நெஞ்சம் 28:
தென்றலை பார்க்கவென்று வரும் பெண்களுடன் சேர்ந்து வரும் மழலைகளுக்கு தன் கையிலிருந்த மிட்டாய்களில் ஒவ்வொன்றாய் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.
“அவங்க கோவிச்சுட்டு சாப்பிடாம கூட கிளம்பிட்டாங்க தென்றல்…” என்றாள்அ அரசி, மல்லிகா வேகமாய் செல்வதைப் பார்த்துவிட்டு தவிப்பாய்.
“அட ஆமா… தாம்பூல பைய வேற மறந்துட்டு போறாங்க பாரு… நீ வேணா அவங்க வீடு வரைக்கும் போய் கொடுத்துட்டு வரீயா..?” என்றாள் நக்கலாய் தென்றல்.
“பச்… விளையாடாத தென்றல்… அவங்க யாரு தெரியுமா..? கயலோட ஓரகத்தி… அந்த வீட்டுக்கு மூத்த மருமக வேற… ஏதாவது பிரச்சனை ஆகிட போகுதுடி…” என்றாள் தணியாத பதற்றதோடு அரசி.
“என்ன பிரச்சனை வரும்…” என்றாள் வெகு அலட்சியமாய் தென்றல்.
“கயல தேவையில்லாம ஏதாவது சொல்ல போறாங்க தென்றல்… அவங்க குடும்பத்துக்குள்ள ஏதாவது பிரச்சனை ஆகிட்டா… நீ வந்த முதல் நாளே இப்படினு பேச மாட்டாங்களா..?” என்றாள் தவிப்பும் பதற்றமும் குறையாதவளாய் அரசி.
“தேவையில்லாம பேசனா கயல் அண்ணியும் பதிலுக்கு பேசட்டும்… முடியலையா அமைதியா கேட்டுட்டு இருக்கட்டும்… அதுக்குனு என் வாயவா வாடகைக்கு விட முடியும்…” என்றாள் இடக்காய் தென்றல்.
“அம்மாடியோவ்…” என்றபடியே நெஞ்சில் கைவைத்து விட்டாள் அரசி. “ஃபயர் பேக் டூ த ஃபார்ம்… உன்ன வச்சு என்னனு என் நண்பன் சமாளிக்க போறானோ தெரியலையே…” என்றாள் அங்கலாய்ப்பாய் அரசி.
“இத தான் அன்னைக்கே நானும் சொன்னேன்… நீ எங்க கேட்ட…” என்றாள் தென்றலும் பதிலுக்கு.
அவளின் இரு கரங்களையும் இணைத்து பிடித்துக் கொண்டவள், “இங்க பாருடி இத வழக்கமா மாப்பிள்ளைகிட்ட தான் சொல்லுவாங்க… ஆனா நான் உன்கிட்ட சொல்லறேன்… என் நண்பன் ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு… சூதுவாது தெரியாத அப்பாவி பையன்… தேவையில்லாம என்னத்தையாவது பேசி அவன அழ வச்சுட்டு இருக்காத சொல்லிட்டேன்… அவன் கண்ணுல இருந்து கண்ணீர்னு ஒன்னு வரதா இருந்தா இனிமே அது ஆனந்த கண்ணீரா மட்டும் தான் இருக்கணும்…” உருக்கமாய் அரசி சொல்லிக் கொண்டிருக்க,
“இடையில என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கறேன்… இந்த டையாக்க விட்டுட்ட பாரு… மனப்பாடம் பண்ணத கூட ஒழுங்க ஒப்பிக்க தெரியல… நீயெல்லாம் வட்டி கணக்கு பாத்து… பேங்க நடத்தி… ம்ம்ம்… உருப்புட்ட மாதிரி தான் போ…” நீட்டி முழக்கினாள் தென்றல்.
“பேச்ச கொறடி… கல்யாண பொண்ணா லட்சணமா கொஞ்சமாவது அமைதியா அடக்க ஒடுக்கமா இருக்க பழகு…” என்றாள் எரிச்சலாய் அரசி.
