நெஞ்சம் 22:
என்றிருமில்லாத வழக்கமாய் மதியம் நெருங்கும் நேரத்திற்கு வந்ததோடு மட்டுமல்லாது நேரே அவனின் முன்னே வந்து நின்ற நண்பனை, மாதவன் நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்ததோடு சரி. எதுவும் சொல்லாது மீண்டும் கணினியில் தனது பணியை தொடர, “வர வெள்ளிக் கிழமை கல்யாணத்த திருச்செந்தூர் கோவிலையே வச்சுடலாம்டா மாதவா… அதுக்கு தேவையான எல்லா ஏற்பாடையும் நீயே பாத்துடு…” என அமர்த்தலாய் சொன்னபடியே அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் நேசன்.
“யாருக்குடா கல்யாணம்..? செத்துப் போன உங்க அப்பத்தாவுக்கா..?” என்றான் நிமிர்ந்துப் பார்க்காது இடக்காய் மாதவன்.
“டேய்… என்ன விளையாடறீயா..? கல்யாணம் பண்ணிக்க கல்யாணம் பண்ணிக்கனு உயிர வாங்கிட்டு இப்ப கல்யாணம் பண்ணி வையினு வந்து நின்னா நக்கலா பண்ணற…” என்றான் அவனை முறைத்துக் கொண்டே அதட்டலாய் நேசன்.
“ஓஓஓ… சார் நாங்க கட்டாயப் படுத்துனதுனால தான் இப்ப கஷ்டப்பட்டு இந்த கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டீங்க… அப்படிதானே… அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் இங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்… நீ கடைசி வரைக்கும் கட்ட பிரம்மசாரியாவே இரு… இப்ப இடத்த காலி பண்ணு… எனக்கு நிறைய வேலை இருக்கு…” என்றான் மாதவனும் அதே அதட்டல் குரலில்.
“டேய் மாதவா… என்னடா…” என்றான் பாவமாய் நேசன்.
“என்ன என்னடா..? வா கடைக்கு போய் கத்திருக்கா வாங்கிட்டு வருவோம்ங்கற மாதிரி கல்யாணம் பண்ணி வையினு வந்து நிக்கற… அந்த பொண்ணு சம்மதம் சொல்லற வரைக்கும் யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டானு சொல்லிட்டு இப்ப இரண்டு நாள்ல கல்யாணம் பண்ணி வைனா நான் என்ன பண்ணணும்னு எதிர்பாக்கற நீ… இன்னும் நான் கயல்கிட்ட கூட விவரமா எதுவும் சொல்லலைடா…” என்றான் எரிச்சல் மண்டிய குரலில் கடுப்பாய் மாதவன்.
“கட்டுன பொண்டாட்டிய சமாளிக்க முடியாதவன் எல்லாம் ஒரு புருஷனாடா..? அதெல்லாம் நீ சமாளிச்சுடுவ… என் தங்கமில்ல…” என்றான் கெஞ்சலாய் கொஞ்சியபடியே நேசன்.
“காரீயம் ஆகணும்னா தான்டா தங்கம் பவுனுட்டு வறீங்க எல்லாரும்… கயல கூட சமாளிச்சுடலாம்னு வச்சுக்க… உங்க அம்மாட்ட என்ன சொல்லி சமாளிப்ப…” என்றான் அடுத்ததாய் மாதவன்.
அதை நினைக்கையில் நேசனுக்குமே உள்ளூர குளிர் பரவ தான் செய்தது. “நீ தான கட்டுனா இந்த பொண்ண தான் கட்டணும்னு ஒத்த கால நின்ன… அப்ப என்னத்தையாவது சொல்லி சமாளிச்சு கல்யாணத்த பண்ணி வைடா…” என்றான் பாவமாய் முகத்தை வைத்தபடி பாவனையாய்.
அவனின் பாவனையில் அரும்பிய புன்னகையை மறைக்க முயன்றபடியே, “யாரு நானு… ஒத்த கால்ல… சரிதான்… நான் சமாளிக்கறது எல்லாம் இருக்கட்டும்… அந்த பொண்ணு மொதல சம்மதம் சொல்லிடுச்சா…” என்றான் மிடுக்காய்.
