நெஞ்சம் 28:
“என்னம்மா கல்யாணப் பொண்ணு… நின்னுகிட்டே கனவா…” அவள் வந்ததை கூட கவனிக்காது, இன்னுமே உறைந்து நின்றவளின் தோளில் இடித்து, கேலியாய் சிரித்தாள் அரசி.
“ஹான்… என்ன..?” என மலங்க மலங்க விழித்தவளை கண்டு, பெரிதாய் விரிந்த புன்னகையோடு, “முத்திடுச்சு போ…” என்றாள் அரசி.
“ஆளுங்க வர ஆரம்பிச்சுச்சு தென்றல்… கயல் மாமியார் வீட்டு ஆளுங்க வேற வந்துட்டாங்க… சீக்கிரம் ரெடி ஆகி கீழ போ… இல்ல தேடிட்டு இங்கையே வர போறாங்க…” சட்டென்று பேச்சை இலகுவாக்கி அவளை இயல்புக்கு கொண்டு வர முயன்றாள் அரசி.
“ம்ம்ம்…” என்ற சின்ன முனகலோடு, கண்ணாடி முன் தன் ஒப்பனைகளை சரிசெய்ய துவங்கினாள் தென்றல். அவளுக்கு உதவியபடியே அருகில் நின்றிருந்த அரசி, அடுத்து எந்த கேள்வியுய் எதுவும் கேட்டு அவளை சங்கடத்திற்கு உண்டாக்கவில்லை. இப்பொழுது தான் ஓரளவுக்கு தெளிந்து, இயல்பாய் இருக்கிறாள். ஏதாவது கேட்டு மீண்டும் தோழி தனது கூட்டிற்குள் ஓடுங்கிக் கொண்டால், என்ற எண்ணம் அவளுக்கும் இருக்கவே செய்தது.
தயாரானவள் தோழியின் முகம் பார்த்து தயங்கி நிற்க, “என்ன..” என்றாள் அரசி.
“நீ வரல…” என்றாள்
“ஏன் வரணுமா..?” என கேலியாய் வினவியவளை தென்றல் முறைக்க, “பிள்ளைங்க தூங்கறாங்களேம்மா… அதுவும் வேந்தனுக்கு இது புது இடம்... எழுந்ததும் கத்தி ஊர கூட்டிட்டா… தெரிஞ்ச முகம் யாராவது இருக்க வேண்டாமா..?” என்றாள் அரசி.
இப்பொழுது தான் வேந்தனுடனேயே பூக்குட்டியையும் அரசியின் இரண்டு வயது மகள் ஹரினியையும் படுத்திருப்பதை கவனித்தாள் தென்றல்.
“கீழ ஓரே சத்தம் தென்றல்… ஆளுங்க போறதும் வரதுமா இருக்காங்க... அதான் இங்க தூக்கிட்டு வந்து படுக்க வச்சேன்…” என்றாள் அவளின் பார்வை உணர்ந்து அரசி.
“அதெல்லாம் பிள்ளைங்க எழுந்து தேட மாட்டாங்க… அப்படியே தேடுனாலும் யாராவது கீழ கூட்டிட்டு வந்திடுவாங்க… நீ என் கூடவே இரு… வா…” என்றபடியே அவள் கைப்பற்றி தன்னோடு இழுத்தாள் தென்றல். தோழியை பக்கத்தில் இருத்திக் கொள்ளவே அவள் மனம் விழைந்தது.
“அப்படி யாரு மேடத்த இங்க கடிச்சு திங்க போறாங்களாம்..?” கேலியாய் வினவினாலும், தோழியின் இழுப்புக்கு இசைந்துக் கொடுத்தாள் அரசி.
உறக்க கலக்கத்தில் இருக்கும் பிள்ளைகளின் நிலையில் தான் தென்றலுமே இருந்தாள். ஆதரவாய் தெரிந்த முகம் ஒன்று பக்கத்திலேயே வேண்டும் என்றது அவளின் மனம். அரசியை தவிர வேறு யார் அவளைக்கு துணையாய் பக்கத்தில் நின்றுவிட முடியுமாம்?
அவர்கள் இருவரும் கீழே வர, அங்கிருந்த மனிதர்களோடு ஒன்ற முடியாது கண்களில் கலக்கத்தோடு யாரோ போல் தணித்து நின்றிருந்தார் குணவதி. மகளை கண்டதும் அவரிடம் அப்படியொரு ஆசுவாசம்.
கயலும் விசாலமும் அவரை தங்களோடு பொறுத்திக் கொள்ள தான் பார்க்கிறாள்கள். அவரால் தான் சட்டென்று அவர்களோடு ஒன்ற முடியவில்லை.
