நெஞ்சம் – 4

தமிழ் வெண்பா | 28 Nov 2025 | Share

நேரம் இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இரு சக்கர வாகனம் ஒன்றிற்குள் தலையை விட்டபடி தீவிரமாய் பழுதை சரி செய்து கொண்டிருந்தான் நேசன்‌. இல்லை, சரி செய்வதாய்  பாவணை செய்துக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த மற்ற அத்தனை ஊழியர்களும் கிளம்பி சென்றிருக்க, கைகளை கட்டியபடி நண்பனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

வீட்டிற்கு கிளம்பலாம் என்றும் சொல்லவில்லை, வேறு எதைப் பற்றியும் பேச்செடுக்கவில்லை. சலனமற்ற அழுத்த பார்வையுடன் அவன் நின்றிருக்க, நேசன் தான் வேலையில் கவனம் செலுத்த முடியாது நெளிந்தான்.

“பச்… இப்ப என்ன தான்டா வேணும் உனக்கு…” எரிச்சலும் சலிப்புமாய் வந்து விழுந்தது நேசனின் வார்த்தைகள்.

“ஏன் உனக்கு தெரியாதா..?”‌ என்றான் அலட்சியமாய் மாதவன்.

“நான் வேலைய முடிக்க லேட் ஆகும்… நீ வீட்டுக்கு கிளம்பு…” அழுத்தமும் அதிகாரமும் அதட்டலுமாய் ஒலித்தது நேசனின் குரல்.

“விடிஞ்சாலும் பரவாயில்ல… நான் இருந்து உன்ன கையோட கூட்டிட்டே போறேன்…” என்றான் அமைதியாய் மாதவன்.

“பாப்பாவும் பிள்ளைங்களும் தனியா இருப்பாங்க மாதவா…” பல்லை கடித்துக் கொண்டு வார்த்தைகளை துப்பினான் நேசன். தங்கையை சிறு வயதில் இருந்தே ‘பாப்பா’ என்றழைத்து தான் அவனுக்கு பழக்கம்.

“இருக்க மாட்டாங்க… மதியம் இங்க வரும் போதே விழிய ஊருக்கு போக சொல்லிட்டேன்… அடுத்து சனி, ஞாயிறு அகரனுக்கும் லீவு தானே… இரண்டு நாள் நாங்க எல்லாரும் அங்க தான்…” அழுத்தாய் சொன்ன நண்பனை, கொலைவெறியுடன் பார்த்து வைத்தான் நேசன்.

‘எல்லா பக்கமும் கேட் போட்டா… எப்படிடா டேய்…’ என தோன்ற, மனமெங்கும் ஒருவித சலிப்பு. அவர்களின் மீது கொண்ட பாசம் வார்த்தைகளில் கூட கடுமையை காட்ட விடவில்லை. அந்த இயலாமையே அவனை சுயகழிவிரக்கத்தில் ஆழ்த்தியது.

திருமணம் அவனின் தனிப்பட்ட விசயம். அதை முடிவு செய்ய அவனுக்கு உரிமை இல்லையா?  உறவும் சமூகமும் ஒரு மனிதனிடம் எதற்கு இத்தனை வலிந்து திருமணத்தை திணிக்கிறது. திருமண வாழ்வு இல்லையென்றால், ஒருவனின் வாழ்வு முழுமை அடைவதில்லையா? இல்லை பிறந்த பயனை தான் அடைவதில்லையா? இப்படியே அம்மா, கயல், மாதவன், அகரன், அவனின் பிரிய பூக்குட்டி என்று வாழ்நாள் மொத்தத்திற்கும் இருந்துவிட முடியாதா என்ன?

ஆண் அவனுக்கே இத்தனை நெருக்கடிகளும் அழுத்தமும் என்றால், பெண்ணாய் பிறந்திருந்தால்? நினைக்காமல் இருக்க முடியவில்லை. இங்கே பெரும்பான்மையான பெண்கள், திருமண சந்தையில் விற்கப்படுவதற்காகவே வளர்க்கபடுபவர்கள். பலி கொடுப்பதற்காகவே வளர்க்கப்படும் ஆடுகளைப் போல!

