நெஞ்சம் 23:
தீடிரென வாசலில் வந்து நின்ற பெரும் கும்பலை ஒரு வித மிரட்சியோடு பார்த்தார் குணவதி. அதில் ஒருவரையும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
“தள்ளுங்க… தள்ளுங்க… முக்கியமான வி.வி.ஐ.பி எல்லாம் வந்திருக்கோம்… குறுக்கால நின்னு கட்டைய குடுத்துட்டு…” என்றபடியே அவரை விலக்கிக் கொண்டு முதல் ஆளாய் உள்ளே நுழைந்தாள் அரசி.
“நீங்க என்ன மசமசனு வாய பாத்துட்டு வாசலையே நிக்கறீங்க… உள்ள வாங்க எல்லாரும்… எல்லாம் நம்ம வீடு தான்…” என்றபடியே சட்டமாய் சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டவளை குணவதியால் முறைக்க கூட முடியவில்லை.
வேறு வழி இல்லாது, “வாங்க… எல்லாரும் உள்ள வாங்க…” என சம்பிரதாயமாக சொன்னவர், அரசியின் பின்னோடு சென்று நின்றார்.
வாங்கி வந்திருந்த பாலை பிரித்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றியவள், வாங்கி வந்திருந்த பதார்த்தங்களை உணவு மேடையில் எடுத்து பரத்தி வைத்தாள்.
“அவங்க எல்லாம் யாரு… நீ என்ன பண்ணிட்டு இருக்க இங்க… நகரு முதல…” என்றார் முகத்தை சுழித்து சிடுசிடுப்பாய்.
“பாத்தா தெரியல… டீ போடறேன்… ஆமா கெஸ்ட் வந்தா குடுக்கனே தனியா ஒளிச்சு வச்சுருப்பீங்களே பீங்கான் கப்பு, தட்டெல்லாம்... அதெல்லாம் எங்க வச்சுருக்கீங்க… எடுத்து குடுங்க… வந்தவங்களுக்கு பலகாரம் வச்சு கொடுக்கணும்…” என்றாள் அதிகாரமாய். வெள்ளி கொடிகள் படற தங்க நிறத்தில் அழகிய பூக்கள் வேலைபாடுடன் இருந்த அந்த பீங்கன் பாத்திரத்தின் மீது அவளுக்கு அப்படி ஒரு அலாதி பிரியம். அவளை எல்லாம் இதுவரை விருந்தினர் கணக்கில் சேர்க்காத குணவதி, அதை கண்ணில் காட்டியதோடு சரி. அவளும் பல இடங்களில் அது மாதிரி தேடி அலைந்து பார்த்து விட்டாள் தான். எங்கும் அதே மாதிரி கிடைக்கவில்லை.
“நேத்து தென்றல பாத்துட்டு போனுச்சே அந்த பையனா… என்ன திடுதிடுப்புனு சொல்லாம கொள்ளாம குடும்பமா வந்திருக்காங்க… பொண்ணு பாக்க வந்திருக்காங்களா..?தென்றலுக்கு தெரியுமா இவங்க எல்லாம் வரது… அப்படினா நீ வரும் போது அவளையும் கையோட கூட்டிட்டு வர வேண்டியது தானே…” தானே ஊகித்து ஆர்வமாய் கேள்விகளை அடுக்கினார் குணவதி.
“பொண்ணு பாக்க இல்ல… பூ வைக்க வந்திருக்காங்க… வர வெள்ளி கிழமை கல்யாணம்…” மின்னாமல் முழங்காமல் அவர் தலையில் இடியை இறக்கினாள் அவள். அதிர்ச்சியில் விழிகள் பிதுங்கி வாய் பிளந்து அவர் பார்க்க, அதில் ஒரு குதுகலம் அவளுக்கு.
“என்கிட்ட யாருமே இன்னும் எதுவும் சொல்லலையே…” என்றார் உள்ளடங்கிய குரலில் ஏமாற்றமாய்.
“பொண்ணுக்கே இன்னும் யாரும் சொல்லைல… போங்க… போங்க… பொண்ணுக்கு அம்மாவ லட்சணமா சிரிச்ச முகத்தோட வந்தவங்ககிட்ட பேசிட்டு இருங்க… போங்க…” என்றாள் அடக்கிய சிரிப்போடு அரசி.