“ம்மா… வேந்தன் தனியா இருக்கான்… நீங்க அவன் கூட இருங்க…” என்றாள் அவரின் தவிப்பு புரிந்தவளாய் தென்றல்.
“அது எப்படி தென்றல்… பொண்ணு வீட்டுக்காரங்கனு யாராவது இருக்கணுமே…” என்றார் பெற்றவர். அரசியின் எண்ணமும் அதுவாய் தான் இருந்தது.
“அதான் பொண்ணு நானே இங்க இருக்கேனே… அப்பறம் என்ன..? நீங்களும் ரொம்ப டயர்டா இருக்கீங்க… கொஞ்ச நேரம் படுத்து எழும்பி வாங்க…” என்றாள் தென்றல்.
“அது எப்படி தென்றல்… மாப்பிள்ள ரூம்ல நானு…” என சங்கடமாய் அவளை பார்த்து நெளிந்தவரை, “வேந்தன் முழிச்சா அழுவான்ம்மா… போய் அவன் கூட இருங்க…” என்றாள் அழுத்தமாய். அப்படி அவள் சொல்லவும் காரணமிருந்தது.
அதை கேட்டபடியே நெருங்கி அவர்களை வந்திருந்தாள் கயல். “அத்தைக்கும் புது இடம் தானே… அதான் சங்கட படறாங்க… நான் போய் அவங்களுக்கு தேவையானத எடுத்துக் குடுத்துட்டு வரேன்…” என்றபடியே அவரின் கைப்பற்றி அழைத்துக் கொண்டு மேலே சென்றாள் கயல்.
“ஏன்டி லூசாடி நீ… வரவங்க எல்லாம் பொண்ணு வீட்டு ஆளுங்க எங்கனு கேட்க மாட்டாங்களா..?” என்றாள் சின்ன குரலில் கடிந்துக் கொள்ளும் விதமாய் அரசி.
“வர எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அரசி… யாராவது ஒருத்தர் எங்க கடந்த காலத்த பத்தி பேசுவாங்க… எங்க அம்மாவாலையும் வாய வச்சுட்டு சும்மா இருக்க முடியாது… தேவையில்லாத பிரச்சனை… முதல் நாளே மனசுக்கு சங்கடம்… அதால்லாம் ஏன் சொல்லு…” என்றாள் தென்றல். அவள் சொல்வதைப் போல தான் இருந்தார்கள் மனிதர்கள்.
அடுத்தடுத்து ஆட்கள் வருவதும், அவளை தனிப்பட்ட முறையில் விசாரித்து செல்வதும் என தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் அவளின் கண்கள் நேசனை தேடி தேடி களைத்துப் போனது. வந்தவர்கள் அத்தனை பேரும் நேசனை சேரந்தவர்களாய் இருக்க, அவர்களை உபசரிக்க கவனிக்க என்று வாயிலியே நின்று விட்டான் அவன். பெரும்பாலும் பெண்கள் தான் உள்ளே வந்து தென்றலை விசாரித்துக் கொண்டு சென்றனர்.
ஒரு இடத்தில் சுற்றி பெண்கள் வட்டமாய் அமர்ந்தபடி வருபவர்களுக்கு தருவதற்கான தாம்பூல பைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் மல்லிகாவும் சுந்தரியும் கூட அடக்கம்.
“என்ன இருந்தாலும் சிவாவோட மொத சம்சாரத்த விட இந்த பொண்ணு கலர் கம்மி தான் இல்ல... ஆளும் ஒன்னும் அத்தன லட்சணமா இல்ல…” என்றாள் அங்கலாய்பாய் அவர்களில் ஒருத்தி.
“கலர விடுங்கக்கா… அவங்க நம்ம ஆளுங்க இல்ல போலையாம்… அதுவும் இல்லாம பொண்ணுக்கு அம்மாவ தவிர சொந்தம்னு சொல்லிக்க ஒரு நாதி கிடையாதாம்… ஊர் உலகத்துல யாருக்காவது அப்படி இருக்கமா..? என்ன செய்தியோ..? என்ன கதையோ..? எந்த புத்துல எந்த பாம்பிருக்குனு யாரு கண்டா..?” என்றார் நொடிப்பாய் ஒரு பெண்மணி.
