நெஞ்சம் 32:
மற்றவர்களுக்கு மட்டுமல்ல மாதவனுக்குமே இது புதிய செய்தி தான். மாதவனும் நேசனுமாய் தான் இடத்தை பார்த்து, பேசி முடித்து, வங்கியில் கடனுக்கான முன் ஏற்பாடை செய்வது என அத்தனையும் ஒன்றாய் செய்திருந்தார்கள். அவனிடம் கூட, இப்படி செய்யட்டுமா என்றோ இல்லை இப்படி செய்கிறேன் என்றோ ஒரு வார்த்தை சொல்லி இருக்கவில்லை நேசன்.
வீடும் நிலங்களும் விசாலத்தின் பெயரில் இருக்க, அவர்களின் இருசக்கர வாகனங்களின் விற்பனையகத்தின் இடமும், கட்டிடமும் தொழிழும் மாதவன் நேசன் என இருவரின் பெயரில் இருந்தது. ஆக புதிதாக தொடங்கும் தொழில், தங்கை மனைவி என இருவரின் பெயரில் இருக்க வேண்டுமென பிரியப்பட்டான் நேசன். அதற்கு மற்றவரிடத்தில் எதிர்ப்பும் இருக்காது என்பது அவனின் கணிப்பு.
‘இப்பொழுது தானே நினைத்தாள்… மாமியாருடன் தன்னால் இணக்கமாக இருந்துவிட முடியுமென்று… அத்தனையும் ஒத்தை வார்த்தையில் தகர்த்து விடுவான் போலயே..! கல்யாணம் முடிந்த அடுத்த நாளே மனைவியின் பெயருக்கு சொத்தை வாங்குறேன் என்றால் அவளை என்னவென்று நினைப்பார் அவர்…’ மெல்லியதாய் பயம் நெஞ்சை கவ்வ, மாமியாரை தான் பார்த்திருந்தாள் தென்றல்.
“அதுக்கென்னப்பா தாராளமா பண்ணறது தானே…” என்றார் நிறைந்த மனதாய் விசாலம்.
“ஏற்கனவே பத்திரத்த பதிஞ்சாச்சா… இல்லை இனிமேட்டு தானா…” தொடர்ந்து மெல்லிய புன்னகையுடன் அவர் வினவ, பார்த்திருந்த தென்றலுக்கு தான் திக்கென்று இருந்தது. ஏனோ சாதாரணமாகவோ கேலியாகவோ அந்த வினாவை அவளால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
முதல் முறை எல்லாம் தவறாகி அவளிடமிருந்து தவறிப் போயிருக்க, இம்முறை கிடைத்திருக்கும் வாழ்வை இறுக பற்றிக் கொள்ளும் எண்ணம். அதுவே அவளுக்கு அனைவரிடமும் எந்த சண்டை சச்சரவுமின்றி இணக்கமாக சுமூகமாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்திருந்தது. அதி முக்கியமாக மாமியாரிடம். அவள் கணவன் என்னடாவென்றால் முதல் நாளே பிரச்சனைக்கு பிள்ளையார்சுழி போடுகிறான்.
பெரிதாய் விரிந்தது நேசனின் புன்னகை. “சர்ப்ரைஸா யாருக்கும் சொல்லமா செய்யலாம்னு தான் ம்மா நினைச்சேன்… ஆனா கையெழுத்து போட உங்க மகளும் மருமகளும் தானே வரணும்…” என்றான் தாயின் பக்கத்தில் சென்று அமர்ந்தபடி இலகுவாய் தோளைக் குலுக்கி நேசன்.
“பொழைச்சுப்படா டேய்…” என்றான் நண்பனின் முதுகில் பட்டென்று ஒன்று வைத்து மாதவன்.
“நேத்து கல்யாணம் பண்ண எனக்கே தோணுது… எங்க… அதுக்கெல்லாம் ஒரு நல்ல மனசு வேணும்…” என்றான் பெருமூச்சோடு தங்கையை தொட்டு நண்பனில் பார்வையை பதித்தபடி நேசன்.
