நெஞ்சம் 34:

தமிழ் வெண்பா | 09 Mar 2026 | Share

நெஞ்சம் 34:

விக்கித்துப் போய் அப்படியே நின்றார் குணவதி. நல்ல வேளையாக இது அவர் வீடாக இல்லை. இருந்திருந்தால் வலிக்க வலிக்கத் திருப்பிக் கொடுத்துவிட்டு தான் அங்கிருந்து நகர்ந்திருப்பாள் அவர் மகள்.

நிச்சயமாய் அப்படியொரு அர்த்ததில் அவர் சொல்லி இருக்கவேயில்லை. ஆனால் சொல்லிவிட்ட பின், அதற்கு அப்படியொரு அர்த்தம் வந்துவிட்டபின் சொன்ன வார்த்தையைத் திரும்பவா பெற முடியும்?

தகப்பன் இடத்திலிருந்து அத்தனையும் செய்து தங்கைக்கு அவன் தான் திருமணம் செய்து வைத்தான் என விசாலம் நேற்று சொல்லி இருக்க, அது மனதில் ஆழப் பதிந்து போனது. இன்னுமே நேற்றைய தினம் முழுக்க மகனின் புராணம் தான் படித்தார் விசாலம். அதில் நேசனின் மீது அத்தனை நல்லெண்ணம் கூட உண்டாகி இருந்தது. அதை மனதில் கொண்டு அவர் சொல்லப் போய், அது தப்பர்த்தமாகி விட்டது.

யாராவது ஏதாவது கேட்பார்கள் விளக்கம் சொல்லலாம் என்று பார்த்தால், அப்படியொரு சம்பவமே அங்கே நடக்கவில்லை என்பதைப் போல அவரவர் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இன்னமுமே குற்றவுணர்வாகி போக, குறுகி நின்றார் அவர். எப்போதாடா இங்கிருந்து கிளம்புவோம் என்றுக்கூடத் தோன்றிவிட, கண்கள் கலங்கிப் போனது.

அவரை நெருங்கி, “என்ன பேசறீங்க நீங்க…” கடிந்து கொள்ளும் சின்னக் குரலில் கோபமாய்க் கேட்டிருந்தாள் அரசி. நேற்று காலையில் ஏன் குணவதியை தன்னோடு இருக்க வேண்டாம் எனத் தென்றல் சொன்னாள் என இப்பொழுது துல்லியமாகவே புரிந்துக் கொண்டாள் அரசி.

“இல்ல… நான்…” என்றவருக்கு என்ன சொல்லி தன்னை விளக்குவது என்றே தெரியவில்லை.

“உங்க பொண்ணும் பேரனும் இனிமே இங்க இந்த வீட்டுல தான் வாழணும்…” என்றாள் அழுத்தமாய் அவரை நேராய் பார்த்து அரசி. தொடர்ந்து சின்னக் குரலில், “அந்த எண்ணமிருக்கா கொஞ்சமாவது… வயசாகுதே தவிர… என்ன பேசறோம்ங்கற விவஸ்தை இல்ல…” பொறிந்து தள்ளினாள் அவள்‌.

எத்தனை பேரின் ஆசை, கனவு, மெனக்கெடல் இந்தத் திருமணம். எல்லாவற்றுக்கும் மேலாக நேசன், தென்றல் மட்டுமில்லை வேந்தனின் எதிர்காலமும் இது தானே! நிச்சயமாய் நேசன் இதனைப் பெரிது படுத்த மாட்டான் தான். ஆனால், மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்று என்ன உத்திரவாதம். தென்றல் வாழ போவது நேசனோடு மட்டுமில்லையே!

“நான் கிளம்பறேன்…” என்றார் தொண்டை அடைக்கக் குணவதி.

“முதல அத பண்ணுங்க… அவள கொஞ்சமாச்சும் நிம்மதியா வாழ விடுங்க…” என்றுவிட்டாள் அரசி.