“அத சொல்லு சாந்தி… என்னமோ டைவர்ஸ் ஆகிடுச்சுனு சொல்லுதாங்க… யாரு போய் நேர்ல பாத்தா… நெசத்துக்கு கல்யாணம் ஆச்சோ இல்ல யார்கிட்டையும் ஏமாந்து புள்ளைய வாங்கிட்டு ஊர விட்டு வந்துட்டாங்களோ என்னவோ… சொந்தம் பந்தம்னு எல்லாரையும் கூப்பிட்டா உண்ம தெரிஞ்சு போவாது..?” என்றார் முதல் பெண்மணி இல்லாத உருவத்திற்கு கண், காது மூக்கு வைத்து ஜோடனை செய்தபடி. நேசனின் வளர்ச்சி கண்டு, அவரின் தங்கைக்கே நான்கு வருடங்களுக்கு முன்பு நேசனை பேசி இருக்க, முடியவே முடியாது என்றிருந்தான் அவன்.
மாதவனும் கயலும் வாசலில் வருபவர்களை வரவேற்பதும், கிளம்புபவர்களுக்கு தாம்பூல பை கொடுப்பதும் என்று இருந்தனர். தாம்பூல பை தீர்ந்து போக, அதை எடுக்கவென அங்கே வந்தாள் கயல்.
அவளை கண்டதுமே, “என்ன கயலு நல்லா விசாரிச்சுட்டு தானே கல்யாணத்துக்கு பேசனீங்க… முன்ன மாதிரி எதுவும் ஆகிடாதே..!” என்ற மல்லிகாவின் குரலில் ஏகத்திற்கும் இளக்காரம் இருந்தது. நேசனின் மீது உண்டான காழ்ப்புணர்ச்சியை இவ்விதமாய் தீர்த்துக் கொள்ள முயன்றார் அவர்.
“அதெல்லாம் உங்க கொழுந்தன் தான் விசாரிச்சாரு… எது கேக்கறா இருந்தாலும் அவரையே கேளுங்க…” என்றாள் கயல் அப்பட்டமாய் குரலிலும் முகத்திலும் எரிச்சலை படரவிட்டபடியே.
தாம்பூல பையை எடுத்துக் கொண்டு அவள் நகர முற்பட, “சிவாவுக்கு அப்படியென்ன வயசு ஓடிப்போச்சு… முதல் கல்யாணத்துக்கே அத்தன பொண்ணுங்க ரெடியா இருக்கும் போது… எதுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ண அதுவும் நாலு வயசுல புள்ளயோட இருக்கற பொண்ண கட்டணும்…” என்றார் முதல் பெண்மணி கயலை நிறுத்தி வைத்தபடி.
“அதான் ஏனு எனக்கும் தெரியல அண்ணி… நம்ம சுந்தரி வீட்டு சைட்ல கூட ஒரு பொண்ணு இருந்துச்சு… மொத கல்யாணத்துக்கே கேட்டாங்க… ஆனா இவங்க தான் வேண்டானுட்டாங்க… இல்ல சுந்தரி…” என அவளையும் பேச்சில் இழுத்தார் மல்லிகா.
“அது ஒரு வருஷத்துக்கு முன்னாடி க்கா… ஜாதகம் பொருந்தலனு தான் வேண்டானு சொல்லிட்டாங்க… இப்ப அந்த பொண்ணுக்கு வேற இடத்துலை நிச்சயமும் ஆகிடுச்சு… அதெல்லாம் இப்ப எதுக்கு பேசிட்டு…” என அந்த பேச்சிலிருந்து ஒதுக்கவே முயன்றார் அவர்.
“பழசெல்லாம் இப்ப எதுக்கு பேசறீங்க அக்கா… அண்ணனுக்கும் இது ரெண்டாம் கல்யாணம் தானே… எல்லாத்தையும் மறந்து எங்களுக்கு அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்…” என அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முயன்றாள் கயல்.
“ஆம்பள எத்தன கல்யாணம் வேணாம் பண்ணவான்டி கயலு… அதுக்குனு நம்ம வீட்டு புள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனா பொண்ண பாப்பீங்களா… இப்படினு முன்னாடியே எனக்கு தெரிஞ்சு இருந்தா…” என்றார் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் நீட்டி முழக்கி.
“அப்படி கேளுங்க அத்தாச்ஙி… அதுவும் நீ நானு பொண்ணு தர போட்டி போட்டுட்டு ரெடியா இருக்கும் போது… ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ண அதுவும் புள்ளையோட இருக்க ஒருத்திய இத்தன அவசரமா எதுக்கு கட்டணும்னு கேக்கறேன்… நானும் சிவா தம்பிய என்னமோனு இல்ல நினைச்சேன்… ஆனா ஊருக்குள்ள அரசபுரலா பேசிகிட்டது சரியாதான் இருக்கும் போல…” என்றார் நொடிப்பாய் மல்லிகா.
“தேவை இல்லாதது எல்லாம் இப்ப எதுக்கு பேசறீங்க..?” என்ற கயலுக்கு அத்தனை கோபம். இது மட்டும் அவள் அண்ணனின் திருமணமாய் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அவள் மூக்குடைப்பட வேறு ஏதாவது கேட்டிருப்பாள்.
