நெஞ்சம் 38:

தமிழ் வெண்பா | 14 Mar 2026 | Share

நெஞ்சம் 38:

இதழ்களை நனைத்த முத்தம் கன்னத்திற்கு பாய்ந்து, கழுத்து வளைவில் மையம் கொண்டது. அவளில் புதைகிறவன் போல அணைப்பின் இறுக்கத்தை கூட்டி அவளில் சரிந்தான் நேசன். ஊன்றி நிற்க முடியாமல் தடுமாறி அவன் தோள்களில் அழுத்தமாய் கரம் பதித்தாள் அவள்.

“நேசன்… ப்ளீஸ்…” மிக மெல்லிய சத்ததில் அவன் காதருகே கிசுகிசுப்பாய் ஒலித்தது அவள் குரல்.

“தென்றல்… ப்ளீஸ்…” அவளைப் போலவே கிறங்கி கிசுகிசுப்பாய் ஆழ்ந்து ஒலித்தது நேசனின் குரலும்.

என்ன எதிர்வினையாற்றுவது என தெரியாது நின்றவளின் தேகமெங்கும் மெல்லிய நடுக்கமும் கூச்சமும் சேர்ந்து இழையோடியது. மயிர்கால்களெல்லாம் கூச்செறிந்தது. அவளின் நுண்ணுர்வுகள் எல்லாம் விழித்துக் கொண்டு, அவனை தள்ளி நிறுத்த சொல்லி அறிவுறுத்தியது.

“என்னை என்ன பண்ணற தென்றல் நீ…” என்றபடியே இன்னும் அவளுள் ஆழ புதைத்தான் அவன். அவனின் விரல்கள் அவளின் மெனிங்யெங்கும் அத்துமீறி வலம்வர தொடங்கிற்று.

அவன் அவனாய் இல்லை. தாபமும் மோகமும் அவனை மூச்சடைக்க செய்திருந்தது. எல்லாம் மறந்து அவன் கரங்களுக்குள் அடங்கி நின்ற பெண் மட்டுமே அவன் ஐம்புலன்களையும் நிறைத்தாள்.

அவனின் பின்னங்கழுத்தில் உள்ளங்கையை பதித்து சிகைக்குள் விரல் நுழைத்து வலிக்க பிடித்திழுத்தாள் அவள்.

“ஸ்ஸ்ஸ்… வலிக்குதுடி…” என்றபடியே விலகி நின்றான் அவன். அவனை பிணைத்திருந்த மோகவலை அறுந்ததில் துளி எரிச்சல் கூட மூண்டது.

“நல்லா வலிக்கட்டும்…” என்றாள் அழுத்தமாய் அவள்.

அவளின் முகம் பார்க்காது திரும்பி, வலித்த பின்னதலையை அழுத்தமாய் நீவியபடியே ஆழ மூச்செடுத்தான் அவன்.

“டைம் தரேன்… டைம் தரேனு சொல்லிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க‌…” என்றாள் அதட்டலாய் அவள்.

“அதான்… குடுத்தேனே… நேத்து முழுக்க…” என்றான் நீட்டு முழக்கி பொங்கிய சிரிப்பை உதட்டுக்குள் மென்று விழுங்கியபடியே அவன்.

அவனின் கூற்றில் வாயை பிளந்தவள், “நீங்க ரொம்ப நல்லவருனு நம்பி…” என அங்கலாய்ப்பாய் ஆரம்பித்தாள்.

“ஏன்… இப்ப மட்டும் அந்த நல்லவனுக்கு என்னவாம்… நான் பாட்டுக்கு சிவசிவனு தானே இருந்தேன்… நீ தான் என்ன கிஸ் பண்ணற மாதிரி பாத்த… இப்பவும் பாக்கத்துல வந்து பிச்சு தின்னற மாதிரி பாத்த… இன்னைக்கு மதியத்துல இருந்து நீ தான் இந்த குட்டி கண்ண வச்சு என்ன‌ மயக்கிட்டே இருக்க…” என்று அதற்கு அவளையே குற்றம் சாட்டினான் அவன்.

