நெஞ்சம் 40:
வீடே அடங்கி அனைவரும் உறங்க சென்ற பின்னர் தான் உள்ளே வந்தான் நேசன். மணி பதினொன்றை நெருங்கி இருக்க, இந்நேரம் உறங்கி இருப்பாள் என்று கணக்கு போட்டது மனம். அவனும் அவளுக்கான நேரத்தை கொடுத்து விலகி நிற்க தான் பார்க்கிறான். எங்கே இந்த ஆசை கொண்ட மனது அதற்கு அவனை விட்டால் தானே!
சற்றே ஒருக்களித்து சாற்றி வைக்கப் பட்டிருந்த அறைக் கதவை திறந்துக் கொண்டு அறைக்கு உள்ளே நுழைந்தான் நேசன். அவனின் எண்ணங்கள் அத்தனையையும் பொய்யாக்கியபடி, கட்டில் முழுவதும் துணிகளை பரத்தி வைத்து மடித்துக் கொண்டிருந்தாள் தென்றல்.
“என்ன பண்ணற… இன்னும் தூங்கலையா நீ..?” என்றவனின் குரலில் சின்ன எரிச்சலும் கடுப்பும் இருந்தது.
“வந்துட்டீங்களா..? உங்களுக்காக தான் வெயிட்டிங்… கபோர்ட ஒதுக்கி குடுங்க… என் ட்ரஸையும் பையன் ட்ரஸையும் வைக்கணும்…” என்றாள் தென்றல்.
“உனக்கு டயர்டா இல்லையா தென்றல்… இந்த வேலைய நாளைக்கு பண்ண கூடாதா..?” என்றான் தணிந்து மென்மையாய் நேசன். இன்று முழுவதும் அலைந்து திரிந்தது களைப்பாய் இருக்குமே என சட்டென்று கரிசனம் முளைத்தது.
“டயர்டா தான் இருக்கு… நாளைக்கு விருந்துக்கு போகணும்… அடுத்து கோவிலுக்கு போகணும்… திங்கள்ல இருந்து வேலைக்கு போகணும்… அப்பறம் எடுத்து வைக்க நேரமே இருக்காது… இன்னைக்கு காலையிலையே ஒரு சட்டைய எடுக்கறேனு வேந்தன் எல்லாத்தையும் களைச்சு போட்டு வச்சுருக்கான்… அப்படியே எப்படி போட முடியும்..?” தொடர்ந்து தன் வேலையில் கவனமாய் இருந்தபடி சொன்னாள் தென்றல்.
அவளே கூட அவனின் துணிகளை ஒதுங்க வைத்திருப்பாள் தான். அலமாரி முழுவதும் கோப்புகளாகவும் நிறைய காகிதங்களாகவும் இருக்க அவனே பார்த்து எடுத்து வைக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.
“இதெல்லாம் யோசிக்க டைமே இல்ல…” என சொல்லியபடியே அவன் அலமாரியை ஒதுங்க வைக்க, “எப்படி இருக்கும்..?” என்றாள் கேலியாய் தென்றல்.
“நாளைக்கே ஆளுங்கள வர சொல்லி வாட்ரோப் வைக்க சொல்லிடலாம்… எந்தளவுல எங்க பக்கம் வைக்கலாம்னு பாரு…” என்றான் நேசன் அவளின் கேலியைக் கண்டுக் கொள்ளாமல்.
அந்த அறையை சுற்றிலும் அளவெடுத்தாள் அவள். நடுநாயகமாய் ஒரு கட்டிலும், ஒரு பக்க சுவரை ஒட்டி மூவர் அமரும் வகையில் ஒரு நீள் இருக்கையும், ஒரு ஆடைகள் வைக்கும் அலமாரியையும், கண்ணாடியோடு சேர்ந்த ஒரு ஒப்பனை மேசையும் தவிர சொல்லிக் கொள்ளும் படி எதுவும் இல்லை. ஒருவருக்கு அதுவே தாராளம்.
