நெஞ்சம் 25:

தமிழ் வெண்பா | 04 Feb 2026 | Share

நெஞ்சம் 25:

பெருமழை அடித்து ஓய்ந்தது போல இருந்தது அந்த வீடு. நாளையே திருமணத்திற்கு தேவையான புடவை, நகை என அனைத்தையும் வாங்கலாம் என்ற தீர்மானத்தோடு வந்தவர்கள் கிளம்பி இருக்க, அவர்கள் சென்ற பின்பும், ஏதோ தீவிர சிந்தனையோடே வீட்டிற்குள் உலாத்திக் கொண்டிருந்த தென்றலை, நெருங்கி கேள்வி கேட்கவே யோசனையாய் இருந்தது குணவதிக்கு.

“அம்மா… இந்த கடல பரும்பு டப்பாவ எங்க வச்ச…” சமையல்கட்டில் ஏதோ பாத்திரங்களை உருட்டியபடி அங்கிருந்தே குரல் கொடுத்தாள் தென்றல்.

வேகமாய் கூடத்தில் இருந்து எழுந்து சென்றவர், “இந்தா கண்ணு முன்னாடி தானே இருக்கு… இதுக்கூட தெரியலையா உனக்கு…” என சிடுசிடுத்தபடியே கடலைப்பருப்பு டப்பாவை எடுத்து அவளின் முன்பு நங்கென்று வைத்தார்.

அவருடன் மல்லுக்கு நிற்காது அமைதியாய் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிட்டாள் தென்றல்.

“இப்ப எதுக்கு பாத்திரத்த போட்டு உருட்டிட்டு இருக்க… ஒரு சட்னி வைக்க இத்தன பாடு… தள்ளு நான் பண்ணறேன்…” மகளை தள்ளிக் கொண்டு தானே செய்ய முன்வந்தார் குணவதி.

அவள் தடுக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அமைதியாய் அத்தனையும் அவர் கையில் கொடுத்துவிட்டு கூடத்தில் சென்று அமர்ந்துவிட்டாள்.

“ஏன் தென்றலு… புள்ள அதுக்குள்ள தூங்கிட்டானே… தோச ஊத்தவ… எழுப்பி ஊட்டி விடறீயா..?” சமையலறையில் இருந்தபடியே அவர் குரல் கொடுக்க தென்றலிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இன்னும் இரண்டு முறை குரலை உயர்த்தி கேட்டும் தென்றலிடமிருந்து பதில் வராமல் போக, அவரே கூடத்திற்கு வந்திருந்தார்.

கண்களை மூடியபடி சாய்ந்து அமர்ந்திருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தவர், அவளின் தோளிலில் கை வைத்து அசைத்தபடி மீண்டும் அதையே கேட்டிருந்தார்.

“இல்லம்மா… இன்னைக்கு நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிட்டான்… கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பி பால் மட்டும் குடுப்போம்… வேற எதுவும் வேண்டாம்…” என்றாள் கண்களை மூடியபடியே அவள். தீவிர சிந்தனையோ, கடந்த கால நினைவுகளின் அலைக்கழிப்போ ஏதோ ஒன்று பாரமாய் அவளின் தலையிலேறி அமர்ந்துக் கொண்டது.

“ஏன்டி தென்றலு…” குரலை தாழ்த்தி மென்மையும் யோசனையுமாய் அன்னை அழைக்கவுமே எதற்காக என்று புரிந்துப் போனது தென்றலுக்கு. கண்களைக் கூட திறக்கவில்லை அவள்.

“அவங்கள பத்தி நல்லா விசாரிச்சுட்டீயா தென்றலு… எனக்கு என்னமோ அவங்க ஆளுங்களும் பேச்சும் தோரணையும் ஒன்னுமே மனசுக்கு சரியா படலைடி…” என்றார் குணவதி. அதில் மகள் மீதான அக்கறையும் இருக்க தான் செய்தது. அவரின் வார்த்தைகளுக்கு எந்த எதிர்வினையும் இல்லை அவளிடம்.

“என்னமோ திடுதிடுப்புனு கொள்ளக்கார கூட்டம் மாதிரி வந்து அடாவடியா பொண்ண குடுங்கனு நிக்கறாங்க… இதெல்லாம் நல்லாவா இருக்கு… எதுக்கும் முறைனு ஒன்னு இல்லையா..?” என்றார் ஆதங்கமும் நொடிப்புமாய் இப்போது.

