நெஞ்சம் – 6

தமிழ் வெண்பா | 03 Dec 2025 | Share

ஒரு வழியாகப் பேசி சரிக்கட்டி குணவதியையும் அவருக்குத் துணையாய் அமுதாவையும் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிப் போனது அரசிக்கு. “இந்த அம்மாவ என்னனு தான் இவ சமாளிக்கறாளோ போ… பேரன் இப்படிக் கிடக்கறான்… ஒரு மனுஷிக்கு கொஞ்சமாவது நெஞ்சுல கலக்கம் வேணாம்… என்னமோ போ… இந்தம்மா பேசற பேச்ச பாத்தா நிஜமாவே இந்தம்மா தான் இவள பெத்துச்சானு எனக்கே சந்தேகமா இருக்கு…” சன்ன குரலில் புலம்பியவளுக்கு அவர் மீது அப்படி ஒரு ஆதங்கமும் ஆற்றாமையும்.

நேரம் மதியத்தைத் தொட்டிருக்க, மருத்துவமனைக்குள்ளேயே இயங்கும் உணவகத்தில் மூவருக்குமான உணவினை வாங்கிக் கொண்டு வேந்தன் இருந்த அறையை நோக்கி நடந்தாள் அரசி.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மகனின் தலையைக் கோதியபடி சோகமே உருவாய் அமர்ந்திருந்தவளின் கண்கள் எந்நேரம் வேண்டுமானாலும் உடைப்பெடுக்கத் தயாராக இருந்தது. என்னென்னவோ எண்ணங்கள் ஆழிப் பேரலையாய் மனதைப் போட்டு அழுத்தியது. இப்படியெல்லாம் எளிதில் உணர்வுகளை முகத்தில் காட்டிவிடும் ரகமில்லை அவள். அரிதாய் எப்பொழுதாவது அந்த உணர்வுகள் தலைகாட்டுவது கூட இப்படி யாருமில்லா நேரத்தில் தனிமையில் மட்டுமே! அந்தத் தனிமையும் கூட அவளுக்கு வெகு அரிது தான்.

கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க, கையில் உணவுப் பொட்டலங்களுடன் உள்ளே நுழைந்தாள் அரசி. தோழியைப் பார்த்தவளின் உடலில், மீண்டும் தன்னைப்போல் ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. அமைதியான அந்த முகத்தில், இப்பொழுது உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்தது.

அரசி என்றில்லை, வேறு யாரிடமும் அவளின் மன உணர்வுகளைக் காட்ட அவள் பிரியப்படவில்லை. குறிப்பாய் அவளைப் பெற்றவரிடம்.  அவளைப் பொறுத்தமட்டில் உணர்வுகள் பெரும் பலவீனம். அதைக் கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை அரசி.

அமைதியாய் பிள்ளைக்கு அடுத்துக் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தவள், வாங்கி வந்திருந்த சாப்பாட்டில் ஒன்றை பிரித்துத் தோழியிடம் நீட்டினாள். எளிதாய் உண்பதைப் போல, தக்காளி சாதம் தான் வாங்கி வந்திருந்தாள் அரசி. தென்றலின் பிரிய உணவும் கூட அதுதான். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வேந்தனின் பிடித்தம் அது. அதனாலே தென்றலுக்கும் பிடித்தம் என்று ஆகிப்போனது. வாரத்தில் மூன்று நாட்களாவது அவளின் சாப்பாட்டு டப்பாவில் சமத்தாய் அமர்ந்திருக்கும் தக்காளி சாதம்.

அதற்கே ‘ஹப்பா… எப்படித் தான் இத சாப்பிடறீயோ..? சலிக்கவே சலிக்காதாடி உனக்கு…’ என அலுத்துக் கொள்வாள் அரசி. உண்மையைச் சொல்லப் போனால் தினமும்  என்றால் கூடத் தென்றலுக்கு அந்த உணவு சலிக்கவே சலிக்காது. கல்லும் மண்ணும் கூட மகனுக்குப் பிடித்தமென்றால், அவளுக்கும் அதில் மாற்றுக் கருத்து இருக்காது. அவளுக்கென்று இதுவரை தனிப் பிடித்தங்களோ விருப்பங்களோ இருந்ததாக அரசிக்கு தெரியவில்லை. மகனைச் சுற்றியே இயங்கியது தென்றலின் உலகம்.

அவள் நீட்டிய உணவுப் பொட்டலத்தை வாங்காது, அமைதியாய் அழுத்தமாய்ப் பார்த்திருந்தாள் தென்றல்.

