நெஞ்சம் 35:
சூழன்று ஒரு வித சீற்றத்துடன் வந்தது பெரிய அலை ஒன்று. மகனை சட்டென்று தூக்கி பிடித்தவன், அலை அவர்களை நெருங்கிய நொடி மகனை வேகமாய் நீரில் முக்கி எடுத்திருந்தான். மொத்தமாய் நனைந்திருந்தான் வேந்தன். அவன் நனைந்தது போததென்று தன் குட்டி கை நிறைய கடல் நீரை அள்ளி தகப்பனின் முகத்தில் வாறி இறைத்தான் பிள்ளை. செய்துவிட்டு அப்படி ஒரு வெட்க சிரிப்பு. அதைக் கண்டு அப்படியொரு அட்டகாச சிரிப்பு நேசனிடம். சட்டென்று அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் இருவரிடத்திலும் குவிய, அவர்களின் முகங்களில் புன்னகை சாயல்.
பத்தடி தொலைவில் மணலில் அமர்ந்து கணவனையும் மகனையும் தான் ரசித்துப் பார்த்திருந்தாள் தென்றல். கீற்றாய் கன்னத்தில் குழி விழ அவன் புன்னகைக்க கண்டிருக்கிறாள் தான். ஆனால், இப்படியொரு அட்டகாச சிரிப்பு, ‘அம்மாடியோவ்…’ என்று தான் எண்ண வைத்தது. ‘இப்படியும் கூட அவனுக்கு சிரிக்க தெரியுமா..?’ என்றிருந்தது. இந்த ஒரே நாளில் கொஞ்சம் கொஞ்சமாய் அவளைக் கொள்ளையடித்துக் கொண்டாருந்தான் அந்த கள்ளன்.
இத்தனை நாள் ஏக்கத்தையும் ஒரே நாளில் தீர்த்துக் கொள்பவன் போலத்தான் இருந்தது அவனின் ஒவ்வொரு செய்கையும். திரைப்படத்தை பார்த்தார்களோ இல்லையோ, வாய் வலிக்க வலிக்க அந்த இரண்டரை மணி நேரமும் பேசினான் நேசன். அவனின் பிடித்தங்கள், ரசனைகள், ஆசைகள், எண்ணங்கள் என்று பேச அவனுக்கு அத்தனை இருந்தது. அப்பொழுதும் ‘இவன் இத்தனை பேசுவானா..?’ என்ற எண்ணம் தான் அவளுக்கு. இதைத் தான் பேச வேண்டும் என்று தேர்ந்தெடுத்து கட்டிப்படுத்தி எதையும் பேசவில்லை அவன். மடை திறந்த வெள்ளமாய் அவனின் எண்ணங்கள் இயல்பாய் அவளைச் சரணடைந்தது.
இடைவெளியில் மூவருக்குமாய் பனிக்கூழை வாங்கி வந்து நீட்டியவனை முறைத்துப் பார்த்தாள் அவள். “மூவி வந்துட்டு ஐஸ்கிரீம் சாப்பிடலைனா எப்படி..?” கண்களை சுருக்கி தலை சாய்த்து கெஞ்சலாய் அவன் சொல்ல, தென்றலின் முகத்தில் கீற்றாய் ஒரு புன்னகை. அவளுக்கு பிடித்த பிளாக் கரண்ட் சுவையுள்ளதை அவளிடம் நீட்டினான். அவனுக்கும் அதைத் தான் வாங்கி இருந்தான்.
‘எப்படி..?’ என ஒரு நொடி அவள் புருவங்கள் கேள்வியாய் நெரிபட, தெரிந்து வாங்கி வந்திருப்பான் என்று தோன்றவில்லை. “இந்த பிளேவர் பிடிக்காதா..? அன்னைக்கு இதானே வாங்கி இருந்த…” என்றான் அந்த இருளிலும் நொடி நேரம் அவள் முகம் காட்டிய உணர்வுகளை படித்தவனாய் நேசன்.
‘ஆக, தெரிந்து தான் வாங்கி இருக்கிறான்… அன்றே தன்னை இத்தனை உன்னிப்பாக கவனித்திருக்கிறானா என்ன..?’ என்று தான் எண்ண தோன்றியது. எதுவும் சொல்லாது அமைதியாய் வாங்கிக் கொண்டாள் அவள்.
மீண்டும் பனிக்கூழை கண்டதும் அப்படியொரு கொண்டாட்டம் வேந்தனுக்கு. அவர்கள் இருவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவளை வாயை திறக்க விடவில்லை.