“அது கிட்டதட்ட சம்மதம் சொன்ன மாதிரி தானு வச்சுக்கோயேன்…” என இழுவையாய் சொல்லி, அசடு வழிந்தவனை வெட்டவா குத்தவா என்பதைப் போல பார்த்து வைத்தான் மாதவன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மதிய உணவுவோடு கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் கயல். நேசனைப் பார்த்த நொடியில், “ஐ… மாமா…” என்ற பெருங்கூச்சலோடு தாயிடமிருந்து திமிறினாள் பூக்குட்டி.
அன்னை இறக்கி விட்ட நொடி, ஓடி வந்து மாமனின் கால்களை கட்டிக் கொண்டவளை அள்ளி தூக்கி மடியில் வைத்துக் கொண்டவன், கன்னம் கிள்ளி செல்லம் கொஞ்ச தொடங்கி இருந்தான். ஏனோ அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக் கொண்டது வேந்தனின் நினைவு.
கணவனையும் தமையனையும் ஒரு மார்க்கமாய் பார்த்தவள், “ஏற்கனவே லேட் ஆகிடுச்சு… சாப்பாடு எடுத்து வைக்கறேன்… முதல வந்து சாப்பிடுங்க ரெண்டு பேரும்…” என்றபடியே அங்கே ஒரு ஓரமாய் மறைவிற்கு பின்னால் போடப்பட்டிருந்த உணவு மேசையில் உணவுப் பதார்த்தங்களை பிரித்து பரிமாற தொடங்கி இருந்தாள்.
அமைதியாய் இருவருமே சாப்பிட அமர்ந்துவிட, தனக்குமே பரிமாறிக் கொண்டபடி, அவர்களோடு அமர்ந்து உண்ண தொடங்கி இருந்தாள் கயல்.
மருமகளுக்கு ஊட்டியபடியே மாதவனைப் பார்த்தவன், ‘பேசுடா…’ என்பதைப் போல கண்களாலேயே இறைஞ்ச, ‘இருடா டேய்…’ என சைகை கட்டியவனுக்கு தொண்டை குழியில் உணவு சிக்கிக் கொண்ட உணர்வு.
தண்ணீரை பருகி தொண்டையை செருமி சரி செய்தபடியே, “விழி… உங்கண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்…” என்றான் முயன்று வருவித்த சந்தோஷ குரலில் மாதவன்.
“ஓ... அதுக்கு நான் என்ன செய்யணும்…” என்றாள் விட்டேறியாய் கயல்.
“என்ன விழி… நீயே இப்படி சொன்னா எப்படிம்மா..?” என்றான் அப்பாவியாய் மாதவன்.
“இப்படி சொல்லாம வேற எப்படி சொல்லணுமான்… இதென்ன புதுசா ஆபிஸ்ல வீட்டு விசயம் பேசறது… எதா இருந்தாலும் வீட்டுல போய் பாத்துக்கலாம்… பேசாம சாப்பிடுங்க…” என அதட்டலாய் சொன்னவளின் பார்வை என்னவோ அண்ணனிடம் தான்.
மாதவன் ஏதோ சொல்ல வர, “உங்கள பேசாம சாப்பிடுங்கனு சொன்னேன்…” என்றாள் இன்னுமே அழுத்தமாய் அவள். அவ்வளவு தான், ‘இனி நீ ஆயிற்று, உன் தங்கை ஆயிற்று…’ என தன்பாட்டுற்கு உணவின் பக்கம் கவனத்தை திருப்பி விட்டான் அவன்.
‘கிராதகா…’ என முணுமுணுப்புடன் நண்பனல முறைத்துப் பார்த்தவன், “இந்த பீன்ஸ் பொறியல் பிரமாதமா இருக்கே பாப்பா…” என்றான் தங்கையை குளிர்விக்கும் பொருட்டு.
“அது பீன்ஸ் இல்ல கொத்தவரங்கா… இப்பதான் இந்த பாப்பா உங்க கண்ணுக்கு தெரியறேன் இல்ல… ஒரு மாசமா கூடிக்கூடி இரண்டு பேரும் ரகசியம் பேசும் போது நான் உங்க ரெண்டு கண்ணுக்கும் தெரியவே இல்ல… அப்படி தானே…” என்றாள் துளிர்த்துவிட்ட கோபத்தோடு கயல்.
