நெஞ்சம் 24:
பரந்து விரிந்திருந்த அந்த மொட்டைமாடியில் பூக்களால் மெத்தை விரித்திருந்தது ஒரு வேம்பு. அடர்ந்து படர்ந்து மாடியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தபடி தனது கிளைகளை அங்கே விரித்திருந்தது அம்மரம். மனதில் பாரமேறிக் கொள்கிற நேரங்களில் எல்லாம் கால நேர வரையறையின்றி அதன் மடியில் வந்து அமர்ந்திடுவது தென்றலின் வழக்கம்.
சில்லென்ற காற்று அவளின் முன்னெற்றி முடியை களைத்து விளையாட, ஆழ மூச்சை உள்ளிழுத்தவளுக்கு சிறு ஆசுவாசம். உள்ளத்தில் இத்தனை நேரம் இருந்த வெம்மை கொஞ்சம் கொஞ்சம் மட்டுப்பட தொடங்கி இருந்தது.
மகனை தோளின் மீது தூக்கி வைத்தபடி, கொத்து கொத்தாய் பூத்திருந்த வெள்ளை வேம்பு மலர்களை பறிக்க உதவிக் கொண்டிருந்தான் நேசன். மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடியே, அந்த அப்பாவையும் பிள்ளையையும் தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.
‘இத்தனை குறுகிய காலக் கட்டத்தில் இத்தனை அன்பும் சாத்தியமா? இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த அன்பும் பரிவும் நீட்டிக்குமோ? ஒரு வேளை திருமணத்திற்காக நடிக்கிறானோ?’ இப்படி மனதில் தொடர்ந்த கேள்விகளுக்கு அணையிட முடியவில்லை அவளால். அதற்கு அணையிடவும் நினைக்கவில்லை.
அவள் மனதில் இருக்கும் ஆயிரம் சஞ்சலங்களுக்கும் வலு சேர்ப்பதைப் போல அமைந்துவிட்டது, இந்த தீடிர் பெண் பார்க்கும் படலம். அவளை சிந்திக்க கூட விடாது, அவள் சம்மதமென்று சொல்லும் முன் எதற்கு இத்தனை அவசரம் என்ற கேள்வியே அவளை வண்டாய் குடைந்துக் கொண்டிருந்தது. ஒரு மனம் அவன் பால் சாயந்தாலும், இன்னொரு மனம் அவனை சந்தேகிக்கவே செய்கிறது.
அவர்கள் மேலே வந்து பத்து நிமிடங்கள் காற்றாய் கடந்திருந்தது. என்னவோ பிள்ளையோடு கொஞ்சி விளையாடவே அங்கு வந்ததைப் போல தான் இருந்தது நேசனின் நடவடிக்கைகள். அவளாய் வாய் திறந்து எதுவும் கேட்காத வரை அவனும் வாயை திறக்க போவதில்லை என்று புரிந்திருந்தது அவளுக்கு. இதைத் தானே அவன் வாடிக்கையாய் செய்கிறான். ‘ஒரு வேளை தானே வாயை விட்டு மாட்டிக் கொள்ள கூடாது என்று கவனமாக இருக்கிறானோ?’ இப்படியும் அவனை சந்தேகித்தது அவள் மனம்.
அவள் பேச வாய் திறக்கும் முன், இது வரை பறித்த மலர்களை எல்லாம் கொத்தாய் கட்டி பிள்ளையின் கையில் திணித்து, வேந்தனின் கையை தானுமே பற்றியப்படி அவளின் முன்பு நீட்டி இருந்தான் நேசன்.
லேசாய் தலை சாய்ந்து, கேலியாய் கேள்வியாய் ஒற்றை புருவத்தை ஏற்றி இருக்கினாள் பாவை. பாவையின் மீது படிந்த பார்வையை அகற்றாது அப்படியே நீட்டியபடி நின்றவனின் விழிகளில் கள்ள சிரிப்பின் மத்தாப்பு.
மெல்ல பிரியப் பார்த்த இதழ்களை இழுத்து பிடித்து பிடிவாதமாய் அவர்களை முறைக்க முயன்றாள் தென்றல்.
“அம்மா… பிடிம்மா… கை வலிக்குது…” அப்பன்காரனும் நீட்டிய கையை இறக்குவாதாய் இல்லை. அன்னை அவளும் வாங்குவதாய் இல்லை என்றதும் சிணுங்க தொடங்கி விட்டது அந்த சிட்டு.
இப்போது என்ன செய்வாய் என்பதைப் போல மிதப்பாய் அவன் அவளைப் பார்க்க, இதழ் கடையில் தோன்றிய சிரிப்பை மறைக்காமலேயே அதை வாங்கிக் கொண்டாள் பெண். அழுத்தமாய் பிள்ளையின் கன்னங்களில் இதழ் பதித்தவள், “தேங்க்ஸ்டா கண்ணா…” என்றபடியே நேசனிடமிருந்து அவனை வாங்கிக் கொண்டாள்.
