நெஞ்சம் 37:
தந்தையும் மகனும் குளித்து முடித்து வெளியே வந்த போது, அறையை வெறுமை சூழ்ந்திருந்தது. தென்றலை எதிர்பார்த்து வந்தவனை சட்டென்று ஒரு ஏமாற்றம் பற்றி படர்ந்தது. இன்னதென்று புரியாத ஒரு எரிச்சல் வந்தது. ‘பச்… சொல்லாம விட்டுட்டு போய்ட்டா…’ என சுணங்கியது மனம்.
‘எங்கடா போய்ட்டா… பாகிஸ்தான் பாடருக்கா… கீழ தானே போயிருக்கா… ஐஞ்சு நிமிஷம்னு போய்ட்டு அரமணி நேரம் தண்ணீல ஆட்டம் போட்டுட்டு இருந்தா இங்கையே உக்காந்து குச்சு மிட்டாயா சாப்பிட்டு இருப்பா…’ என அவளுக்குப் பரிந்து கொண்டு வந்தது இன்னொரு மனம்.
பிள்ளைக்கு அவள் எடுத்து வைத்திருந்த ஆடையை அணிவித்து கீழே அனுப்பி வைத்தான். தானுமே இரவு உடைக்கு மாறி, வெளியில் வந்து நின்றான். தற்போது தனிமை அவனுக்கு அவசியம் வேண்டி இருந்தது. தன் மனதை தானே ஆராய்ந்து அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்திருந்தது.
அடுக்கு மல்லிகை கொடி ஒன்று மாடி வரை ஏறி வந்து கொத்தாய் ஒரு மூலையில் கொத்தாய் படர்ந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எண்ணி ஐந்தாறு பூக்கள் தான் இருக்கும். அதற்கே வாசம் அந்த இடத்தை நிறைத்தது. ஒவ்வொன்றும் ஒரு சிறிய ரோஜா பூவின் அளவில் இருந்தது. அதன் அருகில் சென்று பூக்களை மட்டும் அல்லாது இலைகளை, செடியை என்று ஆசையாய் வருடினான்.
அவனுக்கு பூக்களிலேயே அடுக்கு மல்லி என்றால் தனி பிரியம். அதன் அடர்ந்த வாசம் எப்போதுமே அவனின் மன இறுக்கங்களை தளர்த்தும் வல்லமை பெற்றது. இந்த வீடு குடி புகும் நாளில் ஆசையாய் தானே அதை நடவு செய்திருந்தான்.
ஒரு மாதிரி மனம் நிலைக் கொள்ளாமல் தவித்தது. உடம்பின் ஒவ்வொரு நாளத்திலும் புது இரத்தம் பாய்வதைப் போல அத்தனை உற்சாகமாய் உணர்ந்தான். பதின் வயது மாணவனைப் போல நிலைக் கொள்ளாது துள்ளிக் கொண்டிருந்தது மனம். வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. உடல் எடை இழந்து இறகாகி வானில் மிதந்தது. இதெல்லாம் ஏனென்று அவனுக்குமே தெரிந்திருந்தது. அவன் அவளை காதலிக்கிறான். இந்த எண்ணமே தித்திப்பாய் இதயத்தில் இறங்கியது.
மறுப்பதற்கு இடமே இல்லாமல் தென்றலை அவனுக்கு பிடித்திருந்தது தான். ஆனால், அந்த பிடித்தம் நிச்சயம் காதலென்ற வரையறைக்குள் அடங்காது. திருமணத்திற்கு அவளுக்கு வேந்தன் எப்படி பிரதான காரணமோ அப்படி தான் அவனுக்கும். பார்க்கும் முதலே அவனிடம் தோன்றிவிட்ட பிரியம். பார்த்த பிறகு ஆழ வேரூன்றிவிட்ட நேசம் என வேந்தன் தான் அவனுக்கும் பிரதான காரணமாய் இருந்தான்.
ஆனால், எப்பொழுது எந்த நொடி அவளின் மீது காதல் முகிழ்ந்தது என தெரியவில்லை. அவளின் ஒற்றை பார்வைக்கே அவன் தடுமாறி நிற்பது என்ன விந்தையென்று தெரியவில்லை.
கடந்த எட்டு ஆண்டுகளில் எந்த பெண்ணும் அவனை சலனப் படுத்தியதில்லை. அதற்கு அவனுக்கு நேரமும் இருந்ததில்லை. சூடு கண்ட பூனையாய் மனம் பலத்த காயம் கண்டிருக்க, எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கும் திரணியில்லை. அப்படியும் உடல் நெருப்பாய் தகுக்கும். மனம் பெண்மையின் அருகாமைக்கு ஏங்கும். இளமையின் உணர்வுகள் மேலெழும்பி சதிராட்டம் போடும். அந்த உணர்வுகளை கட்டுக்குள் வைக்கவே, தன்னை எந்நேரமும் வேலையில் மூழ்கடித்துக் கொள்வான் நேசன்.