“கல்யாண பொண்ணுனா இப்படி தான் இருக்கணும்னு ரூலஸ் அண்ட் ரெகுலேஷன் ஏதாவது இருக்கா என்ன..?” என்றாள் அதற்கும் தென்றல்.
“ஏய்… வேற யாராவது கேட்டா உன்ன தான் ஏதாவது நினைப்பாங்க… கொஞ்ச நேரம் அமைதியா இரு தெய்வமே…” என்றாள் கெஞ்சலாய் அரசி.
“நினைச்சா நினைக்கட்டுமே…” என தென்றல் அதற்கும் ஆரம்பிக்க, தன் இதழ்களின் மீது விரல் வைத்து, “மூச்… இனி ஒரு வார்த்தை வர கூடாது… வந்துச்சு… பிச்சு பிச்சு…” என்றாள் அதட்டலாய் அரசி.
“என் பொண்ண கூட சமாளிச்சுடலாம் போல… இந்த பிசாச சமாளிக்கறதுகுள்ள எனக்கு மூச்சு முட்டுது ஆண்டவா…” என்றாள் புலம்பலாய் அரசி.
“இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…” என்றாள் பாட்டாய் பாடி, நக்கலாய் தென்றல்.
தென்றலின் விரலை பிடித்து இதழ்களின் மீது வைத்தவள், “மூச்… இப்ப தானே உன்ன பேச கூடாதுனு சொன்னேன்… இனிமே பேசன தொலைச்சு காட்டிடுவேன் ராஸ்கல்…” என்றாள் மிரட்டலாய். இரண்டு வயது மகள் ஹரினியை அதட்டும் அதே பாவனை அரசியிடம். அதில் பெரிதாய் விரிந்தது தென்றலின் புன்னகை.
முழுதாய் சில நிமிடங்கள் கூட அரசியால் அமைதியாய் இருக்க முடியவில்லை. “ஏன்டி அவங்ககிட்ட அப்படி என்ன தான் சொன்ன… அவங்க மூஞ்சே பேயறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு… உடனே கோவிச்சுட்டு ஏந்திரிச்சு வேற போய்டாங்க…” என்றாள் தென்றலின் முகத்தை தன் பக்கம் திருப்பி அரசி. அவள் வாய் மீதிருந்து விரலை எடுக்காமலேயே மறுத்து இடவலமாய் தலையை அசைத்தாள்.
“ச்சீ… பேசி தொல… இப்ப தான் பால்வாடி பாப்பா மாதிரி பண்ணுவ…” என்றாள் அதற்கும் எரிச்சலாய் அரசி.
“ம்ம்ம்… உண்மைய சொன்னேன்...” தலை சாய்த்து கண் சிமிட்டி குறும்பு புன்னகையோடு தென்றல் சொல்ல, முறைத்துப் பார்த்தாள் அரசி.
“ரொம்ப தான் சொல்லாட்டி போயேன்…” என்றாள் நொடிப்பாய் அரசி முக்ததை உர்ரென்று வைத்துக் கொண்டு.
“பசி வந்தா நீ நீயா இருக்க மாட்டா…” என்றாள் நொடி நொடிக்கு மாறும் அரசியின் மனநிலையைக் கண்டு, தோழியை அறிந்தவளாய் தென்றல்.
“ஆமான்ல… ரைட் மூணு மணிக்கு எழுந்தது… பசி வயித்த கிள்ளுது… எப்பதான் நமக்கு சாப்பாட காட்டுவாங்களாமான்…” என்றாள் அரசியும் பாவமாய்.
அரசி சொன்னதை போலதான் நடந்தது. வீட்டிற்கு சென்றும் மல்லிகா சும்மா இருக்கவில்லை. தனது கணவருக்கு கைப்பேசியில் அழைத்து, உடனே பிள்ளைகளோடு கிளம்பி வரும்படி ஆட்டமாய் ஆடிக் கொண்டிருந்தார். சீனிவாசன் எவ்வளவு தான் சொன்னாலும் கேட்பதாய் இல்லை. தன்னை மதிக்காத இடத்தில், கணவரும் பிள்ளைகளும் இருக்க கூடாதென்றும், உடனே ஊருக்கு கிளம்ப வேண்டுமென்றும் குதித்தார்.
