்கி மகனுக்குப் புகட்ட தொடங்கினாள். முகத்தைச் சுழித்துக் கொண்டே என்றாலும் மறுக்காது அந்தப் பழச்சாற்றைக் குடித்தான் அவன்.
“ரொம்பத் தான்…” என்றாள் நொடித்துக் கொண்டே அரசி.
“ஏன் கண்ணா… அம்மா தான் தனியா உன்ன மாடிக்குப் போகக் கூடாதுனு சொல்லி இருக்கேன் இல்ல… அப்பறம் ஏன் போனீங்க…” என்றாள் கொஞ்சலாய் தென்றல்.
விழிகளை உருட்டி பாவமாய் விழித்தானே தவிர, பதில் எதுவும் சொல்லவில்லை அவன். இப்படி அவன் செய்தாலே குணவதி தான் ஏதோ சொல்லி மிரட்டி இருப்பார் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். திட்டினாலோ சமயத்தில் அடித்தாலோ அதை அவளிடம் சொல்லக் கூடாது என மிரட்டி வைத்திருப்பார் அவர். அப்பொழுது எல்லாம் இப்படித் தான் விழிப்பான் வேந்தன். தென்றல் கொஞ்சம் அழுத்திக் கேட்டால் சொல்லியும் விடுவான்.
“பாருங்க தனியா போனதால தானே இப்போ அடி பட்டுடுச்சு… எதுக்கு மாடிக்கு போனீங்க நீங்க…” என்றாள் தென்றல் மீண்டுமாய்.
“நா… நா இல்லம்மா… பாட்டி தான்ம்மா…” என்றவன் திக்கி திணறி நடந்ததைச் சொல்லியும் விட, விக்கித்துப் போனாள் அவள்.
மாடியில் ஈர துணிகளை உலர்த்த வந்தவரின் பின்னாலேயே புடைவையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, ‘பாட்டி… பந்த எடுத்துக் குடுங்க…’ என நச்சரித்தபடியே மேலே ஏறி வந்திருந்தான் வேந்தன். ஓயாது அதை வைத்து தட்டிக் கொண்டே இருக்கிறான் எனப் பிடுங்கி மேலே வைத்திருந்தார் அவர்.
கையிலிருந்த ஈர துணிகளின் கனம், அவனின் நச்சரிப்பு என எல்லாம் சேர, “கீழ போடா… வந்து எடுத்து தரேன்…” என அவரின் புடைவையைப் பற்றியபடி நின்றிருந்தவனை மெல்லமாய்த் தான் பின்னால் நகர்த்தித் தள்ளினார். கடைசிப் படிக்கட்டில் நின்றிருந்த பிள்ளையும் பிடிமானம் இல்லாது அப்படியே பின்னால் சரிந்திருந்தான்.
நிச்சயமாய் வேண்டுமென்றே இதை அவர் செய்யவில்லை தான். இப்படி ஆகுமென்று எதிர்பார்த்திருக்கவும் இல்லை. ஆனால் பார்த்த அந்த நொடி, முதலில் தென்றல் என்ன சொல்வாளோ என்ற பயம் தான் அவரின் இதயத்தைக் கவ்வி பிடித்தது. விழுந்த வேகத்திற்கு வேந்தனும் வீரிட்டு அழ, அவசரமாய் இறங்கி வந்தவர் அவனின் வாயைப் பொத்தி உள்ளே தூக்கிச் சென்றிருந்தார்.
“ஸ்ஸ்ஸ்… சின்ன அடி தான்… இப்ப எதுக்குடா கத்தி ஊர கூட்டற… மஞ்சப் பொடி வச்சா சரியாகப் போய்டும் இரு…” என்றபடியே காயத்தில் மஞ்சள் பொடியை வைத்து அழுத்த, எரிச்சலில் இன்னுமே அழுகையைக் கூட்டினான் வேந்தன்.
அதில், “வாய மூடுடா… அழுதா கொன்னுடுவேன்…” என்றபடியே அவன் முதுகிலும் இரண்டு வைத்திருந்தார் குணவதி.
