நெஞ்சம் 39:

தமிழ் வெண்பா | 15 Mar 2026 | Share

நெஞ்சம் 39:

வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பாவமாய் தழுவிச் சென்றது நேசனின் பார்வை. அந்த வாண்டுகளின் அழிச்சாட்டியத்தை சமாளிக்கவே முடியாமல் திணறலாய் அவர்களை பார்த்தான் அவன். யாரும் ஆபத்பாந்தவனாய் வந்து அவனை காப்பது போல் தெரியவில்லை. கொஞ்சம் விட்டாலும் கூட குட்டிகள் இருவரும் முடியை பிடித்துக் கொண்டு கட்டி உருள தயாராய் இருந்தனர்.

இப்படியெல்லாம் அடம் பிடிப்பவளே இல்லை பூக்குட்டி. அடம் பிடிக்க வேண்டிய அவசியமும் இதுவரை இருந்ததில்லை. அவளின் அடமெல்லாம் தந்தை தாயிடம் மட்டும் தான். மாமன் விசயத்தில் சகலமும் அவனுக்கு அவள் தான். போட்டிக்கு ஆளே இல்லை. இப்போது புதிதாய் போட்டிக்கு முளைத்தவனை அத்தனை பொறாமையோடு பார்த்து வைத்தாள் அவள்.

வேந்தனும் கூட இப்படி மல்லுக் கட்டிக் கொண்டு நிற்பவன் அல்ல. அப்படி மல்லுக்கட்ட இதுவரை ஆளும் இருந்ததில்லை என்பது வேறு கதை. அவனுக்கு புதிதாய் கிடைத்த சொந்ததுடன் ஒட்டி உறவாட பிடித்தது. அவளோடு விளையாட பிடித்தது. என் தந்தை என உரிமை போராட்டம் நடத்த பிடித்தது. அதுவும் அவளை வெறுப்பேற்றி அழ வைக்க அதிகத்திற்கும் அதிகம் பிடித்தது.

அண்ணன்காரனின் திண்டாட்டத்தை காண சகிக்காமல் கயல் தான் அவனுக்கு உதவி கரம் நீட்டினாள்.

“பூக்குட்டி…” என்றாள் அதட்டலாய் மகளிடம் வந்து நின்று. அந்த குரலிலேயே எங்கே அடிக்க போகிறாளோ என பயந்து உதடு பிதுக்கி வராத கண்ணீரை இமையை இறுக மூடி பிழிந்து விட்டது அந்த குட்டி.

“பாப்பா…” என்றான் அதட்டலாய் நேசன்.

“ச்சூ… சும்மா இருண்ணா நீ…” என்றவள், “லாஸ்ட் மந்த் அப்பா நாமல்லாம் எங்க போனோம்…” என்றாள் அதட்டலாய்.

“பீச்சுக்கு…” என்றாள் குரலே மேலெழும்பாமல் பூக்குட்டி.

“அப்போ அகரன விட்டுட்டுட்டு போனோமா..?” என்றாள் அதட்டலாய். இல்லை என மறுப்பாய் தலையசைத்தாள் சின்னவள்.

“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அகரன பிடிக்குங்கறதால பூக்குட்டிய பிடிக்காதா..?” என்றாள் அழுத்தமாய்.

“இல்ல… பிடிக்கும்…” என்றாள் உடனே சின்னவள்.

“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்படி அகரனோ அதே மாதிரி தான் மாமாவுக்கு வேந்தன்… அவன் நம்மளோட பேமிலி… அவன தனியா விட்டுட்டு எங்கையும் போக கூடாது… புரியுதா..?” என்றாள் மீண்டும் அதட்டலாய்.

“சரி… விட்டுட்டு போ வேணாம்…” என உடனே ஒத்துக் கொண்டவள், கொஞ்சம் யோசித்து, “நான் ரொம்ப பாசமா… இல்ல அவனா..?” என அடுத்த பஞ்சாயத்துக்கு பிள்ளையார்சுழி போட்டாள் அவள்.

“சரி… உனக்கு மாமா ரொம்ப பிடிக்குமா..? இல்ல அப்பா ரொம்ப பிடிக்குமா..?” என்றாள் கயல்.

அவள் கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று “மாமா…” என்றாள். அடுத்து வர போகிற ஆப்பை உணராமல், நண்பனை மிதப்பாய் பார்த்தான் நேசன். அவன் இது எதையும் கண்டுக் கொண்டதைப் போலவே தெரியவில்லை.