நேற்றைய இரவு முழுக்க அவனின் கைக்குள் தானே அடங்கி கிடந்தாள். அப்பொழுதெல்லாம் உண்டாகத சலனத்தை அவளின் ஒற்றை பார்வை உண்டாக்குகிறது என்றால் இது காதலில்லாமல் என்ன? உடலும் உயிரும் அவளை தேடி சரணடைய துடித்தது. தானா இப்படி நடந்துக் கொண்டோம் என்று வெட்கமாக கூட போயிற்று.
காமம் மட்டும் காதலில்லை. அதை எப்படி அவன் அறிவானோ அதேப் போல காமம் இல்லாமலும் காதலில்லை என்பதை அறிந்திருந்தான். இயல்பான அந்த உணர்வை தவறாகவோ அருவருப்பாகவோ அவன் நினைத்ததில்லை.
திருமணத்திற்கு அடுத்த கட்டம் தாம்பத்யம் என்று அவனுக்கும் தெரிந்து தானே இருந்தது. மனதளவில் அதற்கு தன்னை தயார் படுத்தியும் கொண்டான். அந்த உறவும் உரிமையும் மட்டுமே அவளை அணுக காரணமென்றால் இன்று வரை அவன் காத்திருக்க அவசியமில்லை. ஆனால், இந்த நிமிடம் இந்த காதல் கொண்ட மனம் அல்லவா அவள் வேண்டுமென்று பேயாட்டம் போடுகிறது.
அதே பார்வையோடு ஆசையாய் அவனின் கன்னத்துக் குழியை அவள் முத்ததால் நிறைத்தால் எப்படி இருக்கும் என்ற நினைவே தித்திப்பாய் உள்ளே இறங்கியது. ஒரு வித மயக்கமும் வெட்கமும் சேர்ந்தே அவனை ஆட்கொண்டது. ஆசையாய் அந்த கன்னத்து குழியை தன் விரலால் வருடியவன், முகம் ரகசிய புன்னகையை பூசிக் கொண்டது.
தனக்கிருக்கும் இதே எண்ணம் அவளுக்கும் இருக்குமென்று தோன்றவில்லை. அவன் அமைப்பிற்குள் நிற்கும் ஒவ்வொரு முறையும் அவள் இறுகி நிற்கும் கோலமே அப்படி இல்லை என்று கட்டியம் கூறுகிறதே!
கடந்த காலத்தை உதறி தள்ளிவிட்டு இருவருமே நிகழ்காலத்தில் வாழ முனைந்தாலும் அதன் மிச்சங்கள் இன்னும் அவர்களை ஆட்டுவிக்க தான் செய்கிறது.
‘அப்ப அவ பாஸ்ட்ல என்ன தான் நடந்து இருக்கும்… ஒரு வேள அவ புருஷன் சைக்கோவா இருந்து இருப்பானோ… இல்ல செக்ஸ் அடிக்டா இருந்து இருப்பானோ… இவள அடிச்சு கஷ்டபடுத்தி டார்ச்சர் பண்ணி இருப்பானோ…’ என்று அவளுக்காய் துடித்தது மனம். அப்படியென்றால் அவளை மிகமிக கவனமாக கையாள வேண்டுமென்ற எண்ணமும் வந்தது.
இந்த நொடி அவன் அவளை நெருங்கினாலும் மறுக்க மாட்டாள் என்று புரிந்தது. ஆனால், இந்த உறவுக்கு திருமணத்திற்கு அவள் செய்யும் ஒரு நியாயமாய் தான் அது இருக்கும். அப்படியான ஒரு கூடல் அவனுக்கும் வேண்டி இருக்கவில்லை. இவன் எப்படி தவித்து உடல் முழுவதும் தகித்து அவளுக்காக ஏங்கி நிற்கிறானோ அப்படியே அவளும் பிடித்ததோடு பெரும் நேசத்தோடு ஆசையாய் தன்னை நெருங்க வேண்டுமென்று நினைத்தான்.
அவனின் எண்ணங்களை களைப்பது போலே, “சாப்பிட வாங்க… அத்தை கூப்பிடறாங்க…” என்றாள் பின்னால் வந்து நின்று தென்றல். அந்த குரலே அவனுள் சாமரம் வீசியது.
அசையாது அப்படியே நின்றான் அவன். இன்னும் ஓரடி அவனை நெருங்கி வந்து, “உங்கள தான் கூப்பிடறது கேக்கலையா..?” என்றாள் தென்றல். அப்படியே அவளை அள்ளிக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று அவனின் அங்கமெல்லாம் துடித்தது.
திரும்பி அவளை பார்த்தவன், சுவரில் சாய்ந்து நின்றபடியே மார்பின் குறுக்கே அழுத்தமாய் கைகளை கட்டிக் கொண்டான்.