இரண்டு கைகளாலும் வாயை இறுக மூடியபடியே, அவன் ஏங்கி ஏங்கி சத்தமின்றி அழ, “இங்க பாரு… பாட்டி ஒன்னும் உன்ன வேணும்னு தள்ளல… தெரியாம நீயே தான் விழுந்துட்ட… புரியுதா… அம்மா கேட்டானா இப்படித் தான் சொல்லணும்…” என்று அதட்டி மிரட்டிய படியே இன்னுமே மஞ்சளை வைத்து அழுத்த, அவனின் அழுகுரல் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த அமுதாவும் வந்துவிட்டிருந்தார்.
எவ்வளவு மஞ்சள் வைத்தும் இரத்தம் கசிந்து கொண்டே இருந்ததே தவிர, நிற்கவே இல்லை. அமுதாவும் சொல்லிப் பார்த்தார் தான். குணவதி கேட்கவே இல்லை. அவரின் எண்ணமெல்லாம் மருத்துவமனை வரை சென்றால், பிள்ளைக்கு அடி பலமென்று மகள் தன்னைத் திட்டி தீர்த்துவிடுவாள் என்பதிலேயே தான் இருந்தது.
வேந்தன் மயங்கி சரியவும் தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே ஒப்புக் கொண்டார். அதுவும் அரை மனதாய் தான். உண்மையில் இரத்த பெருக்கினால் அல்ல, பயத்தினால் தான் மயங்கி இருந்தான் பிள்ளை. தெரிந்த ஆட்டோவிற்குச் சொல்லி, பிள்ளையை இங்கு அழைத்து வந்துவிட்ட பிறகும் கூட அவருக்குத் தென்றலுக்குச் சொல்லும் எண்ணமில்லை. அப்பொழுதும் கூட எப்படியாவது இதை அவளிடமிருந்து மறைத்து விடலாம் என்ற எண்ணம் தான். அமுதா உடன் இல்லையென்றால் நிச்சயம் அதைத்தான் செய்தும் இருப்பார். அவர் நேரம் கடத்த கடத்த அமுதாவே தென்றலுக்கு அழைத்துச் சொல்லியும் இருந்தார்.
நிச்சயமாக அவர் வேண்டுமென்றே வேந்தனை பிடித்துத் தள்ளி இருக்க மாட்டார் தான். அது தென்றலுக்குமே புரிந்தது. ஆனால், அதன் பின் நடந்தது எல்லாம் கொஞ்சம் கூட மனதிற்கு ஒப்பவே இல்லை.
அவ்வப்போது “பாட்டி அடிச்சுட்டாம்மா… பாட்டி கிள்ளிட்டா… இதோ பாரு சிவந்து போச்சு…” என்றபடியே கண்ணைக் கசக்கிக் கொண்டு தாயிடம் புகார் படிப்பான் வேந்தன். அவனை அள்ளி மடியில் அமர்த்திக் கொள்பவள் கண்ணீரை துடைத்தபடியே, “பாட்டிக்குக் கோபம் வர மாதிரி நீ என்ன கண்ணா பண்ண…” எனத் தான் முதலில் கேட்பாள்.
தனியாகப் பிள்ளையை அடிக்காதீர்கள் என எத்தனையோ முறை தாயையும் கண்டிக்கச் செய்திருக்கிறாள் தான். ‘செல்லம் எல்லாம் ஓரளவுக்குத் தான்… புள்ளைங்களுக்கு யாராவது ஒருத்தர் கிட்ட பயம் இருக்கணும்…’ என்று விடுவார் குணவதி. அவர் அடிப்பதில் பிடித்தமில்லை என்றாலும், சொல்வது நியாயமாகத் தான் பட்டது தென்றலுக்கு. என்றைக்கும் தென்றலால் மகனை கடிந்து ஒரு வார்த்தை சொல்லிவிட முடியாது. இந்த மட்டில் அவராவது கண்டிப்புடன் இருக்கட்டுமே என்று நினைத்துவிட்டாள். ஆனால், அது இத்தனை தூரம் வருமென்று எதிர்பார்க்கவில்லை. நல்ல வேளையாகப் பிள்ளைக்குப் பெரிய காயமென்று ஒன்றுமில்லை, வேறு ஏதாவது என்றால்? நினைக்கவே பதறியது அவளுக்கு. வேந்தனுக்கு அடிபட்டதை விட, அதன் பின்னான அம்மாவின் செயல்களைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தென்றலுக்கு.