“நானும் சேர்ந்து தான் இந்த பூவ பறிச்சேன்… குடுத்தேன்… ம்ம்ம்…” ஒரு பெருமூச்சோடு, மெல்லிய குரலில் ஏக்கமும் கேலியுமாய் சொன்ன நேசனை கண்டனப் பார்வை பார்த்தாள் தென்றல்.
“வேந்தா நீ கீழ பாட்டிக் கூட இரு… அப்பாவும் அம்மாவும் பேசிட்டு வரோம்…” என பிள்ளையை கீழே அனுப்ப பார்த்தாள் தென்றல்.
“அப்பா கூட சண்ட போட போறீயா..?” என்றான் அவன் முன்னெச்சரிக்கையாய்.
“அதெல்லாம் சண்டை போட மாட்டேன்…”
“நிஜமா…”
“நிஜமா தான்…”
“அப்போ திட்டுவீயா..?”
“இல்ல… திட்ட மாட்டேன்…”
“அப்போ கிள்ளுவீயா..?”
“டேய்… யப்பா… உங்கப்பாவ அடிக்காம திட்டாம கிள்ளாம குணமா நாலு நல்ல வார்த்தை சொல்லிக் குடுத்து கூட்டிட்டு வரேன்… போதுமா..? நீ இப்ப கீழ போய் பாட்டிட்ட இரு…” ஒரு வழியாய் அவனை சமாளித்து அனுப்பிவிட்டு நிமிர, முகம் விகாசிக்க அவர்களை புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்தான் நேசன்.
“எதுக்கு இவ்வளவு அவசரம்…” நேரடியாய் விசயத்திற்கு வந்திருந்தாள் அவள்.
“இதுதானு உறுதியா தெரிஞ்சுட்ட பிறகு எதுக்கு காலம் கடத்தணும்…” என்றான் அலட்டிக் கொள்ளாது நேசன்.
“உறுதி படுத்த வேண்டியது நான்… இன்னும் நான் சம்மதம்னு சொன்னதா எனக்கு நியாபகம் இல்ல…” என்றாள் இப்போது உஷ்ணமாய் தென்றல்.
பதிலெதும் சொல்லவில்லை அவன். அவன் முகத்தில் கீற்றாய் இதழ் பிரியா குறும்பு புன்னகை ஒன்று மிளிர்ந்து. இருக்கிறதா இல்லையா என ஐயம் கொள்ளும் வகையில் சிறு புள்ளியாய் இடப்பக்க கன்னத்தில் தோன்றிய குழியை தாடியின் உரோமங்கள் மறைக்க முயன்று தோற்றிருந்தது. அது இன்னுமே அவனை வசீகரமாய் காட்டியது. மேலும் அவனில் பார்வையை பதிக்க முடியாது அவசரமாய் வேறு பக்கங்களில் கண்களை அலைப் பாய விட்டிருந்தாள் தென்றல்.
“பாத்தீயா..? அப்பாவ நீ திட்டற… அதான் நான் போகவே இல்ல…” படிகளில் நின்றிருந்த பிள்ளை, மேலே ஏறி வந்து அவளைப் போலவே கைக்களை கட்டிக் கொண்டு முறைத்துப் பார்த்து தோரணையாய் கேட்டது. எதற்காக பிள்ளையை தூக்கிக் கொண்டு வந்தானோ அந்த வேலையை கணக்கச்சிதமாக செய்தது அந்த வாண்டு.
‘படுத்தறானே என்ன…’ என்பதாய் தான் மகனின் மீது படிந்தது அவளின் பார்வை. எங்கே அம்மா ஏதாவது திட்டி சண்டையிட்டால், மீண்டும் தந்தை தங்களை விட்டுவிட்டு சென்றுவிடுவாரோ என்ற பயம் அந்த பிஞ்சின் மனதில் ஆழப் பதிந்திருந்தது. அது அவளுக்கும் புரியதான் செய்தது. ஆனால், ஏதோ ஒரு விதத்தில் அது அவளுள் நெருடலையும் தந்தது.
வேந்தனை அள்ளி தூக்கிக் கொண்டான் நேசன். அழுந்த அவள் முத்தமிட்ட அதே கன்னத்தில் முத்தமிட்டவன், “வேந்தன் குட் பாய் இல்ல… அம்மா சொன்னா கேட்கணும்… நீங்க கீழ போய் பூக்குட்டி கூட விளையாடுவீங்களாம்… அப்பாவும் அம்மாவும் பேசிட்டு இப்ப வந்துடுவோமான்…” என்றவன் அவன் காதில் என்னவோ கிசுகிசுக்க, “அப்பாவ திட்டக் கூடாது… திட்டுனா நான் திரும்ப வந்துடுவேன்…” என்று அன்னையை மிரட்டு விட்டு, அவர்கள் சண்டையிடுகிறார்களா என திரும்பி திரும்பி பார்த்தபடியே தான் கீழே இறங்கி சென்றான்.