“அப்படி இல்ல பாப்பா…” என்றான் திணறலாய் நேசன்.
“என்ன நொள்ள பாப்பா… எங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகணும்னு எத்தன சாமிய வேண்டி இருப்பேன்… எத்தன கோவில் குளம் ஏறி இறங்கி இருப்பேன்… எத்தன ஆச ஆசையா காத்துட்டு இருக்கேன்… என்கிட்ட இதானு ஒரு வார்த்தை சொல்ல முடியலையில உனக்கு… போண்ணன் நீயி… என்கிட்ட பேசாத…” என்றவளுக்கு கோபத்தில் மூக்கு விடைத்து கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
நேசன் பாவமாய் மாதவனைப் பார்க்க, ‘நீதானே இழுத்து வைத்தாய்… சமாளி…’ என்பதைப் போல, அலட்சியமாய் தோளைக் குலுக்கிக் கொண்டான் அவன்.
“அது அப்படி இல்ல பாப்பா…” என்று ஆரம்பித்து நடந்தது அத்தனையும் விளக்கோ விளக்கென்று விளக்கி, அவளை சம்மதமாய் சரியென்று தலையாட்ட வைப்பதற்குள் ஓய்ந்துப் போயிருந்தான் நேசன்.
“எல்லாம் சரிண்ணே… இரண்டு நாளைக்குள்ள கல்யாணம்னா எப்படி… அண்ணிக்கு வேற ஒரு குட்டி பையன் இருக்கானு சொல்லற… எப்படியும் அம்மா ஒத்துக்க தான் செய்யும்… ஆனா உடனேனா கஷ்டம்…” என்றாள் யோசனையாய் கயல்.
“அதுக்கு தானே பாப்பா நீ இருக்க… நீ என்ன பண்ணற கையோடு கிளம்பி போய் அம்மாவ சம்மதிக்க வைக்கற… சரிதானே…”
“நான் அம்மாவ சம்மதிக்க வைக்கறது இருக்கட்டும்… இன்னும் அண்ணியே சம்மதிக்கலைனு சொல்லற… அப்பறம் எப்படிண்ணே..?” என்றாள் கயல்.
“சீ… இங்க அதான் பிரச்சனையே… உங்க அண்ணிக்கு டைம் குடுத்து யோசிக்க விட்டோம்னு வையி… என்னத்தையாவது பண்ணி குட்டைய குளப்பிடுவாங்க… அதான் மாப்பிள்ள சார் உடனே கல்யாணத்த பண்ணணும்னு நிக்குறாரு…” என்றான் நக்கலாய் மாதவன்.
“இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி…” என்றான் கடுப்பாய் நேசன்.
அவனின் மேவாய் பற்றி தன் பக்கம் திருப்பி, “மாமா உனக்கு கல்மாணமா..?” என்றாள் பூக்குட்டி.
“ஆமான்டா தங்கம்…”
“அப்போ புது ட்ரஸ் சாக்கி எல்லாம் வாங்கலாமா..? என்றாள் கண்களை விரித்து ஆசையாய் பிள்ளை.
“என் பட்டுக்கு இல்லாததா..?” அவளின் கன்னத்தை கிள்ளி இதழ்களில் ஒற்றிக் கொண்டான் நேசன்.
“அப்ப எனக்கு ஃபோர் டிரஸ்…” என்றவள் இன்னும் என்னென்ன வேண்டுமென அடுக்க தொடங்கி இருந்தாள்.
“நான் அம்மாகிட்ட பேசறேன்… ஆனா உடனே எல்லாம் ஒத்துக்கும்னு சொல்ல முடியாது… இரண்டு நாள்ல எல்லாம் கல்யாணத்த வைக்க முடியாது… நீ கொஞ்சம் வெயிட் பண்ணி தான் ஆகணும்…” என்றாள் கயல் உறுதியாய். சொன்னது போலவே உண்டு முடித்ததும் கையோடு விசாலத்தைப் பார்க்க கிளம்பியும் விட்டாள்.
அவள் விசயத்தை சொன்னதுமே, எப்படி என்னை கலக்காமல் இத்தனை தூரம் கொண்டு வரலாம் என ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டார் பெற்றவர். அவரை சமாதானமாய் மலையிறக்கி கொண்டு வரவே கயல், மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச வேண்டிய இருந்தது.