“ஏன்டா டேய்… நான் நல்லா இருக்குது பிடிக்கலையா உனக்கு…” என்றபடியே நேசனின் கழுத்தில் கையைப் போட்டு வளைத்து பிடித்தவன், வயிற்றில் மெல்லியதாய் குத்தினான்.
“விடுடா டேய்… ஏய்… பாப்பா… என்னனு கேளு உன் புருஷன…” அவனிடமிருந்து திமிறி விலக முயன்ற படியே கலகலத்து சிரித்தான் நேசன்.
அதைப் பார்த்திருந்த விசாலத்தின் கண்கள் பனித்துப் போனது. “எம்புள்ள இம்புட்டு சந்தோஷமா சிரிச்சு எத்தன வருஷமாச்சு… ஆத்தி… என் கண்ணே பட்டுடும் போலயே… இந்தா கயலு ஓடிப் போய் புடி கல் உப்பையும் வர மிளகாயும் கொண்டு வாடி…” என்றார் தொற்றிக் கொண்ட பரபரப்புடன் விசாலம்.
மகனையும் மகளையும் குடும்பமாய் அமர வைத்து திருஷ்டி கழித்துவிட்டே ஓய்ந்தார் அவர். கண்ணீர் சரசரவென கன்னங்களில் இறங்க அப்படியொரு சந்தோஷ புன்னகை அவரிடம்.
“என்னம்மா…” என்றான் எழுந்து நின்று தோளோடு அன்னையை இறுக அணைத்தபடி வாஞ்சையாய் நேசன்.
“நல்லா இருப்பய்யா… உன் மனசுக்கு ஒரு குறையும் இல்லாம நூறு வருஷம் பொண்டாட்டி புள்ளனு வீடு நிறைக்க சந்தேஷமா வாழ்வ ராசா…” அவன் தலையில் கைவைத்து ஆசிர்வாதிப்பதைப் போல் சொன்னவரின் குரலிலும் விரலிலும் மெல்லிய நடுக்கம்.
“அதெல்லாம் உங்க எண்ணப்படி எப்பவும் நாங்க நல்லா தான்ம்மா இருப்போம்…” என்ற நேசனின் குரலும் நெகிழ்ச்சியில் உடைந்திருந்தது.
“அப்படியே சூட்டோட சூடா குலதெய்வ கோவிலுக்கு போய் ஒரு பொங்கல வச்சுட்டு வந்திடலாம்ப்பா…” என்றார் எங்கே விட்டால் மகனை மீண்டும் பிடிக்க முடியாதோ என்ற எண்ணத்தோடு விசாலம்.
“பண்ணிடலா ம்மா… நாளு பாருங்க…” என்றான் நேசனும் உடனே. நம்ப முடியாதவராய் மகனைப் அதிசயித்துப் பார்த்தார் விசாலம்.
ஏதோ திருமணம் எனவும் இரண்டு நாட்கள் சேர்ந்தார் போல் வீடு தங்குகிறான் அவன். இல்லையென்றால் பண்டிகை நாட்களில் கூட வீட்டிலிருக்க மாட்டான். விசேஷங்களுக்கு கூட, தொழில்முறை என்றால் நண்பனை அனுப்புவான், சொந்தங்கள் என்றால் அன்னையையும் தங்கை குடும்பத்தையும் அனுப்பி வைப்பான். இந்த எட்டு ஆண்டுகளில் அவன் சென்று வந்த விசேஷங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி தான் இருந்தது அவனின் வாழ்க்கை முறை.
உடனே நாட்காட்டியுன் அமர்ந்து விட்டார் விசாலம். “நாளைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையா இருக்கு சிவா… போய் பொங்க வச்சு கிடா வெட்டிட்டு வந்துடலாம்…” என்றார் உற்சாகமாய்.
தொடர்ந்து என்னென்ன செய்ய வேண்டும், யாரையெல்லாம் அழைப்பது என அவர் தொடர்ந்து அதுப் பற்றி பேச தொடங்கிவிட, அவர்களுடன் ஒன்றவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் இறுக்கத்துடன் நின்றிருந்தாள் தென்றல்.