“ஏன் சொல்ல மாட்டீங்க…” என நொடித்தாள் அவள்.

“அப்படி தான் சொல்லுவேன்… என்ன விட்டு கொஞ்சம் தள்ளியே இரு நீ… கீப் ஒன் ஆர்ம் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ…” என்றான் அதட்டலாய் சிறு குழந்தையின் சிணுங்களோடு அவன்.

அவன் அதை சொன்ன அழகில், மற்ற அத்தனையும் பின்னுக்கு சென்றுவிட வாய்விட்டு கலகலவென நகைக்க தொடங்கி இருந்தாள் தென்றல்.

“அது மட்டும் தானா… இல்ல எப்பவும் அட்டேன்ஷன் சார் மோட்ல அலார் மோட்லையே இருக்கணுமா..?” என்றாள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே.

அவன் அவளை முறைத்துப் பார்க்க, “நீங்க இன்னும் விளையாட்டு பிள்ளேயாவே இருக்கீங்க பாஸ்…” என அவனின் கன்னம் தட்டியவள், நொடியும் தாமதிக்காமல் விறுவிறுவென படிகட்டுகளின் பக்கம் நகர்ந்திருந்தாள்.

“ஏதே விளையாட்டு பிள்ளையா..? இந்தாடி நில்லு… நீ மட்டும் ம்ம்னு ஒரு வார்த்த சொல்லு… நீ விளையாட இன்னொரு புள்ளையே தரேன் நான்…” என்றவன் அவள் பின்னாலேயே போனான்.

நின்று திரும்பி அவனை மேலும் கீழுப் குறும்பாய் பார்த்தவள், “நீங்க எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க பாஸ்…” என்றவள், அவன் அதற்கு பதில் சொல்லும் முன் வேகமாய் படியிறங்கி விட்டாள்.

“ஏதே…” என ஒரு நொடி அதிர்ந்து நின்றவனின் முகத்தில் பெரிதாய் விரிந்தது புன்னகை. அவளின் இந்த பரிமாணம் அவனுக்கு முற்றிலும் புதிது. எப்பொழுதும் இறுக்கமும் அழுத்தமும் விரைப்புமாய் மட்டுமே பார்த்தவளை இப்படி பார்க்க அத்தனை பிடித்தது. சிரிப்போடு அவளின் பின்னாலேயே இறங்கி சென்றான் அவன்.

முகம் முழுவதும் புன்னகையை பூசிக் கொண்டு மருமகளும் அவளுக்கு பின்னாலேயே மகனும் வர கண்ட விசாலத்திற்கு  மனம் நிறைந்துப் போனது. மகனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே மருகளின் மீது வாஞ்சையையும் பிரியத்தையும் கூட்டியது.

மருமகளை முதல் முறை பார்த்த போதே சட்டென்று மனதில் ஒட்டிக் கொண்டாள். அவளின் அழுத்தமும் நிமிர்வும் தன்னையே பார்ப்பது போலிருந்தது அவருக்கு. அவர் கணவன் சிவபதம் சேர்ந்த போது கயலுக்கு மூன்று வயது. தனியொருத்தியாய் பிள்ளையை வளர்க்க எத்தனையை எதிர்கொள்ள வேண்டுமென அவரும் அறிவாரே! அந்த நொடியே அவளின் மேல் ஒரு இறக்கமும் மரியாதையும் சுரந்தது தான். ஆனால், அதெல்லாம் அவளை முழு‌மனதாய் ஏற்றுக் கொள்ள போதுமானதாக இல்லை.

இத்தனை காலம் திருமணமே வேண்டாம் என்றவன், இரண்டே நாளில் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று நின்றால் அதை காதலென்று நம்பும் அளவிற்கு அவர் முட்டாளில்லை. ஆனால், மகனின் முடிவிற்கு பின் நியாயமான காரணம் இருக்குமென்று நம்பிதான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னார். அவனின் எண்ணப்படியே இரண்டே நாளில் திருமணத்தை முடித்தும் வைத்துவிட்டார்.

