நெஞ்சம் 26:

தமிழ் வெண்பா | 10 Feb 2026 | Share

நெஞ்சம் 26:

‘அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா!
என்னோடு சேர வா முருகா!’

அன்னையும் மகனுமாய் மெய் மறந்து உயிர் உருக மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தனர். மிக மெல்லிய குரல் தான் என்றாலும் அருகில் நின்றிருந்த நேசனை அது துல்லியமாய் சேர்ந்திருந்தது. எந்த குரல் அவனுக்கு வாழ்வின் மீது ஒரு பற்றுதலை பிடிப்பை உண்டாக்கியதோ, இன்று அது அவனின் சொந்தமாய், அவனுக்கு மட்டுமே சொந்தமாய் கை சேர்ந்து விட்டதை இன்னுமே அவனால் முழுதாய் நம்ப தான் முடியவில்லை. எங்கே எல்லாம் ஒரு கனவு போல், கானல் நீர் போல் விடிந்ததும் களைந்திடுமோ என்று பயமாக கூட இருந்தது.

பாடல் முடிந்து மெல்ல இமைகளை பிரித்தவளின் கண்களை நிறைந்தது பூஜை அறையின் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த திருமணக் கோலத்தில் செந்தில் ஆண்டவரின் புகைப்படம். வார்த்தைகளில் வடிக்க முடியாத நிறைவும் அமைதியும் மனதை ஆக்கிரமிக்க, இத்தனை நேரம் மனதில் இருந்த சஞ்சலங்கள் கூட அகன்று மெல்லிய ஆசுவாசம் படர்ந்தது. நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது எல்லாம் அவன் செயல் அல்லவா! இதில் அவள் அஞ்சி நடுங்கி சஞ்சலம் கொள்ள புதியாய் என்ன இருக்கிறது? அவளின் அதே மனநிலையில் தான் நேசனும் நின்றிருந்தான்.

அவர்கள் இருவரையும் களைப்பதைப் போல, “அப்பா…” என்ற அழைப்போடு அன்னையிடமிருந்து தந்தையிடம் தாவினான் பிள்ளை. என்னவோ அவனின் பிரிய முருகனே நேசனை சேர்ந்து விட்டதைப் போல நெகிழ்ந்துப் போனது அவனின் உள்ளம்.

வாஞ்சையாய் பிள்ளையை அள்ளி உச்சந்தலையில் தனது அதரங்களை பதித்தவனுக்கு, நெகிழ்ச்சில் ஒரு துளி கண்ணீர் கூட இமை தாண்டி வழிந்திருந்தது.

“மூணு பேருமா குடும்பமா சாமிக்கு விழுந்து கும்பிட்டுக்கோங்க சிவா…” பூஜை அறையின் வாசலில் நின்றபடியே விசாலம் சொல்ல, அதை அப்படியே செய்தார்கள் அவர்கள்.

திருமணம் முடிந்த கையோடு மணமகனின் வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள் அவர்கள். காலை உணவிற்கு வீட்டில் தான் எற்பாடு செய்திருந்தான் மாதவன். நெருங்கிய வெகு சிலரை தவிர மற்றவர்களுக்கு எல்லாம் வீட்டிற்கு தான் அழைப்பு.

சடங்கு, சம்பிரதாயம் என்றில்லாது முழு மனதோடு நிறைவாய் தான் விளக்கை பொருத்தினாள் தென்றல். அத்தோடு அவர்களின் தினசரி வழக்கமாக பாடவும் செய்ய, அது அங்கிருந்தவர்களை இன்னுமே நெகிழ செய்திருந்தது.

விடியலில் எழுந்ததோ என்னவோ, வேந்தனின் விழிகள் உறக்கத்திற்கு சொக்க நேசனின் கழுத்தை கட்டிக் கொண்டபடியே அவனின் தோளில் முகம் புதைத்துக் கொண்டவன், “பசிக்குதுப்பா…” என்றான் சிணுங்களாய்.