அவளின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென கயலுக்கே தெரியவில்லை. அவள் அமைதியாக இருக்கவும், நேசனின் தாடைப் பற்றி தன்னை பார்க்க செய்தவள், “சொல்லு மாமா… நான் ரொம்ப பாசமா… இல்ல அவனா..?” என்றாள் உதடு துடிக்க. அவன் வேந்தன் என்று சொன்னால், அந்த நொடியே அழுதுவிட தயாராய் இருந்தாள் அவள்.

நேசன் பதில் சொல்ல தெரியாமல் விழித்தான். ‘மாட்டுனீயாடா என்‌ பம்பரகட்ட மண்டையா… அவ உன்ன தான் பிடிக்கும்னதும் உள்ளுக்குள்ள எவரெஸ்ட் மலைய தூக்கி வச்ச மாதிரி குளுகுளுனு இருந்து இருக்குமே… இப்படி எத்தன தடவ சிக்கி சின்னா பின்னமாகி இருப்பேன்… இப்ப நீயும் மாட்டிட்டு அனுபவி…’ என குதுகலமானான் மாதவன்.

அவன் அமைதியாய் இருக்கவும், “ப்பா… சொல்லுப்பா… நான் ரொம்ப பாசமா..? இல்ல அவளா..?” என்றான் இதுவரை அமைதியாய் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேந்தனும் தன் பங்கிற்கு.

இருவரும் மாற்றி மாற்றி அதையே கேட்க, “ஸ்ஸ்ஸ்… அப்பா… முடியலடா சாமி… பசி காதடைக்குது எனக்கு… நீங்க ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டு தெம்பா வந்து பஞ்சாயத்து வைக்கறீங்க… நான் என்ன அப்படியா..?” என இருவரையும் இறக்கிவிட்டு எழுந்து சாப்பிட போய்விட்டான் அவன்.

இப்போது இரண்டும் ஒன்றாய் சேர்ந்துக் கொண்டு அவனை முறைத்து வைத்தது. மறந்துக் கூட அந்த பக்கம் முகத்தை திருப்பவில்லையே அவன். அவனின் முழு கவனமும் தட்டில் மட்டும் தான் இருந்தது.

மௌன சிரிப்போடு அவன் தட்டில் இட்லிகளை வைத்தாள் தென்றல். நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்த்தான் நேசன்.

“ம்ம்… என்ன முறைப்பு…” என்றாள் சின்ன குரலில் அதட்டலாய் தென்றல்.

“ஏன்டி… புருஷன்காரன் சமாளிக்க முடியாம திண்டாடுறானே… கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோம்னு இல்லாம… சமாளிங்கனு நக்கலா பண்ணிட்டு போற…” என்றான் பல்லை கடித்து.

“ஹலோ மிஸ்டர் புருஷர்… சும்மா குடும்பஸ்தனாக ஆசைப்பட்டா மட்டும் போதாது… இரண்டு புள்ள பெத்தா டெஸ்லி இதே பஞ்சாயத்து தான்… இப்பவே சமாளிச்சு பழகுங்க… அப்பா போஸ்டிங்க சும்மா தூக்கி குடுத்துடுவாங்களா உங்களுக்கு..?” என நொடித்துக் கொண்டு மீண்டும் சமையலறைக்குள் போய்விட்டாள் அவள்.

“அம்மாவா பொண்டாட்டியாங்கற பஞ்சாயத்த கூட தீத்து வச்சுடலாம்… ஆனா இந்த இரண்டு புள்ள பஞ்சாயத்த தீக்கவே முடியாது மச்சான்…” என்றான் நக்கலாய் நமட்டு சிரிப்போடு மாதவன் அவன் பக்கம் சாய்ந்து.

“அப்ப என்ன தான்டா பண்ணறது…” என்றான் பாவமாய் நேசன்.

“இப்ப என்ன பண்ணீயோ அதான்… வேற என்னத்தையாவது சொல்லி அதுங்கள கன்ஃப்யூஸ் பண்ணி கேட்ட கேள்வியையே மறக்க வச்சுட்டு நம்ம எஸ்ஸாகிடணும்…” என்றான் அனுபவஸ்தனாய் மாதவன்.

“அப்போ அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில சண்டை வந்தா…” என தனது அடுத்த சந்தேகத்தை கேட்டான் நேசன்.

“கடலையே இல்லையாம்…” என நக்கலாய் சொன்னவன், “வெல்கம் டூ தி கிரேட் பேமிலி மேன் அசோசியேஷன்…” என்றான் பாவனையாய்.

அனைவருக்கும் பறிமாறி அவர்கள் உண்டு எழுந்ததும் கயலும் தென்றலும் இறுதியாய் சாப்பிட அமர்ந்தனர்.

