நெஞ்சம் – 5

தமிழ் வெண்பா | 02 Dec 2025 | Share

“கொஞ்சம் வேகமா தான் போயேன்டி எரும… இதுக்கு தான் நானே ஓட்டறேனு சொன்னேன்… இப்ப பாரு ஏதோ நகர் வலம் போற அரசகுமாரி மாதிரி வண்டிய உருட்டிட்டு இருக்க…” பின்னால் அமர்ந்தபடியே கடுப்பாய் வாய் ஓயாது புலம்பிக் கொண்டிருந்தாள் அவள். உண்மைக்குமே ஓட்டியவளின் பெயரும் கூட அரசிளங்குமாரி தான்.

“இங்காருடி… நான் ஒன்னும் ஜெட்டு ஓட்டல… ஸ்கூட்டி பெப் தான் ஓட்டறேன்… சும்மா நொய்யு நொய்யுனு என்ன டென்ஷன் பண்ணாம மூடிட்டு வா சொல்லிட்டேன்…” என பதிலுக்கு தானும் எரிந்து விழுந்தாள் அரசி.

சில நொடிகள் மௌனமாய் வந்தவள், “வேந்தனுக்கு பெருசா எதுவும் அடி இருக்காது இல்ல அரசி… அவன் கீழ விழுந்துட்டானு சொன்னதுல இருந்து எனக்கு ஒரு மாதிரி பக்கு பக்குனு நெஞ்செல்லாம் அடைச்சுகிட்டு வருதுடி…” என்றவளின் குரலிலேயே கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. இதையே இத்தோடு ஆயிரம் முறைக்கு மேல் சொல்லி இருந்தாள் அவள்.

“அதெல்லாம் ஒன்னும் இருக்காதுடி… சின்ன அடிதானு பக்கத்து வீட்டு அக்காவும் சொன்னாங்க தானே… அப்பறம் என்ன..? நீ கொஞ்சம் தைரியமா இரு…” என்றாள் அரசி.

அதெல்லாம் அவளின் செவிகளை அடைந்தது போலவே தெரியவில்லை. “ஏன்டி வால் பிடிச்ச மாதிரி இந்த ஹீரோ ஹோண்டா பின்னாடியே போற… ஓவர் டேக் பண்ணி முன்னாடி தான் போயேன்…” என்றாள் எரிச்சலாய்.

“அவன ஓவர் டேக் பண்ணி போனா முன்னாடி போற லாரி டயர்ல கொண்டு தான் சொருகணும்… கொஞ்சம் வாய மூடிட்டு தான் வந்து தொலையேன்டி…” என்றாள் அரசியும் கடுப்பாய். அவர்கள் நகரின் பிராதான சாலையில் பயணித்துக் கொண்டிருக்க, முன் சென்ற வாகனங்கள் எல்லாம் ஊர்வலம் செல்வது போல் தான் நகர்ந்து கொண்டிருந்தது. யாருக்கும் அவளின் அவசரம் புரியவில்லை.

கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டபடி, அவளை வேகமாய் செல்ல சொல்லியபடி தான் வந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு நொடியும் அவள் திருவாய் மூடவில்லை. அவளின் பதற்றமும் குறையவில்லை. அவளின் சூழல் அரசிக்கு புரிந்தாலும், அவளின் அவசரத்துக்கு அனைத்தும் நடந்துவிடுமா என்ன?

“இந்த லட்சணத்துல இவளே வண்டிய ஓட்டிட்டு  தனியா வந்து கிழிச்சுடுவாளாம்… அப்படி மட்டும் போகட்டும்னு விட்டிருந்தா இவள கொண்டு வந்து பக்கத்து பெட்ல தான் போட்டு இருக்கணும்… அகம் புடிச்ச கழுதை… ஒரு செகெண்ட் வாய் ஓயுதா பாரு…” சின்ன குரலில் தோழியை கடிந்து கொண்டவளுக்கு, அப்படியென்ன இந்த பெண்ணுக்கு இத்தனை பிடிவாதம் என்று ஆத்திரமாய் கூட வந்தது.