“இந்த பெரியவனே… பந்திய பாக்காம புது மாப்பிள்ளை கணக்கா அங்க என்ன பொண்டாட்டிக்கிட்ட பேச்சு… போன என்கிட்ட குடு… நான் பேசிக்கறேன்… நீ போய் ஆகற வேலைய பாரு…” என வந்து விட்டார் வள்ளிக்கண்ணு. இப்படி நடக்குமென்று தெரிந்து தான் மாமியாரை அனுப்பி வைத்திருந்தாள் கயல்.
“இந்தா மல்லி… இப்ப என்ன பிரச்சனை உனக்கு…” என்றார் எடுத்ததுமே அதட்டலாய் வள்ளிக்கண்ணு.
“நேத்து வந்த பொண்ணு என்ன மரியாதை இல்லாம பேசுது… நீங்க என்னனா அவங்க குடும்பத்தோட ஒட்டி உறவாடிகிட்டு இருக்கீங்க… எனக்கொரு அவமானம்னா அது நம்ம குடும்பத்துக்கு இல்லையா..? நியாயமா பாத்தா இந்நேரம் நீங்க எல்லாருமே கிளம்பி இங்க வந்திருக்கணும்…” என்றாள் தேம்பியபடியே இல்லாத கண்ணீரை அடக்குவதாய் பாவணைப் பண்ணிக் கொண்டு மல்லிகா.
“நேத்து வந்த பொண்ணு மரியாதை இல்லாம பேசற அளவுக்கு நீ என்ன பண்ண..?” அழுத்தமாய் அதட்டலாய் வள்ளிக்கண்ணு கேட்க, பதில் சொல்ல முடியவில்லை மல்லிகாவால்.
“நீ என்ன பண்ணனும் எனக்கு தெரியும்… அதுக்கு அந்த புள்ள அதுக்கு என்ன பதில் சொன்னுச்சுனும் எனக்கு தெரியும்… இருந்து இருந்து என் ராசாவுக்கு இப்ப தான் ஒரு நல்லது நடக்குது… விசேஷ வீட்டுல உன்னால ஒரு பிரச்சனைனு தெரிஞ்சுது… வீட்டு மருமகனு கூட பாக்க மாட்டேன்… உச்சி முடிய ஆஞ்சுட்டு வுட்டுவேன் ஆமா… இன்னும் அஞ்சு நிமிஷம் உனக்கு அவகாசம்… எப்படி கிளம்பி போனீயோ அப்படியே தடயம் தெரியாம திரும்பி வந்து சேருற… இல்ல அம்புட்டு தான்… சொல்லிட்டேன்…” என்றவர் வைத்துவிட, மல்லிகாவிற்கு வேறு வழியும் இருக்கவில்லை.
“அண்ணி டீ காபி எதுவும் எடுத்துட்டு வரட்டுமா..? நீங்க எது குடிப்பீங்கனு தெரியல… பத்து மணி வரைக்குமே ஆளுங்க வந்துட்டும் போய்ட்டும் தான் இருப்பாங்க… வரங்க எல்லாரும் உங்கள தான் பாக்கணும்னு நினைப்பாங்க… அதனால இன்னைக்கு மட்டும் அண்ணன் உங்கள கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்லுச்சு…” என்றபடியே வந்து விட்டாள் கயல்.
வேகமாய் தென்றலின் விழிகள் அவனை தேட, “கொஞ்சம் எட்டி பாருங்க… அண்ணன் தெரியும்…” என்றாள் சின்ன சிரிப்புடன் கயல். சட்டென்று எழுந்து முன்னால் வந்து எட்டிப் பார்க்க, வாயில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் பார்வை, பாவையிடம் தான். ஆக ஆரம்பித்திலிந்தே அவளை அவன் கவனித்துக் கொண்டே தான் இருந்திருக்கிறான்.