அவரும் சங்கடமாய் வெளியில் வந்து பார்க்க, இருபது நபர்களுக்கும் மேல் வந்திருந்தனர். சிவநேசன், விசாலம், கயல், மாதவன், மாதவனின் பெற்றோர், குழந்தைகள், இன்னும் உள்ளூரிலேயே இருக்கும் நெருங்கிய சொந்தங்கள் சிலர் என அதுவே சிறு நிச்சயதார்த்த ஏற்பாடு போல தான் இருந்தது.
வந்திருந்தவர்களில் பெரியவர்கள் சிலர் மட்டும் அங்கிருந்த மூவர் அமரும் நீள் இருக்கையில் அமர்ந்திருக்க, மற்றவர்கள் கண்களால் வீட்டை அளந்தபடி ஒரு ஓரமாய் நின்றிருந்தனர்.
“ஜமுக்காளம் எங்க இருக்குனு சொல்லுங்கத்தை… விரிச்சுக்கலாம்…” தானாய் உரிமையோடு முதலில் பேச்சை துவங்கி இருந்தாள் கயல்.
ஒரு மாதிரி திகைத்து அடுத்து என்ன என புரியாது நின்றிருந்தவருக்கு ஒரு விதத்தில் அது ஆறுதலாய் கூட இருந்தது. அவளுடன் பேச்சு கொடுத்தபடியே, இருவருமாய் சென்று ஜமுக்காளத்தை எடுத்து வந்து கூடத்தில் விரித்தனர். தொடர்ந்த பேச்சுக்கள் அனைத்தும் சம்பிரதாயமாக நீண்டுக் கொண்டே போனது.
பூக்குட்டியை மடியில் அமர்த்தியபடி கீழே அமர்ந்திருந்தவனின் பார்வை, வேந்தனுக்கு தான் வலை வீசியது. ஆனால், அதை எப்படி குணவதியிடம் கேட்பது என்று தான் தெரியவில்லை.
தேடி கண்டுபிடித்து அந்த தட்டுகளில் தான் பலங்காரங்களை அடுக்கி வந்திருந்தவர்களுக்கு கொடுத்தாள் அரசி. அவளும் ஒன்றை எடுத்துக் கொண்டு குணவதி பார்க்கும் படியே அமர்ந்து உண்ண, கடுப்புடன் அவளை முறைத்து வைத்தார் அவர்.
“வேந்தன் இன்னும் வீட்டுக்கு வரலையா அத்தை..?” இந்நேரம் பிள்ளை வீடு வந்திருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில், வாய் திறந்து கேட்டே விட்டிருந்தான் நேசன்.
“என்னமோ தெரியல தம்பி… இன்னைக்கு வேலை விட்டு வரும் போது அவளே பிள்ளைய கூட்டிட்டு வரேனு சொல்லிட்டா…” என்றார் அவர். எப்பொழுதும் இரண்டு மணி நேரம் முன்னதாக சென்று அவனை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி பழக்க படுத்தி வைத்திருந்தான் அவன். அதை சரியாய் கண்டுக் கொண்டாள் போலும்.
“தென்றல் வர நேரமாகும் போல… நானே போய் அழைச்சுட்டு வந்துடறேன்…” என்றபடியே அவன் எழுந்துக்கொள்ள, அவன் வெளியில் கிளம்புகிறான் என்றதுமே, “நானும்… நானும்… பைக்ல…” என அவனோடு தொற்றிக் கொண்டாள் பூக்குட்டி.
அவன் மாதவனிடம் இருசக்கர வாகனத்தின் சாவியை வாங்கிக் கொண்டு வெளியேறிய நொடி, வாசலில் வரிசையாய் நின்ருந்த வாகனங்களை யோசனையாய் பார்த்தபடியே கேட்டை திறந்துக் கொண்டு மகனோடு உள்ளே நுழைந்தாள் தென்றல்.
நேசனைக் கண்ட மாத்திரத்தில், “ம்மா… அப்பா ம்மா…” சந்தோஷ கூச்சலிட்டபடி அவளின் இடுப்பில் இருந்து இறங்க முயன்றான் வேந்தன்.
அப்பாவிற்காக காத்திருந்தவனின் முகம், அன்னையை கண்ட நொடி வாடி களையிழந்து போய்விட்டது. வரும் வழியெங்கும், ‘அப்பா ஏன் வரல..? இனிமே என்ன பாக்க வர மாட்டாங்களா..?’ என்பதையே தான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே வந்தான் பிள்ளை. அவள் என்ன சமாதானம் சொன்னாலும் அதை அவன் நம்ப தயாராக இல்லை.