“அச்சோ… என் தங்கத்துக்கு குட்டி வயிறு பசிச்சுடுச்சா…” பிள்ளையை செல்லம் கொஞ்சியபடியே அவன் பூஜையறையில் இருந்து வெளியே வர, பால் பழத்தோடு தயாராய் நின்றிருந்தாள் கயல்.

மூவரையும் ஒன்றாக அமர வைத்து மூவருக்குமே பால், பழம் கொடுக்க, முகத்தை சுழித்தான் பிள்ளை.

“அவனுக்கு சீனி இன்னும் பழக்கப்படுத்தல… பாலுக்கு எப்பவும் நாட்டு சக்கரை தான் போட்டு குடுப்பேன்…” என்றபடியே சங்கடமாய் கயலை பார்த்தாள் தென்றல்.

“அதனால என்ன அண்ணி… கொஞ்சம் சாப்பிட்டானே அதே போதும்… நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க… நான் வேந்தனுக்கு நாட்டுச் சக்கரை போட்டு பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்…” என்றவள் அடுத்ததாய் தென்றலுக்கு கொடுக்க, முயன்றும் முடியாமல் அவளின் முகத்திலும் சின்ன சுழிப்பு. அதுவே அவளுக்கும் பால் பிடிக்காது என கட்டியம் கூறியது.

மகனும் மனைவியும் பருகியது போக மீதம் முழுவதையும் தானே பருகி முடித்து வெற்று டம்ளரை தங்கையிடம் நீட்டினான் நேசன். அதற்குள் வேந்தனுக்கு தானே சக்கரை கலந்த பாலை காய்ச்சி ஆற்றியபடியே அங்கு வந்துவிட்டார் விசாலம். தாயிடமிருந்து அதை வாங்கி தானே மகனுக்கு புகட்ட தொடங்கி இருந்தான் நேசன்.

“புள்ள தூக்கத்துக்கு சொக்கறான் பாரு சிவா… மேல தூக்கிட்டு போய் உன் ரூம்ல படுக்க வச்சுட்டு வாங்க… பொழுது விடியவும் ஆளுங்க வர ஆரம்பிச்சுடுவாங்க… இங்க படுக்க வச்சா தூக்கம் கெடும்…” என்றார் விசாலம்.

சரியென்று தலையசைத்து கேட்டு கொண்டவன், தென்றலுக்கு கண்களால் அழைப்பு விடுத்துவிட்டு பிள்ளையோடு படியேறிவிட, அமைதியாய் அவனை தொடர்ந்தாள் தென்றல்.

இதுவரை சுற்றி இருந்தவர்களின் சலசலப்பும் பரபரப்பும் அடங்கி ஒரு அமைதி சூழ்ந்துக் கொண்டது இருவரையும். அறை கதவை திறந்து பிள்ளையை கட்டிலில் கிடத்தியவன், திரும்பி பார்க்க மெல்லிய தயக்கத்தோடு அறையின் வாயிலிலேயே நின்றிருந்தாள் தென்றல்.

கட்டிலில் மகனுக்கு அருகே கால்களை நீட்டியப்படியே சாய்ந்து அமர்ந்தவனிடம் கோடாய் இதழ் பிரியாத ஒரு மென்னகை. அவளை வாவென்று அழைக்காது, அவளாய் வர காத்திருந்தான். வெளியே நின்றிருந்த ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் அவளுள் நீள, வெகு தயக்கத்திற்கு பிறகு அந்த அறைக்குள் நுழைந்தாள் அவள்.

“ரெஸ்ட் ரூம் அங்க இருக்கு…” என்றான் கண்களை ஓய்வறையின் பக்கம் காட்டி.  அவளுக்கும் அது அவசியமாய் இருக்க, மறுப்பேதும் சொல்லாது அதற்குள் புகுந்துக் கொண்டாள் தென்றல்.

