நெஞ்சம் 36:

தமிழ் வெண்பா | 11 Mar 2026 | Share

நெஞ்சம் 36:

கண்ணாடியின் வழியே மகனையும் மனையாளையும் அடிக்கொரு தரம் பார்வையால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் நேசன். ‘உன் சம்மதம் எனக்கு முக்கியம்… உன் உணர்வுகள் எனக்கு முக்கியம்…’ என நொடிக்கொரு முறை சொல்லிவிட்டு என்ன செய்து வைத்திருக்கிறேன் என்று தான் எண்ணம் ஓடியது. அந்த அளவிற்காக மனம் அடங்காமல் அலைப் பாய்கிறது என்று எண்ணியவனுக்கு விரும்பியே அது அவளிடம் சரணடைய துடிக்கிறது என்று புரிந்துத் தான் இருந்தது.

பிள்ளை என்னவோ கேட்டு அவளை நச்சரித்துக் கொண்டே வர, தென்றலின் கவனம் அங்கில்லை. அதைப் பார்த்திருந்தவனுக்கு ஒரு மாதிரி மனமே கசங்கிப் போனது. ‘என்னைப் பற்றி என்ன நினைப்பாள்…’ என்ற எண்ணம் பெரும் சஞ்சலத்தை தந்திருந்தது. அந்த சஞ்சலம் கரங்களிலும் தடுமாற்றமாய் வெளிப்பட்டது.

“என்ன பண்ணறீங்க நீங்க… முதல வண்டிய ஓரமா நிறுத்துங்க…” என்றாள் அவனின் தடுமாற்றத்தில் பயந்து தென்றல்.

அடுத்த நொடியே வண்டியை ஓரம் கட்டிவிட்டான் நேசன். திரும்பி மனையாளைப் பார்த்தவன், அவளின் விழிகளை நேர்க்கொண்டு சந்திக்க முடியாமல் வெளியே பார்வையை அலைய விட்டபடி, “இல்ல… நான்…” என தடுமாற்றத்துடன் தன் நிலை விளக்கம் கொடுக்க முற்பட்டான்.

“முதல தண்ணீய குடிங்க…”‌ தண்ணீர் போத்தலை அவனிடம் நீட்டியபடியே அழுத்தமாய் சொன்னாள் அவள்.

மறுக்காமல் வாங்கிக் கொண்டவனுக்கு அது அவசியமாய் தான் இருந்தது. ஓரளவிற்கு மனம் சமன் படவும் வண்டியை சாலையில் ஏற்றி வேகத்தை சீராய் கூட்டானான் நேசன். அடுத்த நொடியே தொடர் கனையாய் வேந்தனின் கேள்விகள் அவளை துளைக்க தொடங்கி இருந்தது.

“பேசாம வா வேந்தா…” என்றாள் அதட்டலாய் தென்றல்.

வெளியில் பார்ப்பதைப் போல முகத்தை திருப்பிக் கொண்டவன், சில நொடிகளில் “நான் அப்பாகிட்ட போறேன் போ…” என்றபடி பின்னிருந்து முன்னால் தாவினான்.

அவனை இழுத்து இருக்கையில் அமர வைத்தவள், “அப்பா டிரைவ் பண்ணும் போது இப்படி பண்ண கூடாது…” என்றாள் கண்டிப்போடு.

“இல்ல… நான் அப்பாட்ட போறேன்…” உதடு பிதுக்கி அழுகைக்கு தயாரானான் அவன்.

“இதென்ன தொட்டதுக்கும் அடம்… சொன்னா கேட்டுக்கணும்…” கொஞ்சமே குரல் உயர்த்தி அழுத்தமாய் சொன்னாள் அவள். அவ்வளவு தான் பிள்ளையின் கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளமாய் பெருகியது கண்ணீர். தென்றல் அவனை கண்டிப்பாள் தான். அது எல்லாம் கொஞ்சல் மொழியிலேயே இருக்கும். இன்று புதிதாய் குரலுயர்த்தி அதட்ட, வேந்தனுக்கு அழுகை வெடித்தது.

