நெஞ்சம் – 21

தமிழ் வெண்பா | 27 Jan 2026 | Share

நெஞ்சம் 21:

அலையாடும் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் தென்றல். அவளிடமிருந்து சற்றே தள்ளி அமர்ந்திருந்தவனின் பார்வையோ பாவையை வெறித்திருந்தது. அவனுடன் பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்ட பிறகு பெரிதாய் ஒன்றும் யோசிக்கவில்லை அவள். விடிந்ததுமே அவனை சந்திக்க வேண்டுமென புலனத்தின் வழி செய்தி அனுப்பி விட்டாள். 

அவளே அவனைத் தொடர்பு கொள்வாள் என அவனும் எதிர்பார்த்தான் தான். ஆனால் இத்தனை சீக்கிரமாய் அது நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. செய்தியை பார்த்த அடுத்த நொடி அவளுக்கு அழைத்தும் விட்டான். அறிமுகங்களுக்கு அவசியமின்றி இருவரின் எண்ணும் பத்திரமாய் அவர்களின் கைப்பேசியில் அடங்கி வெகு நாட்களாகி இருந்தது. இதோ அதன் விளைவு அவர்கள் இருவரையும் கடற்கரையில் இணைத்திருந்தது.

பேச வேண்டும் என அழைத்தவள் அவள். அவளே தொடங்கட்டும் என காத்திருந்தான் அவன்.

முழங்காலைக் கட்டிக் கொண்டு கடலை  பார்த்திருந்தவளின் பாதங்கள் மணலுக்குள் புதைந்திருந்தது. அவளின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப அவை மணலில் மொத்தமாய் புதையுண்டு, மெல்ல தலைநீட்டி, விரல்களின் பிடிக்குள் இறுக மணலை பற்ற முயன்று, விடுவித்து என விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தன.

அவனையும் மீறி பார்வை அவளின் பாதங்களில் பதிய, நீண்ட விரல்களுக்கு கிரீடமாய் வீற்றிருந்த மெட்டியையும், சூரிய ஒலியில் அதில் பொண் துகள்களென மினுக்கிக் கொண்டிருந்த மணலும் அவனின் பார்வையை மொத்தமாய் கொள்ளைக் கொண்டது.

அன்று இத்தனை நெருக்கத்தில் இந்த பாதங்களை அவன் பார்த்திருக்கவில்லை. இப்பொழுது பார்க்க அத்தனை தெளிவாக தெரிந்தது. அவள் உள்ளங்களின் இளம் சிவப்பு நிறமும், அதில் அங்காங்கே பதிந்திருந்த மண் துகள்களும், ஆதுரமாய் அதனை தழுவிக் கொண்ட பளீரென்ற சூரிய வெளிச்சமும், நிச்சயமாக ஒரு தேர்ந்த கலைஞனின் ஓவியமாக தான் இருக்க வேண்டும். ஆண்டிக் வகை சிவப்பு கல் பதித்த சின்ன சின்ன முத்துகள் கோர்த்த மெட்டி அணிந்திருந்தாள் தென்றல். அது அவளின் நீள விரலுக்கு யாரோ கீரிடம் சூட்டியதைப் போல அத்தனைப் பாந்தமாய் பொருந்திப் போயிருந்தது‌.

“எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு…” அவனை கலைப்பதுப் போல் அழுத்தமாய் ஒலித்தது தென்றலின் குரல். இவன் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, இன்னுமே அவளின் பார்வை கடலோடு தான் உறவாடிக் கொண்டிருந்தது. சுழித்த புருவங்களும் வெறித்த பார்வையும் அவள் தீவிர சிந்தனையில் இருப்பதாய் கட்டியம் கூறியது.

“ம்ம்ம்…” என்றவனிடம் கீற்றாய் ஒரு புன்னகை. மீண்டும் அவன் பார்வை பாவையின் முகத்திலிருந்து பாதங்களை சரணடைந்திருந்து. 