வளரந்து வரும் பெரும் நகரங்களில் வேண்டுமானால் சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெருபான்மை இன்னும் இப்படி தான். ‘இப்ப எல்லாம் படிச்ச பொண்ணா பாக்கறாங்க…’ என்ற ஆணின் எதிர்பார்ப்பில், தேவையில் தான் பெண்கல்வியின் வளர்ச்சியும் கூட.

தான் இல்லாது நண்பன் ஒரு அடிக் கூட நகர மாட்டான் என்பது புரிய, செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு எழுந்துக் கொண்டான் நேசன். இன்றில்லை என்றால் நாளை. எப்படியும் அவன் தப்பித்துக் கொள்ளவே முடியாத விசயம் இது.

“இரு சட்டைய மாத்திட்டு வரேன்…” என்றவன் மாதவனை கடந்து செல்லும் முன் ஒரு நொடி நின்று, ‘உனக்கும் கூட என்ன புரியலையே…’ என்ற வலியை கண்களாலேயே கடத்திவிட்டு கடந்திருந்தான். நேசன் விழிகள் தெரிந்த வேதனையில், அவனின் உள்ளமும் துடிக்க தான் செய்கிறது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா?

ரணம் பெரிதுதான். அதை தீண்டினால் வலிக்கும். அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா என்ன? சுத்தபடுத்தி மருந்திட்டு, ரணம் ஆற ஒரு வாய்ப்பாவது தர வேண்டுமே!

அடுத்த ஐந்து நிமிடத்தில் நேசன் உடை மாற்றி வந்திருக்க, “உன் பைக் வேண்டாம்… என்னோடதுலையே வீட்டுக்கு போய்டலாம்…” என்றபடியே அவனின் இருசக்கர வாகனத்தை மட்டும் இறக்கி நிறுத்தினான் மாதவன்.

முன்பக்கம் ஷோரூம் எப்பொழுதோ அடைக்கப்பட்டிருக்க, மெக்கனிக் ஷெட்டின் ஷட்டரை இழுத்து மூடி பூட்டினான் நேசன். மாதவன் வாகனத்தை இயக்க, அமைதியாய் பின்னால் தொற்றிக் கொண்டான்.

நகரினை கடைவீதிகளை தாண்டும் வரையிலும் இன்னுமே வாகனங்களின் அலறல் சத்தமும், மனிதர்களின் நடமாட்டமும் இருக்க தான் செய்தது. இரவு முழுக்க விழித்து கிடக்கும் கூட்டம் பெருகிவிட்ட காலமிது. அந்த பரபரப்பை நெரிச்சலை கடந்து, புறநகர் சாலையில் வாகனம் திரும்ப ஏதோ ஒரு இனம்புரியாத அமைதி.

கொஞ்சம் கொஞ்சமாய் வாகனம் வேகமெடுக்க, சரியாய் அரைமணி நேர பயணத்தில் அவர்களின் கிராம சாலையை தொட்டுவிட்டது. இருபுறமும் வயல்வெளிகள். அறுவடைக்கு தாயாரான நெற்பயிற்கள் நாணங்கொண்ட நங்கையாய் நிலம் நோக்கி தலை கவிழ்த்திருந்தது. காற்றோடு சேர்ந்த பச்சை நெல்லின் வாசம்.

அந்த ஈரகாற்றும் வாசமும் நேசனை எங்கையோ கட்டி இழுத்துக் கொண்டு சென்றது. இதோ இதே சாலையில் தான் அவனும் மாதவனும் கல்லூரி காலங்களில் இருசக்கர வாகனங்களில் கிட்டதட்ட பறந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அவனிடம் சொந்தமாய் வண்டி கிடையாது. எப்பொழுதுமே மாதவனின் பின்னால் தான் தொற்றிக் கொள்வான்.

இதோ கிட்டத்தட்ட  நாற்பத்தைந்து நிமிட இந்த பயணத்தில் மாதவனும் அவனும் ஒரு வார்த்தை கூட பேசி இருக்கவில்லை. ஆனால் அப்பொழுதெல்லாம் ஒரு நொடி கூட வாய் மூடி அமைதியாய் இருந்ததாய் நினைவில்லை. துள்ளலும் கும்மாளமுமாய் கழிந்த அந்த நாட்கள் எல்லாம் ஏதோ முன் ஜென்ம நினைவுப் போல தோன்றியது அவனுக்கு.