அப்படியும் “டைவர்ஸ் ஆன பொண்ணா… மூன்றரை வயசுல பையன் வேற இருக்குனு சொல்லற… இதெல்லாம் சரி வருமாடி… இருந்து இருந்து அவனுக்கு போய் இப்படி ஒரு பொண்ணையாடி கட்டி வைக்கணும்…” என்றார் முகத்தை சுழித்துக் கொண்டு.
“அதனால என்ன இப்போ..?” என்றாள் எரிச்சல் மண்ட கயல்.
“இல்லடி… உங்க அண்ணனுக்கு மொத கல்யாணத்துக்கு கேட்டே அத்தன வரன் வருது… அப்பறம் எதுக்குடி இந்த பொண்ணு நமக்கு…” என்றார் அப்போதும் பிடித்தமின்மையுடன்.
“எல்லாமே தெரிஞ்சும் நீயே பைத்தியம் மாதிரி பேசாதம்மா…” என்றாள் உச்சபட்ச கடுப்போடு
“என் புள்ள மேல என்ன தப்புங்கறேன்… இல்ல என் புள்ளைக்கு என்ன குறைங்கறேன்… அந்த சிறுக்கி…” என அங்கலாய்ப்பு டன் தொடர்ந்து வசைப்பாட தொடங்கிவிட்டார் விசாலம்.
“போதும் நிறுத்துமா… பழச பேசி திட்டி சபிச்சு ஒன்னும் ஆக போறதில்ல… இனிமே நடக்க வேண்டியத பாரு…” என கோபமாய் உரைத்தவள், “அண்ணனுக்கு அவங்கள ரொம்ப புடிச்சு இருக்கு… ஆனா அவங்க ரெண்டு மனசா தான் இருக்காங்க போல… நீ எதையாவது பேசி அவங்க வேற இடம் பாத்துட்டாங்கனா… கடைசி வரைக்கும் அண்ணன் இப்படியே தான் இருக்கும்… அதையும் மனசுல வச்சுட்டு பேசு… இருந்து இருந்து அண்ணனே இப்ப தான் கல்யாத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கு… அது மனசு மாறுறதுக்குள்ள புடிச்சு கல்யாணத்த பண்ணி வைப்பீயா… இப்ப தான் இது நொள்ள அது நொட்டணுட்டு இருக்க…” என்றாள் சலிப்பும் அதட்டலுமாய் கயல்.
சில நிமிடங்கள் கணத்த மௌனம் அவரிடம். கண்கள் கலங்க அமைதியாய் எழுந்துச் சென்று பூஜையறையில் அமர்ந்துக் கொண்டவரை, பெருமூச்சோடு இயலாமையும் வலியுமாய் பார்த்திருந்தாள் கயல்.
முழுதாய் நாற்பது நிமிடங்களை கரைந்த பின் வெளியே வந்தவர், “உங்க அண்ணனுக்கு போன போட்டு மாப்பிள்ளையும் அழைச்சுட்டு கிளம்பி வர சொல்லு… இன்னைக்கு நாலரை ஆறு நல்ல நேரமா இருக்கு… பொண்ணு வீட்ட போய் பாத்து பேசி பூ வச்சு உறுதி பண்ணிட்டு வந்துடலாம்… இரண்டு நாள்ல கல்யாணம்னு வாய் கிழிய பேசனா மட்டும் பத்தாது… அதுக்கான வேலையையும் பாக்கணும்…” என்றவர் மளமளவென அடுத்தடுத்த வேலைகளை பட்டியலிட தொடங்கிவிட்டார். சட்டென்று அந்த வீட்டில் ஒட்டிக் கொண்டது கல்யாண களை. அவரின் அதிரடியில் துளிர்த்த முறுவலோடு, அவர் சொன்னதை செய்ய தொடங்கினாள் கயல். கயல் நேசனுக்கு அழைத்து விசயத்தை சொல்ல, விழி பிதுங்கிப் போனது அவனுக்கு. தென்றல் என்ன சொல்வாளோ எப்படி எதிர்வினை ஆற்றுவாளோ என்ற எண்ணத்திலேயே பயபந்து ஒன்று தொண்டைக் குழிக்குள் உருண்டு வந்து அமர்ந்துக் கொண்டது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.