“எதுக்கு அவன அதட்டற நீ…” என தென்றலை கண்டித்தவன், “டிரைவ் பண்ணும் போது இப்படி குதிச்சா அப்பாவுக்கு டிஸ்டர்பா இருக்கும் இல்ல தங்கம்… இப்ப அங்கேயே இருங்க… வீட்டுக்கு போனதும் அப்பா தூக்கிக்கறேன்…” என்றான் சமாதானமாய் நேசன்.

எந்த அதட்டலுக்கும் சமாதானத்துக்கும் வேந்தன் அடங்குவதாகவே இல்லை. முன்னால் போய் தான் ஆக வேண்டும் என்று நின்றான். வாகனக்தின் வேகத்தை குறைத்து அவனை முன்னால் வர சொன்னால், அன்னையையும் அழைத்தான்.

சொன்னாலும் கேட்க மாட்டான் என அவளுக்கும் தெரிந்து தான் இருந்தது. கடைசியில் அவளும் அவனின் விருப்பத்திற்கு தான் ஆட வேண்டி இருந்தது. தொடர்ந்த வேந்தனின் அத்தனை கேள்விகளுக்கும் முகம் சுணங்காது பதில் சொல்லிக் கொண்டு வந்தான் நேசன்.

‘அப்பாடி… இவர்களுக்கு வாயே வலிக்காதா..?’ என்று தான் தோன்றியது தென்றலுக்கு. அமைதாய் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

வீடு வந்தும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. மகிழுந்தின் கதவை திறந்த வேகத்திற்கு மான் குட்டியாய் துள்ளிக் கொண்டு உள்ளே ஓடினான் வேந்தன். பூக்குட்டியிடம் சொல்லி சொல்லி வெறுப்பேற்ற தான் அவனிடம் ஏராளமான கதைகள் இருந்ததே!

இன்னும் அவள் அப்படியே அமர்ந்திருக்க, அவள் பக்க கதவை திறந்து “தென்றல்…” என்று மெல்ல அழைத்தான் நேசன்.

அப்படியும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. ‘தான் அவளை வருத்தி விட்டோமோ… வேண்டாத எதையோ நினைவு படுத்தி விட்டோமோ… அவளை காயப்படுத்தி விட்டோமோ…’ என அத்தனை வருத்தமாய் போயிற்று அவனுக்கு. ‘அப்படியென்னடா உனக்கு…’ என தன்னையே நிந்தித்துக் கொண்டது அவனின் மனம்.

தயக்கமாய் அவளின் தோளை தொட்டி, “தென்றல்…” என்றான் கொஞ்சம் குரலே உயர்த்தி.

“ஹான்…” என்றவள் கண்களை திறந்து மலங்க மலங்க விழித்தாள். ஒரு நொடி எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. ஆழ்ந்த உறக்கமில்லை என்றாலும் அவள் மனம் அமைதியில் திளைத்திருக்க மெல்லிய இளைப்பாறலாய் ஒரு உறக்கம்.

சுற்றமும் இருக்கும் இடமும் உரைக்க, அமைதியாய் இறங்கி நடக்க முயன்றாள் அவள். மீண்டும் அவளை தொட்டு நிலைக் கொள்ள முடியாமல் பார்வையை திருப்பி ஏதோ சொல்ல முயன்றான்.

வேகமாய் அவளின் கைப் பற்றியவனுக்கு, எப்படியாவது தன்னை விளக்கிவிடும் முனைப்பு. ஆனால், எப்படி என்று தெரியவில்லை. மன்னிப்பு கேட்டு ஆரம்பிக்க அவனொன்றும் தவறு செய்ததாய் தோன்றவில்லை. அதை அவள் எதிர்பார்ப்பதாகவும் தெரியவில்லை.

திரும்பி கைகளை கட்டிக் கொண்டு அழுத்தமாய் அவனைப் பார்த்தாள் பாவை. “அது… நான்… அங்க…” என தடுமாற்றத்துடன் மீண்டும் ஆரம்பித்தவன், நேர்க்கொண்டு அவளை பார்க்க முடியாமல் விழிகளை அலைய விட்டான் அவன்.