வீட்டுன் உள்ளே நுழைந்து போர்டிக்கோவில் மாதவன் வண்டியை நிறுத்தவும், எங்கெங்கோ அலைப் பாய்ந்துக் கொண்டிருத்த அவனின் எண்ணங்கள் எல்லாம் சட்டென்று அறுபட்டு போனது.

ஊருக்கு வெளியே, சுற்றிலும் வயல்கள் சூழ தனித்து கம்பீரமாய் நின்றது அந்த வீடு. புதுப் பெண்ணிற்கான மினுமினுப்பு அதனிடத்தில்.  எப்பொழுதும் போல, இப்பொழுதும் அந்த வீட்டை பார்த்த நொடி நெஞ்சை முட்டும் அளவிற்கு பெருமிதம் நேசனுக்கு. அவன் வீடு அது! முழுக்க முழுக்க அவனின் சம்பாத்தியத்தில் கட்டியது! அந்த எண்ணம் என்றுமே அலாதி தான்.

இவர்களின் வரவுக்காகவே கேட்டை திறந்து வைத்து காத்துக் கொண்டிருந்தாள் கயல். ‘இது தான் வரும் நேரமா..?’ என பார்வையே கணவனின் மீது கத்தி வீசிக் கொண்டிருநத்து. பின்னே எட்டு மணிக்கெல்லாம் வீட்டிலிருப்போம் என்றவன், பதினொரு மணிக்கு வந்து நின்றால் முறைக்க தானே செய்வாள்.

‘நானில்லை… உன் அண்ணன் தான்…’ என்பதைப் போல நேசனை கண் காட்டினான் மாதவன்.

“சாப்பாடு எடுத்து வை விழி… மத்ததை அப்பறம் பேசிக்கலாம்…” எங்கே உள்ளே நுழையும் முன்பு ஆரம்பித்து விடுவாளோ என்று தான் முந்திக் கொண்டான் மாதவன். வார்த்தையாடமல் அவள் உள்ளே சென்றுவிட்டாலும் கூட, பார்வை இன்னும் கத்தி வீசிக் கொண்டு தான் இருந்தது.

உள்ளே நுழையும் முன்னமே ஆர்வமாய் நேசனின் கண்கள் அலைப்பாய, “ஆமா… தர்ம மகாராஜா நடு ஜாமம் வருவாருனு புள்ளைங்க ரெண்டும் முழிச்சு கிடக்கும் பாரு…” என்றார் நொடிப்பாய் விசாலம், அவனின் அன்னை. சட்டென்று ஒரு ஏமாற்றம், இனம் புரியாத வெறுமை அவனை சூழ்ந்துக் கொண்டது.

அவனின் நொடி நேர வாட்டம் கூட பொறுக்காது, “நீங்க வருவீங்கனு இவ்வளவு நேரம் பூக்குட்டி இங்க தான் அடமா உக்காந்துட்டு இருந்தா ண்ணா… உக்காந்துட்டே தூங்கிட்டாளா… இப்ப தான் தூக்கிக் கொண்டுப் போய் படுக்க வச்சேன்… நீங்க சாப்பிடுங்க வாங்க…” என சமாதானமாய் சொல்லி இருந்தாள் கயல்.

இங்கு வரும் போதெல்லாம் பூக்குட்டிக்கு உறக்கம் மாமனோடு தான். அது என்னவோ அகரனைவிட பூக்குட்டியிடம் ஒரு பிடி பாசமும் ஒட்டுதலும் அதிகம் அவனுக்கு. அது சிறு வயது தங்கையை அப்படியே அவள் உரித்து வைத்திருப்பதால் கூட இருக்கலாம். என்னென்னவோ நினைத்து நேரத்தை கடத்தி அந்த சுகத்தை இழந்து விட்டோமோ என்று தோன்றியது நேசனுக்கு.

