நெஞ்சம் 31:
முழுதாய் இருள் பிரியும் முன்னமே கண் விழித்துவிட்டாள் தென்றல். இரவில் எந்த நிலையில் இருந்தாளோ அதே இறுக்கத்துடன் இம்மியும் அசையாது அப்படியே தான் நேசனின் மார்பில் தலை சாய்த்து படுத்திருந்தாள். மிக மென்மையான அணைப்பென்றால், ஏற்க மனம் ஒப்பவில்லை. மனதில் படரும் இறுக்கத்தை தளர்த்த வழி தெரியவில்லை பாவைக்கு. அழுந்த கண்களை மூடி, ஆழ மூச்செடுத்து இந்த சூழலுக்கு தன்னை வலிந்து புகுத்திக் கொள்கிறவள் போல, பழக்கபடுத்திக் கொள்கிறவள் போல சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தாள்.
வெகு நேரம் அசையாது இருந்ததில் உடலில் அத்தனை அசௌகரியம். எழுந்து கைகால்களை உதறினால் பரவாயில்லையாக இருக்கும் என்று தோன்றிவிட, இடையில் படர்ந்திருந்த நேசனின் கரத்தை மெல்ல விலக்கிவிட்டு அவனின் உறக்கம் களைக்காது மெதுவாய் எழுந்துக் கொண்டாள். நிர்மலமான முகத்துடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் நேசன்.
மாற்றுடையை தேடி எடுத்துக் கொண்டு ஓய்வறைக்குள் புகுந்துக் கொண்டவளுக்கு, எங்கே தண்ணீர் சத்தம் அவனை எழுப்பி விடுமோ என அத்தனை சஞ்சலமாய் இருந்தது. மெதுவாய் நீரை திறந்து அதைவிட மெதுவாகவே அதை பாவித்து என்று தன் கடமைகளை முடித்துக் கொண்டு அங்கேயே இலகுவான பருத்தி சுடிதார் ஒன்றை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள் பெண்.
நேசன் இன்னும் அதே நிலையில் அப்படியே தான் உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான். ‘ரொம்ப நேரமா அவங்களும் இப்படியே தானே படுத்து இருக்காங்க… அவளுங்களுக்கும் தானே வலிக்கும்…’ என்ற எண்ணம் தோன்ற, அதை அப்படியே உதறி கீழே சென்றுவிட்டாள்.
திருமணத்திற்கு என்று வந்த உறவுகள் எல்லாம் நேற்றே ஊர் திரும்பியிருக்க, வீடு அசாத்திய அமைதியில் இருந்தது. அடுப்படியில் மட்டும் இன்னமும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.
மெல்ல தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்த்தாள். விசாலம் தான் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்.
“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை…” என்றபடி அவரிடம் போய் நின்றாள் அவள்.
“ஓ... பண்ணேன்… என்னோட சேர்ந்து ஒரு கப் காபி குடியேன்… வர காபி குடிப்ப தானே…” என்றார் புன்னகையோடு. அவள் தலை சம்மதமாய் ஆடவும், அவளுக்கும் சேர்த்தே நீரை கொதிக்கவிட்டார்.
“இன்னும் கொஞ்ச நேரம் தூக்க தானே…” கவனம் அடுப்பில் இருந்தாலும், கேள்வி என்னவோ மருமகளிடம் தான்.
‘நீங்களும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே..!’ என்ற கேள்வி மனதில் உதித்தாலும் இதழ்கள் உதிர்க்கவில்லை.
“தூக்கம் வரலத்த… வேந்தனும் எழுந்துக்கிட்டா தேடுவான்…” என்றாள் அவரின் முகம் பார்த்தபடியே தென்றல்.
“ம்ம்… காலையில பிள்ளைக்கு என்ன குடுப்ப… காஃபி குடிப்பானா..?” என்றார் இலகுவாய் அவளிடம்.
