நெஞ்சம் 29:
‘எனது கடந்த காலம் எந்த வகையிலும் நம் எதிர்காலத்தை பாதிக்காது…’ என்று அத்தனை உறுதியாய் சொல்லி விட்டான் தான். வெறும் வார்த்தைகள் மட்டும் காயமாற்றாதே! அவன் மீதான நம்பிக்கையை தந்து விடாதே! அதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து தான் இருந்தான் சிவநேசன்.
அதற்காக தான் முதல் மனைவியின் பெற்றோரை கொண்டு வந்து அவளின் முன் நிறுத்தி இருந்தான். இனி இவள் மட்டும் தான் என் வாழ்நாள் முழுவதற்கும் சொந்தமென்று அவர்களுக்கும் காட்டிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களின் மகள், தங்களின் எதிர்காலத்திற்குள் வர முடியாது என்ற உறுதியை மனைவிக்கு அளிக்கவும் தான்.
அதுவும் அவளுக்கு அவகாசமே கொடுக்காது, இத்தனை விரைவாய் இந்த திருமணம் நிகழ்ந்திருக்க, அது அவசியமாகவும் இருந்தது.
அதே நேரம் அவனின் காயம் கண்ட மனது, ‘பார்… எப்படி எல்லாம் என்னை தூற்றி சபித்தீர்கள்..! இப்போது எப்படி வாழ்கிறேன் பார்..!’ என்று அவர்களுக்கு காட்டிவிடவும் நினைத்தது. நம்மை தூற்றி சபித்தவர்கள் முன்னே வாழ்ந்து காட்டுதலை விட ஆக சிறந்த வெற்றி என்னவாக இருந்துவிட போகிறது.
இந்த ஒரு செயல் மட்டுமே முழு நம்பிக்கையும் அவளுக்கு தந்து விடுமா என்றால் இல்லை என்று அவனுக்குமே தெரிந்திருந்தது. ஆனால், அவன் மீதான ஆழமான நம்பிக்கைக்கு இது ஒரு சிறந்த அடித்தளமாக அமையும்.
அவள் சொல்லாமலே, அவள் மனதின் சஞ்சலம் என்னவென்று உணர்ந்து அதை களைந்தும் இருந்தான் நேசன். அதில் ஒரு மாதிரி நெகிழ்ந்திருந்தது அவளின் மனம்.
“அண்ணி… அண்ணனுக்கு ஊட்டி விடுங்க…” பக்கத்தில் அமர்ந்திருந்த கயல் அவளின் கரங்களை தொட்டு சொல்லவும் தான், தன்நிலை உணர்ந்து வேகமாய் அவனிடமிருந்து விலகினாள் பெண்.
அவளின் வேகத்தில் உண்டான நமட்டு சிரிப்போடு, தானே இலையில் இருந்து இனிப்பை எடுத்து அவளின் முன் நீட்டினான். பட்டும் படாமல் அதை வாங்கிக் கொண்டாள் பெண்.
“அண்ணி இப்போ நீங்க..?” என்றாள் கயல் குதுகலமாய்.
மெல்லிய தயக்கமும் கூச்சமும் பெண்ணவளை பந்தாடினாலும், செய்யாமல் விட மாட்டார்கள் என்று தெரிந்தது. அவர்களே விட்டாலும் அவளின் கணவன் விட வேண்டுமே! விடாது இவளையே பார்த்தபடி ஊட்டிவிட தான் காத்திருந்தான் அவன்.
அவனைப் போலவே அவளும் இனிப்பை எடுத்து நீட்ட, விரல்களில் மெல்லிய நடுக்கம். இனிப்போடு சேர்ந்து அவளின் விரல் நுனியையும் சுவைத்தான் அந்த கள்ளன். அவசரமாய் கரத்தை பின்னிழுத்துக் கொண்டாள் பெண்.
புகைப்பட கலைஞர் அழகாய் இந்த காட்சிகளை படமாக்கி கொள்ள, தங்களுக்குள் கலகலத்தபடி மணக்களை கேலி செய்தபடியே மற்றவர்களும் உண்ண தொடங்கி இருந்தார்கள்.