“இன்னும் நீங்க சாப்பிடலை இல்ல… வாங்க சாப்பிடுவோம்…” இலகுவாய் அவரைச் சாப்பிட அழைத்தபடி, “கயலு நமக்கெல்லாம் சாப்பிட இலைப் போடும்மா…” எனப் பின்கட்டில் நின்ற மகளுக்குக் குரல் கொடுத்தார் விசாலம்.

மற்றவர்கள் எல்லாம் உண்டு முடித்திருக்க, வீட்டுப் பெண்களுக்கு மட்டும் இலைப் போடப்பட்டது. அனைவரும் பேசியபடியே உண்டு கொண்டிருக்க, குணவதிக்கு தான் வார்த்தையும் வரவில்லை உணவும் தொண்டைக் குழி தான்டி இறங்கவில்லை.

பதிலுக்குத் தென்றலை சொல்ல அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும். தென்றலை மட்டுமல்ல, அவரையும் கூடக் கோபமாய் ஒரு பார்வை பார்க்கவில்லையே விசாலம். ஆனால் நேற்று முழுக்க, ‘அண்ணி… அண்ணி…’ என்று உரிமையாய் அழைத்து அத்தனை அன்பாய் பேசியவர், வார்த்தையிலேயே குணவதியை தள்ளி தானே நிறுத்திவிட்டார்.

                  ❤️❤️❤️❤️❤️

“ம்மா… அங்க பாரேன்… கலர் லைட்…” அன்னையின் தாடைப் பற்றி பகலிலேயே வண்ண வண்ண விளக்குகளால் மினுக்கிக் கொண்டிருந்த ஒரு கடையின் பெயர் பலகையை காட்டினான் வேந்தன்.

இது அவனின் முதல் கார் பயணம். அவனின் உற்சாகமும் ஆவலும் எல்லைக் கடந்திருக்க, கடந்து செல்லும் ஒவ்வொன்றையும் கைக்காட்டி குதுகலித்துக் கொண்டிருந்தான்  பிள்ளை. அழுத்தி பிடித்து அவனை தன் மடியில் தான் அமர வைத்திருந்தாள் தென்றல். அப்படியும் திமிறிக்கொண்டு கண்ணாடி சாளரத்தின் வழியே வெளியே தலை நீட்ட முயல்வதும், தகப்பன் மடிக்கு தாவ முயல்வதுமாய் இருந்தான் அவன். அதில் நேசனின் முகத்திலுமே விரிந்தது புன்னகை.

“ப்பா… ப்பா… ஐஸ்கிரீம் கடைப்பா…” கடந்து சென்ற கடையைக் கைக்காட்டி தகப்பனிடம் ஆசையாய் சொன்னான் பிள்ளை. எதை யாரிடம் கேட்டால் கிடைக்குமென்று இந்த குறுகிய காலக்கட்டத்திலேயே கற்று தேர்ந்திருந்தான் அவன்.

வண்டியின் வேகம் குறைய, “வண்டிய ஏன் இப்போ ஸ்லோ பண்ணறீங்க… அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்தீங்க பிச்சுடுவேன்…” என கணவனை அதட்டியவள், “வேந்தா… இன்னைக்கு நோ ஐஸ்கிரீம்… நேத்து நீ மூணாவது ஐஸ்கிரீம் சாப்பிடும் போது இன்னும் ஒன் வீக் ஐஸ்கிரீம் கேக்க மாட்டேனு ப்ராமிஸ் பண்ண தானே…” என்றாள் மகனிடமும் அதட்டலாய்.