அவள் எதிர்பார்த்த மாதிரி துளைக்கும் ஆராய்ச்சி பார்வையோ, நேற்றைய இரவிற்கான ஆர்வமான பார்வையோ எதுவும் இல்லை. இலகுவாய் இருந்து அவளையும் இலகுவாய் உணர வைத்தார்.
“சத்து மாவு கஞ்சி தருவேன் அத்த… இல்லைனா நாட்டு சக்கரை போட்டு பால் தருவேன்… இன்னும் டீ காபிக்கு பழக்க படுத்தல…” என்றாள் அவள்.
தலையசைத்துக் கேட்டுக் கொண்டவர், “ஏன் நின்னுட்டே இருக்க… உக்கார வேண்டியது தானே…” என்றார் அடுத்ததாய்.
அவள் பார்வையை சுழற்ற, கண்களால் சமையல் மேடையை காட்டினார் அவர். ஒரு நொடி அவளின் விழிகளில் அதிர்ச்சி படர்ந்து பின் இயல்பானது.
அவள் வீட்டில், நீண்ட நேரம் நின்று சமைக்கும் போது கால் வலித்தால் ஏறி அமர்ந்துக் கொள்வாள் தான். சமயங்களில் அப்படியே அமர்ந்து உண்டும் இருக்கிறாள் தான். ஆனால், ‘இங்கே எப்படி?’ என்ற கேள்வி தான் அவளின் மனமெங்கும் வியாபித்திருந்தது.
“உன் புருஷன்ல இருந்து அந்த பூக்குட்டி வரைக்கும் இங்க ஏறி உக்காந்துட்டு தான் என்ன அதிகாரம் பண்ணுங்க… நீ என்னனா இப்படி முழிக்கிற…” என்றார் விரிந்த புன்னகையோடு.
“இந்தா புடி…” அவளுக்கானதை அவளிடம் நீட்டியவர், தனக்கானதை எடுத்துக் கொண்டு கூடத்திற்கு சென்றார். அவரின் வால் பிடித்ததைப் போல, அவளுமே பின்னாலேயே போனாள். அவளின் செய்கை அவளுக்கே கூட மெல்லிய புன்னகையை உண்டாக்கியது.
அமைதியாய் மெத்திருக்கையில் அமைந்தவர், தனக்கருகே கைக்காட்டி அவளையும் அமர சொன்னார். நேற்று ஆட்கள் வரவும் போகவுமாய் இருக்க அந்த வீட்டை சுற்றி சுழன்றது அவளின் பார்வை.
அதை உணர்ந்தவராய், “ரொம்ப ராசியான வீடு…” என்றார் நிறைந்த மனதோடு விசாலம்.
அவளின் பார்வை கேள்வியாய் அவரிடம் படிந்தது. அத்தனை புதிதாய் இருந்தது வீடு. அதற்குள் வீட்டின் ராசியை எப்படி கண்டுக் கொண்டாராம் அவர் என்ற எண்ணம் தான்.
“வருஷன் திரும்பக்குள்ள என் புள்ளைக்கு ஒரு குடும்பத்தையே குடுத்துடுச்சே…” என்றார் அவளின் பார்வையில் தொக்கி நின்ற கேள்வி புரிந்தவராய்.
கேலியாய் சொல்கிறாரா? இல்லை பிள்ளையுடன் புகுந்த வீடு வந்தவள் என்று குத்திக் காட்டுகிறாரா என்று எண்ணங்கள் படற, அவரை இன்னுமே ஊடுறுவி பார்த்தாள் அவள்.
பெரிதாய் விரிந்தது அவரின் புன்னகை. “இத்தன நாள் என்புள்ள தனியா தவிச்சு நிக்கறத தான் பாத்து இருக்கேன்… ராத்தங்க மட்டும் தான் என்புள்ள வீடு வருவான்… ஆனா நேத்து இதே வீட்டுல புள்ள பொண்டாட்டினு அவன் நிக்கறத பாத்ததும் மனசே நிறைஞ்சு போச்சு…” என்றார் ஆத்மார்த்தமாய்.