லேசாய் அவள் புறம் சாய்ந்தவன், “என்னமோ அடுத்த வருஷம் வளைகாப்புக்கும் வந்து தாம்பூல பை போடுங்கனு மல்லி அக்காகிட்ட சொன்னீயாம்… நான் கூட உனக்கு எல்லாம் ஓ.கே தான் போலனு நினைச்சேன்… இப்ப என்ன ஊட்டி விட்டதுக்கே கை காலெல்லாம் இப்படி நடுங்குது…” என கேலியாய் கேட்டவனை, ‘இவனுக்கு எப்படி தெரியும்..?’ என்பதாய் கண்களை விரித்து அதிர்ந்து பார்த்தாள் பெண்.
அதை உணர்ந்தவன் போல, “ஆல் டீடைல்ஸ் ஐ நோ…” என்றான் ரகுவரன் பாணியில் சிரிப்போடு நேசன்.
‘அம்மாடியோவ்… இவனுக்கு இப்படி எல்லாம் கூட பேச வருமா..?’ என்று தான் நினைத்தாள் பெண்.
“புடி உன் பிள்ளைய… ஐஞ்சு நிமிஷத்துல ஊரையே கூட்டிடுவான் போல…” என்றார் குணவதி, அங்கேயே தேடிக் கொண்டு வந்து பிள்ளையை தென்றலிடம் நீட்டியபடி சிடுசிடுவென.
உறக்கம் களைந்து தாயை காணவில்லை என்றதும் அத்தனை அழுகை பிள்ளையிடம். இப்படியெல்லாம் அழுது அடம் பிடிப்பவன் இல்லை வேந்தன். புதிய இடம் புதிய மனிதர்கள் என்று பயந்து தான் போனான். என்ன சொன்னாலும் சமாதானம் ஆவதாயில்லை அவன். ‘உடனே அம்மாவிடம் அழைத்துப் போ..!’ என்று நின்றான். சட்டென்று உறக்கம் களைந்த கடுப்போடு பேரனும் படுத்தி எடுக்க, தென்றலை தேடிக் கொண்டு வந்திருந்தார் அவர்.
அமைதியாய் பிள்ளையை வாங்கி மடியில் அமர்த்திக் கொண்டவள், இடுப்பில் சொறுகி இருந்த கைக்குட்டையை எடுத்து பிள்ளையின் முகம் துடைத்தபடியே, “என் தங்கம் சமத்து வெல்ல கட்டியாச்சே… இப்படியெல்லாம் அடம் பிடிக்க மாட்டாங்களே…” என்றாள் செல்லம் கொஞ்சி.
“அம்மா… விட்டுட்டு போய்ட்ட…” தேம்பலுடன் சொன்னபடி, அவளுக்கு முகம் காட்டாது தோள்களில் புதைத்தான் பிள்ளை.
திருமணம் என்று உறுதி ஆனதிலிருந்து அத்தனை முறை வேந்தன் என்னுடனே இருக்கட்டும் என்று கேட்டிருந்தார் குணவதி. அது வேந்தனின் உள்ளத்தில் ஆழ பதிந்துவிட, இப்பொழுது அவர் மட்டும் உடன் இருக்கிறார் அன்னையை காணவில்லை என்றதுமே, உண்மைக்கும் அவருடன் அவனை விட்டுவிட்டு சென்றுவிட்டாள் போல என நினைத்துவிட்டான் பிள்ளை.
அவனை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி உணவை ஊட்டுவதற்குள் ஒரு வழி ஆகிப் போனாள் தென்றல். இனி அவனை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என சத்தியம் செய்ததும் தான் கொஞ்சம் ஓய்ந்தான் பிள்ளை.
நேரம் மெல்ல மெல்ல கரைய, மதிய உணவை முடித்துக் கொண்டு பிள்ளைகளை கண் எதிரே விளையாட விட்டுவிட்டு ஓய்வாய் கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் கயலும் தென்றலும். ‘இதுக்கு மேல என்னால முடியாதுப்பா…’ என்றபடி அவர்களுக்கு அருகிலேயே படுத்துவிட்டாள் அரசி.
“நான் கிளம்பறேன் தென்றல்…” என்று மகளிடம் வந்து நின்றார் குணவதி.