அவள் தீந்தென்றல். பிடிவாதகாரி மட்டுமல்ல, வெகு அழுத்தக்காரியும் கூட. தலையில் இடியே விழுந்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாத ரகம். அவளின் பலம், பலவீனம் இரண்டுமே மகன் திகழ்வேந்தன் தான். அவன் நகக்கணுவில் சின்ன கீறல் என்றால் கூட, அவள் சுயத்திலும் இருக்க மாட்டாள். எதிரில் இருப்பவர் யாரென்றும் பார்க்க மாட்டாள். அவள் திருவாய் மொழியும் வார்த்தைகளுக்கும் வரம்பிருக்காது.

இன்று காலையில் உடன்‌ பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு திருச்செந்தூர் கோவிலில் திருமணம். அதற்காக தான் வேலை செய்யும் மற்றவர்களுடன் சேர்ந்து சென்றிருந்தாள் தென்றல். இன்றைய தினத்தை சிறப்பாய் கழிக்க, ஏகப்பட்ட திட்டங்கள் அந்த பெண்களிடம். அப்படிதான் திருமணம் முடிந்ததும், அந்த உணவகத்திற்கு வந்திருந்தனர்.

அப்பொழுது தான், தென்றலின் பக்கத்து வீட்டில் இருப்பவர் வேந்தன் கீழே விழுந்ததில் சின்ன காயமென்றும், குறிப்பிட்ட மருந்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் தகவல் சொல்ல, தென்றலும் கிளம்பிவிட்டாள்.

நகரின் பிரபலமான மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று. அதன் வாயிலில் வண்டியை நிறுத்த, அங்கேயே இறங்கிக் கொண்டாள் தென்றல்.

“ஏன்டி அரசி… சரியா கேட்டீயா… இந்த ஹாய்பிட்டல் தானா…” ஒன்றுக்கு நான்கு முறை பக்கத்துவீட்டு பெண்ணிடம் அவளே கேட்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கேட்டாள் தென்றல்.

“பேசும் போது நீயும் தானே கேட்ட… அப்பறம் என்ன..?” என்றவள் வண்டியை நிறுத்துவதற்கு விழிகளால் இடம் தேட,

“நீ தேடி பார்க் பண்ணிட்டு வா அரசி… நான் முதல உள்ள போய் வேந்தனுக்கு என்னனு பாக்கறேன்…” என்றவளுக்கு தோழி வண்டியை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு வரும் வரை எல்லாம் காத்திருக்கும் பொறுமையில்லை.

அரசி அதற்கு பதில் சொல்ல வாய் திறக்கும் முன்னமே, வேகமாய் மருத்துவமனையின் உள்ளே விரைந்திருந்தாள் அவள். தென்றல் பார்வையைவிட்டு மறைந்த பின்னும் கூட, சில நொடிகள் அவள் சென்ற திசையை பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டாள் அரசி.

‘ஆத்தி… இன்னைக்கு என்ன ஏழரைய கூட்ட காத்திருக்காளோ தெரியலையே…’ என்று எண்ணியவளுக்கு, இப்பொழுதே மூச்சடைக்கும் உணர்வு. பக்கத்து வீட்டு பெண்மணி, வேந்தனுக்கு சிகிச்சை முடிந்த பின் அழைத்து சின்ன காயம் தான், மற்றபடி எதுவுமில்லை என்று அழுத்தியே சொல்லி இருக்க அரசியின்‌ பதற்றம் வெகுவாய் குறைந்திருந்தது. ஆனால், தென்றலுக்கு பிள்ளையை கண்களால் காணும் வரை பதற்றம் குறையாது.

வரவேற்பரையில் விசாரித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் அவர்கள் சொன்ன அறை நோக்கி விரைந்தாள் தென்றல். அறையை நெருங்க, அதற்கு வெளியில் பார்வையாளர்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்த அன்னை கூட தென்றலின் கவனத்திலும் கருத்திலும் பதியவில்லை. வேகமாய் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, மலர் குவியலாய் கட்டிலில் கிடத்தப்படிருந்தான் மகன்.