மனிதரை எடைப் போடுகின்ற, அவரின் மனதில் இருக்கின்றதை ஒரே பார்வையில் படிக்கிற இந்த பழக்கம் இவரிடம் இருந்து தான் இவரின் மகனுக்கும் ஒட்டிக் கொண்டிருக்குமோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“இந்நேரம் ஆளுங்க பால கறந்து வச்சுருப்பாங்க… வறீயா வாங்கிட்டு வருவோம்…” என்றபடியே, அவளுடைய காலி டம்ளரையும் வாங்கிக் கொண்டு எழுந்தார் அவர். அவர் எதற்காக இத்தனை சீக்கிரம் எழுந்தார் என்ற காரணமும் புரிந்தது.
“இந்த பூக்குட்டிக்கு பாக்கேட் பாலு சேராது… கொஞ்ச நாளைக்கு வெளிய வாங்கிப் பாத்தோம்… எங்க பால்ல தண்ணீய கலக்க சொன்னா தண்ணீயில இல்ல சொட்டு பால தெளிக்குறாளுங்க… பாத்தான் அவ மாமன் காரன்… இரண்டு மாட்ட புடிச்சுட்டு வந்து வீட்டுல கட்டியாச்சு… தினமும் ஐஞ்சு மணிக்கு கறக்க ஆளு வந்திடும்… அவளே பால கறந்துட்டு மத்த மேல் வேலையையும் பண்ணிடுவா…” தொடர்ந்து பேசியபடியே பின்வாசல் பக்கம் நகர்ந்திருந்தார் விசாலம்.
சாதாரணமாய் நினைத்துக் கொண்டு அவள் வர, சிமெண்டை தரைதளம் போட்டு, மேலே கூரை வேய்ந்து பத்து மாடுகள் வரை புழங்கும் அளவிற்கு தாராளமாவே இருந்தது அந்த மாட்டுக் கொட்டகை. விசாலம் சொன்னதைப் போல், இரண்டில்லை நான்கு பசுமாடுகள், இரண்டு இளம் கன்றுகளோடு அங்கே நின்றிருந்தது. இதைப் பார்த்தால் வேந்தனின் முகம் எப்படி பூவாய் மலரும் என்று நினைத்த மாத்திரத்தில் அவளின் முகமும் மலர்ந்தது.
“இந்தா ராணி பால கறந்தாச்சா..?” கேட்டபடியே மாட்டு கொட்டகையின் பக்கம் வந்திருந்தார் விசாலம்.
“ஆச்சுங்க ம்மா…” என்றவள், அவரின் பின்னாலேயே வந்த தென்றலை கண்டுவிட்டு, “இதாரு… நம்மூட்டு புதுப் பொண்ணா..?” என்றாள் முகம் மலர்ந்து புடவையின் முந்தாணையில் கையை துடைத்தபடியே.
“பாத்தா எப்படி தெரியுதாம்..?” என்றார் நமட்டு சிரிப்போடு விசாலம்.
“நேத்து உன்ன இருடி சொல்ல சொல்ல வெடுக்கு வெடுக்குனு இடுப்ப ஆட்டிக்கிட்டு கிளம்பிட்டீயே என்னாங்கறேன்..?” என்றார் தொடர்ந்து அதட்டலாய்.
“அது வந்துங்கம்மா… இந்த சின்னவளுக்கு தான் மேலுக்கு முடியல…” என்றார் தயங்கிக் கொண்டே அசட்டு சிரிப்போடு ராணி.
“இன்னும் இரண்டு நாளுக்கு ஆளுங்க வந்துட்டும் போய்ட்டும் தான் இருப்பாங்க… கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கூடமாட இருந்து ஒத்தாசைப் பண்ணுத்தா…” என்றார் விசாலம். அவர் தென்றலின் முன்பு இப்படி சொல்லவும், ” என்னம்மா நீங்க…” என இன்னுமே நெளிந்தார் ராணி.
