“உன்ன தான் கேக்கறேன் தென்றல்… என்ன முடிவு பண்ணி இருக்க…” என்றாள் மீண்டுமாய் அரசி.
பதில் சொல்லும் வரை அவள் விடப் போவதில்லை என்று தென்றலுக்கும் புரிந்தது. மகனின் மீது சில நொடிகள் பார்வையைப் படர விட்டவள் கண்களை மூடி ஆழ மூச்செடுத்து, “இது சரி வராது அரசி…” என்றாள் தீர்க்கமாய். தோழியின் ஆசையும் ஆர்வமும் அவளுக்குப் புரிய தான் செய்தது. ஏதோ ஒரு வகையில் மனதிற்கு அது இதமாக இருந்தது என்று கூடச் சொல்லலாம். ஆனால், அதற்காகத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன?
“ஏன்..? ஏன்..? ஏன் சரி வராது…” என்றாள் வேகமாய் அரசி.
அவளின் வேகத்திலும் பரிதவிப்பிலும் விரிந்தது தென்றலின் புன்னகை. அவளைப் பற்றி நினைக்கவும் அக்கறை கொள்ளவும் ஒரு உயிர். அந்த எண்ணமே மனதிற்குள் இதம் கூட்டியது.
“எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு அரசி…” என்றாள் அந்த மென்னகை மாறாது.
“பொல்லாத புடலங்கா கல்யாணம்…” என்றாள் எரிச்சலாய் அரசி. அதில் இன்னுமே விரிந்தது தென்றலின் புன்னகை.
“சிரிக்காத… எனக்கு அப்படியே பத்திட்டு வருது… தாலி கட்டிக்கிட்டா… மெட்டி போட்டுக்கிட்டா… நெத்தியில குங்குமம் வச்சுகிட்டா எல்லாம் கல்யாணம் ஆனவனு அர்த்தம் ஆகிடாது… வாழணும்… புருஷனோட சந்தோஷமா வாழணும்… அதுக்குத் தான் கல்யாணம்…” என்றாள் அழுத்தமாய் அரசி.
“அரசி…” என்றாள் அதட்டலாய் தென்றல்.
“பெரிய புழுங்கலரிசி… சும்மா அரசி அரசினு என் பேர யாரும் ஏலம் விட வேண்டாம்… இப்போ முடிவா என்ன தான் சொல்லற…” ‘உன் அதட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேனாக்கும்…’ என்பதாய் அவளை உறுத்து விழித்தபடி நின்றிருந்தாள் அரசி.
“அதான் சொன்னேனே…” என மீண்டும் தென்றல் ஆரம்பிக்க, “ஆமான் சொன்ன சுரக்காய்ல உப்பில்லைனு… பழைய தேஞ்ச டேப் ரெக்கார்டு மாதிரி ஒத்து வராது… சரி வராதுனு இதேயே மாத்தி மாத்தி சொல்லிட்டு…” எனச் சிடுசிடுத்தவளுக்கு அத்தனை எரிச்சலாய் வந்தது. தென்றலின் சில நொடி அமைதி, அரசிக்குள் பெரும் நம்பிக்கையைத் தந்திருந்தது. சட்டென்று அவள் அந்த நம்பிக்கையைத் தகர்க்கவும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவளறிந்த வரை, தென்றலுக்குத் திருமணமாகி இருந்தது. அவ்வளவு தான். மற்றபடி அவளை மணந்த அந்தப் பாக்கியவானின் பெயர் கூட அவளுக்குத் தெரியாது. அவளுக்கு என்றில்லை யாருக்குமே தெரியாது. ஏன் அப்படி ஒருவன் இருக்கிறானா என்று கூடத் தெரியாது. தென்றல் மறந்தும் கூடக் கணவனைப் பற்றி எங்கேயும் ஒரு வார்த்தை பேசியதாய் நினைவில் இல்லை. அப்படி என்ன தான் அவள் வாழ்வில் நடந்திருக்கும் என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாத குறை தான்.