ஏதோ தீவிர யோசனையுடன் நின்றிருந்தவளின் தோள் மீது கரம் பதித்து, “என்ன தென்றல்…” என்றாள் அரசி. திரும்பி தோழியின் முகம் பார்த்தவளின் முகத்தில் அத்தனை கலக்கம். துளிர்த்து நின்ற நீரை இமைக்குள் அணைக்கட்டி வைக்கும் பெரும் முயற்சியில் இருந்தாள் பெண்.
பிறரின் கவனத்தை கவராது, அவளின் கைப் பிடித்து விறுவிறுவென தான் தங்கியிருந்த அறைக்கு அழைத்து வந்திருந்தாள் அரசி.
“என்னடி இது… நேத்துல இருந்து பொசுக்கு பொசுக்குனு கண்ணுல தண்ணீ வச்சுட்டு…” என்றாள் கடிந்துக் கொள்ளும் சின்ன குரலில் அதட்டலாய் அரசி. அவள் பார்த்து பழகிய தென்றலுக்கும் இவளுக்கும் தான் எத்தனை வித்தியாசம். அதென்ன ஒரு நல்ல காரீயம் நடக்கும் போது, அதைப் பற்றி பேசும் போது இப்படி தொட்டதற்கும் அழுகை என எரிச்சலாக கூட வந்தது.
“பயமா இருக்குடி…” என்றாள் ஒரு மாதிரி கம்மிவிட்ட குரலில் தொண்டையடைக்க தென்றல்.
“பயமா… எதுக்கு பயம்..?” என்றாள் உண்மையில் புரியாத பாவனையுடன் அரசி.
“அது… அது… எப்படி..?” என்ன சொல்லி தன்னை விளக்குவது என்றே தெரியாமல் தடுமாறி தோழியைப் பார்த்தாள் தென்றல்.
“என்னனு சொன்ன தானே தெரியும் தென்றல்…” வாஞ்சையுடன் வினவிவள், அவளை கட்டிலில் அமர்த்தி ஆதரவாய் கரங்களை அழுந்த பிடித்துக் கொண்டாள்.
“எனக்கு… எனக்கு… என்னனு சொல்ல தெரியல அரசி… ஆனா ரொம்ப பயமா இருக்கு… தொடர்ந்து கஷ்டத்த மட்டுமே பாத்திட்டு… இனிமே என் லைப்ல எந்த சந்தோஷமும் இல்ல… எனக்கு எந்த நல்லதும் நடக்காதுனு நினைச்சுட்டு இருந்தேன்… இத்தன நாள் என் லைஃப்பும் அப்படி தான் இருந்துச்சு… ஆனா இப்போ இத்தன சீக்கரம் எல்லாம் மாறவும் சட்டுன்னு எதையும் ஏத்துக்க முடியல… எங்க எல்லாம் என் கையவிட்டு போய்டுமோனு பயமா இருக்கு…” என்றாள் நடுக்கத்துடன் தென்றல்.
தொடர் இழப்புகளை மட்டுமே சந்தித்து, நமக்கெல்லாம் இனி எதுவுமே நல்லதாக நடக்காது என்று தீர்மானித்து கொண்ட பின், சட்டென்று நிகழும் ஒரு மகிழ்ச்சியான விசயத்தை, ஒருவரின் ஆதித அன்பை மனம் ஏற்காது. முழுமாய் அதன் சந்தோஷத்தை அனுபவிக்க கூட முடியாது அஞ்சி நடுங்கும். இதுவும் கைவிட்டு போய்விடுமோ? ஏமாந்து விடுவோமோ? கனவாய் களைந்திடுமோ என மனம் தொடர்ந்து ஒரு வித சஞ்சலத்தில் உழலும். அத்தனையும் சந்தேகிக்க சொல்லும். அப்படியான ஒரு மனநிலையில் தான் இருந்தாள் தென்றல்.
“ஏன்டி…” என்றவளுக்கு என்ன சொல்லி அவளை தேற்றுவது என்றே தெரியவில்லை.
“தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காத தென்றல்…” என்றாள் ஆதுரமாய் அவளின் கரங்களில் அழுத்தம் கொடுத்து.