“தீனு பேரு வச்சா… இப்படி ஓயாம கண்ணுல ஃபயர் விட்டுட்டே இருக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்ல…” என்றாள் நொடிப்பாய் அரசி.

“பச்… எம்பேருக்கு அது அர்த்தமில்லனு எத்தனை தடவ சொல்லறது உனக்கு… எங்கப்பா எனக்கு ஆசை ஆசையா வச்சது… அதப் போட்டு இப்படிக் கொல்லாத…” என்றாள் எச்சரிப்பதைப் போலத் தென்றல்.

“ஆமான் ஆமான்… இனிமை அப்படியே அள்ளுது… போடி இவளே… தீந்தென்றல்னு பேரு வச்சதுக்குப் பதிலா தீஞ்சிப்போன தென்றல்னு வச்சு இருக்கலாம் உங்கப்பா… எப்ப பாரு புசுபுசுனு மூக்குல காத்தடிச்சுட்டு… இப்ப சாப்பிட போறீயா இல்லையா நீ…” என்றாள் அரசி அதட்டலாய்.

பார்த்த முதல் நாள் அன்றே, “ஓய்… ஃபயர்…” என்று அரசி விளையாட்டாய் அழைத்திருக்க, “தீந்தென்றல்னா, தீம் + தென்றல், இனிமையான தென்றல்னு அர்த்தம்… இந்த  ஃபயரு டயருனு கூப்பிடற வேலையெல்லாம் வேண்டாம்… எனக்குப் பிடிக்காது…” எனக் கண்களில் தீப் பறக்க சொல்லி இருந்தாள் தென்றல். எந்த நேரத்தில் அப்படி அழைக்காதே என்றாளோ அப்பொழுதிலிருந்து அப்படி மட்டும் தான் அழைத்தாள் அரசி.

“எனக்கு வேண்டாம்… நீயே கொட்டிக்கோ…” என்றாள், அரசி சொன்னதைப் போல முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு தென்றல்.

“அம்மாடியோவ்… ஒரு பிடி கடுக அள்ளிப் போட்டா சட்டியே இல்லாம சடசடனு வெடிக்கும் போலயே… காலையில இருந்து உன்கூட அலைஞ்சு அலைஞ்சு பசி உயிர் போகுது எரும… பேசாம சாப்பிட வா… இல்ல  கடிச்சு வச்சுடுவேன்…” என்றவளின் கண்களில் உண்மையான பசியுணர்வு.

அதன் பின் மறுத்து எதுவும் சொல்லவில்லை தென்றல். சற்றே நாற்காலியை நகர்த்தி அவளுக்கு எதிரில் அமர்ந்தவள், காலணிகளைக் கழட்டி ஓரமாய் வைத்துவிட்டு தண்ணீரை தேடினாள்.

“நான் வேணும்னா ஊட்டி விடட்டுமா குழந்தாய்…” எனக் கேலியாய் வினவியபடியே, பிரித்த உணவை அவள் வாயருகே நீட்டினாள் அரசி. தென்றல் அவளைஅடித்து விடுவதைப் போலப் பார்க்க, “அம்மாடியோ… பயந்துட்டேன்…” என என நெஞ்சில் கை வைத்தபடி பயந்த பாவனையில் சொன்னவள், “வெளில போய் லெஃப்ட் திரும்புனா ரெஸ்ட் ரூம்… போய் வாஷ் பண்ணிட்டு வா…” என்றவள் தான் உண்ண தொடங்கி இருந்தாள்.

அவளை முறைத்தபடியே மீண்டும் காலணிகளை அணிய சுறுக்கென்ற வலி. அதைப் பெரிதுபடுத்தவில்லை தென்றல். அவள் செல்லவும் இத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மை குறைந்து வேதனை படர்ந்தது அரசியின் முகத்தில்.

இருவருக்குமான நட்பு,‌ ஆண்டாண்டு காலமாக வளர்ந்த பாசப் பயிரில்லை. இதோ இந்த மூன்று ஆண்டுகளாகத் தான். ஆனால் ஆண்டாண்டு காலமாகப் பழகிய ஆத்மார்த்தமான பிணைப்பு. அத்தனையையும் தென்றல் வாய் திறந்து சொல்ல வேண்டும் என்றில்லை. அவளின் சொல்லாத உணர்வுகளும் கூடப் பல சயங்களில் அரசிக்குச் சரியாய்க் கடத்தப்பட்டிருக்கிறது. இதில் இருவருக்குமே பெரும் ஆச்சர்யம் தான்.