கதவை தாழிட்டு அதன் மீது சாய்ந்துக் கொண்டவளின் படபடப்பு அடங்க சில நிமிடங்கள் பிடித்தது. முகத்தை தண்ணீர் விட்டு அடித்து கழுவினால் நன்றாக இருக்குமென்று தோன்றிய அதே நேரம் எங்கே ஒப்பனை களைந்து விடுமோ என்று பயமாகவும் இருந்தது. பெரிதாய் இல்லையென்றாலும் கண்மை களைந்தால், முகமெல்லாம் கருப்படித்து விடுமே!

அந்த ஓய்வறையை சுற்றி பார்வையை ஓட்ட, சற்றே பெரிய அறை தான். நவீன காலத்தின் அத்தனை வசதிகளும் இருந்தது. கண்ணாடி சாளரத்தின் வழியே இளம் காலை சூரியனின் கதிர்கள் மெல்ல ஊடுருவி, விடிய தொடங்கி விட்டதை அறிவித்தது.

முழுதாய் பதினைந்து நிமிடங்கள் கரைந்திருக்க, கண் மை களைந்து விடாதபடி மென்மையாய் நீரால் கழுவிக் கொண்டு வந்தவளின் முகமெங்கும் முத்து முத்தாய் நீர் துளிகள்.

கைகளை மார்பின் குறுக்கே கட்டியப்படி, அதே நிலையில் சட்டமாய் அங்கே தான் அமர்ந்திருந்தான் நேசன். அவன் இந்நேரம் நிச்சயம் வெளியே சென்றிருக்க கூடும் என்ற நினைப்போடு வந்தவளுக்கு சிறு அதிர்ச்சி. அதை அவனிடமிருந்து மறைக்க முயன்று அறையை வேடிக்கை பார்ப்பதைப் போல, முகத்தை திருப்பிக் கொண்டாள் பெண்.

“டவல் கார்போர்ட்ல இருக்கு… வேணும்னா யூஸ் பண்ணிக்கலாம்… இல்ல புதுசா தான் வேணும்னா கீழ போய் தான் வாங்கிட்டு வரணும்…” என்றான் அமர்த்தலாய் நேசன்.

அவளுடைய பொருட்கள் அடங்கிய பையும் கூட கீழே தான் இருந்தது. அதை அரசியிடம் கொடுத்தனுப்ப சொல்லலாம் என்று அவள் நினைத்திருக்க, இப்படி சொல்பவனிடம் ‘இல்லை… எனக்கு என்னுடையது தான் வேண்டும்…’ என்றா சொல்ல முடியும்.

மறுக்க முடியாது அவன் கைக்காட்டிய இடத்தில் இருந்து பூந்துவளையை எடுத்து கொண்டவளுக்குள் சின்ன தடுமாற்றம்.

அவள் என்ன தான் செய்கிறாள் பார்ப்போமே என்ற நினைப்போடு, அவளை மட்டுமே மொய்த்துக் கொண்டிருந்தது அவனின் விழிகள். அவனின் பார்வை இன்னுமே அவளுள் குறுகுறுப்பை ஏற்படுத்த, வெகுவாய் தடுமாறிப் போனாள் பெண்.

அவன் பார்க்கிறான் என்ற பிரஞ்சையே அவளுள் பதற்றத்தை கூட்ட, தேகம் மெல்ல நடுங்க தொடங்கியது. நடுங்கும் விரல்களால் பூந்துவளையை அழுந்த பற்றியப்படியே முகத்தின் அருகே கொண்டு செல்ல, சுவாசத்தை நிறைத்தது அவனின் வாசம். இத்தனை நேரம் அவளின் அருகாமையிலே தான் இருந்தான் அவன். அப்பொழுது கூட இத்தனையாய் அவனின் வாசம் அவளை மூச்சடைக்க செய்யவில்லை.

அதை கண்ணெடுக்காது பார்த்துக் கொண்டிருந்தவன் கள்ளப் புன்னகை இன்னுமே பெரிதாய் விரிய, புள்ளியாய் அவன் கன்னத்தில் விழுந்த குழியை இப்போது அவளால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. திருமணத்திற்கு என்று பிரத்தியேகமாய் அவன் தாடியை முழுதாய் எடுத்திருக்க, பொக்கிஷமாய் அவளின் விழிகளில் விழுந்து இதயத்தை நிறைத்தது அந்த கன்னத்து குழி.