“அட்வைஸ் பண்ணறது ரொம்ப ஈஸி தென்றல்… இந்த நிமிஷம் தான் நிரந்தரம்… கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ பத்தி நினைக்காதனு நான் ஆயிரம் சொல்லலாம்… ஆனா அதோட வலியும் வேதனையும் அனுபவிச்ச உனக்கு மட்டும் தான் தெரியும் அது எத்தனை கஷ்டம்னு… அத நீயே நினைச்சா மட்டும் தான் கடந்தும் வர முடியும்… அத நீ கடந்து வர என்னைக்கும் நான் உனக்கு துணையா இருப்பேன்…” என்றாள் மென்மையாய் அவளை தோளோடு அணைத்தபடி.
“நான் சொல்ல வேண்டிய டைலாக் எல்லாம் நீங்க சொல்லிட்டு இருக்கீங்க மேடம்…” கதவில் கைக்கட்டி சாய்ந்து நின்றபடி, கேலியாய் சொன்னான் நேசன். பார்வையில் அவனின் பாவை விழவில்லை என்றதுமே தேடிக் கொண்டு பின்னாலேயே வந்திருந்தான் அவன்.
பெண்கள் இருவரின் பார்வையும் அவசரமாய் அவனிடம் திரும்பியது. “ஹரினி உன்ன காணும்னு அங்க தேடிட்டு இருக்கா… நீங்க கிளம்புங்க மேடம்… எங்க பொண்டாட்டிய நாங்க பாத்துக்கறோன்…” என்றான் அழுத்தமாய் நேசன்.
திரும்பி தென்றலை பார்த்தவள் நேசனை கடக்கும் முன், “ரொம்ப பண்ணறீங்க சார்… ஹரினி… என்ன… கூப்பிட்டா… நம்பிட்டேன் நான்…” என்று அவனைப் போலவே கேலியாய் சொல்லி கடந்தும் சென்றுவிட்டாள் அவள்.
நின்ற தோரணை மாறாது அழுத்தமாய் சில நொடிகள் தென்றலையேப் பார்த்திருத்தான் நேசன். “சேரி கட்டிட்டு கிளம்பு… நான் வெளிய போறோம்…” என்றான் உத்தரவு போல கடின குரலில்.
அவளுக்கு ஆறுதலாய் ஏதாவது சொல்வான் இல்லை சமாதானப் படுத்த முயல்வான் என அவள் நினைத்துக் கொண்டிருக்க அவனின் குரலில் இருந்த தோனி அவளுள் உறங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை சிலிர்த்தெழ வைத்திருந்தது.
“எங்க..?” என்றாள் அவளும் அழுத்தமாய் பிடிவாத குரலில்.
“எங்கனு சொன்னா தான் ஓனரம்மா என்கூட வருவீங்களோ..?” என்றான் நக்கலாய் அவன்.
‘ஓனரம்மா…’ மெல்லிய குரலில் தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், எதனால் அப்படி அழைக்கிறான் என பிடிப்பட்டதும், “யார கேட்டு என் பேர்ல இடத்த ரெஜிஸ்டர் பண்ண முடிவு பண்ணீங்க நீங்க..?” என்றாள் அதட்டலாய்.
“என் பொண்டாட்டி பேர்ல ரிஜிஸ்டர் பண்ண யார கேக்கணும் நான்…” என்றான் அவளைப் போலவே அதட்டலாய் நேசனும்.
நேற்றிரவு அத்தனை மென்மையுமாய் இதமுமாய் பேசியவன் இவன் தானா என்று இருந்தது அவளுக்கு.
“என்ன கேக்கணும்…” என்றாள் வெடுக்கென தென்றலும்.
“அதான் வெளியில சொன்னனே… நீயும் கேட்டுட்டு தானே இருந்த…” என்றான் சட்டென்று தணிந்து சாதாரண குரலில் நேசன்.
“பர்மிஷன் கேக்கறது வேற… இன்ஃபர்மேஷன் கொடுக்கறது வேற…” என்றாள் சூடாய் தென்றல்.
கதவை சாற்றி தாழ் போட்டவன் நான்கே எட்டுகளில் அவளை நெருங்கி இருந்தான். “இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை… உன்கிட்ட கேக்காம பண்ணதா… இல்ல உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணறதா..?” என்றான் அழுத்தமாய் கைகளை கட்டிக் கொண்டு முறைப்பாய்.