“இப்ப உனக்கு என்னம்மா பிரச்சனை..? அவங்க இப்படி வந்து கல்யாணம் பேசனதா..? இல்ல எனக்கு கல்யாணம் நடக்கறதா..?” நெற்றியை அழுந்த நீவி விட்டபடியே, கண்களை திறவாது அமைதியாய் கேட்டாள் அவள்.

“எனக்கு என்னடி பிரச்சனை… நீ நல்லபடியா கல்யாணம் பண்ணிட்டு வாழ்ந்தா… சந்தோஷ படற முதல் ஆளு நானா தான் இருப்பேன்… ஆனாலும், எடுத்தோம் கவுத்தோம்னு உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் செய்யும் போது நெஞ்சு படபடனு அடிச்சுக்குது… இப்படிதான் அந்த மனுஷன் இஷ்டத்துக்கு ஆடி நல்லா இருந்த தேர தெருவுல இழுத்து நிறுத்திட்டு போய் சேந்துட்டாரு… இப்ப அவதி படறது யாரு..? நீயும் நானும் தானே..!” என்றார் குணவதி. அவரின் வருத்தமும் பயமும் புரிய அமைதியாய் கேட்டுக் கொண்டாளே ஒழிய பதில் சொல்லவில்லை அவள்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், “எல்லாத்தையும் விளக்கமா அவங்க வீட்டுல சொல்லிட்டீயா தென்றல்… நாள பின்ன விசயம் எதுவும் தெரிஞ்சு பிரச்சனை பண்ண மாட்டாங்களே…” என்றார் கவலையாய் மீண்டும்.

“அம்மா… நான் என்ன எல்லாரையும் ஏமாத்தி ரகசியமா திருட்டு கல்யாணமா பண்ணிக்க போறேன்… எதுக்கு இப்ப இப்படி பேசிட்டு இருக்க நீ…” எரிச்சலில் சிடுசிடுவென இம்முறை எரிந்து விழுந்திருந்தாள் அவள்.

“அது இல்லடி… இப்ப எல்லாத்துக்கும் சரி சரினு சொல்லிட்டு கல்யாணத்துக்கு பின்னாடி வேந்தன வச்சு பிரச்சனை பண்ணுவாங்களோனு பயமா இருக்கு…” என்றவரின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவளையும் சுட தான் செய்தது.

அவள் எல்லாவற்றையும் சொல்லிவிட தான் நினைத்தாள். ஆனால், அதற்கு அவன் எங்கே அவகாசம் கொடுத்தான். அவளின் கடந்த காலத்தை காதுக் கொடுத்துக்கூட கேட்க தயாராக இல்லையே! இருந்தும் தன் கடந்த காலத்தில் நடந்த எதுவும் தங்கள் எதிர்காலத்தை பாதிக்காது என்ற நம்பிக்கை இருந்தது அவளுக்கு. என்ன நடந்திருந்தாலும் அவளையும் பிள்ளையும் அவன் விட்டுவிட மாட்டான் என்று அவனை முழுதாய் நம்பியது அவள் உள்ளம். அத்தகைய நம்பிக்கையை அவன் உண்டாக்கி இருந்தான்.

“நீ அந்த தம்பிக்கிட்ட எல்லாம் பேசி இருப்ப தான்… ஆனாலும் அந்த தம்பி வீட்டு ஆளுங்க கிட்ட சொல்லுச்சோ என்னவோ..? நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குழந்த பிறந்தா வேந்தன் அந்த வீட்டுல தனிச்சு நின்னுட மாட்டானா..? அதனால திரும்பவும் உனக்கு ஒரு பிரச்சனை வந்தா என்ன பண்ணறது… அதுக்கு தான் சொல்லறேன்… பேசாம வேந்தன் என் கூடவே இருக்கட்டும்…” என்றார் நயமாய் குணவதி.

கண்களை திறந்து அவரை உறுத்து விழித்தவள், “பிரச்சனை வந்தா அத எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்… வேந்தன் என் பையன்… என்னைக்கும் அவன் என்கூட தான் இருப்பான்… யார் என் வாழ்க்கையில இருந்தாலும் இல்லைனாலும் வேந்தன் என் மகனா என் கூடதான் இருப்பான்…” அழுத்தம் திருத்தமாய் சொன்னவள் எழுந்து மகனிருக்கும் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

“நான் என்ன இவளுக்கு எதிரியா..? கொஞ்சமாச்சும் அவ நல்லதுக்கு தான் சொல்லறேனு மண்டையில ஏறுதா பாரு… யாரு எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன..?” என்றவரின் தொடர் புலம்பல் உறங்கும் வரை தொடர்ந்தது.

