நெஞ்சம் 33:
நிமிடங்கள் கரைந்தும் அவன் எப்படி விட்டுச் சென்றானோ அதே நிலையில் தான் அமர்ந்திருந்தாள் தென்றல். உடலின் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, எட்டிப் பார்த்த கண்ணீரை வீம்பாய் உள்ளிழுத்துக் கொண்டாள்.
“ம்மா…” அவளை கத்தி அழைத்தபடியே அந்த அறைக்கே தேடிக் கொண்டு வந்துவிட்டான் வேந்தன். மகனை கண்ட நொடி மற்றதெல்லாம் பின்னுக்கு போய், மகன் மட்டுமே மனதை நிறைத்தான். அவனை அள்ளி தூக்கி மடியில் வைத்துக் கெண்டாள் அவள். ஒரு மாதிரி மனதின் சஞ்சலங்கள் அடங்கி அமைதி சூழ்ந்தது.
நிச்சயம் நேசன் தான் அனுப்பி இருக்க வேண்டும். பின்னே, வெளியில் மற்ற பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவன் அன்னையே தேடிக் கொண்டு ஏன் வரப் போகிறான்? அவனின் செய்கை மென்சாரலாய் மனதிற்குள் சாமரம் வீசதான் செய்தது.
பட்டுப் பாவடையை தூக்கி பிடித்துக் கொண்டு, இரண்டு பக்கமும் சிண்டு முடிந்து சிண்டே தெரியாத அளவிற்கு அதில் பூவை சுத்திக் கொண்டு, “அத்த…” என்றபடியே வேந்தனின் பின்னால் ஓடி வந்தாள் பூக்குட்டி.
“அத்தைக்கு என்ன வச்சுருக்காங்களாம் பூக்குட்டி…” என்றபடியே அவள் பிள்ளையை அள்ளி கன்னத்தில் முத்தம் பதிக்க, இருவரையும் ஒன்றாய் முறைத்தப்படி அன்னையின் மடியில் இருந்து இறங்கி முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே ஓடிப் போனான் வேந்தன்.
நேற்றிலிருந்தே இதே கதையாக தான் இருக்கிறது. நேசன் வேந்தனை தூக்கினால் இந்த குட்டி முறைத்து சிலுப்பிக் கொண்டு போவதும், தென்றல் அந்த குட்டியை தூக்கினால் இவன் சிலுப்பிக் கொண்டு போவதும் தொடர்கதையாகி விட்டது.
இதுவரை தென்றல் யாரையும் கொஞ்சியோ, தூக்கி வைத்துக் கொண்ட வேந்தன் கண்டதில்லை. இப்போது புதியாய் தன் பாசத்தில் பங்கு போட வந்த, அன்னையிடம் எப்போதும் ஒட்டி உரசிக் கொண்டே சுற்றும் அந்த குட்டியை அவனுக்கு சுத்தமாய் பிடிக்க தான் இல்லை. ஆனால், அன்னையின் ஒரு பார்வைக்கே முகத்தை திருப்பிக் கொண்டு அமைதியாய் போய் விடுவான் அவன். ஆனால் இந்த பூக்குட்டி இருக்கிறதே! சரியான அடாவடி! அப்பன்காரன் மகனை தூக்கிவிட்டால் போதும், கத்தி அழுது ஆர்பாட்டம் செய்து அப்பன் மகன் இருவரின் தலைமுடியையும் உலுக்கு உலுக்கென்று புளியமரத்தை உலுக்குவது போல உலுக்கி வேந்தனை இறக்கிவிட்டு தான் ஓய்ந்தாள்.
“ம்மா… சாப்பிட கூப்பிட்டா…” என்றபடியே தென்றலின் கழுத்தை கட்டிக் கொண்டு, அவளைப் போலவே கன்னத்தால் அழுத்தமாய் முத்தம் வைத்தாள் பூக்குட்டி.
“அச்சோ… என் தங்கப்பிள்ள…” என மீண்டும் முத்தம் பதித்து அவளை கொஞ்சியவள், “என் பூக்குட்டி சாப்பிட்டாங்களா..?” என்றாள்.
“இல்லையே…” என்றாள் உதடு பிதுக்கி.
“அப்போ பூக்குட்டிக்கு ஊட்டி அத்த விடட்டுமா..?” என கேட்டபடியே அவளிடம் பேசிக் கொண்டே அறையைவிட்டு வெளியே வந்தாள்.