தென்றலின் திருமண வாழ்வைப் பற்றிச் சில முறைகள் ஜாடையாகவும், ஒரு முறை நேரடியாகவுமே கூடக் குணவதியிடம் கேட்டுப் பார்த்திருக்கிறாள் அரசி. ‘எல்லாம் அவ பொறந்த நேரம்… யாருக்கு என்னனு விதிச்சு இருக்கோ அப்படித் தானே நடக்கும்…’ என அங்கலாய்ப்போடு முடித்துக் கொண்டார் அவர். அப்படியும் விடாது இரண்டாவது திருமணத்திற்குச் சில வரன்களையும் சொல்லித் தான் பார்த்தாள் அரசி. ‘அதுக்கெல்லாம் தென்றலு ஒத்துக்க மாட்டாம்மா… இந்தப் பேச்செடுத்தாலே காச்சு மூச்சுனு கத்துவா… நீயும் அவகிட்ட இந்தப் பேச்செல்லாம் பேசாத…’ என்பார் பட்டுக் கொள்ளாது. உண்மையில் தென்றல் விரும்ப மாட்டாள் என்கிறாரா இல்லை அவருக்கு இதில் விருப்பமில்லையா என்று இப்பொழுது வரை புரியவில்லை அரசிக்கு. அது மாதிரி சமயங்களில் எல்லாம், ‘என்ன அம்மாடா இவங்க…’ என்பதாகத் தான் இருக்கும் அரசியின் எண்ணம்.
அவரைப் போல, ‘எப்படியோ போ…’ என்று இருந்துவிட முடியவில்லை அரசியால். தன்னைப் போல் கணவன், குழந்தை குடும்பமென்று ஒரு நிறைவான வாழ்வை தோழியும் வாழ வேண்டுமென ஆசை கொண்டது அவளின் நேசம் கொண்ட நெஞ்சம். ஆறு மாதமாய் அதே எண்ணம் தான் அவளுக்கு என்றாலும், இந்தச் சில நாட்களாய் அதில் தீவிரம் கூடி இருந்தது. என்னவோ இந்த வரன், தென்றலுக்குப் பொருத்தமாய் இருக்குமென்று அடித்துச் சொன்னது அவளின் மனது.
“இங்க பாருடி… கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லற… சரி புருஷன் பேரு என்ன… என்ன பண்ணறாரு… எங்க இருக்காரு… எப்ப வருவாரு… டைவர்ஸ் ஆகி தொலைச்சுடுச்சா… இல்ல செத்து தொலைச்சுட்டாரானு எது கேட்டாலும் வாயவே திறக்க மாட்டற…” என்றாள் ஆதங்கமாய் அரசி.
“அது என்ன கருமமா வேணா இருந்துட்டு போகட்டும்… ஏதோ ஒரு வகையில அது உனக்கு ஒத்து வரல… விலகி வந்துட்ட… அதோட அதை விடு… அதுக்குனு இப்படியே இருந்து என்ன சாதிக்கப் போற நீ… உனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா..? ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கறது என்ன அவ்வளவு பெரிய தெய்வ குத்தமா..?” என்றாள் தொடர்ந்து ஆற்றமாட்டாது.
அதுவரை அவள் சொல்வதை அமைதியாய் கேட்டுக் கொண்டவள், “அது சரி வராது அரசி… இது மாதிரி பேசறத இதோட நிறுத்திக்கோ… வேந்தன் முன்னாடி இப்படிப் பேசாத…” என்றாள் அழுத்தமாய்க் கண்டன குரலில்.
“ஏன் பேசக் கூடாது… நான் அப்படித் தான் பேசுவேன்… இந்த வருஷம் புள்ளைய ஸ்கூல சேக்கணும்னு நிக்கறீயே… அப்பன் பேருங்கற இடத்துல யார் பேரடி போடுவ… உன் பேரையே போடுவீயா..? சரி போட்டுக்க… குத்தமொன்னும் இல்ல… கொஞ்ச நாள்ல எல்லாரையும் பாத்துட்டு, எல்லாருக்கும் அப்பா இருக்காங்க… எனக்கு ஏன்ம்மா அப்பா இல்லனு வேந்தன் கேட்பானே அப்ப என்ன சொல்லுவ… சொல்லுடி கேக்கறேன் இல்ல…” என்றாள் கோபமாய் அரசி.
“ம்ம்… அவங்கப்பன் செத்துட்டானு சொல்லுவேன்…” என்றாள் வெடுக்கென்று தென்றல்.
“சரிதான்… செத்த அப்பனுக்குப் பேரில்லையானு கேட்டா அதுக்கு என்ன சொல்லுவ…” என்றாள் அடுத்ததாய் அரசி.