அதிகாலை பிரம்ம மூகூர்த்ததில் திருமணம். இரு தினங்களில் இத்தனையும் சாத்தியமா என ஊரே ஆச்சரியப் படும் விதத்தில் நண்பன் கேட்டதை  சாத்தியப்படுத்தி கொடுத்திருந்தான் மாதவன்.

முதல் நாள் திருமணத்திற்கு தேவையான பட்டு, மங்கள நாண் என அத்தனையும் வாங்க  பெண்களுடன் சிவநேசனை தான் அனுப்பி இருந்தான் மாதவன். மற்ற அத்தனை வேலையும் அவன் பொறுப்பில் தான். இந்த இரண்டு நாட்களும் பொட்டு உறக்கமில்லை அவனுக்கு. எப்படியாவது நண்பனை மணக்கோலத்தில் கண்டுவிடும் உத்வேகம் மட்டும் தான். அத்தனைக்கும் கைவசம் முன்பே ஆளிருக்க, நினைத்ததைவிட மிக சிறப்பாகவே அத்தனை வேலைகளும் முடிந்திருந்தது. மண்டபம் கிடைப்பது தான் பெரும் பாடாய் போயிற்று. அதிகாலை முகூர்த்ததிலும் அடுத்த முகூர்த்ததிலும் தொடர்ந்து மூன்று திருமணங்கள் நடக்கவிருக்க, பிரம்ம முகூர்த்தில் திருமணத்தை நடத்துவதை தவிர, வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு.

பெருதாய் எதிலும் பட்டுக் கொள்ளவில்லை தென்றல். ஆக அத்தனையும் நேசனின் விருப்ப தேர்வுகளாய் தான் இருந்தது. அவளின் மனதில் ஏதோ சஞ்சலம் புகுந்து ஆட்டுவிக்கிறது என அவனுக்கும் புரிந்தே இருந்தது. ஓரே நாளில் அதை களைந்து விட முடியாது என்று தெரிந்தும் இருந்தது.

மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டும் சூழ்ந்திருக்க, மணமகனாய் கம்பீரமாய் அமர்ந்திருந்தான் சிவநேசன். அவனின் குட்டி பிரதிபிம்பமாய், உறக்கம் சொக்கும் விழிகளை கசக்கியபடியே அவன் மடியை நிறைத்திருந்தான் வேந்தன். தென்றல் எழுந்த போதே எழுந்துக் கொண்டு அவளை தயாராக விடாது படுத்துக் கொண்டிருந்தவனை, கிளப்பி அழைத்து வந்து நேசனிடம் சேர்ப்பித்தவள் அரசி தான்.

அப்படியே நேசனை அச்சில் வார்த்ததைப் போல அப்பாவிற்கும் பிள்ளைக்கும் அப்படியொரு உருவ ஒற்றுமை. அவர்களே சொன்னாலோழிய அவர்கள் இரத்த பந்தமில்லை என்று யாருக்கும் தெரிய சாத்தியமில்லை.

பூக்குட்டியை மடியில் அமர்த்தியபடி, மனதில் நிறைவும் கண்களில் வியப்புமாய் அந்த காட்சியையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தார் விசாலம். நல்ல வேலையாக இன்னுமே அவளுக்கு முழுதாய் உறக்கம் களைந்திருக்கவில்லை. நேற்றைய அலைச்சலிலும் அலுப்பிலும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். இல்லையானால்  மாமனின் மடிக்கு இப்போது இங்கே ஒரு குட்டிப் போரையே நிகழ்த்தி இருப்பாள்.

அத்தனை எளிதில் வேந்தனை அவரின் மனம் ஏற்கவில்லை தான். சின்ன உறுத்தல் இன்னுமே இருக்கிறது. ஆனால், இப்போது மணமேடையில் அவர்களை சேர்த்துப் பார்க்க அத்தனை பாந்தமாய் இருந்தது. மகனின் முகத்தில் கண்ட நிறைவும் அமைதியும் அவருக்கு முழு திருப்தியை தந்தது. எப்பொழும் அவனை ஆக்கிரமித்திருக்கும் விரக்தியும் சஞ்சலமும் வாழ்வின் மீதான பற்றற்ற தன்மையும் இப்போது துணிக் கொண்டு துடைத்ததைப் போல அப்படியொரு பொலிவும் மலர்ச்சியும் அவன் முகத்தில். இது போதாதா பெற்றவருக்கு.