“டைவர்ஸும் ஆகிடுச்சு…” சலனமற்ற குரலில் தனது கடந்த காலத்தை இரண்டே வரிகளில் சொல்லி முடித்துவிட்டு திரும்பி அவன் முகம் பார்த்தாள் அவள். 

அவளின் குரலிலோ முகத்திலோ உடல் மொழியிலோ எந்த சலனமுமே இல்லை. எதையும் விழுங்கி செரிக்கும் மலைப் போல் அப்படியொரு இறுக்கம். ஆனால், அது எரிமலையின் இறுக்கம் என்பதை அவள் மட்டுமல்ல, அவனுமே அறிந்திருந்தது தான் அதிசயம். உள்ளே கொதித்து தழும்பும் லாவாவை லாவகமாய் அடக்கி வைக்க பழக்கி இருந்தாள் பெண்.

“ம்…” என்றவனின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. தீர்க்கமாய் அவை இன்னும் அவளின் பாதங்களை தான் வாஞ்சையாய் வருடிக் கொண்டிருந்தது.

‘வேந்தனோட அப்பா இப்போ எங்க இருக்காரு..? பையன் வேணும்னு உங்ககிட்ட அவர் கேக்கலையா..? பையன பாக்க வருவாரா..? அவங்க வீட்டுல எப்படி பேரன விட்டுக் குடுத்தாங்க..?’ இப்படி அடுக்கடுக்கான ஆயிரம் கேள்விகளை அவனிடம் எதிர்பார்த்து, அதற்கு எப்படி எதிர் வினையாற்றுவது என லட்சத்து ஓராவது முறையாக தனக்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“நம்ம கல்யாணத்தப்போ இந்த மெட்டிய கழட்டிடுவீங்க தானே…” என்றான் சம்பந்தமே இல்லாது அவன்.

ஒரு நொடி அவனின் வினா புரியாது அதிர்ந்து விழித்து, உணர்ந்த நொடி அவனை முறைத்துப் பார்த்தாள் பெண்.

“உங்கள கல்யாணம் பண்ணிக்கறதுனு முடிவு பண்ண அன்னைக்கே வாங்கி வச்சுட்டேன்… நானே நினைச்சாலும் இப்பவே இத உங்களுக்கு போட்டுவிட முடியாது இல்லையா..? கல்யாணம் வரைக்கும் அதுக்காக வெயிட் பண்ணனும்…” என்று சின்னதொரு பெருமூச்சொடு சட்டைப் பையிலிருந்து சிறிய நகைப் பெட்டி ஒன்றை அவள் முகத்திற்கு நேரே எடுத்து  நீட்டினான் சிவநேசன்.

“நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீங்க என்னனா..?” என்றவளின் தொடர் வார்த்தைகள் அவனின் பார்வையில் தொண்டை குழிக்குள்ளையே சிரைப்பட்டு சிக்கிக் கொண்டது.

“பாத்துட்டு பிடிச்சு இருக்கானு சொல்லுங்க… நாலு கடை ஏறி இறங்கி மூணு மணி நேரத்துக்கு மேல ஸ்பெண்ட் பண்ணி வாங்கி இருக்கேன்…” என்றவனின் கரம் இன்னுமே அவளின் முன் நீண்ட படியே இருந்தது.

மறுப்பேதும் சொல்லாதவள், அதை வாங்கி திறந்துப் பார்த்தாள். மத்தியில் மிளகின் அளவில் சிவந்த ரூபி கல்லும், அதனை சுற்றி மலர்கள் மடல் விரித்ததைப் போல வெள்ளைக் கற்களும் பதிக்கப் பட்டிருந்தது. அதன் கீழ் பகுதியில் சின்ன சின்ன முத்துக்கள் திராட்சை கொத்தினை போல் இணைக்க பட்டபட்டுருத்தது. பார்ப்பதற்கே அழகிய கவிதைப் போல் அத்தனை நேர்த்தியாய் இருந்தது அது. கிட்டதட்ட அவள் அணிந்திருந்த மெட்டியை ஒத்திருந்தது. யாராய் இருந்தாலும் அதை பிடிக்கவில்லை என்று  சொல்லிவிட முடியாது. 