மகனுக்கு அதிகம் இனிப்பைக் கொடுத்து அவள் பழக்காவிட்டால் என்ன ‘அதான் நானிருக்கிறேனே…’ என்பதைப் போல, இந்த பூக்குட்டி அவனுக்கு ஆசைக்காட்டி பழக்கியும் விட்டிருந்தாள். எப்போதாவது அதுவும் ஒன்றுக்கு மேல் வாங்கிக் கொடுக்க மாட்டாள் தென்றல். ஆனால் நேற்று பிள்ளைகள் இருவருமாய் சேர்ந்து போட்டிப் போட்டுக் கொண்டு சாப்பிட்டிருந்தனர்.  இதோ கடையை கண்டதும் அந்த சுவையின் நினைவில் கேட்டுவிட்டான் பிள்ளை.

சட்டென்று அவனின் உற்சாகம் வடிந்து போக, உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தகப்பனைப் பார்த்தான் அவன். உடனே பனிக்கூழாய் உருகி விட்டது அவனுக்கு.

“ஒன்னே ஒன்னு தானே தென்றல்… விடேன்…” என‌ மனையாளிடம் சொன்னவன், “ஒன்னு தான் வேந்தா… அதுக்கு மேல கேக்க கூடாது…” என்றான் மகனிடம் கண்டிப்பு போல.

‘நம்பிவிட்டேன் நான்…’ என்பதைப் போல, கையைக் கட்டிக் கொண்டு கணவனையும் மகனையும் சேர்ந்தே முறைத்தாள் தென்றல்.

“ப்ளீஸ்ம்மா… ஒன்னே ஒன்னு…” கண்களை சுறுக்கி ஒன்றுப் போல் இருவரும் கெஞ்சலாய் கேட்க, மறுக்க தான் மனம் வருமா?

“ஒன்னே ஒன்னு தான்…” என்றாள் அதட்டலாய் அழுத்தமாய் அவள். வேக வேகமாய் சம்மதமாய் ஆடியது அவர்களின் சிரம்.

இத்தனை நேரம் அவள் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்து இறகு போல் லேசாகி இருந்தது. தன் அன்னையின் வார்த்தைகள் அவனை கட்டாயம் காயப்படுத்தி விட்டது என்று அவளுக்கும் தெரிந்தது தான் இருந்தது. ஆனால், அந்த இடத்தில் அத்தனை பேரின் மத்தியில் சட்டென்று பெற்றவரை அவளால் கடிந்து எதுவும் சொல்ல முடியவில்லை.

அப்படியே அவள் ஏதாவது சொல்லப் போய், ‘இல்லாததையா சொல்லிவிட்டேன்…’ என அவர் பதிலுக்கு கேட்டு விட்டால், எத்தனை பேருக்கு சங்கடம். கேட்க கூடிய ஆள் தான் அவர் என்று தென்றலும் அறிவாளே!

என்ன சொல்லி கணவனை சமாதானப் படுத்துவது என நிமிடத்திற்கொரு முறை தவிப்பும் யோசனையுமாய் அவள் கணவனின் முகம் பார்த்துக் கொண்டே வர, அதற்கு அவசியமே இல்லை என்பதைப் போல இலகுவாய் இருந்தான் அவன்.

இதே வார்த்தைகளை, அவனை சேர்ந்தவர்கள் யாராவது அவளிடம்‌ சொல்லி இருந்தாள் இவளைப் போல அமைதியாக அவன் கேட்டுக் கொண்டு வந்திருக்க மாட்டான் என்று தோன்றியது. அவளுக்காக என்று அவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய, இன்னுமே அது அவளுக்கு குற்றவுணர்வை தான் தந்தது.

“சாரி…” மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்தாள் அவள்.

அவள் சொன்னது காதிலேயே விழாததுப் போல, “அங்க ஒரு கடை இருக்கு… அது ஒ.கேவா..?” என்றான் அவன் சற்று தொலைவில் இருந்ததை காட்டி.

பெரிய அளவில் இல்லை என்றாலும் அமர்ந்து உண்ணும் வகையில் இருந்தது அந்த வெதுப்பகம் (Bakery – பேக்கரி).