இதோ தோழியின் கைப்பிடித்து மணமேடை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள் தென்றல். உள்ளங்கைகளில் வியர்வை அரும்பி நிற்க, மெல்லிய நடுக்கம் அவளிடம். தோழியின் இந்த பரிமாணத்தில் அரசிக்கே ஆச்சரியம் தான். நிமிர்வும் ஒருவித அழுத்தமும் திமிருமாய் பார்த்து பழகியவளை இன்று படப்படப்பும் பதற்றமும் கொண்டு பார்க்க கொஞ்சம் வேடிக்கையாய் கூட இருந்தது.

அவள், அவன் அருகில் வந்து அமரும் வரை வேறு எந்த பக்கமும் பார்வையை திருப்பவில்லை அவன். அவள் அணிந்திருந்த ஆடை ஆபரணங்கள் அத்தனையும் அவனின் தேர்வு. ஆழ்ந்த சிவப்பில் தங்க கரையிட்ட பட்டை தான் தேர்ந்தெடுத்திருந்தான் நேசன். அது அத்தனை பாந்தமாய் அவளுக்கு பொருத்திப் போயிருந்தது, அவனைப் போலவே. மிதமான அலங்காரத்தில் தேவதையாய் தெரிந்தாள் அவள். அப்படியென்ன அவள் பேரழகியாக என்று கேட்டால், மற்றவர்கள் இல்லையென்று தான் சொல்லக்கூடும். ஆனால், அவள் மட்டும் தான் அழகியாய் தெரிந்தாள் அவனுக்கு.

அருகில் வந்து அமர்ந்து விட்ட போதும் கூட நொடிக்கு ஒரு முறை அவளின் புறம் அலைப்பாயும் விழிகளை கட்டுபடுத்த நினைக்கவில்லை அவன். ஆனால், அவளுக்கோ அப்படி ஒருவன் அருகில் அமர்ந்திருக்கும் உணர்வே இல்லை. ஒரு வித பயமும் பதற்றமும் சூழ தன்னிலையில் இல்லை அவள். அளவுக்கு அதிகமாய் வியர்த்து வடிந்தவளை பார்க்க, கொஞ்சம் பாவமாக கூட இருந்தது அவனுக்கு.

அவளின் கரத்தை பற்றிக் கொண்டு இணைந்து குண்டத்தில் பூஜைப் பொருட்களை வார்க்க சொன்னார் ஐயர். பற்றிய அவளின் கரத்தின் மெல்லிய நடுக்கத்தை அவனாலும் உணர முடிந்தது.

“எதுக்கு இவ்வளவு பதற்றம்… கொஞ்சம் ரிலாக்ஸா இரு தென்றல்…” மெல்ல அவள்புறம் தலை சாய்த்து சின்ன குரலில் அவன் சொல்ல, சட்டென்று செவி மடலை உரசிய அவன் மூச்சுக்காற்றிலும், குரலிலும் பதறி வேகமாய் நிமிர்ந்து அவனை பார்த்து பரிதாபமாய் விழித்து வைத்தாள் அவள். அவன் சொன்னது எதுவும் அவள் மூளையை சென்று சேரவே இல்லை. இன்னுமே பாவமாய் போயிற்று அவனுக்கு.

“என்னம்மா…?” என்றான் பற்றி இருந்த அவளின் கரத்தில் அழுத்ததை கூட்டியபடியே ஆதுரமாய். இமையோரம் திரண்டிருந்த கண்ணீரை உள்ளிழுத்தபடியே, ஒன்றுமில்லை என்று மறுப்பாய் தலையசைத்தால் தென்றல்.

என்னவோ எண்ணம் அவளை ஆட்டுவிக்கிறது. அது என்னவென்று தெரியாமல் அவனுக்குமே தவிப்பாய் தான் இருந்தது. ஆனாலும் இப்போது என்ன செய்துவிட முடியும்.

மனம் ஒரு சொல் பேச்சு கேட்காத குழந்தை. ‘நினையாதே! நினையாதே!’ என வலிந்து எந்த நினைவுகளை மறக்க நினைக்கிறோமோ அந்த எண்ணங்களை தான் மனக்கண் முன் வரிசைக் கட்டி நிற்க வைக்கும். அவளும் அப்படியான நிலையில் தான் இருந்தாள்.