“அப்போ இதுக்காக தான் இந்த அவசர கல்யாணம் இல்லையா..?” என்றாள் அவனை அழுத்தமாய் பார்த்து தென்றல்.
அவளின் இருபக்கமும் கட்டிலில் அழுத்தமாய் கைகளை ஊன்றி மூச்சுக்காற்று அவள் நெற்றியில் உரச, “இல்லைனு சொல்ல மாட்டேன்…” என்றான் அழுத்தமாய் அவன்.
“என்ன ப்ரூப் பண்ண நினைக்கறீங்க நீங்க..?” என்றவளின் சுருதி இறங்கி இருந்தது.
“நீங்க என்ன கேட்டீங்களோ அத தான் மேடம்… எனக்கு மட்டுமில்ல, என்ன சேர்ந்த எல்லாத்துக்கும் உரிமையானவங்க நீங்க மட்டும் தானு நிரூபிக்க நினைக்கறேன்…” என்றான் அவன்.
அவனின் நெருக்கம் அவளுக்கு பெரும் அவஸ்தையை குடுக்க அவனிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டவள், “முதல தள்ளி நில்லுங்க…” என்றாள் மெல்லிய அதட்டும் குரலில். அவளின் மேவாய் பற்றி தன் முகம் பார்க்கும்படி செய்தவன், “அதே மாதிரி உனக்கும் உன்ன சேர்ந்த எல்லாத்துக்கும் உரிமையானவன் நான் மட்டும் தான்… அத நல்லா மனசுல பதிஞ்சு வச்சுக்கோ… உனக்கு டைம் குடுத்தது… இந்த உறவ ஏத்துக்கறதுக்கு தானே தவிர என்னவிட்டு தள்ளி போறதுக்கு இல்ல…” என்றவன் அழுத்தமாய் அவள் இதழ்களில் பதிந்திருந்தான். நொடிக்கு நொடி அவன் வன்மை கூடியதே தவிர, குறையவேயில்லை. நெற்றைய மென்மையோ இதமோ கிஞ்சிற்றும் அதில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய் அவள் உடல் இறுக, அவனிடமிருந்து திமிறி விலக போராடினாள் பெண். அதில் தடுமாறி இருவருமாய் கட்டிலில் சரிந்திருந்தனர்.
நொடிகளில் அவளுக்கு யுகத்தை காட்டிவிட்டு நிதானமாய் விலகி எழுந்துக் கொண்டான் அவன். இத்தனை நேரம் தன்னை அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலக, வேக வேகமாய் மூச்செடுத்தாள் பெண்.
“இன்னொரு தடவ இழந்துடுவனோனு பறி குடுத்துடுவோனோ தொலைச்சுடுவேனோனு லூசு மாதிரி ஏதாவது பினாத்திட்டு இருந்த ராஸ்கல்… பிச்சுடுவேன் உன்ன… உனக்கு இருக்க அதே வலி தானடி எனக்கும் இருக்கு… எல்லாத்தையும் மனசுக்குள்ளையே போட்டு பொதைச்சுட்டு ஆயிரம் கனவோட உன்கூட வாழணும்னு வந்தா பைத்தியக்காரி மாதிரி உளறிட்டு இருக்க…” என்றான் கோபமும் எரிச்சலுமாய் நேசன். அவனின் கோபம் எதற்கென்றே அந்த நொடி தான் பிடிபட்டது அவளுக்கு.
“இந்த சிவநேசனே செத்தாலும் கூட நீ என் பொண்டாட்டிங்கறது வேந்தன் என் பிள்ளங்கறதோ என்னைக்கும் மாறாது… காலத்துக்கும் இந்த உறவும் உரிமையும் அப்படியே தான் இருக்கும்… இன்னும் அரைமணி நேரத்துல திரும்பி வருவேன்… கிளம்பி இருக்க…” எச்சரிப்பதைப் போல் அழுத்தமாய் சொன்னவன், கதவை திறந்துக் கொண்டு விறுவிறுவென கிளம்பிவிட்டான். செல்லும் அவனையே எட்டாம் அதிசயம் போல் அதிர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.