அவன் ஏதாவது சொல்வானா என அவள் அவன் முகம் பார்க்க, அவனின் விழிகளோ அங்குலம் அங்குலமாய் அவளில் படிந்து இறுதியாய் பாதங்களில் வந்து சரணடைந்திருந்து. தவழ்ந்த புடவை அவளின் பாதங்களை பாதி மறைத்தபடி தழுவிக் கொண்டிருந்தது.

பார்வையை அவளின் மெட்டியில் பதித்தபடியே, “பிடிச்சுருக்கா…” என்றான் ஆழ்ந்த குரலில் நேசன்.

அவனின் பார்வையின் திக்கை உணர்ந்தவளும் மெட்டியை தான் கேட்கிறான் போலும் என்று நினைத்து ‘பிடித்திருக்கிறது…’ என்னும் விதமாய் தலையசைத்தாள்.

அமைதியாய் எழுந்துக் கொண்டவன், “என் வீட்ட… என் அறைய… என்ன பிடிச்சுருக்கானு கேக்கறேன்…” நிதானமாய் ஒவ்வொரு வார்த்தையாய் இடைவெளியுடன் கேட்டுக் கொண்டே, அழுத்த எட்டுகளுடன் அவளை நெருங்கி இருந்தான் அவன்.

அனிச்சை செயலாய் அவள் உடல் பின்னோக்கி நகர, சட்டென்று அவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. ‘எப்ப கேக்க வேண்டிய கேள்விய… எப்ப எப்படி நிக்க வச்சு கேக்கறான் பாரு… கிராதகன்…’ என நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

அவனின் நெருக்கத்தில் வார்த்தைகளுக்கு பதில் படபடப்பு தான் வந்தது. இதயம் வேகமாய் முரசறைய, பிடிமானத்திற்காய் கார்போர்டை அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள் தென்றல்.

“இப்ப இல்லைனாலும் சீக்கிரமே பிடிச்சுடும்… என் வீட்டை… என் அறைய… என்ன…” முன்பை போலவே நிதானமாய் அழுத்தமாய் இடைவெளியுடன் உரைத்தவன் குரலில் அத்தனை அடர்த்தி.

“பிடிச்சுடும் தானே…” இன்னுமே அவளை நெருங்கி, கிசுகிசுப்பாய் வினவிய படியே, ஒற்றை புருவமேற்றி கேள்வியாய் அவளைப் பார்க்க, அவளின் படபடப்பு இன்னுமே கூடிப் போனது.

“நீங்க… இதெல்லாம்…” தடுமாற்றத்துடன் அவள் திருவாய் மொழிய முயன்றது அவனுக்கும் புரியதான் செய்தது.

“என் வீட்ட… என் அறைய… என்ன உனக்கு பிடிக்கற வரைக்கும்… உனக்கு பழக்கற வரைக்கும் நிச்சயம் காத்திருப்பேன்… ஆனா… அதுக்கு முன்ன…” என்றவன் சிறு இடைவெளிவிட்டு, “என் வாழ்க்குள்ள… எனக்குள்ள நீ வந்ததுக்கு ரொம்பவே தேங்க்ஸ்…” என்றபடியே நொடியில் அவளை அணைத்து அழுந்தமாய் நெற்றியில் அதரங்களை பதித்து, அதை அவள் உணரும் முன்னவே விலகியும் இருந்தான்.

“விடிஞ்சுடுச்சு… இந்நேரம் ஆளுங்க வர ஆரம்பிச்சு இருப்பாங்க… நான் கீழப்போய் அரசிய அனுப்பறேன்… சீக்கிரம் ரெடியாகி வா…” என்றவன் அவளின் பதிலை எதிர்பாராது வெளியேறியும் விட்டான். அவன் சொல்லி சென்றதை கூட உணர முடியாது, சிலைப் போல் உறைந்துப் போய் அப்படியே நின்றிருந்தாள் அவள்.

                          நேசம் ஒளிரும்…

    No comments yet.