திரைப்படம் முடிந்ததும் நேராய் கடற்கரைக்கு தான் அவர்களை அழைத்து வந்திருந்தான் நேசன். அங்கேயே மாலை நேர சிற்றுண்டியை முடித்துக் கொண்டு இதோ தகப்பனும் பிள்ளையும் நீரில் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
வேந்தன் எத்தனைக்கு உற்சாகமாக இருந்தானோ அதைவிட அதீத உற்சாகம் நேசனிடம். இழந்த வருங்களை எல்லாம் ஒரே நாளில் ஈடு செய்பவனைப் போல தான் இருந்தது அவனின் செயல்கள். அதில் அவளின் பார்வை ஆதுரமாய் கணவனிடம் படிந்தது. உள்ளம் இலகி தன்னைப் போல் அவனின் பால் அன்பு பெருகியது.
ஆடிக் களைத்து பிள்ளையை இரண்டடி தூரத்தில் மணலில் விளையாட விட்டுட்டு மனையாளின் அருகில் வந்து அமர்ந்தான் நேசன்.
“நீயும் எங்களோட வந்திருக்கலாம்…” என்றான் முகத்தை சுருக்கிக் குறையாய்.
“எதுக்கு இப்படி தெப்பலா நனையவா..? தள்ளி உக்காருங்க…” என சிடுசிடுத்தபடியே நகரப் போனவனை, “ஏன்… ஈரம் ஒட்டிக்குமாக்கும்… நல்லாவே ஒட்டட்டும்…” என்றபடியே இன்னும் அவளை நெருங்கி உரசிக் கொண்டு அமர்ந்தான் அவன். அவள் திரும்பி அவனை முறைக்க, கலகலத்து சிரித்தான் அவன்.
“சிரிக்கும் போது நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…” தன்னை மறந்து அந்த புன்னகையில் தொலைந்தவளாய் சொல்லி இருந்தாள் தென்றல்.
“ஆஹான்…” அவளின் புறம் தலைசாய்த்து அடர்ந்த குரலில் அவன் கேட்க, ‘ஏன் தான் சொன்னோமோ..?’ என்று வெட்கமாய் போய்விட்டது அவளுக்கு.
வேகமாய் அவள் முகத்தே திருப்பிக் கொள்ள, கன்னத்தில் குழிவிழ கீற்றாய் ஒரு புன்னகை அவனிடம்.
“கடைசி வரைக்கும் உன் கண்ணுக்கு நான் அழகாவே தெரிய மாட்டேனு நினைச்சேன்…” என்றான் தொடர்ந்து சீண்டலாய் அவன்.
அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “சிரிக்கும் போது மட்டும் தான் அழகா இருக்கேனா..?” என்றான் ஆழ்ந்த அடர்ந்த குரலில் அவளின் காதோரமாய்.
காது மடல்களில் அவனின் மூச்சுக்காற்று மோத, கூச்சத்தில் நெளிந்தபடியே கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள் அவள்.
“தேங்க்ஸ்...” மீண்டும் அவளை நெருங்கி காதோரம் அதே அடர்ந்த குரலில் சொல்லி இருந்தான் அவன்.
ஏனென்ற கேள்வியுடன் அவனின் முகம் பார்த்தாள் அவள். “ரொம்ப நாளைக்கு அப்பறம் சந்தோஷமா இருந்தேன்… உண்மைய சொல்லணும்னா என் வாழ்நாள்ல இன்னைக்கு தான் நான் மனசார சிரிக்கறேன் இருக்கேன்… எவ்வளவு தான் சிரிச்சு பேசுனாலும் குடும்பத்தோட சுமையும் பொறுப்பும் பணத்தேவையும் ஒரு பக்கம் அழுத்திட்டே இருக்கும்… இன்னைக்கு அப்படி எந்த பாரமும் மனசில இல்ல… மனசு ஒரு மாதிரி சலனமில்லாம நிறைஞ்சுப் போய் அமைதியா இருக்கு… அதுக்கு காரணம் நீதான்…” முகிழ்ந்த புன்னகையோடு விளக்கம் போல சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
அவளின் மனமும் நிறைந்திருந்தது. இதை சொல்லும் போது நிரந்தராய் நிலைத்துவிட்ட அவனின் கன்னத்துக் குழியில் தான் அவளின் பார்வை தேங்கி நின்றது. ஆசையாய் அதை வருடி முத்தமிட தோன்றியது.