“ப்பா…” என்ற கூச்சலோடு ஓடி வந்து கால்களை கட்டிக் கொண்ட பிள்ளையை நெகிழ்ச்சியோடு பார்த்தாலும் ஒருநொடி தடுமாற்றம் அவனிடம். பூக்குட்டி ஏற்கனவே அவளின் கழுத்தை கட்டிக் கொண்டு ஓய்யரயாய் அமர்ந்திருக்க, சட்டென்று குனிந்து வேந்தனை அள்ளிக் கொள்ள முடியவில்லை அவனால். அவன் என்ன செய்கிறான் என்று தான் பார்ப்போமே என்பதை போல, கைகளை கட்டிக் கொண்டு, அவனை கேள்வியும் கேலியுமாய் பார்த்திருந்தாள் தென்றல்.
பூக்குட்டியை இறுக்கமாய் ஒருபக்கம் இடுப்பில் இருத்திக் கொண்டவன், சற்றே குனிந்து இன்னொரு பக்கம் வேந்தனை தூக்கி வைத்துக் கொண்டான். ஒற்றை புருவமேற்றி அவனை மெச்சுதலாய் பார்த்தாள் அவள். கண்களில் அவனுக்கான நெகிழ்ச்சியும் பாராட்டையும் கடத்த தவறவில்லை. ஒருவேளை பூக்குட்டியை அவன் இறக்கி விட்டிருந்தாலோ அல்லது வேந்தனை தூக்காமல் விட்டிருந்தாலோ தொலைந்தான் என சொல்லாமல் சொல்லியது அந்த பார்வை.
அவன் தூக்கிய வேகத்திற்கு கழுத்தை கட்டிக் கொண்டு முகமெங்கும் சின்ன சின்னதாய் முத்தங்கள் பதித்தான் பிள்ளை. பொறமையில் முகத்தை சுழத்தபடி, “என் மாமா… நான் தான் முத்தா குடுப்பேன்…” என்ற உரிமை அதட்டலோடு, இன்னொரு பக்கம் அழுத்தமாய் முத்தம் வைத்தாள் பூக்குட்டி. நேசன் நெளிந்தபடியே அவளைப் பார்க்க, அவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளாது அவனை கடந்து உள்ளே சென்றிருந்தாள்.
அனைவருக்கும் பொதுவாய் தலையசைத்து வரவேற்றவள், “பத்து நிமிஷம்… ப்ரஸ் ஆகிட்டு வந்துடறேன்… அரசிம்மா நீயும் கொஞ்சம் கூட வாயேன்…” என பவ்யமாய் சொல்லிவிட்டு, வீட்டின் பின்கட்டிற்கு நகர்ந்திருந்தாள் தென்றல்.
அவள் என்னவோ சாதாரணமாக தான் சொல்லி சென்றாள். ஆனால், அதிலிருக்கும் உள்குத்து அரசிக்கு மட்டும் தானே தெரியும். நேற்று விசயத்தை சொன்னதுமே, இன்றைக்கு வங்கிக்கு விடுப்பு சொல்லி விட்டாள் அவள். தென்றல் அத்தனை முறை அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் எதற்கும் பதிலளிக்கவில்லை. மற்றவர்கள் முன்பு மறுக்கவும் முடியாது வேறு வழியில்லாமல் எழுந்துச் சென்றாள் அரசி.
மீண்டும் இரு பிள்ளைகளுடன் அதே இடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான் நேசன். பெரும் கூட்டத்தைக் கண்டு மிரண்டு இன்னுமே அவனின் கைகளுக்குள் ஒடுங்கினான் பிள்ளை. வேந்தனை ஆதரவாய் அணைத்தபடியே பேசிக் கொண்டிருந்தவன், இடையிடையே இருவருக்கும் குறுக்கே வீம்புக்கென்று மூக்கை நுழைத்து வம்பு வளர்த்த பூக்குட்டியையும் சமாளித்துக் கொண்டிருந்தான். அவனின் கவனம் இரு பிள்ளைகளையும் தவிர்த்து வேறு எவரிடத்திலும் இல்லை.