“பாருடா ஸ்பெஷல் கவனிப்பா இல்ல இருக்கு… நாங்களும் தான் நடு ராத்திரில இருந்து பச்ச தண்ணி கூட குடிக்காம பட்டினி விரதம் இருக்கோம்… எங்கள எல்லாம் யாரு கண்ணுக்கு தெரியுது…” என்றாள் பக்கத்தில் இருந்த அரசி.
“அக்கா… நீங்க இன்னுமா சாப்பிடாம இருக்கீங்க…” என்றாள் போலியாய் அதிர்ந்தபடி கயல்.
“இந்தாம்மா கயலு… இங்க என்ன ஆஸ்கர் பங்ஷனா நடக்குது… குடும்பமா சேர்ந்து இப்படி நடிக்கறீங்க… காலையில இருந்து ஒரு காபிய கண்ணுல காட்டி இருப்பீங்களா..? பேசறா பேச்சு… ஒன்னுமே தெரியாதவளாட்டம்…” என்றாள் நொடிப்பாய் அரசி.
“அண்ணி அண்ணன் கூட தான் சாப்பிடணும்னு வெயிட் பண்ணுவாங்க தெரியும்... நீங்களும் கூட சேர்ந்து சாப்பிடாம இருப்பீங்கனு நானென்ன கனவா கண்டேன்…” என்றாள் கேலியாய் கயல்.
“ஏன்ம்மா சொல்ல மாட்ட…” என்று அரசி ஆரம்பிக்க,
“இப்ப என்னடி உனக்கு… பசிச்சா போய் சாப்பிட்டு தான் வாயேன்…” என்றாள் பெருந்தன்மையாய் தென்றல்.
“ஆத்தாடி ஆத்தா… இத சொல்ல உனக்கு எவ்வளவு நேரம்… இந்தாடி கயலு… நீ பாட்டுக்கு வேலை இருக்குனு எங்கையாவது போய்டாத… நான் சாப்பிட்டு வர வரைக்கும் உங்க அண்ணி பக்கத்துலையே இரு… புரியுதா..?” என்றாள் அப்பொழுதும் அரசி.
“நீங்க ரொம்ப லேட்… உங்கள அனுப்பி விட்டுட்டு அண்ணி பக்கத்துல இருக்க சொல்லி தான் அண்ணனும் என்ன அனுப்பிச்சு…” என்றாள் கயல்.
கயலும் தென்றலும் தங்களுக்குள் கலகலத்தபடி இருக்க, அரசி சாப்பிட சென்றிருந்தாள். சட்டென்று அந்த இடத்திற்கு பொருந்தாத, விரும்ப தகாத ஒரு நிசப்தம் அவர்களை சூழ்ந்துக் கொண்டது. ஆளாளுக்கு மெல்லிய குரலில் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள, பெண்கள் இருவரும் வாசலை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நேசன், யாரோ ஒரு வயது முதிர்ந்த தம்பதிகளோடு உள்ளே நுழைய, அத்தனை பேரின் கவனமும் அவர்களிடம் தான். அவர்கள் தென்றலை நெருங்கும் முன்னமே, குணவதி, மாதவன், மாதவனின் பெற்றோர் என அவளின் குடும்பமே அரணைப் போல் அவளுடன் வந்து நின்றிருந்தனர்.
தென்றலின் அருகில் வந்து நின்றவன், அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்தபடி, “இது தென்றல்… என்னோட மனைவி…” என்றான் அழுத்தாய் தீர்க்கமாய். வெகு இயல்பாய் அவன் தன்னை காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் இறுகிப் போயிப்பதை அவளை அணைத்து பிடித்திருத்த விரல்களின் வழியே தென்றலால் உணர முடிந்தது.
“நல்லா இரும்மா…” என்றார் அந்த முதியவர் நா தழுதழுக்க.