“சரி தான்… வெட்கமாக்கும்… என் மொவனே இத்தன வெட்கபடல… நீ என்னத்தக்கு இப்படி நெளியறையாம்..?” என்றார் கேலியாய் அவர்.
“அட போங்கம்மா…” என்றவர் பார்வை ஆர்வமாய் தென்றலிடம் படிந்தது.
“இரு காபிய போட்டு கொண்டு வரேன்… குடிச்சுட்டு பால கொண்டு கந்தண்ணன் வீட்டுல குடுத்துட்டு வா…” என்றபடியே அவர் வீட்டுக்கு, சின்ன தலையசைப்போடு மாமியாரை வால் பிடித்தாள் தென்றல்.
“பேரு ராணி… பேர மட்டும் ராணினு வச்சு என்னத்த பண்ண… இங்க பக்கத்து தெரு தான்… ஐஞ்சு வருஷமா நம்ம வீட்டுல தான் வேலை பாக்குறா… புருஷன்காரன் ஒரு ஆக்ஸிடென்ல போய் சேந்துட்டான் பாவி… இல்லைனாலும் அவன் குடிச்ச குடிக்கு கொஞ்ச நாள்லையே தன்னலையே போய் சேர்ந்துருப்பான்… ஒத்த பொட்டச்சி இரண்டு பொட்ட புள்ளைங்கள வச்சுட்டு என்ன பண்ணுவா சொல்லு… படிப்பும் இல்ல… சொத்து பத்துனும் எதுவுமில்ல… ஆறுதல் செல்லற சனம் கூட்டிட்டு போய் ஒரு வேள சோறு போடுமா சொல்லுமா… பாத்ததும் எனக்கு ஒத்தசையா இருக்கட்டும்னு கூட்டிட்டு வந்துட்டேன்… பொழுதுக்கும் இங்க தான் கிடப்பா… இந்த சின்ன குட்டியும் பள்ளிக்கூடம் போற நேரம் போக இங்கையே தான் கிடையா கிடப்பா… என்னனு தெரியல… ஒரு வாரமா ஆளையே காணும்… கல்யாணத்துக்கும் வரல… நானும் கல்யாண பரபரப்புல கவனிக்காம விட்டுட்டேன்…” தன் போக்கில் சொல்லிக் கொண்டே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
ஒரு டம்ளரில் பாலை காய்ச்சி தென்றலிடம் கொடுத்தவர், “இத சாமிக்கு வச்சு வெளக்க ஏத்தி சாமிய கும்பிட்டுக்க… நான் இத போய் அவளுக்கு குடுத்துட்டு வரேன்…” என்றபடியே குளம்பியோடு பின்கட்டுக்கு நகர்ந்துவிட்டார் விசாலம்.
செல்லும் அவரையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றாள் தென்றல். என்னவோ பெற்றவரை விட அவரிடத்தில் நெருக்கமாய் உணர்ந்தது அவளின் மனம். அவரைப் பார்த்த நொடி, வெகு அழுத்தமான பெண்மணியோ என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துக் கொண்டிருந்தது. அவரோடு ஒன்ற தான் தனக்கும் வேந்தனுக்கும் வெகு சிரமமாய் இருக்கும் என்ற அவளின் எண்ணத்தை சஞ்சலத்தை நிமிடங்களில் அடித்து நொறுக்கி இருந்தார் அவர். வீட்டு ஆட்களுக்கு முதல் வேலை செய்யும் பெண்ணின் வயிற்றை நிறைக்க வேண்டுமென்றால் அவருக்கு எத்தனை வெள்ளை மனம் இருக்க வேண்டுமென நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவர் சொன்னதை செய்துவிட்டு அமைதியாய் மெத்திருக்கையில் அமர்ந்திருந்தாள் அவள். விசாலம் அங்கையே ராணியோடு ஐக்கியமாகி விட்டார் போல. வீட்டு ஆட்கள் ஒவ்வொருவராய் எழுந்து வர, அந்த வீடு உயிர்க்க தொடங்கியது.