“நீ கோபப்படறத பாத்தா அதான் உண்மையா இருக்கும் போலவே… உங்கண்ணகிட்ட ஒரு குறையும் இல்லாமலா காதலிச்சு கல்மாணம் பண்ணவ வேண்டானு விட்டுட்டு போவா…” என்றாள் மல்லிகா அவளை தூண்டி விடுவதைப் போல. எதையாவது பேசி நிறைந்த சபையில் நேசனை அவமானப்படுத்தி விட வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை கயல் உணரவே இல்லை.
“என்ன பேசறீங்க நீங்க..?” என்றவளுக்கு அவர் சொன்னதன் பொருளில் உடம்பே நடுங்க தொடங்கி விட்டது.
வந்து வெகு நேரமாகியும் கயல் திரும்பி வராததால், அவளை தேடிக் கொண்டு அரசி வர, தனித்து நிற்க பிரியப்படாமல் அவளின் பின்னோடே தென்றலும் வந்திருந்தாள். மல்லிகா பேசியது துல்லியமாய் அவர்களுக்கும் கேட்க தான் செய்தது.
“அந்த பொண்ணுக்கு சிவாவோட வாழ குடுத்து வைக்கல… நம்ம புள்ள குணத்துல தங்கம்… அவன ஒரு குறை சொன்னா சொன்னவங்க நாக்கு தான் அழுகி போகும்…” என்றார் அந்த மூத்த பெண்மணி.
“குணம் தங்கமா இருந்து என்ன பண்ண… உடம்புல என்ன குறையோ..? அத்தி பழம் பாக்க பளபளப்பா தான் இருக்கும்… உள்ள புட்டா பாத்தா தான் தெரியும் அத்தனையும் சொத்தனு…” கேலியாய் மல்லிகா.
கேட்டுக் கொண்டிருந்த அரசிக்கே அத்தனை கோபம் வந்தது. பதில் பேசிவிட நா துறுதுறுவென்றது. கயலோ இதற்கு என்ன விதமாய் பதில் சொல்வதென தெரியாது, துளிர்த்துவிட்ட கண்ணீரோடு சம்பித்து நின்றிருந்தாள்.
“அண்ணி அண்ணன் உங்கள கூப்பிடறாங்க… சீக்கிரம் வருவீங்களாம்…” என்றாள் கயலிடம் தென்றல் சற்றே கண்டிப்புடனான அழுத்த குரலில்.
“இன்னும் ஒரு வருஷம் போனா தெரிஞ்சுட போகுது யாரு அத்தி பழம் யாரு பலாப்பழம் யாரு மாதுளம் பழம்னு… என் வளைகாப்புக்கும் நீங்க தானே தாம்பூல பை போடணும்… அப்ப பேசிக்கலாம் மீதி பொறணிய… இப்பதிக்கு ஆகற வேலைய பாருங்க…” என்றாள் தென்றல் கேலியைப் போல.
மல்லிகாவின் முன்பிருந்த தட்டில் மிட்டாய்கள் நிறைந்திருக்க, அதைதான் மணமக்கள் பெயருடன் வருகைக்கு என்றி என்றிருந்த அட்டையோடு சேர்த்து பின் செய்து தாம்பூலப் பையில் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். அவளின் அருகில் மிட்டாய் எடுப்பதைப் போல குனிந்தவள் மெல்லிய குரலில், “இது தான் என் முன்னாடி நீங்க அவங்கள பத்தி பேசறது கடைசியா இருக்கணும்… இல்ல நீங்க தான் அசிங்கபட்டு போகணும்… அவங்களுக்கு நீங்க என்ன உறவா வேணும்னாலும் இருக்கலாம்… எனக்கு நீங்க யாருமே இல்ல… அத நல்லா மனசுல வச்சுக்கோங்க…” என்றபடியே கை நிறைய மிட்டாயை எடுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டாள்.
தென்றல் எத்தனை தான் மெல்லமாய் சொல்லி இருந்தாலும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு அது கேட்க தான் செய்தது. “இருந்து இருந்து பய சரியான ஆள தான் புடிச்சுக்கான்…” என்றார் சின்ன சிரிப்போடு அந்த முதிய பெண்மணி. அடுத்தடுத்து அவர்களின் பேச்சு வேறு விசயங்களுக்கு தாவி இருக்க, முகம் கருக்க, அவமான குன்றலோடு அங்கே அமர்ந்திருக்க முடியாது யாரிடமும் சொல்லிக் கொள்ளாது அங்கிருந்து கிளம்பி இருந்தாள் மல்லிகா.
– நேசம் ஒளிரும்…
No comments yet.