அதற்காகவே காத்திருந்ததைப் போல ஆராய்ச்சியாய் அவளின் மீது தான் படிந்தது நேசனின் பார்வை.நேசனுக்கும் கூட அவன் நடந்துக் கொண்ட விதத்தில் அத்தனை சங்கடம் தான். தன்னை, தன் உறவை, தன் உரிமையை அவளிடம் வலிந்து திணிக்கிறோம் என்று புரிய தான் செய்தது. கண்ணாடிப் பாத்திரத்தைப் போல எத்தனை மென்மையாய் கவனமாய் அவளைக் கையாள வேண்டுமென்று அத்தனை யோசித்து தனக்குள் உருப்போட்டு வைத்திருந்தான் அவன். ஆனால், அந்த நொடி அவனுக்கு அது எதுவுமே கைக் கொடுக்கவில்லை.
அவள் சொன்ன வார்த்தைகளைவிட அதில் கொட்டிகிடந்த உணர்வுகள் தான் அவனை மொத்தமாய் துண்டாடிச் சென்றிருந்தது. அவள் முகத்திலிருந்த கலக்கமும் பயமும் தயக்கமும் அவனை மொத்தமாய் வேரோடு சாய்த்திருந்தது. அவன் அவள் மீது மலையளவு நம்பிக்கை கொண்டிருக்க, அதில் துளியளவு கூடவா அவளுக்கு இல்லை. அப்படியென்ன அவளையும் பிள்ளையையும் அவன் நிர்கதியாய் விட்டுவிடுவானாம்? எப்படி அவனை அவளால் அப்படி நினைக்க முடிந்தது. அவளை திருமணம் செய்துக் கொள்ள கேட்ட நொடியில் இருந்து தன் மீதான அவளின் நம்பிக்கையை வளர்த்தெடுக்க எத்தனை மெனக்கெடுகிறான். அது எதுவும் அவளை துளிக்கூடவா அசைக்கவில்லை.
புரையோடிப் போன காயத்தை, சிலர் தானே சுத்தபடித்தி மருந்திட்டு ஆற்றிக் கொள்வார்கள். இன்னும் சிலரோ வெளிப்புறத்தை காயவிட்டு உள்ளே அப்படியே ரணமாய் வைத்திருப்பார்கள். தோன்றும் போதெல்லாம் அந்த காயத்தை கீறி தானே தன்னை ரணப்படுத்திக் கொள்வார்கள். வலிந்து ஒருவர் அந்த காயத்திற்கு மருந்திட்டி ஆற்றினாலொழிய காலமெல்லாம் அதன் ரணத்தை சுமந்துக் கொண்டே திரிவார்கள். நேசன் முதல் ரகமென்றால், தென்றல் இரண்டாம் ரகம். அவளின் ரணங்களுக்கு அவன் மருந்தாவான்.
சோபாவில் நேசன் அமர்ந்திருக்க, அவன் மடியில் ஜம்பமாய் அமர்ந்திருந்தான் வேந்தன். பூக்குட்டியை கண்டதும் அமர்த்தலாய் ஒரு பார்வை வேறு. வைத்துவிட்டது அந்த குட்டி ஒப்பாரியை. தென்றலிடமிருந்து திமிறிக் கொண்டு இறங்கி வந்து சோபாவில் ஏறி நேசனின் மடியில் அமர்ந்திருந்தவனை பிடித்து தள்ள, அழுத்தி பிடித்து அவளை இன்னொரு தொடையில் அமர்த்திக் கொண்டான் நேசன். அப்படியும் திமிறிக் கொண்டு, வேந்தனை தள்ளுவதில் தான் குறியாய் இருந்தது அந்த குட்டி.
“அதான் உன் மாமான்காரன் உன்னையும் உக்கார வச்சு இருக்கான்ல… அப்பறம் எதுக்குடி அவன தள்ளற…” என்றபடியே மெல்லியதாய் மிக மென்மையாக தான், பக்கத்தில் அமர்ந்திருந்த விசாலம் அவள் தொடையில் தட்ட, கத்தி ஊரை கூட்டியது அந்த குட்டி.
“அச்சோ… பிள்ளைய ஏன்த்த அடிக்கறீங்க… எப்படி அழறா பாருங்க… வலிச்சுட்டுச்சு போல…” என்றபடியே ஓடி வந்து அவளை தூக்கிக் கொண்டாள் தென்றல்.
“ஆமான்… நான் அடிச்சது அப்படியே உன் மருமகளுக்கு வலிச்சுடுச்சாக்கும்… நாடக்காரி… இருடி சூட்டுக்கோல வச்சு ஒரே இழுப்பா இழுத்து விடறேன்…” என்றார் கண்களை உருட்டி மிரட்டலாய்.