நான்கை தொட்டுவிடும் வயது. இந்த வருடம் தான் பள்ளியில் சேர்க்கலாம் என்றிருக்கிறாள் அவள். ஒரு கையில் சேலைன் பாட்டில் ஓடிக் கொண்டிருக்க, தலையில் நெற்றியை மறைக்கும் அளவிற்கு பெரிய கட்டு. தழும்பி நின்ற கண்ணீர் பார்வையை மறைக்க, இமைகளை அழுத்தமாய் மூடித் திறந்தாள் தென்றல். கோடாய் கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

அமைதியாய் மகனின் அருகில் அமர்ந்து, அவனின் மற்றொரு கரத்தை எடுத்து வருடிக் கொடுக்க மருந்தின் வீரியத்தில் மயக்கத்தில் இருந்தான் பிள்ளை. அவனின் வாடிய வதனத்தை கண்டதும், நிற்காமல் இன்னும் இன்னும் பெருகியது அவளின் கண்ணீர்.

“ஒன்னுமில்ல தென்றலு… படியில தடுமாறி விழுந்துட்டான்… சின்ன அடிதான்… ஆனா ரத்தம் கொஞ்சம் அதிகமா போய்டுச்சு… அதான் சேலைன் போட்டு இருக்காங்க…” என்றார் வேந்தனுக்கு துணையாய் அங்கே அமர்ந்திருந்த அமுதா. அவர் தான் அவளுக்கு அழைத்து சொல்லியதும் கூட.

மென்மையாய் மகனின் காயத்தை வருடியபடியே, “எப்படிக்கா..?” என்றவளுக்கு மனதே ஆறவில்லை.

சொல்லலாமா வேண்டாமா என்ற ஒரு நொடி தயக்கம் அவருக்கு. ஆனால், தென்றல் அவரை நிமிர்ந்து பார்த்த ஒற்றைப் பார்வையில் கடகடவென்று அத்தனையும் ஒப்பித்திருந்தார்.

அடுத்த நொடி தென்றல், புயலாய் மாறி அவளை பெற்றவரின் முன் நின்றிருந்தது. “அறிவில்லையாமா உனக்கு… நாலு வயசு பையன கூட கவனமா பாத்துக்க முடியாதா..? அப்படியென்ன வீட்டுல உக்காந்து வெட்டி முறிக்கற நீ..?” என்றவளின் வார்த்தைகளில் அனல் தெறித்தது.

அவளின் அனல் பார்வைக்கு எல்லாம் அஞ்சிவிடவில்லை குணவதி. “அவ்வளவு அக்கறை இருக்கறவ வீட்டுலையே உக்காந்து புள்ளைய பாத்துக்க வேண்டியது தானே..! நான் என்னமோ உன் புள்ளைய வேணும்னே புடிச்சு மாடியில இருந்து தள்ளி விட்ட மாதிரி பேசற…” என்றார் சாதாரணமாய். உண்மைக்குமே அது தான் நடந்ததென தெரிந்தால், மகள் எப்படி சாமியாடுவாள் என்பதும் அவருக்கு தெரியும். ஆனால்,  வேண்டுமேன்றே செய்யவில்லையே! ஏதோ நடந்துவிட்டது என்று நினைத்தவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் துளியும் இல்லை.

அவரின் அலட்சியம் அவளின் கோபத்தை இன்னுமே விசிறியடித்தது. “ஒரு நாள் உன்கிட்ட புள்ளைய விட்டேன்… இப்ப எங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்க பாத்தீயா… இதுல இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… பாத்துக்க முடியாதுனா காலையிலையே சொல்லி தொலைக்க வேண்டியது தானே… என் புள்ளைய கையோட நானே கூட்டிட்டு போயிருப்பேன்…” என்றாள் தென்றல்.

“இப்ப என்னடி ஆகிப் போச்சுனு இப்படி குதிக்கற… காலையில சாப்பிட்டதும் கிறுகிறுனு வருதேனு இரண்டு நிமிஷம் கண்ண மூடினேன்… அதுக்குள்ள இந்த சனியன் ஏழரைய இழுத்து வைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்…” என்றார் நொடிப்பாய் குணவதி.

அவர் முடிக்கும் முன்னமே, “வாய மூடும்மா…” என சத்தமாய் கத்தி இருந்தாள் தென்றல்.

அப்பொழுது தான் வண்டியை நிறுத்திவிட்டு விசாரித்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தாள் அரசி. அதற்குள் நிலமை கைமீறி தான் போயிருந்தது.

“சனியன் கினியனு என்ன ‌பேச்சு இது… சரி அடி பட்டுச்சு… உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வர வேண்டியது தானே… எதுக்கு தேவையில்லாத வேலையெல்லாம் பாக்கற நீ…” என்றாள் தணியாத கோபத்தோடு தென்றல்.

