கண்ணாடி கதவுகளுக்கு பின்னே கண்ணை கவரும் வகையில், வரிசையாய் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது இருசக்கர வாகனங்கள். பிரபல நிறுவனம் ஒன்றின் இரு சக்கர வாகனங்களுக்கான விற்பனையகம் (Bike Showroom) அது. சுற்று வட்டார பகுதிகளில் அதன் விற்பனை உரிமத்தை நேசனும் மாதவனும் பெற்றிருந்தனர். அந்த விற்பனையகத்தின் நிற்வாகத்தையும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை, பண பரிவர்த்தனையை மாதவன் கவனித்துக் கொள்ள, புதிய வாகனங்களின் தரத்தை பரிசோதிப்பது, உதறி பாகங்களை இணைப்பது, வாகனத்தை வாங்கிய பிறகான சேவைகள் ( Service), சேவை காலம் முடிந்த பின்பும் தொடரும் பழுது நீங்கும் பணி, அதற்கு தேவையான உதறி பாகங்கள் வாங்குவது என மற்ற அத்தனையும் நேசனின் கட்டுபாட்டில் இருந்தது. சொல்லப் போனால் அது தான் அவனின் விருப்ப பணியும். சுற்று வட்டாரத்தில் அவன் அதற்கு பெயர் போன வேலைக்காரனும் கூட. ஒரு காலத்தில் மெக்கானிக் ஒருவனின் எடுபிடியாக தான் அவனின் இந்த பயணம் தொடங்கி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து பனிரெண்டு வருடங்களில் இந்த நிலையை எட்டி பிடித்திருந்தான்.
விற்பனையகத்திற்கு பின்னால் இருந்த இடத்தை மெக்கானிக் செட்டாக பயன்படுத்தி கொண்டார்கள். நேசனின் மேற்பார்வையில் மட்டுமே எட்டு நபர்கள் அங்கே வேலை செய்தனர். அதன் உள்ளே நுழைந்துவிட்டால், அவனுக்கு பொழுது விடிவதும் தெரியாது, முடிவதும் தெரியாது.
இவர்களின் திறமையை புரிந்துக் கொண்டு, அந்த நிறுவனம் மகிழுந்துக்கான விற்பனை உரிமத்தையும் இவர்களிடமே தர முடிவு செய்து, அதை உறுதியும் படுத்தி இருந்தது. நேற்றைய இரவு தான் இந்த செய்தி அவன் காதுக்கே வந்திருந்தது. இன்னும் வீட்டில் கூட அவன் அந்த செய்தியை பகிர்ந்திருக்கவில்லை. ஆனால் விடியும் முன், அதை அவனின் நேசத்திற்குரிய அழகனிடம் பகிர வந்து விட்டான்.
விற்பனையகத்தின் உள்ளே நுழைய, அவரவருக்கான பணி அவர்களை இழுத்துக் கொண்டது. அதன் பிறகு நண்பர்கள் இருவருக்கும் இடையேயான சில நிமிட சந்திப்புகளில், தொழிலை தவிர்த்து வேறு எதையும் பேசிக் கொள்ள நேரமும் இருக்கவில்லை, சூழலும் அனுமதிக்கவில்லை.
எப்பொழுதையும் விட முன்னதாகவே மதிய உணவுக்கூடையை கையிலும் மகளையும் இடுப்பிலும் தூக்கிக் கொண்டு, அங்கே வந்து சேர்ந்திருந்தாள் கயல்விழி. ஆண்கள் இருவருக்குமான மதிய உணவை சமைத்து எடுத்துக் கொண்டு தினமும் இங்கே வந்துவிடுவாள் அவள். அதன் பின் இரவு வரை பிள்ளையுடன் இங்கே தான். ஆண்கள் இருவருக்குமே சேர்ந்தாற்போல் வெளியில் வேலை இருந்தாலும், அந்த மொத்த விற்பனையகத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் நிர்வகிக்கும் திறமை அவளுக்கு இருந்தது. அவளுக்குமே அங்கிருந்த அத்தனை விசயங்களும் அத்துபடி.
நம்பகமான ஆட்கள் எத்தனை பேர் இருந்தாலும், உரிமைப்பட்ட யாராவது ஒருவர் நிச்சயம் அங்கே இருப்பர். இருக்க வேண்டுமென்பது நேசனின் எழுதப்படாத சட்டம்.
மாதவனின் அலுவலக அறையை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் கயல். வெளியில் நடக்கும் அத்தனையும் பார்க்கும் படி சுற்றிலும் கண்ணாடி கதவுகள் பொறுத்திய அறை அது.