அவனின் பார்வை அவளை ஊடுறுவி துளைக்க, நெளிந்தபடியே மல்லிகை கொடிக்கு தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“சாப்பிட வாங்க… கீழ எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணறாங்க…” என்றாள் மெல்லிய குரலில் தடுமாற்றத்துடன். நேர் கொண்டு அவனைப் பார்க்க என்னவோ தடுத்தது.
‘இதென புதுப்பெண் போல இத்தனை தடுமாற்றம்..?’ என தனக்கு தானே கேள்வி கேட்டு, ‘ஆமா… நான் புதுப் பொண்ணு தானே…’ என பதிலும் சொல்லிக் கொண்டது அவள் மனம்.
“தீ…” அடர்ந்து கரகரத்து ஒலித்தது அவனின் குரல்.
அந்த குரல் அவளை என்னவோ செய்தது. அங்கிருந்து ஓடிவிட சொல்லி அறிவுறுத்தியது மூளை. அப்படியும் வேரோடி விட்ட கால்களை அசைக்க முடியாது சமைந்து நின்றிருந்தால் அவள்.
“என் முகத்த பார்க்க மாட்டீயா..?” மீண்டும் அதே குரல். “நிமிந்து என்ன பாரேன்…” என்று அடுத்த நொடியே கெஞ்சியது அந்த குரல்.
மறுக்க முடியாமல், தோன்றாமல் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் விழிகள் சில நொடிகள் அவனின் விழிகளை கவ்வி நின்றது.
“இப்படி பாத்து தான் எனக்குள்ள நெருப்ப பத்த வைக்கற…” என்றான் அவளை பார்த்தபடியே ஆழ்ந்த குரலில் நேசன்.
வேகமாய் அவனிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள் அவள். “தீனு பேர வச்சுட்டு என்ன சுட்டு பொசுக்க பாக்கற…” என்றான் சிறு கேலி இழைந்தோட.
கொடியில் இரண்டு பூக்கள் ஒரே காம்பில் மலர்ந்திருந்தன. அதை பறித்தவன் அவளை திருப்பி, ஏற்கனவே சூடி இருந்த பூக்களில் இருந்த கொண்டை ஊசியை உருவி, தன் கையிலிருந்ததை ரோஜாவைப் போல் அவளின் பக்கவாட்டு கூந்தலில் சூட்டினான். தொடர்ந்து பின்னிருந்து மிக மென்மையாய் அவளை அணைத்தும் கொண்டான்.
“நான் உன்ன காதலிக்கறேனு நினைக்கறேன்… இல்ல உறுதியா காதலிக்க தான் செய்யறேன்… ஆரம்பத்துல இருந்தே உன்ன பிடிக்கும் தான்… ஆனா இந்த பிடித்தம் எப்போ காதலா மாறுச்சுனு எனக்கு தெரியல… நீ சம்மதம் சொல்ல காத்திருந்த நேரத்துலையா..? இல்ல உன்ன இன்னொருத்தரோட பாத்தப்பவா..? ஆனா இன்னைக்கு என் காதல நான் முழுசா உணர்ந்துட்டேன்… உன்னோட ஒரே ஒரு பார்வை அத எனக்கு உணர்த்திடுச்சு… எஸ்… ஐ அம் லவ் வித் யூ… இவ்வளவு காதலோட உன்ன பக்கத்துல வச்சுட்டு தள்ளி இருக்க முடியுமானு தெரியல… ஆனா முயற்சி பண்ணறேன்…” என்றான் காதுமடல்களில் தன் இதழ்கள் உரச. சொல்லி முடித்து அழுத்தமாய் அங்கே முத்தமும் பதித்திருந்தான். அந்த வார்த்தைகளில் அப்படி என்னை மீறி ஏதாவது நடந்தால், என்னை தவறாக நினைத்துவிடாதே என்ற மன்றாடலும் இருந்தது.
அவனின் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தது. காதல் வந்து விட்டாலே இப்படி தான் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் புத்தி பேதலித்து விடும் போல.
“பீச்ல உனக்கு என்ன கிஸ் பண்ணனும் தானே தோணுச்சு… இப்ப தோணலையா..?” என்றான் ஆசையும் ஆதங்கமுமாய்.
“இப்ப ஒரே ஒரு கிஸ் பண்ணறீயா..? கன்னத்துல பண்ணா போதும்…” என்றபடி அவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான். மல்லிகை பூவின் வாசமும் அவளின் வாசமும் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது. வார்த்தைகளின்றி தடுமாறி அவள் தவித்ததெல்லாம் அவன் கவனத்தில் பதிந்தது போலவே தெரியவில்லை.