“இந்த பக்கம் முழுக்க கவர் ஆகற மாதிரி செட் பண்ணிக்கலாம்…” என்றாள் ஒரு பக்க சுவர் மொத்ததையும் காட்டி.
“இவ்வளவு பெருசா வேணுமா தென்றல்…” என்றான் யோசனையாய் நேசன்.
“ஹாலோ புருஷரே… ஒரே ஒரு பைய மட்டும் தூக்கிட்டு வந்ததால யாரும் என்ன குறைச்சு எடை போட வேணாம்… ஆபிஸ் வியர், கேஸ்வல், பங்ஷன் வியர்னு அதுவே இரண்டு பீரோ நிறைய இருக்கு… இதுல வேந்தனோடையும் வைக்கணும்… ஆம்பள இவருக்கே ஒரு கப்போர்ட் பத்தலையாம்… நாங்க மட்டும் ஒரு பெட்டியோட நிறுத்திகணுமான்…” என நொடித்தாள் தென்றல்.
“ஆமா ஏன் நிறைய ட்ரஸ் இன்னும் பிரிக்காம புதுசாவே இருக்கு…” என்றாள் யோசனையாய். பிரிக்கப் படாமலேயே இருபதுக்கும் மேற்பட்ட புது சட்டைகள் இருந்தது.
“மாதவன் எப்ப அவனுக்கு ட்ரஸ் எடுத்தாலும் எனக்கும் சேத்து எடுத்துட்டு வந்துடுவான்… ஓர்க் ஷாப்க்கு போட்டுட்டு போனா கிரிஸ் ஆகிடும்னு நான் அப்படியே வச்சுடுவேன்…” என்றபடியே வேலையை தொடர்ந்தவனுக்கு உறக்கம் வருவது போலிருந்தது
“சரிதான்…” என அலுத்தவள், “ஆளுங்கள கூப்பிட்டு செய்யறதுனா எனக்கு அந்த சைட் அப்படியே ஒரு புக் செல்ஃப்பும் ரெடி பண்ணி குடுத்துடுங்க… கூடவே சிஸ்டம் வைக்க ஒரு டேபிள் பிளஸ் சேர்…” என அடுக்கினாள்.
“அவ்வளவு தானா இல்ல வேற எதுவும் பிளான் இருக்கா…” என்றான் சிரிப்போடு நேசன்.
“அது நிறைய இருக்கு… இன்னைக்கே சொன்னா பயந்துப்பீங்க நீங்க…” என்றாள் கேலியாய் தென்றல்.
“நீ நாளைக்கு சொன்னாலும் பயப்பட தான் செய்வேன்… பரவாயில்ல நீ இப்பவே சொல்லு…” என்றான் அவன்.
“அது வெளிய இருக்க இடம் ப்ரீயா தானே இருக்கு… ஊஞ்சலோட ஒரு சிட்அவுட் மாதிரி ரெடி பண்ணிட்டு ஒரு கிளாஸ் ஹவுஸ் வச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சேன்… ஆனா உடனே எல்லாம் பண்ண வேண்டாம்…” என்றாள் பெருந்தன்மையாக தென்றல்.
“ம்ம்ம்கூம்… உடனே பண்ணறாங்க… ஆல்ரெடி என் பர்ஸ்க்கு பலமா வேட்டு வச்சுட்டு, இத வேற செய்யணுமான் இல்ல…” என கேலியாய் சொன்னவன், “இப்ப கையில இருந்த பணத்தை எல்லாம் இடத்துல போட்டுட்டேன் தென்றல்… உடனே வேற பெரிய கமிட்மெண்டும் குடுக்க முடியாது உனக்கு… கார் ஷோரூம் ஒப்பன் பண்ணதும் தான் மத்தத யோசிக்கணும்…” என்றான் விளையாட்டை கைவிட்டு, அவள் முதன் முதலில் ஒன்று கேட்டு முடியாது என்கிறோமே என்று வருத்தமாய் இருந்தது.