மெட்டியிலிருந்து பார்வையை மேலேற்றி அவன் முகம் பார்த்தவள் லேசாய் தலை சாய்த்து, “இன்னுமே நான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னதா நியாபகம் இல்லை..!” என்றாள் கேலியும் கேள்வியுமாய்.

ஆழ்ந்து அவள் முகம் பார்த்தவனிடம் இதழ் பிரியா ஒரு மௌன புன்னகை. அதில் என்ன இருந்தது என்று அவளாலும் உணர முடிந்தது. கண நேரத்தில் அவனிடமிருந்து அந்த புன்னகை அவளுக்கும் கடத்தப் பட்டிருந்தது. இது வரை மனதை சூழ்ந்திருந்த இறுக்கங்கள் தளர்ந்து இறகைப் போலே ஒரு இலகு நிலை.

அவளின் ஒற்றை விரல் நீண்டு அந்த மெட்டியின் முத்துக்களை வருட, ஒன்றை மட்டும் எடுத்து காதருகே அசைத்துப் பார்த்தாள். முத்துக்கள் சத்தமிடவில்லை.

“அதுல சத்தம் வராது…” என்றவனின் குரலிலும் முகத்திலும் குறும்பு கூத்தாடியது.

‘ஏன்..?’ என்ற கேள்வியை அவள் பார்வையில் வீச, அவனின் புன்னகையோ இன்னுமே பெரிதாய் விரிந்தது. அதில் மெல்லிய வெட்கமும் அசட்டுதனமும் சேர்ந்தே பிரதிபலித்தைப் போல அவளுக்கு ஒரு எண்ணம். அது தான் உண்மையுமோ? விழிகளை பெரிதாய் விரித்து அந்த புன்னகையை விழுங்கப் பார்த்தாள் அவள். முதன் முறையாக அவன் பற்கள் தெரிய பளீரென புன்னகைக்க பார்க்கிறாள். அந்த புன்னகை இன்னுமே அவனை வசீகரமாய் அழகனாய் காட்டியது.

“அப்போ இந்த வெள்ளிக் கிழம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” அவள் விழிகள் பார்த்து அவன் ஆழ்ந்த குரலில் வினவ, அவளிடம் பெரிதாய் தடுமாற்றம்.

அவன் சொல்லும் வெள்ளிக் கிழமைக்கு இன்னும் முழுதாய் இரண்டு நாட்கள் தான் இருந்தது. எங்கே நாட்களை தள்ளிப் போட்டால், மனம் மாறி விடுவாளோ என நினைத்தானோ என்னவோ?

“எனக்கு பெருசா ஊர கூட்டி கிராண்டா செய்யறதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல… சிம்பிளா ரொம்ப வேண்டியவங்கள மட்டும் கூப்பிட்டு கோவில பண்ணிக்கலாம்…” என்றவன் நிறுத்தி அவள் முகம் பார்த்து, “உங்களுக்கும் அதுல இஷ்டம்னா… இல்ல கிராண்டா பண்ணனும்னு உங்களுக்கு ஆசை இருந்தாலும் அப்படியே பண்ணிடலாம்…” என்றான் ஆழ்ந்த அழுத்த குரலில்.

சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை அவளால். அவள் என்ன பேச நினைத்து அவனை அழைத்தால், அவன் என்ன பேசிக் கொண்டிருக்கிறான்.

அவள் பதில் சொல்லாது இருக்கவும், “கிராண்டா பண்ணலாம்னு நினைக்கறீங்களா..? நான் சிம்பிளா பண்ணறதுல தான் இஷ்டம்னு சொன்னதால எப்படி சொல்லறது தயங்கறீங்களா என்ன..?” என்றான் அடுத்ததாய்.

“சே… சே… அப்படி எல்லாம் எதுவுமில்லை… எனக்குமே சிம்பிளா பண்ணறது தான் கம்ஃபர்ட்…” என்றாள் அவசரமாய் அவள்.

“அப்போ வெள்ளிக் கிழமையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லறீங்க…” என்றவனின் இதழ்களோடு சேர்ந்து விழிகளும் குறும்பாய் சிரித்தது. பதில் சொல்ல முடியாது திணறலாய் அவனைப் பார்த்தாள் தென்றல்.