கயலின் தட்டில் இட்டிலியை வைத்தபடியே, “புருஷனா எப்படி இருக்கணும்னு இப்ப என்ன பாத்து காத்துக்க சொல்லுடி உங்க நொண்ணன…” என்றான் நொடிப்பாய் மாதவன்.

அவள் அவனை முறைத்தபடி தென்றலை சங்கடமாய் பார்க்க, மலர்ந்து புன்னகைத்தாள் அவள்.  நேசனுக்கும் ஆசையாய் தான் இருந்தது. அவளை மடியில் அமர்த்தி ஊட்டி விட வேண்டும் என்று கூட அவா எழுந்தது. ஆனால், அத்தனை பேருக்கும் முன்னே செய்ய, புதிதாய் கூச்சம் வந்தது தடுத்தது. அழுந்த தலையை கோதியபடியே, கைபேசியில் யாருக்கோ அழைப்பதைப் போன்ற பாவனையோடு வெளியே சென்றுவிட்டான் அவன்.

“இதெல்லாம் சும்மா விட கூடாதும்மா… இப்பவே நாலு தட்டு தட்டி அதட்டி வச்சா தான் நாளைக்கு பொண்டாட்டி பேச்ச கேட்டு அடங்கி இருப்பானுங்க…” என்றபடியே தென்றலின் தட்டில் சாம்பாரை ஊற்றினான் மாதவன்.

“இப்படி தான் தினமும் உங்கள ரூம்குள்ள பாசமா நாலு தட்டு தட்டி அடக்கி வைக்கறாங்களா அண்ணி…” என்றாள் நமட்டு சிரிப்போடு தென்றல்.

“எஸ்… டெபெனட்லி… டெபெனட்லி…” என்றான் அவார்ட் வாங்கியதைப் போல பெருமிதத்தோடு மாதவன்.

“ச்சூ… சும்மா இருங்க…” என்றாள் அவன் தோளில் தட்டி கயல் வெட்கத்துடன்.

“சொன்னேன்ல…” என்றான் பொங்கிய சிரிப்போடு மாதவன்.

அவர்களுக்கு பக்கத்திலேயே இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன், அவர்களுக்கே பறிமாறிய படியே கலகலத்துக் கொண்டிருந்தான். மாதவன் கயலை வாருவதும், அவள் சிணுங்கி சிலிர்த்து பதிலுக்கு அவனை வாருவதும் என இதெல்லாம் தென்றலுக்கு புது அனுபவங்கள்.

ஆசையும் ஆதுரமுமாய் அவர்களை பார்த்தவளுக்கு தாங்களும் இப்படியே இருக்க வேண்டுமென்ற ஏக்கம் வந்தது.

பெண்கள் இருவரும் உண்டு முடித்து பிள்ளைகளை பார்க்க, அகரன், வேந்தன், பூக்குட்டி என மூவருமாய் சேர்ந்து அமர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். சற்று முன்பு முகத்தை தூக்கிக் கொண்டு சண்டை பிடித்தவர்கள் இவர்கள் தானென்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது.

பிள்ளைகள் மூவருக்குமாய் பாலை காய்ச்சி எடுத்துக் கொண்டு போனார் விசாலம். அவர் எதற்காகவும் தென்றலை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. நேற்று ஒரு நாள் அவள் வேந்தனுக்கு என்ன கொடுக்கிறாள் என பார்த்துக் கொண்டதோடு சரி. இன்றைக்கு நேரம் தவறாமல் அவளை எதிர்பார்க்காமல் அதை அவரே கொடுக்கவும் செய்தார்.

மற்றவர்களிடம் இல்லாத கலக்கமும் பயமும் அவரிடம் தென்றலுக்கு அதிகமாகவே இருந்தது. என்ன இருந்தாலும் வேந்தனை ஏற்பாரா? வேறுபாடு காட்டாமல் இருப்பாரா என்ற எண்ணம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அவளின் அன்னையே வேந்தனை இதுநாள் வரை வேண்டாத பிள்ளையாய் தானே நடத்தினார். அப்படியிருக்க விசாலத்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று பெருங்கவலையாய் இருந்தது. இப்போதும் முழு மனதாய் வேந்தனை அவர் ஏற்றுக் கொண்டார் என்று எண்ண முடியவில்லை. ஆனால், எந்த இடத்திலும் பாரபட்சமாகவோ அவன் மனது காயம் படும்படியோ நடந்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

அவரின் குரலே எப்போதும் அதட்டல் தோணியில் தான் ஒலித்தது. அன்பை கூட அதட்டலாய் தான் சொல்ல தெரிந்தது அவருக்கு. வேந்தன் என்றில்லை எந்த குழந்தையிடமும் அவரால் பாரபட்சமாக நடந்துக் கொள்ள முடியாது என்பதை இந்த இரண்டு நாட்களிலேயே கண்டுக் கொண்டாள் அவள். ஒரு மாதிரி மனம் நிறைந்து எந்த சலனமும் இல்லாது அமைதியாய் இருந்தது.