“சிவா ரொம்ப தங்கமான பையன் ம்மா… நாங்களும் என் பொண்ணும் தான் அவன புரிஞ்சுல… நீயாவது அவன் மனச புரிஞ்சுகிட்டு நூறு வருஷம் சந்தோஷமா வாழணும்மா…” அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பதைப் போல சொன்னார் அருகில் நின்றிருந்த பெண்மணி. யாரும் சொல்லாமலே, அவர்கள் நேசனின் முதல் மனைவியின் பெற்றோர் என தென்றலுக்கு புரிய தான் செய்தது.
அதே மனிதர்கள் மண்ணை வாறி தூற்றி அவனை சபித்து சென்றது தான் அந்த நொடி நேசனின் உள்ளத்தில் நிழாலாடியிது. “சாப்பிட்டு போங்க…” என்றான் முயன்று வரவழைத்த இலகு குரலில்.
“இல்லப்பா… இங்க பக்கத்துல ஒரு கல்யாணம்… அங்கேயே சாப்பிட்டோம்… நீயே வீடு தேடி வந்து கூப்பிட்டும் வராம போக முடியல… அதான்… நாங்க கிளம்பறோம்…” என்றவர்களுக்கு அங்கே நின்றுந்த ஒவ்வொரு நொடியும் முள்படுக்கையின் மீது நிற்பதைப் போல தான் இருந்தது. அனைவரின் துளைக்கும் பார்வையும் அவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதாய். சட்டென்று அந்த இடத்தையே சூன்யம் சூழ்ந்துக் கொண்டதை போலாகிவிட்டது.
‘நேசனா அவர்களை அழைத்தான்? அதுவும் வீடு தேடிச் சென்று… ஏன்?’ என்ற கேள்வி தான் அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதிலும்.
“வாங்க…” என்று விட்டான் நேசன் மறுத்து எதுவும் சொல்லாது உடனே அமைதியாய். நேசன் அழைத்தான் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். பரிசென்று அவர்களும் எதுவும் கொண்டு வந்திருக்கவில்லை. நிச்சயம் நேசன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் என அவர்களுக்கே தெரிந்திருந்தது. அடுத்த நொடி அவர்களும் அங்கிருந்து கிளம்பியும் விட்டார்கள்.
ஆட்கள் வரவு எப்பொழுது குறையும், அவனை கடித்து குதறலாம் என காத்திருந்தது மொத்த குடும்பம். ‘இருந்திருந்து இப்பொழுது தான் அவனுக்கு ஒரு நல்லது நடக்கிறது. இந்த சமயத்தில் அவர்களை அழைக்க வேண்டுமா? அப்படியென்ன அவசியம்.’ என்பது தான் அவர்கள் அனைவரின் எண்ணமுமாக இருந்தது.
அதுவும் குணவதிக்கு அப்படியொரு ஆத்திரமான ஆத்திரம். மகனுக்கு எத்தனை வயதானால் தான் என்ன? திருமணமே முடிந்திருந்தால் தான் என்ன? என் இப்படி செய்தாய் என கேட்டு முதுகிலேயே நாலு சாத்து சாத்துவோமா என்று தான் இருந்தது.
ஆட்களின் வருகை குறைந்து மணமக்கள் சாப்பிடுவதற்காக அமர வைக்கப்பட்டார்கள். மெல்ல கணவனின்புறம் சாய்ந்து, மெல்லிய கிசுகிசுப்பான குரலில், “எனக்காவா..?” என கேட்டிருந்தாள் தென்றல்.
அவள் கண்டுக் கொண்டதில் உண்டான பெரும் ஆச்சர்யத்தோடு கண்கள் விரிய வேகமாய் அவன் பெண்ணை திரும்பி பார்க்க, ரகசியமாய் அவனின் அதிர்ந்த ஆச்சர்ய பாவத்தை உள்வாங்கி தனது மனப் பெட்டகத்திற்குள் சேமித்துக் கொண்டாள் பெண்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.