மனைவி பிள்ளை என்று மகனை பார்க்க கண் நிறைந்தது தான். ஆனால், மகன் அவளோடு எப்படி வாழ்வான் என்ற அச்சமும் சேர்ந்தே இருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்கள் இருவரும் ஆசையாய் பேசியோ, நேசத்தை பார்வையில் பரிமாறிக் கொண்டே அவர் பார்க்கவேயில்லை. காலையில் தென்றலின் முகத்தை பார்த்த போதே, இன்னும் அவர்கள் தங்களுக்கான வாழ்க்கையை தொடங்கவில்லை என்று தெரிந்தது. ஆனால், இப்போதைய தென்றலின் வெட்க முகமும், மகனின் பூரித்த சிரிப்பும் அவர்கள் வாழ்ந்து விடுவார்கள் என கட்டியம் கூறுகிறதே!

நேசன் இறங்கி வந்து நீள்விருக்கையில் நண்பனின் பக்கத்தில் பொத்தென்று விழுந்தான். அந்த நொடி அவனின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்துக் கொண்டிருந்த மாதவனுக்கு பரம திருப்தி.

“சிவா…” என்றான் உள்ளம் நெகிழ மாதவன்.

“என்னடா…” என்றவன் பார்வை இன்னுமே மனைவியை தான் தேடியது. அவள் எப்போதோ சமையலறைக்குள் கயலோடு ஐக்கியமாகி இருந்தாள்.

“டேய் மச்சான்… போதும்டா… உன் பொண்டாட்டி தான்… நாங்க எல்லாம் போன பிறகு பொறுமையா உக்கார வச்சு விடிய விடிய கூட பாரு… இப்ப எங்கள கொஞ்சம் பாரு…” நமட்டு சிரிப்போடு அவன் காதை கடித்தான் மாதவன்.

“டேய்…” என்ற அதட்டலோடு நேசன் பார்வையை சுழற்ற,  கண்டும் காணாததுப் போல் அவரவர் வேலையில் கவனமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் அனைவரின்‌ பார்வையும் கேலியாய் அவனை தான் சீண்டியது.

“ஏய்யா… சிவா…” என்றார் கொஞ்சம் குரலுயர்த்தி அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த கந்தன்.

“அப்பா இதோட உன்ன மூணாவது முறை கூப்பிடறாரு…” நமட்டு சிரிப்போடு மீண்டும் நேசனின் காதை கடித்தான் மாதவன்.

“ஹான்… சொல்லுங்க மாமா…” என்றான் அசட்டு சிரிப்போடு நேசன். அவனை அப்படி பார்க்க அவருக்குமே மனம் நிறைந்துப் போனது.

அவர்கள் ஒவ்வொருவரின் முகப் பாவங்களையும் அவதானித்தபடி சமைத்த உணவுகளை எல்லாம் ஒவ்வொன்றாய் உணவு மேசையில் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டிருந்தாள் தென்றல்.

அவனை சுற்றி எத்தனை அன்பான உறவுகள். அவன் ஒருவனின் மலர்ச்சி எத்தனை பேருக்கு நிறைவை சந்தோஷத்தை தருகிறது என ஆச்சர்யமாக இருந்தது. அவள் தந்தையும் அப்படி தானே என்று நினைக்க, வெகுவாய் அவருக்காய் ஏங்கியது மனது. இப்போது அவர் மட்டும் இருந்திருந்தால், எப்படியாய் மகிழ்ந்திருப்பார் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் இந்த திருமணமும் இந்த மனிதர்களும் குணவதிக்கு அத்தனை உவப்பை தரவில்லை என்ற கசப்பும் மனதில் பதியவே செய்தது.

“உனக்கு நாளைக்கு எந்த வேலையும் இல்லைனா நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வந்துடறீயாப்பா…” என்றார் வாஞ்சையாய் கந்தன்.

“அது மாமா…” என யோசனையாய் தென்றலை தான் பார்த்தான் நேசன்.