அரசி தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கடன் பிரிவில் வேலை செய்கிறாள். அவள் சேர்ந்த அதே நேரத்தில் தான், அதே வங்கியில் அதே பிரிவில் தென்றலும் வேலைக்குச் சேர்ந்தாள். கிட்டத்தட்ட இருவரும் சம வயதினராய் இருக்க, அரசி தான் வலிய சென்று பேச முயன்றாள். ஆரம்பமே முட்டிக் கொண்டது. பின்பு வெட்டிக் கொண்டு போனவளை, இழுத்துப் பிடித்துத் தன் நட்பு வட்டத்திற்குள் இறுக்கிக் கொண்டாள் அரசி.

உண்மையைச் சொல்லப் போனால், தென்றலின் கடந்த காலம் எதுவும் தெரியாது அரசிக்கு. இதோ இப்படி ஒரு மகன் இருக்கிறான் என்றே இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் தெரிந்தது. கோபமாய் ஆதங்கமாய்க் கேலியாய் என்று எப்படிக் கேட்டாலும் தென்றலின் வாயிலிருந்து முத்து உதிராது. கேட்டு கேட்டு அலுத்து தான் போனது அரசிக்கும். இன்னமும் வற்புறுத்தி அழுத்திக் கேட்க மனமில்லை. அவளின் கூடு தாண்டி, தென்றல் இயல்பாய் பேசுவதே அரசியிடம் மட்டும் தான். அதையும் கெடுக்க விருப்பமில்லை அரசிக்கு.

கை கழுவி விட்டு தென்றல் சாப்பிட அமர, உண்டு முடிக்கும் வரையிலும் இருவரிடமும் கனத்த மௌனம்.

மீண்டும் நாற்காலியை பழைய படியே போட்டு மகனின் அருகில் அமரப் போனவளை, இழுத்து வந்து கட்டிலின் மறுமுனையில் அமர்த்திய அரசி கீழே சம்மணமிட்டு அமர்ந்து அவளின் பாதத்தை எடுத்து தன் மடி மீது வைத்திருந்தாள்.

“என்ன பண்ணற அரசி… காலை விடு…” வேகமாய்ப் பின்னே இழுத்துக் கொள்ளப் பார்த்தாள் தென்றல்.

“காயமா இருக்கு எரும… இப்படியே எப்படி இருப்ப… செருப்பு போட்டா இன்னும் காயமாகும்… பேசமா இரு… பேண்டேஜ் போடறேன்…” என்றபடியே காலின் காயத்தைச் சுத்தப்படுத்த தொடங்கி இருந்தாள்.

“பெரிய காயம் ஒன்னுமில்ல… அப்படியே விட்டா கொஞ்ச நாள்ல தன்னால சரியாகிடும்…” எனச் சன்ன குரலில் சொன்னபடியே, இன்னமும் காலை பின்னுக்கு இழுக்கத் தான் முயன்றாள் தென்றல்.

“அப்படியே போட்டேனா பாரு… பேசாம இருனு சொல்லறேன் இல்ல…” என்றபடியே தென்றலின் காலை தனது மடியில் அழுத்தி பிடித்துக் கொண்டவள், மருந்து வைத்து பேண்டேஜும் போட்டு விட்டாள்.

“ஏன்டி சின்னக் கண்ணாடி வளையல் குத்தியா இவ்வளவு பெரிய காயம் ஆகியிருக்கு‌ உனக்கு..‌. கட்ட விரல் நகத்தையே காணுமேடி…” எனக் கேட்டபடியே தான் அதைச் செய்தாள் அரசி.

“ரெண்டு நாளைக்கு முன்ன கதவுல இடிச்சுடுச்சு… இடிச்சப்ப லேசான காயம் தானேனு விட்டுட்டேன்… செருப்பு போடவும் வார் அழுத்தி அழுத்தி பெருசாகிடுச்சு போல… இன்னைக்கு வளையல் குத்தவும் வலியில வேகமா கால எடுக்கறேனு டேபிள இடிச்சுக்கிட்டேன்… அப்ப தான் நகம் பேந்திருக்கும்‌…” என்றாள் சமாதானம் போல், உள்ளே போய்விட்ட சின்னக் குரலில் தென்றல்.