இதேப் போல் ஒரு மேடை. இன்றுப் போல் அல்லாது நினைத்தும் கட்டுபடுத்த முடியாத அளவிற்கு மெல்லிய கோடாய் கன்னங்களில் வழிந்துக் கொண்டிருந்தது கண்ணீர். கதைக்களில் சினிமாக்களில் வருவதைப் போல, ‘நிறுத்துங்க…’ என்றபடியே கடைசி நேரத்தில் கூட யாராவது வந்துவிட மாட்டார்களா என்று அல்ப தனமாய் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது அவளின் மனம். நடப்பதை உணரும் முன்னமே ஒருவனின் மனைவி ஆகியிருந்தாள் அவள். அதை உணர்ந்து உள்வாங்கிய நொடி தலை கிறுகிறுத்து கண்களை இருட்டிக் கொண்டு மயக்கம் வரும்போல் இருந்தது. அதில் அழுத்தமாய் அருகில் இருந்தவனின் கரம் பற்ற, நாசூக்காய் அதை விலக்கி விட்டிருந்தான் அவன்.

அத்தனையும் இப்போதும் படம் போல் அவளின் கண் முன்னே விரிய, இப்போதும் கண்ணை கட்டிக் கொண்டு மயக்கம் வரும் போல் இருந்தது. அவளின் நிலை உணர்ந்ததைப் போல இன்னுமே அவளை நெருங்கி அமர்ந்து, அவளின் நடுங்கிய தேகத்தை தன் மீது சாயும்படி செய்தவன், அழுத்தமாய் அவளின் கரத்தை இறுக பற்றிக் கொண்டான். நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவளின் விழிகளில் இருந்து சரசரவென கண்ணீர் வழிய தொடங்கியது.

இவன், அவனில்லை. அவளுக்கும் அது புரியத்தான் செய்கிறது. ஆனால் தடுமாறி நிற்கும் மனதை தேற்றும் வழி தெரியவில்லை. மகனுக்காக என்று துணிந்து செயலில் இறங்கிவிட்டாள் தான். ஆனால், நேசனின் முகத்தில் தெரியும் பூரிப்பும் மலர்ச்சியும் அவளை அத்தனையாய் அச்சுறுத்தியது. எங்கே தன்னையும் அறியாது அவன் உணர்வுகளை காயப்படுத்தி விடுவோமோ என்று பயமாக இருந்தது.

அவளின் கண்ணீரில் அவனின் மனமும் வெகுவாய் தவித்து கலங்கியது. “நான் இருக்கேன்ல தென்றல்… எல்லாத்தையும் நான் பாத்துப்பேன்… சரி பண்ணிடுவேன்… என்னை நம்பும்மா…” இறைஞ்சுதலும் பரிதவிப்புமாய் மன்றாடும் குரலில் சொன்னவனுக்குமே இப்போது உள்ளம் நடுங்கியது.

அவனின் எண்ணங்களுக்கும் யூகங்களுக்கும் எல்லாம் அப்பாற்பட்டு பெரிதாய் ஏதோ ஒன்று இருக்கிறது என்றது அவனின் நுண்ணறிவு. எளிதாய் சொல்லிவிட்டான் தான். எல்லாவற்றையும் சரிசெய்து விடுவேன் என்று. ஆனால், எப்படி என்று நினைக்கையில் மெல்லிய அச்சம் அவன் மனதிலும் படர்ந்தது. இருவரும் நம்பிக்கையை மட்டுமே பற்றிக் கொண்டு கடக்க வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ மிச்சம் இருந்தது.

“மாப்பிள்ளை சார்… கல்யாணம் முடிஞ்சு பொண்ண எங்கையும் கடத்திட்டு போற ஐடியா இல்ல எனக்கு… பொறுமையா காலம் முழுக்க எவ்வளவு வேணாலும் பேசிக்கோங்க… இப்ப தாலிக் கட்ட நேரமாச்சு… எழும்புங்க ரெண்டு பேரும்…” தோழியின் தோளில் இடித்த படியே கேலியாய் சொல்லி, நிலமையை இலகுவாக்க முயன்றாள் அரசி.

வேந்தனை மாதவன் வாங்கிக் கொள்ள, தான் எழுந்துக் கொண்டவன் அவள் எழவும் கரம் கொடுத்தான். கருவறை நோக்கி அவன் நடக்க, அவனின் கரம் பற்றியபடி இணைந்து நடந்தாள் தென்றல். அவளின் மற்றொரு கரம் இறுக்கமாய் தோழியின் கரத்தை பற்றி இருந்தது.