“இருந்துட்டு காலையில போகலாமே அத்தை…” என்றாள் மனம் கேளாது கயல்.
“இருக்கட்டும்மா… வீட்ட அப்படியே போட்டுட்டு வந்துட்டோம்… இப்ப போய் ஒதுங்க வச்சா தான் நாளைக்கு தென்றலும் மாப்பிள்ளையும் வரும் போது வசதியா இருக்கும்…” என்றார் அவர்.
கண்கள் இடுங்க அவரை நம்பாத பார்வை பார்த்தவள், “சரி கிளம்புங்க…” என்று விட்டாள்.
இப்படி உடனே மகள் கிளம்புங்கள் என்று சொல்வாள் என குணவதி எதிர்பார்க்கவில்லை. மனதில் சட்டென்று ஒரு ஏமாற்றம் படர்வதை தடுக்க முடியவில்லை.
“அப்ப வேந்தனையும் என்கூட அழைச்சுட்டு போகட்டுமா தென்றல்..?” என்றார் சின்ன எதிர்பார்ப்புடன்.
“இல்ல… அவன் இங்க என்னோடவே இருக்கட்டும்…” என்றாள் அழுத்தமாய்.
“இல்ல… இன்னைக்கு… இங்க… வேந்தன் தனியா தானே இருக்கணும்…” என்று தடுமாறியவர், “எப்படியும் நீயும் மாப்பிள்ளையும் நாளைக்கு அங்க வருவீங்க தானே… வேந்தன் என்கூடவே இருக்கட்டுமே…” என்றார் மன்றாடும் குரலில் இறைஞ்சுதலாய்.
“தனியாவா..? இங்க இத்தனை பேர் இருக்காங்களே…” என்றவள், “ஏன் அண்ணி வேந்தன நீங்க பாத்துக்க மாட்டீங்களா..?” என்றாள் கயலிடம் நேரடியாகவே.
“ஐய்யையோ அண்ணி… எனக்கு அத தவிர வேற என்ன வேல இருக்கு…” என்றாள் அவசரமாய் எங்கே தென்றல் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்று பயந்து கயல்.
“நீங்க கிளம்புறதா இருந்தா கிளம்புங்கம்மா… இங்க பூக்குட்டி அகரன் ஹரினினு நிறைய குட்டிஸ் இருக்காங்க… அவங்களோட விளையாடிட்டு அப்படியே வேந்தன் இருந்துப்பான்…” என்றாள் அழுத்தமாய் தென்றல்.
அவளே தொடர்ந்து, “ராபின் அண்ணாவ ஆட்டோ எடுத்துட்டு வர சொல்லவா..? இப்ப உடனே கிளம்பறீங்களா..? இல்ல ஐஞ்சு மணி போல வர சொல்லவா..?” என்றாள் இரக்கமில்லா குரலில்.
அவளில்லாத பொழுதுகளில், அன்னை எங்கேனும் வெளியில் செல்ல வேண்டும் என்றால் ராபினை தான் அழைத்து சொல்வாள் தென்றல். வெகு நம்பிக்கையான மனிதர்.
கிட்டதட்ட அழும் நிலைக்கு சென்றுவிட்டார் குணவதி. இப்படி தான் கிளம்புகிறேன் என்று வந்து நின்றால், தன்னை இருக்க சொல்லி கட்டாயப் படுத்துவாள் என்று நினைத்திருக்க அவளென்றால் உடனே கிளம்பு என்று நிற்கிறாள்.
இங்கே அவரால் யாருடனும் ஒன்ற முடியவில்லை. சுற்றி அத்தனை மனிதர்கள் இருந்தும், தான் மட்டும் தனித்து விடப்பட்டதை போல ஒரு பிம்பம். கூடவே எதற்காகவும் மகள் அவரிடம் போய் நிற்கவில்லை. ‘என்ன செய்யட்டும்..? எப்படி செய்யட்டும்..?’ என்று எதையும் கேட்கவில்லை. அது அவருக்கு மரியாதை குறைவாக தலையிறக்கமாக இருந்தது. அவளே இந்த வீட்டிற்கு புதியவள் தான் என்று அந்த அன்னைக்கு உரைக்கவேயில்லை. என்னவோ அவளும் சேர்ந்து அவரை ஒதுக்கி வைப்பதாக தோன்றியது.