நேசன் மகிழுந்தை ஓரமாய் நிறுத்தி தாயும் மகனும் இறங்க வேண்டி மகிழுந்தின் கதவை திறந்து விட்டான். அவன் எதுவும் சொல்லாததில், தயக்கமாய் மீண்டும் அவன் முகத்தை பார்த்தாள் தென்றல்.

“இறங்கு தென்றல்…” அவன் அழுத்தமாய் சொல்ல, அமைதியாய் பிள்ளையுடன் இறங்கி அவனின் பின்னால் நடந்தாள்.

இருவர் மட்டும் அமர்ந்து உண்ணும் வகையில் நான்கு சின்ன மேசைகள் அங்கே போடப்பட்டிருந்தது. பிள்ளைக்கு பனிக்கூழை வாங்கிக் கொடுத்தவன், அவனுக்கும் அவளுக்குமாய் தேனீரும் சமோசாவும் வாங்கி வந்தான். அவன் வரும் நொடிக்காவே காத்திருந்தவள் போல, “சாரி… அம்மா அப்படி…” என ஆரம்பித்தாள் தென்றல்.

அவனின் பார்வை அழுத்தமாய் அவளில் படிய, கப்பென்று பசைப் போட்டதைப் போல ஒட்டிக் கொண்டது அவள் வாய். பிள்ளையின் மேல் பார்வையை திருப்பிய படியே, “ஒரு விசயத்த ஒருத்தவங்க அவாட் பண்ணறாங்கனா ஒன்னு அதப்பத்தி பேச அவங்களுக்கு இஷ்டமில்லனு அர்த்தம்… இல்லையா அத பத்தி பேச வேண்டிய அவசியமே இல்லனு அர்த்தம்…” அவளுக்கு மட்டும் கேட்கும் அழுத்த குரலில் சொல்லிவிட்டு, மகனை அள்ளி மடியில் இருத்திக் கொண்டு தன்னுடையதை பருக தொடங்கி விட்டான் அவன்.

சில நிமிடங்கள் வேந்தனின் கேள்வியும் நேசனின் பதிலுமாய் கடக்க, “ஸ்வீட் எதுவும் சாப்பிடறீயா தென்றல்…” என்றான் மனைவியிடம். அவள் மறுப்பு சொல்லும் முன்னமே, சின்ன சின்ன துண்டங்களாக வெட்டபட்டு வண்ணமயமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அணிச்சல்களின் ( cake) பக்கம் கை நீட்டி வரிசையாய் அத்தனையும் சுட்டிக் காட்டி கேட்டான் வேந்தன்.

அவசரமாய் நிமிர்ந்து மனைவியை தான் பார்த்தான் நேசன்‌. அவளோ மேசையில் கை ஊன்றி, அதில் கன்னத்தை தாங்கியபடி ‘சொன்னேனே கேட்டாயா..?’ என்பதைப் போல அவனை ஏளனமாய் முறைத்துக் கொண்டிருந்தான்.

பிள்ளையிடம் இல்லையென்று சொல்லவே அவனுக்கு மனது வரவில்லை. மீண்டும் நிமிர்ந்து மனைவியைப் பார்க்க, அவள் ‘முடியவே முடியாது…’ என்பதைப் போல கையைக் கட்டிக் கொண்டு மறுப்பாய் தலையசைத்தாள்.

“நாம வாங்கிட்டு போய் வீட்டுல சாப்பிடலாம் வேந்தா…” இருவருக்கும் பொதுவாய் சொன்னவன், அங்கே அடுக்கியிருந்த பாதியை பையில் நிறைத்துக் கொண்டு  வந்தான். முறைப்பையும் தான்டி சிறு மின்னல் கீற்றாய் தென்றலின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.