இமைக்காது மகனை தான் பார்த்திருந்தார் விசாலம். இத்தனை நெருக்கமாய் அவன் எந்த பிள்ளையிடமும் பழகியதில்லை. ஏன் அகரனையே இப்படி தூக்கி வைத்து கொஞ்சியதாய் பெரிதாய் நினைவில் இல்லை. பூக்குட்டி மட்டும் அவனுக்கு அத்தனை நெருக்கம். அதுவும் வேந்தனின் ‘அப்பா…’ என்ற அழைப்பே அவர்களின் பாசப்பிணைப்பை சொல்கிறதே. நிச்சயமாக எக்காரணம் கொண்டும் மகன் இவர்களை விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதும் புரிந்தது.
அரசிப் பின்கட்டிற்கு செல்ல, கைகளைக் கட்டிக் கொண்டு அவளை தான் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் தென்றல்.
“என்னடி ரெடியாகமா நின்னுட்டு இருக்க…” மற்றதை எல்லாம் தள்ளிவிட்டு அசட்டு தனமாய் கேட்டு வைத்தாள் அரசி.
“எப்ப இருந்து இந்த திருட்டு தனத்த கத்துக்கிட்ட நீ..?” நேராய் அவளை பார்த்து குற்றம் சுமத்தினாள் தென்றல்.
“ஆமா திருட்டு தனம் தான்… இப்ப என்ன அதுக்கு… என்னோட ப்ரண்டும் அவ பையனும் நல்லா இருக்கணும்னா இதுவும் பண்ணுவேன்… என்னால முடிஞ்ச எதுவும் பண்ணுவேன்… என்ன இப்போ அதுக்கு… என்னமோ இத்தன பேருக்கு மத்தியில கொல குத்தம் பண்ணவள விசாரிக்கற மாதிரி இல்ல விசாரிக்கற…” படபடவென பொறிந்து தள்ளிவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டாள் அரசி. இழுத்து பிடித்திருந்த மூச்சை இப்போது தான் ஆசுவாசமாய் வெளிவிட்டாள் அவள். இன்னமும் அங்கேயே நின்றிருந்தால் துருவி துருவி ஆயிரம் கேள்விகள் கேட்டு அவளை ஒரு வழியாக்கி இருப்பாள் தென்றல்.
முகம் மட்டும் கழுவி, கொஞ்சமாய் தன்னை திருத்திக் கொண்டு அவள் கூடத்தில் வந்து நிற்க, அதற்காகவே காத்திருந்ததைப் போல தேனீர் கோப்பைகளை அவள் கையில் திணித்தாள் அரசி. தென்றல் அவளை முறைத்து பார்த்து மறுப்பாய் தலையசைக்க, கண்களில் மன்றாடலோடு அவளைப் பார்த்தாள் அரசி.
“ப்ளீஸ்டி… ஏடாகூடமா எதுவும் பேசாத… சிவாவுக்கு வேண்டியவங்க நிறைய பேர் வந்திக்காங்க… அவங்க இதெல்லாம் எதிர்பாப்பாங்க…” என்றாள் இறைஞ்சல் குரலில்.
“உன்னோட ஒரே இம்ச…” நரநரவென்று பல்லைக் கடித்துக் கொண்டே சொன்னாலும், அவள் சொன்னதை செய்தாள் தென்றல். அவள் எது எதெல்லாம் இந்த திருமணத்தில் இருக்க கூடாது என்று நினைத்தாளோ அத்தனையும் அச்சு பிசாகாமல் நடந்தது. அத்தனைக்கும் அவளின் பார்வை அரசியை தான் சுட்டது. தென்றலின் கண்ணில் படாது அவசர அவசரமாய் அவள் கயலின் பின்னால் பதுங்கிக் கொண்டாள் அவள்.
அவள் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல, அவளின் கடந்த காலம் பற்றியோ, வேந்தனை பற்றியோ யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அனைவரின் பேச்சும் இன்னும் இரு நாளில் திருமணத்தை எப்படி வைப்பது என்பதை சுற்றியே தான் இருந்தது. நிச்சயம் நேசன் சொல்லியே தான் அழைத்து வந்திருக்கிறான் என்பது யாரும் சொல்லாமலே அவளுக்கு புரிந்தது.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…” அவனை நேர்க் கொண்டு பார்த்து அழுத்தமாய் உரைத்தாள் தென்றல்.
“அதான் பொண்ணு கூப்பிடறாங்க இல்ல மாப்பிள்ளை சார்… போய் பேசிட்டு தான் வரது…” என தோளில் இடித்தான் மாதவன்.