“ஐய்யோ அண்ணி… அத்தை தான் கிளம்புறேனு சொல்லறாங்கனா நீங்களுமா..? அங்க போய் தனியா என்ன பண்ண போறீங்க… பேசாம வாங்க என்கூட…” என்றபடியே அவரை இழுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள் கயல். எங்கே இன்னும் சில நிமிடங்கள் அங்கேயே நின்றால், தென்றல் உண்மைக்கும் ஆட்டோவை வரவழைத்து, குணவதியை வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டு தான் ஓய்வாளோ என்று உண்மைக்கும் பயந்து தான் போனாள் அவள்.
“என்னவாம்…” என்றாள் தலையை மட்டும் நிமிர்த்தி தோழியைப் பார்த்து அரசி.
“வீட்டுக்கு போகணுமாம்…” என்றாள் ஒற்றை வார்த்தையில் தென்றல்.
“சந்தைக்கு போகணும்… ஆத்தா வையும்… காச குடே…” என்றாள் கேலியாய் அரசி.
“எங்க அம்மாவையே கிண்டல் பண்ணற நீ…” என்றாள் அரசியின் முதுகில் வலிக்க ஒன்று வைத்து தென்றல்.
“நீ தான் மெச்சிகணும் உங்க நொம்மாவ… பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்குதே… எல்லாதையும் தானே எடுத்து செய்ய முடியாலைனாலும் பொண்ணுக்கு துணையா பக்கத்துல நிப்போமுனு இல்லாம… தாலி கட்டினதுல இருந்து வீட்டுக்கு போகணும்னு நின்னா… நான் மட்டும் அவங்க பொண்ணா இருந்து இருக்கணும் விழுந்து கடிச்சு வச்சுருப்பேன்…” என்றாள் கடுப்பாய் அரசி.
“பாவம்டி… அவங்களால இங்க யாரோடையும் மிங்கிள் ஆக முடியல… அதான்…” என்றாள் தென்றல்.
“பாத்தேன்… பாத்தேன்… அதான் உடனே பொட்டிய கட்டி வீட்டுக்கு பேக் பண்ண பாத்தீயாக்கும்…” என்றாள் நக்கலாய் அரசி.
“பச்… நான் இருங்கனு சொன்னா ரொம்ப பண்ணுவாங்க…” என்றாள் சலிப்பாய். அவளுக்கு மட்டும் அன்னை உடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா?
“தென்றல்… நான் ஒன்னு கேட்டா உண்மையா சொல்வீயா..? நிஜமாவே அவங்க உன்ன பெத்த அம்மா தானா… இல்ல தத்து எதுவும் எடுத்து வளத்தாங்களா..?” என்றாள் தீவிர குரலில் அரசி.
ஒரு நொடி அவளின் முகம் கருத்து பின் இயல்புக்கு மாறியது. “அந்த மகராசி பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மாணிக்கம் தான் நான்… அதுல உனக்கு துளிக்கூட சந்தேகமே வேண்டாம்…” என்றாள் சிரித்துக் கொண்டே தென்றல்.
“என்னவோ சொல்லற…” என்றவள் மீண்டும் விட்ட உறக்கத்தை விரட்டி பிடிக்க முயன்றாள்.
அவளின் அருகில் அமைதியாய் படுத்துக் கொண்டவளுக்கு உறக்கம் வெகு தூரம் சென்றிருந்தது. அவளுக்காக நேசன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வது புரியத்தான் செய்தது. எப்படியாவது அவளின் நம்பிக்கையை பெற்றுவிட வேண்டும் என்று துடிப்பதும் தெரிந்தது. ஆனால், அவள்? ஒரு வேளை அவனுக்கு உண்மை தெரிந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வான் என கற்பனை கூட செய்துப் பார்க்க முடியவில்லை. கடைசி வரை அவனுக்கு தெரிந்துவிட கூடாது என்று தான் நினைத்தாள் பெண். நினைப்பதெல்லாம் நடந்தா விடுகிறது?
– நேசம் ஒளிரும்…
No comments yet.