“அண்ணன்கிட்ட பேசிட்டீங்களா... அண்ணன் என்ன சொன்னுச்சு…” கணவனை பார்த்த நொடி, கண்களில் ஆர்வம் மின்ன இதை தான் முதலில் கேட்டிருந்தாள் கயல்விழி. சாப்பாட்டு கூடையை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு மகளையும் கீழே இறக்கிவிட, அந்த நொடிக்காகவே காத்திருந்தவளைப் போல், “நா மாமாவ சாப்பிட கூப்பிட்டு வரேன்…” என பெற்றவர்களுக்கு அறிவிப்பாய் சொல்லிவிட்டு கதவை திறந்துக் கொண்டு வெளியே ஓடியிருந்தாள் பிள்ளை. சின்ன முறுவலோடு ஓடும் மகளையே பார்த்திருந்தான் மாதவன்.
துறுதுறுவென விளையாடும் வயது. அண்ணனும் தங்கையும் சேர்ந்திருந்தால், அந்த இடமே இரண்டுபடும். அதற்கு மாறாய் காலையில் அவன் பள்ளி கிளம்பி சென்றால், கயல் சமையலை முடித்து இங்கே அழைத்து வரும் வரை பிள்ளைக்கு கை கால்களை கட்டிப் போட்ட நிலை.
சுற்றிலும் வேலை செய்பவர்களை கண்களால் தொட்டுக் காட்டியவன், இவளைக் கண்டனப் பார்வை பார்க்க, “பச்… இது ஒரு ரூல் இங்க… வீட்டு விசயத்த இங்க பேச கூடாது… ஆனா இவங்க மட்டும் வீட்டுல உக்காந்து விடிய விடிய வியாபாரத்த பத்தி பேசுவாங்க...” என்றாள் முணுமுணுப்பாய் சலித்துக் கொண்டு.
“விழி…” என்றான் சின்ன குரலில் அதட்டலாய் மாதவன்.
“நான் எதுவும் பேசல… நீங்க அண்ணன்கிட்ட பேசனீங்களா… இல்லையானு மட்டும் சொல்லுங்க போதும்… என்னனு தெரிஞ்சுகலைனா எனக்கு வேலையே ஓடாது… ஒருத்தி மாத்தி மாத்தி இத்தனை போன போடுறாளே… எடுத்து என்னனு விவரம் சொல்லுவோனு இல்லாம… வீட்டுக்கு வந்ததும் பேசிப்போம்னு வாட்ஸ்அப்பா பண்ணறீங்க… வீட்டுக்கு வாங்க பேசிக்கறேன்…” ஆதங்கமாய் ஆரம்பித்து, புலம்பலாய் தொடர்ந்து, முறைப்புடன் அழுத்தமாய் முடித்தாள் அவள்.
“விவரமா எதுவும் பேச முடியலம்மா… அவன் கொஞ்சம் பிடிக் குடுத்து பேசி இருந்தாலும் அப்பவே உனக்கு போன போட்டு சொல்லி இருக்க மாட்டேனா நான்… எங்க போய்டுவான்… பாத்துக்கலாம் விடு…”
“இப்படி விட்டுப் பிடிப்போம் விட்டு பிடிப்போம்னு சொல்லி சொல்லி வருஷம் ஓடுனது தான் மிச்சம்… எனக்கு என்னவோ அண்ணன் இப்படியே இருந்துடுமோனு பயமா இருக்குங்க…” என்றவளின் குரலில் அப்பட்டமான பயமும் கவலையும். கணவனின் கண்டனப் பார்வையில், அவளின் புலம்பல் அப்படியே அந்தரத்தில் நின்றுப் போனது. அந்த கவலை அவனுக்கு மட்டும் இல்லாயா என்ன? ஆனாலும், நண்பனின் தனிப்பட்ட வாழ்வை இப்படி பல பேருக்கு மத்தியில் விவாதத்திற்கு உள்ளாக்க அவனுக்கு விருப்பமில்லை.
சில நொடிகள் யோசனையில் இருந்தவன், “இன்னைக்கு ஈவினிங் ஸ்கூல் முடிஞ்சதும் அகரனையும் அழைச்சுட்டு உங்க வீட்டுக்கு போய்டு விழி… இதுக்கு மேலயும் அவன இப்படியே விட்டுட்டு இருக்க முடியாது… இன்னைக்கு நைட் மறுபடியும் அவன்கிட்ட பேசுவோம்…” அவன் சொன்னாலும் அவளின் முகம் இன்னுமே தெளியவில்லை.