“நான் என்னமோ சொல்லிட்டு போறேன்… அதப் பத்தி உனக்கென்ன வந்துச்சு… உன் வேலைய பாத்துட்டு போடி அங்குட்டு…” இம்முறை வெளிப்படையாய் எரிந்து விழுந்தாள் தென்றல்.
“அப்படியே போட்டேனா கடவா பல்லு தெறிச்சுடும்… கல்யாணம் வேண்டானா அதுக்கு உருப்படியா ஒரு காரணத்த சொல்லு… அதவிட்டுட்டு விதண்டாவாதம் பண்ணிட்டு இருக்க…”
“அதான் சொல்லறனே எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுனு…” எனத் தென்றல் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் அரசி.
“இங்க பாரு தென்றலு… நீ என்ன நினைக்கறங்கறது எல்லாம் எனக்குத் தேவையில்லாதது… கல்யாணங்கறது வெறும் உடம்பு தேவைக்கு மட்டும் இல்ல… மனசோட தேவைக்கும் தான்… ஆமான் உனக்கு மகன் இருக்கான் தான்… ஆனா எல்லாமே மகனாகிட முடியாது… இன்னும் எத்தனை நாளைக்கு உங்கம்மா உனக்குத் துணையா இருப்பாங்க… இன்னும் பத்து வருஷமோ பதினைஞ்சு வருஷமோ வேந்தனும் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தையினு வெளில போற சூழல் வரும்… போகக் கூடாதுனு இறுக்கி உன் கைக்குள்ளேயே புடிச்சு வச்சுப்பீயா..? இல்ல ஒவ்வொரு இடத்துக்கும் அவன் கூடவே உன்னால போக முடியுமா..?” என்றாள்.
“எனக்கு யாரோட துணையும் தேவையில்ல… ஏன் என்னால தனியா வாழ முடியாதா..? வேந்தன் என்ன ஆசைப்படறானோ அத நான் என்னைக்கும் தடுக்க மாட்டேன்… அது என்ன விட்டு போகறதா இருந்தாலும்…” என்றாள் இறுகிய குரலில் தென்றல்.
“உன்னால தனியா வாழ முடியாதுனோ வேந்தன் உன்ன விட்டுக் கண்டிப்பா போய்டுவானோ இங்க யாரும் சொல்லல… அப்படி ரெண்டு பேரும் தனியா வாழணும்னு என்ன அவசியம்னு தான் கேக்கறேன்…”
பதிலில்லை தென்றலிடம். “புரிஞ்சுக்கோ தென்றல்… உனக்குப் புருஷன் வேணுங்கறது மட்டுமில்ல… வேந்தனுக்கும் அப்பா வேணும்… நீ என்னைக்கும் அவன் அப்பாவாகிட முடியாது… உனக்குக் கிடைச்ச அப்பா பாசம் அவனுக்குக் கிடைக்க வேண்டாமா..?”
அவளின் கடைசி வார்த்தைகளில் அதுவரை இறுகி அமர்ந்திருந்தவளின் உடல் தன்னைப் போல் தளர்ந்தது. ‘அப்பா’ என்ற வார்த்தையே அவளின் முகத்தில் ஒரு கனிவை கொண்டு வந்திருந்தது. அதை அரசியும் அறிந்திருந்தாள் தான். தந்தையைப் பற்றிச் சின்ன விசயம் என்றால் கூட, தென்றலின் முகம் அப்படியே பெருமிதத்தில் பூரித்துப் போகும். அப்படியான ஒரு அன்பை, உறவை மகனுக்கு மறுக்க மாட்டாள் என்றே எண்ணினாள் அரசி.
அப்பா, அந்த அப்பா இருந்திருந்தால் அவளின் வாழ்வில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால். ஆனால், எல்லா அப்பாக்களும் அவளின் அப்பா ஆகி விட முடியாதே! பெற்ற பிள்ளைகள் இடத்திலேயே பாரபட்சமாக நடந்து கொள்ளும் அப்பாக்களையும் அவள் பார்த்திருக்கிறாள் தானே! அதுவும் வேறொருவரின் பிள்ளையை தன் பிள்ளையாய் பாவிக்கும் அளவிற்கு யாருமே இல்லை என்று தான் உறுதியாய் நம்பினாள் அவள்.