அதில் இன்னுமே அழுகையை கூட்டியது அந்த குட்டி. “சும்மா இருங்கத்த… பிள்ள பயந்துட்டா… எப்படி அழற பாருங்க…” என்றாள் தென்றல் லேசாய் குரல் உயர்த்தி.
“பாருடா… அதுக்குள்ள மாமியார அதட்டறத…” என்றார் விசாலம். அவர் சொன்ன பிறகு தான் என்ன செய்தோம் என்றே உரைத்தது. என்ன நினைப்பாரோ என தவிப்பாய் அவள் பார்க்க, அவளைத் தவிர எல்லாரும் இயல்பாய் தான் இருந்தனர்.
“இவ அப்படியே பயந்துட்டாலும்… இந்நேரம் அவ அம்மா இங்க இருந்து இருக்கணும்… பட்டுபட்டுனு தொடையிலையே நாலுப் போட்டு இருப்பா…” என்றார் பூக்குட்டியை பார்த்து அதட்டலாய் விசாலம். தனியாக பிள்ளையை சமாளிக்க முடியாத போது, பூக்குட்டியின் சேட்டை கூடும்போது பட்டென்று ஒன்று வைத்து விடுவாள் தான் கயல்.
தேம்பலோடு முகத்தை உர்ரென்று வைத்தபடி, தனது முட்டை விழியை இன்னுமே பெரிதாக்கி மாமனையும் பாட்டியையும் முறைப்பதாய் பாவணை பண்ணியபடி முகத்தை திருப்பிக் கொண்டு அத்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டது அந்த குட்டி.
“அதெல்லாம் என் தங்கபிள்ளைய யாரும் அடிக்க விட்டுடுவேனா..? அவங்க கிடக்காங்க… நாம போய் சாப்பிடுவோமா பட்டு…” என்றபடியே பிள்ளையின் கண்ணீரை துடைத்து செல்லம் கொஞ்சிய படியே சமையலறைக்கு தூக்கிச் சென்றிருந்தாள் தென்றல்.
செல்லும் அன்னையையே ஒரு மாதிரி முகம் சுண்ட, ஏக்கமாய் பார்த்தான் வேந்தன். அன்னை தன்னை கவனிக்காததில் சட்டென்று சுணங்கிப் போனது பிள்ளையின் மனம்.
“அவ என்கிட்ட குடுங்கண்ணி… நான் ஊட்டறேன்… உங்ககிட்டனா ஆட்டம் காட்டுவா..? நீங்க வேந்தனுக்கு குடுங்க… இட்லி வைக்கட்டுமா இல்ல பொங்கல் வைக்கட்டுமா பிள்ளைக்கு…” என்றாள் கயல் பூக்குட்டியை வாங்கியபடியே.
“அவனுக்கு ஒரு குட்டி பிளேட்ல பொங்கல் வச்சு தாங்க… அவனே சாப்பிடுவான்…” என்றாள் புன்னகையோடு.
“அப்ப நீங்களும் அவனோடவே உக்காருங்க… அண்ணன் எங்கையோ கிளம்பணும்னு சொன்னுச்சு… அதான் கூப்பிட்டு விட்டேன்…” என்றவள் மற்றவர்களையும் சாப்பிட அழைத்தாள்.
கீழே வரிசையாய் இலைப் போட, தென்றலுக்கும் நேசனுக்கும் நடுவே குட்டியாய் ஒரு இலைப்போட்டு பெரிய மனிதனாய் அவனையும் அமர வைக்க, ஒரே கொண்டாட்டம் அவனுக்கு. அவனுக்கு ஒரு இலைப் போட்டிருந்தாலும், தன்னுடையதே நேசன் ஊட்ட, பிள்ளையின் இலையில் இருந்ததெல்லாம் அன்னையின் இலைக்கு இடம் பெயர்ந்தது.
“என்ன பண்ணறீங்க நீங்க… அவனே சாப்பிடுவான் விடுங்க… பாருங்க இப்ப எல்லாத்துலையும் ஒரு ஒரு வாய் சாப்பிட்டு என் இலைல வைக்கறான்…” என்றாள் சின்ன குரலில் அதட்டலும் முறைப்புமாய் தென்றல்.
“ஃபயர் இஞ்சின் ரொம்ப தான் சூடா இருக்கு போலயே… இப்ப என்ன அவன் உன் இலைல வைக்கறது தானே உனக்கு பிரச்சனை… அத நான் சாப்பிடறேன் விடு…” என்றபடியே பிள்ளை அவளின் இலைக்கு இடம் பெயர்த்திருந்த பதார்த்ததோடு சேர்த்து அவள் உண்டதையும் தன் இலைக்கு மாற்றிக் கொண்டான் நேசன். இப்பொழுது திரும்பி அவனின் முகம் பார்த்து நேராய் முறைக்க, யாரும் அறியாமல் ஒற்றே கண்சிட்டி காற்றில் முத்தங்களை பறக்கவிட்டான் அவன்.