அதைக் கண்டவன், “நம்புடி… அவன அப்படியே விட்டுட மாட்டேன் நான்… இந்த தடவ எப்படியும் இந்த பேச்சு வார்த்தையை கல்யாணத்துல கொண்டு வந்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு… கைய கால கட்டியாவது உங்கண்ணன மேடையில உக்கார வைக்கறேன்… போதுமா..?” என்றான் மாதவன் அத்தனை திடமாய். இத்தனை வருடங்களில் இப்படியொரு உறுதிமொழியை அவன் கொடுத்ததே இல்லை. அவன் வார்த்தைகள் கொடுத்த தெம்பில், அவளின் மனதில் ஒரு ஆசுவாசம். கணவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி.
“புள்ளைக்கு ஸ்கூலுக்கு சாப்பாடு கட்ட சொன்னாலே ஒழுங்கா கட்ட தெரியாது… இவரு கைய கால கட்டி எங்கண்ணன தூக்கிட்டு வந்து மேடையில உக்கார வைக்கறாராம்… நல்ல கதை தான்…” என்றாள், இதழ்களில் படர்ந்து நெளிந்த சிறு கேலிப் புன்னகையோடு.
✾✾✾✾✾
“மாமா…” அவனை ஏலம் விட்டபடி, அந்த மெக்கானிக் ஷெட்டுக்குள் நுழைந்திருந்தாள் பூக்குட்டி.
இரு சக்கர வாகனம் ஒன்றை பிரித்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான் நேசன். “என்ன இன்னைக்கு என் பூக்குட்டி இத்தன சீக்கிரம் வந்துட்டீங்க…” என்றான் கொஞ்சலாய்.
அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாது, “தூக்கு மாமா…” என்றபடியே அவனிடம் வர, “மாமா வேலையா இருக்கேனே பட்டு… பாருங்க மாமா மேல எல்லாம் அழுக்கு…” என்றான் நேசன் தன்னை சுட்டிக்காட்டி.
“தூக்கு மாமா… மாமா… தூக்கு மாமா…” என அடமாய் மீண்டும் மீண்டும் அதையே சொன்னவள், ஓரடி தள்ளி நின்று அவன் கரங்களுக்குள் புக வழிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படி அவன் வேலையாய் இருக்கும் பொழுதுகளில் சட்டென்று அவனை நெருங்க கூடாது என அந்த குட்டி பெண்ணுக்கும் தெரிந்திருந்தது. வீடாய் இருந்திருந்தால், இந்நேரம் ‘மாமா…’ என்ற கூச்சலோடு அவனின் கரங்களுக்குள் விழுந்திருப்பாள்.
பக்கத்தில் இருந்த வேறு ஒருவரை அழைத்து, பார்த்துக் கொண்டிருந்த வேலையை ஒப்படைத்தவன், “என்னவாம் என் பூக்குட்டிக்கு… மாமா தூக்கியே ஆகணும்னு இன்னைக்கு இத்தனை அடம்…” பிள்ளையிடம் பேச்சை வளர்த்தபடியே, தன்னை சுத்தபடுத்திக் கொண்டு ஆடை மாற்றி பின் தான் அள்ளிக் கொண்டான் அந்த குட்டிப் பெண்ணை.
“அது ஒரு ரகசியம் சொல்லணுமே…” என்றாள் அவனின் காதுக்குள் சத்தமாய் பூக்குட்டி.
“ஆஹான்…” அவளின் கன்னம் கிள்ளி முத்தம் கொஞ்சியவன், “அப்படியென்ன ரகசியம் சொல்ல போறீங்க பூக்குட்டி மாமாவுக்கு…” என்றான் அவளைப் போலவே சத்தமாய்.
“மாமாவுக்கு கல்யாணம்… புது அத்த வரப் போறாங்க வீட்டுக்கு…” மற்றவர்கள் எல்லாம் அவனின் அனுமதிக்காய் வருடக் கணக்காய் காத்துக் கொண்டிருக்க, அவனின் சம்மதத்தைக் கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லாது, சட்டமாய் மாமனின் திருமணத்தை சபையில் அறிவித்தாள் பூக்குட்டி. அவள் சொன்னதும் அருகில் இருந்த சிலர், ‘அப்படியா..?’ என்பதைப் போல ஆர்வமாய் அவனைப் பார்த்தனர்.
“அப்படினு யார் சொன்னாங்க பூக்குட்டிக்கு…” யாரென்று தெரிந்திருந்தும் அதை கேட்டிருந்தான் அவன்.
“அம்மா தான் சொன்னா… பாட்டி கூட போன்ல சொன்னாளே…” என்றது குழந்தை.
“வேற என்ன சொன்னாங்க உன் பாட்டி…” என்றான் அவன்.