“நானும் உடனே பண்ணனும் சொல்லலையே… இப்படி ஒரு ஐடியா இருக்குனு சொன்னேன்…” என்றபடியே அவன் ஒதுக்கிய இடத்தில் தான் மடித்த துணிகளை அடுக்கி வைத்தாள்.
“நாளைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரமே கிளம்பலாமா..? இல்ல அம்மா மட்டும் விருந்து சமைக்கறேங்கற பேர்ல எல்லா வேலையும் இழுத்துப் போட்டு ஒத்த ஆளா பாத்துட்டு இருப்பாங்க…” என்றாள் தயக்கமாய்.
“போகலாமே… எத்தன மணிக்கு கிளம்பணும்…” என்றான் நேசன்.
“ஏழு மணிக்கு கிளம்புனா சரியா இருக்கும்னு நினைக்கறேன்… எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வேற எடுக்கணும்…” என்றாள் தென்றல்.
“சரிம்மா… காலையில சீக்கரமே கிளம்பிடலாம்…” என்றான் அவன்.
அவன் அடத்தை ஒதுக்கிக் கொடுக்க அடுத்த சில நிமிடங்களில் முடிந்தது வேலை. கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடியே, உறக்கம் சொக்கும் விழிகளுடன் சென்று படுத்துவிட்டான் நேசன். கட்டிலின் இன்னொரு விளிம்பில் படுத்தவள் கை நீட்டி கட்டிலை அளந்தாள்.
“என்ன பண்ணற நீ…” என்றான் நேசன் அவளின் செயலின் அர்த்தம் புரியாமல்.
“ஒன் ஆர்ம் டிஸ்டன்ஸ் இருக்கானு பாக்கறேன் புருஷரே…” என்றாள் பவ்வியமாய் அவள்.
“தென்றல்…” என அதட்டியவனுக்கு சிரிப்பு வர பார்த்தது.
“படுத்தறடி என்ன…” என்றான் அந்த சிரிப்பு வழியும் குரலோடு.
“யாரு நானு…” என்று அவனை முறைத்தாள் தென்றல்.
“பின்ன என்ன நானா..?” என்றான் அவன்.
“ஊரு உலகத்துலையே பேங்க் பேலன்ஸ மெயின்டெயின் பண்ண சொல்லற புருஷன கேள்வி பட்டிருக்கேன்… ஹவுஸ் ஹோல்ட்ட மெயிண்டெயின் பண்ண சொல்லற புருஷனா கேள்வி பட்டிருக்கேன்… ஏன் மாமியார மெயிண்டெயின் பண்ண சொல்லற புருஷன கூட கேள்வி பட்டிருக்கேன்… ஆனா பொண்டாட்டிய ஒன் ஆர்ம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ண சொல்லற புருஷர இங்க தான் பாக்கறேன்…” என நொடிப்பாய் நீட்டி முழக்கினாள் தென்றல்.
இனி வாழ்நாள் மொத்ததிற்கும் இதை சொல்லி காட்டியே அவனை ஒரு வழியாக்க போகிறாள் என புரிந்துப் போனது அவனுக்கு. ஏன்தான் அந்த நேரம் அதை சொன்னோம் என்றிருந்தது.
“இவ்வளவு பேசுவீயா நீ…” என பேச்சை மாற்ற பார்த்தான் அவன்.
“சின்ன வயசுல இருந்து நல்லவே பேச வரும் புருஷரே எனக்கு…” என்றாள் அழுத்தமாய். அவளே தொடர்ந்து, “ஒரு வேள நான் அம்பி கெட்டப்ல இருக்கப்ப மட்டும் பாத்துட்டு ரொம்ப அமைதி சாந்த சொரூபிணினு நினைச்சு வழுக்கி விழுந்துட்டீங்களோ..?” என்றாள் சந்தேகமாய்.