“ரொம்ப படுத்தறேனா… புடிக்கலையா..?” என்றான் மீண்டும் அடர்ந்த குரலில் கிசுகிசுப்பாய் கன்னத்தில் மீசை உரச நேசன்.
அதே ஆராய்ச்சியில் தான் அவளும் இருந்தாள். பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். எல்லாவற்றுக்கும் இவனுக்கு அவசரமும் வேகமும் தான் என்று தோன்றியது. அவளை பார்த்தது, திருமணத்திற்கு கேட்டது, திருமணத்தை நடத்திக் கொண்டது, இடம் வாங்கியவது, வங்கி கணக்குகளை இணைத்தது என எல்லாவற்றுக்கும் அவனுக்கு அவசரம் தான். இவள் தான் அவனுக்கு என்று முடிவு செய்துவிட்ட பிறகு எந்த இடத்திலும் அவன் தயங்கியோ தேங்கியோ தாமதித்தோ நிற்கவில்லை. அதுதான் அவனின் குணம்.
“நான் மேல வந்து ரொம்ப நேரம் ஆகுது… யாராவது தேடி வந்துட போறாங்க…” என்றாள் மெல்லிய குரலில் தென்றல்.
“அதெல்லாம் நாமளா கீழ இறங்கி போற வரைக்கும் யாரும் நம்ம தேடி வர மாட்டாங்க… பொழுதே விடிஞ்சாலும்…” என்றான் அழுத்தமாய் நேசன்.
வயிற்றில் அழுந்த பதிந்திருந்த அவனின் கரத்தை விலக்கவே அச்சமாக இருந்தது. பிடிக்கவில்லை என்று நினைத்து விடுவானோ? தன்னிடமிருந்து சட்டென்று ஒதுங்கி விலகி நின்று விடுவானோ என்று அச்சமாகவும் இருந்தது.
அவன் அவளை என்ன செய்கிறான் என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் உணர்வுகளை பந்தாடுகிறான். அவனின் இழுப்புக்கெல்லாம் ஆட்டி வைக்கிறான். அதே நேரம் அவன் விலகி நின்றாலும் மனம் தவித்து தொலைத்தது. அவனின் தவிப்பையும் சங்கடத்தையும் விலகலையும் பொறுக்க முடியாமல் தானே, இலகுவாய் பேசி கடற்கரையில் நடந்ததை சாதரணமாய் கடக்க முயன்றாள்.
“அப்போ பிடிச்சுருக்கா…” என்றான் இன்னுமே ஆழ்ந்த குரலில் குறும்பு புன்னகையோடு கேலி இழையோட நேசன்.
“அது… அது… தெரியல…” என்றாள் உண்மையாய் தன் மனதை உடைத்து தென்றல்.
பிடிக்கவில்லை என்று அவள் சொல்லாததே மனதில் ஒரு உல்லாசத்தை உண்டாக்கி இருந்தது.
“அப்ப பிடிச்சுருக்குனு தான் அர்த்தம்…” என்றான் அவளின் கன்னத்தில் இதழ்களை அழுத்தியபடி. அங்கேயே அப்படியே தேங்கி நின்றது அவன் இதழ்கள்.
“ஒரே ஒரு முத்தம் குடேன் தென்றல்… அத உணர ஆசையா இருக்கு…” ஏக்கமும் கெஞ்சலுமாய் அவளின் கன்னத்தில் இதழ்களை அழுத்திக் கொண்டே சொன்னான் அவன்.
குழந்தை போல கொஞ்சுபவனை மறுத்து உதறி தள்ள யாருக்கு தான் மனம் வரும். திரும்பி அவன் கன்னத்து குழியில் பட்டும் படாமல் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள் அவள். ஏமாற்றமாய் உதடு பிதுக்கினான் அவன்.
என்ன என்பதைப் போல, புருவங்களை ஏற்றி கேள்வியாய் பார்த்தாள் அவள். “பாத்தவே இல்ல…” என்றான் இதழசைத்து ஏமாற்றமாய்.
அவனுக்கு இருக்கும் ஏக்கத்திற்கும் ஆசைக்கும் தாபத்திற்கும் அவளே மொத்தமாய் தந்தாலும் இதையே தான் சொல்வான் என்று தோன்ற, இதழோரம் முறுவல் ஒன்று பூத்தது. அழுத்தமாய் விரிந்து நின்ற இதழில் முத்தம் வைத்தான் அவன். அவள் விழி விரித்து அவனைப் பார்க்க, “அப்படி என்ன பாக்காதடி… அப்பறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்ல…” என்றபடியே அழுத்தமாய் அவளின் அதரங்களில் தன்னுடையது புதைத்துக் கொண்டான். நொடிகள் நீள, தள்ளாடி அவனைப் மல்லிகை கொடியாய் பற்றிக் கொண்டவள் இமைகள் தன்னைப் போல கதவடைத்துக் கொண்டது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.