அவனின் செய்கையில் இவளுக்கு தான் மூச்சடைத்து படபடவென வந்தது. மீண்டுமே அவன் முத்தங்களை காற்றில் தூது அனுப்ப, வேகமாய் முகத்தை திருப்பிக் கொண்டாள் பாவை.
‘அம்மாடியோவ்… எங்க வச்சு என்ன பண்ணறாங்க இவங்க…’ என எண்ணியவளின் பார்வை, அவசர அவசரமாய் சுற்றி இருந்தவர்களை ஆராய, அவர்களின் பார்வையில் இவர்களின் செய்கை விழுந்தாலும் யாரும் கண்டதாய் காட்டிக் கொள்ளவில்லை.
அதன் பிறகு சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அவன் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை பாவை. உண்டு முடித்து புடவைக்கு மாறி கீழிறங்கி வந்தாள் தென்றல். பிஸ்தா பச்சையில் டிசைனர் புடவையும், மெல்லிய அலங்காரமுமாய் வந்தவளை மெச்சுதலாய் பார்த்தான் நேசன். அவளின் நிறத்தோடு அத்தனை பாந்தமாய் அழகாய் பொருந்திப் போனது அந்த புடவை.
“சிவா… மொத தடவையா வெளிய போறீங்க… முதல தெரு முனையில இருக்க கோவிலுக்கு போய்ட்டு அப்பறம் மத்த இடத்துக்கு போய்ட்டு வாங்கப்பா…” என்றார் விசாலம்.
“சரிம்மா…” என்றபடியே மகனை தூக்கிக் கொண்டு மனைவியை நெருங்கி வந்தான் நேசன். நல்ல வேளையாக பூக்குட்டி அவள் அன்னையுடன் பின்பக்கத்தில் நின்றிருந்தாள். இன்னுமே அவளை சாப்பிட வைக்க மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள் கயல். இல்லையென்றால் இன்னொரு குட்டி கலாட்டாவை அரங்கேற்றி இருப்பாள் அந்த பூக்குட்டி.
அதே நேரம் அவளிடம் வந்த குணவதியும், “டி தென்றலு… மறுவீட்டுக்கு போகணும்ல… மாப்பிள்ளைய கேளேன்டி…” என்றார் கிசுகிசுப்பாய்.
“என்னத்தை… எதுனாலும் என்கிட்டையே கேளுங்க…” என்றான் நேரடியாய் அவரிடம் நேசன்.
“இல்ல மாப்பிள்ள… மறுவீட்டுக்கு…” என்று தயக்கமாய் அவன் முகம் பார்த்தார் குணவதி. என்னவோ இந்த வீட்டிற்குள் நிற்பதே ஒரு மாதிரி அசௌகர்யமாய் இருந்தது. அவர்கள் அனைவரும் ஒன்று தான் மட்டும் தனி என்ற எண்ணம் மேலெழுந்தது. இப்பொழுதே கிளம்பிவிட சொன்னது அவரின் மனது.
“அதுக்கென்னத்த நாளைக்கு போறது தானே… எனக்கு இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு… அதுவுமில்லாம இரண்டாவது நாள் மறுவீட்டுக்கு போக மாட்டாங்களே… மூணு ஐஞ்சுனு ஒத்தபட நாள்ல தான் போவாங்க… ஏன்ம்மா… அப்படி தானே…” என குணவதியிடம் சொல்லி, கேள்வியாய் விசாலத்தைப் பார்த்தான் நேசன்.
“ஆமான்… ஆமான்… அதான் முறை… எனக்கு தான் எல்லாம் மறந்துடுச்சு… வயசாகுது இல்ல… உங்களுக்கு முன்னாடியே அனுபவம் இருக்கும்… அதான் சரியா சொல்லறீங்க…” என்றார் குணவதி படபடவென்று.
சட்டென்று நேசனின் முகம் கருத்துவிட, எதுவும் சொல்லாமல் பிள்ளையை தூக்கியக் கொண்டு வெளியே போய்விட்டான் அவன். திரும்பி அன்னை ஒரு பார்வை பார்த்தவளும், எதுவும் சொல்லாது கணவனின் பின்னால் நடந்துவிட்டாள்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.