அப்படியே யாராவது இருந்தாலும் கூட, அதைப் பரிசோதித்துப் பார்க்க தங்கள் வாழ்வை அடமானம் வைக்க அவள் தயாரில்லை. வேந்தனுக்குத் தகப்பன் என்ற உறவே இல்லை என்றாலும் பரவாயில்லை; ஆனால், தவறான ஒரு தகப்பன் வேண்டாம் என்று தான் நினைத்தாள்.
“வரவன் வேந்தனுக்கு அப்பாவா தான் இருப்பானு எத வச்சு இத்தன உறுதியா சொல்லற நீ…” என்றாள் சந்தேகமாய்த் தென்றல்.
“ஏன்னா யாரோ அடுத்தவங்க சொல்லறது கேட்டுட்டு வந்து நான் உன்கிட்ட பேசல… சிவாவ எனக்குக் காலேஜ் டைம்ல இருந்து தெரியும்… ஹீ இஸ் சச் எக் குட் சோல்… வார்த்தையில கூட அவனுக்கு அடுத்தவங்கள ஹர்ட் பண்ண தெரியாது… அவனுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது… விடு… எல்லாம் விதி…” என்றவள் முகம் ஒரு நொடி உண்மையான வேதனையைக் காண்பித்தது.
தொடர்ந்து, “வேந்தனுக்கு நல்ல அப்பாவா மட்டும் இல்ல… உனக்கும் நல்ல துணையா இருப்பான் தென்றல்… எல்லாத்துக்கும் மேல நீ நல்லா இருக்கணும்னு எந்தளவுக்கு நினைக்கறேனோ அதே அளவு சிவாவும் நல்லா இருக்கணும்னு நான் மனசார நினைக்கறேன்… நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நிச்சயமா ரொம்ப நல்லா இருப்பீங்க தென்றல்…” என்றாள் ஆத்மார்த்தமாய் அரசி.
அரசி, மாதவன், நேசன் மூவரும் ஒரே கல்லூரியில் பயின்றவர்கள். வாழ்க்கை ஓட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து சென்றிருக்க, அவர்களுக்கு இடையேயான தொடர்பும் விட்டுப் போனது. சென்ற வாரம் அரசியின் கணவனுக்குப் புதியதாய் இருசக்கர வாகனம் ஒன்று வாங்க வேண்டுமென்று சென்றிருந்த இடத்தில் தான் மாதவனைப் பார்த்திருந்தாள் அவள். பழைய உற்சாகம் தொற்றிக் கொள்ள, அத்தனை வருட கதைகளையும் அன்றே பேசிட முனைந்தார்கள் அவர்கள்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேர பேச்சின் முடிவில் நேசனின் கடந்த காலம் தான் அதிகம் பகிரப்பட்டிருந்தது இருவருக்கும் இடையில். எப்படியாவது யார் மூலமாவது அவனுக்கு ஒரு நல்லது நடந்து விடாதா என்ற ஏக்கம் மாதவனுக்கு. அவன் சொன்ன விசயங்களைக் கேட்ட அரசிக்கும் அத்தனை வருத்தம். அந்த நொடி அவளின் மனதில் இருந்ததெல்லாம், ‘சிவாவுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது…’ என்பது மட்டும் தான். எப்படியாவது அவன் வாழ்வை சீர்படுத்திவிட நினைத்தவளின் கண் முன்னால் வந்து நின்றது தோழியின் முகம் தான். தொடர்ந்து அவளும் தென்றலைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளப் பேச்சின் முடிவில், நேசனையும் தென்றலையும் எப்படியாவது சேர்த்து வைத்து விடுவதென நண்பர்கள் இருவரும் ஒரு மனதாய் தீர்மானித்துக் கொண்டனர்.
வேந்தனிடம் சின்ன அசைவு தெரிய, “அவங்க எவ்வளவு நல்லவங்களா இருந்தாலும் எனக்கோ என் பையனுக்கோ வேண்டாம்… அவ்வளவு தான்…” என்றவள், ‘இதற்கு மேல் இதைப் பற்றிப் பேசாதே…’ என்பதைப் போல எழுந்து கொண்டாள்.
இத்தனை சொல்லியும் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காதவளை, மகனின் ஒற்றை வார்த்தை சம்மதம் எனத் தலையாட்ட வைத்திருந்தது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.