நேராய் அவர்கள் சென்றது வங்கிக்கு தான். தென்றலுக்கும் அவனுக்குமான கூட்டு கணக்கை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தவன், தனது அத்தனை காப்பீடுகளுக்கும் நாமினியாய் அவளை மாற்ற ஏற்பாடு செய்தான். அவளுக்குமே புதிய காப்பீடுகள் தொடங்க ஆயத்தம் செய்தான். அவள் ஏன் என்று கேட்கவோ மறுக்கவோ கொஞ்சமும் அவகாசம் தரவில்லை.

அடுத்தபடியாக அவளும் பிள்ளையும் சம்பந்தபட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் திருத்த ஏற்பாடு செய்தான். இதற்கே நேரம் மதியத்தை கடந்துக் கொண்டிருந்தது. ஆசையாய் கேட்டான் என இடையில் பிள்ளைக்கு இரண்டு அணிச்சல் துண்டுகளை கொடுத்திருக்க, இப்போது சாப்பாடே வேண்டாம் என்றான் அவன். அதற்கும் கணவனை தான் முறைத்தாள் அவள். அலட்டிக் கொள்ளவில்லை அவன்.

எதையும் ஏன் என்று கேட்கவோ மறுக்கவோ அவன் விடவில்லை என்பதைவிட அவளுக்கே விருப்பமில்லை. ஏதாவது அவள் சொல்லப் போய் காலையில் நடந்ததைப் போல அவனை வருத்தி விடுவோமோ என்றிருந்தது.

அடுத்தது அவர்களின் மகிழ்ந்து திரையரங்கின் வாயிலில் வந்து நின்றது. கேள்வியாய் அவள் அவனைப் பார்க்க, “இங்க தான் நான் என் குடும்பத்த முதல் தடவை பார்த்தேன்…” என்றவன் குரல் நெகிழ்ந்து ஒலித்தது. அதில் அவளின் உள்ளமுமே குளிர்ந்து போனது.

வேந்தனை தான் தூக்கிக் கொண்டவன், அவளின் கரத்தோடு தன் கரத்தை பிணைத்து விரல்கள் நெரிபட கோர்த்து பிடித்துக் கொண்டு நடந்தான்.

“நான் அவ்வளவா படத்துக்கு எல்லாம் போக மாட்டேன் தென்றல்… அவ்வளவா என்ன பூக்குட்டி பிறக்க முன்ன ஒரு தடவ குடும்பமா போகும் போது படத்துக்கு வந்திருக்கேன்… அதான் கடைசியா வந்தது… அன்னைக்கு கூட பிள்ளைங்களுக்காக தான் வந்தேன்…

மாதவன் ஒவ்வொரு தடவ படத்துக்கு போகும் போது என்னையும் கூப்பிடுவான் தான்… ஆனா எனக்கு தான் அவங்க குடும்பத்துல நான் அதிகப்படிங்கற மாதிரி தோணும்… அதனாலேயே போக மாட்டேன்…

இது மாதிரி பொது இடத்துக்கோ விஷேசத்துக்கோ அவ்வளவா போகவே மாட்டேன்… எல்லாரும் பொண்டாட்டி பிள்ளைங்கனு வரும் போது என்னையும் மீறி ஏக்கமா அவங்க மேல பார்வை போயிடும்… ‘ஐய்யையோ அவங்களுக்கு நம்ம கண்ணு பட்டுடுச்சோ… ஏதாவது ஆகிடுமோ…’ங்கற மாதிரியான தாட்ஸ் எல்லாம் கூட வந்திருக்கு… அதனாலேயே முருகர பாக்க கூட அதிகாலையில கூட்டம் வர முன்னாடியே போய் பார்த்துட்டு வந்துடுவேன்…” அவளை உரசியபடியே சின்ன குரலில் மனம் திறந்து சொல்லிக் கொண்டு வந்தான் நேசன். அதில் இருந்ததெல்லாம் ‘இதோ… இப்போது எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது…’ என்ற நெகிழ்ச்சி மட்டும் தான்.

                     – நேசம் வளரும்…

    No comments yet.