“இல்ல… நான்… அதுக்கு முன்னாடி…” என பெரிதாய் தடுமாறியவளுக்கு வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை.

அவனின் கடந்த காலத்தைப் பற்றிய பேச்செடுத்தால், இந்த புன்னகை முகம் அப்படியே வாடிப் போகும். சிரிக்கும் இந்த விழிகள் நொடியில் வலியைப் பிரதிபலிக்கும். அந்த எண்ணமே அவளைப் பெரிதாய் தடுமாற செய்திருந்தது. அவனின் வலி ஏன் அவளை இத்தனையாய் இம்சிக்கிறது என அவள் யோசிக்கவே இல்லை.

“தென்றல்…” ஆழ்ந்து ஒலித்த அவனின் குரலில் சிந்தனை கலைந்து அவன் முகம் பார்த்தவளின் விழிகளில் அத்தனை குழப்பம்.

“எனக்கு புரியுது… எல்லாமே ரொம்ப வேக வேகமா நடக்குது… இத ஏத்துக்க இரண்டு பேரு மனசுக்குமே டைம் வேணும் தான்… ஆனா தயங்கி கிட்டு இதே இடத்துல நின்னுட்டு இருந்தோம்னா வாழ்க்க வேகமா ஓடிடும்… இரண்டு பேரோட பாஸ்ட்ல என்ன வேணா நடந்து இருக்கட்டும்… அத அங்கையே விட்டுட்டு நமக்கான எதிர் காலத்த பாக்கலாம்…” என்றவனின் குரலில் எத்தனை அழுத்தம் இருந்ததோ அத்தனை பரிவும் இருந்தது.

அடுத்ததாய் எந்த அலட்டலும் இல்லாது, “டைம் எடுத்துக்கோங்க… நல்லா பொறுமையா யோசிங்க… ஈவினிங்குள்ள எனக்கு பதில் சொன்னா போதும்…” என்றான் அலட்டிக் கொள்ளாது.

அவள் போலியாய் கண்களை உருட்டி அவனை முறைத்துப் பார்க்க, “சில் ஃபயர்…” என்றவன் அவள் கையிலிருந்த நகைப் பெட்டியை மூடி, மென்மையாய் அவளின் கரம் பற்றிக் கொண்டான்.

“இந்த மெட்டி மட்டுமில்ல… நானுமே உங்களுக்கு தான் சொந்தம்… முழுக்க முழுக்க உங்களுக்கு மட்டுமே சொந்தம்… அதுல எப்ப உங்களுக்கு நம்பிக்கை வருதோ… எப்ப என்ன ஏத்துக்க மனசு வருதோ ஒரு மேஜேஜ் அனுப்புங்க போதும்… கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றான் நேசன் அவன் நேசம் மொத்ததையும் யாசகமாய் விழிகளில் தேக்கி. எதற்காக அவள் தயங்கி தடுமாறினாளோ அதற்கான விடை அவன் வார்த்தைகளில் குறிப்பாய் இருந்தது.

அவள் பதில் சொல்ல காத்திருக்காது எழுந்துக் கொண்டவன், அவள் எழுந்துக் கொள்ள வேண்டி கரத்தை நீட்ட யோசனையும் சிறு தடுமாற்றமுமாய் அதைப் பற்றிக் கொண்டாள் அவள்.

“இறுக்கமா புடிச்சுக்கிட்டேன் தென்றல்… இனிமே நீயே வேண்டாம்னு சொன்னாலும் விடற எண்ணம் எனகில்ல…” என்றவனின் கரம் அழுத்தமாய் அவளின் கரம் சேர்ந்திருந்தது.

அவனின் எண்ணப்படியே, அந்த வெள்ளியிலேயே நெருங்கிய உறவும் நட்பும் சூழ, தென்றலும் வேந்தனும் அவனின் சொந்தமாகி இருந்தனர்.

                           – நேசம் ஒளிரும்…

    No comments yet.