“இதுக்கு தான் ஒரு கல்யாணத்த பண்ணுனு தலபாட அடிச்சுக்கறேன்… உனக்குனு ஒரு புள்ள இருந்தா எதுக்கு இப்படி ஊரான் வீட்டு புள்ளைக்கு ஏங்கி கிடக்கணும்…” என்றார் நொடித்துக் கொண்டு விசாலம்.

“அம்மா…” என கண்டனமாய் ஒலித்தவன் குரல், ஒரு நொடி மாதவனில் தான் தொட்டு மீண்டது. நண்பனே என்றாலும், இதுப் போன்ற பேச்சுகளை தவறாக எடுத்துக் கொண்டு விடுவானோ என்ற எண்ணம் இல்லாமல் இல்லை.

ஆனால், அவன் அதையெல்லாம் கண்டுக் கொண்டதுப் போல தெரியவில்லை. அவர்களின் அறைப் பக்கம் நகர்ந்துவிட்டான். இங்கே அவர்கள் வந்தால் தங்குவதற்கென்று எப்பொழுதும் ஒரு தனி அறை உண்டு. அவர்கள் முன்னால் இருந்த வீட்டிலுமே அது உண்டு.

“நீங்க சாப்பிட்டு மாத்திர போட்டீங்களா… இன்னும் தூங்காம என்ன பண்ணறீங்க…” என வினவியபடியே சாப்பிட அமர்ந்தான் நேசன். இரத்த அழுத்தமும் சக்கரை நோயும் இருந்தது அவருக்கு.

“வீட்டுல ஒரு நோயாளிப் பொம்பள நமக்காக காத்துட்டு இருப்பாளேங்கற கூறு வேணும் மனுஷனுக்கு…” என்றார் நீட்டி முழக்கி.

“அதான் கயல் இருக்காளேம்மா… நீங்க படுக்க வேண்டியது தானே…” என்று அவன் வினவும் போதே, மாதவனும் சாப்பிட வந்திருந்தான்.

“என்ன ரெண்டு நாளு இருப்பாளா..? அதுக்கப்புறம்… புள்ள புருஷனு அவ குடும்பத்த பாக்க கிளம்பிடுவா… அதுக்கு அப்பறம் நான் இல்ல கிடந்து அவியணும்…”

“உங்கள யாரு அவிய சொன்னா… வெள்ளன சாப்பாட எடுத்து வச்சுட்டு போய் படுக்க தான… ஏன் எடுத்து போட்டு சாப்பிட தெரியாதா எனக்கு..?” என்றான் எரிச்சலாய்‌ நேசன்.

“எப்படி பேசறான் பாருடி உங்கண்ணன்… ஒரு நோயாளி பொம்பள… ஒத்தையில கிடந்து அல்லாடுறேனேனு கொஞ்சமாச்சும் எண்ணமிருக்கா அவனுக்கு… நாளைக்கே எனக்கு ஒன்னு கடக்க ஒன்னு ஆனா யாரு பாப்பா… இரண்டு நாளைக்கு முன்னாடி கிறுகிறுனு தலை சுத்தி மயக்கமா வந்துடுச்சு… ஏன்னு கேக்க ஒரு நாதி இருக்கா… அப்படியே மயங்கி விழுந்தாலும் அள்ளி தூக்கி நல்லது பொல்லது பாக்க தான் இந்த வீட்டுல ஒரு ஆளு இருக்கா… இதுக்கு தான் இவன ஒரு கல்யாணத்த பண்ணுனு தலபாடா அடிச்சுக்கறேன்…” கண்களில் நீர் தேங்க, தொண்டைக்குழி அடைக்க சொல்லி இருந்தார் விசாலம்.

“ஆமாம்… என்ன கட்டிட்டு வரவ உனக்கு பண்டூழியம் பாக்க தான் வர பாரு…” என்றான் நக்கலாய் நேசன்.

“இப்படி நக்கலா பேசி பேசியே எல்லார் வாயையும் அடைச்சுடலானு நினைக்காதடா… வரவ எனக்கு பண்டூழியம் பண்ணறாளோ இல்லையோ… உனக்கு பண்ணுவ இல்ல… அது போதும் எனக்கு… நாளபின்ன எனக்கு ஏதாவது ஆச்சுனா கூட நிம்மதியா போய் சேருவேன்…” என்றார் அவர்.