“உனக்கு என்ன கிஸ் பண்ணனும்னு தோணுனா இப்பவே இங்கையே கூட பண்ணலாம்… என் சம்மதத்துக்காக எல்லாம் காத்திருக்க வேண்டாம்…” அவளின் காதுமடல்களில் மீசை உரச அவன் சொன்ன விதத்தில், அவளின் விழிகள் அதிர்வில் பெரிதாய் விரிந்தது.
‘அம்மாடியோவ்… இவனிடம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்…’ என்ற அவளின் எண்ணத்தை அப்படியே பளிங்கியாய் காட்டியது முகம். இந்த இரு தினங்களின் நிகழ்வுகள் வரிசையாய் அவள் மனதில் ஊர்வலம் போக, ‘என்னை முத்தமிட எப்போது அனுமதி கேட்டு நின்றானாம்..?’ எற்ற எண்ணமும் சேர்ந்தே ஓடியது.
அவளின் தாடைப் பற்றி பார்வையை கடற்கரையின் பக்கம் திருப்பியவன், “இப்படி என்ன பாக்காத தென்றல்…” என்றான் தலையை அழுந்த கோதியபடி ஆழ்ந்த குரலில். அப்படியும் அவள் பார்வை மாறாது, மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலமாய் அவனின் கன்னத்து குழியிலேயே நிலைக் கொண்டிருந்தது.
மீண்டும் திரும்பி அவனின் முகம் பார்த்தாள் அவள். “இப்படி நீ என்ன பாத்தா… சம்மதம்னு சொல்லற வரைக்கும் எல்லாம் என்னால காத்திருக்க முடியாது…” என்றான் வெட்கம் படர்ந்த குரலோடு தன் பார்வையை அலைகளின் பக்கம் திருப்பிக் கொண்டு அவன்.
“சிரிக்கும் போது மட்டுமில்ல… வெட்கப்படும் போதும் அழகா தான் இருக்கீங்க…” என்றாள் கேலிப் போல அவள்.
அவளை பார்க்க முடியாத அளவிற்கு கூச்சமும் வெட்கமும் பிடிங்கித் தின்றது. “ப்ளீஸ்…” என்றான் அலைகளிடம் பார்வையை பதித்தபடி மெல்லிய கிசுகிசுப்பான குரலில். அவளின் புன்னகை பெரிதாய் விரிந்தது.
சில நிமிடங்கள் இருவருக்கும் இடையே அந்த மோனநிலை ஆட்சி செய்தது. “அம்மா… ஐஸ்கிரீம்…” என்றபடியே அவர்கள் இருவரின் மீது ஓடி வந்து விழுந்திருந்தான் வேந்தன்.
இருவரின் கழுத்தையும் ஒரு சேர கட்டிக் கொண்டு, “ப்ளீஸ் ம்மா… ஒரே ஒரு ஐஸ்கிரீம் மட்டும்…” என்றான் அன்னையின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்து. அவர்களை சுற்றி இருந்த பலர் உண்டுக் கொண்டிருக்க, கேட்டிருந்தான் அவன்.
அவள் எதுவும் சொல்லவில்லை என்றதும், அப்படியே தாவி தகப்பனின் கன்னத்துக் குழியில் அழுத்தமாய் முத்தம் பதித்து, “ப்ளீஸ் ப்பா…” என்றான் கொஞ்சலாய்.
நேசன் சங்கடமும் கெஞ்சலுமாய் மனையாளைப் பார்க்க, “பீச் வந்துட்டு ஒரு ஐஸ்கிரீம் கூட சாப்பிடலைனா எப்படி..?” என்றாள் கண்ணைகளை சுருக்கி தலை சாய்த்து அவனைப் போலவே கேலியாய் தென்றல். அவர்கள் மூவர் முகத்தையுமே பெரிதாய் ஆக்கிரமித்தது புன்னகை.
இருள் கவிழும் வரை அவர்களின் ஆட்டம் ஓயவில்லை. மீண்டும் சொட்ட சொட்ட நனைத்துவிட்டு வந்து நின்றவர்களை தன்னால் முடிந்த மட்டும் முறைத்துப் பார்த்தாள் தென்றல். அப்பொழுதே வேந்தன் மூக்கை உறிஞ்சியபடி தும்ம ஆரம்பித்துவிட, கணவனை தான் இன்னும் முறைத்தாள் தென்றல்.