வெடுக்கென அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், “அறிவிருக்காடி உனக்கு…” என அவள் எதிர்பார்த்தபடியே  வசைபாட ஆரம்பிக்க, “ப்ளீஸ் விடேன்…” என்றாள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு தென்றல்.

இரத்தம் பெருகியதில் சரிவர அவளின் காயத்தை அரசி கவனித்திருக்கவில்லை. அதுவும் அப்போதிருந்த பதற்ற சூழல் கவனிக்க விடவில்லை.

“என்னத்த விடேன்… காயம் ஆகியிருக்கு.. வலி இருக்கு… அப்பறம் என்ன இதுக்கு அத பொறுத்துட்டு இருக்கணும்னு கேக்கறேன்… அப்பவே மருந்து வைக்க வேண்டியது தானே… அத விட மேடமுக்கு வேற என்ன வெட்டி முறிக்கற வேலை…” சிடுசிடுவெனப் பொரிய தொடங்கி இருந்தாள் அரசி.

“பச்… அதான் இப்ப மருந்து வச்சுட்ட இல்ல… அப்பறம் என்ன… விடேன்…” என்றாள் மீண்டுமாய்த் தென்றல்.

“காயம் சின்னதோ பெரிசோ சரியான நேரத்துக்கு அதுக்கு மருந்து வச்சா தான் வலியும் குறையும்… குணமும் ஆகும்… அப்படி இல்லைனா காலத்துக்கும் இந்தக் காயத்த அதோட வலிய சுமந்துட்டே இருக்க வேண்டியது தான்…” என்றாள் தீவிர குரலில் அழுத்தமாய் அரசி. அவள் காலின் காயத்திற்காக மட்டும் சொல்லவில்லை என்பது தென்றலுக்கும் புரியத் தான் செய்தது. வாயே திறக்கவில்லை அவள்.

“இப்படி ஏதாவது சொன்னா கல்ல முழுங்கனவளாட்டம் வாய மூடிட்டு உக்காந்துரு…” என்றாள் எரிச்சலாய் அரசி.

“என்ன தான்டி பண்ணனுங்கற… நானே வேந்தன் எப்போ கண்ணு முழிப்பானு கவலையில இருக்கேன்… நீ என்னனா நொய்யு நொய்யுட்டு… அதான் சாப்பாடு குடுத்துட்ட இல்ல… வீட்டுக்குக் கிளம்பு நீ…” என்றாள் எரிச்சலாய் தென்றல்.

அவள் சொன்னாள் என்பதற்காகக் கிளம்பிவிட முடியுமா? தோழியின் சொல் ஒன்றாகவும், எண்ணம் வேறாகவும் இருப்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கா அரசி முட்டாள்?

‘என்னோட‌ இருடினு வாயத் தொறந்து சொல்லிட்டா மகாராணியோட கவுரவம் கொட சாஞ்சுடும்…’ என நொடித்துக் கொண்டது அரசியின் மனது.

“வந்த எங்களுக்குப் போறதுக்கும் வழி தெரியும்… அதான் வேந்தனுக்குப் பெருசா ஒன்னுமில்ல… ஈவினிங் கண்ணு முழிச்சுடுவானு டாக்டர் சொன்னாராமே… அப்பறம் என்ன உனக்கு…” என்றாள் அதட்டலாய் அரசி.

“பச்… என்னவோ பண்ணு…” என்றவள் மகனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

சில நொடிகள் மௌனம் அரசியிடம். இப்பொழுது இருக்கும் சூழலில் கேட்கலாமா என்ற சிறு தயக்கம். ஆனால் இப்பொழுது விட்டால், இதுபோலத் தனிமையில் மீண்டும் அவளைப் பிடிப்பது அரிது என்றே தோன்ற, “என்ன முடிவு பண்ணி இருக்கத் தென்றல்…” என ஆழ்ந்த குரலில் அழுத்தமாய்க் கேட்டே விட்டாள் அரசி.

திடீரென அவள் அப்படிக் கேட்கவும் எதைப் பற்றிக் கேட்கிறாள் என்றே விளங்கவில்லை தென்றலுக்கு.

“ஹான்… எத பத்தி…” என்றாள் புரியாது.

“உன் கல்யாணத்த பத்தி என்ன முடிவு பண்ணிருக்கனு கேக்கறேன்…” அழுத்தம் திருத்தமாய் அரசி மீண்டும் வினவ, தென்றலின் முகத்தில் தீவிர சிந்தனையின் ரேகைகள்.

                                  – நேசம் ஒளிரும்…

    No comments yet.