சுற்றத்தை ஒரு முறை பார்வையால் தொட்டுக் காட்டியவள், “ஒரு விசயத்த ஒருத்தவங்க அவாய்ட் பண்ணறாங்கனா… ஒன்னு அதப் பத்தி பேச அவங்களுக்கு விருப்பம் இல்லைனு அர்த்தம்… இல்லையா அத பத்தி பேச வேண்டிய அவசியமே இல்லனு அர்த்தம்…” அவனின் பாடத்தை அவனுக்கே திருப்பிப் படித்தாள் அவள். சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு உள்ளே போய்விட்டாள்.

அந்த குரலில் என்ன இருந்தது என்றே தெரியவில்லை. ஆனாலும், அவளின் வார்த்தைகள் அவன் மனதை அமைதிக் கொள்ள செய்தது. பின்னங்கழுத்தை அழுத்தமாய் நீவி விட்டுக் கொண்டவனின் இதழ் கடையோரம் இருக்கிறதா இல்லையா என்று சந்தேகிக்கும் வகையில் கோடாய் ஒரு குறுநகை தோன்றியது.

தென்றல் உள்ளே நுழையும் முன்னே தனது வீரதீர பிரதாபங்களை அளக்க தொடங்கிவிட்டான் வேந்தன். “பீச் தண்ணீல ஆடிட்டு இப்படி தான் உள்ள ஓடி வரதா… முதல வந்து குளி… அப்பறம் அவளுக்கு கதை சொல்லலாம்…” என மகனை அள்ளிக் கொண்டாள் தென்றல். நேசன் பின்னாலேயே வர அவனை பார்த்து முகத்தை திருப்பினாள் பூக்குட்டி.

அரசி காலையிலேயே தன் வீட்டிற்கு கிளம்ப, கையோடு குணவதியையும் அழைத்துக் கொண்டு தான் கிளம்பினாள். அவராலும் அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை. விசாலமும் கயலும் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கிளம்பி விட்டிருந்தார். அந்த தகவலைக்கூட அரசி தான் தென்றலுக்கு அழைத்து சொன்னாள். அப்போதும் மகளிடம் நேரடியாய் சொல்லிக் கொண்டு கிளம்பவில்லை அவர்.

மகனை அள்ளிக் கொண்டு அவள் மாடியேற, அவள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு போனான் நேசன்.

மேலே வந்தவள், “தண்ணீயில நல்லா ஆட தெரியுதுல… அவன குளிக்க வச்சு கூட்டிட்டி வாங்க… புடிங்க…” என மகனை கணவனின் கைகளில் திணிந்தாள். திகைத்து விழித்தான் அவன்.

“என்ன பார்வை… சொல்லறது புரியலையா..?” என்றாள் அதட்டலாய் தென்றல். புரிகிறது என்னும் விதமாய் மண்டையை உருட்டினான் அவன்.

மகனின் ஆடை களைந்து குளிக்க ஆயத்தம் செய்தவனின் பார்வை மனைவியை தான் தொடர்ந்தது. அவள் என்ன நினைக்கிறாள் என்றே யூகிக்க முடியவில்லை. தயங்கி தயங்கி அவளைப் பார்ப்பதும், பேச வாயெடும்பதும், பின் யோசனையாய் இதழ் பூட்டிக் கொள்வதுமாய் இருந்தான் நேசன். எப்படியாவது அவளிடம் பேசிவிட நினைத்தவனுக்கு என்ன பேசுவது என்று தான் தெரியவில்லை.

அவ்வளவு தான் அவளின் பொறுமை காற்றில் கரைத்த கற்பூரமாய் கரைந்து காணமல் போயிருந்தது. “இப்ப ஊருல உலகத்துல இல்லாத அதிசயமா என்ன நடந்துடுச்சு… உங்க பொண்டாட்டி தானே நானு… என் மூஞ்ச மூஞ்ச பாக்கறத விட்டுட்டு போய் ஆகற வேலைய பாருங்க…” என்றாள் அதட்டலாய் அவள்.