“என்ன தேவையில்லாத வேலை பாத்துட்டாங்க இப்போ… சின்ன காயம் தானே… மஞ்சபொடி வச்சா சரியாகிடும்னு வச்சேன்… அதான் நிக்கலைனதும் செலவ கூட பாக்காம இவ்வளவு பெரிய ஆஸ்பத்திருக்கு தூக்கிட்டு வந்துட்டேன் இல்ல… அப்பறமும் என்னவாம்… பேசறா பேச்சு… என்னமோ இவ ஒருத்தி தான் ஊரு உலகத்துல இல்லாத அதிசய புள்ள வளக்குற மாதிரி…” என்றார் அவர் அங்கலாய்ப்பாய்.

“இப்படி அநியாயமா பொய் சொல்லாதம்மா… அமுதா அக்கா அவ்வளவு சொல்லியும் கேட்காம பிள்ளை மயங்கி விழுற வரைக்கும் பாத்துட்டு இருந்துட்டு பொறுமையா ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு வந்திருக்க… அதுவும் நான் எதாவது சொல்லுவேனு பயந்துட்டு… என் புள்ளைக்கு ஹாப்பிட்டல் செலவு என்ன நீயா பாக்க போற… இல்ல செத்துப் போன உன் புருஷன் சேத்து வச்ச சொத்துல இருந்து செலவழிக்க போறீயா..?” என்றாள் தீராத ஆத்திரத்தோடு.

“டி தென்றலு… இது ஹாஸ்பிட்டலுடி… கொஞ்சம் சும்மா தான் இரேன்டி…” என்றாள் அவளது கையைப் பிடித்து இழுத்தபடி அரசி.

“பெத்த அப்பன எப்படி பேசறா பாரும்மா இவ… அம்மானு எம்மேல பாசமும் இல்ல… அப்பானு அந்த மனுஷன் மேல மரியாதையும் இல்ல… எல்லாம் என் தலையெழுத்து…” என்று அரசியிடம் புகார் படித்தார் அவர்.

“பாசம் நேசம்னு பசப்புற வேலையெல்லாம் இங்க வேணாம்மா… இவ்வளவு நடந்த அப்பறமும் இப்ப வரைக்கும் ஒரு போன் பண்ணி எனக்கு சொல்லல நீ… அமுதா அக்கா சொல்லவும் அடிச்சு பிடிச்சு ஓடி வரேன்… என்னதான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல… நானும் என் புள்ளையும் இருக்கறது புடிக்கலைனா சொல்லு… கிளம்பி போய்ட்டே இருக்கோம்…” என்றாள் தென்றல்.

“ஆமான்டி ஆமான்… ஒத்த பிள்ளைய பெத்து வளத்து பாடுபட்டு ஆளாக்கி விட்டது இப்படி என்ன தெருவுல நிறுத்திட்டு போக தான்…” என்றார் புடைவை முந்தானையால் வாயைப் பொத்தியபடி கண்ணீர் வழிய.

அறையிலிருந்து வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, தாய்க்கும் மகளுக்கும் இடையில் சமாதானமாய் ஒரு வார்த்தை பேசவில்லை அமுதா. அரசி தான் இருவருக்கும் இடையே திண்டாடி நின்றாள்.

தென்றலை அடக்க முடியாது என்று தெரிந்துவிட, “ஐய்யோ ஆன்ட்டி…  அவ தான் புள்ளைக்கு இப்படி ஆனதுல என்ன பேசறோம்னு தெரியாம கோபத்துல பேசிட்டு இருக்கானா… நீங்களும் அவளுக்கு சரிக்கு சமமா  மல்லுக்கு நிக்கணுமா..?” என்றபடியே கிட்டத்தட்ட அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு தூரமாய் சென்றிருந்தாள் அரசி. இதற்கே கண்ணெல்லாம் இருட்டிக் கொண்டு மயக்கம் வரும் போலிருந்தது அவளுக்கு. இன்னும் பிள்ளை கண் விழித்து பார்க்கும் வரை எப்படி இருவரையும் வைத்து சமாளிக்கப் போகிறாளோ தெரியவில்லை.

                                    நேசம் ஒளிரும்…

    No comments yet.