அவன் சென்றுவிட்டதை உறுதிப் படுத்திக் கொண்டு, “என்ன பிரச்சனைங்க உங்களுக்கு..? இதெல்லாம் உங்க சம்மதம் இல்லாம நடக்குதுனா..? உங்களுக்கு சம்மதம்னு எனக்கு தெரிஞ்சதுனால தான் இத்தனையும் நடக்குது… உங்க சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் மட்டுமில்ல நமக்கு இடையில வேற எதுவும் நடக்காது…” என்றான் அழுத்தமாய் நேசன்.
“வேந்தன் அப்பாவுக்காக ரொம்ப ஏங்கறான் தென்றல்… அவனோட ஏக்கத்த என்னாலையே தாங்கிக்க முடியல… உங்களால எப்படி முடியுது… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்கள என்னோட சொந்தமாக்கிக்கணும்னு நினைக்கறேன்… தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் என்னவிட்டு நீங்க ரெண்டு பேரும் ரொம்ப தூரம் விலகிப் போற மாதிரி இருக்கு… எங்க நீங்க மனசு மாறிடுவீங்களோ… என்ன வேண்டானு சொல்லிடுவீங்களோனு பயமா இருக்கு…” என்றான் உண்மையான பயத்தோடு நேசன்.
அவளுள்ளும் அந்த தடுமாற்றம் இருக்க தானே செய்கிறது. பிள்ளைக்கு என்று முடிவெடுத்து விட்டாலுமே இன்னுமே முழு மனதாய் திருமணம் என்ற பந்ததை அவள் ஏற்கவில்லை. ஆறிவிட்டதாய் நினைத்த காயங்கள் எல்லாம் நீறுபூத்த நெருப்பாய் இன்னும் ரணம் குறையாது அவளின் அடிநெஞ்சில் அப்படியே தங்கி விட்டதை அவளே உணர்ந்த நொடிகள் இவை.
இத்தனை பெரும் கூட்டத்தை, பெண் பார்க்கும் நிகழ்வை கண்ட மாத்திரத்தில் சட்டென்று அடி ஆழத்திலிருந்து கிளம்பி நெஞ்சையடைத்த துக்க உணர்வை என்னவென்று விளக்குவது? இனி ஒவ்வொரு நிகழ்விலும் அவள் அக்னி பிரவேசம் செய்ய வேண்டும். அத்தனை நிகழ்வுகளும் மீண்டும் ஒரு முறை அவள் வாழ்வில் அரங்கேறும். முக்கியமாய் மீண்டும் ஒருமுறை அவள் கழுத்தில் மங்கல நாண் ஏறும். அந்த நினைவே உடலில் நடுக்கத்தை உண்டாக்கியது. எத்தனை தைரியமாக காட்டிக் கொண்டாலும், இதற்கெல்லாம் இன்னும் அவளின் மனம் தயாராகவில்லை என்பது தான் உண்மை. எங்கே தன்னால் மகன் காயப்பட்டு விடுவானோ என்பதோடு சேர்ந்து நேசனையும் காயப்படுத்தி விடுவோமோ என்று பயமாக இருந்தது. இதையெல்லாம் என்னவென்று அவனுக்கு விளக்கி சொல்வாள் அவள். குறைந்த பட்சம் இந்த உறவை அவள் மனம் அங்கீகரிக்கவாவது அவன் அவகாசம் கொடுக்க வேண்டும் அல்லவா?
தவிப்பாய் அவனை திரும்பி பார்த்தாள் தென்றல். அவனுக்கும் அவளின் உணர்வுகள் கடத்தப் பட்டிருக்க வேண்டும். “கஷ்டம் தான் தென்றல்… கடந்த காலத்த மறந்து, ஒன்னுமே நடக்காத மாதிரி உதறி தள்ளிட்டு வாழ முடியாது தான்… அதே மாதிரி அங்கேயே தேங்கியும் நிக்க முடியாது… தனியா அத கடக்க முயற்சிக்கறத விட இறுக்கமா ஒருத்தர் கையை பிடிச்சுக்கிட்டோம்னா சீக்கரமே கடந்து கரையேறி வந்துடலாம்… என்ன நம்பி இறுக்கமா என் கைய நீங்க புடிச்சுக்கலாம்… எந்த இடத்துலையும் விட்டுட மாட்டேன்… நம்புங்க… ப்ளீஸ்…” என்றான் அவளின் முன் கரம் நீட்டியபடி அழுத்தமாய்.
சில நொடிகள் தயங்கி, தடுமாற்றத்தோடு அவனின் கரம் சேர்ந்தது அவள் கரம். இறுக அழுத்தமாய் பற்றிக் கொண்டவனுக்கு இனி எப்பொழுதும் அதை விட்டுவிடும் எண்ணமில்லை. ஆனால் அதை உணர வேண்டியவள், உணர்ந்ததாய் தெரியவில்லை.
– நேசம் ஒளிரும்…
No comments yet.