என்ன பேசுகிறாள் அவள். அப்படியென்றால் அவனை கணவனாக அங்கீகரிக்கிறேன் என்கிறாளா? அவனின் தொடுகையை ஏற்கிறேன் என்கிறாளா? சந்தோஷமாய் அதிர்ந்தது அவனின் மனம்.

“தென்றல்…” என்றான் நம்ப மாட்டாத தவிப்போடு நேசன்.

“தென்றலுக்கு என்ன வச்சுருக்கீங்களாம் புதுசா…” என்றாள் தலை சாய்த்து கேலி இழைந்தோட குறும்பாய் தென்றல்.

“என்ன தான்…” என்றவன், முகத்தில் படர்ந்த வெட்கத்தை மறைக்க முயன்றபடியே மகனை அள்ளிக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

“பத்து நிமிஷம் தான் உங்களுக்கு டைம்… தண்ணீல ஆட்டம் போடாம வெளிய‌ வரணும்… இல்ல பிச்சுடுவேன் பிச்சு…” அதட்டலாய் அவனை துரத்தியது அவள் குரல். உதடுகளில் உறைந்த புன்னகையோடு சாற்றியிருந்த குளியலறை கதவை தான் பார்த்திருந்தாள் தென்றல்.

அவனை குற்றவாளி கூண்டில் ஏற்றி நிறுத்தி கேள்வி கேட்கும் அளவிற்கு என்ன செய்துவிட்டான் என்றே தோன்றியது. இந்த திருமணம் வேந்தனுக்காக என்றாலும், அதில் இதெல்லாம் அடக்கம் என்று தெரிந்து தானே மணந்துக் கொண்டாள். என்ன இத்தனை சீக்கிரம் ஏற்க கொஞ்சம் மனம் முரண்டியது. ஆனால் மறுக்கவும் காரணமில்லையே! அவனை இலகுவாய் ஏற்க முடியவில்லை என்பது எத்தனை உண்மையோ அதே அளவிற்கு விலக்கி தள்ளவோ விலகி நிற்கவோ முடியவில்லை என்பதும் உண்மை.

அவளுக்கும் தானே அவனை முத்தமிட தோன்றியது. அவளுள் இருக்கும் ஏதோ ஒன்று இப்போதும் அதை செய்யவிடாமல் தடுக்கலாம். அதேப் போல அவனும் உணர்வுகளுக்கு அணையிட வேண்டும் என்று என்ன வந்ததாம்? அப்படியிருந்தும் ‘என்னை அப்படி பார்க்காதே…’ என எச்சரிக்க செய்தான் தானே! அதையும் மீறி அவனை தூண்டி விட்டுவிட்டு குறையும் சொன்னால் எப்படி நியாயமாகும்?

மனிதர்களின் மெல்லுணர்வுகளை காயப்படுத்தி விடவே கூடாது. குறிப்பாய் அவர்களின் இணை அதை செய்துவிடவே கூடாது. காலத்திற்கும் மனதில் ஒரு உறுத்தலாய் அது தங்கிப் போகும். அதில் ஆண் பெண் என்ற பேதமெல்லாம் இல்லை.

இப்போதைய அவளின் சின்ன விலகலும், தடித்த ஒரு வார்த்தையும் காலத்திற்கும் அவனை காயப்படுத்தி விட கூடிய வல்லமைப் பெற்றவை. என்ன தான் பின்னாளில் அவர்கள் ஒட்டி உறவாடினாலும் மனதில் ஒரு ஓரத்தில் இந்த காயம் உறுத்தலாய் படிந்தே கிடக்கும். சில உறவுகள், உணர்வுகள் கண்ணாடி பாத்திரத்தைப் போல கையாளப் பட வேண்டியவை. அப்படி தான் அவர்களின் உறவும் உணர்வும். இருவரில் ஒருவர் பிசகினாலும், எல்லாம் சுக்கல் சுக்கலாய் நெருங்கிப் போகும்.

                         நேசம் ஒளிரும்…

    No comments yet.