“டேய் நீ வேற… கம்முனு இருடா…” என்றவன் அந்த இடத்தில் பசைப் போட்டு ஒட்டியதைப் போல அழுத்தமாய் அமர்ந்துக் கொண்டான்.
“வேற தான்டா… பொண்டாட்டியும் புள்ளையும் கண்ணுல பாத்துட்ட இல்ல… நாங்க எல்லாம் இனிமே வேறையா தான் தெரிவோம்…” என்றான் நீட்டி முழக்கி கேலியாய் சலித்துக் கொண்டு மாதவன்.
“சும்மா தான் இரேன்டா… நான் எப்ப சிக்குவேன்… வேப்பிள்ளை அடிக்கலாம்னு ரெடியா இருங்காங்க மேடம்… திரும்ப எல்லாம் இந்த வேதளாத்தை இழுத்து கட்டி இறக்கி கொண்டு வர முடியாது…” சுகமாய் அழுத்துக் கொண்டான் சிவநேசன்.
“கல்யாணமே வேண்டாம்னு ஒத்த கால்ல நின்ன என் நண்பனாடா நீ… இன்னும் தாலியே கட்டுல… அதுக்குள்ள இப்படி தொபுக்கடீர்னு கால்ல விழுந்துட்டீயே மச்சான்…” என்று உச்சுக் கொட்டினான் அவன்.
கன்னங்கள் செம்மையுற, “இவனோட...” என சுகமாய் அலுத்துக் கொண்டவனுக்கு அவளை நிமிர்ந்துப் பார்க்க கூட கூச்சம் தடுத்தது. அவளோ இமைக் கொட்டாது அவனைத் தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் வெட்கமும் கூச்சமும் மங்கையை கைப்பிடித்து எங்கோ கூட்டிச் சென்றது. நினைக்கவே கூடாது என்று நினைத்த கடந்த காலமெல்லாம் சடுதியில் சடசடவென ஒன்றன் பின் ஒன்றாய் அவளின் மணக் கண்ணில் அணிவகுக்க, அவளின் முகம் இருளைப் பூசிக் கொண்டது.
அவள் அழைத்தும் அவன் அப்படியே அமர்ந்திருக்கவும் தான் முகம் வாடி விட்டதாய் நினைத்தார் விசாலம். “சிவா… கூப்பிடறா இல்ல… என்னனு போய் கேட்டுட்டு வா…” அதட்டலும் அதிகாரமுமாய் சொன்னார் அவர். தென்றலை என்ன சொல்லி அழைப்பதென இன்னும் பிடிபடவில்லை அவருக்கு. ஏனோ மற்றவர்களை போல மனதை சட்டென்று இந்த பந்ததில் ஒட்ட வைக்க முடியவில்லை.
“மேலிடத்து உத்தரவே கிடைச்சுடுச்சு… இன்னும் என்ன தயக்கம்… பேசிட்டு வாடா… இல்ல இல்ல… அவங்க சொல்லறத கேட்டுட்டு வா போதும்…” என்றவன் நாசுக்காய் அவனிடமிருந்து மகளை வாங்கிக் கொண்டான்.
பூக்குட்டி சிணுங்களாய் மாமானைப் பார்க்க, “மாமா அத்தையோட பேசிட்டு வரேன் என்ன… அது வரைக்கும் என் தங்ககட்டி சமத்தா அப்பாகிட்ட இருக்கணும்…” என்று கன்னம் கிள்ளி முத்தம் கொஞ்சிவிட்டே எழுந்தான்.
அவன் கேள்வியாய் அவளைப் பார்க்க, மாடிப்படிகளின் பக்கமாய் முன்னே நடந்தாள் அவள். அவளை வால் பிடித்தைப் போல வேந்தனை தூக்கிக் கொண்டு அவளின் பின்னோடு நடந்தான் அவன்.
அதைப் பார்த்த விசாலத்திற்கு இதுவரை மனதில் இருந்த சிறு உறுத்தல் கூட துணி கொண்டு துடைத்தாற் போல் முற்றிலும் அகன்றிருந்தது. மனைவி பிள்ளையென அத்தனை பாந்தமாய் மகன் நின்றிருக்க, பார்க்க கண் இரண்டு போதவில்லை. மகன் இனி வாழ்ந்து விடுவான் என்ற பெரும் நம்பிக்கை வந்திருந்தது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.