அம்மா பிள்ளைக்கு இடையேயான வார்த்தையாடலில் வெறும் வேடிக்கையாளனாய் மட்டும் அமர்ந்திருந்தான் மாதவன்.

“உன் வயசுல இருக்கவனுக்கு எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு போற புள்ளைங்க இருக்கு… ஏன் மாப்பிள்ளைக்கும் உன் வயசுதானே… அகரனே இந்த வருஷம் ஒன்னாவதுல இருந்து இரண்டாவது போய்டுவான்… நீ எப்ப தான்டா கல்யாணம் பண்ணலானு இருக்க… அகரனுக்கு ஒனக்கும் ஒரே நேரத்துல பொண்ணு தேட வச்சுடாத எங்கள…”  என்றார் தொடர்ந்து.

“நீங்க எப்படி கேட்டாலும் எனக்கு கல்யாணம் வேண்டாம்… அவ்வளவு தான்… தேவையில்லாம ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுத்துடாதீங்க… பெண் பாவம் பொல்லாதது…” என்றான் அதையும் கூட வேடிக்கை போல. இது வாடிக்கையும் கூட தானே!

“இல்ல… இன்னும் எத்தனை நாளைக்கு இதுனு கேக்கறேன்… நான் காலு கை நடமாட்டத்தோட இருக்கற வரைக்கும் தானே… அதுக்கு அப்பறம்… நீ மேலுக்கு முடியலனு படுத்தா தண்ணீ சாச்சு குடுக்க கூட நாதி இருக்காது பாத்துக்க…” என்றார் காட்டமாய் விசாலம். இம்முறை சாப்பிடுவதில் மட்டும் கவனமாய் இருந்தான் நேசன். பேசிக் கொண்டே இருந்தால் நீளுமே தவிர, இந்த வாக்குவாதம் விடிந்தாலும் முடியாது.

“இந்த தடவ நான் முடிவு பண்ணிட்டேன்… நீ என்ன சொன்னாலும் சரி… இந்த கல்யாணம் நடக்கணும்… அவ்வளவு தான்…” என்றார் தீர்மானமாய் விசாலம்.

“நடக்காது… தேவையில்லாத ஆசைய வளத்துக்காதீங்க…” என்றான் அழுத்தாய் நேசன்.

“எப்படி நடக்காதுனு நானும் பாக்கறேன்… நான் உயிரோட இருக்கணும்னா நீ இந்த கல்யாணத்த பண்ணி தான் ஆகணும்…”

“சாகுறதுனு முடிவு பண்ணிட்டா ரெண்டு பேரும் சேந்தே சாவோம்… எப்படி சாகறதுனு யோசிச்சு வச்சுட்டீங்களா… தூக்கு கயிறா பூச்சு மருந்தானு சொல்லிட்டீங்கனா நாளைக்கு டவுன்ல இருந்து வரும் போது வாங்கிட்டு வந்துடுவேன்…” என்றான் அசராமல்.

“எப்படி பேசறான் பாருடி கயல்… பெத்தவ சாகறேனு சொல்லறேன்… கொஞ்சமாச்சும் துடிக்குதா இந்த பயலுக்கு‌..? அந்த ________ சிறுக்கி தான் போய் தொலைஞ்சுட்டா இல்ல… அவள மறந்துட்டு இவனுக்கான வாழ்க்கைய பாத்தா தான் என்ன..?” என்று ஆதங்கமாய் சொன்னவர், இன்னும் செவி கூசும் வார்த்தைகளில் வசைபாடுதலை தொடர, நேசனுக்கு முன் “அத்தை…” என சத்தமிட்டு அழைத்து அவரை நிறுத்தி இருந்தான் மாதவன். அடுத்த நொடி நேசன் அங்கில்லை. சாப்பாட்டின் பாதியிலேயே எழுந்துக் கொண்டவன், கையை கூட கழுவாது விறுவிறுவென மாடி ஏறிவிட்டான்.

                                 ‌   நேசம் ஒளிரும்…

    No comments yet.