“புதுசு புதுசா ட்ரஸ் போட்டுகலாமான்… நிறைய சாக்கி சாப்பிடலாமான்… ஐஸ்க்ரீம் கூட சாப்பிடலாமான்… அம்மா திட்டவே மாட்டாளாம்…” புத்தாடைக்கும் மிட்டாய்க்கும் ஆசைப்பட்டு, மாமனை மணமேடையில் ஏற்ற துணிந்தது அந்த குட்டி.
“என் பூக்குட்டி கேட்டா… இப்பவே இதெல்லாம் மாமா வாங்கி தருவேனே… இதுக்கு போய் மாமா கல்யாணம் பண்ணி அத்தைய கூட்டிட்டு வரணுமா..?” என்றான் விளையாட்டுப் போல. விளையாட்டுக்கு கூட பிள்ளையின் மனதில் இப்படியான ஆசையை வளர்க்க அவனுக்கு விருப்பமில்லை.
“ஆமால்ல…” என சில நொடிகள் யோசித்தவள், “ஆனா அத்த வரும் போது எனக்கு விளையாட குட்டிப் பாப்பா கூட்டிட்டு வருவாங்களாமே… மாமாவுக்கு கல்யாணம் ஆகலைனா எப்படி குட்டிப் பாப்பா வரும்…” என்றாள் சந்தேகமாய் பூக்குட்டி. இதற்கு என்ன பதில் சொல்வானாம் அவன். குழந்தை என்றதிலேயே அவனின் மனம் கோபத்தோடு நின்றுவிட, பிள்ளை சொல்லியதன் பொருள் துல்லியமாய் அவனை சேரவில்லை.
‘குழந்தைகிட்ட என்ன பேசினுங்கற அறிவே இல்ல ரெண்டு பேருக்கும்…’ என பல்லை கடித்தவனுக்கு, எதுவும் சொல்ல முடியாத நிலை. அவன் முன்னமே இதை சொன்னால் கூட, அந்த இருவரையும் அவனால் பார்வையால் கூட கடிந்துக் கொள்ள முடியாது.
வேறு விசயத்திற்கு பேச்சை மாற்றினாலும், மீண்டும் மீண்டும் அதிலேயே தான் வந்து நின்றாள் பூக்குட்டி. ‘பிள்ளைய நல்லா டிங்கரிங் பண்ணி அனுப்பி விட்டிருக்கு பிசாசு…’ முணுமுணுப்பாய் தங்கையை கடிந்துக் கொண்டான் அவன்.
பிள்ளையோடு அவன் அந்த அறைக்குள் நுழைய, ஒரு பக்கத்தில் இருந்த மேசையில், அவர்கள் இருவரும் சாப்பிட ஏதுவாய் அத்தனையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் கயல். தமையன் வந்துவிட்டான் என்று தெரிந்தும், நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவள். அத்தனை கோபம். இரண்டு நாட்களாய் அவனை நிறுத்திப் பேசிவிட தவியாய் தவிக்கிறாள். இங்கேயும் பேச முடிவதில்லை, இவள் அழைத்தாலும் அவன் எடுப்பதில்லை.
அவளின் கோபம் அவனுக்கு புரிந்திருந்தாலும், சமாதானப் படுத்தவோ பேச்சை தொடங்கவோ நினைக்கவில்லை நேசன். அமைதியாய் சாப்பிட அமர்ந்துவிட்டான். பூக்குட்டியை மடியில் அமர்த்தி அவளுக்கு ஊட்டியபடியே அவன் சாப்பிட தொடங்க, பரிமாறியவளுக்கு தான் அவனைப் போல அமைதியாக இருக்க முடியவில்லை.
இப்பொழுதே பேசிவிட நா துடித்தாலும், கணவனின் எச்சரிக்கும் கண்டன பார்வையில் வாயை திறக்க முடியவில்லை. ஆனால் அவளின் பார்வையே, வீட்டில் நிச்சயமாய் இன்று ஒரு பஞ்சாயத்து இருக்கிறதென்று உறுதி செய்தது.
‘இன்னைக்கு வீட்டுக்கே போகாம இங்கேயே இருந்துட்டா என்ன..?’ என நேசனின் மனதில் யோசனை ஓட, ‘முயற்சித்து தான் பாரேன்…’ என சவடாலாய் அவனைப் பார்த்தான் மாதவன்.
என்னவோ அவனை சேர்ந்த அத்தனை பேரும், அவனை கழுத்தை நெறித்து மூச்சு முட்ட வைக்கும் உணர்வு. இம்முறை எப்படி அவர்களின் முயற்சிகளை முறியடிக்கலாம் என இப்பொழுதிலிருந்தே சிந்திக்க தொடங்கி விட்டான் அவன். இத்தனை நாட்களை போல இம்முறை அவனுக்கு அது சுலபமாக இருக்க போவதில்லை என்று அவனுக்கே புரிந்தும் இருந்தது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.