பேரன் என்ற பாசம் கூட இல்லாமல் போகட்டும், குறைந்தபட்ச மனிதாபிமானம் கூடவா இல்லை? என்னவோ அந்த நொடி அவளின் மனதில் அவர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச பிடிப்பும் விட்டுப் போனது.
மகனை சமாதானப் படுத்தி, ட்ரிப்ஸ் முடிந்ததும் அவர்கள் வீட்டிற்குக் கிளம்ப, “அம்மா இந்தப் பாட்டி நமக்கு வேண்டாம்மா… நாம வேற பாட்டி வீட்டுக்கு போய்டலாம்…” என்றான் தேம்பியபடியே பிள்ளை.
“அச்சச்சோ… வேந்தன் குட் பாயாச்சே… இப்படி எல்லாம் அழலாமா..?” என்றாள் அவனின் கண்ணீர் துடைத்தபடியே தென்றல்.
“வலிச்சா அழாம உன்ன மாதிரி தாங்கிட்டே இருப்பாங்களா..?” என்றாள் அரசி வெடுக்கென்று. அவன் சொன்னதை எல்லாம் கேட்டவளுக்குக் கொஞ்சம் கூட மனதே ஆறவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ணி எண்ணி குமைந்தது மனது.
“நீ அங்க கூட்டிட்டு போனா நான் அழுவேன்… அங்க போனா பாட்டி திரும்ப அடிப்பா… நான் வரல… நாம அப்பா பாட்டி வீட்டுக்கு போய்டலாம்…” என்றான் மீண்டுமாய் வேந்தன். அவனின் விழிகள் முழுவதும் பயம் அப்பிக் கிடந்தது.
“இப்படி எல்லாம் சொல்லக்கூடாது..? என் தங்கமில்ல… அவங்க நம்ம பாட்டி தானே… அம்மா பாட்டிட்ட என்னனு கேக்கறேன்… இனிமே பாட்டி உன்ன அடிக்க மாட்டாங்க… திட்ட மாட்டாங்க… சரியா… அதுக்காகப் பாட்டிய விட்டுட்டு போகலாமா..? பாட்டி பாவமில்ல…” என்றாள் தென்றல்.
“பாட்டி ஒன்னும் பாவமில்ல… பாட்டி பேட்… கீழ விழுந்ததும் உன்கிட்ட சொல்ல கூடாதுனு அடிச்சாங்க தெரியுமா..? இந்தப் பாட்டி வேண்டாம்… நாம அப்பா பாட்டி வீட்டுக்கு போகலாம்…” என்றான் அழுத்தமாய் அடமாய் வேந்தன். அவள் ஏதேதோ சொல்லி சமாதானப் படுத்த முயன்றும் அவன் கேட்பதாய் இல்லை. இதுவரை அவன் இத்தனை அடம் பிடித்ததும் இல்லை. அத்தனையாய் பயந்து போயிருந்தான் பிள்ளை. திடீரென, இல்லாத அப்பா பாட்டி வீட்டுக்குப் போகலாம் வா என்றால் அவளும் என்ன தான் செய்வாள். பாவம்! அவனைச் சாமாளிக்க முடியாது அவள் திண்டாட, இதழில் உறைந்த ஏளன புன்னகையோடு அவர்கள் இருவரையும் பார்த்திருந்தாள் அரசி.
– நேசம் ஒளிரும்…
No comments yet.