“ஓய்… ஃபயர்… என்ன இது..‌. சின்ன பிள்ளையாட்டம்… கண்ணுல தண்ணீ வச்சுட்டு… இது நீ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்… நம்பு… இனிமே எல்லாமே உனக்கு நல்லதாவே நடக்கும்…” முகத்தில் துளிர்த்து நின்ற அவளின் வியர்வை துளிகளை ஒற்றி எடுப்பதைப் போலவே கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தவள், மெல்ல கடிந்துக் கொள்ளும் குரலில் அதட்டினாள்.

“பயமா இருக்குடி…” என்றவளின் சிறுப்பிள்ளை பிதற்றலில் உருகிப் போனது அவளுக்கு.

நேசனின் பக்கம் அத்தனையும் எடுத்து செய்ய சொந்தங்கள் இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக, தூணாக நண்பன் இருந்தான். தன் பக்கம், தனக்காக யார் இருக்கிறார்கள் என்ற கலக்கம் வெகுவாக தென்றலுக்கும் இருக்க தான் செய்தது. ஒருத்தி எத்தனை தைரியமானவளாக தன்னை காட்டிக் கொண்டாளும், அவளுக்கான அத்தனையும் அவளே தான் செய்துக் கொள்ள வேண்டும் என்பது பெரும் அவலநிலை.

உடன் பிறந்த ஒருத்தி இருந்திருந்தால் கூட இத்தனை தூரம் தென்றலுக்காக நின்றிருப்பாளா என்பது சந்தேகம் தான். இத்தனைக்கும் என்னைவிட்டு எட்டியே நில் என்பதைப் போல ஒருவித விலகலோடு தான் அவளிடம் பழகி இருக்கிறாள் தென்றல். இந்த இரண்டு நாட்களாய் அந்த வீட்டின் பெண்ணாய், ஒரு சின்ன குறை கூட வந்து விடாதபடிக்கு அத்தனையும் பார்த்து பார்த்து அரசி தான் செய்துக் கொண்டிருக்கிறாள். வந்தவர்களை கவனித்து உபசரிப்பதில் இருந்து அவளின் அன்னையையும் பிள்ளையையும் சமாளிப்பது வரை அத்தனையும் அவள் வாசமாக்கிக் கொண்டு தென்றலை இலகுவாக உணர வைத்திருந்தாள். இத்தனை நாளும் இல்லாத ஒரு நெருக்கத்தை, இந்த நொடி அவளிடம் தென்றல் உணர்ந்தாள். இப்படியெல்லாம் எதையும் எதிர்பார்க்காத அன்பும் நட்பும் அத்தனை எளிதில் யாருக்கும் கிடைத்து விடுவதில்லை. வாழ்க்கை துணை என்று வருகிற போது அவர்கள் இருவருமே தவறி இருந்தாலும், இப்படியான நட்பு கிடைக்கும் நற்பேரு பெற்றவர்கள் தான்.

விஸ்வரூப தரிசனத்தில் அலங்காய சொரூபனாக அழகாய் அருள்பாலித்தார் செந்தில் ஆண்டவர். குடும்ப சகிதம் அவரின் முன் நின்றிருந்த நேசனுக்கு இம்முறையும் பெரிதாய் வேண்டுதல் எதுவும் இல்லை. அத்தனையும் அந்த கந்தனிடமே ஒப்படைத்து விட்டான் அவன். எது வந்தாலும் அவன் துணை நிற்பான் என்ற அளப்பறிய நம்பிக்கை இருந்தது அவனுக்கு. கருணையின் சொரூபமாய் அவனைக் கண்டபின், மனதில் இருந்த சிறுசிறு சஞ்சலங்கள் கூட அகன்றிருந்தது.

நெருங்கிய நட்பும் சுற்றமும் சூழ, அவனின் அழகனின் முன், தென்றலின் கழுத்தில் மங்கல நாணை சூட்டி, அவர்களை தமக்கு உரியவர்களாய் மாற்றிக் கொண்டான் நேசன். அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தவன், அவளின் கால் பற்றி, தன் தொடை மீதேந்தி மெட்டியையும் பாதத்தோடு சேர்ந்திருந்தான். அங்கிருந்த சொற்ப மனிதர்கள் அத்தனை பேரின் விழிகளும், நிறைவு, ஆசுவாசம், ஆனந்தம் என ஏதோ ஒரு வகையில் கண்ணீர் தழும்பி நின்றது.

                         நேசம் ஒளிரும்…

    No comments yet.