‘எதற்கு என்னை பார்கிறான்…’ என்பதைப் போல அவள் பார்க்க, “அத்த இன்னைக்கு காலையிலையே விருந்துக்கு கூப்பிட்டாங்க மாமா… அதான் யோசனையா இருக்கு…” என்றான் நேசன்.

“நாளைக்கு காலையில போய்ட்டு மதிய சாப்பாட்டுக்கு சம்பந்தி அம்மாவையும் கூட்டிட்டு இங்க வந்துடுங்க… நாளைக்கு மறுநாள் குல தெய்வ கோவிலுக்கு போகவும் வசதியா இருக்கும்…” என அனைவருக்கும் சாதகமாய் ஒரு தீர்வை சொன்னார் விசாலம்.

நேசன் தென்றலை பார்க்க, அவள் தலை மையமாய் ஆடியது. உடனே தனக்கும் சம்மதம் என்னும் விதமாய் தலையாட்டினான் நேசன். “பொழச்சுப்படா டேய்…” என அவன் தோளில் பலமாய் அடித்த மாதவன், அடங்க மாட்டாது பெரிதாய் சிரித்தான்.

அதுவரை இடுப்பில் மகளை இடுக்கியபடியே உணவூட்டிக் கொண்டிருந்த கயல், “என்ன சிரிப்பு இப்ப…  பொண்டாட்டி மூஞ்ச பாத்தே அவ மனசுல என்ன நினைக்கறானு படிக்க எங்க அண்ணன பாத்து கத்துக்கோங்க…” என நொடித்துவிட்டு போனாள்.

“இப்ப நான் என்ன பண்ணேன்… சிரிச்சது ஒரு குத்தமாடா…” என்றான் அப்பாவியாய் மாதவன். பதில் சொல்லாது நமட்டு சிரிப்போடு அவனை கேலியாய் பார்த்தான் நேசன்.

“ப்பா…” என்றபடியே அவன் மடியில் ஓடி வந்து அமர்ந்தான் வேந்தன்.

“என் தங்கப்புள்ள அதுக்குள்ள சாப்பிட்டீங்களா..?” என்றபடியே அவனின் ஈர கையை தன் சட்டையில் துடைத்தான் நேசன்.

“ம்ம்ம்… தேசை சாப்பிட்டேன் ப்பா… இரண்டு…” என்றான் அவன்.

“சமத்து…” என்றபடியே அவனின் கன்னம் பற்றி செல்லம் கொஞ்ச, அப்போது தான் மூச்சிரைக்க ஓடி வந்து அவர்களின் முன்னே நின்ற பூக்குட்டி அவர்கள் இருவரையும் ஏகத்துக்கும் முறைக்க தொடங்கி இருந்தாள்.

“பூக்குட்டி…” என அவன் ஆசையாய் அவள்புறம் கையை நீட்ட, அதை தட்டிவிட்டு தகப்பன் மடியில் போய் அமர்ந்தாள் அவள். வேந்தன் ஏன் இத்தனை வேகமாய் வந்து அமர்ந்தான் என புரிந்தது.

‘என்னவாம்…’ என்பதைப் போல நண்பனை பார்த்தான் அவன். தெரியாது என தோளைக் குலுக்கினான் மாதவன்.

“அம்முக்குட்டி… பட்டுக்குட்டி… என் ராஜாத்தி… மாமா மேல என்ன கோபம் உங்களுக்கு…” என அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க போனான் நேசன்.

“ஒன்னும் வேண்டாம் போ…” என்றவளின் குரல் அழுகைக்கு தயாராய் இருந்தது.

“ஏன்டா தங்கம்மா இப்படி சொல்லறீங்க… மாமா பாவம் இல்ல…” என்றான் சமாதானமாய் அவளையும் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு நேசன்.

“மாமாக்கு இனிமே என்ன புடிக்காது… அதான் என்ன மூவி கூட்டிட்டு போகல… பீச் கூட்டிட்டு போகல… ஐஸ்க்ரீம் வாங்கி தரல…” என அவன் செய்த குற்றங்களை அடுக்கியது அந்த குட்டி.