அடுப்படியை ஒதுக்கிவிட்டு வந்தவள், “வேந்தா… டைம் ஆச்சு… விளையாடுனது போதும்… வா தூங்கலாம்…” என்று அழைத்தாள் மகனை.

அவன் மற்ற இருவரையும் பார்த்துவிட்டு பரிதாபமாக அன்னையை பார்த்தான். “ம்மா… ப்ளீஸ்ம்மா… நான் இன்னைக்கு ஒருநாள் அகரனோட தூங்கட்டுமா..? நாளைக்கு அவங்க எல்லாம் ஊருக்கு போய்டுவாங்களாம்…” என்றான் ஆசையும் ஏக்கமுமாய்.

அவள் அப்படியா என்பதை போல கயலைப் பார்க்க, “ஆமான் அண்ணி… அங்க எல்லாம் அப்படியே கிடக்கும்… ஷோ ரூம் போய் வேற நாலு நாள் ஆகுது… அதான்…” என்றாள் கயல்.

“நீங்க குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு வர வரைக்கும் இங்கேயே இருப்பீங்கனு நினைச்சேன்…” என்றாள் ஏமாற்றமாய் தென்றல்.

“அய்யோ அண்ணி… நாளைக்கு ஈவினிங் போய்ட்டு மறுநாள் காலையில வந்திடுவோம்…” என்றாள் சிரிப்போடு கயல்.

அப்படியும் அவள் யோசனையாய் பிள்ளைகளைப் பார்க்க, “ஒருநாள் தானே அண்ணி..‌. வேந்தன் எங்க கூட தூங்கட்டுமே…” என்றாள் கயல்.

“ஆமான் அத்தை… ப்ளீஸ்…” என அவளின் காலைக் கட்டிக் கொண்டு கண்களை சுறுக்கி கெஞ்சலாய் கேட்டது பூக்குட்டியே தான்.

“ம்மா… ப்ளீஸ்ம்மா…” என்றான் வேந்தனும். அகரனும் அதையே கேட்க, “வேந்தா ரொம்ப நேரம் முழிச்சு இருக்க கூடாது… அத்த மாமாவ டிஸ்டர்ப் பண்ண கூடாது… பூக்குட்டியோட சண்டை போட கூடாது…” என நிபந்தனைகளை அடுக்கினாள் பெரியவள். எல்லாவற்றுக்கும் வேக வேகமாய் மூன்று பிள்ளைகளும் தலையாட்டினார்கள்.

“இடையில எழுந்து என்ன தேடூனா கூட்டிட்டு வந்துடுங்கண்ணி…” என்றாள் அப்படியும் கயலிடம்.

“கண்டிப்பா…” என்றவள், “என்ன பட்டூஸ்… அத்த உங்களுக்கு கதை சொல்லட்டுமா…” என்றாள் வேந்தனை தூக்கி கன்னத்தித் முத்தம் பதித்தபடியே கயல்.

“அம்மா… எனக்கு…” என்றாள் பூக்குட்டி.

“உங்களுக்கும் தான்…” என வேந்தனை இறக்கி விட்டவள், “ஓடுங்க… ஓடுங்க… ரூம்ல போய் எல்லாரும் தூங்க ரெடி ஆகுங்க… நான் வந்து கதை சொல்லுவேன்…” என்றாள் அவள்.

யார் முதலில் படுக்கைக்கு செல்கிறார்கள் என்ற போட்டியோடு மூன்று பேரும் சிட்டாய் பறந்திருந்தார்கள். செல்லும் பிள்ளைகளையே வாஞ்சையோடு பார்த்து நின்றனர் பெண்கள் இருவரும்.

“நான் பாத்துக்கறேன் அண்ணி… நீங்க கவலைப் படாதீங்க… நேத்து கூட பிள்ளை எங்களோட சமாத்தா தான் தூங்கினான்…” என்றாள் கயல்.

“சரி அண்ணி… பாத்துக்கோங்க…” என்றவள் சின்ன தலையசைப்போடு மாடி ஏறிவிட்டாள்.

                        நேசம் ஒளிரும்…

    No comments yet.