மகனை இழுத்து புடவையில் பதித்திருந்த கற்கள் அவனை காயப்படுத்தி விடாத அளவிற்கு இன்னொரு பக்க முந்தானையால் அவனின் தலையை துவட்டினாள் தென்றல். ஏக்கமாய் அவர்களிடம் படிந்தது நேசனின் பார்வை.
“பீச் வருவோம்னு சொல்லி இருந்தா ஒரு செட் ட்ரஸ், டவல் எல்லாம் எடுத்துட்டு வந்திருப்பேன்…” என குறைப் படித்தபடித்தபடியே கணவனைப் பார்க்க, அவன் கண்களில் ஏக்கத்தில் அவளின் கரங்கள் அப்படியே நின்றுப் போனது.
அழுந்த தலைக்கோதி ஆழ மூச்செடுத்தவன், “நான் பார்கிங்ல இருந்து கார் எடுக்கறேன்… நீங்க வாங்க…” என்றபடியே முன்னால் நடக்க தொடங்கி விட்டான். மகனை தூக்கிக் கொண்டு வேகமாய் பின்னால் சென்றாள் தென்றல்.
மகிழுந்தின் கதவை திறந்து ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்தவனின் தகிப்பு இன்னுமே தணியவில்லை. தன்னுடைய எதிர்பார்ப்பு அதிகப்படி என்று அவனுக்குமே தெரிந்திருந்தது. ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்ற நினைக்கிறான். அவளை தனக்குள் வளைக்கப் பார்க்கிறான். ஆசையாய் அலைப்பாயும் மனதை அடக்க தெரியவில்லை. நேசத்துடன் உரிமையும் உறவும் இருக்க, அடக்கி வைக்க அவசியம் இருப்பதாகவும் படவில்லை.
ஆனால், அவளின் உணர்வுகள் அவனுக்கு ரொம்ப முக்கியம். காலையில் அவனின் அணைப்பில் விறைத்து இறுகியதையும், தொடர்ந்த அவளின் சம்பித்த நிலையையும் அவனும் கவனிக்க தானே செய்தான்.
மாலை மங்கி சுற்றி எங்கிலும் இருள் படர தொடங்கி இருந்தது. அடர்ந்த பூவரசு மரம் ஒன்றின் கீழ் தனது மகிழுந்தை நிறுத்தி இருந்தனர் அவர்கள். மகிழுந்தின் பின்பக்க கதவை திறந்து பிள்ளையை அங்கே அமர வைத்தவள், அவனுக்கு அருகே வந்து நின்றாள்.
அவளின் அரவம் உணர்ந்து அவன் என்னவென்பதைப் போல பார்க்க, தன் பக்கமாய் அவனை இழுத்து முந்தானையில் அவன் தலையையும் துவட்ட தொடங்கி இருந்தாள் தென்றல். நிச்சயமாய் அவன் இதை எதிர்பார்க்கவில்லை.
அவள் என்னவோ வேந்தனுக்கு செய்ததைப் போல சாதாரணமாய் இயல்பாய் தான் செய்தாள். அவனால் தான் அப்படி இயல்பாய் இருக்க முடியவில்லை. முகத்திற்கு மிக நெருக்கமாய் உரசுவதுப் போல போக்கு காட்டிய இடையும் வயிறும் அவனின் உணர்வுகளை பேயாட்டம் போட வைத்திருந்தது. அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன், அழுத்தமாய் அவளின் வயிற்று தசையில் இதழ் பதித்திருந்தான்.
அவளின் கரங்கள் அப்படியே நின்றுப் போனது. சில நொடிகளுக்கு அவனின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. மீண்டும் அவன் அழுத்தமாய் முத்தமிடவும் தான் சுயம் திரும்பியது அவளுக்கு. அப்படியும் வேகமாய் அவனை உதறி தள்ள மனம் வரவில்லை. அமைதியாய் அப்படியே நின்றாள் அவள். அவள் உடல் மட்டும் விறைத்து இறுகுவதை அவனாலும் உணர முடிந்தது. வேகமாய் அவளிடமிருந்து விலகி தள்ளி அமர்ந்தான் அவன்.
சில நொடிகள் அப்படியே நின்றவள், அமைதியாய் மகிழுந்தின் கதவை திறந்து பின்பக்கம் பிள்ளையோடு அமர்ந்துக் கொண்டாள். சின்னவன் மட்டும் சலசலத்துக் கொண்டே வர, பெரியவர்கள் இருவரும் வழியெங்கும் அமைதியென்னும் ஆயுதம் ஏந்திக் கொண்டனர்.
– நேசம் வளரும்…
No comments yet.