எட்டு மணிப் போல, வெளியில் செல்பவனைப் போல தயாராகி நிதானமாய் கீழே இறங்கி வந்தான் நேசன். கண்கள் தென்றலுக்கு தான் வலை வீசியது. படங்களில் எல்லாம் மனையாள் கையில் குளம்பியோடு வருவாள் என்று அவன் காத்திருக்க, அப்படி எந்த அதிசயமும் நடக்கவில்லை.
“நான் அவங்களுக்கு காஃபி எடுத்துட்டு போகட்டுமா அத்த…” என்றவளிடம், “எத்தன தடவ மேலையும் கீழையும் ஏறி இறங்கிட்டு இருப்ப நீ… அதெல்லாம் எழுந்தா அவனே வருவான்…” என்றுவிட்டார் விசாலம். சில விசயங்களில் விசாலம் அப்படி தான். பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கெல்லாம் சோற்று தட்டை தூக்கிக் கொண்டு அலைய மாட்டார்.
ஈரம் படர்ந்திருந்த பிள்ளையின் முகத்தை தனது துப்பட்டாவால் அழுத்தமாய் துடைத்தபடியே இடுப்பில் இறுக்கிக் கொண்டு அறையில் இருந்து வெளியில் வந்தாள் தென்றல்.
கூடத்தில் தேனீர் கடை விரிக்கப்பட்டிருக்க, வீட்டின் அத்தனை பேரின் நடமாட்டமும் அங்கே தான்.
“குட்டி பையன் எழுந்துட்டானா… நீங்க இருங்கண்ணி… நான் போய் அவனுக்கு பாலாத்தி எடுத்துட்டு வரேன்…” என்றபடியே சமையல் கட்டுக்கு விரைந்தாள் கயல்.
அமைதியாய் மெத்திருக்கையில் அன்னையின் பக்கத்தில் வந்து அமர்ந்தவனின் பார்வை ஒரு நொடி மனையாளை தொட்டு, பின் அன்னையிடம் படர்ந்தது.
“ம்மா…” என்றவனின் பார்வை நண்பனிடம் திரும்ப, அவன் பிள்ளைகளோடு ஐக்கியமாகி இருந்தான்.
என்ன என்பதாய் மகனைப் பார்த்தார் விசாலாம். “கம்பெனில கார் விக்கறதுக்கான கான்ரெக்டும் நமக்கே குடுக்கறேனு சொல்லறாங்க ம்மா…” என்றான் நேசன்.
“நல்ல விசயம்ப்பா…” என்றார் நிதானமாய் எந்த அலட்டலுமின்றி விசாலம்.
“ஷோ ரூம் வைக்க இடம் பாத்து இருக்கோம் ம்மா…” என்றான் நேசன் அடுத்ததாய்.
“அப்பறம் கொண்டு வந்து உங்க வீட்டு மாட்டுக் கொட்டையில நிப்பாட்டீயா விக்க முடியும்…” என்றான் நொடிப்பாய் மாதவன்.
திரும்பி அவனை முறைத்துப் பார்த்தான். ஒரு மாத காலமாக வீட்டில் சொல்ல சொல்லி அவனுமே சொல்லிக் கொண்டே இருக்கிறான். நேசன் என்னடாவென்றால் இதோ அதோவென்று இழுத்துக் கொண்டு வந்து திருமணம் ஆன அடுத்த நாள் சொல்கிறான்.
அதுவரை ஏதோ அவன் தொழில் சம்பந்தமாக பேசுகிறான் என்பதைப் போல தான் சாதாரணமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல். “இடத்த நான் நம்ம பாப்பா பேர்லையும் தென்றல் பேர்லையும் பதியலானு இருக்கேன் ம்மா…” என்று அவன் சொன்ன நொடி, அதிர்ந்து அவனையும் விசாலத்தையும் தான் மாறி மாறிப் பார்த்தாள் தென்றல்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.