“அம்பியும் அந்நியனுமா மட்டுமே இருக்கீயே தவிர ரோமோவா மாற மாட்டேங்கற…” என நொடித்தவன், “தூக்கம் வரலையாடி உனக்கு…” என்றான் அலுப்பாய்.
“வரலையே…” என்றாள் உதடுட்டை சுழித்துக் கொண்டு அவள். சுழிந்த இதழ்களை தனது அதரங்களுக்குள் பொதிந்துக் கொள்ளும் எண்ணம் வந்தது அவனுக்கு.
“ஆனா… எனக்கு வருதே…” என்றான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நேசன்.
“வந்தா தூங்குங்க… நானென்ன உங்கள தூங்க விடாம கட்டிபிடிச்சு முத்தமா குடுத்துட்டு இருக்கேன்…” என்றாள் எள்ளலாய் தென்றல்.
“சும்மா இருடி ஏய்… மனுஷன் நிலம புரியாம…” என சிடுசிடுத்தவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டான்.
“ரொம்ப நேரமா சும்மா மட்டும் தான் பாஸ் இருக்கேன்…” என்றாள் நொடிப்பும் கேலியுமாய் அவள்.
“ஸ்ஸ்ஸ்… இவளோட…” என முணுமுணுத்தவன் திரும்பி குப்பற படுத்துக் கொண்டான்.
“புருஷரே…” என ஒரு விரலால் அவன் முதுகை சுரண்டினாள் அவள்.
அவனிடம் எந்த அசைவும் இல்லை என்றதும், “புருஷ்…” என்றபடியே மறுபடியும் சுரண்டினாள்.
அப்படியும் அசையாது இருக்கவும், “யோவ் புருஷா…” என பட்டென்று முதுகில் ஒன்று வைத்துவிட்டாள். அடித்துவிட்ட நொடி தான் எங்கே கோபித்துக் கொள்வானோ என தவிப்பாய் போனது.
“என்னடி பிரச்சனை இப்ப உனக்கு… மனுஷன நிம்மதியா தூங்க கூட விடாம…” என்றவன் எழுந்து அமர்ந்து விட்டான்.
“இல்ல… நேத்து மாதிரி தட்டிக் குடுத்து தாலாட்டு எதுவும் பாட மாட்டீங்களா..? நானும் தூங்கணும் இல்ல… அதுக்கு தான் கேக்கறேன்…” என்றாள் உள்ளடங்கிய தீவிர குரலில் தென்றல்.
அவளை முறைத்துப் பார்த்தான் நேசன். அவன் முகத்தை பார்க்காமல் திரும்பிக் கொண்டவளுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் போனது.
“என் பொறுமையை ரொம்ப சோதிச்சா… நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்ல தென்றல்… இப்பவே சொல்லிட்டேன்…” அழுத்தமாய் அமைதியாய் ஆழ்ந்த குரலில் சொன்னான் நேசன்.
“ஓ.கே… ஓ.கே… சில்… நான் எதுவும் பேசலை… நாம தூங்கலாம்… எனக்கு தூக்கம் வந்துடுச்சு…” என வேகமாய் திரும்பி படுத்தவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
பொங்கி வந்த சிரிப்புக்கு தடைப் போடவில்லை அவன். சரிந்து படுத்தவன் அவளை இழுத்து தன் கை அணைப்பிற்குள் வைத்தபடியே உச்சந்தலையில் அழுத்தமாய் அதரங்களை பதித்து, “ரொம்ப படுத்தறடி…” என்றான். வாயே திறக்கவில்லை அவள். மென்மையாய் தட்டிக் கொடுத்த படியே கண்களை மூடிக் கொண்டவனை நிம்மதியான உறக்கம் வந்து சரண் அடைந்திருந்தது. நேற்றைப் போல் இல்லாமல் அவன் இடையை சுற்றி ஒற்றை கரத்தை படரவிட்டு மென்மையாய் அணைத்தபடியே தென்றலும் உறங்கிப் போனாள்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.