‘ச்சு… போ..‌. உங்க மாமாவுக்கு ஒரு பையன் வந்துட்டான் இல்ல… இனிமே அவனுக்கு உன்ன பிடிக்காது போ…’ என நேற்று வந்திருந்த உறவுக்கூட்டம் விளையாட்டுக்கு கேலி செய்ய, அதை கெட்டியது பிடித்துக் கொண்டது பிள்ளை மனம். போதாதற்கு வேந்தனும் இன்று நடந்தது அத்தனையும் ஒப்பிக்க, அப்படி தானோ என்ற எண்ணத்தில் அழுகை வெடித்தது அந்த குட்டிக்கு.

“ச்சு… யார் அப்படி சொன்னா… என் பூக்குட்டிய எனக்கு புடிக்காம போகுமா..? பாரு மாமா… தங்க பிள்ளைக்கு பிடிச்ச கேக், சாக்கி, ஐஸ்கீரிம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்ல…” என்றான் நேசன்.

“ஆனா பீச் கூட்டிட்டு போகலையே…” என்றாள் உதட்டை பிதுக்கி.

“ப்பூ… இவ்வளவு தானா… நாளைக்கு நீ, நான் எல்லாரும் மூவி போய்ட்டு பீச் போய்ட்டு ஹோட்டல் போறோமே…” என்றான்.

“நிஜமாவா..?” என்றாள் சந்தேகமாய் பூக்குட்டி.

“ப்ராமிஸ்ஸா… நான் வேற பூக்குட்டிக்கு இரண்டு பிக் ஐஸ்கிரீம் வாங்கி தரலாம்னு இருந்தேன்… ஆனா நீ தான் மாமாட்ட கோவிச்சுட்டீயா..?” என்றான் நேசனும் உதடு பிதுக்கி.

“ஓ.கே… ஓ.கே… நான் கோபமில்ல…” என்று உடனே சமாதானத்துக்கு வந்தது அந்த குட்டி.

“எல்லாரும் போறோமா..?” என்றாள் அடுத்தததாய்.

“ஆமான்… எல்லாரும் தான்… நீ, நான், அகரன்…” என நேசன் அடுக்க, “அப்போ இவன்…” என வேந்தனை கைகாட்டி கேட்டாள் பூக்குட்டி.

“அவனும் தான்…” என்றதும் அவள் முகம் அஷ்ட கோணலானது.

“அவன் வர கூடாது…” என்றாள் அடமாய். “நான் வருவேன்…” என்றான் வேந்தனும் அடமாய். இன்று அவன் சொல்லிக் காட்டி அவளை வெறுப் பேற்றியதுப் போலவே, நாளை அவனை வெறுப்பேற்ற எண்ணியது மனம். அதைவிட பெரிதாய் என்ன யோசித்துவிட போகிறாள் அந்த பிள்ளை.

“பூக்குட்டி…” என மகளை அதட்டினான் மாதவன்.

“ச்சு… என் தங்கத்த அதட்டாதடா…” என்றான் நேசன் நண்பனை அதட்டி. பெரியவனை அதட்டி விட்டவனுக்கு அந்த சின்னவர்களை எப்படி சரிகட்டிவது என்று தெரியவில்லை. இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் முகத்தை திருப்பிக் கொண்டு அவன் மடியில் அமர்ந்திருந்தனர்.

“அண்ணா… பெரிப்பா… சாப்பிட வாங்க…” என அவர்களை சாப்பிட அழைத்தாள் தென்றல். இவன் பாவமாய் அவளைப் பார்க்க, “இத கூட சமாளிக்க முடியலைனா எப்படி..? சமாளிங்க பாஸ்…”‌ என கேலியாய் சொல்லிவிட்டு போனாள் அவள். அவனை அந்த பிள்ளைகளிடம் அம்போவென விட்டுவிட்டு மற்றவர்களும் சாப்பிட சென்றிருந்தனர்.

                     நேசம் ஒளிரும்…

    No comments yet.